ராவணா 4

பார்வை படும் தூரம் வரை பெரிய பெரிய கண்டெயினர் பெட்டிகளில், நல்ல வாட்டசாட்டமான ஆண்கள் குழுக்களாக இணைத்து சிறிய சிறிய மரப்பெட்டிகளை ஏற்றி கொண்டிருக்க ,

“ம்ம் சீக்கிரம் எல்லா சரக்கையும் இன்னைக்கே டிஸ்ட்ரிபியூட் பண்ணியாகணும்” என பணியாட்களை துரிதப்படுத்தியபடி அவர்கள் செய்யும் வேலைகளை, வாயில் நச்சு குழலை வைத்து ஊதியபடி  பார்வையிட்டு கொண்டு வந்தான் பரந்தாமனின் சட்டவிரோதமான வேலைகளை பார்த்துக்கொள்ளும் அவனது வலது கை ரத்தின பாண்டியன்.

அப்பொழுது அவனது அலைபேசிக்கு அழைப்பு வரவும் அதை அட்டென்ட் செய்தவன் எதிர் தரப்பில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டு ஆத்திரத்தில், 

“என்னடா ராவணன் ராவணன்னு  ரொம்ப வாசிக்கிற, ராவணன்னா நாங்க பயந்திருவோமா? ஹான்  அவன் வந்தா அப்படியே தூக்கி கொடுத்திருவோமா என்ன? யார்கிட்ட? இது பரந்தாமன் ஐயாவோட கோட்ட, வரட்டும் அவனையும் அவன் ஆளுங்களையும் சுறாவுக்கு இரையாக்குறேன்” என்று தன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு ஆக்ரோஷமாக கூறி அழைப்பை துண்டித்தவன், 

“டேய் நம்ம ஆளுங்க எல்லாரையும் வர சொல்லுடா, அவனா இல்லை நாமளான்னு பார்ப்போம்” என்று தன் வேட்டியை தொடை மேல் ஏற்றி கட்டியபடி தன் ஆளுங்களிடம் கூறியவனின் கண்கள் உயிரை குடிக்கும் அகோரனாய் காட்சியளித்தது.

!!!!!!

“நவ் லெட் அஸ் வெல்கம் அவர் ஹானரபில் சேர்மென் மிஸ்டர் பரந்தாமன் சார் டு கிவ் சீஃப் கெஸ்ட் அட்ரஸ்” கல்லூரி சேர்மென் பரந்தாமனை பேசுவதற்காக மேடையில் இருந்து அழைப்பு வர, அனைவர்க்கும் கரம் கூப்பி வணக்கம் சொல்லிய பரந்தாமன், ஏற்கனவே அங்கே தயாராக எழுதி வைக்கப்பட்டிருந்த  காகிதத்தை பார்த்து தன் பெருமையையும், கல்லூரி பெருமையையும் பேச துவங்க, 

“விக்கி பீ ரெடி, ராவண் பாய் ஜூஸ் கிளாஸை அவன் கிட்ட கொடுக்குறது போல அவன் ட்ரெஸ் மேல கொட்டிருவாரு, ஸோ கிளீன் பண்ண அவன் ரெஸ்ட் வருவான். அப்போ நான் உனக்கு சிக்னல் கொடுப்பேன்  நீயும் தேவராஜும் அவனை தூக்கியிருங்க, பசங்களை அலெர்ட் பண்ணு” என்று மேடைக்கு பின்னால் காவலாளி சீருடையில் இருந்த தன் ஆள் விக்கிக்கு, சிசிடிவி அறையில் உள்ள கண்காணிப்பாளனை அடித்து மயக்கமடையவைத்துவிட்டு அங்கு அனைத்தும் தங்களின் திட்டப்படி நடக்கிறதா என பார்வையிட்டபடி தங்களின் ஆட்கள் அனைவர்க்கும் தகவல் சொல்லிய சந்துரு, ஒருதடவை அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று பார்த்துவிட்டு,

“பையா ஆள் அண்டர் கண்ட்ரோல்” என்று ராவணனுக்கு செய்தி சொன்னான்.

வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட், கழுத்தில் கருப்பு நிற போவ் என வெயிட்டர் சீருடையில் பரந்தாமனுக்கென, சிறப்பாக தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட  மாதுளை பழச்சாறு அடங்கிய ட்ரேவுடன், பரந்தாமன் மேடையில் இருந்து கீழே வந்ததும் கொடுப்பதற்காக ராவணன் காத்திருக்க,

சில நிமிடங்களில் தன் உரையை முடித்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கி வந்த பரந்தாமன் தனக்கான இருக்கையில் வந்து கம்பீரமாக அமரவும், 

“ஏய் வெயிட்டர் நீ தான் போ” என்று ஈவென்ட் மேனேஜர் ராவணனை துரிதப்படுத்த,  மெல்லிய கனிவான புன்னகையுடன் பரந்தாமனின் அருகே ராவணன் நெருங்கவும்,

நடனமாட அழைக்கப்பட்ட அஜூதியா மேடை ஏறி வரவும் சரியாக இருக்க, ராவணனின் விழிகள் கட்டுண்டது போல மேடையை வெறித்தது.

“அலைபாயுதே கண்ணா

என்மனம் அலைபாயுதே

உன் ஆனந்தமோகன வேணுகானமதில்

அலைபாயுதே கண்ணா ஆ ஆ” என்ற பாடலுக்கு ஏற்ப தன் உடலை வளைத்து, தன் பேசும் விழிகளை அசைத்து மிக மிக நளினமாக அஜூதியா நடனமாட, 

“நிலைபெயறாது சிலைபோலவே நின்று

நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா

என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ” என்ற வரியில் உள்ளது போல,

அடுத்த அடி எடுத்து வைத்தால் பரந்தாமனை நெருங்கி விடலாம் என்கிற நிலையில் அவனது வலிமையான  தடித்த கால்கள் தரையில் வேரூன்ற, சிலை போல அசையாது அதே இடத்திலே தன்னை மறந்து நின்றான் ராவணன்.

பெண்ணவளின் அடர்ந்த இமைகளுக்குள் இருந்த அஞ்சனம் தீட்டிய விரிந்த விழிகள், ஆணவனை கொல்லாமல் கொல்ல, தன்னை மறந்தான்! தான் வந்த நோக்கம் மறந்தான்! இந்த உலகம் மறந்தான்! அந்திரன் ராவண ஈஷ்வரன்.

வாழ்க்கையின் ஓட்டத்தில், தனக்கான பாதை அறியாமல், இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவனின் ஓட்டத்தை நிறுத்தி, ஏய் ராவணா! இங்கே! என்னை பார்! என் விழிகளை பார்! பார்த்து கொண்டே இரு என சொல்லாமல் சொல்லி அவனை கட்டிப்போட்டு சிறைவைத்தது காரிகையின் கரிய விழிகள்.

கொஞ்சம் கொஞ்சமாக கருந்துளையாக அவளது விழிகளுக்குள் தான் விழுந்து கொண்டிருப்பது அவனுக்கு புரியவும் மிகவும் சிரமப்பட்டு தன் பார்வையை அவளிடம் இருந்து அகற்றினான். ஆனால் அதெல்லாம் சிலை நொடிகள் தான், அடுத்த கணமே மீண்டும் பார்த்தான், இப்பொழுது அவனின் பார்வை அவளது இதழை வருடியது, அவ்வளவு தான் அவன் இதழில் தீ பிடித்த உணர்வு, அந்த தீ கொஞ்சம் கொஞ்சமாக தன் இதயம் தொட்டு தனது உடல் முழுவதும் பரவுவது போல உணர்ந்தவனுக்குள்  ஏதோ ஏதோ தோன்றியது. 

“தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே…

கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே”

அவ்வளவு ஏசி காற்றிலும் அவனது உடல் அக்னியாய் தகிக்க, அளவுக்கு அதிகமாக துடிக்கும் தன் மார்பை தன் கரம் வைத்து அடக்கியவனுக்குள் எழுந்த பொல்லாத ஆசைகள் எல்லாம் அவனை திணறடிக்க, சுற்றி கேட்ட கரகோஷத்தில் சுயம் பெற்ற ராவணன், தன் எண்ணம் போன போக்கை எண்ணி அதிர்ந்தான். அதற்கு மேல் ஒரு நொடி அங்கே நிற்க முடியாமல் தன் கரத்தில் இருந்த டிரேவை டேபிளில் வைத்து விட்டு, தனது கழுத்தில் இருந்த போவை கழற்றி எறிந்தபடி, தன் காதில் கேட்ட எந்த குரலுக்கும் செவி கொடுக்காமல் வேகமாக அந்த அரங்கத்தை விட்டே வெளியேறினான். 

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top