பயந்து கொண்டே, அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்
பெண்ணவள்.
கனவில் கண்டது போல் கண்கள் சிவந்து படுக்கையில் அமர்ந்து இருந்தான்.
கையிலிருந்த பாலை அவனை நோக்கி நீட்ட.. அருகில் இருந்த டேபிள் மேல் வைக்க
சொல்லி கண்ணை காட்டினான்.
பாலை டேபிள் மேல் வைத்து விட்டு நகர முற்பட்டாள்,
ஏய் ! நில்லு..என்ன…நீ பாட்டுக்கு போற…
பின்ன என்ன பண்ணனும் என்பது போல் முழித்தாள்.
“ரூம்-அ கிளீன் பண்ணிட்டு போ” என்று கூறி விட்டு படுக்கையில் சாய்ந்து விட்டான்.
அப்போது தான் அந்த ரூமை கவனித்தாள். பெரிய அறை, உள்ளே மேலும் இரண்டு
அறை இருந்தது. ஒன்று பாத்ரூம் என்று தெரிந்தது. மீதம் ஒரு அறை என்ன என்று
கணிக்க முடியவில்லை அவளால். பொருட்கள் எல்லாம் உடைந்து , கீழே சிதறி
கிடந்தது, காலையில் உள்ளே நுழைந்த கோவத்தில், அனைத்தையும் தட்டி விட்டு
உடைத்திருப்பான் போலும்.
சீரான மூச்சு அவனிடம் இருந்து வெளி வந்தலிருந்து, தூங்கிவிட்டான் என்று உணர்ந்து
கொண்டாள்.
அப்பாடா நம் கனவு பலிக்க வில்லை, என்ற நிம்மதி பெரு மூச்சுடன், சேலையை தூக்கி
இடுப்பில் சொருகி கொண்டு, தன் கூந்தலை அள்ளி கொண்டை இட்டு விட்டு ,
அறையை சுத்தம் செய்ய ஆயுத்தமானாள்.
பொருட்களை எல்லாம் எடுத்து அடுக்கி விட்டு, உடைந்த பொருட்களையெல்லாம்
குப்பையில் போட்டு விட்டு… அறையை துடைக்க மாப்-ஐ தேடினாள், கிடைக்க
வில்லை, அதனால் சுத்தமான துணியை எடுத்து கைகளாலையே அறையை துடைத்து
முடித்தாள். துடைத்து முடிக்கும் போது இடுப்பு வலி பின்னி எடுத்தது நடக்க
முடியவில்லை.
“முதலிரவு முடிந்து இடுப்பு வலி பின்னி எடுக்கும், நடக்கவே கஷ்டமாயிருக்கும்” என்று
தன் தோழி சொல்லி சிரித்தது ஞாபகம் வர “கிளுக்” என்று சிரித்து கொண்டாள்.
ஒருவேளை அவளையும் அறைய சுத்தம் பண்ண விட்ருப்பாங்களோ! என நினைத்து
கொண்டாள். (இப்போ அதி முக்கிய சிந்தனை இது)
வேலையை முடித்து விட்டு ஒருமுறை அறையை திருப்திகரமாக பார்த்து
விட்டு,அறையின் கதவை அடைத்து விட்டு கிளம்பினாள். (ஒரு படத்தில் சந்தானம்
வந்த வேலைய மறந்துவிட்டு முழு சமையல்காரனா மாறிட்டானே என்று சொல்வது
போல்) முழு வேலைக்காரியாய் மாறி போனாள்.
தன் அறைக்கு வந்து, தன் கைப்பையை திறந்து அதிலிருந்த தைலத்தை எடுத்து,
இடுப்பிலும், காலிலும் தேய்த்து கொண்டு, கடவுளை நினைத்து வேண்டி கொண்டு
படுக்கையில் உறங்கி போனாள்.
——————————————————
காலை சூரியன் உதிக்கும் முன்னமே எழுந்து விட்டாள். தொட்டில் பழக்கம்..
எப்போதும் விடியும் முன்னரே எழுந்து விடுவாள். முகத்திற்கு மஞ்சள் பூசி, தலைக்கு
குளித்து முடித்து, தன்னிடம் இருப்பதில் ஒரு நல்ல சேலையை எடுத்து கட்டி
கொண்டு, நுனி கூந்தலில் முடிச்சிட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து, கண்ணாடியில்
தன்னை ஒரு முறை திருப்திகரமாக , பார்த்து கொண்டு அறையை விட்டு வெளியே
வந்தாள்.
நேராக பூஜை அறை போய் விளக்கேற்ற நினைத்தவள்.. பின் என்ன நினைத்தாளோ
அத்தையிடம் கேட்டு விட்டு ஏற்றி கொள்ளலாம். “நல்ல நேரம் ஏதாவது பாப்பாங்க ”
எதுக்கு வம்பு. சாம்ராணி மட்டும் போட்டு விட்டு சாமியை கை கூம்பி வணங்கிவிட்டு,
திருநீர் பூசிகொண்டு வெளியே வந்தாள்.
வாசலில் போய் பார்க்க, சுத்தம் செய்து கோலம் போட பட்டு இருந்தது. வேலைகாரங்க
போட்ருப்பாங்க என நினைத்து கொண்டாள்.
கிட்சன் சென்றாள், வாங்கம்மா ..! என்று புன்னகையுடன் ஒரு நடுத்தர வயது
வேலைக்கார பெண்மணி வரவேற்றார். பதிலுக்கு புன்னகை புரிந்தவள் என் பேர்
“தேன்மலர் ” நீங்க அப்டியே கூப்பிடலாம் என்றாள். எனக்கு உங்க பொண்ணு
வயசுதான் இருக்கும் என்றாள்.
ஐயோ! நீங்க இந்த வீட்டு மருமக உங்கள எப்படிம்மா, மரியாதை இல்லாம கூப்பிட
முடியும். ருத்ராம்மா கேட்டா என்ன வேலைய விட்டு தூக்கிடுவாங்க மா என்றார் அந்த
பெண்மணி.
அதெல்லாம் கூப்பிடலாம்… யாரும் உங்கள ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ஆமா..
“உங்க பேர் என்ன” என்று வினவ.
“சுதா” என்றார்.
ஓகே.. உங்கள சுதாம்மா னு கூப்பிடறேன்..
(பூரித்து போனார் சுதா) நேத்து பெரியய்யா சொல்லி உங்களுக்கு டிபன் எடுத்து
வச்சிருந்தேனே.. சாபிட்டீங்களா என்றார்.
“ம்ம்… சாப்பிட்டேன் சுதாம்மா” என்றாள்.
காபி குடியுங்க… என்று மலரிடம் கோப்பையை நீட்ட அதை வாங்கி பருகிகொண்டே..
இருவரும் பல கதைகள் பேசிக்கொண்டிருந்தனர். அப்டியே காலை உணவு
தயாரித்தல் வேலையும் நடந்து கொண்டிருந்தது.
யார், யாருக்கு என்ன பிடிக்கும், என்று சொல்ல, சொல்ல, மனதில் குறித்து
கொண்டாள். அதில் அருணுக்கு பிடித்த உணவுகளுக்கு மட்டும் நட்சத்திர குறி இட்டு
வைத்து கொண்டாள். சமையல் கலையை வைத்து மணவாளனின் மனதில் இடம்
பிடிக்க திட்டம். பெரும்பாலான, பெண்களை பெற்ற தாய்மார்கள் திருமணம் ஆக
போகும் மகளுக்கு கொடுக்கும் அறிவுரை இது தான்… மலர் மட்டும் அதுக்கு
விதிவிலக்கில்லை..
ருத்ரா எழுந்து ஹாலுக்கு வந்தார். அவர் வந்ததை பார்த்த மலர் அவருக்கு காபி எடுத்து
கொண்டு சென்றாள். காபி வாங்கிக்கொண்டு, பூஜை அறையை திரும்பி பார்த்து
சாம்பிராணி வாசத்தை நுகர்ந்த அவர். காபியை பருகி கொண்டே பூஜைக்கு விளக்கு
ஏத்தினாயா? என்றார்.
(விளக்கு ஏத்தாமல் பூஜை செய்ததால் கோபித்து கொண்டார் என்று எண்ணி) இல்ல
அத்தை! நீங்க நல்ல நேரம் பாத்து ஏத்த சொல்லுவீங்கன்னு நா இன்னைக்கு விளக்கு
ஏத்தி வைக்கல.
குட்!.., நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்ச பின்னாடி, விளக்கு
ஏத்திக்கலாம். அதுவரைக்கும் இதெல்லாம் வேண்டாம் என்றார்.
சரிங்க அத்தை என்றாள்.
அப்புறம் கொஞ்சநாள், என்ன அத்தைனு கூப்பிடாத, மேடம் னு கூப்டு. ஏன் சொல்றேனு
புரியுதா.
(இப்போதைக்கு நீ வீட்டு வேலைக்காரி தான் மருமகள் இல்லை, என்று சொல்லாமல்
சொல்கிறார், என்று புரிந்து கொண்டாள்.)
புரியுது அத்… என்று ஆரம்பித்து “புரியுது மேடம்” என்று முடித்தாள்.
குட்.. அப்புறம் வீட்ல வேலை செய்ய எல்லாம் யோசிக்க கூடாது. சுதா…. என்றழைக்க,
“சொல்லுங்கம்மா…” என்று வந்தவரிடம் உனக்கு கிட்சன்ல இந்த பொண்ண உதவிக்கு
வச்சுக்க. வீட்டு மருமகனு நினைச்சு வேலை சொல்ல யோசிக்காத, புரியுதா! என்றார்
கட்டளையாக.
அவரும் சரிங்கம்மா! என்று தலை ஆட்டினார்.
போ..போய் எல்லாருக்கும் காபி குடு, என்றார்.
வாக்கிங் போக வெளியில் வந்த சக்ரவர்த்தி, மலரை பார்த்து, குட் மார்னிங் மா !
என்றார்.
குட் மார்னிங் சார்! உங்களுக்கு, காபி கொண்டு வரவா? என்றாள்.
இப்போ வேணாம் மா! இன்னும் என்ன சார்னு கூப்டுற.. உரிமையா மாமா-னு
கூப்பிடுமா ! என்றார்.
இல்ல சார்! சட்டுனு அப்டி கூப்பிட வாய் வர மாட்டுது… கொஞ்சநாள் போன பின்னாடி
கூப்பிடுறேன் சார்..! என்றாள், ருத்ராவை கடைக்கண்ணால் பயந்த படி பார்த்து விட்டு.
சரி மா… உன் விருப்பம்.. பட் சீக்கிரம் பழகிக்கோ… என்று கூறி விட்டு சென்றார்.
அந்த நேரம், கிட்சன் இண்டர்காம் ஒலிக்க, எடு மலர்..! இப்போ அருண் தம்பி தான்
கூப்பிடுவார் என்றார் சுதா. (இந்த வீட்டில் அவள் நிலை தெரிந்த பின் ஒருமையில்
அழைக்க சரளமாக வந்து விட்டது போலும்)
மலர், போனை எடுத்து காதில் வைக்க..
“ஒரு லெமன் டீ” என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
சுதா லெமன் டீ போட்டு, அதை மலர் கையில் குடுத்து, அவன் அறைக்கு அனுப்பி
வைத்தார்.
தூக்கத்தில் இருந்து கண்விழித்த அருண், நேற்றைய நிகழ்வை தான் நினைத்து
யோசனையில் அமர்ந்திருந்தான்.
அருண், மலரை நிராகரிப்பதற்கான வலுவான காரணம் ஒன்று அவன் மனதிற்குள்
உண்டு. கடந்த சில மாதங்களாக “சைத்ரா” என்ற பெண் ஆதியை சுற்றி வருகிறாள்.
முதலில் காதலை சொல்லி பார்த்தாள், பின் “டேட் போலாம்” என்று அழைத்து
கொண்டுள்ளாள். நல்ல அழகான, ஆளுமையான, பணக்கார வீட்டின் ஒரே வாரிசு.
அவளின் அழகை பார்த்து அருண் தான் முதலில் அவளைஅணுக நினைத்தான்.
அதற்குள் அவள் ஆதியிடம் காதலை சொல்லி விட்டாள். அவளை வேண்டாம் என்று
நிராகரிக்க கரணங்கள் இல்லை ஆதிக்கு. ஆதியின் பின்னால் போகாமல், அவள்
குடும்பம் சக்ரவர்த்தியிடம் நேரடியாக பேசி இருந்தால், இந்நேரம் அவர்களின்
திருமணம் உறுதி செய்ய பட்டிருக்கும். அதனால் சைத்ரா-ஆதி திருமணம் உறுதியாக
நடக்கும் என்று நம்பினான். மீண்டும், மீண்டும் ஆதியிடம் தோற்று போனதாக
உணர்வு. சைத்ரா மற்றும் அகல்யாவுடன் மலரை ஒப்பிட்டு பார்த்து கொள்ள்கிறான்.
தன் நண்பர்கள் மத்தியில் தான் மட்டும் மதிப்பு குறைந்தவனாக தெரிவது போல்
அருணுக்கு உணர்வு.
மலர், அறை கதவை தட்டி விட்டு, உள்ளே நுழைந்து, டீ கோப்பையை அவன் முன்
நீட்ட, அதை வாங்கி கொண்டவன். அவளை பார்த்து கொண்டே அருந்தினான்.
நிச்சயம் அது நல்ல விதமாக இல்லை. சரியான பட்டி காடா இருப்பா போல,
எனக்குன்னு எங்கேயிருந்து தான் புடிஞ்சாங்களோ! என்று நினைத்து கொண்டான்.
குடித்து முடித்த கோப்பையை வாங்கி கொண்டு கிளம்ப முற்பட்டவளை, நிறுத்தியது
அவன் குரல்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”.
என்ன என்பது போல் பார்த்தாள்.
உன்கிட்ட என்ன சொல்லி இருக்காங்கனு தெரியல. உன்ன எனக்கு சுத்தமா
புடிக்கல.. ஏதோ ஜாதகம், ஜோசியம் னு சொல்லி, சொத்தை வச்சு பிளாக்மெயில்
பண்ணி என்ன சம்மதிக்க வச்சாங்க.. தாலி கட்டினதுனால இங்க தான் நீ
இருக்கணும்னு அவசியம் இல்ல.. உங்க வீட்ல கூட போய் இரு. எனக்கு எந்த ஒரு
பிரச்சனையும் இல்ல.
(உங்களுக்கு என்ன பிரச்சனை, எனக்கு தான் பிரச்சனை என மனதுக்குள் நினைத்து
கொண்டாள்)
அவனே பேச்சை தொடர்ந்தான். இல்ல்ல… நா.. இங்க தான் இருப்பேன்னு நீ
அடம்பிடிச்சா, வேலைக்காரியாதான் இருக்கணும்… நல்ல யோசிச்சு முடிவு பண்ணு.
நல்லா வசதிவாய்போட வாழலாம்னு நெனச்சு வந்திருப்ப, அதுக்கெல்லாம் நா விட
மாட்டேன். என்னோட மனைவியா வாழ ஒரு தகுதி வேணும்னு நினைக்குறேன். நல்லா
யோசிச்சி பாரு உன் தகுதி என்ன? என் தகுதி என்ன ? உன்ன என் மனைவி-னு
கொண்டு போய் எங்கையாவது நிறுத்த முடியுமா?, உன்னால நாலு வார்த்தை
சேர்ந்தாப்ல இங்லிஷ்-ல பேச முடியுமா? அட்லீஸ்ட் பேசுனா புரிஞ்சுக்கவாது முடியுமா?
என்ன பொறுத்த வரைக்கும் இது உண்மையான கல்யாணமே இல்ல. நீயும் இத
மனசுல பிக்ஸ் பண்ணிக்கோ என்றான். என்ன உன்னோட வீட்டுக்கே போறீயா? என்று
வினவ.
இல்லங்க… அது .. வந்து.. நா… என்று ஏதோ சொல்ல வர.
இப்போ உடனே சொல்ல வேணாம்… நா ஈவினிங் வரும் போது ரெடி ஆகிட்டு சொல்லு
சொல்லு என்றான்.
“சரிங்க” என்றாள்.
உங்க ஊர்ல இப்டி தான் மரியாதை இல்லாம கூப்டுவாங்களா? கால் மீ சார் ! என்று
உறுமினான்.
“சரிங்க சார்” என்றாள்.
இதுவரைக்கும் கறாரான வங்கி மேலாளர் போல் பேசி விட்டு அடுத்து ஒரு கேட்டானே,
பாருங்க ஒரு கேள்வி.
அதை கேட்டு மலர் அதிர்ந்து நின்றாள்.
———————————————