தேவையான அனைத்தையும் முடித்துவிட்டு நிமிர்ந்து அதிரூபனை பார்த்த ரேவந்த்,
” உன் போனுக்கு செண்ட் பண்ணி இருக்கேன் ரூபன்..”என்றதும் வேகமாக தனது கைப்பேசியை எடுத்து பார்த்த அதிரூபனுக்கு கண்கள் கூசியது…
“ரே…இது…தப்பு ரே…இந்த விஷயம் அப்பாவுக்கு… தெரிஞ்சா…” என பேசும்போதே குரல் தழும்பியது…
அவன் கூற வருவதை புரிந்து கொண்ட ரேவந்த் பல்லை கடித்துக்கொண்டு இருக்கையில் இருந்து எழுந்து வந்து ரூபனின் இருபுற தோள்களையும் அழுத்தமாய் பற்றியவன்,
” சரிடா ..நீ சொல்றது சரிதான்.. இதெல்லாம் தப்பு.. அப்ப வா நாம இப்பவே போய் உங்க அப்பா கிட்ட உண்மையை சொல்லிடலாம்…
அந்த அவந்திக்கா சொன்னாலே உடைஞ்சு போயிடுவாரு… நீயே சொன்னா இன்னும் உடைஞ்சு போகட்டும்…” என அவனது கையை பிடித்துக் கொண்டு செல்ல முற்பட்டவனதூ கரத்தே பிடித்து நிறுத்திய அதிரூபன்,
” ப்ளீஸ்.. ப்ளீஸ் ரேவந்த்… அப்பாக்கு தெரிஞ்சா நிச்சயம் உடைஞ்சிருவாருடா ..என்னால இதை ஏத்துக்கவே முடியல.. அதான்..ப்ச்… வேற வழியே இல்லையா..??” என வேதனை அடங்கிய குரலில் கேட்டதும் பேண்ட் பாக்கெட்டில் கரங்களை நுழைத்து அதிரூபனை நிமிர்ந்து பார்த்த ரேவந்த்,
” இன்னொரு வழி இருக்கு..” என்றான் குரலில் எதையோ உள்ளடக்கிய படி.
அவனது திடமான குரலில் ஆர்வமுடன் அவனிடம் வந்த அதிரூபன்,
“ என்ன வழிடா சொல்லு…??”
ரேவந்த் தன் முகத்தை அவன் முகத்திற்கு கிட்டே கொண்டு சென்று,
“அந்த அவந்திகாவை கொல்லனும்..!” என பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பினான் ரேவந்த்…
அவ்வளவுதான் அதை கேட்ட நொடி அதிர்ச்சியின் உச்சத்தில் விழிகள் விரிய ரேவந்த்தை பார்த்த அதிரூபன் ,
“டேய்இஇஇஇஇஇ…..என்னடா கொலைனு எல்லாம் சொல்லிட்டு இருக்க…??? அவ…அவ இன்னசென்ட்டா…” என கம்மிய குரலில் கூறியதும் பெருமூச்சு விட்ட ரேவந்த்,
” நமக்கு வேற வழி இல்ல ரூப்… ஒன்னு நான் சொல்ற இந்த விஷயத்தை நீ பண்ணியே ஆகணும் …இல்லைனா ஆப்ஷன் ட்டூ தான்…” என பேசியவாறு அதிரூபனின் கைப்பேசியை எடுத்து அவன் கரத்தில் திணித்தான் ரேவந்த்…
அவனை அடிப்பட்ட பார்வை பார்த்த அதிரூபன்,
“நாம அவகிட்ட நாளைக்கு பேசி பார்க்கலாம்டா..” என இறுதி முயற்சியாய் கூறி பார்த்தான் அதிரூபன்….
அவனை இப்போது நிமிர்ந்து பார்த்து முறைத்த ரேவந்த்,
“அவ ரொம்ப புத்திசாலி ரூபன்.. நாளைக்கு வரை நாம டைம் கொடுத்தோம்னா கண்டிப்பா ஏதாவது யோசிச்சு அவ தப்பிக்க தான் பார்ப்பா…
ஏன் உங்க அப்பாவையை கூட்டிட்டு வந்துருவா… அவளை யோசிக்கவே விடக்கூடாது.. அடுத்த அடுத்த அடியை அவளுக்கு தந்தே ஆகணும்.. அப்பதான் அவளை நம்ம வழிக்கு கொண்டு வர முடியும்..” என அதிரூபனின் மூளையை கொஞ்சம் கொஞ்சமாய் சலவை செய்தான் ரேவந்த்…
கண்களை இறுக மூடி தனது மனசாட்சியை கொன்ற அதிரூபன் அடுத்த கணம் தனது மேற் சட்டையினை அணிந்து கொண்டு கீழே இறங்கி வந்தான்..
காரில் ஏறி இயக்கியவன் அது வேகத்தில் கேட்டினை தாண்டி வெளியேறி விட்டான்…
அவன் செல்வதை கண்ணாடி சாளரித்தின் வழிபார்த்த ரேவந்த் வலியுடன் கண்களை மூடி பெருமூச்சு விட்டுக் கொண்டான்…
தன்னுடைய ஃப்ளாட்டிற்கு பயத்தின் உச்சியில் விழுந்தடித்துக் கொண்டு வந்து சேர்ந்து இருந்தாள் அவந்திகா.…
தன் வாழ்வில் இது போன்றதொரு நிகழ்வு நடக்கும் என அவள் கனவிலும் நினைக்கவே இல்லை..!
தான் மரியாதையின் உச்சத்தில் வைத்திருப்பவரது மகன் இத்தகைய கீழ்த்தரமாக நடந்து கொள்வான் என கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை அவள்…
அதுவும் அந்த ரேவந்த்துடன் தன்னுடைய அலுவலக அறையில் அத்தனை நெருக்கமாக இருப்பதை நினைக்க நினைக்க அவள் உள்ளமெல்லாம் பற்றி எரிந்தது …
எப்பேர்பட்ட மனிதனுக்கு இப்படிப்பட்ட மகனா..??? அருவருக்கச் செய்தது அவளுக்கு …
எப்படி இவர்களால் இத்தகைய துரோகத்தை செய்ய முடிந்தது அதியமானுக்கு …???
மனைவி இறந்து இத்தனை வருடங்களில் அவர் எத்தனை கண்ணியமானவராக நடந்து கொள்கிறார்..
அவருக்கு கீழே வேலை பார்த்து இருக்கும் தன்னிடம் கூட
அதியமான் எத்தனை மரியாதையாகவும் பண்பாகவும் நடந்து கொள்கிறார்…
அவருக்கு இருக்கும் குணத்தில் ஒரு சதவிகிதம் கூட ஏன் அவரது மகனுக்கு இல்லாது போனது ..??..
எத்தகைய அயோக்கியத்தனத்தை செய்து கொண்டிருக்கிறான் என அதிரூபனை எண்ணி நெஞ்சமெல்லாம் காந்தலாகி எரிந்து கொண்டது அவந்திகாவிற்கு..
அத்தோடு அந்த ரேவந்த்..! நொடிக்கும் குறைவான நேரத்தில் அவர்கள் இருவரையும் கண்டாலும்.. தான் அவர்களை கண்டு விட்டது அதிரூபனை விட ரேவந்த்தின் விழிகளில் தான் குரோதம் வழிந்தோடியது…
. அதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அவள் தேகம் சிலிர்த்துப் போனது …
தன் வாழ்வில் இதுபோல் ஒரு நாளும் யாருக்காகவும் எதை பார்த்தும் பயந்து ஓடி வந்ததே கிடையாதே ..!
இப்போது முதல் முறையாக இவ்வளவு பயத்தை அனுபவிக்கும் போது தான் அதன் கணம் தெரிந்தது அவந்திகாவிற்கு …
இதற்கு அடுத்து என்னவாகும்..??..
தான் கண்டறிந்த விடயத்தை அதியமானிடம் சொல்லலாமா வேண்டாமா எனப்பெரும் குழப்பம் ஏற்பட்டது..
சொன்னால் அவரால் தாங்க தான் முடியுமா..?.. தன் மகனின் சுயரூபத்தை பற்றி தெரிந்து கொண்டதும் அதியமான் என்ன செய்வார் ..??..மிகவும் உடைந்து போய் விட மாட்டாரா.?..
என அதிரூபன் அவந்திகா தந்தையிடம் கூறி விடுவாளோ என எண்ணி பயந்தானோ அதையே தான் அவந்திகாவும் நினைத்துக் கொண்டிருந்தாள்…
அவரிடம் இதைப் பற்றி பேசினால் நிச்சயம் ஏதேனும் தீர்வு கிடைக்கும் என எண்ணியவள் வேக வேகமாக தனது கைபேசியை எடுக்க போன கணம் அவளது வீட்டுக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து இருந்தான் அதிரூபன் …
அவ்வளவுதான் அந்த நொடி அவந்திகாவின் விழிகள் இரண்டும் வெளியே விழிந்து விடும் அளவு அதிர்ச்சியில் விரிந்து கொண்டன …
அமர்ந்து இடத்தில் இருந்து துள்ளி எழுந்து விட்டிருந்தாள்… அதிரூபன் நேரே தன்னுடைய வீட்டிற்கே வருவான் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை அவள் …
நிச்சயம் இதை வைத்து தன்னை மிரட்டுவான் என நினைத்திருந்தாள்.. ஆனால் இவ்வாறு அதிரடியாக திடுதிப்பென வீட்டிற்குள்ளே வருவான் என நினைக்காதவளது உடல் எங்கும் பயத்தில் நடுநடுங்கியது ..!
அதிரூபன் தன் சிவந்த விழிகளால் அவளை பார்த்தவாறு அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்…
அவனது முகம் வழக்கத்தை விட இறுகி போய் இருந்தது… விழிகளில் எப்போதும் அவளை பார்த்தால் தென்படும் மரியாதை கொஞ்சமும் இன்றி ஒரு வித குரோதம் தான் தென்பட்டது…
உடல் மொழியோ வித்தியாசமாக இருந்தது.. அவனது ஒவ்வொரு செயலிலும் திமிரின் உச்சக்கட்டம் அப்பட்டமாய் தெரிந்தது.…
அவந்திகா சுவற்றோடு பல்லி போல ஒட்டியவாறு அவனையே மூச்சு வாங்க பார்த்தவாறு நின்று இருந்தாள்…
அவனை தன் வீட்டில் பார்த்த அடுத்த கணம் அவளது மூளை வேலை நிறுத்தம் கொண்டு விட்டது …
.
எதைப் பற்றியும் அவளால் யோசிக்க முடியவில்லை..! அவனுக்கு என்ன பதில் அளிக்கலாம்..?? அவனிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம்..? என ஒரு சதவிகிதம் கூட அவளது மூளையால் சிந்திக்க கூட முடியாது போனது..