அகரனின் கோபக் குரலில் பயந்து நடுங்கியபடி நின்றிருந்த வேலையாட்கள், அவன் அருகில் வந்ததும் வழி விட்டு நின்றனர்.
அகரன், கேர் டேக்கரின் கைகளில் இருந்த குழந்தையை மெதுவாகத் தன் கைகளில் வாங்கிக் கொண்டான்.
பதற்றத்துடன் நின்றிருந்த கேர் டேக்கர், குழந்தையை அவன் வாங்கியவுடன்,
“சார்… குழந்தை நல்லாத்தான் விளையாடிட்டு இருந்துச்சு. ஏன் திடீர்னு அழ ஆரம்பிச்சுச்சுன்னு தெரியல சார்…” என்று பயத்துடன் கூறினாள்.
அவளை முறைத்துப் பார்த்த அகரன்,
“‘தெரியல’ன்னு சொல்றதுக்குத்தான் உங்களுக்கு சம்பளம் கொடுத்து இங்க வேலைக்கு வச்சிருக்கேனா? குழந்தையை தனியா விட்டுட்டு நீங்க எங்க போனீங்க?” என்று கடுமையாகக் கேட்டான்.
அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், தலை குனிந்து அமைதியாக நின்றாள்.
அந்த நேரத்தில்தான் அகரனின் பார்வை குழந்தையின் காலில் விழுந்தது. காலில் ஏதோ எறும்பு கடித்ததுபோல் சிவந்து, சற்றுத் தடித்திருந்தது.
அதைப் பார்த்ததும் அவனுக்குள் இருந்த கோபம் கட்டுக்கடங்காமல் வெடித்தது.
உடனே அவன் தனது பி.ஏ.-வை அழைத்தான்.
“சிவா!” என்று கர்ஜிக்கும் குரலில் அழைத்தான்.
அந்தக் குரலில் பதறிய சிவா, வேகமாக ஓடி வந்து அகரன் முன் நின்றான்.
“சார்…”
“இப்பவே இந்த வீட்டுல கிளீனிங் வேலை செய்ற யாரும் இனிமே இருக்கக் கூடாது. எல்லாரையும் அனுப்பிட்டு, புதுசா ஆட்களை அப்பாயிண்ட் பண்ணு.” என்று கட்டளையிட்டான்.
அகரன் எதற்காக அப்படி சொல்கிறான் என்று புரியாவிட்டாலும், அவன் கோபத்தின் தீவிரத்தை உணர்ந்த சிவா,
“சரி சார்.” என்று கூறிவிட்டு, அங்கிருந்த கிளீனிங் வேலை செய்பவர்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
பிறகு அகரன், கேர் டேக்கரை நோக்கி திரும்பினான்.
“இது தான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். இனிமே குழந்தையை தனியா விட்டுட்டு எங்கயாவது போனீங்கன்னு எனக்குத் தெரிஞ்சா… நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. மைண்ட் இட்!” என்று எச்சரித்தான்.
அதன்பிறகு, குழந்தையை மார்போடு அணைத்தபடியே தூக்கிக்கொண்டு தனது அறைக்குள் சென்றுவிட்டான்.
இங்கு மும்பையில்…
நிரல்யா தன் ஹாஸ்டல் அறையில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அன்று அவளுக்கு விடுமுறை நாள். காலை முதலே ஆரவ் பலமுறை அழைத்து, வீட்டிற்கு வருமாறு கூறியிருந்தான்.
ஆனால்,
“எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, ஆரவ். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். இன்று நான் வரலை,” என்று சொல்லிவிட்டாள்.
அவனும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தாமல், “சரி… நல்லா ரெஸ்ட் எடு,” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.
அறையில் தனியாக இருந்த நிரல்யாவின் எண்ணங்கள் அனைத்தும் அவளது வீட்டைச் சுற்றியே சுழன்றன.
“ஆரவைப் பற்றி வீட்டில் எப்படி சொல்வது? மூன்று வருடங்களுக்கு ” முன்பே சொல்லியிருந்தாலும், அது அவர்களுக்கு இப்போ ஞாபகத்தில் இருக்குமோ தெரியலையே.” இப்போது சொன்னால் அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? இப்போ எப்படி ஆரம்பிப்பது?”
என்ற எண்ணங்களிலேயே அவள் மூழ்கியிருந்தாள்.
அந்த நேரத்தில் அவளது மொபைல் ஒலித்தது.
திரையைப் பார்த்தவள், “அம்மா…” என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டே அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்கம்மா… எப்படி இருக்கீங்க? அப்பா, அத்தை எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று அன்புடன் கேட்டாள்.
“எல்லாரும் நல்லாத்தான் இருக்கோம், மா. நீ எப்படி இருக்க? ஊருக்கு எப்போ வருவ?” என்று அவளது தாய் கேட்டார்.
“நான் நல்லா இருக்கேன், அம்மா,” என்று மட்டும் பதிலளித்தாள் நிரல்யா.
“சரி… ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும். அதுக்குத்தான் இன்னைக்கு கால் பண்ணேன்,” என்றார் அவளது அம்மா.
“சொல்லுங்கம்மா… என்ன விஷயம்? ஏதாவது பிரச்சனையா?” என்று பதற்றத்துடன் கேட்டாள் நிரல்யா.
“பிரச்சனை ஒன்னும் இல்லடி. உனக்கு ஒரு வரன் வந்திருக்கு. உங்க அப்பா நேத்து வந்து சொன்னாரு. அதைப் பற்றிப் பேசலாம்னு நினைச்சுத்தான் உனக்குக் கால் பண்ணேன்,” என்றார்.
அதை கேட்டதும் நிரல்யா அதிர்ச்சியடைந்தாள்.
“என்னம்மா… திடீர்னு சொல்றீங்க?” என்றாள்.
“உங்க அப்பாதான் நேத்து திடீர்னு வந்து சொன்னாருடி.”
“அத்தை என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள் நிரல்யா.
“உங்க அத்தையும் சரின்னு சொல்லிட்டாங்க. அவங்கதான், ‘முதல்ல நிரல்யாகிட்ட கேட்டுட்டு, அதுக்கப்புறம் மாப்பிள்ளை வீட்டாரை பொண்ணு பார்க்க வரச் சொல்லலாம்’ன்னு சொன்னாங்க,” என்றார்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த நிரல்யா, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு,
“அம்மா… அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம். நான் அடுத்த வாரம் வீட்டுக்கு வர்றேன். உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்,” என்றாள்.
“சரிடி. அப்போ நீ வீட்டுக்கு வந்ததும் எல்லாம் பேசிக்கலாம். நான் உங்க அப்பாக்கிட்டயும், அத்தைக்கிட்டயும் சொல்லிடுறேன்,” என்று கூறிவிட்டு அவளது தாய் அழைப்பை முடித்தார்.
அடுத்த நாள் ஆபீஸுக்கு சென்ற நிரல்யா, சிறிது நேரம் வேலை பார்த்த பிறகு ஆரவுக்கு கால் செய்தாள்.
“சொல்லு, நிரல்,” என்றான் ஆரவ்.
“வேலையா இருக்கியா, ஆரவ்? உன்கிட்ட கொஞ்சம் பேசணும். கேண்டீனுக்கு வரியா?” என்று கேட்டாள்.
“ஓகே. டென் மினிட்ஸ். நீ போய் வெயிட் பண்ணு, நான் வந்துட்றேன்,” என்றான்.
“ஓகே, ஆரவ்,” என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.
சொன்னது போலவே பத்து நிமிடங்கள் கழித்து கேண்டீனுக்கு வந்தான் ஆரவ். அங்கு ஒரு மேஜையில் அமர்ந்திருந்த நிரல்யாவின் அருகில் சென்று அமர்ந்தவன்,
“சொல்லு, நிரல். ஏதாவது சாப்பிடுறியா?” என்று கேட்டான்.
“சாப்பிட எதுவும் வேண்டாம், ஆரவ். காபி மட்டும் சொல்லு,” என்றாள்.
“ஓகே,” என்று கூறிவிட்டு இரண்டு காபிகளை வாங்கி வந்தவன், ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான்.
சிறிது நேர அமைதிக்குப் பிறகு, முதலில் நிரல்யாதான் பேச்சைத் தொடங்கினாள்.
“ஆரவ்… நான் அடுத்த வாரம் ஊருக்குப் போறேன்.”
அவளைப் பார்த்தவன்,
“என்ன திடீர்னு?” என்று கேட்டான்.
நேற்று அவளது அம்மா போன் செய்து பேசிய விஷயங்களை அனைத்தையும் அவனிடம் கூறினாள்.
அதைக் கேட்ட ஆரவ்,
“நிரல், நீ ஏற்கனவே நம்மள பத்தி உங்க வீட்டுல சொல்லிட்ட தானே? இப்போ என்ன புதுசா உனக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறாங்க?” என்று கேட்டான்.
“இல்ல, ஆரவ். நான் அதைப் சொன்ன பிறகு வீட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் நடந்துச்சு. அதனால அந்த விஷயத்தை அவங்க மறந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதனாலதான் நான் அடுத்த வாரம் ஊருக்குப் போறேன். கண்டிப்பா ஒத்துக்குவாங்க. நான் போயிட்டு வீட்டுல பேசிட்டு உனக்குச் சொல்றேன். அப்புறம் நீ அங்க வா,” என்றாள்.
“சரி, நிரல். அப்படின்னா நானும் உன்னோடவே வர்றேன்,” என்றான் ஆரவ்.
உடனே அவள் தலையசைத்தாள்.
“அது சரியா வராது, ஆரவ். நான் முதல்ல போய் வீட்டுல பேசிட்டு உனக்குச் சொல்றேன். கண்டிப்பா ஒத்துக்குவாங்க. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு,” என்றாள்.
“ஓகே, நிரல். லீவ் அப்ளை பண்ணிட்டியா?” என்று கேட்டான்.
“இன்னும் இல்ல, ஆரவ். இன்னைக்கே பண்ணணும்,” என்றாள்.
“சரி. நீ போயிட்டு பேசிட்டு சொல்லு. நான் அம்மாவையும் கூட்டிட்டு வர்றேன்,” என்றான்.
அதைக் கேட்ட நிரல்யா சிரித்தபடி,
“ஏய், ஆரவ்… அம்மாவை ஏன் கஷ்டப்படுத்துற? அவங்க இங்கயே இருக்கட்டும். நீ மட்டும் வந்து பேசு. நான் வீட்டுல சொல்லிக்கிறேன்,” என்றாள்.
அவனும் சிரித்துக்கொண்டே,
“ஓகே டி. நான் இன்னைக்கே இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொல்றேன். அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க,” என்றான் ஆரவ்.
சென்னையில்…
மாலை, ஆபீஸிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தான் அகரன்.
வீட்டின் உள்ளே நுழையும் போதே,
“அப்பா…” என்று அழைத்தபடியே தத்தித் தத்தி நடந்து அவனை நோக்கி வந்தாள் அவனது குட்டி மகள் யாஷிகா.
“யாஷி குட்டி…” என்று புன்னகையுடன் அழைத்தவன், அவளைத் தூக்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டான். மகளைத் தூக்கிக்கொண்டு நேராக அவளது அறைக்குச் சென்றான். சிறிது நேரம் அவளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் அவனது மொபைல் போன் அலறியது.
போனை எடுத்து பார்த்தான். அழைத்தது அவனது பி.ஏ. சிவா.
“சொல்லு, சிவா. என்ன விஷயம்?” என்று கேட்டான்.
அந்தப் பக்கம் சிறிது தயக்கத்துடன்,
“சார்… உங்க அம்மா கால் பண்ணிருந்தாங்க. பாப்பாவைப் பார்க்க வரணும்னு சொன்னாங்க…” என்று தட்டுத்தடுமாறியபடி கூறினான் சிவா.
அடுத்த நொடியே…
“சிவா!” என்று அகரன் கத்திய குரலில், மறுமுனையில் இருந்த சிவாவின் காதே அடைந்தது.
நல்ல வேளையாக, போன் வந்ததும் குழந்தையை அறையில் விட்டுவிட்டு, அவன் பால்கனிக்குச் சென்றிருந்தான்.
“சிவா, உனக்கு எத்தனை தடவை சொல்றது? அவங்களைப் பத்தி என்கிட்ட பேசக்கூடாதுன்னு! என் குழந்தையைப் பார்க்க யாரும் வரக்கூடாது. அதையும் மீறி யாராவது வந்தா, அவங்களை நான் எதுவும் செய்ய மாட்டேன்… ஆனா, நீ உயிரோட இருக்க மாட்ட!” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் அதட்டினான்.
அவன் பேசிய வார்த்தைகளில் நடுங்கிப் போன சிவா,
“சா… சாரி, சார்…” என்று கூறிவிட்டு உடனே போனை வைத்துவிட்டான்.
போன் துண்டிக்கப்பட்ட பிறகும், அகரனின் கோபம் அடங்கவில்லை.
பால்கனியில் நின்றபடியே வானத்தை வெறித்துப் பார்த்தவன்,
“இன்னும் ஒரு மாசம்… எப்படியாவது சமாளிச்சுட்டு, குழந்தையைத் தூக்கிக்கிட்டு இங்கிருந்து போயிடணும். யார் தொந்தரவும் இல்லாத ஒரு இடத்துக்கு…” என்று மனதிற்குள் உறுதியாக நினைத்துக் கொண்டான்.
தொடரும்