பெண்கள் நால்வரும் தங்களது நடனத்தை உற்சாகமாக முடித்ததும், அங்கிருந்த அனைவரும் கைதட்டி அவர்களைப் பாராட்டினர். சிரிப்பும், கலாட்டாவும் நிறைந்த அந்தச் சூழல் இன்னும் உற்சாகமாக மாறியது.
அப்போது கோகுல் சிரித்தபடியே,
“அடுத்து மச்சான்… இப்போ நீங்கதான்!” என்று ஆதிரனை நோக்கிக் கூறினான்.
ஆதிரனும் புன்னகைத்தபடி சீட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். அதில்,
“உங்களின் வாழ்க்கைத் துணைக்காக ஒரு கவிதை சொல்ல வேண்டும்.”
என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்தவுடன் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஆர்வம் பரவியது. “ஆதிரன் கவிதை சொல்லப் போகிறாரா?” என்ற எதிர்பார்ப்புடன் அனைவரின் பார்வையும் அவனை நோக்கித் திரும்பியது.
அதைப் பார்த்த ஆதிரையின் இதயம் காரணமே இல்லாமல் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அவளுக்கு அங்கு அமர்ந்திருப்பதே சங்கடமாக இருந்தது.
“அத்தை… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்புறேன்…” என்று மெதுவாகக் கூறிவிட்டு எழுந்து செல்ல முயன்றாள்.
அதை கவனித்த கோகுல் உடனே அவளைத் தடுத்து,
“என்ன தங்கச்சிமா? நீதான் இங்க முக்கியமான ஆளு. உனக்காகத்தான் மச்சான் கவிதை சொல்லப் போறாரு. நீ இல்லாம எப்படி? இரு… உட்காரு!” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரின் பார்வையும் தன் மீது விழுந்திருப்பதை ஆதிரை உணர்ந்தாள். அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல், வேறு வழியின்றி மீண்டும் அமைதியாக தனது இடத்தில் அமர்ந்தாள். அவளது முகத்தில் பதட்டம் தெளிவாகத் தெரிந்தது.
கோகுல் ஆதிரனைப் பார்த்து,
“சீக்கிரம் சொல்லுங்க மச்சான்… எல்லாரும் வெயிட்டிங்!” என்று ஆர்வமாகக் கூறினான்.
ஆதிரன் சிரித்தபடி,
“இருடா… கவிதைன்னா யோசிச்சுதானே சொல்லணும்!” என்றான்.
“சரி சரி… நல்லா யோசிச்சு சொல்லுங்க. ஆனா ரொம்ப நேரம் எடுத்துக்காதீங்க!” என்று கோகுல் மீண்டும் கலாய்க்க, அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
சில நொடிகள் ஆழமாக யோசித்த ஆதிரன், மெதுவாக தனது பார்வையை ஆதிரையின் மீது நிலைநிறுத்தினான். அவளோ அவன் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிரன், தனது மனதில் தோன்றிய காதல் நிறைந்த கவிதையை மெதுவாக சொல்லத் தொடங்கினான்.
“மீண்டும் மலர்வாய்…”
உடைந்த இதயம் என்று
உன்னை நீயே ஒதுக்காதே…
உதிர்ந்த பூவும் கூட
மீண்டும் வசந்தத்தில் மலரும்.
உன் வாழ்வில் நடந்ததை
மாற்ற என்னால் முடியாது…
ஆனால், இனி நடக்கப் போகும்
ஒவ்வொரு நாளையும்
சந்தோஷமாக மாற்ற முடியும்.
நீ இழந்த அன்பை
திருப்பித் தர முடியாது…
ஆனால், அதைவிட அதிகமான
அன்பை தர என்னால் முடியும்.
உன் கண்ணீரைத் துடைக்க
கைக்குட்டை ஆக வரவில்லை…
அது வராதபடி
உன் வாழ்க்கையாக வருகிறேன்.
உன்னை “பரிதாபம்” பார்த்து
திருமணம் செய்யவில்லை…
உன்னை “பிடித்ததால்”
என் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தேன்.
கடந்த காலம்
உன் கதை…
எதிர்காலம்
நம் கதை…
வா…
இனி நீ தனியாக நடக்க வேண்டாம்.
உன் பாதையில் வரும் ஒவ்வொரு அடியிலும்
என் காலடிச் சுவடும் உன்னோடு இருக்கும். 💕
ஆதிரன் தனது கவிதையைச் சொல்லி முடித்ததும், அந்த இடமே சில நொடிகள் அமைதியில் மூழ்கியது.
அந்தக் கவிதையின் ஒவ்வொரு வார்த்தையும் ஆதிரையின் மனதை ஆழமாகத் தொட்டிருந்தது. அவளது கண்கள் தன்னையும் அறியாமல் கலங்கின. கண்ணீரால் மங்கிய பார்வையுடன் ஆதிரனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆதிரனும் வேறு எதையும் கவனிக்காமல், அவளை மட்டுமே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த அமைதியைக் கலைத்தது கோகுலின் குரல்தான்.
“சூப்பர் மச்சான்!” என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டே பலமாகக் கைதட்டினான்.
அவனைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் கைதட்டி ஆதிரனைப் பாராட்டினர்.
“ரொம்ப அழகான கவிதை!”
“சூப்பர்!”
“செம்ம ஃபீலிங் மச்சான்!”
என்று ஒவ்வொருவரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
ஆதிரனும் சிரித்தபடியே தலையசைத்து அனைவரின் பாராட்டையும் ஏற்றுக் கொண்டான். ஆனால் அவனது பார்வை மட்டும் இன்னும் ஆதிரையையே விட்டு விலகவில்லை.
ஆதிரையோ யாருக்கும் தெரியாதபடி தலையைக் குனிந்து, கண்களில் வழியத் தயாராக இருந்த கண்ணீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டாள்.
சில நொடிகளில் மீண்டும் அந்த இடம் பழைய கலகலப்புக்கு திரும்பியது.
உடனே கோகுல்
“சரி… அடுத்து மித்ரா, நீதான்! உனக்கு என்ன வந்திருக்குன்னு பாரு!” என்றான்.
மித்ராவும் ஆர்வமாக சீட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள்.
அதில்,
“பாடல் பாடிக்கொண்டே நடனம் ஆட வேண்டும்.”
என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்ததும் அவள் முகம் உடனே சுருங்கிப் போனது.
“அய்யய்யோ! இது என்னடா? எல்லாருக்கும் பாடணும் இல்லன்னா டான்ஸ் ஆடணும்னுதான் வந்துச்சு. எனக்கு மட்டும் ரெண்டுமே சேர்த்து வந்திருக்கு!” என்று பாவமாக முகத்தை வைத்துக் கேட்டாள்.
அதைக் கேட்டதும் எல்லோரும் சிரித்தனர்.
அப்போது சிரித்தபடி, “நிலா.
. உனக்குத்தானே பாட்டும் நல்லா வரும், டான்ஸும் நல்லா வரும். அப்புறம் ஏன் இவ்வளவு யோசிக்கிற?” என்றாள்
சரி… அப்ப நீங்களும் என் கூட வாங்க!” என்று கூறிய மித்ரா, அருகில் இருந்த நிலாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.
ஆனால் கோகுல் உடனே இடையில் வந்து,
“அதெல்லாம் முடியாது. நீ மட்டும் தனியாத்தான் பாட்டு பாடிட்டு டான்ஸ் ஆடணும்!” என்று சிரித்தபடி கூறினான்.
மித்ரா உடனே முகத்தைச் சுளித்துக் கொண்டு,
“அது எப்படி? அண்ணி மட்டும் ‘ தனியா ஆட முடியாது’ன்னு சொன்னதும், நீங்க எல்லாரையும் சேர்த்து ஆட சொன்னீங்க!” என்று கேட்டாள்.
அதற்கு கோகுல் பெருமையாக,
“அது என் தங்கச்சி! தங்கச்சிக்கு மட்டும் ரூல்ஸை மாத்தலாம். உங்களுக்காக எல்லாம் ரூல்ஸை மாத்த முடியாது!” என்றான்.
“அடப்பாவி! இதெல்லாம் அநியாயம்!” என்று மித்ரா அவனை முறைத்துப் பார்த்தாள்.
“சரி… பாடித் தொலைக்கிறேன். வேற வழி இல்ல!” என்று கூறினாள்.
அவள் தனது சுடிதாரின் துப்பட்டாவை இடுப்பில் குறுக்காகக் கட்டிக் கொண்டு, நடனமாட வசதியாகத் தயாரானாள்.
அவளது செயலைக் கண்டு அனைவரும் ஆர்வமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
முகத்தில் அழகான புன்னகையுடன் நின்ற மித்ரா, பாடலை மெதுவாக ஆரம்பித்தாள். பாடிக்கொண்டே தாளத்திற்கு ஏற்ப அழகாக நடனமாடத் தொடங்கினாள்.
💖 கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்
வான்கோழி கொள்ளும் ஆசை ஆடித் தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது
தேர் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஓர் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு மீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை
கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்
ஹே, ஹே
ஹே, ஹே
பூவாசம் தென்றலோடு சேர வேணுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே
தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்ச பாரம் காதல் ஏந்துமே
நீண்ட நாள் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே
கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்.
மித்ரா தனது நடனத்தை அழகாக முடித்தாள். கடைசி அசைவையும் நிறைவு செய்து மெதுவாக நிமிர்ந்தவள், முதலில் யாரைத் தேடினாளோ தெரியுமா… அவளது கண்கள் நேராக கோகுலையே தேடின. அங்கு நின்றிருந்த கோகுலும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இருவரின் பார்வையும் ஒரு கணம் ஒன்றோடொன்று சந்தித்தது. முகம் முழுவதும் புன்னகை மலர்ந்த கோகுல், யாருக்கும் தெரியாதபடி கைகளை உயர்த்தி, “டான்ஸ்… சூப்பர்!” என்று சைகையால் பாராட்டினான்.
அவன் அப்படி சொன்னதும், மித்ராவின் இதயம் மகிழ்ச்சியில் துள்ளியது. அனைவரின் பாராட்டையும் விட, கோகுலின் அந்த ஒரு பாராட்டு அவளுக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றியது. வெட்கத்தில் அவளது கன்னங்கள் சிவந்து, புன்னகையை மறைக்க முடியாமல் மெதுவாகத் தலைகுனிந்து நின்றாள்.
அதைப் பார்த்த கோகுலின் முகத்திலும் ஒரு திருப்தியான புன்னகை மலர்ந்தது.
இவ்வாறு ஒருவருக்கொருவர் கிண்டலும், சிரிப்பும், சந்தோஷமும் கலந்த அந்த விளையாட்டு தொடர்ந்து நடந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்த சிட்டுகளை உற்சாகமாகச் செய்து முடித்தனர். சிரிப்பு சத்தமும், கைதட்டல்களும், கிண்டல் பேச்சுகளும் அந்த இடத்தை மகிழ்ச்சியால் நிரப்பின.
நேரம் எப்படி சென்றதென்றே யாருக்கும் தெரியவில்லை. அனைவரும் விளையாடி முடிக்கும்போது மாலை நேரம் வந்துவிட்டது. சூரியன் மெதுவாக மறையத் தொடங்க, அந்த இடமெங்கும் மெல்லிய பொன்னிற ஒளி பரவியிருந்தது.
பெரியவர்கள் விளையாடியதை ஆரம்பத்திலிருந்து அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு குட்டிகளும் இனி பொறுமையாக இருக்க முடியாமல் ஓடி வந்து,
“மாமா… எங்களை ஏன் விளையாட்டுல சேர்த்துக்கல?” என்று சிணுங்கினார்கள்.
அவர்களின் முகத்தில் இருந்த ஏக்கத்தைப் பார்த்த கோகுல் உடனே இருவரையும் அருகில் அழைத்துக் கொண்டு,
“ஐயோ… என்னோட குட்டீஸ்க்கு கோவமா? சாரி டா செல்லங்களா! அடுத்த தடவை கண்டிப்பா உங்களையும் சேர்த்துக்கலாம். சரி… இப்போ சொல்லுங்க, என்ன வேணும்? உங்க ரெண்டு பேருக்கும் எது ரொம்ப பிடிக்கும்? என்ன வேணும்னு சொல்லுங்க… மாமா வாங்கித் தரேன்.” என்று அன்பாகக் கேட்டான்.
ஆனால் இரண்டு குழந்தைகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, பிறகு கோகுலை நோக்கி தலை அசைத்தனர்.
“உங்ககிட்ட இல்ல… அப்பாக்கிட்டதான் கேட்கணும்.” என்றார்கள்.
அவர்களின் பதிலைக் கேட்ட கோகுல் புருவத்தை உயர்த்தி,
“அப்படியா? அப்பாக்கிட்ட கேக்கப் போறீங்களா? சரி… போங்க. நீங்க என்ன கேட்கப் போறீங்களோ அதை உங்க அப்பா கண்டிப்பா வாங்கித் தருவாங்க.” என்று சிரித்தபடி கூறினான்.
“சரி மாமா…” என்று கூறிய இரண்டு குழந்தைகளும் மகிழ்ச்சியாக ஓடினார்கள்.
சர்வேஷ் நேராக ஆதிரனிடம் ஓடிச் சென்றான். யாழினியோ கதிரிடம் சென்று நின்றாள்.
இருவரும் தங்களது குழந்தைகளை அன்போடு தூக்கி மடியில் அமர வைத்தனர்.
“என்னடா செல்லம்… என்ன வேணும்?” என்று ஆதிரன் மென்மையாகக் கேட்டான்.
அதே நேரத்தில் கதிரும்,
“சொல்லுடா பாப்பா… அப்பா வாங்கித் தர்றேன்.” என்று யாழினியிடம் புன்னகையுடன் கேட்டான்.
அதற்காகவே காத்திருந்தது போல, இரண்டு குழந்தைகளும் தாங்கள் கேட்க நினைத்ததை ஒரே மூச்சில் சொல்லிவிட்டனர்.
அவர்கள் கேட்ட அந்த ஒரு விஷயத்தைக் கேட்டதும்…
அங்கே இருந்த அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி படர்ந்தது.
ஒரு கணம் அந்த இடமே அமைதியாகிவிட்டது.
யாரும் அதை எதிர்பார்க்கவில்லை.
அதிலும் குறிப்பாக ஆதிரை…
குழந்தைகள் கேட்ட அந்த வார்த்தைகள் அவளது காதில் விழுந்த அடுத்த நொடியே, அவளது இதயத் துடிப்பு அதிகரித்தது. மூச்சே நின்றுவிட்டது போல உணர்ந்தாள். முகத்தில் இருந்த புன்னகை மெல்ல மறைந்து, அதிர்ச்சியுடன் குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
தொடரும்