31 – விதி விளையாடிய விநாடி!

அத்தியாயம் : 31

நகை கடையிலிருந்து பொருட்களை வாங்கி முடித்து வெளியே வந்த ராஜகுமாரன் கையில் அணிந்திருந்த மணியை எதார்த்தமாய் பார்த்தான். மணி இரண்டு என்று காட்டியது. வயிற்றுக்குள் பசி எடுப்பது போல தோன்றவும், “மாமா… சாப்பிட்டு போகலாமா?” என்று நகை கடைக்கு அருகில் இருந்த ஜிஆர்டியின் ஐந்து நட்சத்திர விடுதியை பார்த்துவிட்டு கேட்டான்.

“ஹ்ம்ம் போலாம்ப்பா” என்றவுடன், அனைவரையும் அந்த ஆடமபர உணவு விடுதிக்குள் அழைத்து சென்றான்.

அங்குள்ள இருக்கைகளில் அனைவரும் அமர்ந்ததும், அவர்களின் விருப்பங்களைக் கேட்டு ஒவ்வொருவருக்கும் பிடித்தமான உணவுகளைப் பணிவோடு அவனே தேர்ந்தெடுத்துக் கூறினான். உணவு பரிமாறப்படும் வரை அனைவரிடமும் உற்சாகமாகப் பேசியவன், “என்ன மாமா, கல்யாண வேலைகளெல்லாம் எப்படி போகுது? சொந்தக்காரங்க எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்துட்டீங்களா?” என்று பாஸ்கரிடம் அக்கறையுடன் விசாரித்தான்.

“வெளியூர்காரவங்களுக்கு பத்திரிக்கை கொடுத்தாச்சிங்க தம்பி. இனி தெருவுல உள்ளவங்களுக்கு மட்டும்தான் பத்திரிக்கை கொடுக்கணும்” என்று மலர்ந்த முகத்துடன் பதிலளித்தார் பாஸ்கர்.

​அச்சமயம், அவர்கள் தேர்ந்தெடுத்த உணவை மணக்க மணக்க..  தட்டுகளில் சுமந்து கொண்டு வந்த அந்த விடுதியின் இளம் ஊழியர், மேஜையில் பரிமாறிவிட்டு, “சார்… வேற எதுவாவது தேவைப்பட்டா கேளுங்க, நான் இந்தப்பக்கம்தான் இருப்பேன்” என்று கூறிவிட்டு கனிவோடு புன்னகைத்தான்.

“ஓக்கே ஷ்யர்” என்கவும், ஊழியர் நகர்ந்துவிட,.

“யாருக்கு எது வேணும்னாலும் அந்த பையன்கிட்ட ஆடர் கொடுங்க.. தயங்கிகிட்டே இருக்காதிங்க.” என்று உரிமையோடு கூறினான் ராஜகுமாரன்.

அனைவரும் வயிறாரச் சாப்பிட்டு முடித்துவிட்டு எழும்போது, அந்த ஊழியனின் சிறப்பான உபசரிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அந்த ஊழியனின் கையில் ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டை அன்பளிப்பாக திணித்தான் ராஜகுமாரன்.

அனைவரும் நட்சத்திர உணவகத்தில் இருந்து வெளியேறி வாகனத்தை அடைந்ததும், “அப்ப நாங்க கிளம்புறோம் சம்மந்தி” என்று கூறினார் வெங்கடேசன்.

“சரிங்க சம்மந்தி. நாங்களும் போயிட்டு வர்றோம்” என்று வெங்கடேசன் தம்பதியிடமும், ராஜகுமாரனிடமும் பாஸ்கரும் கற்பகமும் மனம் நிறைவுடன் விடைபெற்றனர்.

“நான் போயிட்டு வர்றேன்” என்று மூவரிடம் பொதுவாக கூறிவிட்டு தன் பெற்றோரிடன் உடன் நடந்து சென்றாள் தேவயானி.

வாகனத்தில் ஏறி அமர்ந்த தேவயானி, கிளம்பும் முன்பு ஒரு கணம்கூட தன் கண்களை இமைக்காமல் ராஜகுமாரனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அவளது அந்த ஏக்கமான பார்வைக்கு பதிலாக ஒரு வசீகரமான புன்னகையை சிந்தினான் அவன்.

அந்தச் சின்னப் பார்வைக்கே தேவயானியின் கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க, அவளது வெட்கத்தை கண்டு கொண்டவன், காதலோடு கை அசைத்து “பை…” என்றான்.

அவன் மீதான காதலைக் கண்களில் தேக்கி ‘சரி’ என்பது போல தலையசைத்தாள் தேவயானி. 

வாகனம் செங்கல்பட்டை நோக்கி வேகமாக விரைந்தது.

​வழியில், வாகனத்தின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த தேவயானியின் மனம் முழுவதும் ராஜகுமாரன் தன் மீதும், தன் பெற்றோரின் மீதும் பொழிந்த அன்பையும் அக்கறையும் நினைத்து மனதிற்குள் இன்ப அலை மோதி கொண்டிருந்தது. 

‘தான் எந்த நிலையில், அந்த பங்களாவிற்குள் நுழைந்தேன். ஆனால் இன்று அதே வீட்டிற்கு மருமகளாக, இந்த உலகமே வியக்கும் அளவுக்கு, ஒரு கோடீஸ்வரனின் ராணியாக, மாற போவதை’ நினைத்து அவளுக்கு பெருமையாக இருந்தது. 

அதைவிட ராஜகுமாரன் காட்டிய தூய்மையான பாசமும், மரியாதையும் அவளது இதயத்தை மிகவும் கவர்ந்தது. ‘தானும், அவர் குடும்பத்து ஆட்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்’ என்று நினைத்து கொண்டாள்.

வீட்டை அடைந்ததும், வாகனத்தில் இருந்து துணி பைகளை குமார் ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்க, மூவரும் வீட்டிற்குள் கொண்டு சென்றார்கள். 

அவர்கள் அத்தனை பெரிய பைகளுடன் உள்ளே நுழைவதைப் பார்த்த பக்கத்து வீட்டு பெண்மணி, தனக்குள் எழுந்த இயல்பான ஆர்வத்தை அடக்க முடியாமல் வாசலுக்கே வந்து, “என்னம்மா தேவயானி… இத்தனை பையோட வந்து இறங்கியிருக்கீங்க? கல்யாணத்துக்கு துணியெல்லாம் எடுத்தாச்சா?” என்று ஆவலோடு விசாரித்தாள்.

​

கற்பகம் புன்னகையோடு அவளை உள்ளே அழைத்து, ராஜகுமாரன் வாங்கி தந்த அத்தனை உடைகளையும், நகைகளையும் ஆசையோடு எடுத்துக் காட்டினாள். 

அதை பார்த்த அந்த பெண்மணி கண்களை அகல விரித்து, “அடேயப்பா… இப்படியொரு மாப்பிள்ளையை சல்லடை போட்டு தேடினாலும் உனக்கு கிடைச்சிருக்க மாட்டாங்க. கொடுத்து வச்ச பொண்ணும்மா நீ… இப்பவே மாப்பிள்ளை இப்படி உங்களை பார்த்துகிறார்ன்னா, கல்யாணத்துக்கு அப்புறம்  உன்னை ராணி மாதிரி பார்த்துக்குவாரு போல இருக்கே” என்று மனதார கூறிவிட்டு, “எல்லாம் நல்லா இருக்கு. நகையை போட்டுக்கம்மா. கல்யாண பொண்ணு நகையில்லாம இருக்கிறது பார்க்க நல்லாயில்லை” என்று அக்கறையோடு கூறினாள்.

“ஆமா மாப்பிள்ளை வீட்டுக்கு போனதும் நகையை போட்டுக்க சொன்னாரு. சுவாமி படத்துக்கு முன்னாடி நகையை வச்சு, சுவாமி கும்பிட்டுட்டு எடுத்து போட்டுக்கம்மா” என்று கற்பகம் கூறவும்,  நகைகளை எடுத்து சுவாமி படத்தின் முன்னால் வைத்து கற்பூரம் காட்டி, சுவாமி கும்பிட்டுவிட்டு நகையை எடுத்து அணிந்து கொண்டாள். தாய்க்கும் தந்தைக்கும் வாங்கிய நகைகளை அவர்களிடம் கொடுத்தாள். “நாங்க கல்யாணத்துக்கு போட்டிருக்கிறோம்மா” என்றனர் அவர்கள். 

அதனால் அவர்கள் நகையை பீரோவில் வைத்தார்கள்.

நகை அணிந்து நின்றிருந்த தேவயானியை பார்த்து, “ஹாங்… இப்பத்தான் உன்னை பார்க்க கல்யாண பொண்ணு மாதிரி தெரியுற” என்று மனதார பக்கத்து வீட்டு பெண்மணி பாராட்டினாள். 

உடனே தேவயானிக்கு ஒரு யோசனை தோன்ற, “அக்கா என்னை நாலைந்து போட்டோ எடுங்க. அவருக்கு போட்டோ அனுப்பணும்” என்ற தன் போனை அவளிடம் நீட்ட,

“கொடும்மா” என்றவள் ‘இப்படித் திரும்பு’, ‘அப்படி நில்லு’ என்று அழகாக அவளை வழிநடத்தி விதவிதமான கோணங்களில் பல படங்களை எடுத்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ்க்கா” என்று நன்றி சொன்னவளிடம்,

“இருக்கட்டும்மா. போயிட்டு வர்றேன்” எனக் கூறிவிட்டு அந்த பெண்மணி வீட்டை பார்த்து அகல, 

​உடனே அவள் அனுப்பிய புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் ராஜகுமாரனுக்குத் தட்டிவிட்டாள் தேவயானி.

​மறுமுனையிலிருந்து சில நொடிகளில்கூடத் தாமதிக்காமல், “சூப்பர்டி!” என்ற குறுஞ்செய்தி வந்து சேர்ந்தது. அந்த ஒற்றை வார்த்தையில் அவளது முகம் வெட்கத்தில் மலர்ந்தது.

அவனை நினைத்து கொண்டே அவன் வாங்கி கொடுத்த அனைத்து சுடிதாரையும் கவரில் இருந்து பிரித்து எடுத்து வைத்தாள். “அம்மாடி எல்லாம்  இந்த பையிலே இருக்கட்டும். அப்பத்தான் நீ உன் வீட்டுக்கு எடுத்துட்டு போக வசதியா இருக்கும்” என்றாள் கற்பகம்.

“சரிம்மா” என்றவள் அனைத்து சுடிதாரையும் கவரில் இருந்து பிரித்து, அதிலிருந்த அட்டையை மற்றும் குண்டூசியை நீக்கி, அந்த பையிலே நேரத்தியாக அடுக்கி வைத்தாள்.

மறுநாள் தேவயானி கல்யாண சேலையை தவிர்த்து, மற்ற சேலையை அனுப்பிவைத்தான், “எல்லாத்தையும் சரியா இருக்கானு போட்டு பார்க்க சொன்னாரும்மா” என்று குமார் சொல்லி கொடுத்துவிட்டு சென்றான்.

ஒவ்வொரு சேலையையும் ஜாக்கெட்டையும் எடுத்து ஆசையாக பார்த்தவர்கள், தைத்த ஜாக்கெட்டை போட்டு பார்த்துவிட்டு, “சரியாத்தான் இருக்கு” என்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

இப்படி நாளுக்கு நாள் அவனுடன் பேசும் அந்தச் சிறிய தருணங்களும் அவனது நினைவுகளும் அவளுக்கு தேனாய் இனித்தன, ‘எப்போது அவருக்கு மனைவியாக நேரில் பேசுவோம்’ என்று மனதிற்குள் தவித்தாள்.

இறுதியில் அவர்கள் கல்யாண நாள் கூடி வந்தது. கல்யாணத்திற்கு முந்திய நாள் காலையிலே, அவனது அனைத்து கடையும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, ஒவ்வொரு கடைகளின் முன்பு அவ்விருவரின் புகைப்படம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு, ‘அனைவரும் வருக’ என்ற வாசகம் இடம்பெற்றது. 

அவன் வீட்டின் முன்னால் இருபுறமும் பச்சை வாழைமரத் தோரணங்களும், நிலை வாசலில் மாவிலை தோரணங்களும், வீடு முழுவதும் பூக்களால் தோரணங்களும் தொங்கவிட்டிருந்தனர். வீட்டின் முகடு முழுவதும் வண்ண விளக்குகளின் மின்னொளியில் ஏற்கனவே பிரம்மாண்டமாக இருந்த வீடு மேலும் அட்டகாசமாய் காட்சியளித்தது.

அதேபோல, செங்கல்பட்டில் உள்ள தேவயானியின் எளிய வீட்டையும் ஆடம்பரமாக அலங்கரிக்கும்படி குமாருக்கு கட்டளையிட்டிருந்தான் ராஜகுமாரன். அவனும் தன் ஆட்களை வைத்து அந்தச் சிறிய வீட்டைக்கூட ஒரு கல்யாண மண்டபம் போல அழகாக அலங்கரித்து முடித்திருந்தான்.

மாலை ஆறுமணியளவில் தேவயானியை மண்டபத்திற்கு அழைத்து செல்ல குமார் வந்திருந்தான். 

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம், “நாளைக்கு காலையில அஞ்சு மணிக்கு பஸ் வரும். எல்லாரும் அதுல ஏறி வந்திருங்க” என்று ஒருதரம் கூறிவிட்டு வாகனத்தில் ஏறி கொண்டாள் கற்பகம்.

நெருங்கிய உறவினர்கள் சிலர் இருக்க, அவர்களை ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் மண்டபத்திற்கு அழைத்து சென்றார்கள்.

அவள் மண்டபத்திற்கு வந்ததும், ராஜகுமாரனும் வரவும் சரியாக இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் புன்னகை ததும்பிய  பார்வையுடன் பார்த்து கொண்டனர்.

அப்போது புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளவும், இருவருக்கும் ஒப்பனை கலைஞர்கள் மூலம் ஒப்பனை செய்து கொண்டார்கள்.

இருவருக்கும் அலங்காரம் முடிந்து வெளியே வந்தபோது, அவர்களை ஒன்றாக நிற்க வைத்து விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுத்தார்கள்.

அவனருகில் அவன் தோளில் கை வைத்து நெருங்கி நிற்கும்படி புகைப்பட கலைஞர்கள் தேவயானியிடம் கூறியபோது, அவளது இதயம் சந்தோஷத்தில் குதுகலித்தது. ‘அன்பும் அக்கறையையும் வெளிப்படுத்தும் இவர்மீது, கை வைத்து அருகில் நிற்க நான் என்ன தவம் செய்தேனோ?’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டாள் தேவயானி.

அவளது இடையில் கை கொடுத்து பிடித்து, அவனது கன்னத்தை ஒற்றை கையால் தாங்க வேண்டும் என்று ராஜகுமாரனிடம் கூறியபோது, அவள் கண்ணில் தெரிந்த தூய்மையான காதலை பார்த்தவன், ‘இவ்வளவு அன்பும், அடக்கமும், நல்ல குணமும், திறமையும் கொண்ட பெண்ணை திருமணம் செய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று அவன் மனதிற்குள் நினைத்து கொண்டான்.

அடுத்து அவனது மார்பில் முகம் பதிக்கும்படி தேவயானியை கூறவும், ஆசையாக அவனை கட்டி கொண்டு, அவன் மார்பில் முகம் புதைத்தாள். அந்த நிமிடம் தானும் இயல்பாய் எழுந்த கைகளுடன் அவளை கட்டி கொண்டான். “சூப்பர் சார் அப்படியே அசையாமல் இருங்க” என்று புகைப்பட கலைஞர்கள் உற்சாகப்படுத்தினார்கள். 

அவளது நெற்றியில் முத்தம் கொடுக்கும்படி ராஜகுமாரனை பணிக்க, அச்சமயம் அவளது குட்டி நெற்றியில் ஆத்மார்த்தமாய் முத்தமிட்டான்.

சிறிது நேரத்தில் புகைப்படப் பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைய, மாலை நேரத்தின் நிச்சயதார்த்தச் சடங்குகள் தொடங்கியது. 

இரு வீட்டாரும் கூடியிருந்தனர். வந்திருந்த அனைத்து உற்றார் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர்

அடுத்த கணம் உடனே பெரியவர்கள் இருவருக்கும் திருநீர் பூசிவிட, அவனை தேடி நாளைக்கு திருமணத்திற்கு வர முடியாது என்றும் அதனால் இன்று வந்ததாக சொல்லி சில முக்கிய பிரமுகர்கள், பரிசு பொருட்களை கொடுத்துவிட்டு சென்றனர்.

இப்படியாக மேடையை தேடி வந்த கூட்டம் ஒய்ந்து முடிய பத்து மணியானது. “நீ போய் ரெஸ்ட் எடு. யாராவது வந்தா நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி அவளை மணமகள் அறைக்குள் அனுப்பிவைத்தான்.

மறுநாள்… முகூர்த்தம் பத்து மணிக்குத்தான் என்றாலும், எட்டு மணியளவிலேயே தேவயானியை எழுப்பிவிட்டாள் கற்பகம்.   

​அவள் குளித்து முடித்து வந்ததும், ஒப்பனைக்கலைஞர்கள் அவளுக்குத் தேவையான அலங்காரங்களைச் செய்யத் தொடங்கினர். மறுபுறம் ராஜகுமாரனும் பட்டுச் சட்டையும் வேட்டியும் அணிந்து மங்களகரமாக தயாராகி கொண்டிருந்தான்.  

ஐயர் ஓமகுண்டத்தை வளர்க்க ஆரம்பித்ததும், இருவரையும் சபைக்கு வரும்படி அழைத்தார். 

சிறிது நேரத்தில் இருவரும் மணமக்கள் அலங்காரம் முடிந்து வந்தமரவும், மந்திரங்களை ஓத ஆரம்பித்தார். 

அவளை தங்க சரிகைள் மின்னும் ரோஸ் வண்ண  பட்டுப்புடவையிலும், ஜொலிக்கும் வைர நகைகளின் பிரகாசத்திலும் பார்த்த ராஜகுமாரனுக்கு கண்களை எடுக்கவே மனம் வரவில்லை.

“அப்படியே மின்னுறடி நைட்டு இந்த கலெக்ஷனை போட்டுட்டு என் ரூம்க்கு வா” என்று அவளது காதோரமாய் கிசுகிசுத்தான். 

அதில் வெட்கம் வந்துவிட, அனைவரின் முன்னிலையிலும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அமர மிகவும் சிரமப்பட்டாள் தேவயானி.

கொஞ்சம் கொஞ்சமாக மண்டபத்தில் கூட்டம் கூடியது. வந்தவர்களை அமர்ந்தவாக்கிலே வரவேற்றான் ராஜகுமாரன்.

ஐயர் ஓமகுண்டத்தை வளர்த்து முடிக்கவும், அனைவருக்கும் அர்ச்சதை கொடுக்கப்பட்டது. சுமார் பத்து பத்திற்கு அனைவரின் முன்னிலையில் மங்கல வாத்தியங்கள் முழங்க, தேவயானியின் கழுத்தில் தாலியை பூட்டினான் ராஜகுமாரன். அனைவரும் அர்ச்சதை தூவி மனதார அவர்களை வாழ்த்தினார்கள்.

நேற்று போலவே இன்று ஏராளமான பேர் மேடை ஏறி அவர்களை வாழ்த்த வந்தனர். தேவயானிக்கோ, ‘எப்போது தான் இந்த கூட்டம் குறையும்?’ என்று மனதுக்குள் தோன்றியது.

சுமார் மதியம் இரண்டு மணியாகவும், “சாப்பிட போகலாமாங்க எனக்கு ரொம்ப பசிக்கிது” என்று அவனிடம் தயங்கி தயங்கி கேட்டாள்.

“எனக்கும் கொலை பசி எடுக்குது. ஆனா… என்னை விட மாட்டான்க போலவே” என்றான் சலிப்புடன் சிரித்து கொண்டே கூறினான்.

“நீங்க இங்கையே நின்னுட்டு இருந்தா..  வந்துட்டேத்தான் இருப்பாங்க வாங்கங்க சாப்பிட நகரலாம்” 

ஆனால் மேடையின் கீழ் நின்றிருந்த வரிசையை பார்த்துவிட்டு அவனுக்கு அவர்களை அப்படியே விட்டுட்டு வர மனதில்லை, “முதல்ல நீ போய் சாப்பிட்டு வா. அப்புறம் நான் போறேன்” என்றவன், வெங்கடேசன் மகள் ஷீலாவை கூப்பிட்டு, அவளை சாப்பிட அழைத்து செல்லும்படியும், தான் அடுத்து சாப்பிட செல்வதாகவும் கூறினான்.

முதலில் தேவயானி சாப்பிட்டு வந்ததும், அடுத்து அவன் சாப்பிட சென்றான். அவள் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று பரிசு பொருளை வாங்கி கொண்டாள்.

சுமார் ஒரு நான்கு மணியளவில்  மக்கள் கூட்டம் ஓய்ந்துவிட, புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுக்க அழைத்தார்கள். “எப்பா அதுக்கெல்லாம் நேரமில்லை பொண்ணு மாப்பிள்ளையை வீட்டிற்கு கூட்டிட்டு போகணும்” என்றார் வெங்கடேசன்.

ஐந்து மணிக்குள் அவர்கள் வீட்டை அடைந்ததும், இருவரையும் நிற்க வைத்து ஆர்த்தி சுற்றினார்கள்  

பின்னர் ஒரு கால் மணி நேரத்தில் இருவரையும் குளிர்த்துவிட்டு வரும்படி கூறினார் மாலா.

சிறிது நேரத்தில் இருவரும் குளிர்த்துவிட்டு வரவும், பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமி கும்பிட்ட பின்னர், பால் பழம் கொடுத்தார்கள்.

இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன் 

சாய்லஷ்மி.

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top