அத்தியாயம் 14 (USAP)

அத்தியாயம் 14 (USAP)

 

சயந்தன் மகனிடம் அப்பா என்று கூப்பிடும்படி ஆசையாய் கேட்டுக் கொண்டிருக்க செழியனோ அவனை ஒரு வித கடுப்புடன் பார்த்தபடி நின்றிருந்தான். என்றால் அங்கு அரசுவுடன் வந்த அகமேந்திக்கோ சுர்ரென்று கோபம் எகிறியது.

 

எப்படியெல்லாம் ஒரு பெண்ணை பாடுப்படுத்தி விட்டு அவள் சுமந்து பெற்ற குழந்தையை அப்பா என்று கூப்பிட சொல்கிறான். என்று கோபம் வர அகமேந்திக்கோ பொறுமை காற்றில் பறந்தது. அதே கோபத்துடன்

 

எதிர்பாராத நேரத்தில் அரசுவின் முதுகில் கையை வைத்து ஒரு தள்ளு தள்ள அரசுவே அவள் தள்ளி விட்டதில் ஒரு இரண்டடி முன்னால் சென்று தடுமாறி நின்றவன்,

 

“ம்ம் பரவல்லையே போலீஸ் அகேடமில நல்லா தான் ஆபிஸர் ட்ரைனிங் எடுத்துருக்கீங்க போல நான் சீ.எம் ஆனா என்னோட பெர்சனல் பாடி கார்ட் நீங்க தான் மேடம்”

 

என்று நக்கலாக கூற, அவளோ, “முதல்ல மாமனும் மச்சானும் வெளிய வர முடியுமானு பாருங்க சி.எம் ஆகுறது பத்தி பிறகு யோசிக்கலாம்”

 

என்று அவளும் அதே நக்கலுடன் கூற அவனோ, “எந்த கையால விலங்கு மாட்டுனீங்களோ அந்த கையாலயே இன்னும் ரெண்டு வருஷம் இல்லயில்ல ஒன்றரை வருஷத்துல ஆட்சிய மாத்தி சல்யூட் அடிக்க வைக்கல நான் அரசு இல்லடி நல்லா நினைவு வச்சிக்க”

 

என்றவன் பற்கள் நறநறவென அரைப்பட, அவளோ அதை சட்டை செய்யாது அவன் சட்டை காலரை பிடிக்க போக அரசுவோ அவனது விலங்கிட்ட கையால் அவளை தடுத்தவன்,

 

“நானே ஏறுறேன்” என்று ஒரு வித கனலுடன் போலீஸ் ஜீப்பில் எறியமர

 

சயந்தனோ அவ்வளவு நேரமும் தன் தங்கையை தான் வியந்து பார்த்திருந்தான். அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சிறு அடிப்பட்டால் கூட துடித்து போகும் தங்கை போலீஸ் அதிகாரியா?

 

வார்த்தைக்கு கூட வலிக்கும் என நினைத்து மெதுவாக பேசும் குட்டி தங்கை அவனை பார்த்து அதிர்ந்து பேசினாளா? அவனது கண்ணை அவனால் நம்ப முடியவில்லை நாக்கு வறண்டு போக கஷ்டப்பட்டு,

 

“குட்டிம்மா” என்றான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் பொங்க, அதை பொருட்டாக கூட மதிக்காத பெண்ணவளோ அங்கு நின்றிருந்த கான்ஸ்டபிளிடம்,

 

“என்ன சார் இன்னும் அக்கியூஸ்ட்ட வண்டில ஏத்தாம என்ன பண்ணுறீங்க?”

 

என்று காட்டமாக கேட்க, அவரோ பயந்தபடி, “இப்போ ஏத்திர்றேன் மேம்”

 

என்று சயந்தன் அருகே வந்தவர் அவனது ஆள் பலம் அதிகார பலம் தெரிந்து, “சார் வண்டியில ஏறுங்க ப்ளீஸ்”

 

என்று கையை பிடிக்க போக அவனும் அவரை ஒரு வித வெறி பார்வை பார்த்தவன் பேசாமல் வண்டியில் அமர்ந்துக் கொள்ள அரசோ,

 

“வெல்கம் பேக் மச்சான், அப்பறோம் எப்படி பயணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?”

 

என்று நக்கலாக கேட்க சயந்தனுக்கோ கழுத்து நரம்புகள் புடைத்துக் கொண்டு வர,

 

“நம்ம இருக்குற நிலைமைக்கு இப்போ இது ஒன்னு தான் குறைச்சல்” என்று நறநறக்க

 

அரசோ, “அப்போ பொம்பள சோக்கு மட்டும் முக்கியமா மச்சான்?” என்றதும்

 

சயந்தனோ, “என்னடா உளறுற?” என்றதும் அரசு கண்களால் அவன் சிவந்திருந்த கழுத்தை சுட்டிக்காட்ட சயந்தனுக்கு எரிச்சல் தான் வந்தது.

 

இருந்தும் அடக்கிக் கொண்டான். இப்போது அரசுவை விட்டால் வேறு வழி இல்லையே, அவன் ராதிகாவிடம் கோப்பை தூக்கி கொடுத்தான் தான் அதில் அவனுக்கெதிராக ஒரு சாட்சி கூட இல்லை,

 

அரசுவிடம் இருக்கும் அதே கோப்பு தான் ஆனால் சத்யசீலனும் அரிச்சந்திரனும் வாய் திறந்தால் இங்கு சயந்தன் மாட்டிக் கொள்வான் அத்துடன் அவன் சாம்ராஜ்ஜியமும் சரிந்து போகுமே என்று நினைத்துக் கொண்டே,

 

தலையை அழுத்தமாக கோதியவன், அரசுவிடம், “உன் கிட்ட அப்போவே சொன்னேன் தானே இந்த கிழடுகள போட்டு தள்ள சொல்லி சொன்ன பிறகும் இன்னும் ஏன்டா விட்டு வச்சிருக்க?”

 

என்று கேட்க அரசுவோ, “மச்சான் எல்லாத்துக்கும் நேரம்காலம் கூடி வரனும் நீ ப்ரீயா விடு நான் இருக்கேன்ல”

 

என்றதும் சயந்தனோ, “நீ இருப்ப நான் தான் களி திங்கணும் முன்ன சரி செழியன் மட்டும் தான் போலீஸ் இப்போ எக்ஸ்ட்ராவா குட்டிம்மா வேற”

 

என்றதும் அரசுவோ, “அட அட அத வேற ஞாபகப்படுத்திட்ட உன்ன கண்டுக்கவே இல்ல போல”

 

என்றதும் சயந்தனோ, “எல்லாம் உங்களால தான்டா” என்று அரசுவின் சட்டையை பற்ற போக, அரசோ,

 

“இங்கே பாரு மச்சான் புத்தியோட நடந்துக்க இப்போ நம்ம ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா தான் எதிர்ல இருக்கவங்கள எதிர்க்க முடியும்”

 

என்று தீவிரமான குரலில் கூற சயந்தனுக்கும் அது தான் சரியெனப்பட்டது.

 

இதேசமயம் ராதிகவோ, “மேடம் கண்டிப்பா தண்டனை கிடைச்சிருமில்ல”

 

என்று ஒருவித நம்பிக்கையுடன் அகமேந்தியை பார்க்க அகமியோ அன்பும் ஆதரவும் பொங்க,

 

“மேடம்னு சொல்லாதீங்க அண்ணி ஆயிரம் இருந்தாலும் நீங்க எங்க வீட்டு பொண்ணு தான் ருக்கன் எங்க அண்ணன் பையன் தானே”

 

என்றதும் ராதிகவோ, “இல்ல மேடம் அவனுக்கு புதுசா எந்த சொந்தமும் தேவையில்ல நாம இப்படியே இருக்கலாம் அவரோட எந்த”
 

என்று ஏதோ சொல்ல வர செழியனோ இடைமறித்தவன், “அண்ணி, உங்களுக்கு நடந்தது அநியாயம் தான் அதுக்காக தான் இப்போ நாங்களும் போராடுறோம் அவன்மேல உள்ள கோபத்துல எங்க வீட்டு பிள்ளைய எங்ககிட்ட இருந்து விலக்கி வைக்கணும்னு முடிவெடுத்துறாதீங்க ப்ளீஸ்”
 

ராதியோ, “இல்ல சார் நான் அவ்ளோ கஷ்டப்படும் போது”

 

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அகமியோ, “அண்ணி அன்னைக்கு எங்களுக்கு உங்களுக்கு நடந்த அநியாயம் தெரியாது, அதனால உங்க கூட எங்களால நிற்க முடியல ஆனா இன்னைக்கு நாங்க இருக்கோம் எங்கள மீறி இனிமேல் அவனோட மூச்சுக்காத்து கூட படாது”

 

என்று கூற, ராதிகாவோ கேலியாக சிரித்தவள், “மேடம் உங்க அண்ணன பத்தி உங்களுக்கு ஏதும் சரியா தெரியல”

 

என்றவள் கண்களில் அத்தனை வேதனை, அகமியோ, “எது நடந்தாலும் பார்த்துக்கலாம்”

 

என்று கையை இறுகப்பற்ற அதற்குமேல் அவர்களை விட்டு விலகிப் போவதோ சயந்தன் செய்த தவறுக்காக அவர்களை விலக்கி வைப்பதோ சரியில்லை என நினைத்தவள் ருக்கனிடம்,

 

“இது உன் அத்தை, இவர் உன் சித்தப்பா இவங்களும் உனக்கு அம்மா போல தான்”

 

என்று அகமியை சுட்டிக் காட்ட குழந்தையோ, “அத்தா, சித்தா” என்று இருவரையும் அழைக்க குழந்தையை தூக்கிய அகமியோ அவன் கன்னத்தில் முத்தம் வைக்க

 

ருக்கன் அன்னையின் நிம்மதியான முகபாவனையை பார்த்துக் கொண்டே அகமியின் கன்னத்திலும் முத்தமிட்டான்.

 

ஆனால் இதையெல்லாம் பார்த்தபடி அமர்ந்திருந்த சயந்தனுக்கோ உள்ளமும் உடலும் நெருப்பாய் தகித்தது. எத்தனை முறை கேட்டிருப்பான் தன்னை தந்தையென அறிமுகப்படுத்து என்று ஆனால் ராதிகா அசைந்துக் கொடுக்கவில்லையே,

 

தன்னை தாண்டி தனது தங்கையுடனும் தம்பியுடனும் மகன் நெருங்குவது எரிச்சலை தான் கொடுத்தது. அவனுடன் மகன் நல்லவிதமாக உறவாடி இருந்தால் ‘அப்பா’ என அழைத்திருந்தாலோ

 

அவனுக்கு இது பெரிய அடியாக இருந்திருக்காது அப்படியான எந்த நிகழ்வும் நடக்கவில்லையே அதனால் தான் அவனுக்கு இந்த பொறாமை கோபம் வெறுப்பு எல்லாம்,

 

 

அடுத்து ருக்கன் எல்லா ஆண் குழந்தைகளை போலவும் அம்மா பிள்ளை தான் அதை விட பிறந்தநாள் தொடக்கம் இன்று வரை அம்மா படும் கஷ்டங்களையும் கண்ணீரையும் பார்த்து வளர்கிறவனுக்கு தாயே உலகம் தாயின் சொல் தான் வேதம் அப்படியிருக்கையில் அம்மா கூறும் விடயங்களும் சரி அம்மா அறிமுகப்படுத்தும் உறவுகளும் சரி, சரியானதாக தான் இருக்கும் என்பது அவனது எண்ணம்

 

அதனால் தான் அவர்களை இலகுவாய் ஏற்றுக் கொண்டான்., ஆனால் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் சயந்தன் இருக்கவில்லையே போதாக்குறைக்கு அரசு வேறு,

 

“என்ன மச்சான் பீலிங்ஸ்சா விடு விடு பார்த்துக்கலாம் பாசமா வளர்த்த தங்கச்சியும் கண்டுக்கல, நேசிச்ச பொண்டாட்டியும் உன்ன திரும்பி கூட பார்க்கல, பெத்த புள்ளையும் யாரோவா பார்க்குது அதோட சேர்த்து இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜெயில் தான் களி தான் உன் நிலைமை யாருக்கும் வரக்கூடாது ஆனா என்ன பண்ணுறது விடு பார்த்துக்கலாம்”

 

என்று கூற சயந்தனோ, “எப்படிடா! இவ்ளோ பிரச்னையிலயும் கூலா இருக்க?” என்று புரியாது கேட்க,

 

அரசுவோ, “இங்கே பாரு மச்சான் ஜெயில்ங்குறது நிறையா கான்டெக்ட்ஸ் கிடைக்க கூடிய இடம் அத சரியா பயன்படுத்திக்கனும் அத விட்டுட்டு இப்டி எரிச்சலோ கவலையோ படக்கூடாது”

 

என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அகச்செழியன் சயந்தன் அமர்ந்திருக்கும் ஜீப்பில் அமர்ந்துக் கொள்ள

 

அகமியோ ராதிகாவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு சத்யசீலன் அமர்ந்திருக்கும் வண்டியில் அமர்ந்துக் கொள்ள இரண்டு ஜீப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிளம்பி காவல் நிலையத்தை அடைந்திருக்க,

 

அங்கு ஆற்றலரசுவின் கட்சிக்காரர்களும் சத்யசீலனின் கட்சிக்காரர்களும் அவ்விடத்தை முற்றுகையிட்டு,

 

“போலீஸ் அராஜகம் ஒழிக! போலீஸ் அராஜகம் ஒழிக!” என்று கோஷமிட்டுக் கொண்டிருக்க, அச்சுதனும் தன்னால் முடிந்தவரை கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்து கொண்டிருந்த சமயம் அங்கு வந்து பத்திரிகையாளர்களோ,

 

அகமியிடமும் செழியனிடமும், “உங்க குடும்ப பிரச்சனைய பொது பிரச்சனையா மாத்துறீங்களா?”

 

“எப்போவோ நடந்த மெடிசினல் க்ரைமுக்காக ஆக்ஷன் எடுக்க ஏன் இப்போ முன் வந்துருக்கீங்கனு தெரிஞ்சிக்கலாமா? இது எதிர்க்கட்சி ஆட்சிய கவிழ்க்க போடுற திட்டமா? அதற்கு நீங்களும் துணை போறீங்களா?”

 

என்று இஷ்டத்துக்கு கதைப் பேச அகமியோ கோபத்துடன், “சார் இப்போ தான் இன்வெஸ்டிகேஷன் போய்கிட்டு இருக்கு அதுக்குள்ள நீங்களா எதையும் அஸ்யூம் பண்ண வேணாம்”

 

என்று அழுத்தமாக கூற இன்னொருவரோ, “நீங்க எப்படி மேடம் இருப்பத்தி இரண்டு இருபத்தி மூணு வயசுலயே ஐ.பி.எஸ் எக்ஸாம் பாஸ் பண்ணுனீங்க? அடுத்து இவ்ளோ பெரிய கேஸ் வேற அண்ணனோட இன்ப்ளுவென்சா?”

 

என்று கேட்க அகமியோ, “சார் எதுக்கு சம்பந்தமில்லாம கேள்வி கேட்குறீங்க? ஓகே என்னோட வளர்ச்சிய பத்தி தெரிஞ்சிக்கணும்னா தனியா ஒரு நாள் இன்டர்வியூ தாரேன் இப்போ எங்க கடமைய செய்ய விடுங்க நோ மோர் கொஸ்டின்ஸ்”

 

என்றபடி அவர்கள் கைது செய்த நால்வரையும் வண்டியிலிருந்து இறக்கி அழைத்து போக செல்ல அரசுவோ சுதந்திர போராட்ட தியாகி போல கையை அசைத்துக் காட்டி,

 

“நான் மறுபடியும் வருவேன் உங்களுக்காக மக்களுக்காக உண்மைய வெளிய சொன்னதுக்காக தான் இப்போ விசாரணை கைதியா கைது செய்யப்பட்டிருக்கேன் திரும்ப வருவேன்”

 

என்று மக்களையும் தொண்டர்களையும் கவரும் விதமாக அடிவயிற்றிலிருந்து கத்தி கத்தி பேசியவன் அவர்களை பார்த்து கையசைத்து விட்டு காவல் நிலையத்திற்குள் நுழைய,

 

அவனது கட்சியினரோ, “தலைவர் வாழ்க!, வருங்கால முதலமைச்சர் வாழ்க!” என்று மாறி மாறி கோஷமிட்டு கொண்டிருக்க, அகமிக்கும் செழியனுக்கும் அவர்களை அடக்குவதே பெரும்பாடாகி போனது.

 

இதே சமயம் செல்லில் அமர்ந்திருந்த ஆற்றலரசோ அகமியை பார்த்து கண்ணடித்து சிரிக்க அவளுக்கு சுறுசுறுவென கோபம் தான் வந்தது. இருந்தும் இப்போது எது செய்தாலும் முக்கியமாக அவன் மேல் கை வைத்தால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான்.

 

ஏன் தங்கள் வேலையை கூட தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்ய என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்வான். அவன் ஒன்றும் யோசனையில்லாமல் உள்ளே வந்து அமரவில்லை. என்பது மட்டும் அகமிக்கு தெளிவாக புரிந்தது.

 

செழியனோ, “அகி நீ ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வா நாம இன்வெஸ்டிகேஷன ஆரம்பிக்கலாம்”

 

இதில் சத்யசீலனும் அரிச்சந்திரனும் வேறு, “இந்த வயசுல போலீஸ் அடியெல்லாம் தாங்க முடியுமா? அடுத்து செழியன் வேற அஞ்சே முக்காலடி உயரமா இருப்பான் அடி எப்பிடிடா தங்குறது?”

 

என்றதும் சயந்தனோ அரிச்சந்திரன் முகத்தில் ஓங்கி அறை விட்டிருந்தான்.,

 

“யோவ் தகப்பா உங்களால தான்டா இவ்ளோ பிரச்சனையும் நான் அப்போவே சொன்னேன் கேட்டியா? பிச்சை காசுக்கு ஆசைப்பட்டு இப்போ என்னையும் எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பார்த்தியா?

 

இது வரைக்கும் இத விட பெரிய தப்பெல்லாம் பண்ணி இருக்கேன் அப்போ எல்லாம் நான் மாட்டுனது இல்ல இப்போ தான் உன்னால உன்னோட மரமண்டையால மாட்டிக்கிட்டேன்”

 

என்று சத்யசீலனிடமும் அரிச்சந்திரனிடமும் சீற அரசோ அவன் கைகளை பிடித்தவன்,

 

“மச்சான் அமைதி, கொஞ்ச நேரம் பொறுமையா இரு எல்லாத்தையும் பார்த்துக்கலாம்”

 

என்றதும் சயந்தனோ, “என்னத்தடா பார்க்குறது இவனுக வாய திறந்தா முடிஞ்சுது அதோட உங்க அம்மா சகுந்தலா தேவிய வேற காணோம்”

 

என்றதும் அரசோ, “அந்த பொம்பள ஒன்னும் சாட்சி சொல்ல வராது கவலைப்படாதடா”

 

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே காவல் நிலையத்திலிருந்த தொலைக்காட்சியில்,

 

‘தற்போது கிடைத்த விசேட செய்தி ஒன்று, போலீசாருக்கு சொந்தமான கருப்பு நிற ஜீப் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், அதில் பயணித்த அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருக்க, அவர்களுடன் பயணித்த பெண்மணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்., அவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் மனைவியுமாவார்’

 

என்று அந்த பெண் வாசிப்பாளர் வாசித்துக் கொண்டிருக்க உடையை மாற்றி விட்டு அங்கு வந்த செழியனும் சரி அகமியும் சரி விதிர்விதிர்த்து போய் அரசு அமர்ந்திருந்த செல்லை பார்க்க அவனோ புருவமுயர்த்தி ‘எப்படி?’ எனும் விதமாக கெத்தாக பார்க்க

 

சயனோ, “டேய்! இப்போ உன்ன நம்புறேன்டா” என்றானே பார்க்கலாம் அரசுவோ கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு,

 

“இங்கே பாரு மச்சான் என்ன நம்பு கண்டிப்பா நம்ம தப்பிக்கலாம் உன்னோட செத்துப் போன தாத்தனே வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது.,

 

எதிரிக்கு எதிரி நண்பன் நீயும் சுயநலவாதி தான் நானும் சுயநலவாதி தான் நீ என் பக்கம் நிற்கிற வரை நானும் உன் பக்கம் நிற்பேன் இதே துப்பாக்கி என் பக்கம் திரும்புச்சு அப்பறம் ஈவுஇரக்கம்லாம் பார்க்க மாட்டேன் சொல்லிட்டேன்”

 

என்று கூற சயந்தனுக்கும் அவனது வெளிப்படையான பேச்சும் கோட்பாடும் பிடித்து போனது என்பதை விட இவனை விட்டால் வேறு வழியில்லை என்று நினைத்தவன் அவனுடன் இணைந்துக் கொண்டான்.

 

செழியனோ அச்சுதனிடம், “அந்த போர்மர் மினிஸ்டரையும் மிஸ்டர் சந்திரனையும் வேற செல்லுக்கு போடு”

 

என்று ஆணை பிறப்பித்து விட்டு அகமியை பார்க்க அவள் முகத்தில் ஒரு வித கலக்கமும் பயமும் ஒரு சேர செழியனை பார்த்தவள்,

 

“அண்ணா நாம அவன வாட்ச் பண்ணல அவன் தான் நம்மள வாட்ச் பண்ணி இருக்கான் இந்த கேஸையும் தோண்டி எடுக்க வச்சிருக்கான் ஆனாலும் ஏன்?”

 

என்று கேட்க செழியனுக்கும் அது தான் ஏனென்று புரியவில்லை.

                                                                  தொடரும்…

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top