ராவணா 40

 அறைக்கு வெளியே நின்றிருந்த அஜூதியாவுக்கோ எதுவுமே ஓடவில்லை. உள்ளே ஜானகியிடம் அவன் என்ன சொல்வானோ என்கின்ற பரிதவிப்புடன் அவள் இருக்க, இந்திராவும் மற்றவர்களும் அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர்.

அதே நேரம் அறையில் ஜானகியும் ராவணனும் மட்டும் அமர்ந்திருக்க,

“நீங்க நினைக்கிற மாதிரி நான் பிஸ்னஸ் மேன் இல்லை” என்று தொடங்கியவன், சுற்றி வளைக்காது தன்னைப் பற்றிய அனைத்தையும் அவரிடம் கூறியிருந்தான்.

தான் யார்?

தனது தொழில் என்ன?

தனது வாழ்க்கை எப்படி இருந்தது?

எதையுமே மறைக்கவில்லை. 

அவன் தன்னைப் பற்றிக் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் வண்ணம் பூசப்படாத உண்மைகளாக ஜானகியின் மனதை வலிக்கச் செய்தன.

அப்பொழுது,

“நான் கூலிக்கு தொழில் பண்ற ஒரு ரவுடி” பொறுமையை இழந்து கதவை திறந்து கொண்டு அஜூதியா உள்ளே வரவும் ராவணன் இதை சொல்லவும் சரியாக இருந்தது.

ஜானகியையும் ராவணனையும் ஒரு கணம் பார்த்தவள் வேகமாக வந்து அவனது கரங்களை இறுக்கமாக பிடித்து கொண்டு அவனது முகத்தைப் பார்த்து,

“இனி நீங்க ஒரு வார்த்தை பேச கூடாது நான் பேசிக்கிறேன்” என்றவள், கதவை காட்டி,

“ப்ளீஸ் கொஞ்ச நேரம் வெளிய வெயிட் பண்ணுங்க” என்றாள்.

அதற்கு மறுப்பாக தலையசைத்த ராவணன் ஏதோ பேச வருவதற்குள்,

“வாங்க” என்றவள் அவன் கையை பிடித்தபடி அவனை அழைத்து கொண்டு வெளியே வந்து அனைவரையும் ஒருகணம் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றாள்.

அஜூதியாவை பார்த்தபடி சில நொடிகள் அமைதியாக இருந்த ஜானகி, தன் தொண்டை அடைக்க,

“அஜூ உனக்கு இது முன்னாடியே தெரியுமா?” என்று வினவினார்.

“ம்ம்” தலையை மட்டும் மெதுவாய் அசைத்தாள் அஜூதியா.

கண்களை இறுக்கமாக மூடி திறந்த ஜானகிக்கோ, இதற்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்று கூட தெரியவில்லை.

‘எல்லாம் தெரிந்துமா இவன் தான் வேண்டும் என்கிறாள்!’ 

‘தன்னிடம் இதை மறைக்கவும் அல்லவா செய்திருக்கிறாள்’

‘தன்னிடம் மறைக்க துணியும் அளவுக்கு அப்படி என்ன பொல்லாத காதல்’

அஜூதியா ராவணன் மீது வைத்திருக்கும் இந்த கண்மூடித்தனமான காதலை பார்த்து ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கோபமாக வந்தது.

ஆனால் கோபத்திற்கும் ஆச்சரியதிற்குமான நேரம் இது அள்ளவே 

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் மனதை திடப்படுத்தி கொண்டு, நிமிர்ந்து அஜூதியாவை பார்த்தார்.

பார்த்துக்கொண்டே இருந்தார்.

அவரது மனதில் பல கேள்விகள் இருந்தது.

ஆனால் கேட்க தெம்பில்லாமல் அமர்ந்திருந்தவரோ சில நொடிகள் கழித்து,

“இதுக்கு என்னால ஒத்துக்க” என்று அவர் முடிப்பதற்குள் அவர் முன்னால் வந்து மண்டியிட்டு அமர்ந்தவள்,

“ப்ளீஸ் மா முடியாதுன்னு சொல்லிடாதீங்க அவர் இல்லாம என்னால வாழ முடியாது, உங்க அஜூதியா செத்து போய்டுவா” கண்ணீர் வழிய கெஞ்சினாள்.

“அஜூதியா” ஜானகி பதறிவிட்டார்.

“அவர் நல்லவர் மா”.

“அவர் நல்லவராவே இருந்தாலும் யாரும் தான் பொண்ணை இப்படி ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதிக்க மாட்டாங்க அஜூ” கோபத்துடன் கூறினார்.

“எனக்கு அவர் தான் வேணும்” பிடிவாதத்துடன் அழுபவளை பார்த்து ஜானகிக்கு இன்னும் கோபம் வர, 

“அவன் ஒரு கொலைகாரன் உனக்கு அது புரியுதா இல்லையா” பல்லை கடிதபடி அதே கோபத்துடன் கேட்டார்.

அதற்கு அவளோ,

“அந்த கொலைகாரன் மட்டும் இல்லைன்னா இப்போ நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்”

என்று உச்சசாதியில் கத்தியவள், பின்பு தன்னை நிதானப்படுத்தி கொண்டு,

“தன்னை பத்தி எல்லாம் சொன்னாரே பரந்தாமன் பத்தி ஏதும் சொன்னாரா, கண்டிப்பா சொல்லிருக்க மாட்டாரு” என்றவள், பரந்தாமன் பற்றி அனைத்தையும் கூறி முடிக்க,

“இதை ஏன் என்கிட்ட நீ சொல்லல” என்று அஜூதியாவை அணைத்து கொண்ட ஜானகியின் உடல் நடுங்கிவிட்டது.

மெல்ல அவரின் அணைப்பில் இருந்து விலகியவள்,

“அவர் மட்டும் தான் எனக்கு வேணுமா ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க. அவர் நினைச்சிருந்தா உங்க சம்பந்தம் இல்லாமலே என்னை கல்யாணம் பண்ணிருந்துக்க முடியும்.

நான் கண்டிப்பா மறுத்திருக்க மாட்டேன், ஆனா அவர் அப்படி பண்ணல, யார் மனசையும் காயப்படுத்தாம என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறாரு. நீங்க எல்லாரும் வேணும்ன்னு நினைக்கிறாரு,பொய்யில ஒரு உறவை ஆரம்பிக்க அவர் விரும்பல ப்ளீஸ் மா” என்றாள் அஜூதியா ஜானகி எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தார்.

உண்மை தான் அவன் நினைத்திருந்தால் இந்த உண்மையை அவரிடம் சொல்லாமலேயே அஜூதியாவைத் திருமணம் செய்திருக்க முடியும்.

அவனது அதிகாரத்திற்கும், அவன் ஆதிக்கத்துக்கும் தன்னிடம் வந்து இப்படி அனுமதி கேட்க வேண்டிய அவசியமே அவனுக்கு இல்லை.

ஆனாலும்,

தன்னைப் பற்றிய உண்மையை மறைக்காமல் கூறி, தன் அனுமதிக்காக காத்திருப்பவன் மீது மரியாதை வர தான் செய்கிறது,

அதிலும் பரந்தாமன் விடயத்தை அறிந்த பிறகு அவன் மீது மரியாதை இன்னும் அதிகரிக்க தான் செய்கிறது, ஆனாலும் அவன் தொழில் உறுத்தலாக இருந்தது.

“இதுக்கு எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல அஜூ” என்றார் ஜானகி,

“ப்ளீஸ் மா, ஏற்கனவே மனசு முழுக்க காதலை வச்சிட்டு எனக்கு நல்லது பண்றேன்னு நினைச்சிட்டு என்னை வேண்டாம்ன்னு சொன்னவரு. 

இப்போ  நீங்க சம்மதம் சொல்லலைன்னா அவர் நிச்சயம் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டார். 

அதே நேரம் என்னை தவிர வேற யாரையும் நினைச்சு கூட பார்க்க மாட்டார், நானும் தான் மா.

சம்மதம் சொல்லுங்க மா, நீங்க ஓகே சொன்னா நாளைக்கே வேலாயுதம் மாமாவும் மீனாட்சி அத்தையும் உங்கள பார்க்க வருவாங்க” கெஞ்சலாகக்   கூறிவிட்டு அவர் முகம் பார்த்தாள் அஜூதியா 

ஜானகியிடம் பதில் இல்லை. கரங்களை பிசைந்து கொண்டு கலவரத்துடன் நின்றிருந்த அஜூதியாவை சில கணங்கள் பார்த்தவர் அவளிடம் எந்த பதிலும் சொல்லாது நேரடியாக மாரிக்கு அழைத்து,

“மாப்பிள்ளைக்கும் அவர் தம்பிகளுக்கும் சாப்பாடு ரெடியா” மறைமுகமாக தனது சம்மதத்தை அவர் தெரிவித்திருக்க, மகிழ்ச்சியோடு அவரை அணைத்து கொண்டாள் அஜூதியா.

மனதிற்குள் ஆயிரம் நெருடல்கள் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாத ஜானகி,  வாஞ்சையோடு அஜூதியாவின் தலையை தடவியவர், இந்திராவை அழைத்து அனைவரையும் உணவு உண்ண அழைத்து வருமாறு கூறிவிட்டு அங்கிருந்து செல்ல,

அஜூதியாவின் முகத்தில் முகிழ்த்திருந்த புன்னகையே அனைவருக்கும் போதுமானதாக இருந்தது.

பின் அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டி அனைவரும் சென்ற மறுநொடி ராவணனை அணைத்திருந்தாள் அஜூதியா.

நீண்ட நேரம் அணைப்பிற்கு பிறகு, மெதுவாக விலகிய ராவணன்,

“ரொம்ப திட்டுனாங்களா” என்று கேட்டான்.

“ம்ஹூம்”மறுப்பாக தலையசைத்தவள்,

“கோபப்பட்டாங்க எடுத்து சொன்னேன் புரிஞ்சிகிட்டாங்க. 

இனிமே எந்த பிரச்சனையும் இல்லை” என்றாள்.

சந்தோஷத்தில் இருவரும் கண்களும் கலங்க, வேகமாக தன் இதழை நெருங்கியவளை தடுத்து தாம் இருக்கும் இடத்தை பார்வையாலே உணர்த்தியவன் புன்னகையோடு அவள் நெற்றியோடு தன் நெற்றி முட்டிக்கொள்ள, அவளும் சிரித்து கொண்டாள்.

உணவு முடிந்த பிறகு ஜானகியிடம்,

“சரிம்மா நான் கிளம்புறேன். வேலாயுதம் அய்யாவையும், மீனாட்சி அம்மாவையும் கூட்டிட்டு நாளைக்கு வந்து உங்களைப் பார்க்குறேன்.” என்றவன்,

என்ன நினைத்தானோ, சட்டென்று ஜானகியின் காலைத் தொட்டு கும்பிட்டுவிட,

மென் புன்னகையோடு ராவணனின் தலையில் கைவைத்தவர்,

“நல்லா இருப்பா.” என்றார்.

அதேநேரம் இந்த காட்சியை அதிர்ச்சி கலந்த புன்னகையுடன்  பார்த்துக்கொண்டிருந்த தன்னவளிடம், ‘போய்ட்டு வரேன்’ என்பது போல தன் தலையை அசைத்தவன், அனைவரிடமும் விடைபெற்று கொண்டு தன் சகாக்களுடன் அங்கிருந்து கிளம்பினான் ராவணன்.

ஆக, பல வாதங்களுக்கும் பிரதிவாதங்களுக்கும் பிறகு, அஜூதியா ராவணன் மீது வைத்திருந்த உண்மையான நேசத்தின் முன் ஜானகியின் மனமும் இறுதியில் இறங்கி வந்திருந்தது.

@@@@

மறுநாள் சொன்னது போலவே வேலாயுதம், அவரது மனைவி மீனாட்சி மற்றும் அவரது இளைய மகள் மீராவையும் அழைத்துக்கொண்டு தன் சகாக்களோடு ராவணன் வந்திருக்க, ஆஷ்ரமமே விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது.

மீனாட்சியிடமும் வேலாயுதத்திடமும் பேசிய பிறகு ஜானகிக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.

ராவணன்–அஜூதியா திருமணம் முடிந்ததும், அடுத்த நல்ல முகூர்த்தத்திலேயே அனைவரின் திருமணமும் நடக்கப் போகிறது. 

ஆக, அஜூதியா மட்டும் அங்கே தனியாக வாழப்போவதில்லை. அவளுக்குத் துணைக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே அவரது மனதிற்கு நிம்மதியை கொடுத்திருக்க, நேற்று போல் இல்லாமல் இன்று சற்று மகிழ்ச்சியாகவே காணப்பட்டார்.

அஜூதியாவுக்கும் அவர்களை ஏற்கனவே தெரியும் என்பதால், பேச்சுவார்த்தைகள் எல்லாம் சுமுகமாகவே போய்க்கொண்டிருந்தது.

ஏற்கனவே பேசியது போலவே வேலாயுதத்திற்கு வேண்டப்பட்ட ஐயரும் அங்கே வந்துவிட, ராவணன்–அஜூதியாவின் திருமணத் தேதியும் கையோடு நிச்சயிக்கப்பட,

“இவ்வளவு சீக்கிரமாவா!? நாள் ரொம்ப கம்மியா இருக்கே, அதுக்குள்ள எப்படி எல்லா ஏற்பாடும் பண்றது?” என்று ஜானகி தயங்கவும்,

“உங்களுக்கு நாள் ஓகேவான்னு மட்டும் பாருங்க, ஏற்பாடெல்லாம் நாங்க பாத்துக்குறோம்” என்ற வேலாயுதத்தின் நம்பிக்கையான பேச்சில் ஜானகியும் மகிழ்ச்சியோடு சம்மதம் சொல்ல, 

பிறகு என்ன அஜூதியாவும் ராவணனும் புன்னகையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அவர்களின் சந்தோஷத்தை பார்த்த அனைவருக்கும் அவ்வளவு மன நிறைவாக இருந்தது.

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top