அலையென குதிக்கிறேன் உலையென கொதிக்கிறாய் 2
“மேம்?” என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து ஆர்னா கண் விழித்தாள்.
ஒரு நொடிக்குப்பிறகு தான் இருக்கும் நிலமை புரிந்தது. உடல் வலித்தது. இன்னும் காரில் தான் அமர்ந்து இருக்கிறாள்.
நன்றாக தூங்கியிருக்க வேண்டும். அவளுக்கு கிடைத்த ஒரே வரம் இந்த தூக்கம் தான்.
அவள் அதிகம் யோசிக்கும் முன்பு “மேம்” என்று மீண்டும் அழைத்தான்.
கார் கதவை திறந்து அவன் காத்து நிற்க மெல்ல உடலை அசைத்து வலியை தாங்கிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்து வெளியே பார்த்தாள்.
பொழுது விடிந்து விட்டது. பல மணி நேரம் கடந்து இருக்கும். சூரியன் உட்சத்தில் அமர்ந்து பூமியை எரித்துக் கொண்டிருந்தது.
பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவளது சிறைக்கு வந்து விட்டாள். நினைத்ததும் தொண்டை அடைக்க மெல்ல இறங்கினாள்.
நைட்டி அணிந்து அவள் பகலில் வெளியே வந்தது இல்லை. அடுத்தவர்கள் முன்பு இப்படியே நடக்க வேண்டுமோ? என்று சுற்றிலும் பார்த்தாள்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆட்கள் இல்லை. அந்த மாளிகையில் அவளை கேட்க ஆளே இல்லை.
கார் கதவை பிடித்துக் கொண்டிருந்தவன் நேற்று அங்கே வந்தவனில் ஒருவன்.
அவனை விட்டு நகர்ந்தவள் சோர்ந்து போன கால்களோடு வீட்டின் பின் பக்கம் நடந்தாள். வீட்டின் முன் பாதையை பயன்படுத்த அவளுக்கு அனுமதி இல்லை.
அதே வீடு. இல்லை. அதே சிறை. அவளும் அதில் மாறாத கைதி.
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இதயம் பாரமாக கனத்தது. இந்த சிறையிலிருந்து தப்பித்து விட்டதாக எவ்வளவு சந்தோசப்பட்டாள்?
எல்லாம் வெறும் மூன்று மாதக்கனவு தான். இதோ கலைந்து போனது. மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி விட்டாள்.
வீட்டின் பின் வாசலை அடைந்தவள் திறக்கப்பார்க்க பூட்டியிருந்தது.
உடனே நினைவு வந்தது. கைரேகை வைக்காமல் கதவு திறக்காது என்று. உடனே அவளது கட்டை விரலை கை ரேகை இயந்திரத்தின் மீது வைத்து அழுத்த சிவப்பாக ஒரு எச்சரிக்கை வந்தது.
கதவு திறக்கவில்லை.
ஆச்சரியத்தோடு மீண்டும் வைத்தவளுக்கு மீண்டும் ஒரு முறை மனம் உடைந்தது.
அவளது கைரேகை பதிவு அதில் அழிந்து விட்டது. அல்லது அழித்து விட்டானோ என்னவோ?
கதவை தட்டினாள். சில நிமிடங்கள் வரை யாருமே வரவில்லை. கொளுத்தும் வெயிலில் செருப்பு கூட இல்லாமல் நிற்பது மிகவும் கடினமாக இருந்தது.
திடீரென கண்ணாடிக்கு மறுபக்கம் ஒரு உருவம் தெரிந்தது. உடனே கதவு திறக்கப்பட்டது.
அங்கே நின்றிருந்த ஜெனிஃபர் ஆர்னாவை அளவோடு பார்த்தார்.
ஆர்னாவை பற்றி கொஞ்சமாவது அக்கறை இருப்பவர் அவர் மட்டும் தான். ஆனால் அவளை பார்த்ததால் அவர் ஒன்றும் சந்தோசப்படவில்லை.
இந்த வீட்டுக்கு அவள் திரும்பி வருவது என்பது சந்தோசமான காரியமா?
அவர் வழி விட்டதும் தலை குனிந்து உள்ளே சென்றாள்.
வேகமாக நடந்தவள் உடனே நின்றாள். கைரேகை போனது போல் அவளது அறையும் போய் விட்டால்?
“என் ரூம்.. அது இன்னும் இருக்கு தான?” என்று கேட்க ஜெனிஃபர் தலையாட்டி வைத்தார்.
அதன் பிறகு நிற்காமல் ஓடினாள். அவளது அறையை அடைந்து வேகமாக கதவை திறந்தவள் உள்ளே சென்று கதவை அடைத்து விட்டு தரையில் அமர்ந்து விட்டாள்.
அறையில் எந்த மாற்றமும் இல்லை. அவள் எப்படி விட்டுச் சென்றாளோ அப்படியே இருந்தது.
கதவில் சாய்ந்து காலை கட்டிக் கொண்டவள் பார்வை அந்த அறையை சுற்றி வட்டமிட்டது. அவளது வாழ்வின் இருண்ட பக்கம் தொடங்கிய இடம் இது தான். இன்று வரை அது அவளை துரத்திக் கொண்டே இருக்கிறது.
கால்களில் முகத்தை புதைத்தவளுக்கு அத்தனை நினைவுகளும் ஒன்றாக வந்து அலைமோத தாங்க முடியாமல் கண்ணீர் விட்டாள்.
சிறிதாய் ஆரம்பித்த அழுகை பெரிதாக உருவெடுக்க கதறி அழுதாள்.
கதவின் அருகே வந்த ஜெனிஃபர் அவளது அழுகை சத்தம் கேட்டு அப்படியே நின்றார்.
மூன்று மாதங்களாக இந்த அழுகை குரல் கேட்காமல் அவரது நாட்கள் எவ்வளவோ நிம்மதியாக இருந்தது. மீண்டும் கேட்ட போது நெஞ்சம் வலித்தது. அவளிடம் பேச நினைத்து வந்தவர் தொந்தரவு செய்யாமல் திரும்பிச் சென்று விட்டார்.
ஆர்னா எதையும் அறியாமல் கதறி அழுது கொண்டிருந்தாள். ஆறு வருடங்களுக்கு முன்பு. அவளது தந்தை உலகை விட்டுச் சென்ற அன்று ஆரம்பித்த அவளது சோதனை காலம் இன்னும் முடிவில்லாமல் தொடர்கிறது.
அன்று அவளது தந்தை இறந்து போன செய்தி கேட்டு அலறிக் கொண்டு ஓடியவளை ஒரே பிடியாக பிடித்து ஒரு அறையில் போட்டு பூட்டிய சூர்யவன்ஷி அவள் எவ்வளவு கதறியும் வெளியே விடவில்லை.
அவளது தந்தைக்கு அவள் கடைசி விடை கொடுக்கவில்லை. அன்று சூர்யவன்ஷி ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று அவளுக்கு புரியவே இல்லை.
அன்று ஆரம்பித்த பழக்கம். அதிகமாய் அழுதாலும் அதிகமாய் சோகத்தை சுமந்தாலும் மணிக்கணக்காக தூங்கி விடுவாள். அவளது தூக்கம் எல்லோருக்கும் வித்தியாசமாக தெரியும்.
இவ்வளவு கஷ்டத்திலும் எப்படி தூங்க முடியும்? என்று அவளை ஏளனமாக பார்ப்பார்கள். அவளுக்குத்தான் தெரியும். தூக்கமும் கண்ணீரும் இல்லா விட்டால் அவள் என்றோ பைத்தியம் பிடித்து தற்கொலை செய்திருப்பாள் என்ற உண்மை.
அன்று சூர்யவன்ஷி அவளை அடைத்து வைத்து விட்டுச் சென்ற போது அழுது அழுது உறங்கிப்போயிருந்தாள்.
மறுநாள் தான் சூர்யவன்ஷி வந்து அவளை எழுப்பினான். அவள் முகத்தில் தண்ணீரை ஊற்றி அவன் எழுப்பிய போது அவளுக்கு எதுவுமே நினைவில்லை.
பதறியடித்து எழுந்தவள் “டேய் லூசு.. தண்ணிய ஏன்டா ஊத்துன?” என்று கொந்தளித்து கத்தினாள்.
அடுத்த நொடி அவன் தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தை சுவற்றில் எறிய அது எழுப்பிய சத்தத்தில் பயந்து விட்டாள்.
“எந்திரி” என்றதும் பயத்தோடு பார்த்தவள் மனம் தந்தையை தேடியது.
“அப்பா.. அப்பா எங்க..?” என்று கேட்கும் போது நேற்று நடந்தது நினைவு வர உரைந்து போனாள்.
சூர்யாவோ நக்கலாக பார்த்து வைத்தான்.
“உன் அப்பா செத்து எரிச்சு சாம்பலையும் கரைச்சாச்சு. அது வரை நீ நிம்மதியா தூங்கிட்டு இருந்த”
பயந்து போய் பார்த்தவள் “நீ.. நீ பொய் சொல்லுற.. அது வெறும் கனவு.. ப்பா.. அப்பா.. இங்க வாங்க..” என்று வேகமாக எழுந்து சூர்யாவை தாண்டி ஹாலுக்கு ஓடினாள்.
அங்கு சூர்யாவிடம் வேலை செய்யும் ஆட்களை தவிர வேறு யாருமில்லை.
“ப்பா.. அப்பா..” என்று அந்த சிறிய வீட்டில் அவள் அங்கும் இங்கும் தேடி ஓட சூர்யா வேகமாக வந்து அவள் கையைப்பிடித்து வாசலுக்கு இழுத்துச் சென்றான்.
ஆர்னா கையை உதறினாள். கண்ணீர் அவள் முகத்தை நனைக்க வலியில் கை சிவந்தது.
“விடுடா.. ப்பா.. எங்க இருக்கீங்க.. விடு..” என்று அலறியவளை கொஞ்சமும் மதிக்காமல் இழுத்துச் சென்று காரில் தள்ளினான்.
அவள் துள்ளி இறங்க பார்க்க அவனும் ஏறிக் கொண்டான். அடுத்த நொடியே கார் கிளம்பி விட ஆர்னா கத்தினாள்.
“எங்கடா கூட்டிட்டு போற? எனக்கு எங்கப்பா வேணும்” என்று அவள் அழ அவளை இமைக்காமல் பார்த்தானே தவிர பதில் சொல்லவில்லை.
கார் அவள் வீட்டிலிருந்து அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தது.
காரை விட்டு மீண்டும் அவளை தரதரவென இழுத்துக் கொண்டு சென்றான்.
ஆர்னா இப்போது போராட முடியாமல் இழந்த தந்தைக்காக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
அவளை இழுத்து வந்து தரையில் தள்ளியவன் நேராக சென்று சோபாவில் அமர்ந்து இன்டர்காமை எடுத்தான்.
“இன்னும் ரெண்டு நிமிஷத்துல எல்லா ஸ்டாஃப்பும் என் முன்னாடி இருக்கனும்” என்று விட்டு வைத்து விட்டான்.
இரண்டு நிமிடங்களுக்குப்பிறகு அனைவரும் அவன் முன்னால் அமைதியாக நிற்க ஆர்னா மட்டும் தரையில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு உலகத்தில் என்ன நடந்தாலும் கவலை இல்லை. அவளது ஒரே உறவை இழந்து அனாதையாகி விட்டாள். அது தான் அவளுக்கு அப்போது முக்கியமாக பட்டது. இன்னும் சில நிமிடத்தில் அவளது வாழ்வு தலைகீழாக மாறப்போகிறது என்று தெரியாமல் முடிந்ததை நினைத்து அழுதாள்.
அவள் கண்ணீரை உணர்ச்சியே இல்லாமல் பார்த்திருந்தவன் திரும்பி நின்றிருந்த அத்தனை வேலைக்கார்களையும் பார்த்தான்.
“இனிமே இவ இங்க தான் இருப்பா. இவ இந்த வீட்டுக்கு விருந்தாளி இல்ல. அதே நேரம் வேலைக்காரியும் இல்ல. இங்க இருக்கப்போற ஒரு கைதி”
கடைசி வார்த்தை காதில் விழுந்ததும் அழுகையை மறந்து ஆர்னா அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள்.
“இவளுக்கு சாப்பாடு மட்டும் இல்ல.. தண்ணி கொடுக்கனும்னா கூட என் கிட்ட கேட்காம யாரும் கொடுக்கக்கூடாது. இவ வீட்டை விட்டு வெளிய போகக்கூடாது. மீறி தப்பிச்சா தண்டனை உங்களுக்குத்தான்.” என்றவன் பேச்சு முடிந்தது என்று கையாட்டி வைத்தான்.
எல்லோரும் அதிர்ந்தாலும் அவனை எதிர்க்காமல் உடனே திரும்பிச் செல்ல ஜெனிஃபர் மட்டும் ஆர்னாவை பாவமாக பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்தார்.
அன்று ஆரம்பித்த ஆர்னாவின் சிறை வாழ்வு இன்று வரை தொடர்ந்தது.