அசுரன் 28
தனது வீட்டிற்கு கிளம்பிய மலரை பார்த்து ” பத்திரமா
போயிட்டு வாம்மா…. டிரைவர் கிட்ட சொல்லி
இருக்கேன்… கார்ல போயி வீட்ல இறங்கிக்க” என்று
கூறிவிட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டார்
சக்கரவர்த்தி…
ருத்ரவும் ரதியும் இருக்கும் வீட்டில் மலரை காரில் செல்ல
அனுமதிப்பார்களா?…
தனது உடமைகளை எடுத்துக் கொண்டு, தன் கையில்
வைத்திருந்த சொற்ப பணத்தை எடுத்துக்கொண்டு,
வீட்டின் வாயிலுக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து
பேருந்து நிலையத்தை அடைந்து பஸ்ஸில் தனது சொந்த
ஊர் நோக்கி புறப்பட்டாள் மலர்.
***************
அருணுக்கு காலை உணவை விக்ரம் ஊட்டி கொண்டு
இருக்க…
முதல் வாய் வாங்கியவனின் முகம் அஷ்ட கோணலாய்
மாறியது…
என்னடா சாப்பாடு நல்லாவே இல்ல… இப்ப எல்லாம்
அவளுக்கு திமிர் கூடிப்போச்சுடா!… எந்த வேலையும்
ஒழுக்கமா செய்யறது இல்ல… என்று கடிந்தான் அருண்.
யாரடா!… திட்டிகிட்டு இருக்க… என்றான் விக்ரம்..
சாப்பாடு செஞ்ச அவள தாண்டா… எனக்கு இந்த சாப்பாடு
பிடிக்கல… சாப்பாடா இது….. ஒரு ருசியும் இல்லை…
கொண்டு போய் அவ மூஞ்சிலேயே கொட்டு என்றான்…
அருண் கோபமாக…
உணவு எப்பொழுதும் அவர்கள் உண்ணும் சுவையிலேயே
இருந்தது ஆனால் அதிக மருந்துகள் எடுத்துக்
கொள்வதால் அருணின் நாக்கிற்கு அது ருசியாக
இல்லை.
இன்னைக்கு சாப்பாடு சுதா அக்கா தாண்டா
செஞ்சாங்க… என்றான் விக்ரம்.
ஏன்? அவ எங்க போனா? என்று அருண் கேட்க…
அருணுக்கு இதுவரையில் அவள் தயார் செய்து
கொடுத்திருக்கும் உணவுகள் அனைத்தும் அவனால்
எளிதாக விழுங்கும்படி இருக்கும் அதிக நார்ச்சத்து உள்ள
பொருள்களாகவும் இருக்கும்… அவன் உடல் நிலையைப்
புரிந்து செய்த உணவாக அது இருக்கும். உணவுகள் ஒரே
வகையான ருசியில் இருக்காது.. அவனுக்கு என்று
தனியாக உணவுகள் சமைக்கப்படும் அவளால்…. அதன்
ருசியை உணர்ந்து கொண்டே அவளையும் திட்டிக்
கொண்டே தான் உண்பான் அருண். அதனாலேயே இன்று
உண்ட உணவின் ருசியை வைத்தே இது மலர்
சமைக்கவில்லை… என்று தெரிந்து கொண்டான்.
மலர்… அவங்க அம்மா ஊருக்கு போயிருக்குடா….
என்றான் விக்ரம்.
எப்ப போனா? என்கிட்ட ஒன்னும் சொல்லவே இல்லையே?
என்றான் அருண்.
இன்னைக்கு காலையில தான் கிளம்பி போச்சு… அங்கிள்
கிட்டயும் ஆன்ட்டி கிட்டயும் கேட்டுட்டு தான் ஊருக்கு
போய் இருக்கு… என்றான் விக்ரம்.
தாலி கட்டுன நான் இந்த நிலைமையில உட்கார்ந்து
இருக்கேன்… என்ன கவனிக்கணும்னு அக்கறை இல்ல…
அவ இஷ்டத்துக்கு ஊர் சுத்திட்டு இருக்கா… என்றான்
அருண்.
மௌனமாய் ஒரு கணம் அருணை உற்றுப் பார்த்தபடி
அவனுக்கு உணவை ஊட்டி கொண்டு இருந்தான் விக்ரம்.
என்கிட்ட சொல்லிட்டு போகணும்னு கூட மகாராணிக்கு
தோணல போல… எல்லாம் எங்க அப்பா கொடுக்கிற இடம்
என்று கருவிக்கொண்டே உண்டான் அருண்.
மௌனமாய் ரதி எங்கடா? என்று கேட்டான் விக்ரம்.
அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி
அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்காடா… மூணு
நாளாச்சு என்றான் அருண்.
ரதி உன் கூட இருந்து கவனிச்சுக்க வேண்டியது தானடா!…
எதுக்காக அவங்க அம்மா அப்பா வீட்டுக்கு விட்ட… என்று
கேட்டான் விக்ரம்.
டேய்… அவ பிசினஸ பாக்கணும்.. அவளோட ஹெல்த்த
பாக்கணும்.. அவங்களோட ஃபேமிலியையும் பாக்கணும்..
அவ என்னடா பண்ணுவா… என்று கேட்டான் அருண்.
உணவை ஊட்டி முடித்து, உணவு கிண்ணத்தில் கைகழுவி
விட்டு அமைதியாக வெளியேற… கதவின் அருகே
வந்தான் விக்ரம்.
என்னடா அமைதியா போற!… அவளை சொன்ன உடனே
உனக்கு கோபம் வந்துடுச்சா என்றான். அவ இப்படி
எல்லாம் யாரையும் மதிக்காம நடந்துக்கிறானா அதுக்கு
நீயும் அப்பாவும் தான் முதல் காரணம் என்றான் அருண்.
அமைதியா இருந்த விக்ரம், அருணின் பக்கம் தலையை
மட்டும் திருப்பி, ஒரு நீண்ட பெருமூச்சுடன்….
“உடம்பு சரியில்லாத என்ன, கூட இருந்து பாத்துக்காம
எங்கடி போன அப்படின்னு பொண்டாட்டியை தாண்டா
கேட்கணும், வேலைக்காரியை இல்லை”
” ரதி அவங்க குடும்பத்தை கவனிக்கறது முக்கியம்னா
அப்ப நீ யாரு ” என்று அழுத்தமாக கூறிவிட்டு அறையை
விட்டு வெளியேறினான் விக்ரம்.
என்ன சொல்லிட்டு போறான்… ரதிக்கு என்ன
கவனிக்கிறது தான் வேலையா ?… அதுக்குத்தானே
வீட்டுல வேலைக்காரங்க இருக்காங்க…. என்று
மனதிற்குள்ளேயே புலம்பி கொண்டான்.
**************
மலர் தனது சொந்த ஊருக்கு வந்தடைந்தாள் தனது
துணிகள் அடங்கிய பேக்கை எடுத்துக்கொண்டு
தெருவில் நடந்து வந்தவளை ஏதோ அதிசய காட்சியை
பார்ப்பது போல், எதிரே நடந்து வரும் மக்கள்
அனைவரும் ஒரு கணம் பார்த்துவிட்டே சென்றனர்.
“நல்லா இருக்கியா மலரு” என்று பலர் கேட்டு சென்றனர்.
“என்ன நல்லா இருக்காளா” என்று சிலர் பார்த்து
சென்றனர்.
“என்ன கல்யாணம் ஆகி போன புள்ள அஞ்சு மாசத்துல
தனியா துணி பையோட அம்மா வீட்டுக்கு வந்து இருக்கு”
என்று தங்களுக்குள்ளேயே கிசு கிசுத்தும் கொண்டனர்.
அனைத்தையும் கடந்து ஏர் வெயிலில்… விக்.. விக்… என்று
நடந்து மூச்சு வாங்க வீடு வந்து சேர்ந்தாள் மலர்.
அம்மா… அம்மா…. என்று அழைத்துக் கொண்டே கேட்டை
தாண்டி வீட்டிற்குள் நுழைய….
சமையலறையில் வேலையா இருந்த வாசுகி, வேகமாக
வெளியே வந்து வாமா.. வா… மலரு… என்று அழைத்துக்
கொண்டு தனது கையை சேலை தலைப்பால் துடைத்துக்
கொண்டே மலரை ஒரு பார்வையும் வெளியே வாசலில்
ஒரு பார்வையும் எட்டிப் பார்த்து எதையோ தேடி தோற்றுப்
போனார்…
என்னடி நடந்தா வந்த… உங்க வீட்ல இருந்து உன்ன கார்ல
அனுப்பி வைக்கலையா இன்று வாசகி கேட்க… அவரை
ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் ஒரு
கையால் வாசலை மறித்து இருந்தவரை நகட்டி ஒரு
பக்கமாக வீட்டிற்குள் நுழைந்தாள் மலர்.
கஞ்ச பயலுகளா இருப்பாங்க போல… அன்னைக்கு
அத்தனை கார் அவங்க வீட்ல இருந்துச்சு ஒரு கார்ல
அனுப்பி வச்சிருந்தா என்ன… என்று மனதுக்குள்ளயே
கருவிக்கொண்டு மலரை நோக்கி வந்தார் வாசுகி. தனது
மகளைப் பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்துள்ளேன்
என்று பெருமையாக மார்தட்டி கொள்வார் வாசுகி அக்கம்
பக்கத்தினரிடம்… இப்பொழுது அவள் நடந்து வருவதை
பார்த்து அக்கம் பக்கத்தினர் கேள்வி கேட்பார்களே என்ற
எண்ணம்…
தனது பையை சோபாவின் மேல் வைத்து விட்டு சமையல்
அறைக்குள் சென்று ஒரு செம்பு தண்ணீரை எடுத்து
மடமடவென குடித்து தனது தாகத்தை தீர்த்துக்
கொண்டாள் மலர்.
உள்ளே வந்த வாசுகி… புகுந்த வீட்டிலிருந்து வந்த தனது
மகளை தலையில் இருந்து கால் வரை ஸ்கேனிங்
செய்தார்.
திருமணத்தின் போது வாசுகி கொடுத்து அனுப்பிய
மெல்லிய ஜரிகை வைத்த காட்டன் சேலை, கதை
சொல்லியது இதுவரை அவள் புது ஆடை ஏதும்
எடுக்கவில்லை என்று… திருமணத்திற்கு தைத்துக்
கொடுத்த ஜாக்கெட் இப்போது சிறிது லூசாக இருந்தது..
கழுத்தில் திருமணத்தில் கட்டிய அதே மஞ்சள் தாலி….
மகளின் உச்சி வகுட்டில் குங்குமம் இல்லை காலில் மெட்டி
இல்லை…
அதுவும் அவள் அணிந்திருந்த திருமணத்தின் போது
வாசுகி அனுவித்துவிட்ட கல்யாண பெண் வளையல்….
சொல்லியது அவள் குடும்ப வாழ்க்கையின் மொத்த
அந்தரங்க கதையும்…
இப்பொழுதும் மகளின் வாழ்க்கையை கெடுத்து
விட்டோமோ என்ற எண்ணம் அவருக்கு வரவில்லை
இன்னும் பொழைக்க தெரியாம இருக்காளே சின்ன புள்ள
மாதிரி என்று சலிப்பு அவருக்கு வந்தது..
அவரைப் பொறுத்தவரையில் திருமணம் ஆகிவிட்டால்
எப்படியாவது சேர்ந்து வாழ்ந்து விடுவார்கள்… குழந்தை
குட்டி என்று வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து
விடும் என்பது அவரது எண்ணம்.
அனைத்தையும் மனதில் குறித்துக் கொண்டு வா.. மலரு…
இப்படி உட்காரு சாப்பிடலாம்… உனக்கு பிடிக்குமான்னு
இடியாப்பமும், தேங்காய்ப்பாலும் செஞ்சு வைத்தேன்
என்றார் வாசுகி.
வாசுகியின் பின்புறமாக கழுத்தை கட்டிக்கொண்டு ஒரு
நிமிடம் அவரின் தோளில் சாய்ந்து அமைதியாக
இருந்தவள்… பின் அமைதியாக சாப்பிட அமர்ந்தாள்…
வாசலில் ஏதோ சத்தம் கேட்க இருவரும் திரும்பி
பார்த்தனர்… வாசுகி….வாசுகி…. என்ன மலர்… பையும்
கையுமா வந்துகிட்டு இருந்துச்சு… கல்யாணம் ஆகி முதல்
முதல்ல அம்மா வீட்டுக்கு வர்ற புள்ள கூட வீட்டுக்காரர்
வந்த மாதிரி தெரியலையே…. என்று பக்கத்தில்
இருந்தவர்கள் வந்து விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.
(நகரத்தில் இப்படி நடக்கமான்னு தெரியல ஆனா
கிராமத்துல இப்படித்தான் நடக்கும்)
அதுவா… அக்கா… மாப்பிள்ளைக்கு கொஞ்சம் வேலை
அதிகம்… அதனால நீ முன்னாடி போயி ரெண்டு நாள்
உங்க அம்மா வீட்ல இரு… மூணாவது நாளு நான் வந்து
கூப்பிடுகிறேன்… அப்படின்னு சொல்லி அனுப்பி
வச்சிருக்காரு… என்று வாசுகி மழுப்பினார்.
ஓ… அதுவும் சரிதான் ரெண்டு மூணு நாள், ஆம்பளையாள
வேலைக்கு லீவ் போட்டு வந்து தங்க முடியாது இல்ல…
அதனால அனுப்பி வச்சிருப்பாரு என்று சொல்லிவிட்டு..
மலரு நல்லா இருக்கியா மா… என்று ஒரு வார்த்தை கேட்டு
விட்டு, அவர்களும் கண்களால் ஒரு முழு ஆராய்ச்சி
பார்வை நடத்திவிட்டு, அவர்களுக்கு தேவையான தகவல்
கிடைத்த திருப்தியில் கிளம்பி விட்டனர்…
மீண்டும் சாப்பிட அமர்ந்த மலரிடம்…
என்னடி மலரு பாக்கவே பரிதாபமா இருக்க என்று வாசுகி
கேட்டார்….
ஏம்மா!… எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன்…
இங்க இருந்து எப்படி போனேனோ அப்படியே வந்து
இருக்கேன் என்றாள் சூசகமாக….
அதை புரிந்து கொள்ளாமல் விடுவாரா வாசுகி,… ஏண்டி
உன் வயசு விட சின்ன புள்ளைங்க எல்லாம் எப்படி
பிழைக்குதுங்க… நீ மட்டும் ஏண்டி இப்படி இருக்க என்றார்
விரக்தியாய்…
அவரை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு
சாப்பிட்டுவிட்டு, தட்டையும் கழுவி வைத்துவிட்டு, சேலை
தலைப்பால் வாயை துடைத்துக்கொண்டே வெளியே
வந்து சோபாவில் அமர்ந்தாள் மலர்.
அந்த சோபாவில் இரு கைகளையும் படர விட்டு சாய்ந்து
உட்கார மனதில் அப்படி ஒரு நிம்மதி பரவியது
மலருக்கு… என்னதான் இருந்தாலும் நம்ம வீடு நம்ம வீடு
தான் பா என்ன சுகம்… என்று விட்டதில் சுழறும்
மின்விசிறியை பார்த்தாள்.
அவளின் அருகே வந்து அமர்ந்த வாசுகி அவளின்
கையைப் பிடித்து தனது தொடையின் மீது வைத்துக்
கொண்டே… என்னடி சொல்ற அப்ப இத்தனை நாளும் நீ
அந்த வீட்ல சும்மா தான் இருந்தியா… என்று ஏமாற்றமாய்
கேட்க….
( சும்மா இல்ல வேலைக்காரியா இருந்தேன் என்று
மனதில் நினைத்துக் கொண்டே… )
வாசுகியை ஒரு வெற்றுப் பார்வை பார்த்த மலர்… அம்மா
நான் ஆரம்பத்திலேயே உன்கிட்ட சொல்லிட்டேன்
அவருக்கு என்ன பிடிக்கல… பிடிக்கல… சுத்தமா புடிக்கல…
போதுமா… என்றாள் அழுத்தமாக…
அவளை மௌனமாக சில கணம் பார்த்தவர்… சரி விடு…
இதுக்கு நான், ஒரு தீர்வு நீ போகும் போது சொல்றேன்
என்று கூறிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
இந்த அம்மா வேற, அவருக்கு வேற ஒரு பொண்ணோட
கல்யாணம் ஆனது தெரியாம, என்ன அந்தரங்க ஐடியா
கொடுக்க போறாங்கன்னு தெரியல… என்று
மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டு, இருந்தவள்.
அமர்ந்திருந்த
அந்த சோபாவிலேயே அயர்ந்து தூங்கி விட்டாள். வெகு
நாட்களுக்குப் பிறகு நிம்மதியான தூக்கம் அவளை
தழுவிக் கொண்டது.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️