ராவணா 1

அருணாச்சல கவிராயர் இயற்றிய “கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை

கண்டேன் ராகவா நான் (கண்டேன்)

அண்டரும் காணாத இலங்காபுரியில்

அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை” பாடல் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் இனிமையாக அலைபேசியில் மூலமாக ஒலித்து கொண்டிருக்க, அந்த பாடலின் ராகத்திற்கு ஏற்ப அஜூதியாவின் அஞ்சன விழிகள் அபிநயம் பேச, அவளது அசைவுக்கு ஏற்றபடி அவளின் காலில் கட்டியிருந்த சலங்கை இனிமையான ஒலியெழுப்ப, மிகவும் நளினமாக அவள் ஆடிக்கொண்டிருக்க, அவளை பார்த்து அவளுக்கு எதிரே இருக்கும் 

சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது பாட்டை நிப்பாட்டியவள் அவர்களை பார்த்து,”லாஸ்ட் ரோ லாஸ்ட் கேர்ள் முத்திரை சரியா இல்லை டா மா. என்னை பார்த்து பண்ணுங்க, மிடில் ரோ ஃபர்ஸ்ட் பொண்ணு ஃபுள் பாடி ரொடேட் ஆக கூடாது பா” என்று அவர்கள் அருகே சென்று அவர்களின் தவறை சரி செய்தவள், “நெஸ்ட் ஃபுள் சிட்டிங்” என்று கூறி அதையும் செய்து காட்டி, மீண்டும் பாட்டை ஒலிக்கவிட்டு தன் மை விழிகள் கதை பேச, தேகம் வளைத்து, தனது பின்னலிட்ட கார்குழல் அசைந்தாட,  குழந்தைங்களுக்கு அவள் ஆடி காட்ட, அவர்களும் ஒன்றுபோல அவளை பின்பற்றி ஆடியதை பார்க்க அவ்வளவு அற்புதமாக இருக்க, அஜூதியாவுக்கும் குழந்தைகளின் இன்முகம் பார்த்து சந்தோஷமாக இருந்தது.

ஏழு மணியானதும் நடன வகுப்பை முடித்து கொண்டவள், 

“சரி குழந்தைங்களா எல்லாரும் போய் உங்க உங்க செடிக்கு தண்ணி ஊத்துங்க, கார்டெனிங் முடிஞ்சதும்  ஏழரை மணிக்கு கிச்சனுக்கு போய் சமையல் அக்காக்கு காய்கறி கட் பண்ணி கொடுக்கணும், ஒர்க் முடிச்சிட்டு சீக்கிரம் ஃபிரஷ் ஆகி, சரியா ஒன்பதரை மணிக்கு ஸ்கூலுக்கு வந்திரனும்” என்று சொல்ல, 

“சரி டீச்சர் அக்கா” என்று சிறுவர் சிறுமிகள் அனைவரும் தங்களின் கால்களில் இருந்த சலங்கையை கழற்றி தங்களின் இடத்தில் வைத்துவிட்டு, வழமை போல தங்களுக்காக ஒதுக்கப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற செல்ல, இல்லத்தின் நிர்வாகி ஜானகி தேவி அஜூதியாவிடம் வந்தார்.

“குட் மார்னிங் தேவிமா” என்று புன்னகை நிறைந்த முகத்துடன் அஜூதியா காலை வணக்கம் கூற, பதிலுக்கு புன்னகைத்தபடி காலை வணக்கம் கூறியவர், “அஜூதியா நீ படிச்ச  காலேஜ்ல இன்னைக்கு தானே கல்ச்சுரல்ஸ், உன்னை ஆட கூப்பிட்டிருக்காங்கல்ல”

“ஆமா மா, ஓப்பனிங் அண்ட் க்ளோஸிங் டான்ஸ்”

“ப்ராக்டிஸ் பண்ணிட்டியா”

“ம்ம் பண்ணிட்டேன் மா, ஈவினிங் அவங்களே வந்து பிக் அப் பண்ணிக்குவாங்கலாம் காலேஜ் சேர்மென் எக்ஸ் மினிஸ்டர் மிஸ்டர் பரந்தாமன் சார் தான் சீஃப் கெஸ்ட்டாம் சோ பங்க்ஷன் க்ராண்ட்டா இருக்குமாம். முடிய லேட் ஆகும்ங்கிறதுனால காலேஜ் ஹாஸ்ட்டல்ல தங்கிக்க சொன்னாங்க மா, அடுத்த நாள் காலையில அவங்களே இங்க டிராப் பண்ணிருவாங்கலாம்” என்று அஜூதியா அனைத்தையும் கூற, 

“சரி மா கவனமா போய்ட்டு கவனமா வா” என்றவர் அங்கிருந்து சென்றுவிட, 

“மாரி அக்கா உங்க கைவண்ணத்துல சாம்பார் இங்க வர மணக்குது போங்க” என்று சமயலறையில் இருந்து வந்த வாசனையை நுகர்ந்தபடி கூறியவள், சமையலறையை நோக்கி நடந்தாள்.

சமயலறையில், “ஏய் அந்த தேங்காவை திருவியாச்சா” என்று அதட்டியபடி இடுப்பில் கரி துணி சொருகியிருக்க,  அந்த பெரிய வாணலியில்  கொதிக்கும் சாம்பாரை ராச்சஸ கரண்டியால் கிண்டிக்கொண்டிருக்கும் மாரியின் அருகே வந்த அஜூதியா,

“என்னாச்சு என் மாரி பேபி ஏன் டென்க்ஷனா இருக்காங்க?” என்று வியர்வையில் குளித்தபடி அனைவரிடம் கத்திக்கொண்டிருந்த  அவரிடம்  இருந்து கரண்டியை வாங்கி கொண்டு தான் கிண்ட ஆரம்பிக்க,

“தொடர்ந்து கிண்டிக்கிட்டே இரு, அடிபுடிச்சிடாம” என்றவர், 

“ஒரு சின்ன வேலை சொன்ன கூட இவங்களுக்கு முடிக்க இவ்வளவு நேரம் ஆகுது. ஒவ்வொரு வேலையையும் கத்தி கத்தி தான் வாங்க வேண்டியிருக்க, நேரத்துக்கு சாப்பாடு செய்யலைன்னா என்ன தான் திட்டுவாக, இதே இவங்களை உட்கார்ந்து பேச சொல்லு நாள் முழுக்க பேசுவாளுக” என தாளிப்பதில் கவனமாய் இருந்து கொண்டே மாரி புலம்ப,

“விடு அக்கா” என்று அவரை அஜூதியா ஆறுதல் படுத்த,

“சொல்லுவ டி சொல்லுவ, என் இடத்துல இருந்து பாரு அப்போ உனக்கு புரியும்” என்று அஜூதியாவிடம் பாய்ந்தவர் அடுத்த வேலையை பார்க்க போய்விட, பெண்ணவள் மெலிதாய் சிரித்தாள். 

இது தினமும் நடக்கும் வாடிக்கை என்பதால் மாரியை சமாதானம் செய்பவள் அவர் திட்டுவதையும் வாங்கிக்கொண்டு, தன்னால் முடிந்த உதவியை அவருக்கு செய்துவிட்டு செல்வாள். 

விபரம் தெரிந்த நாட்கள் துவங்கி அஜூதியாவும் பார்த்து கொண்டுதானே இருக்கிறாள். மாரியிடம் அங்கு வளரும் சிறுவர் சிறுமிகளும், வாலிப பெண்களும் வம்பிழுப்பதையும் அதற்கு  அவர் காச் மூச் என்று கத்துவதையும்.

தாய் தந்தையரின் மறைவுக்கு பிறகு ஐந்து வயதில் இந்த இல்லத்திற்கு வந்த அஜூதியாவுக்கு முதலில், எதுக்கெடுத்தாலும் கத்தும் மாரியை பார்த்தால்  பயமாக தான் இருக்கும். ஆனால் என்ன தான் கத்தினாலும் ஆரம்ப காலத்தில், தாய் தந்தையை பறிகொடுத்த சோகத்தில் அவள் இருந்த பொழுது தாய்க்கு தாயக அஜூதியாவை அரவணைத்து அவர் பார்த்து கொள்ள, அவளுக்கு அவரை அப்பொழுதே பிடிக்கும். 

அதே போல் தனக்கு உடம்பே முடியாமல் போனாலும், ஒரு வலி மாத்திரையை மட்டும் போட்டு கொண்டு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது இத்தனை ஆண்டுகளாக இதே அடுப்படியில் வியர்வை வழிய மூன்று வேளையும், இங்கு உள்ளவர்களுக்கு வயிறார உணவு சமைத்து கொடுக்கும் மாரி மீது நாளடைவில் உள்ள பிடித்தம், மரியாதையுடன் கூடிய அன்பாக மாற, மாரி என்னதான் திட்டினாலும் அஜூதியா பெரிதாக எடுத்து கொள்ள மாட்டாள், “நம் அக்கா தானே” என சிறுவயதில் இருந்தே புன்னகையுடன் கடந்துவிடுவாள். அவர் என்று இல்லை சிறுவயதிலே உறவுகளை இழந்து பாசத்திற்காக ஏங்கிய அனாதையான தனக்கு இன்றுவரை உணவு கொடுத்து, பாதுகாப்பு கொடுத்து ஆதரித்து வரும் ஜானகி தேவி மற்றும் இங்கு வேலை பார்க்கும் அனைவர் மீதும் அஜூதியாவுக்கு மரியாதையுடன் கூடிய அன்பு உண்டு. அவர்கள் கோபப்பட்டாலோ இல்லை கண்டித்தாலோ வருத்தப்பட மாட்டாள். உணர்வுகளை காட்ட உறவுகள் இல்லாத அவளுக்கு அவர்களின் கோபமான கண்டிப்பு கூட 

“நம்மை கேள்வி கேட்கவும் ஆள் இருக்கிறதே” என்று மகிழ்ச்சியை கொடுக்க அவர்களில் யார் என்ன சொன்னாலும்  சந்தோஷப்பட்டுக்கொள்வாள். அவர்களுக்கும் அஜூதியா என்றால் மிகவும் பிடிக்கும்.

ஆனால் அனைவரும் அவளை போல் கிடையாது அல்லவா, பலர் இங்கு கை குழந்தைகளாகவே வளர்ந்தவர்கள், மேலும் சிலர் உறவுக்காரர்களின் கொடுமை தாங்காது வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். எனவே இவர்களின் பலரது மனம் சிறுவயதிலே ரணப்பட்டிருப்பதால், அவர்களில் நிறைய பேர் பாசம், அன்பு என்னும் உணர்வுகளுக்கெல்லாம் பெரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

அதையெல்லாம் எப்பொழுதோ கடந்துவிட்டவர்கள், கொஞ்சம் கரடு முரடாக தான் இருப்பார்கள். இவர்களில் பலரது எண்ணங்களும், குறிக்கோள்களும்  எந்த பணத்திற்காக உறவுகளால் புறக்கணிக்கப்பட்டார்களோ, எந்த பணம் இல்லாமல் சிறுவயதில் உண்ணும் உணவு துவங்கி உடுத்து ஆடை வரை பிறர் கையை எதிர் பார்த்து நின்றார்களோ. அந்த பணத்தை சம்பாதித்து சுகந்திர பறவைகளாக கட்டுப்பாடற்ற வாழக்கையை  எப்படி அமைத்துக்கொள்ளலாம் எனபதை பற்றி தான் இருக்கும்.  

ஆனால் அவர்களில் அஜூதியா மிகவும் வித்யாசமானவள் ஐந்து வயது வரை தாய் தந்தை குடும்பம் என்று அவர்கள் காட்டிய  பாசத்தை திணற திணற அனுபவித்து வந்தவள் என்பதால், அன்பின் அருமையையும் உறவின் உன்னதத்தையும் நன்கு அறிந்தவள். இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை என்பதால், வாழ்க்கையில் இதுவரை யாரையுமே அவள் காயப்படுத்தியதும் இல்லை வெறுத்ததும் இல்லை.

தன்னால் முடிந்த வரை அனைவர்க்கும் உதவி செய்யும் அவளை பொறுத்தவரை பணமோ செல்வமோ நிரந்தரமற்றது, அன்பு ஒன்றே நிலையானது. ஆக அனைவரையும் நேசித்து தன்னிடம் இருக்கும் அன்பை பிறருக்கு வாரிவழங்கும் அவள், தன்னை மட்டும் நேசிக்கும் உறவு ஒன்று தனக்கே தனக்கென்று எப்பொழுது வரும் என்று இன்று இந்த நொடி வரை ஆசையுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறாள்.

!!!!!

 

❤️ Loading reactions...
4 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top