ராவணா 29

நாளை பிரபல தொழிலதிபர் வேலாயுதத்தின் மூத்த மகள் மித்ராவின் திருமணம் நடக்கவிருப்பதால், இன்று இரவு வரவேற்பு விழா ஆட்டம் பாட்டு என வெகு விமரிசையாக நடைபெற்று கொண்டிருக்க, நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

அதேநேரம் நடன கலைஞர்களுக்கு என்று ஒதுக்க பட்ட அறையில்,கதை பேசும் தன் விழிகளுக்கு மையிட்டவள், கண்ணாடியில் தன் ஒப்பனையை ஒரு முறை சரிபார்த்து கொண்டாள். 

பின்பு  மேசையில் இருந்த மரப்பெட்டியை திறந்து அதனுள் இருந்த சலங்கையை தன் கையில் எடுத்து மென்மையாக  வருடினாள். 

அவளது இதழ் அழகாக விரிந்து கொண்டாலும் கண்கள் கலங்க சலங்கையை அப்படியே தன் நெஞ்சோடு அழுத்தி பிடித்தபடி தன் கண்களை மூடிக்கொண்டாள் அஜூதியா.

அப்பொழுது, ‘டக் டக்’ கருப்பு நிற ஷூ ஒலியெழுப்ப அறையின் கதவை திறந்து கொண்டு  புன்னகையுடன் அவளை நோக்கி உள்ளே வந்தவன் மயில் இறகை கொண்டு அவளது வதனத்தை, நெற்றி துவங்கி மெதுவாக வருட, தேகம் தளிர்ந்தவள் இன்னும் தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு,

“ராவணா” என்ற கணம்,

“அஜூ… அஜூதியா!”

என்ற அழுத்தமான குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள்,

“டைம் ஆச்சுடி… இப்போ உன் டான்ஸ் தான். சீக்கிரம் ரெடியாகு.”

என்ற தன் தோழியின் குரலில் சுயம் பெற்றவளுக்கு வேதனையாக இருந்தது.

“கண்ண மூடினாலும், திறந்தாலும் நீ அவனையே நினைச்சிட்டு இருக்க, ஆனா அவன் உன் நினைப்பே இல்லாம நிம்மதியா இருப்பான்” என்று தன்னைத் தானே கடிந்துக்கொண்டு, தன் கையில் இருந்த சலங்கைக்கு ஒரு அழுத்தமான முத்தம் வைத்து அதைத் தன் காலில் அணிந்துகொண்டு வெளியே வரவும், காம்பியரிங் டீம் அவளது பெயரைச் சொல்லி அழைக்கவும் சரியாக இருந்தது.

அழகான சிவப்பு நிற லெகங்காவில் தேவதை போல தயாராகி வந்திருந்தவள் மேடை ஏறி அனைவருக்கும் வணக்கம் சொன்னாள்.

பின்பு,

‘எத்தனைமுறை நான் ஏங்கி சாவேன்

இத்தவனை எனை ஆட்கொள்வாயா

சூடிய வாடலை சூடிய வா

களவாடிய சிந்தை திரும்பத்தா…’ என்று ஒலித்த பாடலுக்கு ஏற்ப அவளது விரிந்த விழிகள் அபிநயம் பேச தன் தேகத்தை நளினமாக வளைத்து, அஜூதியா ஆடி கொண்டிருந்தாள்.

அரங்கத்தில்  உள்ள அனைவரும் அவளது நடனத்தை ரசித்தபடி அவளையே பார்த்து கொண்டிருக்க, கருப்பு நிற கோட் சூட்டில் அழுத்தமான காலடிகள் தரையில் பட்டு ஒலியெழுப்ப  விழாவின் உரிமையாளர் எழுந்து சென்று அவனை வரவேற்க தன் சகாக்களுடன் உள்ளே நுழைந்த ராவணன் அவனுக்காக ஒதுக்கி வைத்திருந்த விஐபி என்று ஒட்டப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

‘உன்னை காணாது

பெண் நெஞ்சு தடுமாறுதே 

விதை இல்லாமல் வேரில்லையே’ என்ற வரி ஒலிக்கும் பொழுது, கலையிலந்த முகத்தில் ஒட்டவைத்த புன்னகையோடு சபையினரை பார்த்து  நடனமாடிக்கொண்டிருந்தவளின் கருவிழிகள், நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி சாவகாசமாக அமர்ந்துகொண்டு தன்னையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்த ராவணனை பார்த்த கணம் பெண்ணவள் நிஜமாகவே தடுமாறி போனாள். 

அவளது மகிழ்ச்சியின் அளவை சொல்ல வார்த்தைகளே இல்லை. 

இத்தனை நாட்கள் அவனைப் பார்க்காமல் இருந்த மொத்த ஏக்கமும் அவள் கண்களில் பிரதிபலிக்க, அவன் மீது இருந்த கோபம் கூட இப்போது மறைந்து விட்டிருக்க, ஓடிச் சென்று அவனைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் போல இருந்தது.

ஆனாலும் தான் இருக்கும் இடம் உணர்ந்து இதயம் நின்று துடிக்க தன் தடுமாற்றத்தை மறைத்தபடி ஆடியவளின் மொத்த பார்வையும் அவன் மீது நிலைத்திருக்க, அவனோ யாரையோ பார்ப்பது போல அஜூதியாவை பார்த்தவன், அவளை கொஞ்சமும் கண்டுக்காது தன் அருகில் அமர்ந்திருந்த ஒருவருடன் பேச துவங்க அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

‘அவ்வளவு தானா நான் உனக்கு? எனக்கு இருக்கும் பாதிப்பில் ஒரு சிறிய அளவு கூடவா இல்லை?’ என்று உள்ளுக்குள் வேதனைப்பட்டவளுக்கு, கண்ணீர் வேறு எட்டிப் பார்க்க, எப்படி முழுப் பாட்டுக்கும் ஆடி முடித்து மேடை இறங்கி வந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.

சபையினருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அழுதுகொண்டே அறைக்குள் வந்தவளுக்கு, அவனது அந்நியப் பார்வை மிகப்பெரிய வலியை கொடுக்க, அழுதழுதே சோர்ந்து போனவள், ஒருகட்டத்தில் முகத்தைத் துடைத்துக்கொண்டு நேரே தன் நடனக் குழுவின் தலைவரைப் பார்க்கச் சென்றாள்.

@@@@@@

ஒரு காலத்தில் வரத பெருமாளுக்கும், ராவணனுக்கும் குருவாக இருந்தவர் தான் வேலாயுதம். 

அவருடைய பெயரைக் கேட்டாலே நிழல் உலகமே நடுங்கும். 

ஆனால் வயது ஏற ஏற, அந்த வாழ்க்கையை விட்டு முழுமையாக விலகியவர், இப்பொழுது தன் தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டு தனது மனைவி மீனாட்சி, தன் இரு மகள்கள் மித்ரா மற்றும் மீராவுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.

அவருடைய மகளின் திருமண விழாவிற்கு தான் ராவணன் தன் சகாக்களுடன் வந்திருந்தான்.

ஆக அதற்காக மட்டும் தான் வந்திருந்தானா என்றால் நிச்சயமாக இல்லை, ராவணனோ நாளை திருமணதிற்கு தான் வரவேண்டும் என்று எண்ணியிருந்தவன், அஜூதியா வரும் செய்தி அறிந்து இதோ அவளது மதிமுகம் காண தான் குறித்து வைத்திருந்த நாளுக்கு முன்பே வந்து மேடையை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான்.

அஜூதியா மேடையேறிய அந்த நொடியே ராவணனின் விழிகள் அவளைப் பற்றிக்கொண்டன.

சிவப்பு நிற உடையில், சலங்கையின் ஓசையோடு அவள் ஆடிக்கொண்டிருக்க, 

அவளை பற்றிக்கொண்ட அவனது விழிகள் அவளை விட்டு ஒரு நொடி கூட அகலவே இல்லை.

அவள் மேடை ஏறி வந்த நொடி முதல் அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் அவளது உயிற்பில்லாத புன்னகையையும் அவளின் கண்களில் தெரிந்த ஏக்கத்தைப் பார்த்ததும் தன்னை  அறியாமலே தன் விரல்களை இறுக்கிக் கொண்டான்.

அப்பொழுது அடிக்கொண்டே இருந்தவளின் பார்வை அவனை நோக்கி வந்த நொடி, அவனது இதயமே ஒரு துடிப்பு தவறியது.

சட்டென்று வந்த வானிலை மாற்றம் போல, அவள் கண்களில் தெரிந்த அந்தச் சந்தோஷம், ‘இப்படி பண்ணிடல’ என்கிற சிறு பிள்ளை கோபம் அதோடு மெல்லிய கோடாக வழிந்த கண்ணீர்.

இது அனைத்தும் தனக்கானது என்று கண்டதும் அறிந்து கொண்டவனுக்கு, தன்னை கட்டுப்படுத்தி கொள்ளவே முடியவில்லை.

இப்போவே அஜூதியாவிடம் ஓடிச்சென்று,

“உன்னை ரொம்ப அழைவச்சுட்டேனா டா”

என்று கேட்டு, அவளது முகத்தை இரு கைகளிலும் தாங்கி, அந்தக் கண்களில் வழியும் ஏக்கத்தை முத்தமிட்டு அழிக்க வேண்டும் போல இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு வாரம்.

அதுவரை அவளை காணாத மொத்த ஏக்கத்தையும் வெளிக்காட்டாமல் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தவனுக்கு, அஜூதியாவின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தப்பிறகு அப்படி இருக்க முடியவில்லை.

எங்கே இத்தனை நாட்களாகத் தான் கட்டிக்காத்திருந்த எல்லா கட்டுப்பாடுகளையும் தானே உடைத்துவிடுவேனோ என்று பயந்தவன், அவளின் நலனுக்காகக் கடினப்பட்டு, தன் பார்வையில் தெரிந்த அவளுக்கான நேசத்தை மறைத்தான்.

பின்பு, அஜூதியா தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, யாரையோ பார்ப்பது போல அவளைப் பார்த்தவன், வேண்டுமென்றே அருகில் இருந்தவனிடம் திரும்பிப் பேச ஆரம்பித்தான்.

அவளோ தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தாள்.

ஆனால், அவளது விழிகளில் இருந்த சந்தோஷம் மெதுவாக மறைந்து கொண்டிருப்பதை அவன் தெளிவாகப் பார்க்க, இப்பொழுது வலி நிறைந்த அவள் விழிகளை காணக் காண, ராவணனின் தாடை இறுகியது.

அஜூதியாவை இப்படிப் பார்க்க அவனால் முடியவில்லை.

அதனாலேயே அவளைப் பார்ப்பதையே தவிர்த்துக் கொண்டிருந்தான்.

நடனம் முடிந்ததும், அவள் மேடையிலிருந்து கீழே இறங்கி செல்ல, அவள் மறையும் வரை அவனது விழிகள் அவளைப் பின்தொடர்ந்தன.

‘பிறந்தநாள் தொடங்கி இந்த நிமிஷம் வரைக்கும் அவளை அழ வச்சுட்டே இருக்க டா’

என்று குற்றம் சாட்டிய மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாமல், ஒருவித இறுக்கத்தில் தவித்தவன் சட்டென்று இருக்கையிலிருந்து எழ,

“எங்கடா… அதுக்குள்ள எழுந்துட்ட? உக்காரு.”

என்று அவன் தோளில் கைப்போட்டபடி, அவன் அருகே வந்து அமர்ந்தார் வேலாயுதம்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top