ராவணா 28

காரில் அமர்ந்திருந்த வரதனோ, அவ்வளவு சொல்லியும் ராவணன் அவர்கள் கொடுத்த டீலை மறுத்துவிட்ட ஆத்திரத்தில் இருக்க, சக்திவேலின் எண்ணமோ அஜூதியாவைச் சுற்றியே வந்தது.

“சும்மா சொல்லக் கூடாது வரதா, அந்தப் பொண்ணு வேற லெவல். அப்படியே கண்ணுக்குள்ளயே நிக்கிறாயா” என்று சிலாகித்துக் கூற,

“ம்ம் அவன் கண்ண நோண்டி கையில தந்திருவான்” என்று வாய்வர வந்த வார்த்தையைத் தொண்டைக்குழியிலேயே புதைத்துக் கொண்ட வரதன் பேருக்கு,

“ம்” கொட்டினார்.

“பாக்க சின்ன பொண்ணா தெரியுறாளே?” என்ற சக்திவேலிடம்,

“ஆமா ஆமா…” என்று வேகமாகத் தலையாட்டிய விக்ரம், தன் அண்ணன் வரத பெருமாள் பார்த்த பார்வையில் அமைதியாகிவிட,

அவனை ரௌத்திரமாக ஒரு பார்வை பார்த்த வரதன், சக்திவேலிடம்,

“ஊர்ல பொண்ணா இல்லை” என்றார்.

“இருக்கு தான் ஆனா ராவணனுக்கு வேண்டப்பட்ட பொண்ணுன்னா கொஞ்சம் கிக்கா இருக்கும்ல?”

“அதுக்கு வாய்ப்பே இல்லை” என்று உடனே மறுத்தான் வரதன்.

“ஏன்? அவன் குடுக்கிறதைவிட அதிகமா குடுத்தா வரப் போறா?”

“அந்தப் பொண்ணைப் பார்த்தா அப்படி தெரியல சக்தி.”

“சரி சரி ஃப்ரெஷ்ஷா வேண்டாம். அவன் அனுபவிச்சு முடிச்சதும் என்கிட்ட தரச் சொல்லு.” என்றவர், திரும்பி வரதனின் முகத்தைப் பார்த்து,

“நீ ஒண்ணு பண்ணு இதைப் பத்தி ராவணன்கிட்ட இன்னைக்கே பேசு” என்க, வரதனுக்கு நெஞ்சில் நீர் வற்றிய உணர்வு.

ராவணனிடம் கேட்க வேண்டுமா? கேட்ட பின்பு உயிரோடு இருக்க முடியுமா என்ன?

வரதனின் இருள் சூழ்ந்த முகத்தைப் பார்த்து சத்தமாக வாய்விட்டுச் சிரித்த சக்திவேல்,

“பதறாதய்யா சும்மா சொன்னேன்” என்க, அப்பொழுது தான் வரதனுக்கு மூச்சே வந்தது.

“சுண்டக்கா பையன் டா அவனைப் பார்த்து பயப்படுற.”

“ம்ம் பரந்தாமனைக் கொன்னதை என் கண்ணால பார்த்தேன் சக்தி. அவ்வளவு கொடூரமா நீயோ நானோ கூட ஒரு கொலையைப் பண்ணினது இல்லை” என்று சொல்ல, சக்திவேலின் தாடை இறுகியது.

“சரி சக்தி இப்போ அந்த ராவணன் முடியாதுன்னு சொல்லிட்டான். நாம வேற யாரை வச்சிப் பண்றது?” என்று வரதன் கேட்க,

அதற்கு வன்மமாய்ச் சிரித்த சக்திவேல்,

“வேற யாரை வச்சும் பண்ண வேண்டாம். அவனே பண்ணுவான்” என்றார்.

“அது எப்டி சக்தி?”

“நாம சொன்னா தான செய்ய மாட்டான். ஆனா அந்தப் பொண்ணுக்காக செய்வான்ல?”

“அதெல்லாம் சரியா வராது சக்தி.”

“ஏன் வராது? அதெல்லாம் வரும். நீ மத்த வேலையைப் பாரு. இதை நான் பார்த்துக்கிறேன்.”

என்றவர்,

“முதல்ல அண்ணன் அண்ணன்னு அவன் கூடவே இருக்காங்கல்ல, அவனுங்களைக் கலைச்சு விடணும்” என்று கூறிவிட்டு விக்ரமைப் பார்த்தவர்,

“நீ அந்தப் பொண்ணு மேல எப்பவும் ஒரு கண்ணு வச்சிக்கோ. அப்புறம் அந்தப் பசங்க பத்தி முழு விவரமும் எனக்கு சீக்கிரம் வேணும். அப்புறம் வரதா கொஞ்ச நாளைக்கு நீ விக்ரமுக்கு எந்த வேலையும் குடுக்காத. அவன் நான் சொன்னதை செய்யட்டும்” என்க,

விக்ரமோ வாயெல்லாம் பல்லாக,

“சரி” என்றான்.

ஆனால் ராவணனைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் வரதனுக்கோ, அஜூதியாவை இதில் இழுப்பது தேவையில்லாமல் ராவணனைச் சீண்டுவது போல் ஆகிவிடும் என்பது நன்றாக தெரிந்தும், ஆமோதிப்பதைத் தவிர வேறு வழியில்லாததால் அவரும்,

“சரி” என்றார்.

@@@@@

கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்திருக்க, ராவணனும் அஜூதியாவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவே இல்லை.

இருவருக்குமே ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது வேதனையை கொடுத்தாலும், ராவணனோ அதை வெளிக்காட்டாது உள்ளுக்குள்ளே மறுகிக்கொள்ள, அஜூதியாவால் அப்படி இருக்க முடியவில்லை. எவ்வளவு முயன்றும் அவள் முகம் காட்டிக்கொடுத்துவிட, எதையோ இழந்தது போலவே சுற்றி வந்தாள்.

அவனைப் பார்க்க வேண்டும் என்று மனம் அடம்பிடிக்கும் போதெல்லாம், அவனது இறுகிய முகமும், தன்னைப் பார்க்கும்போது மட்டும் காதல் பேசும்  அவன் கனல் விழிகள் நினைவுக்கு வந்து அவளை இன்னும் தவிக்க வைத்தது.

ஒருமுறையாவது அவனே அழைத்துப் பேச மாட்டானா என்று அலைபேசியை எடுப்பதும், அவனிடமிருந்து எந்த அழைப்பும் இல்லையென்பதைப் பார்த்ததும் ஏமாற்றத்துடன் அதை மீண்டும் வைத்துவிடுவதுமாக இருந்தாள்.

‘நான் மட்டும் தான் இப்படி தவிக்கிறேனா? அவனுக்கு என்னைப் பார்க்கணும்னு தோணவே இல்லையா?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டவளுக்கு, வலி தான் கூடியதே தவிர பதில் கிடைக்கவில்லை.

எல்லாவற்றையும் இந்திராவிடம் சொல்லியே பழக்கப்பட்டவளுக்கு, அவள் அருகில் இல்லாததால் தன் மனக்குமுறலைக் கொட்டித் தீர்க்க ஆள் இல்லாது போக, தனக்குள்ளே தனித்து போனாள் அஜூதியா.

வேணி, ஜானகி, மாரி என்று கேட்ட எல்லாரிடமும் ஒன்றுமில்லை என்று சமாளித்தவள், அன்று தொடங்கி இதோ இன்று இப்பொழுது வரை, தனிமையில் அழுகையில் கரைந்து கொண்டிருக்க, அவளது அலைபேசி சிணுங்கியது.

அலைபேசியின் சத்தத்தில் கண்களில் வழிந்த கண்ணீரை அவசரமாகத் துடைத்தவளுக்கு, அழைத்தது ராவணனாக இருக்குமோ என்ற ஒரு நொடி எதிர்பார்ப்பு வந்து போக, சோர்வை புறந்தள்ளிவிட்டு வேகமாக வந்து அலைபேசியைத் தேடி எடுத்தாள்.

ஆனால் அது அவள் உறுப்பினராக இருக்கும் நடனக் குழுவின் தலைவருடைய அழைப்பு என்பதைப் பார்த்ததும், அவளுக்குள் எழுந்த அந்தச் சிறு எதிர்பார்ப்பும் அவள் மனம் போல உடைந்து போக

ஆர்வமே இல்லாமல் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ சார்… ம்ம்… நல்லா இருக்கேன் சார். என்ன? அஞ்சு நாளா! அதுவும் இன்னைக்கே கிளம்பணுமா?” என்று அவள் தயங்க, எதிர்த்தரப்பில் என்ன சொல்லப்பட்டதோ,

“ஓகே சார்…” என்றாள் அஜூதியா.

பின்பு அலைபேசியை வைத்தவள், சில நொடிகள் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தாள்.

வெளியூரில் நடக்கவிருக்கும் பிரபல தொழிலதிபரின் மகள் திருமணத்திற்கு நடனக் குழுவினருடன் நடனமாட செல்ல வேண்டுமாம். அது முடிந்ததும் இன்னும் இரண்டு விஷேசங்களும் உள்ளதாம். ஆக மொத்தம் ஐந்து நாட்களுக்கு வெளியில் தங்க வேண்டுமாம்.

இப்பொழுது இருக்கும் நிலைமையில் கல்யாண வீட்டில் ஆடும் மனநிலையிலா அஜூதியா இருக்கிறாள்? இருந்தும் தனக்கு நடனம் பயிற்றுவித்த ஆசிரியரே கேட்கும் பொழுது, அவளால் மறுக்கவும் முடியவில்லை.

மேலும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி அறைக்குள்ளே அடைந்து கிடப்பது?

தனக்குப் பிடித்த நாட்டியத்தில் கவனம் செலுத்தினாலாவது மனதின் பாரம் குறையுமா என்று எண்ணியவள், ராவணனைப் பற்றிய நினைவுகளிலிருந்து சில நாட்களாவது தன்னைத் திசைதிருப்பிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, வெளியூர் செல்லத் தயாரானாள்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top