அரக்கன் 💞 {1}

அத்தியாயம் 1

 

 

காலைப் பொழுதில், மும்பையில் உள்ள Bandra Kurla Complex (BKC) வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மும்பையின் மிகவும் பிரபலமான மற்றும் ஆடம்பரமான வணிக மையங்களில் ஒன்றான அந்தப் பகுதியில், உயர்ந்து நின்றிருந்த ஒரு பிரம்மாண்ட ஐடி நிறுவனத்தில் மட்டும் இன்று வழக்கத்தை விட அதிக பரபரப்பு நிலவியது.

அதற்குக் காரணம், அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி இன்று அலுவலகத்திற்கு வரவிருந்தார். அதனால் அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்கள் வேலைகளை வேகமாகவும், கவனமாகவும் செய்து கொண்டிருந்தனர்.

அந்த நிறுவனத்தில் டீம் லீடராகப் பணியாற்றும் ஒரு பெண், யாரோடோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

அப்போது, அவளது பின்னால் இருந்து,

“நிரல்…”

என்ற அழைப்பு அவளது காதில் விழ, உடனே திரும்பிப் பார்த்தாள்.

அவள் நிரல்யா.

அழகான, அமைதியான குணம் கொண்ட பெண். தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து 

வருகிறாள்.

அன்று நீல நிறத்தில், வெள்ளைப் பூக்கள் பதிக்கப்பட்ட அழகிய டிசைன் கொண்ட சேலையை அணிந்திருந்தாள். எளிமையிலேயே அவளது அழகு தனித்துவமாகத் தெரிந்தது.

தன்னை அழைத்தது யார் என்று திரும்பிப் பார்த்தவள், அங்கே தன்னைப் பார்த்து புன்னகையுடன் நின்றிருந்த ஆரவைக் கண்டதும், அவளும் மெதுவாகச் சிரித்தாள்.

“சொல்லு ஆரவ்…”

“என்ன, காலையிலேயே ரொம்ப பிஸியாக இருக்க போல?” என்று கேட்டான் ஆரவ்.

ஆரவ் மும்பையைச் சேர்ந்தவன். ஆனால் தமிழை மிகவும் சரளமாகப் பேசுவான்.

அதே அலுவலகத்தில் வேலை செய்கிறான். அவனும் அங்கே ஒரு டீம் லீடராகப் பணியாற்றுகிறான்.

 

“ஒண்ணும் இல்லை… வீட்டுக்கு பேசிட்டு இருந்தேன்,” என்றாள் நிரல்யா.

“ஓகே, நிரல். இன்னைக்கு நம்ம CEO வர்றாரு. நம்ம எல்லாருக்கும் மீட்டிங் இருக்கு. ஞாபகம் இருக்கா?”

“ஞாபகம் இருக்கு, ஆரவ்.”

“சரி… அம்மா எப்படி இருக்காங்க? நேத்து ஹாஸ்பிட்டல் செக்கப்புக்கு கூட்டிட்டு போனியா?” என்று அக்கறையுடன் கேட்டாள்.

“ஆமாம்… செக்கப்புக்குக் கூட்டிட்டு போனேன். இப்போ பரவாயில்லை.”

“நீ மட்டும் மனசு வச்சா, அம்மா இன்னும் நல்லா ஆயிடுவாங்க,” என்றான் ஆரவ்.

“என்ன… விளையாடுறியா?” என்று புருவம் சுருக்கினாள் நிரல்யா.

“விளையாடல, நிரல். சீரியஸாதான் சொல்றேன். அம்மா உன்னைப் பற்றித்தான் கேட்டுட்டே இருக்காங்க.”

“எனக்குப் புரியுது, ஆரவ்… கொஞ்சம் டைம் கொடு.”

“எவ்வளவு டைம் கேக்குற, நிரல்? நம்ம லவ் பண்ண ஆரம்பிச்சு மூணு வருஷம் ஆயிடுச்சு. ‘உன் வீட்ல சொல்லி சம்பந்தம் வாங்குறேன்’ன்னு நீ உன்னோட ஊருக்குப் போன. அங்கிருந்து நாலு மாசம் கழிச்சு வந்த.  ‘இப்போ அதைப் பற்றி பேச வேண்டாம், கொஞ்ச நாள் ஆகட்டும்’ன்னு சொன்ன. அதுக்கும் இப்போ ஒரு வருஷம் ஆயிடுச்சு. இன்னும் எவ்வளவு நாள், நிரல்?” என்று கவலையுடன் கேட்டான் ஆரவ்.

ஆரவின் மனநிலை புரிந்ததால், மெதுவாக மூச்சை இழுத்தவள்,

“எனக்குப் புரியுது, ஆரா… சாரி. என்னோட பிரச்சனையால உனக்கும் கஷ்டம்,” என்றாள்.

“லூசு மாதிரி பேசாதடி. நான் அப்படி சொல்லல,” என்று அவளைச் சமாதானப்படுத்தினான்.

“ நான் வீட்டுக்கு போன நேரமே அம்மா, அப்பாக்கிட்ட சொல்லிட்டேன். அவங்கதான் ‘கொஞ்ச நாள் ஆகட்டும்’ன்னு சொன்னாங்க. இப்போ மறுபடியும் பேசுறேன். என்னோட அம்மா அப்பாவ உங்க வீட்டுக்கு வந்து பேசச் சொல்லுறேன்.”

அவளது வார்த்தைகளைக் கேட்ட ஆரவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

“நீ உங்க வீட்ல சொன்னா மட்டும் போதும். நான் அம்மாவோட வந்து உங்க வீட்டுல பேசுறேன்,” என்றான்.

“ஓகே… நான் அம்மாக்கிட்ட பேசிட்டு உனக்குச் சொல்றேன்.”

“சரி. அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. இன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டுப் போ.”

“ஓகே, ஆரவ். நீ போகும்போது என்னையும் பிக்-அப் பண்ணிக்கோ.”

அதைக் கேட்ட ஆரவ் புன்னகையுடன்,

“சரி, மேடம்!” என்றான்.

 

“சரி, ஆரவ்… மீட்டிங் ஹாலுக்கு கிளம்புவோம், வா,” என்றவாறே நடந்தாள் நிரல்யா. அவளுடன் ஆரவும் சென்றான்.

முக்கியமானவர்கள் மட்டும் அந்த மீட்டிங் ஹாலில் இருந்தனர்.

அரை மணி நேரம் கழித்து, அந்த மீட்டிங் ஹாலுக்குள் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் நுழைந்தார். அவரைக் கண்டதும் அனைவரும் எழுந்து நின்று,

“குட் மார்னிங், சார்!” என்று மரியாதையுடன் கூறினர்.

அவரும் அனைவரையும் பார்த்து புன்னகையுடன்,

“குட் மார்னிங், கைஸ்!” என்றார்.

அவர் வேறு யாருமல்ல, விக்ரம் சிங்கானியா. அந்த நிறுவனத்தின்தலைமை அதிகாரி

சில நொடிகள் அமைதியாக அனைவரையும் பார்த்தவர், தனது பேச்சைத் தொடங்கினார்.

“உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். என்னோட இந்த கம்பெனியை இந்தியாவில் இருக்கிற என்னோட மகனோட நண்பருக்குக் கொடுக்கப் போறேன். எனக்கு வயசாயிடுச்சு. இனிமேல் என்னால இந்த கம்பெனியோட முழுப் பொறுப்பையும் பார்க்க முடியாது. என்னோட பிள்ளைகளும் அமெரிக்காவில்தான் இருக்காங்க. அவங்களாலயும் இங்க வந்து கம்பெனியை கவனிக்க முடியாது. அதனாலதான், என்னோட மகனுக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட இந்த கம்பெனியை ஒப்படைச்சுட்டு, நானும் அமெரிக்கா போகப் போறேன்.

கம்பெனியை வாங்கப் போறவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். இவ்வளவு நாளா எனக்கு நீங்க எப்படி சப்போர்ட் பண்ணீங்களோ, அதே மாதிரி அவருக்கும் சப்போர்ட் பண்ணணும். உங்களோட யாருடைய வேலையும் மாறப் போறதில்லை. அவங்க அவங்க வேலையிலேயே தொடர்வீங்க. இன்னும் ஒரு மாதத்துக்குள் கம்பெனி முழுசாக அவரோட கைக்கு போயிடும். அதனாலதான் இந்த மீட்டிங்கை அவசரமா ஏற்பாடு பண்ணினேன்.

இங்க இருக்கிற எல்லாருமே டீம் ஹெட்ஸ். இந்த விஷயத்தை உங்க டீம்ல வேலை செய்றவங்ககிட்ட நீங்க தெளிவா சொல்லி புரியவையுங்கள்.”

என்று கூறி தனது பேச்சை முடித்தார்.

அவர் சொன்னதை கேட்ட அனைவருக்கும் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. காரணம், விக்ரம் சிங்கானியா ஒரு நல்ல மனிதர். முதலாளி–தொழிலாளி என்ற எந்த ஏற்றத் தாழ்வும் பார்க்காமல், அனைவரிடமும் சகஜமாகவும் அன்பாகவும் பழகுபவர். அப்படிப்பட்டவர் திடீரென்று இப்படியொரு முடிவை அறிவித்தது அவர்களுக்கு மனவேதனையாக இருந்தது.

மீட்டிங் முடிந்ததும், அனைவரும் தங்களுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.

மாலை, வேலை முடிந்த பிறகு ஆரவ் வெளியே வந்து, தனது காரை ஸ்டார்ட் செய்து நிரல்யாவுக்காக காத்திருந்தான்.

சில நிமிடங்களில் அங்கு வந்த நிரல்யா,

“சாரி, ஆரவ்… கொஞ்சம் லேட் ஆயிடுச்சு,” என்றவாறே காரின் முன்பக்க கதவைத் திறந்து, ஆரவின் அருகில் அமர்ந்தாள்.

“இட்ஸ் ஓகே, நிரல்,” என்று மெதுவாகக் கூறிய ஆரவ், காரை கிளப்பினான்.

காரை ஓட்டிக்கொண்டே ஆரவ், நிரல்யாவை ஒரு கணம் திரும்பிப் பார்த்தான்.

“நிரல்… நிரல்… இந்தப் புது எம்.டி. எப்படி இருப்பாரோ தெரியல. எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு,” என்றான்.

“ஏன் பயப்படணும், ஆரவ்? நாம நம்ம வேலையை ஒழுங்காகச் செய்தால் எதுக்கு பயப்படணும்?” என்று அமைதியாகக் கேட்டாள் நிரல்யா.

“ஐயோ… உன்கிட்ட சொன்னேனே பாரு!” என்று முகத்தைச் சுளித்தான் ஆரவ்.

“நான் என்ன தப்பா சொன்னேன், ஆரவ்? நம்ம வேலையை ஒழுங்காகச் செய்தா, நம்மள யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அப்புறம் ஏன் பயப்படணும்?” என்றாள் அவள் சிரித்தபடி.

“சரி… சரி… வீடு வந்துடுச்சு. வா,” என்றபடி காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு, அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

வீட்டின் ஹாலில் ஆரவின் அம்மா சுனிதா, டிவி பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார். நிரல்யாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.

“வாம்மா! எப்படி இருக்க?” என்று அன்போடு விசாரித்தார்.

“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க? இப்போ உடம்பு பரவாயில்லையா?” என்று அக்கறையுடன் கேட்டாள் நிரல்யா.

“நல்லா இருக்கேன் மா. உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சு. அதான் ஆரவ்கிட்ட சொல்லி உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னேன்,” என்றார் சுனிதா.

“நானே உங்களை வந்து பார்க்கணும்னுதான் நினைச்சேன் ஆன்ட்டி. கொஞ்சம் வேலை இருந்ததால வர முடியல. சாரி…” என்று சொல்லிக்கொண்டிருந்தவளை இடைமறித்தான் ஆரவ்.

“போதும்… போதும்… உங்க ரெண்டு பேரோட பாசப் போராட்டம்! அம்மா, டீ போடுங்க,” என்று சிரித்தான்.

“சரிடா… இரு,” என்று கூறிவிட்டு சுனிதா சமையலறைக்குள் சென்றார்.

“ஆன்ட்டி, நீங்க இருங்க. நான் டீ போடுறேன்,” என்று சொல்லிக்கொண்டே நிரல்யாவும் அவரைப் பின்தொடர்ந்து சமையலறைக்குள் சென்றாள்.

அன்று இரவு அங்கேயே இரவு உணவையும் முடித்துக்கொண்டாள் நிரல்யா. அதன் பிறகு, அவள் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு ஆரவ்தான் காரில் அழைத்துச் சென்று பாதுகாப்பாக விட்டுவிட்டு வந்தான்.

இங்கு, சென்னையில்…

காலைப் பொழுது அழகாக விடிந்தது.

 

Poes Garden – நகர் பகுதியில் இருந்த பிரம்மாண்டமான ஒரு மாளிகையில், திடீரென்று ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது.

இரண்டு வயது மட்டுமே இருக்கும் அந்த பெண் குழந்தையின் அழுகை, அந்தப் பெரிய வீடு முழுவதும் எதிரொலித்தது.

அந்தக் குழந்தையை கேர் டேக்கர் தன் கைகளில் வைத்துக்கொண்டு எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், குழந்தை அழுகையை நிறுத்துவதாகவே தெரியவில்லை.

அந்த நேரத்தில்…

“ஏன் குழந்தை அழுகுது? எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கம்பீரமும் அதிகாரமும் கலந்த ஒரு கர்ஜிக்கும் குரல் அங்கு ஒலித்தது.

அந்தக் குரலைக் கேட்டதும், கேர் டேக்கரும், அருகில் இருந்த வீட்டு பணியாளர்களும் ஒரு கணம் பயந்து திரும்பிப் பார்த்தனர்.

அங்கு நின்றிருந்தான் அகரன்.

குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, அவன் அப்போதுதான் ஜிம்மிலிருந்து வெளியே வந்திருந்தான்.

கருப்பு நிற ட்ராக் பேண்டும் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் பனியனும் அணிந்திருந்தான். சற்று முன்தான் கடுமையாக உடற்பயிற்சி செய்திருந்ததால், அவன் உடல் முழுவதும் வியர்வைத் துளிகள் மின்னின. அகன்ற தோள்களும், திடகாத்திரமான உடலமைப்பும், இறுகிய தசைகளும் அவனது கம்பீரத்தை இன்னும் அதிகப்படுத்தின.

கோபம் நிறைந்த பார்வையுடன் அங்கிருந்த வீட்டு பணியாளர்கள் அனைவரையும் முறைத்தபடி நின்றிருந்தான் அகரன். அவனது முகத்தில் தெரிந்த கடுமையைப் பார்த்ததும், அங்கிருந்த அனைவரும் அடுத்த நொடி என்ன நடக்கப்போகிறதோ என்ற பதற்றத்தில் உறைந்து நின்றனர்.

 

தொடரும்

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top