ராவணா 46

கழுத்தில் தாலியுடனும், நெற்றி வகிட்டில் ரத்த கறையுடனும் வந்தவளைப் பார்த்த அனைவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.

ராவணனைப் பார்க்க வேண்டும் என்று மட்டுமே அஜூதியா கூறியிருக்க, ஆனால், இப்பொழுது அவள் திரும்பி வந்திருந்த கோலம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியிருந்தது.

அனைவரும் ஆசை ஆசையாக எதிர்பார்த்த இருவரின் திருமணம் முடிந்துவிட்டது.

ஆனால், அந்தத் திருமணத்தைக் கொண்டாடவோ, மகிழவோ அங்கிருக்கும் யாராலும் முடியவில்லை.

கவலையோடும், அதிர்ச்சியோடும் அனைவரும் அஜூதியாவையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ யாரையும் பார்க்கவில்லை.

அதே நிமிர்வுடன் காருக்குள் ஏறி அமர்ந்தவள், தன் கழுத்தில் இருந்த தாலியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

அவளது எண்ணம் முழுவதும் அவனே நிறைந்திருக்க, காரின் ஜன்னலோரம் தலை சாய்த்து அப்படியே அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது, அவளிடம் பேசுவதற்காக இந்திரா செல்ல முயல, அவளைத் தடுத்த தேவராஜ்,

‘இப்பொழுது வேண்டாம்’ என்பது போலத் தலையசைக்க, அதைப் புரிந்துகொண்ட இந்திராவும் மனதில் தோழியை எண்ணி பாரம் ஏற, பெருமூச்சுடன் அஜூதியாவைப் பார்த்துவிட்டு அமைதியாக அவர்களுடனே நின்றுவிட்டாள்.

அப்பொழுது வேலாயுதத்திடம் வேகமாக வந்த லாயர்,

“நான் சொன்னது போலவே ராவணன் சாரை ஜூடிஷியல் கஸ்டடிக்கு மாத்திட்டாங்க. இப்போ ஜெயிலுக்கு ஷிப்ட் பண்ணப் போறாங்க.” என்றார்.

அதைக் கேட்ட சந்துரு அதிர்ச்சியுடன்,

“ஆனா அதுக்குள்ள எப்படி சார்?” என்று கேட்க,

“ஆத்மன் மஜிஸ்ட்ரேட் கிட்ட ஸ்பெஷல் ஆர்டர் வாங்கியிருக்கான்.”

“இப்போ என்ன பண்றது சார்?”

“இன்னும் ரெண்டு நாள் கோர்ட் லீவு. அதனால ரெண்டு நாளைக்கு அவரு அங்கேதான் இருக்க வேண்டியிருக்கும். ஆத்மன் ஏதாவது பிளான் பண்றானா தெரியல. நான் ராவணன் கிட்ட பேசியிருக்கேன். கவனமா இருக்க சொல்லியிருக்கேன். நீங்களும் அலர்ட்டா இருங்க.”

என்று கூறிய லாயரின் வார்த்தைகளைக் கேட்ட வேலாயுதத்தின் முகமும் இறுகியது.

இனி தாமதிக்கக் கூடாது என்பதை உணர்ந்தவர், அடுத்து செய்ய வேண்டிய வேலைகளில் உடனே இறங்கினார்.

@@@@@

மத்திய சிறைச்சாலையின் தலைமை ஜெயிலரின் தனி அறை அது, வெளியே நள்ளிரவு அமைதி நிலவ, அந்த அறையின் உள்ளே ஏசி குளிரில் சொகுசு நாற்காலியில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தான் ஆத்மன்.

 ஜெயிலருக்கு அவன் ஏற்கனவே பெரும் தொகையைக் லஞ்சமாகக் கொடுத்துத் தன் வசமாக்கியிருந்ததால், சிறைக்குள் இப்படியொரு ரகசிய சந்திப்புக்கு ஜெயிலர் ஏற்பாடு செய்திருந்தார்.

அறைக்கதவு திறக்கப்பட, வழிப்பறி மற்றும் பல பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற மூன்று கைதிகள்  உள்ளே வந்தனர். 

அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு ஆத்மனுக்கு தலையசைத்த ஜெயிலர் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு வெளியே நின்றுகொண்டார்.

அந்த மூன்று கைதிகளுக்கு நடுவில் சற்று உயரமாக இருந்தவனை அழுத்தமாகப் பார்த்தபடி, அவர்களுக்கு முன்னால் இருந்த டேபிளின் மீது பணக்கட்டுகளைத் தூக்கிப் போட்ட ஆத்மன்,

“முடிச்சிரு” என்றான்.

அதை கேட்ட மூவருக்கும் தலைவனான காளியோ,

“ஒருத்தனுக்கு நாங்க மூணு பேரா? யார் அவன்? அவ்வளவு பெரிய ஆளா?” என்று இகழ்ச்சியாக தன் இதழை வளைத்தவன் டேபிளில் இருந்த பணக்கட்டின் மீது கரம் வைக்கவும், 

ஆத்மனோ காளியின் முகத்தை ஆராய்ந்தபடி, 

“ராவணன்” என்க, ராவணனின் பெயரை கேட்ட அடுத்த நொடி காளியின் கரம் அப்படியே நின்றது.

காளியின் முகத்தில் வந்து போன அதிர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்த ஆத்மனோ, 

“என்ன பேரை சொன்னதும் பம்முற?” என்றான் நக்கலான சிரிப்போடு.

அதற்கு காளியோ முகம் இறுக ஆத்மனை வெறித்து பார்க்க, 

“இப்போ நீங்க மூணு பேரும் உள்ள இருக்கிறதுக்குக் காரணமே அவன்தானே? அவனைப் பழிவாங்க இதைவிட நல்ல வாய்ப்பு உனக்கு வேற எப்பவும் வராது காளி. யோசிச்சுச் சொல்லு,” என்றான் ஆத்மன் நிதானமாக.

சில நொடிகள் அறையில் நிசப்தம் நிலவியது. 

காளி ஏதோ தீவிரமாக யோசித்தான். பின்னர், அதே நிதானத்தோடு ஆத்மனை பார்த்தவன், அந்தப் பணக்கட்டை அப்படியே ஆத்மன் பக்கமாக நகர்த்தி,

“ரிஸ்க் ஜாஸ்தி சோ டீல மாத்திக்கலாம், எங்களுக்கு பணம் வேண்டாம், நாங்க இங்க இருந்து தப்பிச்சி போகணும் அதுக்கு எல்லா ஏற்பாடும் நீங்க பண்ணி தந்தா ராவணனை நாங்க போடுறோம்” என்று அலட்டிக்கொள்ளாமல் கூறினான்.

அதைக்கேட்டு வில்லத்தனமாய் தன் இதழ்களை வளைத்த ஆத்மனோ, 

“சரி, நீங்க மூணு பேரும் இங்கிருந்து தப்பிக்க நான் ஏற்பாடு பண்றேன். ஆனா எனக்கு ராவணன் உயிர் வேணும். நான் சொல்லும் பொழுது அவனை முடிச்சிருங்க,” என்றான் தீர்க்கமாக.

@@@@@

இந்திரா எவ்வளவு சொல்லியும் ஆசிரமத்திற்குச் செல்ல மறுத்த அஜூதியா, நேராக ராவணனின் வீட்டிற்கு தான் வந்து இறங்கினாள்.

வெறுவழி இல்லாமல் அஜூதியாவின் மனநிலையை கருத்தில் கொண்டு அவளை தனியே விட இல்லாமல் இந்திரா தான் அவர்களோடே அங்கே வந்திருந்தாள்.

கூடத்தில், போலிஸ் ஸ்டேஷன் சென்றிருந்த சந்துரு, தேவராஜ்  மற்றும் வேலாயுதத்தை எதிர்பார்த்து காத்திருந்த யார் முகத்தையும் அஜூதியா பார்க்கவுமில்லை.

யாரிடமும் எதுவும் பேசவுமில்லை.

நேராக தன்னவனின் அறைக்குள் நுழைந்தவள், கதவைச் சாற்றிக்கொண்டாள்.

அறைக்குள் நுழைந்தவளின் பார்வை, அனைத்து அலங்காரங்களும் கலைந்த நிலையில் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைப் பார்த்ததும், அவளது நெஞ்சம் எல்லாம் மிகவும் வலித்தது.

அந்த அறையில் தன்னவனுடன் கழித்த இன்பமான பொழுதுகளை எண்ணி பார்த்தவளுக்கு ராவணனை பற்றிய தவிப்பும் சேர்ந்து கொள்ள அவளது விழிகளில் கண்ணீர் திரண்டது.

அப்பொழுது அவளது பார்வை, ஹேங்கரில் அவன் கழற்றி போட்டிருந்த அவனது கருப்பு சட்டையின் மீது விழ, அடுத்த நொடி அதை கையில் எடுத்தவள், தன் முகத்தை அதற்குள் புதைத்துக்கொண்டாள்.

அவனது வாசம்! அவளது உயிர் கூட்டை நிரப்ப, 

அவனது நினைவு! அவளின் மனதை கொய்தது.

அவனே அருகில் இருப்பது போல அந்த சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவள் மீண்டும் உடைந்து அழுதாள்.

“ராவணா” என்று அவள் சத்தமாக அழைக்க, அவள் குரல் அந்த அறைக்குள் மட்டுமே எதிரொலிக்க,

என்னடி” என்று முறைத்தபடி அவளை நெருங்கி வந்து, அவளது இடையை வளைத்துக்கொள்ள அவளவன் தான் அங்கே இல்லை.

இறுதியில், அந்த சட்டையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடியே தரையில் இடது பக்கமாக சுருண்டு படுத்தவள், ஏதோ தன் வலது பக்கம் தன்னவனே படுத்திருப்பது போல எண்ணியபடி கண்களை மூடினாள்.

ஆனால் அவளது கண்ணீர் மட்டும்  நின்றபாடில்லை.

@@@@@

அதே நேரத்தில்,

தான் சிறை வைக்கப்பட்டிருந்த லாக்கப்பின் குளிர்ந்த தரையில், வலது பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்தான் ராவணன்.

தாலி கட்டிய அந்தக் கணம்!

அவளது நெற்றி வகிட்டில் பதிந்த தன் குருதி!

தன்னை அணைத்துக்கொண்டு அழுத அவள்!

என அனைத்தையும் எண்ணி பார்த்தவனது விழிகள் இறுக மூடிக்கொண்டன.

உடலில் உள்ள காயங்களை தாண்டி, தன்னவளின் கண்ணீர் தான் அவனுக்கு அதீத வலியை கொடுத்திருக்க, அவளது நினைவில் முழுவதுமாக மூழ்கிருந்தவன், இமைகளை மூடிய நிலையிலே அஜூதியாவை எண்ணிக்கொண்டிருந்தான்.

அவளும், அவனுக்காக அழுதபடியே அவனது கருப்பு சட்டையை அணைத்துக்கொண்டு கிடந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் தடையின்றி தழுவிகொண்டிருக்க வேண்டிய இந்த ஏகாந்த இரவில், விதியின் சதியால் 

இரு வேறு இடங்களில், ஒருவரை ஒருவர் எண்ணியபடியே கிடந்தனர்.

@@@@@

மறுபுறம், தன் வீட்டில் அமர்ந்திருந்த ஆத்மனால் ராவணனுக்கு எதிராக இவ்வளவு செய்தும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

தன்னை பார்த்துக்கொண்டே ராவணனுக்கு அஜூதியா அந்த முத்தமும், கழுத்தில் ராவணன் கட்டிய தாலி தொங்க தன்னை அவள் பார்த்த பார்வையும், அவ்வளவு அடி வாங்கியும் அசராது சிரித்த ராவணனின் சிரிப்பும் ஆத்மனின் பழி உணர்வுக்கு மேலும் மேலும் தீனி போட்டு எரிய வைத்து கொண்டே இருக்க,

“சிரிக்கவா செய்யிற” என்று கத்தியபடி மேஜை மீது இருந்த பொருட்களை எல்லாம் விசிறியடித்தவன், 

“சாவை விட ஒரு பெரிய தண்டனை உனக்கு தருவேன் டா. புருஷனுக்கும் பொண்டாட்டிக்கு இருக்கிற மொத்த திமிரையும் அடக்குறேன். அவன்னா உனக்கு ரொம்ப புடிக்கும்ல அவளை வச்சே உனக்கு வலிக்க வைக்கிறேன் டா” என்று வன்மமாக கத்தியவன், அலைபேசியை தன் கையில் எடுத்தான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top