மிதமான வேகத்தில் காரை செலுத்திய அர்ஜுனின் வதனத்தில் தென்பட்ட இறுக்கம், அவன் கோபமாக இருப்பதை நன்கு உணர்த்தியது.
கார் ஸ்டேஷனில் இருந்து கிளம்பி பதினைந்து நிமிடங்கள் இருக்கும். ஆனால் இருவருக்கும் இடையே அப்படி ஒரு அமைதி ஏன் ஒருவரின் முகத்தை கூட இன்னொருவர் பார்க்கவில்லை.
ஸ்டேஷனின் வாசலில்,
“தேங்க்ஸ் அர்ஜுன் ஒரு செகண்ட்ல நான் பயந்துட்டேன்” என்ற ரோஹித், அர்ஜுன் பார்த்த ஒரு பார்வையிலே அமைதியானவன் தான். அதன் பிறகு இப்பொழுது வரை ஒருவார்த்தை கூட பேசவில்லை. ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்க முடியாத ரோஹித்துக்கு பதினைந்து நிமிடம் அமைதியாக இருப்பது என்பது மிகவும் கடினமாக இருக்க, கிட்டத்தட்ட அவனுக்கு மூச்சே முட்டியது.
முதலில் ஓரக்கண்ணால் அர்ஜுனை பார்த்த ரோஹித், மெதுவாக ம்யூசிக் பிளேயரை ஆன் செய்து, நொடிகள் நகர நகர சத்தத்தை கூட்டினான்.
கோபம் கொண்ட அர்ஜுனோ காரின் வேகத்தை அதிகரிக்க, அசடு வழிந்தபடியே ம்யூசிக் பிளேயரை ஆஃப் செய்த ரோஹித், இதற்கு மேல் முடியாதவனாய்,
“அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன்ன்ன்ன்ன்” என முடிந்தவரை கத்த அர்ஜுனோ எதையும் காதில் வாங்காது காரை ஓட்டுவதில் குறியாய் இருந்தான்.
“டேய் என்னை பாருடா” என்றான் ரோஹித்.
“————”
“ப்ளீஸ் டா பேசுடா சைலன்ட் ட்ரீட்மெண்ட் வேண்டாம்”
“————–”
“அர்ஜுன் இப்போ நீ பேசல, நான் அதோ அந்த பாலத்துல இருந்து குதிச்சிருவேன்”
“————–”
“சத்தியமா குதிச்சிருவேன் டா” என்ற ரோஹித்துக்கு பதில் சொல்லாது வண்டியை திருப்பிய அர்ஜுன், தங்களை கடந்து சென்ற பாலத்தின் அருகே காரை கொண்டு வந்து நிப்பாட்டி, காரை விட்டு கீழே இறங்கி, கதவின் அருகே தன் இரு கரங்களையும் குறுக்கே கெட்டிக்கொண்டு, தன்னை கேள்வியாக பார்த்து கொண்டிருந்த ரோஹித்திடம், முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் தன் விழியை அசைத்து
‘இதோ நீ சொன்ன பாலம் வந்துருச்சு’ என்று தன் பார்வையாலே சொல்ல, அதிர்ச்சி அடைந்த ரோஹித்,
“என்ன டா டெஸ்ட் வைக்கிறியா, சொன்னா செஞ்சுருவேன் டா, இந்த ரோஹித் சொன்ன சொல்ல ஒருநாளும், கேட்டுக்கோ ஒருநாளும் மாத்திக்க மாட்டான்” என்று எட்டி பாலத்தை பார்த்தவனோ தன் விழிகளை பிதுக்கியபடி தடுமாறினான்.
அதை கண்டு வந்த சிரிப்பை தன் மீசைக்குள் அடைக்கிக்கொண்ட அர்ஜுனோ,
‘ஐ டோன்’ட் ஹவ் மச் டைம் ட்யுட்’ என்பது போல தன் கைக்கடிகாரத்தை பார்க்க, அர்ஜுனை முறைத்து பார்த்த ரோஹித்,
“குதிக்க போறேன் டா, குதிக்க போறேன் போறேன் போறேன் போறேன்” என்க அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் ஸ்ருதி குறைந்து கொண்டே போனது.
இப்பொழுது, “குதிக்க போறேண்டா” என்றவனுக்கோ குரல் இன்னும் உள்ளே சென்று விட, அர்ஜுனோ தன் அமைதியை கலைத்தபடி,
“இன்னுமா குதிக்காம இருக்க” என்றான் மிக இயல்பாக.
“மன்னிக்க மாட்டியாடா” ரோஹித் பாவமாக கேட்க.
“மன்னிக்க நான் யாரு சார்” என்றான் அர்ஜுன்.
“அர்ஜுன்”
“ஷட் அப்”
“ஓகே சாரி டா, என்னால கண்ட்ரோல் பண்ண முடியல”
“அப்படி என்னடா செல்ஃப் கண்ட்ரோல் இல்லாம” கோபமாய் கேட்டான் அர்ஜுன்.
” ———-” ரோஹித்திடம் பதில் இல்லை.
“ஏற்கனவே ஆக்சிடென்ட் ஆகி ஆறு மாசம் கஷ்டப்பட்டது போதாதா, செத்து புழைச்சு வந்திருக்க டா” ஆற்றாமையுடன் கேட்டான் அர்ஜுன்.
“சாரி ப்ரோ”
“லெட் மீ பினிஷ்” என்று தன் கரங்களை உயர்த்திதடுத்தபடி தொடர்ந்தான் அர்ஜுன்.
“இழக்க கூடாதெல்லாம் இழந்துட்டேன் டா, இனிமே அப்படி எதுவும் ஒண்ணு நடந்தா தாங்குறதுக்கு தெம்பில்லடா எனக்கு” என்று இயலாமையோடு கூறிய அர்ஜுனின் விழிகள் கசிந்தன.
“சாரி அர்ஜுன்” என்றபடி அவனை இறுக்கி அணைத்துக்கொண்டான் ரோஹித்.
“ரேஸ் பண்ண வேண்டாம்ன்னு சொல்லல, ப்ராப்பர் ப்ரோடெக்ஷ்னோட பண்ணுன்னு சொல்றேன். போலீஸ் ஸ்டேஷன் வர போய், வீட்ல தெரிஞ்சா என்னாகும். இப்படி முறையில்லாம பண்ற ரேஸால எத்தன ஆக்சிடென்ட் நடக்குது தெரியுமா??கொஞ்சமாவது ரெஸ்பான்ஸிபிளா பிஹேவ் பண்ணு டா”
“ப்ராமிஸ் டா இனிமே கண்டிப்பா இப்படி பண்ண மாட்டேன் ட்ரஸ்ட் மீ ஐ ரியலி மீன் இட் சிரி டா, சிரிக்கிறதுக்கு கூட சொல்லித்தான் தரணுமா டா உனக்கு” என்ற ரோஹித்திடம்,
“நீ பண்ணின காரியத்துக்கு சிரிப்பு ஒன்னு தான் குறை வாடா தலைக்கு மேல வேலை இருக்கு” என்ற அர்ஜுனோ இன்னும் நான்கு திட்டு சேர்த்து திட்டிவிட்டு, நேரம் ஆனதால் ரோஹித்துடன் தனது கெஸ்ட் ஹவுஸ் சென்றவன், பால்கனியில் உள்ள கோச்சில் தன் கால்களை நீட்டியபடி, வசதியாக தன் தலையை நன்கு சாய்த்துக்கொண்டு, தன் மேல் பட்ட நிலவொளியை ரசித்தபடி தன் மடிக்கணினியில் மூழ்கிவிட, “தூங்க வரலையா டா” என்று கேட்டபடி ரோஹித் தூக்கி எறிந்த தலையணையை லாவகமாக பிடித்துக்கொண்ட அர்ஜுன்,
“போ டா ஆஃபீஸ் வேலை நிறையா இருக்கு, நாளைக்கு ஒரு நாள் தான் டைம் இருக்கு ஸோ குட் நைட்” என்று கூறி மீண்டும் அதை ரோஹித் மீதே எறிய, தன் முகத்தில் வந்து மோதிய தலையணையை பிடித்து கோபத்துடன் அர்ஜுனை பார்த்து,
“டேய் அர்ஜுன் சத்தியமா முடியலை டா எப்படி டா உன்னால மட்டும் இப்படி இருக்க முடியுது. இப்படியே வேலை படிப்புன்னு சுத்திட்டு இருந்தன்னு வை ஒருநாள் இல்லை ஒருநாள் நிஜமாவே நீ பைத்தியமாகிடுவ டா, என்னை பாரு என்னை போல வாழ்க்கைய சந்தோஷமா வாழ கத்துக்கோ டா” என்று ரோஹதித் சிலாகித்து கூறவும் அர்ஜுன்,
“எப்படி போலீஸ் ஸ்டேஷன்லயா” என்று கேட்க அவனை முறைத்த ரோஹித்,
“போதும் போதும் அதையே சொல்லவேண்டாம், உன்கிட்ட பேசினேன் பாரு, சரியான சாமியார் டா நீ, இப்படியே எத்தனை நாளைக்கு தான் சொல்லிட்டு இருக்க போறன்னு நானும் பாக்குறேன்” என்ற ரோஹித்திடம், “நீ பொறுமையா பாரு, அதுக்கு முதல்ல அந்த லைட் மட்டும் ஆஃப் பண்ணிடு” என்று அர்ஜுன் கேலியாக தன் இதழை வளைக்கவும், “போடா சாமியார்” என்ற ரோஹித் கோபமாக அங்கிருந்து சென்று விட, அர்ஜுனோ மடிக்கணினியில் தான் விட்ட பணியினை தொடர்ந்தான்.
@@@@@@@@
பனிக்காற்று உடலை ஊடுருவி செல்ல துடிக்க, உடல் சிலிர்க்க சோம்பலை முறைத்தபடி தனது உள்ளங்கையை பார்த்தவாரே தன் படுக்கையில் இருந்து எழுந்து தலைக்கு குளித்து, வளைந்த மேகம் போன்ற தனது ஆறடி அடர்த்தியான கூந்தலை லேசாக துவட்டிவிட்டு சொட்ட சொட்ட நீரை வழிய அதை மொத்தமாக எடுத்து தனது வலதுபுறம் போட்டு விட்டு முழு நீள கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு தன் காதுக்கு ஜிமிக்கி கரத்திற்கு வளையல்களல் என மிதமாக ஒப்பனை செய்தவள், நிலவின் இளைய பிள்ளை போன்ற மிக சிறிய வடிவம் கொண்ட வட்ட வடிவ பொட்டை எடுத்து தன் இரு புருவங்களுக்கும் நடுவே வைத்துவிட்டு தனது விரிந்த விழிகளுக்கு அஞ்சனத்தை தீட்டினாள்.
மிதமான ஒப்பனையிலும் உயிருள்ள ஓவியம் போல காட்சியளித்த அவள், பெண்களுக்கே உள்ள குணத்தோடு ஓரக்கண்ணாலே தன் அழகை ஒரு நொடி ரசித்துவிட்டு, புன்னகையோடு பூஜை அறைக்குள் நுழைந்தாள்.
பின்பு,’யசோதையின் இளஞ்சிங்கமான’ மாயவிழி கண்ணனின் சிலையின் முன்பு அமர்ந்து கொண்டு வீணையை தன் மடியின் மீது ஏந்திக்கொண்டு,
“என்ன தவம் செய்தனை யசோதா, என்ன தவம் செய்தனை யசோதா, எங்கும் நிறை பரம்மம் அம்மா என்றழைக்க” என்று தன் இருகண்களையும் அசைக்காமல், தொண்டை விம்பாமல் நங்கை அவள் மயில் போல அமர்ந்து குயில் போல பாட, அந்த அழகை காண விழிகள் ரெண்டு போதாது என்பதாலோ என்னவோ அவளது வீட்டில் உள்ள அனனவரும் அவளின் கீதத்தில் மூழ்கிருந்தனர்.