அத்தியாயம் 17
அடுத்த நாள் காலையில் நீலா எழுந்த சமயம், ரிஷியை காணவில்லை…
நேரத்துக்கே எழுந்து இருப்பான் போலும்….
பெண்ணவளும் குளித்து விட்டு, பச்சை நிற புடவை அணிந்து வெளியே வர, அங்கே ஹாலில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டு இருந்தான் ரிஷி…
அவளை பார்த்ததுமே, “குட் மார்னிங்” என்றான்.
அவளும், ‘இப்போ இது ஒன்னு தான் குறைச்சல்’ என்று முணுமுணுத்து விட்டு, “குட் மார்னிங்” என்று மென் புன்னகையுடன் சொல்லி சமையலறைக்குள் செல்ல, அங்கே விசாலாட்சி தோசை சுட்டு வைத்து இருந்தார்.
“அத்தை, நானே சமைச்சு இருப்பேனே” என்று சொன்ன நீலாவிடம், “உன்னை கண்ட மேனிக்கு வேலை வாங்க கூடாதுன்னு ரிஷி சொல்லி இருக்கான்” என்றார் சிரித்தபடி…
“இதெல்லாம் பெரிய வேலையா?” என்று கேட்டபடி அவள் புடவையை இழுத்து சொருகியவள், “நீங்க காஃபி குடிச்சிடீங்களா?” என்று கேட்க, “ம்ம் நான் குடிச்சிட்டேன், உனக்கு போட்டு வச்சு இருக்கேன்” என்று காஃபியை நீட்ட, அதனை வாங்கிக் கொண்டே, ஹாலுக்குள் வந்து அவன் இருந்த சோஃபாவில் ஒரு இடம் விட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள்…
அவனோ அவளை கவனிக்காமல் அலைபேசியை பார்த்துக் கொண்டு இருக்க, “இன்னைக்கு லீவா?” என்று அவளே பேச்சு கொடுத்தாள்.
அவனும், “ம்ம் ஒரு வாரத்துக்கு கல்யாணம்னு சொல்லி லீவு போட்டேன்… சும்மா இருக்க சலிப்பாவும் இருக்கு” என்று சொல்ல, “அப்புறம் எங்கயாச்சும் போகலாமா?” என்று அவளே கேட்டாள்.
அவனுடன் நேரம் செலவிட பெண்ணவளுக்கு திகட்டுமா என்ன?
“ம்ம் போகலாமே, ஆனா எங்க போறது?” என்று கேட்க, “பக்கத்து ஊர்ல கார்னிவெல் போட்டு இருக்காங்களாம், நீலாவை அழைச்சு போய்ட்டு வா” என்றபடி சமயலறைக்குள் இருந்து வந்தார் விசாலாட்சி…
“நீங்களும் வாங்க அத்தை” என்று சொன்ன நீலாவிடம், “இன்னைக்கு டியூட்டி இருக்கும்மா” என்று சொல்லி விட்டு அவர் வேலைக்கு தயாராக ஆரம்பித்து விட, ரிஷியோ, “சாப்பிட்டு கிளம்பிடலாம்” என்று சொன்னவன், சாப்பிட செல்ல, பெண்ணவளும் அவனுடன் உட்கார்ந்து சாப்பிட்டவள், அவனுடனேயே கார்னிவெல்க்கு காரில் கிளம்பி இருந்தாள்…
காரில் செல்லும் போது வெளியே பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தவளது விழிகள், மெதுவாக ஸ்டீரிங் வீலை பற்றி இருந்த அவனது நரம்போடிய கையில் படிந்து மீண்டன…
பச்சை நிற டீ ஷேர்ட் அணிந்து இருந்தான்…
தன்னை மீறி பெண்ணவளுக்குள் ஒரு பூகம்பம்…
எப்படி ஆரம்பிப்பது? எப்படி பேசுவது என்றே தெரியவில்லை…
அவனாக அவளை அணுக மாட்டான் என்று நன்றாகவே தெரியும்…
அவளாக மனதை வெளிப்படுத்தினால் தான் உண்டு…
காதலிக்கவில்லை என்றால் கூட அவள் நிதானமாக இருப்பாள்.
காதலித்து விட்டாளே…
தடுமாற்றமாக இருந்தது…
பெரிதாக அவன் பேசவில்லை…
ஒரு வழியாக கார்னிவெல் நடக்கும் இடத்துக்கும் வந்து விட்டார்கள்.
அந்த இடமே கலகலவென தான் இருந்தது…
அங்கே ராட்டினங்கள் சுழன்று கொண்டு இருக்க, “அதுல போகலாமா ரிஷி?” என்று நீலா கேட்க, “உனக்கு பயம் இல்லன்னா போகலாம்” என்றான்.
அவளும், “எனக்கு ஒன்னும் பயம் இல்ல” என்க, டிக்கெட்டை வாங்கிய ரிஷியும் அவளுடன் ஏறி அமர்ந்தான்.
சற்று நேரத்தில் ராட்டினமும் சுழல ஆரம்பித்து விட்டது…
முதலில் தைரியமாக தான் இருந்தாள் பெண்ணவள்.
ஆனால் ஒரு கட்டத்தில் பதட்டமாகி, அவன் டீ ஷேர்ட்டை இறுக பற்றிக் கொள்ள, அவனோ சத்தமாக சிரித்தபடி, “பயம் இல்லன்னு சொன்ன?” என்று கேட்டான்.
“பயம் வருது, நான் என்ன பண்ணட்டும்?” என்று சொன்னவளுக்கு இதயமே நின்று விடும் போல உணர்வு…
இயல்பாகவே அவனை நெருங்கிக் கொண்டாள்.
அவனும் பயந்து தன்னை பற்றிக் கொள்ளும் பெண்ணை தள்ளி விட முடியுமா என்ன?
அவள் கையை இறுக பற்றி இருந்தான்…
அதனை தொடர்ந்து, ராட்டினமும் நின்று விட, “தெரியாம ஏறிட்டேன், இனி ஜென்மத்துக்கும் ஏற மாட்டேன்” என்று சொன்னபடி இறங்கிய நீலா, அவன் கையை இயல்பாக பற்றி இருக்க, அவன் ஒரு கணம் அவள் பற்றி இருந்த கையை புருவம் சுருக்கி பார்த்தாலும், கையை அவளிடம் இருந்து அகற்றவில்லை…
அதனை தொடர்ந்து, “வாடி ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்” என்று சொன்ன ரிஷி அவளை ஐஸ்க்ரீம் கடைக்கு அழைத்து சென்றான்…
நீலாவோ, “ரிஷி உங்களுக்கு குழந்தைங்க பிடிக்குமா என்ன?” என்று ஆரம்பித்தாள்…
அப்படியாவது ஆரம்பிக்கலாம் என்று தான்.
அவனோ, “ம்ம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்றவனை ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே விழிகள் சிவக்க ஏறிட்டு பார்த்தவன், “பொண்ணு பிடிக்குமா? பையன் பிடிக்குமா?” என்று கேட்டாள்.
அவனோ, “பொண்ணோ பையனோ, குழந்தைங்கன்னா பிடிக்கும்” என்று சொன்னவனுக்கு இப்போது ஏதோ புரிவது போல இருந்தது…
தன்னை மீறி இதழ்களுக்குள் ஒரு சிரிப்பு… அடக்கிக் கொண்டே ஐஸ்க்ரீமை சாப்பிட, அவளோ மனதுக்குள், ‘எப்படி சொல்றதுன்னு தெரியலயே’ என்று நினைத்தபடி, “எனக்கும் பிடிக்கும்” என்றாள்.
இப்போது புரிந்து விட்டது அவனுக்கு…
ஆனாலும் புரியாத போலவே, “ஓஹோ” என்றான்.
அவளுக்கு தான் சப்பென்று ஆகி விட்டது…
மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டே, “சரி நம்ம கிளம்பலாமா?” என்று கடுப்பாக கேட்க, “கிளம்பலாமே” என்று சொல்லிக் கொண்டு கிளம்பி இருந்தான்…
அவளோ சேலை தலைப்பை திருகிக் கொண்டே யோசனையுடன் அமர்ந்து இருக்க, அவளை கடைக்கண்ணால் பார்த்தபடி தான் வண்டியை ஓட்டினான் ரிஷி…
அவள் தவிப்பு இப்போது அவனுக்கு சிரிப்பாக இருந்தது…
அதனை விட அவளது மாற்றம், மன நிறைவாக இருந்தது…
ஒரு வழியாக வீட்டுக்கும் வந்து விட்டார்கள்…
அன்று இரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த தருணம் அது…
நீலாவுக்கு பொறுமை போய் விட்டது…
“இன்னைக்கும் இரவுக்கு தூங்கிடுவீங்களா?” என்று கேட்டே விட்டாள்.
சாப்பிட்டுக் கொண்டு இருந்தவனுக்கு சட்டென புரையேற, தலையை தட்டிக் கொண்டே, “நைட்ன்னா தூங்க தானே வேணும்” என்றான் சிரிப்பை அடக்கியபடி.
அவளோ பெருமூச்சுடன் சாப்பிட, அவளை கடைக்கண்ணால் பார்த்தவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தாலும் அடக்கிக் கொண்டே சாப்பிட்டான்…
அதனை தொடர்ந்து அறைக்குள் அவன் செல்ல, பெண்ணவள் கட்டிலை சரி செய்து கொண்டு இருந்தாள்.
அவனுக்கு ஒரு பக்கம் சிரிப்பு தான்…
ஆனாலும், “சரி தூங்கலாமா?” என்று கேட்க, “க்கும்” என்று மனதுக்குள் நெடித்து விட்டு, அவனை ஏறிட்டு பார்த்தவள், “ரிஷி, நான் ரொம்ப நல்லா இருக்கேன்” என்றாள்.
அவனோ, “பார்க்கவே தெரியுது… ரொம்ப ஹெல்தியா இருக்க” என்றான்…
‘நாசமா போச்சு’ என்று வாய்க்குள் முணுமுணுத்தவளோ, “இப்போவே எதுக்கு தூங்கணும், பேசிட்டு இருக்கலாமே” என்றாள்.
அவனோ, “பேசுறதுக்கு என்ன இருக்கு?” என்று கேட்க, அவளுக்கு நெற்றியை எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது…
“சரியான டியூப் லைட்” என்று வெளிப்படையாகவே திட்டி விட்டு, சிணுங்கிக் கொண்டே அவனை தாண்டி செல்ல, அவள் கையை பற்றி இழுத்து, தன்னுடன் நெருக்கிக் கொண்டே, அவள் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவன், “யாருடி டியூப் லைட்?” என்று கேட்டான்.
பெண்ணவள் பதில் சொல்ல முதலே, அவள் இதழ் அவன் வசமானது…
ஆம், ஆழமாக அழுத்தமாக பெண்ணவள் இதழ்களை கவ்வி இருந்தான் இந்த கண்ணாளன்…
அவளும் அவன் முத்தத்துக்கு பதில் முத்தம் வழங்க, அதன் பிறகு கேட்கவும் வேண்டுமா?
கட்டிலில் அரங்கேறியது அவர்களது கலவி யுத்தம்…
ஆடைகள் அநாதரவாக, அவளை அவன் மென்மையாக ஆட்கொண்டான்.
வெட்கப்பட்டு சிணுங்கி அவனையே கட்டிக் கொண்டாள் பெண்ணவள்.
அவளை ஆட்கொண்டு விட்டு அவன் விலகி படுக்க, மூச்சிறைக்க விட்டத்தை பார்த்துக் கொண்டே படுத்து இருந்த பெண்ணவளோ, நாவினால் அவன் தீண்டிய இதழ்களை ஈரமாக்க, அவளை திரும்பி பார்த்து மென்மையாக புன்னகைத்த ரிஷியோ, “எப்படி ஃபீல் பண்ணுன?” என்று கேட்டான்.
கூச்சமாகி விட்டது பெண்ணவளுக்கு, “எனக்கு சொல்ல தெரியல” என்று சொல்லிக் கொண்டே, அவன் மார்பில் அடைக்கலம் புகுந்து கொள்ள, அவளை இறுக அணைத்துக் கொண்டான்…
அவளை விட அவனுக்கு தான், மனதில் அப்படி ஒரு பூரிப்பு…
எங்கே அவளை மீட்டெடுக்க வேண்டி இருக்குமோ என்று அவன் தடுமாறி தான் தள்ளி நின்றான்.
ஆனால் அவள் இப்படி அவன் கரத்தில் உருகி குழைவாள் என்று தெரிந்து இருந்தால் நேற்றைய நாளை வீணாக்கி இருக்க மாட்டானோ என்னவோ…
சில மாதங்கள் கழித்து…
அன்று மந்தாகினிக்கு பிறந்த நாள், எல்லாரும் ராவணன் மற்றும் மோகினி வீட்டில் தான் அவளது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள்.
தந்தையுடன் கொண்டாடும் முதல் பிறந்த நாள் ஆயிற்றே…
ராவணன் ஆடு வெட்டி ஊருக்கே விருந்து வைத்து இருந்தான்…
தனது மேடிட்ட வயிற்றை வருடிக் கொண்டே, கண்ணாடியில் தன்னை பார்த்து இருந்தாள் மோகினி…
ஆம் இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டு இருக்கின்றாள்…
அவள் தோற்றம் இன்னுமே மெருகேறி இருந்தது…
அப்படியே திரும்பி பார்க்க, அங்கே ராவணன் தான் மந்தாகினிக்கு, காலில் கொலுசு மாட்டிக் கொண்டு இருந்தான்.
குழந்தையோ கட்டிலில் அமர்ந்து அவன் தொடையில் காலை தூக்கி கம்பீரமாக வைத்துக் கொண்டே, “எவ்ளோ நேரம் பா?” என்று புலம்ப, “இதெல்லாம் இப்போ தான் பழகிக்கிறேன்” என்று அவன் வாய்க்குள் புலம்ப, மோகினியோ சத்தமாக சிரித்தபடி, “கொடுங்க, நான் போட்டு விடுறேன்” என்றாள்.
“அது ஒன்னும் தேவையில்ல, எங்களுக்கு தெரியுமாக்கும்” என்று சொன்ன ராவணன் முக்கி முனகி ஒரு வழியாக கொலுசை போட்டு விட, மந்தாகினி காலை அடித்துக் கொண்டே அந்த சத்தத்தை பரவசமாக கேட்டபடி வெளியே ஓடி சென்றாள்.
அதனை தொடர்ந்து ராவணன் தனது ஆறடி உயரத்துக்கும் எழுந்து நின்றான்.
கருப்பு நிற ஷேர்ட் மற்றும் வெண்ணிற வேஷ்டி அணிந்து இருந்தவனை பார்த்தவளோ, “இன்னைக்கும் கருப்பு தானா?” என்று கேட்க, அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “அத மாத்திக்கிறதா இல்ல” என்று சொன்னபடி, அவள் இதழில் இதழ்களை பதித்து இருந்தான்.
இதே சமயம், ஜெகனும் காந்தாவும் மகன் ஆதவ்வுடன் வந்திருந்தார்கள்…
ஜெகனுக்கு பின்னே ஒளிந்து கொண்ட ஆதவ்வோ எட்டி எட்டி மந்தாகினியை பார்க்க, ஜெகனோ, “என்னடா இப்போவே சைட் அடிக்கிற? அவ அம்மா அப்பா யாருன்னு தெரியும் ல?” என்று கேட்க, “அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே” என்றான் அவன்…
அதனை கேட்டு வாயில் கையை வைத்த காந்தாவோ, “முளைச்சு மூணு இலை விடல, பேசுற பேச்சை பாரு” என்க, அங்கே வந்த மோகினியோ, “என்ன காந்தா என்ன சொல்றான் உன் பையன்?” என்று கேட்டாள்.
“ஆஹ் உன் பொண்ண தான் எட்டி எட்டி பார்த்துட்டு இருக்கான், எப்போ லத்தியால அடி வாங்க போறானோ” என்று புலம்பிக் கொண்டே செல்ல, மோகினியின் விழிகள் அங்கே நின்ற ஆதவ்வில் படிந்தது…
அவனோ இடையில் கையை வைத்துக் கொண்டே மோகினியை பார்த்தவன், என்ன என்கின்ற தோரணையில் தலையை அசைக்க, “உனக்கு பயமே இல்லையாடா?” என்று கேட்டாள் மோகினி…
“பயந்தா கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்ன?” என்று கேட்டவன் குடு குடுவென ஓடி செல்ல, வாயில், “அடப்பாவி” என்றபடி கையை வைத்துக் கொண்டாள் மோகினி…
இதே சமயம், ரிஷி, நீலா மற்றும் விசாலாட்சி வந்து சேர்ந்தார்கள்…
அவர்களுடன் தான் ராஜதுரை மற்றும் மீனாட்சியும் வர, எல்லாரையும் வாசலில் நின்று வரவேற்று இருந்தார்கள், ராவணன் மற்றும் மோகினி…
உள்ளே வந்த நீலாவை அணைத்து விடுவித்த மோகினியோ, “நல்ல சேதி எல்லாம் கேள்விப்பட்டேன், ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா” என்க, அவளும் நன்றியுடன் மோகினியை பார்த்து புன்னகைத்துக் கொண்டாள்…
அதனை தொடர்ந்து, மந்தாகினி கேக்கை வெட்டினாள்.
ஆதவ் அவள் அருகே தான் நின்று இருந்தான்…
மந்தாகினி வெட்டிய கேக்கை ராவணனுக்கு ஊட்ட வர, ஆதவ்வோ, அவள் கையை பற்றி தான் வாய்க்குள் போட்டுக் கொள்ள, “டேய்” என்றான் ராவணன்.
“கேக் மாமா, நான் சின்ன பையன் ல?” என்றான் அவன் சிரித்துக் கொண்டே…
அவனை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு, ஜெகனை பார்த்த ராவணனோ, “டேய், உன் பையன் கிட்ட சொல்லி வை” என்று சொல்ல, ஜெகனோ, தோள்களை உலுக்கியவன், “நீயாச்சு அவனாச்சு, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, நான் சொன்னா கேட்க மாட்டான் டா” என்று சொன்னான்.
அவர்கள் இங்கே பேசிக் கொண்டு இருக்க, ஆதவ்வோ அருகே நின்ற மந்தாகினியிடம், “மந்தா இந்த ட்ரெஸ் உனக்கு சூப்பரா இருக்கு” என்று சொல்ல, அவளும், “தேங்க்ஸ்” என்றாள் கழுத்தை நெடித்துக் கொண்டே…
இதனை பார்த்த ராவணனோ, அருகே நின்ற மோகினியிடம், “என்னடி இதெல்லாம்?” என்று கேட்க, “என்ன கேட்டா, எனக்கென்ன தெரியும்?” என்றாள் அவள்…
ராவணன் உடனே, ஆதவ் மற்றும் மந்தாகினி நடுவே வந்து நின்றவன், “ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்தா தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று சொல்ல, சத்தமாக சிரித்த ராஜதுரையோ, “இப்போவே உனக்கு இந்த நிலைமை பாரேன் ராவணா” என்று சொல்ல, எல்லாரும் அங்கே சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்…
எப்படியோ ஆரம்பித்த அவர்களது வாழ்க்கை புன்னகையுடன் நகர தொடங்கி இருந்தது…
முற்றும்…