அசுரன் 29

அசுரன் 29

தூங்கி எழுந்த மலரை, கடை தெருவுக்கு அழைத்துச் சென்றார் வாசுகி.. 

கடை தெருவில் நடந்து கொண்டே தாயும் மகளும் பேசிக் கொண்டே 
வந்தனர். 

நான் கூட நீ பெரிய இடத்துல கல்யாணம் ஆகி போயிட்டேன்னு ரொம்ப 
சந்தோஷப்பட்டேன் மலர். 
பணக்கார வீட்டுக்கு மருமகளா போயிட்டு ஒரு நாள் கூட அம்மா “உனக்கு 
செலவுக்கு பணம் வேணுமா? அப்படின்னு ஒரு வார்த்தை கூட கேட்க 
மாட்டேங்கிறாளே” அப்படின்னு மனசுக்குள்ளயே நெனச்சுக்குவேன்… 
பணம் வந்துட்டதனால மனசு மாறி போச்சு போல மலருக்கு அப்படின்னு 
நினைச்சுக்கிட்டு இருந்தேன். 

குனிந்த தலையை நிமிர்ந்து, அவளது அம்மாவை பார்த்து மென் 
சிரிப்புடன்… “எனக்கு சம்பளம் எதுவும் அங்க கொடுக்கிறது இல்லம்மா” 
என்றாள். 

என்னடி அப்படி சொல்ற… சம்பளம் கொடுக்கறதுக்கு நீ என்ன 
வேலைக்காரியா… நீ வீட்டோட ஒரே மருமகடி… அது உன்னோட வீடு உன் 
வீட்டுக்காரர் கிட்ட இல்லாத பணமா… அவர்கிட்ட கேட்டு வாங்க 
வேண்டியது தானே.. உனக்கு தேவையான பணத்தை அவர் பாக்கெட்ல 
இருந்து நீ எடுத்துக்க வேண்டியது தான் உனக்கு இல்லாத உரிமையா? 
என்றார் வாசுகி. 

மலரின் அப்பா, ஹேங்கரில் தொங்க விட்டிருக்கும் சட்டையில் 
உரிமையாக பணத்தை எடுத்து வீட்டு வரவு செலவுகளை வாசுகி 
பார்ப்பார் அந்த எண்ணத்தில் அவர் கூற… 

ஒரு நாள் கீழ கிடந்த பர்ஸை எடுத்து டேபிளில் வைக்க போய் திருட்டு 
பட்டம் வாங்கியது ஞாபகத்திற்கு வந்தது மலருக்கு… 

இனிமேல் வாங்கறேன்மா என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினாள் 
மலர்… (நான் என்ன சொன்னாலும் உனக்கு புரிய போறதில்லை… அதை 
எதுக்கு போய் சொல்லிக்கிட்டு என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் 
கொண்டாள்) 

அவளுக்கென்று மூன்று சேலைகள் எடுத்துக் கொடுத்தார் அவளுக்கு 
தெரியாமல் சேலை ஒன்றை வாங்கி அதை தனிக்கவரில் மறைத்து 
வைத்துக் கொண்டார் வாசுகி. 

கவரிங் கடைக்கு அழைத்து சென்று கழுத்துக்கு செயின் மற்றும் 
வளையல்கள் போன்றவற்றை வாங்கி கொடுத்தார். உன் கையில இருக்க 
கண்ணாடி வளையல கழட்டி போட்டுட்டு இந்த வளையல போட்டுக்க 
மலர்… பின்ன கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று வாசுகி 
சூசகமாக கூற… எந்த வளையல் போட்டால் என்ன!… என்று மனதிற்குள் 
நினைத்துக் கொண்டு வாங்கிய அணிந்து கொண்டாள் மலர். 

காலுக்கு மெட்டி வாங்க சென்றவரை வேண்டாம் என்று உறுதியாக 
மறுத்து விட்டாள் மலர். 
அவளுக்கு பிடித்த தின்பண்டங்களை  வாங்கி கொடுத்தார். 

தலையில் பூ வாங்கி வைத்து விட்டார்….. 
மலரை பார்த்தவர் பின் கண்கலங்கி… என்ன இருந்தாலும் உங்க அப்பா 
இருக்கும்போது உன் முகத்தில் இருந்த கலை இப்போ இல்ல மலரு 
என்றார். 
அவளும் ஒரு நீண்ட பெருமூச்சுடன்…  அப்பா மட்டும் இருந்திருந்தால் என் 
வாழ்க்கை ஏன் இப்படியாக போகுது என்று மனதிற்குள்ளேயே 
நினைத்துக் கொண்டாள். 

வீடு திரும்ப இரவானது இருவரும் அங்கிருந்த ஹோட்டலில் சாப்பிட்டு 
விட்டு வீட்டுக்கு வந்தனர். 

அம்மா வீட்டில் போய் ஏதாவது செஞ்சு சாப்பிட்டுக்கலாம்!… என்று மலர் 
கூற… எல்லா நாளும் வீட்ல சமைச்சத தானடி சாப்பிடுறோம்… 
இன்னைக்கு ஒரு நாளாவது வெளியில சாப்பிடலாம் என்று கூறி 
அழைத்துச் சென்றார் வாசுகி. இன்று ஏனோ மனம் மிக இலகுவாக 
இருப்பது போல் உணர்ந்தாள் மலர். 

ஆனால் இந்த நிம்மதி இன்னும் சிறிய நேரத்தில் தொலைய போகிறது 
என்று தெரியாமல் வீட்டிற்கு வந்தாள் மலர். 

அவர்கள் வீட்டிற்கு வர வீட்டு வாசலில் சொந்தங்கள் காத்துக் கொண்டு 
இருந்தன. 

என்ன வாசுகி மலர பார்க்கலாம்னு வந்தோம் எங்க போனீங்க… என்று 
அவர்கள் விசாரிக்க… 

கடை தெருவுக்கு போயிருந்தோம் அக்கா…. என்று கூறிவிட்டு கதவை 
திறந்து உள்ளே நுழைந்தனர்… 

என்ன மலரு…  எப்போ வந்த… உங்க வீட்டுக்காரர் என்ன பண்றாரு… அவர் 
கூட வரலையா… உங்க மாமனார் மாமியார் எல்லாம் நல்லா 
இருக்காங்களா… உன்ன நல்லா பாத்துக்கிறார்களா… எப்போ நல்ல 
விஷயம் சொல்ல போற… உன் தங்கச்சி சொல்லிட்டா… நாங்க எல்லாரும் 
நீ எப்ப சொல்ல போறன்னு காத்துகிட்டு இருக்கோம்… உங்கம்மா உன்ன 
பெரிய இடத்துல கட்டி கொடுத்ததா சொன்னா… என்று கூறிவிட்டு 
அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தனர்… அவர்கள் பார்வையின் 
பொருள் அவளுக்கும் புரிந்தது…. 

இவர்கள் கேட்கும் கேள்வியை சகித்துக் கொள்ள முடியாமல்…. ஏண்டா!… 
நாலு மாசம் கழிச்சு அம்மாவ பாக்கலாம்னு வந்தது குத்தமாடா என்று 
மனதிற்குள்ளேயே சலித்துக் கொண்டாள் மலர்… அவள் வாழ்க்கை 
அவர்களுக்கு பொழுதுபோக்குக்கு அவல் கிடைத்தது போல் ஆனது… 

பெரும்பாலும் அனைத்து கேள்விகளுக்கும் வாசுகி தான் பதில் 
சொன்னார். 

வீட்டிற்கு வந்த வாசுகி முதல் வேலையாக மலருக்கு அளவு எடுத்து 
புதிதாக வாங்கிய அத்தனை புடவைகளுக்கும் பிளவுஸ் தைக்க 
ஆரம்பித்தார். 

அடுத்த நாள்  காலையில் கவி பிரியாவின் வீட்டிற்கு செல்வதற்கு 
தயாராகினர் மலரும் வாசுகியும்… 

நேற்று வாங்கி வந்த சேலையில் ஒரு சேலையை பிரித்து கட்டினால் 
நேற்று இரவு அம்மா தைத்து கொடுத்த ஜாக்கெட்டை அணிந்து கொண்டு, 
தலைமுடியை பின்னலிட்டபடியே  கிளம்பி வெளியே வர… 

அவளைப் பார்த்த அவளது அம்மா என்ன மலரு முடியெல்லாம் கொட்டி 
போச்சு என்று கவலைப்பட்டார்… 

எனக்கு இருக்க பிரச்சனயில்ல இந்த அம்மா வேற… என்ன மனதுக்குள் 
நினைத்துக் கொண்டு… வெளியில் சிரித்துக்கொண்டே வாங்கம்மா, 
சீக்கிரம் போயிட்டு வந்துடலாம்.. என்று கூறிவிட்டு கவி பிரியாவிற்கு 
பலகாரங்கள், பூ, பழங்கள்.. பேரிச்சம்பழம் மேலும் அவளுக்கு பிடித்த சில 
தின்பண்டங்களையும் வாங்கிக் கொண்டு கவி பிரியாவின் வீட்டை 
அடைந்தனர்… 

வீட்டிற்குள் வருபவர்களைக் கண்ட கவிப்பிரியாவின் மாமியார் 
கனகவல்லி…. வெடுக்கென்று கழுத்தை திருப்பிக் கொண்டு உள்ளே 
சென்றார்… 

அதைப் பார்த்த மலருக்கு மேலும் அடி எடுத்து வைக்க சங்கடமாய் 
போனது… 

கனகவல்லி போன வேகத்தை கண்ட… அவரது கணவர் ரங்கசாமி 
வாசலை எட்டிப் பார்க்க… வாசுகியும் மலரும் நின்று இருந்தனர். 

வேகமாய் வெளியில் வந்து வாங்க… வாங்க…என்று இன்முகமாக 
வரவேற்று வீட்டினுள் அழைத்து சென்று சோபாவில் அமர சொன்னார்… 

என்ன கனகு!… இது பழக்கம்… வீட்டுக்கு வந்தவங்கள.. இப்படித்தான் 
வாசல்லயே பார்த்துட்டு கண்டுக்காம போவியா!.. என்று ஒரு பெரும் குரல் 
எழுப்பினார்… சமையலறையில் இருந்து வெளியே தலையை எட்டிப் 
பார்த்த கனகவல்லி இடம்… தண்ணி கொண்டு வந்து கொடு.. என்று கூற… 

விருப்பமில்லா விடினும் கணவனின் பேச்சுக்கு இணங்க தண்ணீர் 
செம்பை எடுத்துக் கொண்டு வந்து வாசுகி இடம் நீட்டினார் கனகவல்லி… 

அதை வாங்கி மலரும் வாசுகியும் அருந்தினார்.. 

இவர்கள் வரவை அறிந்து மாடியில் இருந்து இறங்கி வந்தாள் 
கவிப்பிரியா. 

வாங்கமா.. வாக்கா.. என்று இருவரையும் வரவேற்றாள்… 

நாங்க நல்லா இருக்கோம் கவி நீ நல்லா இருக்கியா எத்தனை மாசம் 
என்று விசாரித்தார் வாசுகி.. 

மூணு மாசம் என்றால் கவிப்பிரியா. 

கவியின் முகத்தில் இருந்த சந்தோசபூரிப்பு சொல்லியது அந்த வீட்டில் 
அவளை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் என்று… 

கவியிடம், வாசுகி வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் கொடுக்க… 

இத்தனை நாளும் நீங்க வாங்கிட்டு வந்து கொடுத்து தான் நாங்க 
பாத்துகிட்டோமா!… எதுக்கு இத்தனையும் வாங்கிட்டு வந்து இருக்கீங்க… 
என்று கனகவல்லி எடக்கு பேசினார். 

உங்க மூத்தபொண்ணு கல்யாணத்துக்கு மதிச்சு எங்களுக்கு சொல்லி கூட 
விடலையே… இப்ப மட்டும் எதுக்கு வந்து இருக்கீங்க… என்று 
நேரடியாகவே கேட்டுவிட்டார்… 

இல்ல சம்பந்தி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க திடீர்னு கல்யாணம் 
வச்சுட்டதனால யாரையும் கூப்பிட வேணாம் அப்படின்னு 
சொல்லிட்டாங்க அவங்க பேச்சை என்னால மீற முடியல.. 

அதுக்குன்னு கூட பிறந்தவளை கூட கூப்பிட வேண்டாமா?… அப்புறம் 
என்னோட பையனுக்கு என்ன மரியாதை இருக்கு… 

அது பின்னாடி எல்லாரையும் கூப்பிட்டு ரிசப்ஷன் வச்சுக்கலாம் 
கிராண்டா அப்படின்னு சொன்னாங்க சம்பந்தி… மன்னிச்சிடுங்க என்ன 
இருந்தாலும் நாங்க பண்ணது தப்புதான்… எங்களுக்கும் உங்கள விட்டா 
வேற யார் இருக்கா… என்று வாசுகி பதமாய் கூற… 

இப்ப எல்லாம் நல்லாத்தான் பேசுறீங்க… ஆனா எங்கள விட வசதியான 
சம்பந்தம் அப்படின்னு சொல்லிட்டு… அவங்க சொல்றதுக்கு எல்லாம் 
பூம்..பூம்…மாடு மாதிரி தலையாட்டி வச்சிருக்கீங்க.. என்றார் கனகவல்லி 
காட்டமாக… 

என்ன பண்றது சம்பந்தி அவங்க சொல்றத தான் கேட்கிற மாதிரி 
ஆகிப்போச்சு…  இதோ பாருங்க….கல்யாணம் ஆகிப்போனவ இன்னிக்கு 
தான் கவி உண்டானத பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்து இருக்கா… 
நாளைக்கு திரும்ப ஊருக்கு போய்விடுவா… என்று வாசுகி கூற.. 

மலரை ஒரு முறை பார்த்தவர்…. என்னமோ சொல்றீங்க!… முறை 
தெரியாத சம்பந்தி தான் அமையனும்னு எங்களுக்கு விதி இருக்கும் போல 
என்று சலித்துக் கொண்டு நகர்ந்து விட்டார் கனகவல்லி. 

மலரை தனது அறைக்கு அழைத்துச் சென்றாள் கவிப்பிரியா… 

ஏசி போட்ட விசாலமான அறை.. சுவரெங்கிலும் கவிப்பிரியாவும் 
அவளின் கணவன் பிரபுவும் ஒன்றாய் ஊர் சுற்றிய நிறைய படங்கள் 
அதில் மாற்றப்பட்டிருந்தது… 
அதன் நடுவே அவர்களது திருமண புகைப்படம் பெரிதாக பிரேம் 
செய்யப்பட்டு இருந்தது.. 

படுக்கையில் அமர்ந்தவாரே புகைப்படங்களை பார்த்தாள் மலர். 

மலரின் மனதில் ஒரு பெரும் நிம்மதி பரவியது. தனது தங்கை இங்கு எந்த 
குறையும் இல்லாமல் இருக்கிறாள்,  அவளது கணவன் அவளை நன்றாக 
பார்த்துக் கொள்கிறான் என்று. 

மலரின் அருகே வந்த கவிப்பிரியா தான் தற்போது வாங்கிய புதுப்புது 
பட்டுப்புடவைகளையும் புதுப்புது நகைகளையும் ஒவ்வொன்றாக எடுத்து 
காண்பித்துக் கொண்டு இருந்தாள்… இது கல்யாண நாளுக்கு எடுத்து 
கொடுத்தாரு… இது காதலர் தினத்துக்கு வாங்கி கொடுத்தாரு… 
ஒவ்வொன்றின் பின் ஒவ்வொரு கதை கூறிக்கொண்டே… 

அதைப் பார்க்கும்போது மலரிடம் ஒரு சிறு ஏக்கம் ஏற்பட்டது 
உண்மைதான், அதை தனக்குள்ளையே மறைத்துக் கொண்டாள். 

கவிப்பிரியா ஒவ்வொன்றையும் காண்பிக்கும் போதே…. அவளது கண்கள் 
மலரின் நிலையை ஒவ்வொன்றாக கவனித்தது… ஒரு சாதாரண காட்டன் 
சேலை கழுத்தில் கவரிங் செயின்…. முக்கியமாக பொலிவிழந்த முகம். 

உன்னோட கல்யாண போட்டோ காட்டு அக்கா என்று கவி கேட்க… 

அது… போன்ல வச்சிருந்தேன் ஏதோ தெரியாம கைப்பட்டு எல்லாமே 
டெலிட் ஆயிருச்சு என்றாள் மலர்.. 
அவளுடைய போனை வாங்கி பார்த்தாள்.. அவளுடைய திருமணத்திற்கு 
முன்பு இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் 
மட்டுமே அதில் இருந்தன. 

என்னக்கா நீங்க ரெண்டு பேரும் எடுத்துக்கிட்ட ஒரு போட்டோ கூட 
இல்லையா என்று கேட்டாள் கவி. 

இல்லையென்று தலையாட்டினாள் மலர். 

அவளின் ஒட்டாத பதிலை வைத்து பாக்குறதுக்கு அசிங்கமாக 
இருப்பாரோ… ஒருவேளை வேற ஏதாவது குறைபாடு உள்ளவரா 
இருப்பாரோ… அதனால தான் வசதியா இருந்தும் இவ்வளவு சிம்பிளா 
கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாங்க…  நம்ம கிட்ட போட்டோ 
காமிக்காம மறைக்கிறா போல என்று மனதுக்குள் நினைத்துக் 
கொண்டாள். 

பருவ வயதில்… அக்கா ரொம்ப அழகா இருக்கா… அவளுக்கு அழகான 
மாப்பிள்ளை கிடைக்கும்… நமக்கு கொஞ்சம் சுமாரா தான் 
கிடைக்குமோ… என்று கண்ணாடியை பார்த்து யோசித்ததும் 
உண்டு..  தன்மேல் தனக்குள்ளேயே ஒரு தாழ்வு மனம் மனப்பான்மையை 
உருவாக்கி வைத்திருந்தாள் கவி. அப்படி இருக்கையில் மலருக்கு 
அசிங்கமாய் மாப்பிள்ளை அமைந்ததில் கவிக்கு மனமகிழ்ச்சி. 

நீதான் வேணும்னு… உன்ன விரும்பி கல்யாணம் பண்ணிட்டு போனதா…. 
அம்மா சொன்னாங்க… 

அவர்கள் திருமணம் பண்ணி சென்ற எண்ணத்தை 
எண்ணி  பெருமூச்சுடன்…. ஆமாம்… என்று தலையசைத்தாள் மலர். 

உடனே தன்னுடைய அலைபேசியை எடுத்து அவளும் பிரபுவும் எடுத்துக் 
கொண்ட பல செல்பி களை அவளிடம் காட்டி மகிழ்ந்தாள். வி ஆர் மேட் 
ஃபார் ஈச் அதர் என்று என்னுடைய பிரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க 
அக்கா… 

எனக்கு எப்படி வாழ்க்கை அமைந்து இருக்கிறது என்று நன்றாக பார்… 
என்று காண்பித்துக் கொள்வதில் ஒரு ஆனந்தம். 

என்ன அக்கா.. இப்படி அமைதியா இருக்க என்று கேட்க… 

ஏதோ எண்ணத்தில் சுழன்று கொண்டு இருந்தவள்…ஒன்னும் இல்ல கவி… 
என்று சொல்ல….. 

அடுத்து கவி கேட்ட கேள்வியில் மனமுடைந்து போனாள் மலர். 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top