ராவணா 42

கல்யாண மண்டபமே விருந்தினர்களால் நிரம்பி வழிய, திருமண வீடு களைகட்டியது.

அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்க அஜூதியாவுக்கு மட்டும் காலையில் எழுந்ததில் இருந்தே ஒருவிதமாய் பதற்றமாகவே இருந்தது. 

இந்த தவிப்பும் படப்படப்பும் இன்று வந்தது இல்லை, திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே துவங்கியது தான், ஆனால் நேற்று ராவணன் அருகில் இருந்ததால் எல்லாவற்றையும் மறந்திருந்தவளுக்கு இப்பொழுது அனைத்தும் நினைவிற்கு வந்து படுத்தி எடுக்கிறது.

திருமண தேதி முடிவானதில் இருந்தே காலில் சக்கரம் கட்டி ஓடிக்கொண்டிருந்த ராவணனுக்கு, திருமண வேலையுடன் அவன் புதிதாகத் துவங்கவிருக்கும் கார் ஷோரூமின் புதிய கிளையின் வேலையும் சேர்ந்துகொள்ள, அஜூதியாவுடன் அலைபேசியில் பேசிக்கொண்டதோடு சரி, பெரிதாக இருவரும் சந்தித்துக்கொள்ள நேரம் அமையவில்லை.

இடையில் வேணியின் திருமணத்தை ஒரு தமையனின் ஸ்தானத்தில் இருந்து சிறப்பாக ராவணன் நடத்தி கொடுத்திருக்க, ராவணன் மீது ஜானகிக்கு நன்மதிப்பு இன்னும் கூடிக்கொண்டே போனது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள நேரம் அமையவில்லையே தவிர, நாட்கள் நெருங்க நெருங்க இருவரின் மனம் முழுவதும் அவ்வளவு பரவசம். அதே பரவசத்துடனே ஒருவரை எண்ணி மற்றொருவர் காதலில் இன்பமாய் திளைத்துக்கொண்டிருந்தனர்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க, திருமணத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில், திருமணத்திற்காக தைக்கக் கொடுத்த ப்ளவுசை வாங்குவதற்காக வந்திருந்த அஜூதியா, அங்கே தற்செயலாக ஆத்மனை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது.

அப்படியே சென்றுவிட்டால் மரியாதையாக இருக்காது என்று எண்ணி, மரியாதை நிமித்தமாக அவனைப் பார்த்து புன்னகைத்தவளிடம் அடுத்த நொடியே,

“ராவணன் அந்தப் பொறுக்கி அவனுக்காகத்தான் என்னை வேண்டாம்னு சொன்னியா?” என்று அவன் கேட்க, அதிர்ந்துவிட்டாள் அஜூதியா.

“ஏய் வார்த்தையைப் பார்த்துப் பேசு” தன்னவனை அவன் பொறுக்கி என்றதும் கோபம் வந்துவிட, ஒருமையில் விரல் நீட்டி எச்சரித்தாள்.

“என்னடி ஹான்? உனக்கு எல்லாம் கோபம் ஒன்னுதான் கேடு. பணம் இருந்தா ஒருத்தன் யார், என்னன்னு எல்லாம் பார்க்குறதே இல்லை. பொறுக்கியோ, ரௌடியோ அவன்  கூப்பிட்டதும் போயிட வேண்டியது. சீ உன்னை”

அவன் சொல்லி முடிப்பதற்குள், எங்கிருந்துதான் அவளுக்கு அவ்வளவு தைரியம் வந்ததோ, ஓங்கி ஒரு அறை விட்டாள்.

அதிர்ச்சி ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம் என இரண்டும் சேர்ந்துகொள்ள,

“ஷட் அப்” என்று மூச்சு வாங்கக் கத்தியவள், அதன் பிறகு ஒரு கணம் கூட அங்கே நிற்கவில்லை.

விறுவிறுவென அங்கிருந்து வந்தவளுக்கு மனம் நிலைகொள்ளவே இல்லை.

தான் சொன்ன ஒரே காரணத்திற்காக மட்டுமே விக்ரமின் உடம்பில் உயிரை மட்டும் மிச்சம் வைத்திருக்கும் தன்னவன், தனக்கு ஒன்று என்றால் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை நன்கு அறிந்தவளுக்கு இதைப் பற்றி தன்னவனிடம் சொல்லி இந்தப் பிரச்சனையைப் பெரிதாக்குவதில்  சுத்தமாக விருப்பமில்லை.

சண்டைகளும்! காயங்களும்!

வலிகளும்! கண்ணீரும்! போதும் போதும் இனியாவது அவனோடு அவளுக்கு நிம்மதியாக வாழ வேண்டும்.

இப்போதுதான் எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. 

முதலில் திருமணம் நன்றாக முடியட்டும் தேவைப்பட்டால் சொல்லிக்கொள்ளலாம்,  மற்றபடி இதைப் பற்றி யாரிடமும் வாய் திறக்கக் கூடாது என்று முடிவெடுத்தவளுக்கு, ஆத்மனை நினைத்து அன்று துவங்கி இதோ இன்று இந்த நிமிடம் வரை மனதிற்குள்  நெருடலாகவே இருந்தது.

எவ்வளவு நேரத்திற்கு அப்படியே அமர்ந்திருந்தாளோ, இந்திரா மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை அழைத்து கொண்டு அறைக்குள் நுழையவும், கடந்த காலத்தில் இருந்து நிகழ் காலத்திற்கு திரும்பியவளுக்கு தன் மீதே கோபம் வந்தது.

எத்தனை போராட்டங்களுக்கு பிறகு அவளது காதல் கைகூடியிருக்கிறது, இந்த நேரத்தில் தேவை இல்லாததையெல்லாம் சிந்தித்து கொண்டிருக்கும் தன் மனதை கடிந்துகொண்டவள், தன் மனதில் உள்ள தேவை இல்லாத நினைவுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தனது நீண்ட நாள் கனா நிறைவேற போகும் ஆவலில் உற்சாகமாக தயாரானாள்.

தங்க நிற பட்டில் மணப்பெண் கோலத்தில் தங்கம் போல ஜொலித்த அஜூதியா மணவறைக்கு அழைத்து வரப்பட, பார்க்க பார்க்க ராவணனுக்கு திகட்டவில்லை.

அஜூதியாவும் ராவணனையே பார்த்தபடி நடந்து வர, இருவரின் பார்வைகளும் ஒன்றை ஒன்று முத்தமிட்டு கொண்டன.

“அழகா இருக்கடி பொண்டாட்டி” தன் அருகில் வந்து அமர்ந்தவளின் காதில் கிறக்கமாக கூறினான்.

“நீயும் தான் புருஷா” வெக்கம் பிடிங்கி திங்க மென் குரலில் கூற அதற்கே காது மடல் சிவக்க சிலிர்த்தடங்கினான் ராவணன்.

“அண்ணன் இன்னும் மந்திரம் முடியல பொறுமை பொறுமை” என்ற தேவராஜின் கேலியில் அனைவரும் சிரித்தார்கள்.

ஆனால் அதுவே அவர்கள் சிரிக்க இருக்கும் இறுதி சிரிப்பு, இனி பல நாட்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் புன்னகை என்ற ஒன்றே வராது என்பதை அறியாது மனம் விட்டு சிரித்தவர்களின் சிரிப்பு அப்படியே உறைந்து போனது. விஷம புன்னகையுடன் அவர்களை நோக்கி சீருடை அணிந்த காவலர்களுக்கு மத்தியில் நடந்து வந்த ஆத்மனை பார்த்ததும்.

மணமேடையில் இருந்து எழுந்த ராவணன் தன் முன்னால் கேலி புன்னகையுடன் நின்றிருந்த ஆத்மனை அழுத்தமாக பார்த்துவிட்டு அருகில் இருந்த காவலரிடம்,

“என்ன விஷயம்” என்றான். 

“நீங்க போதை மருந்து கடத்துறீங்கன்னு தகவல் வந்திருக்கு, ட்ரக்கை ஓட்டிட்டு வந்த டிரைவர்ஸ் உங்க பேரைதான் சொல்றாங்க. அதான் விசாரணை பண்ண உங்களை அழைச்சிட்டு போக வந்திருக்கோம்” என்றார் அந்த காவலாளி.

“நான் அதுபோல எதுவும் பண்ணல, யாரோ ஜோடிக்கிற பொய் கம்பளைண்ட்க்கெல்லாம் என்னால வர முடியாது கிளம்புங்க” என்ற மறுநொடி, 

“நீ என்ன உத்தமனா ஓவரா கேள்வி கேக்குற வா டா” என்ற ஆத்மன் ராவணன் மீது கை வைத்த அடுத்த கணம், 

“ஏய்” என்று ராவணனின் சகாக்கள் சீறி எழ, 

“என்னங்க டா ஓவரா துள்ளுறீங்க அத்தனை பேரையும் உள்ள தள்ளிருவேன்” என்றான் ஆத்மன் சீற்றமாக.

அந்நேரம் ராவணனோ தன் சகாக்களை தன் பார்வையாலே அடக்கியவன்,

ஆத்மனை அழுத்தமாய் பார்க்க அவனோ,

“என்ன டா பாக்குற வா” என்றான் அதிகாரமாக,  

அப்பொழுது அவசரமாக யாரிடமோ அலைபேசியில் பேசிவிட்டு அங்கே வந்த வேலாயுதமோ,

“என்ன சார் இது என்ன நடக்குதுன்னு பாக்குறீங்கல்ல அட்லீஸ்ட் கல்யாணமாவது முடியட்டும்” என்றார் தன்மையாக.

அதை கேட்டு அலட்சியமாக இதழ் வளைத்த ஆத்மன், 

“நான் என்ன விருந்து சாப்பிடவா வந்திருக்கேன் கல்யாணமாம் கல்யாணம் வா டா” என்று அவனை அழைத்து செல்லவும் தாங்க முடியாது அழுது கொண்டே அவர்களுக்கு இடையே வந்த அஜூதியா,

“அவர் எந்த தப்பும் பண்ணல சார் அவர் எங்கையும் வரமாட்டார்” என்று கூறி ராவணனின் மேல் இருந்த ஆத்மனின் கரத்தை தட்டிவிட்டு ராவணனை அணைத்து கொண்டாள்.

அஜூதியா தன் கரத்தை தட்டி விடவும் கொதித்து போன ஆத்மன் சற்றும் யோசிக்காது, “ஏய்” என்று கத்தியபடி அஜூதியாவை நோக்கி தன் கரத்தை உயர்த்திவிட, 

“ஏய்” அவனை விட மூன்று மடங்கு அதிகமான கர்ஜனையில் தன் தாடை இறுக, ஆத்மனின் மணிக்கட்டை இறுக்கமாக பிடித்திருந்தான் ராவணன்.

தன்னவள் மீது கை ஓங்கினால் விடுவானா என்ன?

ராவணன் தன் கையை பிடிக்கவும் ஆத்மன் அவன் சட்டையை கொத்தாக பிடித்திருக்க, நொடிகள் கடக்க கடக்க ராவணனின் கழுத்து நரம்புகள் புடைத்தெழ, ஆத்மனின் அழுத்தமான முகம் வலியில் கன்றிச் சிவக்கத் துவங்கியது, இன்னும் கொஞ்சம் அழுத்தினால் மணிக்கட்டு எலும்பு உடைந்து விடும் என்கின்ற நிலைமையில், 

“ராவணா” என்ற அஜூதியாவின் தவிப்பான குரலில் தன் பிடியை தளர்த்திய ராவணன் ஆத்மனின் பிடியில் இருந்த தன் சட்டையை விடுவித்துவிட்டு, 

“வரேன்” என்றான் ராவணன்.

“இப்பவே” வலி உயிர் போக அதிகாரமாய் கூறினான் ஆத்மன்.

“போகாதீங்க நான் உங்கள விட மாட்டேன்” அவனை அணைத்துப் பிடித்துக்கொண்டு கதறினாள் அஜூதியா.

உடனே சீற்றமான தன் முகத்தை மென்மையாக மாற்றி கொண்ட ராவணன் அஜூதியாவின் வதனத்தைத் தன் கரங்களால் பற்றிக்கொண்டு,

“அழாத டா” அவளது கண்ணீரை துடைத்தபடி கூறினான். 

எரிச்சலில் தன் சிவந்த மணிக்கட்டை பார்த்தபடி தன்னுடன் வந்த காவலர்களை பார்த்தவன்,

“என்னடா பார்த்துட்டு இருக்கீங்க அவனை இழுத்துட்டு வாங்க டா” என்று கட்டளையாக கூறிவிட்டு விருவிருவென வெளியேறிவிட, காவலர்களோ ராவணனை நெருங்கவும்,

“வரேன்னு சொன்னேன்ல” கண்கள் சிவக்க ஒரு அதட்டு தான், அவர்களே தள்ளி சென்று நின்றுகொண்டனர்.

இப்பொழுது தன் கைகள் தாங்கியிருந்த தன்னவளின் வதனத்தை பார்த்தவன்,

“அழாத டா நீ அழுதா நான் ரொம்ப வீக்கா ஆகிடுவேன் என்னால  அடுத்து யோசிக்கவே முடியாது. ப்ளீஸ் எனக்காக  சிரி டா” என்றான்.

“நான் அழமாட்டேன்” வடிந்து கொண்டே இருக்கும் கண்ணீரை துடைத்து கொண்டே சிரிக்க முயன்றாள் ஆனால் முடியவில்லை.

“ப்ச் தியா ஒன்னும் ஆகாது. நீ என்னை நம்புறல” 

“ஆம்” என்பதாய் வேகமாக தலையாட்டினாள்.

“இது போதும் எனக்கு” என்றவனோ அவள் நெற்றியில் இதழ் பதித்து,

“நிம்மதியா ரெஸ்ட் எடு, அப்புறம் இன்னைக்கு நைட் ரெஸ்ட் எடுக்க எல்லாம் விடமாட்டேன்” தன்னவளின் மனதை மாற்றும் பொருட்டு அவள் காதில் குறும்பாக அவன் கூற, அதை கேட்டு கண்ணீரோடு சிரித்தாள் அஜூதியா.

அதே நேரம் மீராவோ ஒருவித படபடப்புடன் கண்ணீரோடு சந்துருவை பார்க்க, எல்லாம் சரியாகிவிடும் என்பது போல அவள் கரத்தை பிடித்து கொண்டவனுக்கு ஆத்மனை கொன்று போடும் ஆத்திரம் வந்தது.

அப்பொழுது, “இவனுங்கள இப்பவே போடுறேன். நீ எங்கையும் போகாத அண்ணா நான் போறேன்” என்று சீறிக்கொண்டிருந்த தேவராஜை,

“நான் பார்த்துக்கிறேன் டா” என்று அடக்கிய ராவணன், அனைவரையும் ஒருகணம் பார்க்க, 

“நீ போ ராவணா நான் இருக்கேன் லையார்ட்ட பேசிட்டேன்” என்ற வேலாயுதம் அவன் தோளை தட்ட, ராவணனின் பார்வை ஒரு ஓரமாய் இடிந்து போய் அமர்ந்திருந்த ஜானகியை பார்த்தது. 

அவனுக்கு அவரை அப்படி பார்த்ததும் என்னவோ போல் ஆகிவிட, தன் கையை பிடித்து கொண்டு அழும் தன்னவளை பார்த்துவிட்டு தன் சகாக்களை பார்க்க அவன் பார்வைக்கு அர்த்தம் புரியாதவர்களா என்ன? 

“நாங்க பார்த்துக்கிறோம் அண்ணா” அனைவரும் ஒன்று போல சொன்னார்கள்.

பின் இந்திரா வந்து அஜூதியாவை பிடித்துக்கொள்ளவும் தன் கரத்தில் இருந்த அஜூதியாவின் கரத்தை வலுக்கட்டாயமாக பிரித்தெடுத்து, வலி நிறைந்த அவள் விழிகளை வலியுடன் பார்த்தபடி அங்கிருந்து சென்றான் ராவணன்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top