அனைவரின் முகத்திலும் அந்த ஒரு நொடியின் அதிர்ச்சி இன்னும் விலகாமல் இருந்தது. அந்த அமைதியைக் கலைப்பது போல, மீண்டும் குழந்தைகளின் மழலைக் குரல் அந்த இடம் முழுவதும் ஒலித்தது.
“அப்பா… சொல்லுங்க… எப்போ எங்களுக்கு தங்கச்சி பாப்பா கிடைக்கும்?” என்று ஒரே குரலில் கேட்டார்கள்.
குழந்தைகளின் அந்த எதிர்பார்ப்பான கேள்வியைக் கேட்டதும், அதிர்ச்சியில் உறைந்திருந்த பெரியவர்கள் அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அந்த நேரம் கோகுல் குறும்பாக,
அண்ணா… சொல்லுங்க… யாளி குட்டிக்கு எப்போ தங்கச்சி பாப்பா, தம்பி பாப்பா வருவாங்க?” என்று மீண்டும் கேட்டான்.
உடனே கதிர் அவனைப் பார்த்து,
“சும்மா இருடா, நீனு…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினான்.
அதற்கு கோகுல் உடனே,
“நானா கேட்டேன்? உங்க புள்ளதான் கேட்டுச்சு. முதல்ல உங்க மகளுக்குப் பதில் சொல்லுங்க.” என்று குறும்பாகக் கூறினான்.
அதைக் கேட்டதும் நிலாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போனது. யாருடைய முகத்தையும் பார்க்க முடியாமல், அவள் தலைகுனிந்து அமைதியாக நின்றாள்.
இங்கு ஆதிரனின் நிலையும் வேறுபடவில்லை. சர்வேஷ் கேள்வியை விட, ஆதிரை என்ன நினைப்பலோ என்ற பயம்தான் அவனுக்குள் அதிகமாக இருந்தது. சிறிது தயக்கத்துடனும் அவளை நோக்கிப் பார்த்தான்.
அவன் நினைத்தது போலவே, ஆதிரை அவனை ஒரு கடும் முறையுடன் பார்த்தாள். அந்த ஒரு பார்வையிலேயே அவளுடைய
, கோபமும், சங்கடமும் கலந்து இருப்பதை ஆதிரன் புரிந்து கொண்டான்.
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல், எதுவும் பேசாமல் அவள் வேகமாக எழுந்து வீட்டிற்குள் சென்று விட்டாள்.
அவள் செல்வதையே அனைவரும் ஒரு கணம் அமைதியாக பார்த்தனர். பின்னர் அவர்களின் பார்வை மெல்ல ஆதிரனை நோக்கித் திரும்பியது.
அவர்களின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட ஆதிரன், மெதுவாக புன்னகைத்துவிட்டு,
“நான் பாத்துக்கறேன்…” என்று சொல்லிவிட்டு எழுந்து செல்ல முயன்றான்.
அந்த நேரம் சர்வேஷ் மீண்டும் ஆதிரனின் கன்னத்தைப் பிடித்து,
“அப்பா… சொல்லுங்க… எனக்கு எப்போ தம்பி பாப்பா வரும்?” என்று மழலையாகக் கேட்டான்.
அவனுடைய அந்த கேள்வியைக் கேட்ட ஆதிரன் ஒரு பெருமூச்சு விட்டான். பிறகு மகனைத் தன் அருகே இழுத்து அணைத்துக் கொண்டு,
“கண்டிப்பா… கூடிய சீக்கிரம் வரும். ஆனா அம்மாகிட்ட இதைப் போய்க் கேட்காதே… சரியா?” என்று மெதுவாகச் சொன்னான்.
அதைப் புரிந்தது போல சர்வேஷ் தலையாட்டி,
“சரிப்பா…” என்று சிரித்துக் கூறினான்.
அவனின் அந்த மழலைப் பதிலைக் கேட்டதும், அங்கிருந்த அனைவரும் மனம் நிறைந்த சிரிப்பில் மூழ்கினர். குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற கேள்விகள், பெரியவர்களின் வெட்கத்தையும் சங்கடத்தையும் வெளிக்கொண்டு வந்தாலும், அந்த குடும்பத்தின் அன்பும் பாசமும் நிறைந்த தருணமாக அந்த நிமிடம் அனைவரின் மனதிலும் அழகான நினைவாக பதிந்தது.
சிறிது நேரம் அனைவரும் பேசிக் கொண்டிருந்த பிறகு, கதிரின் குடும்பம் கிளம்பத் தயாரானது. அவர்களை வழியனுப்புவதற்காக அனைவரும் வாசலுக்கு வந்தனர்.
ஆதிரையும் அமைதியாக வெளியே வந்து, முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அவர்களை வழியனுப்பி வைத்தாள். அவர்கள் சென்றவுடன் மீண்டும் யாரிடமும் பேசாமல் நேராக தங்களது அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள். அதன் பிறகு அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
இதை கவனித்த லட்சுமி, “ஆதிரை… வா மா, சாப்பிடலாம்,” என்று அன்பாக அழைத்தார்.
ஆனால் உள்ளிருந்தபடியே,
“வேண்டாம் அத்தை… எனக்கு பசிக்கல…” என்ற அவளது குரல் மட்டுமே வெளியே வந்தது.
அதை கேட்ட லட்சுமி, “சரி மா…” என்று சொல்லிவிட்டு கீழே வந்தாலும், அவள் மனதில் ஒரு கவலை இருந்தது.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஆதிரனுக்கோ நிலைமை நன்றாகவே புரிந்தது.
“வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சு… இனி அதை இறக்குறது ரொம்ப கஷ்டம்…” என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டு சிரிப்பும் சலிப்பும் கலந்த பெருமூச்சு விட்டான்.
அதன்பிறகு அனைவருடனும் அமைதியாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தான். பின்னர் சர்வேஷுக்கு உணவு ஊட்டி முடித்து, அவனைத் தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்றான்.
அறைக்குள் நுழைந்தவுடன், கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்த ஆதிரை, ஆதிரன் சர்வேஷைத் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்ததும் சற்றென்று எழுந்து நின்றாள்.
அவன் அருகில் வந்தவுடன்,
“நீங்க…” என்று ஏதோ சொல்லத் தொடங்கினாள்.
ஆனால் அவள் பேச்சை முழுமையாகக் கேட்கவே விடாமல், ஆதிரன் தனது ஒற்றை விரலை உதட்டில் வைத்து,
“ஷ்… சத்தம் போடாதே… சர்வேஷ் தூங்குறான்…” என்று மெதுவாகக் கூறினான்.
அவள் அவனை ஒரு கடும் முறையுடன் பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் பால்கனிக்குச் சென்று நின்றாள்.
ஆதிரனோ அமைதியாக சர்வேஷை கட்டிலில் படுக்க வைத்து, போர்வையை மெதுவாகப் போர்த்திவிட்டு, அவனது தலையை வருடியபடி சில நிமிடங்கள் தட்டிக் கொடுத்தான். சிறிது நேரத்திலேயே சர்வேஷ் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினான்.
அவன் நன்றாகத் தூங்குவதை உறுதி செய்த பிறகே, ஆதிரன் மெதுவாக எழுந்து பால்கனிக்குச் சென்றான்.
நிலவொளியில் நின்றபடி வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரையின் அருகில் சென்று நின்றான்.
அவன் வந்ததை உணர்ந்தவள், திரும்பிப் பார்க்காமலேயே,
“இப்போ உங்களுக்கு புரியுதா… நான் ஏன் உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன்னு?” என்று அழுத்தமாகக் கேட்டாள்.
அவளது குரலில் இருந்த கோபமும் ஏமாற்றமும் ஆதிரனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
அவன் சற்றுச் சலிப்புடன்,
“இப்போ என்ன உனக்கு பிரச்சனை?” என்று கேட்டான்.
அவள் உடனே அவனை நேராகப் பார்த்து,
“என் பிரச்சனையே நீங்கதான்.” என்றாள்.
அவன் புருவத்தைச் சுருக்கி,
“சரி… அதுக்கு நான் இப்போ என்ன பண்ணணும்?” என்று அமைதியாகக் கேட்டான்.
அவளோ எரிச்சலுடன்,
“என்ன… நக்கலா பேசுறீங்களா?” என்று கேட்டாள்.
அதற்கு ஆதிரன் தோளைச் சற்றுக் குலுக்கி,
“நான் எது பேசினாலும் அதுல தப்புதான் சொன்னா… என்னதான் பண்றது?” என்றான்.
அவள் ஒரு நொடி அவனை முறைத்துப் பார்த்துவிட்டு,
“அதுக்கு நீங்க முதல்ல சரியா பேசணும்.” என்று பதிலளித்தாள்.
ஆதிரன் ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டான்.
“சரி… இவ்வளவு கோபப்படுற அளவுக்கு என்ன நடந்துச்சு?” என்று பொறுமையாகக் கேட்டான்.
“நான் ஏன் கோபப்படுறேன்னு உங்களுக்கு உண்மையாவே தெரியலையா?” என்று கேட்டாள்.
ஆதிரன் அவளது கண்களை நேராகப் பார்த்தபடி,
“தெரியுது. சர்வேஷ் என்கிட்ட கேட்ட அந்த விஷயத்துக்காகத்தான் நீ கோபப்பட்டுட்டு இருக்க.” என்றான்.
உடனே ஆதிரை,
“தெரியுது தானே… அப்புறம் என்ன கேள்வி? ‘ஏன் கோபப்படுற?’ன்னு கேட்கிறீங்க!” என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.
அவளது கோபத்தைக் கவனித்த ஆதிரன், அமைதியான குரலில்,
“ஆதிரை… அதுல நீ கோபப்படுற அளவுக்கு எதுவும் இல்ல…” என்று கூறினான்.
அவன் சொன்ன அந்த ஒரு வாக்கியம், ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த ஆதிரையின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.
ஆதிரன் அவ்வாறு கூறியதும், ஆதிரையின் முகத்தில் இருந்த கோபம் இன்னும் அதிகரித்தது.
“என்ன…? நான் ஒண்ணும் இல்லாத விஷயத்துக்காக கோபப்படுறேன்னு சொல்றீங்களா?” என்று அவள் ஆத்திரமாகக் கேட்டாள்.
அதற்கு ஆதிரன் தோளை அலட்சியமாகக் குலுக்கிவிட்டு,
“இதையும் நான் வேற என் வாயால சொல்லணுமா?” என்றான்.
அவனுடைய அந்த அலட்சியமான பதில், ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த ஆதிரையின் கோபத்தில் மேலும் எண்ணெய் ஊற்றியது.
அவள் அவனை முறைத்தபடி,
“உங்களுக்கு நான் பேசுறது எல்லாம் விளையாட்டா இருக்கு இல்ல? நீங்க என்னை என்ன சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க… உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.
ஆதிரன் அவளை அமைதியாகப் பார்த்தபடி,
“நல்லாவே ஞாபகம் இருக்கு.” என்றான்.
அவள் உடனே,
“நல்லா ஞாபகம் இருந்தும், சர்வேஷ்கிட்ட ‘கூடிய சீக்கிரம் தம்பி பாப்பா வரும்’ன்னு ஏன் சொன்னீங்க?” என்று விடாமல் கேட்டாள்.
அந்தக் கேள்வியைக் கேட்ட ஆதிரன், தாடையை இறுக்கிப் பற்களைக் கடித்துக் கொண்டான். பிறகு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவளைப் பார்த்தான்.
“ஆதிரை… அவன் சின்ன பையன். அவன்கிட்ட ‘உனக்கு தம்பி பாப்பாவோ, தங்கச்சி பாப்பாவோ வராது’ன்னு சொன்னா, அவன் மனசு கஷ்டப்படும்னு உனக்கு தெரியாதா?” என்று கேட்டான்.
சிறிது இடைவெளி விட்டவன் தொடர்ந்து,
“நான் ‘வரும்’ன்னு சொன்ன உடனே அவன் முகத்துல வந்த சந்தோஷத்தை பார்த்தியா? எவ்வளவு ஆசையா சிரிச்சான் தெரியுமா? அந்த ஒரு நிமிஷம் அவன் சந்தோஷமா இருக்கணும்னுதான் நான் அப்படிச் சொன்னேன். அதுக்காகத்தான் அந்த பொய்யை சொன்னேன்.” என்றான்.
அவனது குரலில் இருந்த பாசத்தையும், சர்வேஷ் மீது இருந்த அக்கறையையும் ஆதிரை உணர்ந்தாலும், அவளால் அதை உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவள் நம்ப முடியாதது போல அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
அவளது பார்வையை கவனித்த ஆதிரன் சற்றுக் கடுப்பாக,
“ஏன் இப்போ இப்படி பாக்குற?” என்று கேட்டான்.
அவள் அமைதியாகவே நின்றிருக்க, அவனே மீண்டும் பேசத் தொடங்கினான்.
“இங்க பாரு… உனக்கு மட்டும் இல்ல, எனக்கும் சர்வேஷ் மட்டும்தான் புள்ள. அவன் மட்டும் போதும். அதுக்கு மேல எனக்கு எதுவும் தேவையில்லை.”
அவன் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உறுதியாக ஒலித்தன.
“தேவையில்லாம நீ குழம்பி, என்னையும் கோபப்படுத்தாதே.” என்று கூறிவிட்டு, அதற்கு மேல் அந்தப் பேச்சைத் தொடர விரும்பாதவன் போல திரும்பி நடந்து சென்றான்.
அறைக்குள் வந்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சர்வேஷின் அருகில் படுத்துக் கொண்டான். மகனின் தலையை மெதுவாக வருடியபடி கண்களை மூடிக் கொண்டாலும், அவனது மனதில் ஓடிய எண்ணங்கள் மட்டும் ஓயவில்லை.
ஆதிரை அங்கேயே சில நிமிடங்கள் அசையாமல் நின்றாள். அவன் சொன்ன வார்த்தைகள் அவளது மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன.
“எனக்கும் சர்வேஷ் மட்டும்தான் புள்ள…”
அந்த வார்த்தைகள் அவளது மனதை ஏதோ ஒரு விதமாகத் தொட்டன.
சிறிது நேரம் ஆழமாக யோசித்தவள், மேலும் எதுவும் பேசாமல் அறைக்குள் வந்தாள். கட்டிலில் படுத்திருந்த ஆதிரனையும், அவனருகில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த சர்வேஷையும் ஒரு கணம் அமைதியாகப் பார்த்தாள்.
பிறகு வழக்கம்போல் கட்டிலின் கீழே விரிப்பை விரித்து அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.
அஞ்சலி தன்னுடைய அறையில் இருந்தாள். குளித்து முடித்துவிட்டு, நீளமான ஈரமான கூந்தலை துணியால் மெதுவாகத் துடைத்தபடி கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தாள். குளித்த புத்துணர்வு முகத்தில் தெரிந்தாலும், மனதில் இன்னும் விக்ரம் மீது இருந்த கோபம் முழுவதுமாகக் குறையவில்லை.
அறை முழுவதும் அமைதியாக இருந்த அந்த நேரத்தில், கதவு மெதுவாக திறக்கும் சத்தம் கேட்டது.
அஞ்சலி திரும்பிப் பார்த்தாள்.
கதவைத் திறந்தபடி உள்ளே வந்தவன் விக்ரம்.
அவனைப் பார்த்ததும் அவளது புருவம் சுருங்கியது.
“இந்த நேரத்துல நீங்க இங்க என்ன பண்றீங்க?” என்று நேரடியாகக் கேட்டாள்.
ஆனால் அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல், அவளது ஈரமான கூந்தலைக் கவனித்த விக்ரம்
“நீ என்ன இந்த நேரத்துல தலைக்கு குளிச்சிருக்க? நைட் டைம்ல தலைக்கு குளிச்சா தலை காயாதுன்னு உனக்கு தெரியாதா?” என்று கேட்டான்.
அவனது குரலில் அக்கறை இருந்தாலும், அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அஞ்சலி இல்லை.
அவள் அவனை நேராகப் பார்த்தபடி,
“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க.” என்றாள்.
விக்ரம் மெதுவாகச் சிரித்துவிட்டு,
“என் பொண்டாட்டி ரூமுக்கு வர, நேரம் காலம் எல்லாம் பார்க்கணுமா?” என்று குறும்பாகக் கேட்டான்.
அந்த வார்த்தையைக் கேட்ட அஞ்சலி பற்களைக் கடித்தாள்.
“விக்ரம்…” என்று எச்சரிக்கும் குரலில் அழைத்தாள்.
அவளது கோபத்தை உணர்ந்த விக்ரம், உடனே கெஞ்சும் குரலுக்கு மாறி,
“ப்ளீஸ் அஞ்சலி… நான்தான் உன்கிட்ட சாரி சொல்லிட்டேனே. இன்னைக்கு எல்லாரும் முன்னாடியும் பாட்டு பாடி வேற உன்கிட்ட சாரி கேட்டேன்.” என்றான்.
அவள் எந்த விதத்திலும் இளகாமல்,
“நான் உங்களை பாட்டு பாடி சாரி சொல்லச் சொல்லலையே.” என்று அமைதியாகக் கூறினாள்.
அவளது பதிலைக் கேட்ட விக்ரம் பெருமூச்சு விட்டான்.
“நான் பண்ணது தப்புன்னு ஒத்துக்கிட்டேன். பத்தாததுக்கு நீ என்ன அடிச்ச… அதையும் வாங்கிக்கிட்டேன். இதுவும் போகலையா? சரி… உன் கால்ல விழவா?” என்று சொல்லியபடியே உண்மையாகவே அவள் காலில் விழுவதற்காக குனிந்தான்.
அதைப் பார்த்த அஞ்சலி அதிர்ச்சியடைந்தாள்.
“அய்யோ…!” என்று பதறியவள் சற்றென்று ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.
பிறகு அவனைப் பார்த்து,
“என்ன… டிராமா பண்றீங்களா?” என்று முறைத்தாள்.
விக்ரமோ தலையில் கை வைத்துக் கொண்டு,
“அய்யோ கடவுளே…” என்று சலிப்புடன் முணுமுணுத்தான்.
அதன்பிறகு மெதுவாக அவள் அருகில் வந்து நின்றவன், அவளது கையை மென்மையாகப் பிடித்தான்.
அவனது தொடுதலில் அஞ்சலி உடனே கையை இழுத்துக் கொள்ள முயன்று,
“விக்ரம்… வேணாம்… போய்டுங்க…” என்றாள்.
ஆனால் விக்ரமோ அவளது கண்களை நேராகப் பார்த்தபடி, “முடியாது…” என்பதுபோல் தலையை மெதுவாக அசைத்தான்.
தொடரும்