ஆர்னா அறையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள். மதிய வேளை சூர்யா வந்து பேசிச் சென்ற பிறகு அவள் வேறு எதுவும் செய்யவில்லை. வேறு எதையும் செய்ய அவளுக்கு அனுமதியும் இல்லை. வேலைக்காரர்களோடு வேலை செய்தாலாவது அவளது மனம் மாறும். அதற்கு அனுமதி இல்லை.
சூர்யா வீட்டில் இருக்கும் போது அவள் அறையை விட்டு வெளியே வர அனுமதி இல்லை. அவன் வீட்டில் இல்லை என்றால் பின்வாசலில் உலாவ மட்டும் அனுமதி உண்டு.
அங்கு வேலை செய்பவர்கள் யாரும் அவளிடம் பேச மாட்டார்கள். அவளது உடையை தினமும் காலை வாங்கிச் சென்று துவைத்து மறுநாள் காலை திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.
அதை தவிர அவர்களை கண்ணால் கூட அவளால் பார்க்க முடியாது.
தனிமையில் உழன்று பைத்தியம் பிடிக்காத குறையாக கையில் கிடைத்த அனைத்தையும் உடைத்து போட்டு விட்டு மூச்சு திணறி மயங்கி விழுந்து விட்டாள்.
எவ்வளவு நேரம் மயங்கிக் கிடந்தாளோ தெரியாது. ஆனால் அடுத்த நாள் ஜெனிஃபர் அருகே தான் கண் விழித்தாள்.
இரவு அவளை பார்க்க வந்த சூர்யா அவள் மயங்கிக் கிடப்பதை பார்த்து விட்டு ஜெனிஃபரை அழைத்தானாம். ஜெனிஃபர் வந்ததும் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டானாம்.
ஜெனிஃபர் எதையும் குறைத்தோ மறைத்தோ பேசாதவர். நடந்ததை சொல்லி விட்டார்.
அவள் மயங்கிக் கிடக்கும் போது கூட அவனுக்கு அவள் மீது இரக்கம் வரவில்லையா?
என்ன மனிதன் இவன்?
அன்று தான் உண்மையிலேயே எதற்காக இப்படி தண்டிக்கிறான் என்று கேட்க நினைத்தாள்.
அன்று இரவு அவளுக்காக ஒரு ஆடையை வாங்கி வந்து கொடுத்து அணிய சொன்னான்.
இப்படி அவன் வாங்கிக் கொடுத்தால் அது எவ்வளவு கோரமாக இருக்கும் என்று தெரிந்ததால் அந்த உடையை பிரித்துப் பார்க்காமல் எழுந்து நின்றாள்.
அவளை ஏன் இப்படி தண்டிக்கிறான் என்று காரணம் அவளுக்கு வேண்டும்.
அதனால் பிடிவாதமாக அசையாமல் நிற்க அவன் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தான்.
“ரெண்டு நிமிஷத்துல நீ இந்த டிரஸ்க்கு மாறலனா…. என்ன நடக்கும்னு நான் சொல்லனுமா?” என்று கிண்டலாக கேட்டான்.
அந்த உடையை கையில் இறுக்கிப் பிடித்தவள் “ப்ளீஸ்.. நான் என்ன தப்பு பண்ணேன்? அதையாவது சொல்லு.. இப்படி எதுவுமே சொல்லாம என்னை தண்டிச்சுட்டே இருக்கதுல என்ன நியாயம் இருக்கு?” என்று கோபமாக கேட்க நினைத்தவள் அழுது கொண்டே தான் கேட்டாள்.
அவள் அழுவதை எப்போதும் போல் வேடிக்கை பார்த்து விட்டு திரும்பி சுவற்றை பார்த்தான்.
அந்த அறையில் பெரிதாக எதுவும் இருந்தது இல்லை. கட்டில் மெத்தை ஒரு மேசை சிறிதாக ஒரு அலமாரி. அவ்வளவு தான். அதைத்தாண்டி இருக்கும் ஒன்று மிகப்பெரிய புகைப்படம். ஆர்னாவின் தாயின் புகைப்படம்.
தினமும் தாயிடம் தான் அனைத்தையும் சொல்லி அழுவாள். எதற்காக இந்த படத்தை இங்கே மாட்டி வைத்திருக்கிறான் என்று அவளுக்கு தெரியாது. ஆனால் அது இருக்கும் ஆறுதல் அவளுக்கு இருக்கும்.
இன்று அவன் அந்த படத்தை கோபமாக முறைக்க ஆர்னா புரியாமல் பார்த்தாள்.
“இவ உன் அம்மால?” என்று சூர்யா நக்கலாக கேட்க அந்த பேச்சே ஆர்னாவை அதிர வைத்தது.
“இவ?” என்று அவள் அதிர “இவ தான் இவளே தான்.. ஏன் மரியாதை கொடுக்கனுமோ?” என்று கேட்டு வைத்தான்.
ஆர்னா திடீரென ஏன் இப்படி பேசுகிறான் என்று புரியாமல் பார்த்தாள்.
ஒரு வேளை அவளது தாய் எதாவது செய்து விட்டாரோ? அதற்கு பழி வாங்கத்தான் இப்படி அவளை அடைத்து வைத்து கொடுமை செய்கிறானோ?
அவள் திகைத்து நிற்க சூர்யா அவள் கழுத்தைப்பிடித்து அந்த படத்தின் பக்கம் திருப்பினான்.
“நல்லா பாரு.. இவ தான்.. நீ அனுபவிக்கிற ஒவ்வொரு வலிக்கும் காரணம் இவ தான். இவளுக்கு மகளா பிறந்தல? அப்போ அனுபவி” என்றவள் ஆர்னாவின் முகத்தை அந்த படத்தோடு வைத்து அழுத்தினான்.
“உனக்காக தான அவ்வளவு பண்ணா.. இப்ப நீ என் கையில மாட்டிட்டு தினம் தினம் துடிக்கிறத இவ பார்க்கனும். நரகத்துல கூட இவ நிம்மதியா இருக்க கூடாது. இருக்கவும் விட மாட்டேன்” என்றவள் ஆர்னாவை கீழே தள்ளினான்.
தரையில் விழுந்தவளுக்கு அதிர்ச்சியில் அழுகை கூட வரவில்லை. சூர்யா அவளையும் படத்தையும் முறைத்து பார்த்து விட்டு வேகமாக வெளியேறி விட்டான்.
அப்போது தான் ஓரளவு அவளுக்கு புரிய ஆரம்பித்தது. அவளது தாய் எதோ செய்திருக்கிறார். அதுவும் ஆர்னாவுக்காக எதோ செய்யப்போய் அது இப்படி அவள் தலையில் வந்து விழுந்திருக்கிறது.
ஜெனிஃபரிடம் இதைச் சொல்லி கேட்டுப் பார்த்தாள்.
“எனக்கு முழு விவரம் தெரியாதுமா. நான் இங்க வந்தப்போ உன் குடும்பம் தனியா போயிட்டாங்க. அதுக்கப்புறம் தான் என்னை வேலைக்கு வச்சாங்க”
அவரிடம் பதில் இல்லாமல் போக மீண்டும் சூர்யாவிடமே கேட்டு நின்றாள்.
அவன் பதிலை தவிர்த்து அவளை அடைவதிலேயே குறியாக இருந்தான். அவள் துவண்டு மெத்தையில் கிடக்கும் போது அவன் வெளியேறும் முன்பு ஒரு முறை அவள் தாயின் படத்தை பார்த்து விட்டுச் செல்வதை கவனித்தாள்.
எப்போதும் கண்ணை மூடிக் கொண்டு விதியே என்று கிடப்பவள் இதை கவனித்தப்பிறகு ஒவ்வொரு முறையும் அவன் வெளியேறும் போது கவனித்தாள்.
சில நாட்களில் அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அவள் தாயின் முன்பு அவளை இப்படி தண்டிக்கிறான் என்று மூளை திரும்பத்திரும்ப சொல்ல கோபத்தோடு அந்த படத்தை எடுத்துப் போட்டு உடைத்தாள்.
அன்று இரவு வந்தவன் சுவற்றில் படம் இல்லாததை கவனித்து விட்டு அவளை முறைத்தான்.
“ஃபோட்டோ எங்க?”
“உடைச்சுட்டேன்”
அவள் எங்கோ பார்த்துக் கொண்டு செல்ல சூர்யா அவளை நன்றாக முறைத்தான். பிறகு வேகமாக வெளியேறி விட்டான்.
அவன் எதுவும் சொல்லாமல் சென்றதில் அவளுக்கு குழப்பமாக தான் இருந்தது. ஆனா அந்த குழப்பம் விரைவில் தீர்ந்தது. நள்ளிரவு தாண்டி ஆர்னா உறங்கிக் கொண்டிருந்த நேரம் சூர்யா மீண்டும் வந்தான்.
சத்தம் கேட்டு அவள் எழுந்த போது முன்பை விட பெரிய அளவில் படத்தை சுவற்றில் மாட்டிக் கொண்டிருந்தான்.
தூக்கம் மறந்து பதறி எழுந்தாள். படத்தை மாட்டி விட்டு திரும்பியவன் நக்கலாக சிரித்தான்.
“இதையும் உடைச்சா இத விட பெருசா மாட்டுவேன்” என்று அருகே வர ஆர்னாவின் கண்கள் தாயின் முகத்தில் நிலைத்து நின்றது.
ஒவ்வொரு முறையும் போராடி தோற்றப்பிறகு நிச்சயமாக அவனுடைய தாய் எதோ மன்னிக்க முடியாத தவறை செய்திருக்கிறார் என்று புரிந்து கொண்டாள்.
இப்போதும் அந்த படத்தை பார்க்க பிடிக்காமல் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
தூக்கம் வரவில்லை. தூங்கும் எண்ணமும் இல்லை. மனம் மூன்று மாதங்கள் வாழ்ந்த வாழ்வை புரட்டியது.
பெரிதாக வெளியே சுற்றவில்லை. சூர்யா பார்த்து விடுவானோ என்ற பயம். ஆனால் வீட்டுக்குள் சுதந்திரமாக இருந்தாள்.
அவளுடைய மாமா பணக்காரர் அல்ல. ஆனால் அவள் தப்பித்து ஓடி வரும் போது அவளை அடையாளம் கண்டவர் அவளை காப்பாற்றினார்.
நடந்ததை விசாரித்து வருந்தியவர் அவரது வீட்டில் அவளை தங்க அனுமதித்தார். அவரது கையில் குறை இருப்பதால் கூலி வேலை தான் செய்வார்.
அந்த வேலையில் வரும் வருமானம் அவருக்கு மட்டுமே போதுமானது. அதை வைத்து அவளுக்கு உணவளித்தார். தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.
அவருக்கு ஒரு குடும்பம் இருந்தது. மனைவி மகள் இருந்தனர். மனைவி பணக்காரன் ஒருவனின் மீது ஆசை கொண்டு இவரை விலக்கி வைக்க விவாகரத்து வாங்கி தனியாக வாழ ஆரம்பித்து விட்டார்.
மகளின் மீது கொள்ளை பாசம். அவளுக்கு பிடிக்காது என்றாலும் தூரமாக நின்று மகளை வாரம் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று சென்று விடுவார்.
மூன்று மாத காலத்தில் அவரது தனிமை வாழ்க்கையை பார்த்தவளுக்கு இந்த சிறை வாழ்க்கை பெரிதாக தெரியவில்லை.
அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது கையை சூர்யா என்ன செய்து வைத்தானோ? பிழைத்தாரா? இல்லையா?
எதையும் அறியாமல் இப்படி அடைந்து கிடைப்பது வருத்தமாக இருந்தது.
கதவு திறக்கும் சத்தம் கேட்டது. இரவு நேரத்தில் அவளது அறைக்கு வரக்கூடிய ஒரே ஆள் சூர்யா தான்.
அதனால் கண்ணை மூடிக் கொண்டாள்.
மெத்தையில் அவளருகே படுத்துக் கொண்டவன் கைகள் உரிமையாய் அவளை வளைத்தது.
ஆர்னா அசையாமல் கிடந்தாள். இப்படி இருந்தால் விட்டு விட மாட்டான் தான். ஆனால் உணர்வுகளை காட்டி அவமானப்பட அவள் தாயாராக இல்லை.
அவளை திருப்பியவன் வாயைத்திறந்து மாத்திரையை திணித்தான்.
வழக்கமாக நடப்பது தான் இதுவும். அவனது குழந்தை அவளுக்குள் உருவாகி விடக்கூடாதே.
அவளுக்கும் அவனது குழந்தையை சுமக்க விருப்பமில்லை. அதனால் விழுங்கி விட்டாள்.
அவளது கூந்தலை அளந்தான்.
“மூணு மாசம் நிம்மதியா இருந்துருப்பல?”
சூர்யா மெதுவாக கேட்க அந்த அமைதிக்குப்பின்னால் இருக்கும் புயல் தெரிந்ததால் பதில் சொல்லவில்லை.
“உனக்கு யாரு ஹெல்ப் பண்ணது?”
ஆர்னாவின் முகத்தில் சிரிப்பு வந்தது.
உடனே அவளது கன்னத்தை இரண்டு விரல்களால் பிடித்தவன் அவள் கண்களில் பதிலை தேடினான்.
அது கிடைக்காமல் போக “பேரென்ன?” என்று கேட்டான்.
அவள் அப்போதும் அமைதியாக இருக்க சில நொடிகள் காத்திருந்தான். பிறகு அவனாகவே எதையோ நினைத்து தலையாட்டிக் கொண்டான்.
“சீக்கிரமே கண்டு பிடிக்கிறேன்” என்றவன் அவளை அடையும் வேலையில் இறங்கி விட்டான்.
விடியும் நேரம் அவன் அறையை விட்டு வெளியேறி விட ஆர்னா தாயின் முகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.