அலைபேசியில் யாருடனோ பேசியபடி அவன் வர, உள்ளே வந்த தங்களின் முதல்வனை கண்டதும் அவர்கள் மூவரும் அவன் அருகே செல்ல, “பயங்கரமா அடிச்சு பார்த்துட்டோம் சொல்ல மாட்டிக்கிறான் பாய்” என்று அதீத சினத்துடன் மூவரில் ஒருவன் கூற, அவனது கோபத்தை உள்வாங்கியபடி மத்யூவை நோக்கி நடந்தவன், தன் சகாக்களுக்கு அவனது கட்டை அவிழ்த்து விடுமாறு கண்ணை காட்ட, அவனது கண்ணசைவுக்கு உடனே செயலாற்றியவர்கள் மத்யூவின் கட்டை அவிழ்த்து ராவணனின் உத்தரவின் பெயரில் மத்யூவின் ஆடைகளை அவனுக்கு அணிவித்து விட்டு, அவனை ஒரு நாற்காலியில் அவர்கள் உட்கார வைக்க,
தனது கரங்களை கட்டிக்கொண்டு மேஜை மேல் சாய்ந்தபடி தன் முன்னால் அமர்ந்திருந்த மத்யூவை அழுத்தமாக பார்த்தான் ராவணன்.
அவனது சகாக்கள் அனைவரும் அவனது கண்ணசைவிற்காக தங்களின் கைமுஷ்டி இறுக மத்யூவை ஒருவழி செய்ய காத்திருந்தனர். ஆனால் ராவணனின் பார்வையெல்லாம் மத்யு மீது தான்.
என்ன பார்வை அது! அவனது பொல்லாத பார்வையை நேருக்கு நேர் பார்த்த மத்யூவின் உடல் ஒருகணம் அதிர்ந்தடங்கியது.
இதோ இது தானே வேண்டும்! இதை தானே ராவணன் எதிர்பார்த்தான்! பயம்! எதிராளியின் பயம் தான் அவனது பலம்!
“சோ சரக்கு எங்க இருக்குன்னு சொல்லமாட்ட” இப்பொழுது மிகவும் நிதானமாக அவனிடம் கேட்டான்.
“இல்லை” தலையை இடவலமாக ஆட்டி பதில் கூறினான் மத்யூ.
“ஆல்ரைட் தென்” என தன் பெருவிரலால் தன் அகன்ற நெற்றியை நீவிய ராவணன்,
“உனக்கு நிறைய டைம் கொடுத்துட்டேன், இனிமே உன் இஷ்டம், நடக்க போறதை பொறுமையா வேடிக்கை பாரு” என்றவன், அவன் அருகே வந்து தன் அலைபேசியை காட்டி,
“மத்யூ நீ உன் பையனை ரொம்ப நேசிக்கிறல? லவ்லி பிக்ச்சர்” என்ற ஆர்ப்பாட்டம் இல்லாத ராவணனின் குரலில் நிறைந்திருந்த எச்சரிக்கை மத்யூவின் உடலை நடுங்க வைக்க,
ராவணனின் அலைபேசியின் திரையில் தன் மனைவியுடன் விளையாடும் மகனை பார்த்தவன்,
“நோ டோன்ட் டூ தட் ராவணா, நோ” என தன் உடல் அதிர, தனக்குள் மிச்சம் இருந்த மொத்த சக்தியையும் திரட்டி, உயர்ந்த குரலில்கத்தினான்.
“ஏய் யார் கிட்ட” ராவணனின் சாகாக்களில் ஒருவன் மத்யூவை அடிக்க சீற, அவனை தன் கரம் உயர்த்தி தடுத்த ராவணனின் பார்வை மத்யூ மீதே நிலைத்திருக்க,
“நோ ராவணன் என் பையனை, என் குடும்பத்தை ஒன்னும் பண்ணிராத ப்ளீஸ்” உடலில் வலுவில்லாது போக கெஞ்சினான்.
ராவணன் கொஞ்சமும் அசரவில்லை, ஒருவார்த்தை கூட பேசவில்லை. ஆனால் பார்த்தானே ஒரு பார்வை தன் பார்வையாலே அவனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தான். உண்மை சொல்லாவிட்டால் எதுவேண்டுமானாலும் செய்வேன் என சொல்லாமல் சொன்ன அந்த பார்வையை கண்டு அஞ்சிய மத்யூ,
“நான் சொன்னாலும் உன்னால ஒன்னும் பண்ண முடியாது ராவணா” என்றவன், நீண்ட பெருமூச்சை வெளியிட்டு, “சரக்கு எக்ஸ் மினிஸ்டர் பரந்தாமன் கஸ்டடியில இருக்கு, அவர்கிட்ட இருந்து தூக்கி அஞ்சு செக் போஸ்ட் தாண்டி அந்த வரதனாலையோ ஏன் அந்த சக்தி வேலால கூட இங்க கொண்டு வர முடியாது” என்று சொல்ல, அதற்கு அலட்சியமாக தன் இதழை வளைத்த ராவணன். சரக்கு பரந்தாமனிடம் இருக்கும் செய்தியை வரத பெருமாளிடம் தெரிவித்தான்.
“சரி ராவணா இன்னும் அரைமணிநேரத்துல பையன் கிட்ட பணத்தை கொடுத்து விடுறேன்” என்றவர், உடனே சரக்கை யார் எடுத்தது அது இப்பொழுது எங்கு இருக்கிறது என்பதை தன்னிடம் கண்டு பிடிக்க சொல்லி கேட்டிருந்த மினிஸ்டர் சக்தி வேலிடம் அழைத்து விடயத்தை கூறவும்,
“அந்த பரந்தாமன் என்கிட்ட நேரடியா மோதாம என்கிட்ட வேலை பார்த்தவனை வச்சு இப்படி சில்லறை வேலை பார்த்திருக்கான்” என்று பல்லை கடித்தவர், “சரக்கு முக்கியம் வரதா என்ன செலவனாலும் பரவாயில்லை சரக்கும் இன்னைக்கு நைட் என் கைக்கு வேணும். இல்லைன்னா எனக்கு பெரிய பிரச்சனையாகிடும்” என்று சொல்ல,
“பரந்தாமன் கொஞ்சம் ரிஸ்க் பா.”
“பணம் கொடுத்திடலாம் வரதா இதுல என் மானம், என் செல்வாக்கு எல்லாம் அடங்கியிருக்கு” என்றவர் “இந்த ராவணனை வச்சே முடிச்சிரு” என்று சொல்ல,
“பணம் கொஞ்சம் அதிகமாவே ஆகும்” என்ற வரதனிடம்,
“அட அதெல்லாத்தையும் நான் பார்த்துகிறேன் அந்த பரந்தாமன் முன்னாடி நான் தோற்று போக கூடாது, அப்புறம் அந்த துரோகி மத்யூ அவனை கொன்னு கடல்ல வீச சொல்லிடு, கூடவே இருந்து துரோகம் பண்ணிட்டான்” என்று ஆத்திரத்தில் முகம் சிவக்க தீர்க்கமாக கூறினார்.
ராவணனின் வீட்டில் உள்ள ஹாலில் நடுநிலையாக போட பட்டிருந்த சோபாவில் விரல்களுக்கு இடையே நச்சு குழல் தகிக்க, மிக தோரணையாக அமர்ந்திருந்தான், வரதனின் தம்பி விக்ரம்.
அப்பொழுது தன் சகாக்களோடு ராவணன் அங்கே வர,
“ஹாய் ராவணா” என விக்ரம் கையசைக்கவும்,
“ஹாய்” என்று தலையை அசைத்துவிட்டு அவனுக்கு முன்னால் இருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டு ராவணன் அமர,
“எப்படி இருக்க ராவணா?” என்று அவன் கேட்கவும், நலமாயிருப்பதாக தலையசைத்த ராவணன் முன்பு தான் கொண்டு வந்த கோப்பை நீட்டியவன், அவன் அதை வாங்கவும்,
“பரந்தாமன் கிட்ட இருக்கிற சரக்கு இன்னைக்கு கைக்கு வரணுமாம், இதையும் நீயே செய்யணும்ன்னு அண்ணன் சொன்னாரு, அந்த ஆளு மேலை எல்லாம் கை வைக்க வேண்டாமாம், சரக்க மட்டும் கொண்டு வந்தா போதுமாம். மத்யூ கதையை முடிச்சிட சொன்னாரு” என்றவன், “இதுல பாதி பணம் இருக்கு. சரக்கு கைக்கு வந்ததும் மீதி பணம் உன் கைக்கு வரும்” என்று சொல்லி ஒரு பெட்டியை எடுத்து ராவணனின் கரத்தில் கொடுக்க, பெட்டியை வாங்கி திறந்தவன், அதில் நிறைந்திருந்த பணத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தவன், பெட்டியை தன் அருகே இருந்த தன் ஆட்களில் ஒருவனிடம் கொடுத்து விட்டு,
“வேலை முடிஞ்சதும் சொல்றேன்” என்ற ராவணனிடம்,
“ம்ம் சரக்க மட்டும் கொண்டு வந்தா போதும் பரந்தாமன் மேல எல்லாம் கை வைக்க வேண்டாம்” என்பதை கொஞ்சம் அழுத்தமாக சொல்ல,
“அது என் கையில இல்லை எனக்கோ என் கூட்டாளிங்களுக்கோ எதுவும் ஆபத்து வந்தா என் துப்பாக்கி சும்மா இருக்காது” என்றுவிட்டு ராவணன் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, ‘நீ சொல்றதெல்லாம் கேட்க முடியாது நான் இப்படி தான்’ என்னும் தோரணையில் பேசும் ராவணனை கண்டு விக்ரமிற்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.