அலையென குதிக்கிறேன் உலையென கொதிக்கிறாய் 1

அலையென குதிக்கிறேன் உலையென கொதிக்கிறாய் 1

 

தூங்கிக் கொண்டிருந்த ஆர்னாவின் காதில் எதோ பயங்கரமான சத்தம் விழ திடுக்கிட்டு கண் விழித்தாள். ஒரு நொடி அவளுக்கு உலகம் புரியவில்லை.

அடுத்த நொடி யாரோ அலறும் சத்தம் வர பதறியடித்து எழுந்து விட்டாள். எங்கிருந்து வருகிறது இந்த சத்தம்?

பூட்டியிருந்த அறைக்கதவை ஒரு முறை பார்க்க மேலும் கோரமாக வந்தது சத்தம். யாரோ வலி தாங்காமல் அலறுவது நன்றாக புரிய அவளுக்கு வியர்த்து கொட்டி விட்டது.

‘என்ன நடக்குது? யாரு கத்துறா?’ ஒரு வேளை….’ என்று புரியாமல் பயத்தோடு சுற்றிலும் பார்க்க, மீண்டும் ஒரு முறை அலறல் சத்தம் கேட்டது.

இத்தனை முறை கேட்டப்பிறகும் அவளால் அதே இடத்தில் அமர்ந்திருக்க முடியவில்லை.

மெல்ல கட்டிலை விட்டு இறங்கி பயத்தோடு நின்றாள். சத்தம் எதுவும் இப்போது கேட்கவில்லை. ஆனால் அவளது உள்ளம் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்ததால் அந்த சத்தத்தை அவளது மூளை எதிரொலித்துக் கொண்டிருந்தது. உள்ளம் எதையோ சொல்லி அவளை மேலும் பயமுறுத்தியது.

பயந்த கால்களை மெல்ல தூக்கி சன்னல் அருகே சென்று காதை வைத்துப் பார்த்தாள். வெளியே எந்த சத்தமும் கேட்கவில்லை.

‘எதுவும் கேட்கலயே? அவன் தான் வந்துட்டானோ? கண்டு பிடிச்சுருப்பானா?’ என்று அவள் திணறிக் கொண்டிருக்க, அதே நொடி அவளது அறைக்கதவு படாரென திறக்கப்பட்டது.

பயந்து சுவற்றோடு ஒட்டிக் கொண்டவள் அலறிவிட்டாள்.

உடைந்த கதவின் பின்னால் மூவர் நின்றிருந்தனர். ஆர்னாவோ இருட்டுக்குள் பயந்து ஒளிந்து நிற்க ஒருவன் உடனே உள்ளே வந்து விளக்கை போட்டான்.

ஆர்னாவின் குரல் வேகமாக வந்தது.

“யா… யாரு நீங்க? இ.. இங்க எங்க வந்தீங்க?” என்று அவள் பயத்தோடு கேட்க மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு உடனே நகர்ந்து நின்றனர்.

“உங்கள தான் கேட்குறேன்.. யாரு நீங்க? நான்.. போலீஸ்.. போலீஸுக்கு கூப்பிடுவேன்” என்று மிரட்டியவள் பாய்ந்து கைபேசியை எடுத்தாள்.

அதை உயிர்ப்பித்து அழுத்தும் முன்பு விரல் சொடுக்கும் சத்தம் கேட்டது.

சட்டென திரும்பிப் பார்த்தாள். அவளது மூளையின் ஒவ்வொரு பாகமும் அறியுமே இந்த சத்தத்தை. அவள் நினைத்தது போலவே அங்கே அவன் நின்றிருந்தான். சூர்யவன்ஷி.

ஆர்னாவின் கையில் இருந்த கைபேசி நழுவி கீழே விழுந்தது. 

கண்டு பிடித்து விட்டான்! என்று அதிர்ந்து சிலையாக நின்றாள்.

அவள் அதிர்ச்சியை பற்றி அக்கறையே படாமல் உள்ளே வந்தவன் அவள் நின்ற கோலத்தை அளவெடுத்தான். நைட்டியில் தூக்கத்தில் கலைந்த முடியோடும் பயத்தில் வியர்த்த முகத்தோடும் பேயை பார்த்தது போல் நின்றிருந்ததாள்.

“சூர்யா..” என்று அவள் முணுமுணுக்க சூர்யாவன்ஷியின் முகம் இறுகியது.

“மறக்கல..? பரவாயில்ல” என்று அவன் உதட்டை பிதுக்க ஆர்னாவின் தொண்டை உலர்ந்து விட்டது.

“சூ.. சூர்யா.. ப்ளீஸ்.. என்னை.. என்னை விட்டுரு” என்று அவள் அடுத்த நொடி அழ ஆரம்பித்து விட்டாள்.

அவள் அழுவதும் கெஞ்சுவதும் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பது போல் நின்றான்.

“எனக்கு.. எனக்கு வேற வழி தெரியல.. ப்ளீஸ்..”

“டூ லேட்” என்று அவன் உதட்டை பிதுக்க ஆர்னா அவனை அதிர்வோடு பார்த்தாள்.

‘என்ன செஞ்சு வச்சான்?’ என்று அவள் பயந்து பார்க்க “ஆருமா… ஆரு..” என்று தலையில் காயத்தோடு வந்து கதவில் சாய்ந்தார் அவளுடைய மாமா.

“மாமா..” என்று அவள் பயந்து அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க அடுத்த நொடி சூர்யா திரும்பி மாமாவின் தலையை பிடித்து சுவற்றில் மோதினான்.

“மாமா…” என்று ஆர்னா அலறிக்கொண்டு அருகே ஓடி வர சூர்யாவின் கை அவள் முன்னால் நீள உடனே நின்று விட்டாள்.

“இவன்.. இவன் இருக்க தைரியத்துல தான தப்பிச்சு வந்த? இவன கொன்னுடவா?” என்று சூர்யா ஒவ்வொரு வார்த்தைக்கும் கையில் கிடைத்த தலையை சுவற்றோடு உராய, ஆர்னாவின் கண்ணீர் மழையாக கொட்ட ஆரம்பித்து விட்டது.

“ஆ.. ஆ..” என்று வலி பொறுக்காமல் அலறிக் கொண்டிருந்தவரையும் அதை பற்றிக் கவலைப்படாமல் அவளை முறைத்துக் கொண்டிருந்தவனையும் மாறி மாறி பார்த்த ஆர்னாவுக்கு உயிர் போவது போல் இருந்தது.

“ப்ளீஸ் அவர விட்டுரு.. அவர் பாவம்.. ப்ளீஸ்..” என்றவள் எப்போதும் வேலை செய்யும் ஆயுதத்தை கையில் எடுத்தாள்.

சூர்யாவின் காலுக்கடியில் மண்டியிட்டு அமர்ந்தாள். நிலைமை கை மீறும் போது அவள் அடிபணிவது ஒன்றே அவளை இன்னும் சுயநினைவோடு வைத்திருக்கிறது. இல்லை என்றால்?

செத்திருக்க மாட்டாள். ஆனால் நிச்சயமாக பைத்தியமாகி இருப்பாள்.

இன்று காலில் பணியும் போது அது வேலை செய்யுமா? என்று சந்தேகம் இருந்தது. ஆனால் அடுத்த நொடியே சூர்யா ஆர்னாவின் மாமாவை தரையில் தள்ளி விட்டு அவளை நோக்கி குனிந்தான்.

அவளது முகத்தை ஒற்றை விரலில் பற்றி தூக்கியவன் “நீ யாருக்கு அடிமை ஆர்னா?” என்று கேட்டான்.

எப்போதும் கேட்கும் கேள்வி தான். ஒவ்வொரு முறையும் இந்த கேள்வி அவளை முள்ளாய் தைக்கும். ஆனால் அதற்கான பதிலை சொல்லாமல் விட்டால் எப்படிப்பட்ட விபரீதம் நடக்கும் என்று தெரிந்ததால் “சூர்யவன்ஷிக்கு” என்றாள் கண்ணீரோடு.

“கேட்கலயே.. திரும்ப சொல்லு” என்றவன் மேலும் குனிய “சூர்யவன்ஷிக்கு.. ஆர்னா அடிமை” என்றவளின் வார்த்தைகள் அழுகையாக வந்தது.

சூர்யாவின் முகத்தில் ஒரு குரூர திருப்தி பரவியது.

“அப்புறம் ஏன் இப்படி ஓடி வந்து ஒளிஞ்ச?”

ஆர்னாவின் அழுகை பெருகியது. அவளால் பேச முடியவில்லை. தொண்டையிலிருந்து கேவல் சத்தம் மட்டுமே வந்தது.

சில நொடிகள் அவள் அழுவதை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தவன் “இதுக்கு பதில் நான் தெரிஞ்சுக்காம விட மாட்டேன்.” என்றவன் உடனே அவள் முகத்தை விட்டு நிமிர்ந்து நின்றான்.

“எந்திரி” என்றதும் அழுகையை விழுங்கியவள் துவண்டு போன உடலோடு எழுந்தாள்.

தரையில் அவளை பாவமாக பார்த்துக் கொண்டு கிடந்த மாமாவை பார்த்தவளுக்கு மேலும் அழுகை பெருகியது.

“போ..” என்று சூர்யா வாசலை கண்ணால் காட்ட தலையை குனிந்து உடனே நடந்தாள்.

இதற்கு மேல் நின்றால் அவளை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்ததற்காக அந்த நல்ல மனிதரை சூர்யவன்ஷி கொன்றாலும் கொன்று விடுவான்.

கண்ணீரை துடைத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தவள் வாசலில் நின்றிருந்த இரண்டு காரை பார்த்து விட்டு நின்றாள்.

இப்போது இதில் ஏறி விட்டால் அடுத்து அவள் தப்பிக்க வழியே இல்லை. இப்படியே ஓடி விடு அல்லது செத்து விடு என்று மூளை கூப்பாடு போட்டது.

கடந்த மூன்று மாதங்களாக அவள் அனுபவித்த சுதந்திரம் இனி கனவாக மாறிப்போகும். தலையிலும் இதயத்திலும் பெரும் பாரத்தை தூக்கி வைத்தது போல் இருக்க பின்னால் வந்து நின்றான் சூர்யவன்ஷி.

அவன் எதுவும் பேசவில்லை. அவளும் அவனை திரும்பிப் பார்க்கவில்லை. காரை அவன் சாவியில் இருந்த பட்டனை அழுத்தி திறந்து விட ஆர்னா அதை வெறித்தாள்.

அவளை பெற்றப்பேய் செய்த காரியத்திற்கு அவள் தினம் தினம் தீயில் காய வேண்டுமா?

அவள் அசையாமல் நிற்பதை கவனித்தவன் கைகள் மெல்ல அவளது இடையை வளைத்தது.

“திரும்பவும் ஓடனுமா?” என்று அவன் காதோரம் வந்து கேட்க அவளுக்கு அழுகை மட்டுமே வந்தது.

அந்த எண்ணம் இனி மீண்டும் வருமா? அவளை காப்பாற்றியவர் நிலைமையை தான் பார்த்து விட்டாளே.

அவளது பதிலுக்காக காத்திராமல் கதவை திறந்து அவளை உள்ளே தள்ளினான்.

அதற்கு மேல் போராட தோன்றாமல் காரில் அமர்ந்தாள்.

கதவை பூட்டி விட்டு சூர்யவன்ஷி ஓட்டுநர் இருக்கையில் அமர மற்றவர்கள் அடுத்த காரில் ஏறி அமர்ந்தார்கள்.

சில நொடிகளில் கார் கிளம்பி விட்டது.

ஆர்னாவின் பார்வை மூன்று மாதங்களாக சுதந்திரக்காற்றை சுவாசிக்க உதவிய வீட்டை தழுவியது.

அவளை காப்பாற்றி பாதுகாத்து உணவளித்த ஜீவன் ஒன்று உள்ளே காயத்தோடு போராடிக் கொண்டிருக்கிறது.

அவரை காப்பாற்றச் சொல்லலாம். சொன்னால் அடுத்த நொடி அவரது உயிர் உலகை விட்டு பறந்து விடும்.

அவளுக்கு அவர் முக்கியம் என்று தெரிந்தால் சூர்யவன்ஷி விட்டு வைக்க மாட்டான்.

வீடு மறைந்து இருண்ட பாதை கண்ணில் பட்டது. அவளது வாழ்வை போலவே இருண்டு போன உலகத்தை பார்க்கப் பிடிக்காமல் கண்ணை மூடிக் கொண்டாள்.

கண்ணீர் இன்னமும் கன்னத்தில் ஓடிக் கொண்டே இருக்க அசையாமல் அமர்ந்திருந்தாள்.

காரும் அவளை அலுங்காமல் தாங்கிக் கொண்டு சாலையில் பறந்து கொண்டிருந்தது.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top