32 – விதி விளையாடிய விநாடி!

அத்தியாயம் : 32

சுமார் ஆறு மணியளவில், திருமண சடங்குகள் மற்றும் வாழ்த்துகளுக்கு நடுவே புதுமண தம்பதியரான ராஜகுமாரனையும் தேவயானியையும், ஷீலா அவர்களின் அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் அனுப்பி வைத்தாள்.

அந்த அறைக்குள் நுழைந்தபோதே ஒரு சுகந்த நறுமணம் அவர்களை இனிமையாக வரவேற்றது.

கட்டிலை சுற்றி மல்லிகை பூக்களால் தொங்கவிடப்பட்ட தோரணங்களும், மஞ்சத்தின் மீது இதழ் விரிக்கப்பட்ட ரோஜா இதழ்களின் அலங்காரம், மங்கலான விளக்கொளியும், ஒரு சொல்ல தெரியாத மோக மயக்கத்தை கொடுக்க…

​அவற்றையெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் அருகில் நாணத்துடன் நின்றிருந்த தேவயானியிடம் இருந்த பால் செம்பை வாங்கிய ராஜகுமாரன், அதை அருகில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டுத் தன் பார்வையை அவள் மீது திருப்பினான். 

சற்றுத் தயக்கத்திற்குப் பிறகு, “முதல்ல உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்றான் அழுத்தமான குரலில்..

அவனின் அந்த எதிர்பாராத வார்த்தையில் திருதிருவென முழித்தவள், “என்கிட்ட நீங்க எதுக்குங்க மன்னிப்பு கேட்கணும்?” என்று புரியாத யோசனையுடன் அவனின் முகம் பார்த்தாள் தேவயானி.

“உன்னை ஸ்வேதானு நினைச்சு ஆரம்பத்துல ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன். அந்த குற்றணர்வு என்னைவிட்டு இன்னும் போகலைடி…” என்றான் உண்மையான வருத்தத்துடன்.

அவன் கைகளை பற்றி தன் கை மீது வைத்து கொண்டவள் இதழில் புன்னகையுடன், “அதுதான் தெரியாம நடந்த விஷயமாச்சே! அதுமட்டுமில்லாம உங்க இடத்துல வேற யாரா இருந்தாலும்கூட, அப்படித்தான் நடந்திருப்பாங்க. ஏன், நானா இருந்தால்கூட, அப்படித்தான் கோபப்பட்டிருப்பேன். அதுனால நீங்க நடந்ததை நினைச்சு இன்னும் வருத்தப்பட்டுட்டு இருக்காமல், அதையெல்லாம் மறந்துருங்க. நான் எப்பவோ அதை மறந்துட்டேன்” என்று மனதார கூறினாள்.

அவளின் பெருந்தன்மை அவனது நெஞ்சை நெகிழ்த்தியது. அவளது கன்னத்தை மென்மையாக தன் கைகளால் தாங்கியவன், “அப்புறம் உனக்கு ஒரு பிக் தேங்க்ஸ் சொல்லணும். அண்ணன் மறைந்த விஷயத்துல இருந்த மர்ம முடிச்சை கண்டுபிடிக்க நீதான் காரணமா இருந்த. ஸோ… அதுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு, அவளது குட்டி நெற்றியில் ஆத்மார்த்தமாய் ஒரு முத்தமிட்டான்.

அவன் இட்ட அந்த ஒற்றை முத்தத்தில், உடல் சிலிர்த்து போனவள், சட்டென்று அவனை வாரி அணைத்து கொண்டாள்.

அவள் தன்னை உரிமையோடு அனைத்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தவன், தானும் அவளை இறுக அணைத்து கொண்டு, அவளது நீண்ட பட்டு போன்றிருந்த தலைமுடி கோதிவிட்டான்.

அந்த நிமிடம் இருவரும் உலகத்தையே மறந்து ஒரு வேறு உலகத்திற்கு சென்று கொண்டிருப்பது போல தோன்ற, அவனது மார்பில் சாய்ந்து அவனது சீரான இதயத்துடிப்பை கேட்ட வண்ணமிருந்த தேவயானி, அவனுக்குள் முழுமையாக புதைந்துவிட்டாள்.

அவளின் நெருக்கம் அவனுள் சொல்ல தெரியாத ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்த, “தேவயானிங்கிறதை சுருக்கி அனினு உன்னை கூப்பிடவா…” என்று, மெல்ல அவளது காது மடலில் தன் உதடுகள் உரச கிசுகிசுத்தான்.

அவளுக்கு அந்த வார்தைகள் இன்ப தேன் வந்து காதினில் பாய்வது போல இருக்க, “ம்ம்ம்… அப்படியே கூப்பிடுங்க” என்றாள் நாணம் மறாத நலிந்த குரலில்..

அவளது முகத்தை நிமிர்த்தி, கைகளால் கன்னத்தை தாங்கியவன், “அனி…” என்று அழைத்தபடியே அவளது முகம் முழுவதும் காதலோடு முத்தமிடத் தொடங்கியவன், அவளது இதழ்களில் தன் இதழ் பதித்தான். 

அந்த முதல் முத்தத்தின் உத்வேகத்தில் தேவயானியின் கண்களில் இருந்த தயக்கம் மறைந்து, தன் கணவனின் கரங்களில் தன்னை முழுமையாக ஒப்படைத்தாள். 

அவளது சரணாகதியை புரிந்து கொண்ட ராஜகுமாரனின் கரங்கள் அவளது மேனியைத் தழுவ, அந்தத் தீண்டலில் தேவயானியின் மெய் சிலிர்க்க ஆரம்பித்தது. அறையின் மங்கலான விளக்கொளியும், கட்டிலைச் சுற்றித் தொங்கிக் கொண்டிருந்த மல்லிகைப் பூக்களின் நறுமணமும் அவர்களது அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

வெட்கமும் காதலும் கலந்த அந்த பொழுதில், கடந்த கால தங்களது வலிகளையும், ஏளனங்களையும், கடந்த வந்த சோதனைகளையும் மறந்து இனி ஒருவருக்கு ஒருவர்தான் முழுமையான ஆதரவு என்பதை உணர்ந்தனர்..

அப்படியாக ஆரம்பித்த அவர்களது ஊடல் எல்லை தாண்டி செல்ல, இருவராய் இருந்தவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஒருவராகினர்.

சிறிது நேரத்தில் அவளை விட்டு பிரிந்து மஞ்சத்தில் படுத்தவன், “இன்னைக்கு உண்மையிலே செம்ம டயர்ட்டா இருக்குடி. காலையில இருந்து நிற்க வச்சே சாகடிச்சுட்டாங்க” என்று புலம்பினான்.

“அப்ப தூங்குங்க” என்று பாசமாய் அவன் நெற்றியைத் தடவிக் கொடுத்துக் கூறினாள்.

அவள் நெற்றியை வருடிவிட்டதில் மகிழ்ச்சி அடைந்தவன் சிறிது தயக்கத்துடன், “உனக்கு ஓக்கே வா?” என்று அவளது கண்களை பார்த்து கேட்டான்.

சற்று  வெட்கத்துடன் மெல்ல தலையாட்டியவாறு, ம்ம்ம்…” என்று முணுங்கினாள்.

உடனே படுக்கையிலிருந்து எழுந்தவன் குளியலறைக்குள் சென்று தன்னை புத்துணர்ச்சியாக்கி கொண்டு வேறு உடைக்கு மாறி வந்தான். 

அதன் பின்னர் தேவயானியும் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, ஒரு எளிய சுடிதார் அணிந்து வெளியில் வந்தாள். 

மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பாலில் கொஞ்சம் குடித்துவிட்டு, மீதியைத் தேவயானியிடம் நீட்டினான். அதை ஆசையோடு வாங்கி மிச்ச பாலை ஆசையாக பருகினாள். 

“ஓக்கே குட் நைட்” எனக் கூறிவிட்டு மஞ்சத்தில் சரிந்தவன் சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து விட, தூங்கும் அவனை பார்த்து கொண்டிருந்தவள் பின்னர் எப்போது துயில் கொண்டாள் என்பது தெரியாது கண்ணயர்த்துவிட்டாள்.

மறுநாள் விடியற்காலையில், யாரோ வந்து கதவைத் தட்டும் சத்தம் கேட்டு விழிப்பு தட்டியது. சட்டென்று துயில் கலைந்து எழுந்து ஓடிச்சென்று கதவைத் திறந்தவளிடம், “சிஸ்டர்… இன்னைக்கு கோவிலுக்கு போகணுமாம். இரண்டு பேரும் சீக்கிரம் கிளம்பி வாங்க” என்று கூறிவிட்டு நகர்ந்தாள் ஷீலா.

அவள் சென்றதும் கதவைச் சாற்றிக்கொண்டு, அன்று அணிவதற்காக ஒரு அழகான டிசைனர் புடவையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றாள். குளித்து முடித்து புடவையை மாற்றி தன்னை அழகுபடுத்திக் கொண்டவள், இன்னும் எழாமல் உறங்கி கொண்டிருந்த ராஜகுமாரனை மென்மையான குரலில் அழைத்து எழுப்பினாள்.

அதில் பதறி எழுந்தவன்,  “அதுக்குள்ள பொழுது விடிச்சிருச்சா” என்ற முணங்கலுடன் மெத்தையில் உருண்டு கொடுத்தான்.

“எந்திரிங்க போய் குளிச்சுட்டு வாங்க. நமக்காக எல்லாரும் வெளிய காத்திட்டிருக்காங்க” என்று அவசரமான குரலில் கூறினாள். 

அதில் நிலைமையை புரிந்து கொண்டவன், “சரிங்க மேடம் குளிச்சிட்டு வர்றேன்” எனக் கூறியவாறு சோம்பல் முறித்து எழுந்தவன், அலமாரியைத் திறந்து ஒரு உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

தேவயானியோ, நேற்று களைந்து கிடந்த அறையைச் சீர்படுத்தி, அனைத்தையும் சுத்தம் செய்து முடிக்கும் தருவாயில் இருந்தாள்.

சிறிது நேரத்தில் குளியலறையிலிருந்து வெளியே வந்தவன், அறையை அவள் சுத்தம் செய்வதைப் பார்த்ததும், “இதெல்லாம் எதுக்கு நீ பண்ற? இங்க வேலைக்காரவங்கதான் இருக்காங்களே, அவங்க பார்த்துப்பாங்க விடு” என்று அக்கறையுடன் கூறினான்.

“இது நமக்குள்ள நடந்த ப்ரைவெட் விஷயம். ஸோ… இதை அடுத்தவங்களை விட்டு எப்படி க்ளின் பண்ண சொல்றது? நான் பண்றதுதான் சரிங்க” என்றவள், “இப்போ போவாமா?” எனக் கேட்டாள்.

​அவளது பொறுப்புணர்ச்சியை கண்டு வியந்தவன், அவளது அருகில் வந்து நெற்றியில் ஆசையாய் முத்தமிட்டான். “உன்னை மனைவியா அடைய நான் என்ன புண்ணியம் பண்ணேனோ தெரியலைடி!” என்றான் காதலோடு.

“இல்லைங்க நான்தான் உங்களது கைப்பிடிக்க, எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் பண்ணேனு தெரியலை. நீங்க நினைச்சிருந்த உங்க தகுதிக்கும், அந்தஸ்திற்கும், ஆஸ்திக்கும் என்னை விட அழகான, நல்ல படிச்ச வசதியான பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கலாம் ஆனா… எனக்கு வாழ்க்கை கொடுத்திருங்களே உங்களுக்கு நான் கடவுளுக்கும் மேலே பார்க்கிறேன்ங்க” என்றாள் உணர்ச்சிபூர்வமாக…

“இந்த தகுதி, அந்தஸ்த்து இதலாம் நான் பிறந்த போதே இல்லைடி.. அதெல்லாம் இப்ப வந்தது. ஆனா… ஆரம்பித்துல மாத்து துணியில்லாம ஒரே சட்டையும், டவுசரையும் ஒட்டு போட்டு ஒட்டு போட்டு ஒரு வருஷமா ஸ்கூலுக்கு போயிருக்கேன். என் அண்ணன் சம்பாத்தியத்து என்ன சமைக்க முடியுமோ அதைத்தான் சமைச்சு கொடுப்பாங்க. அதனால மத்த வீட்டுல சமைக்கிற சாப்பாட்டை பார்த்து ஏங்கிருக்கேன். சில நாள் சாப்பாடு கிடைக்காமல் தண்ணீ குடிச்சிட்டு பட்னியா கிடந்திருக்கோம்” என்று தன் கடந்த கால ஏழ்மையை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டான். 

அவன் கூறியதைக் கேட்டு ஒரு கணம்கூட நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவயானி.

“அதனால நீ உன்னை தாழ்வா நினைச்சிக்காத. இனி இந்த வீட்டை, தொழிலை, என் அண்ணன் போல, என்கூட இருந்து கவனிக்க போறவ நீதான் சரியா?” என்று பாசமாக சொன்னவன், அவளது நெற்றியில் மீண்டும் ஒரு முத்தமிட்டு, “சரி, கிளம்பலாம் வா” என்றான்.

வெங்கடேசன் மற்றும் பாஸ்கர் தம்பதியுடன் இணைந்து குடும்பத்தின் குலதெய்வக் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பினர்.

தங்கள் ஏழ்மை நிலையை வைத்து, அவர்களை மறுவீட்டுக்கு அழைக்க பாஸ்கர் தயங்கி கொண்டிருக்கிறார் என்று தேவயானி மூலம் அறிந்த ராஜகுமாரன், “மாமா… இன்னும் ஒரு வாரம் கழிச்சி நாங்க இரண்டு பேரும் மறுவீட்டுக்கு வர்றோம். இப்ப என்னால எங்கையும் அசைய கூட முடியாது. வெளிநாட்டுல ஒரு கடை ஆரம்பிக்கிற வேலை போய்ட்டு இருக்கு. அது அடுத்த வாழ்த்துக்குள்ள முடிஞ்சிரும். அது முடிஞ்சதும் நாங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வர்றோம். உங்களால என்ன முடியுமோ அதை மட்டும் செய்ங்க. கடனை உடனை வாங்கி கஷ்டப்படாதிங்க. இப்பத்தான் உங்களுக்கு ஆப்ரேஷன் பண்ணிருக்கு. உடம்பை பார்த்துக்கங்க” என்றவன், சாப்பாடுவிட்டு கிளம்பினான்.

சுமார் இரண்டு மணியளவில் சாப்பிடுவதற்காக மீண்டும் வீட்டை அடைந்தவனிடம், “அப்ப நாங்க கிளம்புறோம் தம்பி” என்றார் பாஸ்கர்.

“ஏன் இன்னும் ஒரு வாரம் இருந்திட்டு போகலாம்ல மாமா?” என்று உரிமையுடன் ராஜகுமாரன் கூற,

“கற்பகம் வேலைக்கு போகும். கல்யாண வேலையினால போக முடியலை. அதான் கிளம்பலானு இருக்கோம். நீங்க கடை திறப்பு விழா முடிஞ்சதும், நம்ம வீட்டுக்கு பொண்ணை அழைச்சிட்டு வாங்க தம்பி” என்று தயங்கி கொண்டே கூறிவிட்டு அவனின் அனுமதிக்காக காத்திருக்க,

“நானும் சொல்லிட்டேன்ங்க. அவங்கத்தான் கிளம்புறேனு சொல்றாங்க” என்றாள் தேவயானி.

“அத்தை நீங்க வேலைக்கெல்லாம் போய் கஷ்டப்பட வேண்டாம். உங்களுக்கு மாசமாசம் தேவயானி மூலம் உங்க செலவுக்கு பணம் வந்திரும். என்னடா… பொண்ணை கட்டி கொடுத்திருக்கிற வீட்டுல இருந்து எப்படி பணம் வாங்கிறதுனு யோசிக்காதிங்க. உங்க பொண்ணை நல்லா படிக்க வச்சிருக்கிங்க. இனி, அவள்தான் என்னோட தொழிலை பார்த்துக்க போற… அவளுக்கு ஒரு சம்பளம் மாதிரி நான் கொடுக்கிறதா நீங்க நினைச்சி பணத்தை வாங்கிக்கங்க சரியா. 

இனி எனக்குனு யாரு இருக்கா. யாருக்காக நான் சம்பாதிக்கணும். இனி நீங்க மூணு பேரும்தான் என் குடும்பம். அதனால என்னை வேத்து ஆளா நினைக்காதிங்க” என்று ராஜகுமாரன் உரிமையோடு சொல்லவும்,

“அய்யோ… நாங்க உங்களை வேத்து ஆளா நினைக்கலை தம்பி. ஆனா… ஊர் உலகம் என்ன சொல்லும் பொண்ணை கட்டி கொடுத்த வீட்டுல உட்கார்ந்து சாப்பிடுறாங்கனு சொல்லும். அது உங்களுக்கும் மரியாதை இல்லை. அதான் நாங்க கிளம்புறோம்னு சொல்றேன். அப்பப்ப… வந்து நாங்க வந்து உங்களை பார்க்கிறோம் சரியா தம்பி”

“சரி… நீங்க ஒரு முடிவு எடுத்துட்டிங்க. சந்தோஷமா போயிட்டு வாங்க. நாங்க அடுத்த வாரம் வீட்டுக்கு வர்றோம்” என்றதும், அவ்விருவரையும் வாசல் வரை வந்து, இருவரும் வழியனுப்பி வைத்தார்கள்.

வெங்கடேசன் தம்பதியோ குல தெய்வம் கோவிலிருந்தே வீட்டிற்கு வந்தவுடன் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினார்கள். 

தற்போது பழைய படி வீடு வெறிச்சோடி போனது. இந்த பத்து நாளும் திருமணம் என்று சொந்தங்கள் நிறைந்து கலை கட்டிய வீடு தற்போது ஏதோ கலை இழந்ததை போல உணர்ந்தான் ராஜகுமாரன். 

“சீக்கிரம் நம்ம வீடு நிறைஞ்சிருக்கிற மாதிரி நிறைய குழந்தைங்க பெத்துக்கணும்டி” என்று கண்களில் குறும்பு மின்ன ஆசையாகக் கூறினான்..

அவனது பேச்சில் முகம் சிவக்க,  அவனது கைகளை கோர்த்தபடி அழைத்து சென்று டைனிங் சேரில் அமர வைத்து உணவு பரிமாறியபடியே, “அப்படின்னா எத்தனை குழந்தைங்க பெத்துக்கலாம்னு ஐடியா?” என்று செல்லமாக கேட்டாள் தேவயானி.

“ஒரு அஞ்சு குழந்தைங்க…” என்று மெல்லிய சிரிப்புடன் ராஜகுமாரன் கேட்க,

“ம்ம்ம்… கண்டிப்பா பெத்துக்கலாம்” என்று சந்தோஷமாக கூறினாள் தேவயானி.

ஒரு வருடம் கழித்து…

பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் தேவயானி. ஜோசியர் சொன்னது போலவே, தனக்கு தன் அண்ணனே மகனாக வந்து பிறந்துவிட்டதாக எண்ணிய ராஜகுமாரன், தன் குழந்தைக்கு ராஜவர்மன் என்றே பெயர் சூட்டினான். 

முப்பது நாட்கள் கழித்து, குழந்தையை தூக்கிகொண்டு, ராஜகுமாரனின் தொழில் சுமையை குறைக்க, அலுவலகம் சென்று அவனுக்கு உதவி புரிய தேவயானி தயங்கவில்லை.

மறுபுறம் ஸ்வேதாவிற்கு… தொடர்ந்து ஒரு வருடம் மருத்துவம் சென்று கொண்டிருந்தது. அவள் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கியது. பணம் போனால் பரவாயில்லை பின்னால் சம்பாதித்து கொள்ளலாம் என்று மகளுக்கு ஆறுதல் கூறினாள் சரளா.

ஒரு வருட முடிவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊன்றுகோலை பிடித்து நடக்க ஆரம்பித்தாள். கையும் வாயும் மட்டும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது. 

சுபம்…

 

கதையை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை படித்த உங்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இக்கதையை பற்றிய உங்களது கருத்துகளை லைக் அண்ட் கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

நன்றி.

அன்புடன் 

சாய்லஷ்மி.

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top