“எங்கடா அதுக்குள்ள எழுந்துக்கிற? உக்காரு.”
என்று கூறி ராவணனின் தோளில் கைப்போட்டபடி அவன் அருகே வந்து அமர்ந்தார் வேலாயுதம்.
ராவணனோ மீண்டும் இருக்கையில் அமர்ந்தாலும், அவனது விழிகள் மட்டும் அஜூதியா சென்ற திசையிலேயே நிலைத்திருந்தது.
அதை கவனித்த வேலாயுதமோ அவன் முகத்தைப் பார்த்து விட்டு, அவனது பார்வை போன திசையை பார்த்தவர், அங்கே யாரும் இல்லையென்றதும் மீண்டும் அவனிடம்,
“என்னடா பேய் புடிச்ச போல வெறிச்சு பார்த்துட்டு இருக்க என்ன” என்க,
அவனோ, “ஹான் ஒன்னும் இல்லையா” என்றான் தன் தடுமாற்றத்தை மறைத்தபடி.
ஆனால் அது அவரது கழுகு கண்ணுக்கு தப்புமா என்ன? ராவணனின் பதிலில் மெலிதாய் புன்னகைத்த வேலாயுதம்,
“அது சரி வரதன் பேசுனான் நீ அவன் குடுத்த டீலை வேண்டாம்ன்னு சொல்லிட்டியாம். இப்போ புதுசா எந்த டீலும் எடுக்குறது இல்லையாமே” என்று அவனது விழிகளை பார்த்து கூறியவர், அவன் அதற்கு பதில் கூறுவதற்குள்,
“யார் டா அந்த பொண்ணு” என்று கேட்டுவிட, ஒரு நொடி திடுக்கிட்டவன் பிறகு தன்னை சரி செய்து கொண்டு,
“அப்படி எதுவும் இல்லையா” என்றான்.
“இல்லையா எனக்கு எதோ இருக்கிற போலவே இருக்கே. என் பொண்ணு மித்ராவை கல்யாணம் பண்ண சொல்லி கேட்டேன் மாட்டேன் சொல்லிட்ட, இப்போ எந்த டீலும் நீ எடுக்குறதும் இல்லை. அப்போ வேற என்ன காரணம் இருக்க முடியும்”
“அது வந்து ஐயா” என்ற ராவணனை எதுவும் பேச வேண்டாம் என்பது போல தடுத்தவர்,
“டேய் அந்த பொண்ணு யாரா வேணும்னாலும் இருக்கட்டும் விட்டுடாத டா, அவள இறுக்கமா புடிச்சி, கரை சேர்ந்துடு டா.” ராவணனோ பதில் சொல்லாது அப்படியே அமைதியாக அமர்ந்திருக்க,
“உனக்கு என்ன டா குறை” என்றவர் அருகில் அமர்ந்திருந்த ராவணனின் சகாக்கள் அனைவரையும் பார்த்து,
“ஊர்ல இருக்கிற பொறுக்கியெல்லாம் கல்யாணம் பண்றானுங்க டா உங்களுக்கென்ன. நீங்க எல்லாம் நல்ல பசங்க டா. இப்படியே இருந்திடாதீங்க. பணம் பின்னாடி போனதெல்லாம் போதும். வாழ்க்கைய வாழுங்க, இதெல்லாம் எவனும் எனக்கு சொல்லி தரல, எனக்கு புரியும் போது என் முக்கால்வாசி வாழ்க்கை முடிஞ்சு போச்சு. சீக்கிரம் கல்யாணம் பண்ணு ராவணா நீ பண்ணினா தான் இவனுங்களும் பண்ணுவானுங்க” என்றவர் குனிந்தபடி அமர்ந்திருந்த சந்துருவை ஒருகணம் பார்த்துவிட்டு ராவணனிடம்,
“அவன் எப்போ மீராவை கல்யாணம் பண்ணுவான்னு கேளு டா” என்றார்.
அதற்கு ராவணனோ எட்டி சந்துருவை பார்க்க ராவணன் தன்னை பார்ப்பதை அறிந்து நிமிர்ந்து அவனை பார்த்த சந்துரு,
“அண்ணா கல்யாணம் பண்ணினதும் அடுத்த முகூர்த்தத்திலேயே நாங்க எல்லாரும் பண்ணிக்கிறோம்” என்க,
சந்துருவை முறைத்து விட்டு அனைவரையும் பார்த்தவர்,
“உங்க அண்ணன் கிழிச்சான்” என்க. அனைவரும் சிரிப்பை அடக்க முடியாது சத்தமாக சிரித்து விட்டனர்.
அவரோ,
“டேய் ராவணா அவன்ட்ட சொல்லு இன்னும் கொஞ்ச நாள் தான் பார்ப்பேன் அவன் வழிக்கு வரலைன்னா நான் மீராவுக்கு வேற மாப்பிளை பார்ப்பேன்” என்று வேண்டுமென்றே அவன் பதிலை தெரிந்து கொள்ள கேட்க, தன் குரலை செருமி கொண்ட சந்துருவோ,
“உங்க பொண்ணுக்கு ஓகேன்னா பாருங்க” என்க, சந்துருவை முறைக்க முயன்று தோற்று போனவர் மறைக்கப்பட்ட புன்னகையோடு நாற்காலியில் இருந்து எழுந்து கொள்ள அனைவருமே மரியாதை நிமித்தமாய் எழ, ராவணனின் தோளை தட்டியவர்,
“நான் சொன்னதை மறந்திடாத அந்த பொண்ணை விட்டுடாத டா கட்டியா புடிச்சிக்கோ” என்று கூறிவிட்டு செல்ல,
“அதான் விட்டாச்சே இனி எங்க புடிக்க” என்று சந்துரு முணுமுணுக்க,
“டேய் எல்லாம் கேக்குது டா ” என்றான் ராவணன்.
ஆனால் அதற்கு கொஞ்சமும் அழட்டி கொள்ளாத சந்துருவோ,
“கேட்கட்டும் தான் சொல்றேன்” என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றுவிட, அவனையும் தன் சகாக்களையும் ஒருகணம் பார்த்த ராவணன், தன் மனதில் ஆழமாக இறங்கிகொண்டிருக்கும் வேலாயுதம் சொன்ன வார்த்தைகளை எண்ணி பார்த்தபடி மீண்டும் அஜூதியா வருவாளா என அவள் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்தான்.
அவன் எண்ணம் போலவே மேடையில் அடுத்தது அஜூதியாவின் பெயரை சொல்லி அழைக்க நிமிடங்கள் கழித்தும் அவள் வராமல் போகவும், அஜூதியாவின் தோழி வந்து காம்பெயரிங் செய்யும் பெண்ணின் காதில் வந்து ஏதோ சொல்லவும், வேறு ஒரு பெண்ணின் பெயரை அவர்கள் சொல்ல பார்வையாளர்களின் கைத்தட்டளுக்கு மத்தியில் வேறு ஒரு பெண் வந்து நடன மாட,
‘இன்னுமா அழுகிறாள்!’ என்று எண்ணும் பொழுதே அவளது அந்தக் கலங்கிய விழிகள் மீண்டும் அவன் நினைவுக்கு வர, அவனுக்குள் ஏதோ ஒன்று அழுதியது.
“அவளை விடாதடா.” வேலாயுததின் வார்த்தை வேறு எதோ செய்ய, இப்பொழுதே அவளை பார்க்க வேண்டும் போல தோன்றவும் ராவணன் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.
@@@@@
போட்டிருக்கும் உடையை கூட மாற்றாது தன் முன் நிற்கும் அஜூதியாவிடம், “தாங்க முடியாதளவுக்காமா வலிக்குது?” என்று வினவினார்.
“ஆமா சார்” என்றாள் அஜூதியா.
எப்பொழுது வேண்டுமென்றாலும் வந்துவிடுவேன் என்கின்ற நிலையில் இருக்கும் அஜூதியாவின் நிறைந்த விழிகளையும், அழுதழுது வீங்கியிருந்த முகத்தையும் ஒருகணம் பார்த்தவர் அவளுடன் அதிகம் தர்க்கம் செய்யாது,
“சரி மா இன்னைக்கு உள்ள பேமெண்டை வாங்கிக்கோ” என்று கூறி தன் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து எண்ணி அவளிடம் கொடுத்து விட்டு,
“நைட்டா இருக்கு போய்டுவல்ல ” என்று கேட்டார்.
அவளோ,
“போய்டுவேன்” என்றவள் பேருக்கு புன்னகைத்து விட்டு,வடியும் கண்ணீரை துடைத்து கொண்டே சென்றாள்.
அதே நேரத்தில்,
திருமண மண்டபத்தின் பின்புறம் தனியாகச் சென்றுகொண்டிருந்த அஜூதியாவை, சற்று தொலைவில் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்த விக்ரமின் உதடு விஷமமாய் புன்னகைக்க, அழைபேசி எடுத்து யாருக்கோ அழைத்துவிட்டு தன் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து முகர்ந்து பின் அதை தன் வாயில் சரித்தவன், விழிகள் மிதக்க அஜூதியாவை பின் தொடர்ந்தான்.
@@@@@
அஜூதியா தனியாக வெளியே வந்த சில நிமிடங்களிலேயே, அவளுக்குப் பின்னால் விக்ரமும் அவனுடைய ஆட்களும் மிக நெருக்கமாக பின் தொடர்ந்தனர்.
அதீத மன அழுத்தத்தில் இருந்ததாலோ என்னவோ அஜூதியா அதை கவனிக்கவில்லை.
சற்று தூரம் சென்றதும் ஒருவன் வேகமாக வந்து அவளது பாதையை மறைத்து கொண்டு நிற்கவும்,
திடுக்கிட்ட அஜூதியா பயந்து பின்னால் நகரவும், அவளது பின்னந்தலை விக்ரம் மீது மோதியது.
உடனே பதறி திரும்பிய அஜூதியா விக்ரமை பார்க்க, அவன் சிரிப்பு அவனது பார்வை போதா குறைக்கு அவனிடம் இருந்து குப்பென்று வீசிய போதை வஸ்துகளின் மணமே எதோ சரி இல்லை என்பதை அவளின் மூளை அவளுக்கு இடித்துறைத்தது.
“என்னம்மா இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட? பார்ட்டி இன்னும் முடியலையே” என்று சொன்னவனோ அவளது கன்னத்தை வருட வரவும், விலகிக்கொண்டவள், முறைத்து விட்டு வேகமாக நடக்கவும், விக்ரம் அவளது கையை இறுக்கமாக பிடித்து விட,
“கைய விடு டா” இதயம் படபடக்க அவனிடம் இருந்து விடுபட போராடினாள் அஜூதியா.
அவளை பார்த்து சத்தமாக சிரித்த அவனோ,
“ஏன் அந்த ராவணன் கூட மட்டும் தான் போவியா? எங்க கிட்டையும் பணம் இருக்குமா” என்று வக்கிரமான வார்த்தைகளை விடவும் கொதித்து போனவள், அதே கோபத்துடன் அவனை ஓங்கி அறைந்தாள்.
பின்பு வேகமாக கீழே தள்ளிவிட்டு விட்டு, தன்னை நெருங்க வந்த அவனது கூட்டாளியையும் விக்ரம் மீதே கீழே தள்ளிவிட்டு விட்டு, வேகமாக ஓட முயன்றாள் அஜூதியா.
அப்பொழுது விக்ரமோ அஜூதியா சுதாரிப்பதற்குள் தன் கரம் நீட்டி அவள் அணிந்திருந்த லெகங்காவின் தவனியை பிடித்து இழுத்து விட, அவன் இழுத்த வேகத்தில் ப்ளவுசோடு பின் செய்யப்பட்டிருந்த தாவணி, ப்ளவுசை சற்று கிழித்து விட்டு அவன் கையோடு சென்று இருந்தது.
அஜூதியா நடுங்கி விட்டாள்.
சுற்றும் முற்றும் உதவிக்கு யாரவது இருக்கிறார்களா என்று பார்த்தாள்.
யாரும் இல்லை.
ராவணனை தான் மனம் தேடியது,
இருந்தாலும் அவனை எண்ணிக்கொண்டு இருக்கும் நேரம் இது அள்ளவே, எப்படியாவது தப்பித்தாக வேண்டும் என்பதை கருத்தில் வைத்து வேகமாக ஓடினாள் அஜூதியா.
விக்ரமோ அடிவாங்கியதில் இன்னும் கோபம் கொண்டவன்,
“உள்ள போய்ட போறா போய் காரை எடுத்துட்டு வா” என்றவன் அவளை துரத்திச்சென்றான்.
மண்டபத்தில் இருந்த பாட்டு சத்தத்தில் யாருக்கும் இவள் கத்துவது கேட்கவில்லை, யாரும் இல்லை என்கிற பதற்றத்திலேயே எங்கே ஓடுவது என்று தெரியாது ஓடினாள்.
பயத்தில் மூச்சு ஒரு பக்கம் வாங்க, இதில் அணிந்திருந்த ஒரு செருப்பு வேறு காலை விட்டு நழுவியிருக்க, மறு செருப்பையும் உதறிவிட்டு ஓடியவளுக்கு மேடு பள்ளம் நிறைந்த பாதை வேறு காயத்தை கொடுத்திருக்க, வலி உயிர் போனது.
பின்பு ஒருக்கட்டத்திற்கு மேல் முடியாது போக, அப்பொழுது தன் கண்ணில் பட்ட ஒரு மறைவுக்கு பின்னால் சென்று வேகமாக ஒளிந்து கொண்டவள் கையில் கிடைத்த கனமான கட்டையை தன் இருக்கரங்களால் இறுக்கி பிடித்து கொண்டு பயத்தில் நடுங்கியபடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டு நின்றிருந்தாள்.
உதறிகொண்டிருந்த உதடோ, “ராவணா ராவணா” என்ற அவன் பெயரையே ஜெபம் போல சொல்லிக்கொண்டிருக்க, அப்பொழுது யாருடைய காரமோ வந்து அவளது தோளை தொட்ட கணம், பயத்தில் கட்டையை ஓங்கியவள், தன் எதிரே நின்றிருந்த ராவணனை பார்த்து வேகமாக துடிக்கும் இதயத்தை அழுத்தமாக பிடித்துக்கொண்டு மூச்சு வாங்க தரையில் மடிந்தமர்ந்து ஒ வென்று கதறி விட, அவள் நிலையை பார்த்த நொடியே தன்னவளுக்கு என்ன நடந்திருக்கும் என்பது ராவணனுக்கு புரிந்து விட ராவணனின் முகம் கோபத்தில் கன்றி சிவந்துவிட்டது.
கிழிந்திருந்த அவளது மேலாடையை பார்த்தவன் வேகமாக தன் மேல் சட்டையை கழற்றி தோள் மீதும் போர்த்தி விட்டவன்,
“தியா” என்று அழைத்தான்.
அஜூதியாவோ நிமிர்ந்து பார்க்காது அழுது கொண்டிருந்தாள் .
“யாரு” பதில் இல்லை. அவள் முன்பு அப்படியே மண்டியிட்டு அமர்ந்த ராவணன் அவளது வதனத்தை மென்மையாக பற்றி, அஜூதியாவின் கலங்கிய விழிகளை பார்த்து,
“சொல்லு மா” என்ற நொடி அவள் அனைத்தையும் சொல்லி முடிக்கவும், விக்ரம் தன் ஆளுங்களுடன் காரில் வரவும் சரியாக இருக்க,
ருத்ரமூர்த்தியாக ராவணனை அங்கே கண்டதுமே விக்ரமின் நெஞ்சில் நீர் வற்றிப் போனது.
“டேய் வண்டிய திருப்புங்க டா” தன் அடியாட்களை விக்ரம் பணிக்க,
“விக்ரம்” என்று பற்களை கடிதப்படி கர்ஜித்த ராவணனின் குரலில் பதறியவர்கள் அந்த குருகிய பாதையில் தங்களின் வண்டிய திருப்ப திணறும் பொழுதே அவர்களை ராவணன் நெருங்கி இருக்க, தப்பித்து ஓட பார்த்த விக்ரமின் சட்டையை பற்றி கீழே தள்ளிய ராவணன் அதன் பிறகு அவனை வைத்து பார்க்க வில்லை.
“ஏதோ கேட்டியாமே என்கிட்ட கேளுடா” விக்ரமின் வலது கையை முறுக்கி ராவணன் கேட்ட விதத்தில், விக்ரமின் அலறல் சத்ததோடு அவன் கரம் வலு இழந்து தொங்க, விக்ரம் தரையில் சரிந்தான்.
“எப்படி நீ அவ மேல கை வைக்கலாம் ஹான் ” என்ற கர்ஜனையோடு விக்ரமை தாக்கியவன், விக்ரமின் உடலில் உயிர் மட்டும் மிச்சம் இருக்கும் நிலையில் தன் துப்பாக்கியை எடுத்த கணம், விக்ரமின் அடியாட்கள் மூலம் விடயம் கேள்விப்பட்டு ராவணனின் சகாக்கள், வரத பெருமாள் மற்றும் வேலாயுதம் அனைவரும் அங்கே வந்து விட,
“ராவணா வேண்டாம்” என்று வேலாயுதம் தடுக்க வரதன் வந்து தன் தமையனை தாங்கி பிடிக்க, காட்டாற்றுக்கு அணைகட்ட முடியுமா என்ன?
வேலாயுதத்தை ராவணன் ஒரு பார்வை பார்க்க தன் பிடியை தளர்த்திவர்,
“பேசிக்கலாம் ராவணனா” என்ற எதுவும் அவன் காதில் விழவில்லை.
துப்பாக்கியின் ட்ரிகரை அவன் அழுத்த முனைந்த நொடி, முன்னிருந்து ராவணனை மார்போடு அணைத்திருந்தாள் அஜூதியா.
அவள் அணைத்த நொடி ராவணனின் கரம் தானாக கீழே இறங்கியிருக்க, அவளோ அவனை அணைத்த வாக்கிலே,
“ப்ளீஸ் வேண்டாம்” என்றவள், அழுகையோடு, “என்னை இங்க இருந்து கூட்டிடு போங்க” என்க, துப்பாக்கியை மீண்டும் தன் முதுகில் சொருகியவன் தேவராஜை ஒரு பார்வை பார்க்க, அடுத்த சில நிமிடத்தில் அங்கே ராவணனின் கார் வந்தது.
பின்பு அஜூதியாவுடன் காரில் ஏறிக்கொள்ள, கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டது.
ராவணனின் வெற்று மார்புக்குள் தன் முகத்தை புதைத்து கொண்டு உடல் நடுங்க அவள் அழ, அவனது கை தானாக அவளை அணைத்துக் கொண்டது.
@@@@@
கார் நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.
நேரம் ஆக ஆக அழுகையும் நடுக்கமும் குறைந்திருக்க, கொஞ்சம் கொஞ்சமாக ராவணனின் அணைப்பில் இருந்து வெளியே வந்த அஜூதியா
சில நேரம் கழித்து தேவராஜிடம்,
“தேவா அண்ணா கொஞ்சம் வண்டிய நிப்பாட்டுங்க” என்றாள்.
தேவாவோ ராவணனை பார்க்க, அவன் செய்கை கொடுத்ததும் வண்டியை ஓரமாக நிப்பாட்டியவன்,
“என்னாச்சு மா” என்று வினவினான்.
அவளோ வண்டியை விட்டு கீழே இறங்கியவள்,
“நீங்க போங்க அண்ணா நான் போய்டுவேன்” என்க, பல்லை கடித்தபடி உடனே காரில் இருந்து இறங்கிய ராவணன்,
“தியா உள்ள வா” என்றான்.
நிமிர்ந்து அவன் விழிகளை பார்த்த அஜூதியாவோ, “வேண்டாம்” என்றாள்.
“என்ன வேண்டாம்” அவள் விழிகளை அழுத்தமாக பார்த்தப்படி வினவினான் ராவாணன்.
அவள் கண்கள் மீண்டும் கலங்கின.
“வேண்டாம்” கொஞ்சம் சத்தமாகவே கூறினாள்.
இருவரின் விழிகளும் மோதிகொண்டன,
“அதான் ஏன்?”
‘எதை வேண்டாம் என்கிறாள்? என்னையா? நான் வேண்டாமா அவளுக்கு?’ அந்த எண்ணமே அவனுக்குள் ஏதோ ஒன்றை அறுத்தெறிய, நெஞ்சை அழுத்திக்கொண்டபடி கோபத்துடன் கேட்டான்.
“முடியல வலிக்குது” என்று அழவும் அவளை பார்த்தபடியே அவளது கரத்தை பிடித்த ராவணன்,
“உள்ள வா தியா” என்று சொல்லவும் கண்ணீருடன் அவன் பிடித்திருந்த தன் கரத்தையும் அவன் விழிகளையும் ஆழ்ந்து பார்த்தவள்,
“இப்போ பிடிச்ச என் கைய இனி எப்பவும் விட மாட்டன்னா மட்டும் சொல்லு நான் வர்றேன். இல்லை பாதியிலேயே போய்டுவன்னா. வேண்டாம் நீ போ நானே போயிடுறேன். என்னால முடியல ராவணா” என்று அழவும்,
அவளது கரத்தை பற்றியிருந்த படி, அப்படியே தன்னை நோக்கி அவளை இழுத்தவன் இனி உன்னை விடமாட்டேன் என்பது போல தன்னவளை தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக்கொள்ள, அவனது வெற்று மார்பில் முகம் புதைத்துக் கொண்டு அழுதாள் அஜூதியா.