அலையென குதிக்கிறேன் உலையென கொதிக்கிறாய் 3
ஆர்னா கதறி அழுது அவளாக ஓய்ந்து அழுகை குறைந்து விக்கலில் நின்ற நேரம் கதவு மெல்ல தட்டப்பட்டது.
அவள் அறைக்கதவை தட்டும் ஒரே நபர் ஜெனிஃபர் மட்டும் தான். மற்ற யாரும் அவள் இருக்கும் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள்.
சூர்யவன்ஷி கதவை தட்டக்கூடாது என்பதற்காகவே அவளது கதவின் தாழ்ப்பாளை உடைத்து எறிந்து விட்டான்.
எழுந்து முகத்தை துடைத்தவள் கதவை திறக்க உணவோடு நின்றிருந்தார் ஜெனிஃபர்.
அவள் வெளியே சென்று சாப்பிட அனுமதி இல்லை. அறைக்கு தான் உணவு வரும். அதுவும் அவளுக்கு பிடித்த உணவுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு விட்டது. அவளுக்கு பிடிக்காத உணவுகள் மட்டுமே எப்போதும் தரப்படும்.
இப்போது தட்டில் இருந்ததை பார்த்தாள். அவளுக்கு பிடித்த காய் இருந்தது. இது வரை அவள் வாய்திறந்து இது பிடிக்கும் என்று சொல்லவில்லை. சொன்னால் இதுவும் கிடைக்காது. பல முறை அடி வாங்கிய பிறகு அவளாக திருந்திக் கொண்டாள். எதை பேச வேண்டும் எதைப்சேசக்கூடாது என்று.
“லன்ச் டைம்” என்ற ஜெனிஃபர் உணவை கொண்டு சென்று மெத்தையின் அருகே இருந்த மேசையில் வைத்து தண்ணீரையும் வைத்தார்.
ஆர்னா தலையை நிமிர்த்தாமல் தரையை பார்த்துக் கொண்டு நின்றாள்.
ஜெனிஃபர் அருகே வந்து அவளது தோளை தொட்டார்.
அவள் நிமிர “தப்பிச்சு போயிட்டனு சந்தோசப்பட்டேன்” என்றவர் வார்த்தையில் அடக்க முடியாத வேதனை நிரம்பி இருந்தது.
மீண்டும் கண் கலங்குவது போல் இருக்க “நானும் அப்படித்தான் நினைச்சேன்” என்றாள் ஆர்னா.
“இதுக்கு மேல உனக்கு வேற வழி இல்ல. இங்க வராம ஓடிருக்கலாம்ல?”
இடவலமாக தலையசைத்தவள் கண்ணை அழுந்த துடைத்துக் கொண்டு அவர் முகத்தை பார்த்தாள்.
“என்னை.. என்ன காப்பாத்துனவர அவன் கொன்னுடுவேன்னு சொன்னான். உங்களுக்கே தெரியுமே.. நான் அவர் மேல கொஞ்சம் அக்கறை காட்டுனாலும் இல்ல தப்பிக்க ட்ரை பண்ணாலும் அவர கொன்னுடுவான்.. என்னை மக மாதிரி பார்த்துக்கிட்டவரு.. அவர அடிச்சு ரத்தத்தோட அங்கயே போட்டுட்டு வந்துட்டோம். அவர தூக்கி காப்பாத்துனு கேட்க கூட முடியல. கேட்டா கொன்னுடுவான்னு பயந்து வாய மூடிட்டு வந்துட்டேன்”
அவளது கண்ணீர் கன்னத்தில் இறங்க கைக்குட்டையால் துடைத்து விட்டார் ஜெனிஃபர்.
“ஒரு நாள் எல்லாம் மாறும் ஆர்னா. அந்த நாள் நீ அவன தண்டிக்கிற நாளா இருக்கத விட உன் வேதனை எல்லாம் குறையுற நாளா இருக்கனும்னு வேண்டிக்கிறேன்” என்றவர் தட்டைக்காட்டினார்.
“சாப்பிடு.. வழக்கத்த விட அதிகமா கொண்டு வந்துருக்கேன். அவன் கண்ணுல படுறதுக்கு முன்னாடி சாப்பிட்டுரு” என்றவர் கதவை அடைத்து விட்டுச் சென்று விட்டார்.
அவளுக்கு பசியெடுக்கவில்லை. ஆனால் முதலில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய போது சாப்பிட மாட்டேன் என்று உணவை அவள் தூக்கி எறிய முழுதாக ஐந்து நாள் பட்டினி போட்டு அவள் மயங்கி விழுந்த போது தான் அவளுக்கு உணவு கொடுக்க அனுமதித்தான் அந்த ராட்சசன்.
அதோடு அவள் உணவு விசயத்தில் அடம்பிடிப்பதை விட்டு விட்டாள்.
இருக்கும் உடையை கலைந்து விட்டு சாப்பிடலாமா? என்று தோன்றினாலும் சூர்யா வந்து விட்டால் அதிக உணவுக்கு அவளை இரவு பட்டினி போட்டு விடுவான்.
அதனால் அவசரமாக கைகழுவி விட்டு உடனே சாப்பிட்டாள். வேக வேகமாக முழுங்கி தட்டை காலி செய்த பிறகு தான் ஓரளவு மனமும் வயிறும் அமைதியானது.
அடுத்து குளிக்க வேண்டும். அலமாரியை திறந்தாள். அனைத்தும் அரைகுறை உடைகள். நைட்டி தவிர அனைத்தும் அவள் உடலை வெளிச்சம் போட்டு காட்டும்.
இது போன்ற உடைகள் அவளுக்கு பிடிக்காது என்பதற்காகவே அதை மட்டுமே அணிய வைத்து விட்டான். பாவி.
அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று குளித்து விட்டு வந்தாள். அவளது கூந்தல் இப்போது ஓரளவு வளர்ந்திருந்தது.
வெட்டுவதற்கு சூர்யா இல்லாமல் மூன்று மாதங்களில் நன்றாகவே வளர்ந்திருந்தது. ஆனால் இந்த உடைக்கு இந்த கூந்தல் கொஞ்சமும் பொருந்தவில்லை.
கண்ணாடியை பார்த்து முகத்தை சுருக்கினாள்.
“பேசாம பழையபடி வெட்டிருவோமா? கொஞ்சமாச்சும் மார்டனாவாச்சும் தெரிஞ்சது. இதுல கண்டராவியா இருக்கே” என்று புலம்பியவள் திரும்ப சூர்யா கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
அவனை பார்த்ததும் வாய் தானாக மூடிக் கொண்டது.
அவளை மேலும் கீழும் அவன் பார்த்துக் கொண்டு நிற்க அவளுக்கு பழகிப்போன பார்வையில் ஒன்றுமே தோன்றவில்லை.
முதல் முறையாக அவளை இப்படி ஆடை அணிய வைத்து அவளது ஆசைகளை தூண்டி விட்டு அவன் இணைந்த போது என்ன நினைத்தாள்?
பைத்தியக்காரி.. அவனுக்கு அவள் மீது காதல் இருக்குமோ என்று அல்லவா நினைத்தால்?
ஆனால் அவன் திருமணமே இல்லாத ஒரு உறவை அவளோடு வாழ விரும்புகிறான் என்று தெரிந்த போது எவ்வளவு உடைந்து போனாள்?
அரைகுறை ஆடைகளை அணிய மாட்டேன் என்று அடம்பிடித்த போது “டிரஸ் நீ பார்க்குறதுக்கு இல்ல.. நான் பார்க்குறதுக்கு.” என்று ஏளனமாக பேசினான்.
அணிந்து கொண்டு நின்றால் அவளை பயன்படுத்தி விட்டு மயக்கி விட்டதாக அவளையே திட்டினான்.
அவன் இப்படி அடைத்து கொடுமை படுத்துவதை தாங்க முடியாமல் அழுதால் வேடிக்கை பார்ப்பான்.
அவள் கண்ணீர் விடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவே அழாமல் இருந்து பார்த்தாள். ஆனால் அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அந்த அழுகை தான் என்றானது. அதை கைவிட முடியவில்லை.
பதினெட்டு வயதில் சூர்யாவின் கையில் மாட்டிக் கொண்டவள் கடந்த ஆறு வருடமாக போராடிக் கொண்டே இருக்கிறாள்.
கதவை ஒரு கையால் அடைத்தவன் அருகே வந்தான். அவளது உடலை கூர்ந்து பார்த்தான்.
மூன்று மாதங்களாக நல்ல உணவுகளை சாப்பிட்டு அவளது உடல் மாறியிருந்தது. சதை போட வேண்டிய இடத்தில் சதை போட்டு மிக அழகாகவே மாறியிருந்தாள்.
அவளுக்கு சாப்பாடு போட கொஞ்சமும் தயங்காத அவளுடைய மாமா இப்போது பிழைத்தாரா இல்லையா என்று கூட தெரியவில்லை.
அவளது மேலாடை வயிற்றை அரையும் குறையுமாக மறைத்திருக்க சூர்யா மறைக்காத பாகங்களை தடவினான்.
“நல்ல தீனியோ?”
நக்கலாக கேட்டவனை வெறித்துப் பார்த்தாளே தவிர பதில் சொல்லவில்லை.
“அதிகமா கொழுப்பு ஏறியிருக்கு போல?” என்றவன் அவளை முழுமையாக அளந்தான்.
உடலில் ஊர்ந்த அந்த கைகளை தட்டி விட கைகள் பரபரத்தது. செய்து விட்டால் விளைவு விபரீதமாகும். அதனால் பல்லைக்கடித்துக் கொண்டு நின்றாள்.
மூன்று மாதங்கள். முழுதாக மூன்று மாதங்கள். இந்த தீண்டல் இல்லாமல் நெருப்பை கொட்டிக் கொண்ட உணர்வு இல்லாமல் நிம்மதியாக இருந்தாள். கடவுளுக்கே அவளது நிம்மதி பொறுக்கவில்லையா?
எப்படி இவன் அவளை தேடிப்பிடித்தான் என்று அவளுக்கு புரியவே இல்லை.
அவள் முகத்தை இரண்டு விரலால் பற்றி இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தவன் “குறைச்சுடுவோம் கொழுப்ப” என்று விட்டு அவள் முகத்தை விட்டான்.
அதற்கும் ஆர்னா எதுவும் பேசவில்லை. இங்கே அரைப் பட்டினி தான் கிடக்க வேண்டும் என்று அவளுக்கு தெரியுமே. எப்போதாவது ஜெனிஃபர் யாருக்கும் தெரியாமல் அதிகமாக உணவை கொண்டு வந்து கொடுத்து அவள் வயிற்றை நிரப்பினால் தான் உண்டு.
“அந்தாளு.. உன் மாமாவா?”
உள்ளம் திடுக்கிட்டது.
‘இப்ப ஏன் அவர பத்தி கேட்குறான்?’ என்று தோன்றினாலும் இடவலமாக தலையாட்டினாள்.
“இல்லையா?”
“ரத்த சொந்தமில்ல”
“அப்புறம் யாரு?”
ஆர்னா வாயை மூடிக் கொண்டாள்.
“சொல்ல மாட்ட? ரைட்.. அவன் இனிமே யாரா இருந்தா என்ன? அவன கொல்ல சொல்லிட்டேன்”
உள்ளம் இதை ஓரளவு எதிர்பார்த்திருந்ததால் பெரிதாக அதிர்ச்சியை வெளியே காட்டாமல் அவன் முகத்தை வெறித்துப் பார்த்தாள்.
“என்ன கொல்ல வேணாமா?”
ஆர்னாவுக்கு சிரிப்பு வந்தது. அவள் சொன்னதும் அப்படியே கேட்டு விடுவானா?
“நான் கேட்டு நீ எதுவும் செய்ய போறது இல்ல.”
“நீ கேட்டு பாரேன் செய்யுறனா இல்லையா பார்ப்போம்”
அவன் சவால் விட்டு அவள் அருகே வர ஒரு நொடி யோசித்தவள் “இந்த நிமிஷமே என்னை கொன்னுடுறியா?” என்று கேட்டாள்.
அவன் அவள் கண்களை உற்றுப் பார்த்து விட்டு உதட்டை கீழ் நோக்கி வளைத்தான்.
“நீ அவ்வளவு சீக்கிரமா சாகக்கூடாது ஆர்னா”
“ஃபைன். எனக்கு வேற எதுவும் வேணாம்”
பேச்சு முடிந்தது என்று வாயை மூடிக் கொண்டாள்.