அத்தியாயம் 01
அன்று இரவு ஏதேதோ நினைவுகள் கனவுகள் அகமேந்தியை வாட்டியெடுக்க மெல்ல புரண்டு படுத்தவளுடைய உடலில் மெல்லிய நடுக்கம் காதுகளில் மீண்டுமீண்டும் அதே குரல்,
ஏதோ கிணற்றுக்குள் ஒலிப்பது போல் ஒரு வித எதிரொலியுடன் கேட்க பட்டென படுக்கையை விட்டு எழுந்துக் கொண்டவளுக்கு உடலெல்லாம் பறப்பது போல் ஒரு வித மயக்க நிலை தோன்ற சட்டென படுக்கையின் விளிம்பை பிடித்துக் கொண்டு எழுந்தவளின் இதயத்தின் படபடப்பு இப்போதும் குறைந்தபாடில்லை.
உடலெல்லாம் வியர்க்க படப்படக்க எழுந்து அமர்ந்துக் கொண்டவளின் முகத்தில் இன்னும் வெளிறி போயிருந்தது. உடலில் தோன்றிய மாற்றத்தாலும் பயத்தாலும் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
நினைவுகளோ இன்னும் காலையில் நடந்த விடயத்திலேயே உறைந்திருந்தது.
அகமேந்தி இருபத்தியிரண்டு வயது செப்பு சிலை வில்லென வளைந்த புருவங்கள் மாசு மருவற்ற அழகிய வதனம் குண்டு குண்டாய் கன்னங்கள் அதிகம் மெலிவென்று சொல்ல முடியாது,
அதே சமயம் அதிக பருமனுமற்ற அழகிய உடல்வாகு சந்தனமும் பாலும் கலந்த ஒரு வித பளபளப்பான தோல் நிறம் அவளது அழகை கூட்டிக் காட்டியது என்றால் மிகையாகாது,
அன்று நடுநிசியில் எழுந்துக் கொண்டவளுக்கு , அந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை எல்லோருடைய முன்னிலையிலும்,
“இங்கே பாரு இவ என் ஆளு இவ மேல எவன் கண்ணாவது போச்சு தலையை கிள்ளி போட்ருவேன்”
என்ற அந்த திராவிட நிற அரக்கன் அத்துடன் நில்லாமல் அவளது இதழ்களையும் அனைவர் முன்னிலையிலும் சிறைப்பிடித்திருக்க,
அவளுக்கு உடலெல்லாம் தீப்பற்றி எரியாத குறை அதை விட பயமும் அதிகம் சாதாரண ஆள் என்றால் போலீஸிடம் புகார் கொடுக்கலாம் ஆனால் அவனை, அந்த பொறுக்கியை பற்றி யாரிடம் கூறுவது? யாரிடம் புகாரளிப்பது?
பைத்தியம் பிடிக்காத குறையாக நின்றிருந்தவள் ஒன்றும் அவ்வளவு பெரிய தைரியசாலியெல்லாம் இல்லை வாழ்க்கையில் நடந்த சம்பவங்களால் சற்று பயந்த சுபாவத்தை வெளிகாட்டாது இருக்க கற்றுக் கொண்டாள் அவ்வளவு தான்,
பாதுகாப்புக்கு அண்ணன் இருக்கிறான் அதும் போலீசில் உதவி காவல் ஆணையராக பணி புரிகிறான். என்று தான் மறுபடியும் இங்குள்ள கல்லூரியில் சேர்ந்து கற்க தொடங்கினாள்.
இப்போது அதற்கும் வழியில்லை போலும் படக்கூடாதவனின் கண்ணில் பட்டு தொலைத்து விட்டாளே, அவளுக்கு எரிச்சலாக இருந்தது எவனை பற்றி நினைக்க கூடாது என்று கடிவாளமிட்டு மனதை அடக்க முயன்றுக் கொண்டிருந்தாளோ,
மனதுக்குள் அவனை பற்றிய ஆயிரமாயிரம் எண்ணங்கள்,
மூக்கில் ஒற்றைக்கல் மூக்குத்தி இடைவரை வளர்ந்த அடர்த்தியான கேசம் செப்பு
இதழ்கள் என பேரழகிகளே திரும்பி பார்க்க வைக்கும் அழகி தான் அவள், ஆனால் அந்த ஒரு விடயம் இன்று அவளை ஆட்டிப்படைக்க நெஞ்சை அழுத்தி நீவியவள்,
அப்படியே நடுக்கூடத்தில் உள்ள சோபாவில் சாய்ந்தமர்ந்து கண்ணை மூடி தூங்க முற்பட்டுக் கொண்டிருக்க இங்கு அவள் தூக்கத்தை கெடுத்தவனோ,
கண்ணில் ரௌத்திரம் பொங்க ஒருவனை லாக்கப்பில் வைத்து அடி வெளுத்துக் கொண்டிருந்தான். அவனிடம், “என்னை பார்த்தா மூஞ்ச திருப்புவியா? சொல்லு திருப்புவியா? சொல்லு சொல்லு”
என்று கேட்டு கேட்டு அடிக்க, அடித்து கொண்டிருந்தவன் இடுப்பில் காவி நிற வேட்டி கழுத்தில் உருத்திராட்சை மாலை அத்துடன் புலி நகம் இன்னும் தங்க சங்கிலிகள்
என்று ஏதோ நகைக்கடை விளம்பரத்தில் வரும் மாடல் போல் கட்டுமஸ்தான ஆறேகால் அடி உயரத்தில் திராவிட நிற அழகன் ஆனால் குணத்தில் தான் கேடு போலும்,
லாக்கப்பில் இருந்த கைதியோ, “அண்ணாவ் சாதாரண பெட்டி கேஸ் அதுக்கு ஏன் இப்படி போட்டு அடிக்கிறே அதுக்கு உங்க தம்பியே பரவால்ல”
என்றதும் வாயிலேயே இரண்டு குத்து விட்டவன், “என்ன தைரியம் இருந்தா என்ன எதிர்த்து பேசுவ?”
மீண்டும் லாக்கப்பில் இருந்த கைதியை ஓங்கி மிதிக்க போக,
“டேய் அரசு போதும்டா நிறுத்து விட்டா செத்துருவான் போல”
என்ற கம்பீரமான ஆண் குரல் தான் காவி வேட்டிக்காரனை தடுத்து நிறுத்தியது.
வேறு யார் அவனுடைய தம்பியான அச்சுதன் தான், அச்சுதன் மாநிறத்துக்கும் சற்று அதிகமான நிறம் முறுக்கிவிட்ட மீசை தாடி போலீஸ் என்பதால் சீராக நறுக்கிய முடி ஆனால் தோற்றம் அண்ணனை போலவே பயில்வான் தோற்றம் தான்,
முறுக்கேறிய புஜங்கள் புருவத்தில் வீரத் தழும்பாய் வெட்டுக்காயம் குற்றவாளிகளை பிடிக்கும் போது ஏற்பட்டது என நினைத்தால் அது தான் தவறு,
அவன் குடும்பமே பெரும் குற்றவாளி கூட்டம் தான் அரசு எம்.எல்.ஏ ஆனால் குடும்ப தொழில் என்னவோ அடிதடி, வெட்டு குத்து, கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து தான் அதிகாரத்தில் பதவியில் பலத்தில் இருந்தால் யாரும் அவர்கள் மீது கை வைக்க முடியாதல்லவா?
அதற்காக தான் இந்த எம்.எல்.ஏ, எம்.பி, போலீஸ் என வீட்டிலுள்ள அத்தனை ஆண்களும் ஒவ்வொரு பதவியில் இருக்கின்றனர்.
அத்தனை பேரும் முரடர்கள் தான் அவர்களது தாய் சகுந்தலா தேவி பாடசாலை ஆசிரியை அமைதியானவர் பொறுமையானவர் ஆனால் ஒரு கட்டத்தில் இந்த அரக்க கூட்டத்தில் இருக்க முடியாது, இவர்களினது அராஜகம் பொறுக்க முடியாது
வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் தாய் வீட்டுக்கே சென்று விட்டார். அவரது உதாசீனமும் ஒதுக்கமும் இவர்களை மேலும் மேலும் முரடர்கள் ஆக்கியதே தவிர இவர்களது அராஜகம் குறைந்தபாடில்லை.
அரசு என்ன நினைத்தானோ அக் கைதியை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்த தம்பியின் அறைக்குள் நுழைந்து பனியனை மாட்டிக் கொண்டிருக்க அச்சுதனோ,
“ஏன்டா இவ்ளோ கோபம்? அதுவும் ஸ்பெஷலா மூஞ்ச திருப்புவியானு கேட்டு கேட்டு அடிச்ச”
என்றதும் கண்ணை மூடி தன்னை சமன் செய்துக் கொள்ள முனைந்தவனின் கோபம் இன்னுமின்னும் கூடியதே தவிர குறைந்தபாடில்லை.
அவன் அரசு ஆற்றலரசு வெளியுலகத்திற்கு மட்டுமே எம்.எல் ஏ உள்ளுக்குள் பக்கா ரவுடி அவன் காதுக்குள் மீண்டும் மீண்டும் அவள் குரல் அவன் அகமேந்தியின் குரல்
“ச்சே கைய விடுறா” என்று அவள் கூறிய வார்த்தை ஒலித்துக் கொண்டே இருந்தது.
அதற்கு அவன் செய்த வேலையும் நினைவு வந்து கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டான். அதை பார்த்த அச்சுதனோ,
“சொல்லிட்டு சிரிடா ஏன் சிரிக்கிற?” என்றதும் அரசுவோ,
“இன்னைக்கு உன்னோட அண்ணிக்காரி ஒரண்டை இழுத்து கைய்ய விட சொன்னாளா?”
என்று மீசையை முறுக்கி விட்டவன் கொடுப்புக்குள் சிரித்தபடி,
“அதான் அவளுக்கு வேறமாதிரி தோரணையா புரிய வச்சேன் அவ யாரோட ப்ராபர்ட்டின்னு”
என்று சிரித்தவன் உதட்டை மெல்ல விரல் கொண்டு வருடிக் கொண்டு கூற அச்சுதனோ,
“யாரு அந்த ராமசாமி பொண்ணு கேஷாவா? அவ தான் உன்ன கண்டாலே வழிவாளே அவளா கைய விட சொன்னா?”
என்று கேட்க அரசுவோ, “அந்த கோண மூக்கிய பத்தி ஏன் கதைக்குற? எரிச்சலா வருது அரசு ஷாப்பிங் போகனும், அரசு பார்க்குக்கு போகணும்னு பெரிய தொல்லை என்னைக்கு தலைவர் பதவி நம்ம கைக்கு வருதோ அன்னைக்கே அவளயும் அவ அப்பனையும் சேர்த்து பாடையில ஏத்தனும் நசைங்க”
என்று திட்டியபடி வட்டிபணம் மாமூல் பணம் அடுத்தவன் வயிற்றில் அடித்த பணம் என அத்தனை நோட்டுக்களையும் தொகுதிவாரியாக அண்ணனும் தம்பியும் பங்கு போட்டுக் கொண்டிருக்க,
வெளியே நின்ற கான்ஸ்டபிளோ, “சார்! சார் ஏ.சி.பி அகச்செழியன் சார் வந்திருக்கார்”
என்றதும் அண்ணனும் தம்பியும் நக்கலாக சிரித்தபடி, “உள்ளார வரச் சொல்லுடா இப்போ தான் பூச்சாண்டி காட்டிகிட்டு”
என்று ஒரு சேர கூறிவிட்டு சிரிக்க அச்சுதனோ வேண்டுமென்றே காக்கி சீருடையை அகற்றி அங்கிருந்த சோபாவில் போட்டு விட்டு “இப்போ வர சொல்லு மோர”
என்று விட்டு நன்றாக இருக்கையில் சாய்ந்தமர்ந்தவன் அரசுவிடம், “ஓஹோ! மூத்த அண்ணி கைய பிடிச்சு இழுத்தியா? அதான் பொறுக்கின்னு திட்டிருக்கு”
என்று நக்கலாக சிரிக்க, “அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் கொழுப்ப பார்த்தியா? காலையில புருஷன் தானே கிஸ் அடிச்சான்னு பார்க்காம அவ அண்ணன்காரன் கிட்ட கோர்த்து விட்டு இருக்கா”
என்றதும் அச்சுதனோ, “டேய்! என்னடா சொல்லுற? ஏன்டா அப்டி பண்ண இப்போ”
என்று ஏதோ சொல்ல வர அதற்குள் அங்கு தடாலடியாக நுழைந்திருந்தான் அகச்செழியன்,
“டேய்! எவ்வளவு தைரியமிருந்தா என் தங்கச்சி மேலயே கைவைச்சிருப்ப உன்ன”
என்று அரசுவின் பனியனை பற்ற, அரசுவோ அதை சட்டை செய்யாது, “மச்சான் துணை இருந்தா தான் மாப்பிள்ளை மலையேற முடியும் அப்டிப்பட்ட மச்சான் சட்டையில கைவைக்கலாமா? சொல்லு”
என்றதும் செழியனுக்கு எரி நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகியது.
“என்னடா லந்தா பண்ணுற? உனக்கு பதவிக்காலம் அஞ்சு வருஷம் தான் எனக்கு அப்படி இல்ல பதவில இருந்து இறங்குன அடுத்த நிமிஷம் உன்ன உள்ள தூக்கி வச்சு ஜட்டியோட லாடம் கட்டிருவேன்டா காட்டு பயலே”
என்று ஒரு அறை விட்டிருக்க அரசுவுக்கோ உதடு கிழிந்து ரத்தமே வந்திருந்தது.
ஆனால் அரசுவோ, “சும்மா சொல்லக் கூடாது அண்ணனும் தங்கச்சியும் எதுல ஒரே மாதிரியோ இல்லையோ என் உதட்டுல இருந்து ரத்தம் வரவைக்கிறதுல ம்ம் பேஷ் பேஷ் எக்ஸ்பர்ட் தான்”
என்று ரத்தத்தை நாவால் வருடியவன், “என்ன மாப்பிள்ளை சொன்ன? என்னைய ஜட்டியோட உட்காரவச்சு லாடம் கட்டுவியா? அதுக்கு நீ போலீசா இருக்கனுமே இப்போ
கூட ஒரு போன்கால் போதும் உன்ன எப்படி இங்கே டிரான்ஸ்பராகி வர வச்சேனோ அதே மாதிரி இன்னொரு தண்ணியில்லாத காட்டுக்கு அனுப்ப முடியும்
அப்டியில்லையா உன்னோட காக்கி சட்டையை கழட்ட வைக்க இங்கே என் மேல கைவைச்சியே அந்த புட்டேஜ் போதும் அரசு பேசாம இருக்கான்னு அண்ணனும் தங்கச்சியும் துள்ளிட்டு திரியாதீங்க கோபம் வந்தா தாங்க மாட்டீங்க”
என்று கூற செழியனோ கோபத்தில் முகம் சிவக்க ஏதும் செய்ய முடியாத கோபத்தில் நின்றிருக்க அரசுவோ அச்சுதனிடம்,
“மாப்பிள்ளைய பார்த்தாலே எனக்கு கோபம் வருதில்லடா ஏன்னு உனக்கு தெரியுமாடா தம்பி?”
அச்சுதனோ, “தெரிலயே அண்ணோவ் நீங்களே சொல்லுறது” என்று நக்கலாக நாடகப்பாணியில் வினவ,
“வேற என்னடா உங்க அண்ணிக்காரி மாதிரியே சும்மா பளபளன்னு இருக்கான் அவளோட கண்ணு வேற இருக்கா அதான் பார்த்ததும் லவ்ஸா பொங்குது”
என்றபடி செழியனுடைய கன்னத்தில் முத்தம் வைக்க, செழியனுக்கு கையாறு நிலையிலும் இவனது செயலிலும் எரிச்சல் மூழ சட்டென அரசுவை பிரித்து தள்ளி விட்டு அச்சுதனிடம்,
“ஐ.பி.எஸ் அச்சுதன் டியூட்டில இருக்கும் போது இப்டி தான் உங்க வீட்ல இருக்குற மாதிரி இருப்பீங்களா? என்ன கோலம் இது?”
என்று பல்லை நரநரவென கடிக்க அச்சுதனோ, “சார் டியூட்டில இருக்கனால தான் பேண்ட் போட்ருக்கேன் சார் இல்லாட்டி காத்தோட்டமா லுங்கி கட்டிருப்பேனில்ல”
என்று அவன் பங்குக்கு சூடேற்ற செழியனுக்கோ அண்ணன் தம்பி இருவரினதும் முகத்தை அடித்து பெயர்க்கும் கோபம் வந்தது. ஆனால் என்ன செய்ய முடியும் ஒன்றும் செய்ய முடியாதே, ஒரு மூர்க்கத்தனத்தில் அடித்து விட்டான்.
இப்போது தந்தையிடம் கூறினாலும் அவரும் அவர்கள் வம்புக்கு போகாதே என்று தான் கூறுவார்.
அவனது தந்தை அரிச்சந்திரன் அப்போதே கூறினார். மீண்டும் அந்த ஊருக்கு போக வேண்டாம். அகமேந்தியை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கலாம் அவர்கள்
திசையே வேண்டாமென்று அண்ணனும் தங்கையும் தான் பழி வாங்குகிறோம்.
அவர்கள் முன் வாழ்ந்து காட்டுகிறோம் என்று கிளம்பி வந்தது.
கடைசியில் வந்து ஒரு வாரத்திலேயே அவர்களுடன் முட்டிக் கொண்டு நிற்கிறது. ஒரு கணம் மீண்டும் மாற்றல் வாங்கிக் கொண்டு கிளம்பி விடலாமா? என்று கூட செழியன் சிந்தித்தான்.
ஆனால் அண்ணனுக்கும் தங்கைக்கும் தான் இவர்களுக்கு பயந்து ஓடுவதா? என்ற எண்ணம் வந்து விடுமே அதனால் மனதுக்குள்
‘என்னைக்காவது தொக்க மாட்டுற அன்னைக்கு இருக்குடா உங்களுக்கு’
என்று கருவியவன் குரலை செருமிக் கொண்டு, “இங்கே பாரு அரசு உனக்கும் என் தங்கச்சிக்குமான உறவு முடிஞ்ச கதை, அதை திரும்ப புதுப்பிக்க நினைக்காத உனக்கும் கல்யாணம் ஆக போகுது நீ என் தங்கச்சி விஷயத்துல தலையீடாத வரைக்கும் நான் நல்லவன் தான்”
என்றதும் அச்சுதனும் அரசுவும் இணைந்து சிரிக்க தொடங்கி விட்டனர்.
“யாரு நீயி? எங்க விஷயத்துல தலையிடமாட்ட எங்க ரெண்டு பேரையும் உள்ள தூக்கி வைக்கணும் என்கவுண்டர்ல போடனும்னு தானே இங்க வந்திருக்க சும்மா நல்லவன் வல்லவன்னு கதை விட்டுக்கிட்டு”
என்ற அரசுவோ நிறுத்தி நிதானமாக, “இப்பயும் சொல்லுறேன் உன் தங்கச்சி தான் எனக்கு மூத்த தாரம் முரண்டுப்பிடிக்காம அனுப்பி வை அவள ராணியாட்டம் பார்த்துக்கிறேன்”
என்றதும் செழியனுக்கோ கோபம் தலைக்கேறியது. “என்னடா நினைச்சுட்டு இருக்க? உன் மனசுல என் தங்கச்சிக்கு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கல நான் செழியனில்லடா”
என்று சுவரோடு சாய்க்க அச்சுதனோ, “நீ இப்பயும் செழியனில்லடா அகச்செழியன்”
என்று நக்கலாக கத்த, செழியன் அவனை அப்படியே விட்டுவிட்டு, “உங்க ரெண்டு பேரையும் தொலைச்சிக்கட்டிட்டு தான் நான் இந்த தூத்துக்குடிய விட்டு போவேன்டா”
என்று ஐம்பொன் காப்பை மேலே ஏற்றி விட்டு செல்ல சகோதரர்களுக்கோ, ‘என்னவோ பேசுறான் பைத்தியக்காரன்’ என்ற எண்ணம் தான் மிஞ்சியது.
இதே சமயம் அவர்களது தந்தையான சத்யசீலனோ, சந்தைக்கு வந்திருந்த புராதன பாரம்பரியம் நிறைந்த சிலையை எப்படி விற்று காசாக்குவது என்று எண்ணியபடி வெளிநாட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒருவாறு அதை ஐம்பது கோடிக்கு விற்றிருக்க,
அங்கு வந்த அவரது வலது கையான சங்கரனோ, “ஐயா! இது நூறு கோடி பெறும்”
என்றதும் சத்யசீலனோ சிரித்தபடி, “தெரியும்டா இவனுகளுக்கு உண்மையானத கொடுத்துட்டு நான் நக்கிட்டு போகவா? அதான் நாலு சிலை ரெடி பண்ணி ஒன்னொன்னையும் ஐம்பது கோடிக்கு வித்துட்டு இருக்கேன்”
என்று சிரிக்க சங்கரனோ, “சூப்பர்! ஐயா உங்க மூளையே மூளை தான்”
சத்யசீலனோ, “அது உனக்கு விளங்குது என் பொஞ்சாதிக்கு தான் விளங்க மாட்டேங்குது”
என்று கூறிக் கொண்டு பணத்தில் ஒரு பகுதியை சங்கரனுக்கு கொடுத்து அனுப்பியும் வைத்து விட்டார்.
ஆகமொத்தம் குடும்பமே சாக்கடை தான் இதில் இவர்களுடன் கூட்டு சேர்ந்து குப்பை கொட்டும் சாக்கடை தான் துரியோதனன் அச்சுதனின் உயிர் தோழன், மகாபாரத்ததில் வந்த அச்சுதன் தர்மத்தை நிலைநாட்ட துரியோதனனை எதிர்த்து நிற்க இந்த நவீன அச்சுதனோ,
“டேய் ஒன்னா சேர்ந்து கொள்ளையடிச்சுட்டு பாதி பாதியா பிரிச்சுக்குவோம்” என்ற சமாதான ஒப்பந்தத்துக்கு வந்திருந்தான்.
துரியோதனன் தூத்துக்குடி துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஒரு ரௌடி ஆனால் அது வெளியுலகிற்கு தெரியாது வெளியுலகத்தை பொறுத்தவரை செல்வம் எனும் தாதா தான் துத்துக்குடியை கட்டுக்குள் வைத்திருக்கும் ரௌடி ஆனால் அவனே இந்த துரியனின் பினாமி தான்,
துரியோதனன் ஆறடி தோற்றம் பறந்து விரிந்த முதுகு தோள் வரை வளர்ந்திருந்த கேசத்துக்கு அடர் கபில நிறத்தில் இடையிடையே சாயம் பூசியிருப்பான் எப்போதும் உடற்பயிற்சியின் விளைவால் முறுக்கேறியிருந்த தேக்கு மர தேகம்,
இளம்சிவப்பு உதடுகள் என ஆணழகன் தான் ஆனால் கொடூரன் அவனது சுயலாபத்துக்காக எதுவும் செய்ய கூடியவன் வெளியில் இவனுக்கு பெயர் தொழிலதிபன், இன்றும் நண்பர்களை பார்க்க ஸ்டேஷனுக்கு வந்தவன்,
“டேய் அரசு என்னடா பப்ளிக்ல வச்சு அந்த பொண்ணு அதான் உன் முன்னாள் பொண்டாட்டிக்கு கிஸ் அடிச்சியாம் வீடியோ வேற ஹெச்.டி குவாலிட்டில ரிலீஸ் ஆகி தூத்துக்குடி எம்.எல்.ஏ வின் சில்மிஷம்னு வைரல் ஆகிட்டு இருக்கு”
என்றதும் அரசுவோ, ” அதான் மாப்பிள்ளைக்காரன் ஒரே குதியா குதிச்சுட்டு போயிருக்கான் சரிடா, அதா முக்கியம் நல்ல வீடியோவா பார்த்து எனக்கு அனுப்புடா
உங்க அண்ணிக்கு அனுப்பி தூக்கத்தை கெடுப்போம்”
என்று தனது பதவிக்கு ஏதும் பங்கம் நிகழ்ந்து விடுமோ என்ற கவலையில்லாது கூற
துரியனோ, “என்ன செழியன் வந்தானா?”
என்றதும் அச்சுதனோ, “ஆமா வந்தான் ஆட்டமா ஆடிட்டு இப்போ தான் போனான்”
என்றபடி மீண்டும் பணத்தை எண்ண துரியோதனனோ, “என்னடா இதெல்லாம்? அவ வேணாம்னு தானே டைவர்ஸ் பண்ண இப்போ அந்த கேஷா பொண்ண கல்யாணம் கட்டிக்க போற அப்பறோம் என்ன புதுசா அக்கறை?”
என்றதும் அரசுவோ, “அக்கறையாவது சக்கரையாவது என்ன விட்டுட்டு போய் நிம்மதியா இருக்கா ஒரு சுத்து வேற ஏறி இருக்கா அதை குறைக்க தான் இப்டி பண்ணுனேன்”
என்றபடி அவன் முத்தமிடும் காணொளியை பார்த்தவன், “ஒரு பய கூட ஒழுங்கா வீடியோ பண்ணியில்ல கேமரா ஏங்கில் சரியில்ல பாரேன்”
என்றவன் அவனுக்கு பிடித்த ஒரு காணொளியை வைத்துக் கொண்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தி அத்தனையையும் பரவாமல் தடுத்து விடிவதற்குள் அழித்து விடும்படி கட்டளையும் இட்டிருந்தான்.
அதனை தொடர்ந்து துரியனோ, “என்னவோ போ அவள உனக்கு பிடிக்குமா?”
என்றது தான் தாமதம் முகம் கறுக்க, “துரியா அண்ணின்னு மரியாதையா கூப்பிடு அவ இவன்ன”
என்று கூறியவன் மொழியில் அத்தனை கடுமை துரியனோ,”அப்பறம் ஏன்டா அவங்கள டைவர்ஸ் பண்ண?”
அதற்கு அரசுவோ, “அப்போ தோணுச்சு பண்ணேன் இப்போ வேணும்னு தோணுது அதுக்குன்னு அவள மட்டும் கட்டிக்க முடியுமா சொல்லு பதவி முக்கியமில்ல”
என்று கூற துரியோதனனுக்கு தான் தலை சுற்றியது.,
“டேய் இப்டியே போனா உன்ன கட்சில இருந்து தூக்கிருவாங்கடா அந்த ஆள் பொண்ணையும் கட்டி தராம போயிருவான் அதுக்கு பிறகு உன் அரசியல் வாழ்க்கைக்கு பெரிய நாமம் தான்”
என்றதும் அரசுவோ, “அப்டி அந்த சொட்ட மண்டை மட்டும் தூக்கினா அவனோட வீடியோவும் வைரலாகும் இல்ல உல்லாசமாக சல்லாபம் புரியும் _____ கட்சி தலைவர்னு கொட்ட எழுத்துல வராது வர வைக்கமாட்டேன் “
என்று கூறியபடி சுருட்டை புகைக்க தொடங்கியவனுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வர அதையேற்று காதில் வைத்தது தான் தாமதம்,
“உனக்கு இப்போ சந்தோஷமா? நீயெல்லாம் என்ன மனுஷன் உன்ன வேணாம்னு தானே விட்டு தொலைச்சுட்டு வந்தேன் இப்போ எதுக்கு என் மானத்த வாங்குற? அடுத்த ரெண்டு மாசத்துல அந்த பொண்ணு”
என்று அகமேந்தி விம்ம அரசுவோ அசால்ட்டாக, “ஆமா உன் தங்கச்சி கேஷா கூட கல்யாணம் அதானே நடந்துட்டு போகுது நீ ஒரு கரைக்கும் அவ ஒரு கரைக்கும் இருந்துட்டு போங்கடி அக்கா தங்கச்சியா ஒத்துமையா வாழ கத்துக்கோடி”
என்றதும் அவளோ, “ச்சீ உனக்கு இப்டி பேச வெட்கமாயில்லை ஒரு பொண்ணுக்காவது உண்மையா இரு, அடுத்தது உனக்கும் எனக்கும் நடந்தது
கல்யாணமும் இல்ல ஏன் அதை நான் கல்யாணமா கூட மதிக்கல உன்ன மாதிரி ஒரு கேவலமானவன் கூட வாழுறதுக்கு கொளுத்திட்டு செத்துருவேன்”
என்று கூற அவனோ, “கேரோஸீன் இருக்கா வேணுமா?” என்று கூலாக முடியை அழுந்த கோதியபடி கேட்க அவளோ,
“பொம்பள சாபம் உன்ன சும்மா விடாது” என்றதும் அவனோ,
“சும்மா விடாம பவுடர் பவுண்டேஷன் ஷர்ட்டு எல்லாம் போட்டு விடுமா? ரெண்டு பொண்டாட்டிங்க இருக்கீங்க நீங்க செய்யாததெல்லாம் அது செய்யுமா? சூப்பர் எந்த ஊருல கிடைக்கும்னு சொல்லு அதையும் வாங்கி இடுப்புல சொருகிக்கிறேன்”
என்று ஆர்வமாக கேட்க அவளோ, “பொறுக்கி”
என்று கூறி விட்டு அழைப்பை துண்டிக்க போனவளிடம், “தேங்க் யூ நான் பொறுக்கி தான், அதை விடு உன் அண்ணனும் நீயும் என்னடி சும்மா பளபளன்னு அப்டியே மின்னுறீங்க எங்க அத்தை ஏதும் கழுதை பால் ஊத்தி குளிப்பாட்டினாங்களா?”
என்றதும் அவளோ, “நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுற? என் வாழ்க்கைய வீணாக்குனது போதாதுன்னு இன்னும் என்ன அசிங்கப்படுத்திட்டு எப்படி உன்னால இப்டி கதைக்க முடியுது?”
என்றவள் அழ அவனோ, “சும்மா நொய்யு நொய்யுன்னு அழாத ஊரான் கூட சேர்ந்தா உன் பெயர் கெட்டு போகுது என் கூட தானே இந்த அரசு கூட தானே கெட்டு போகட்டும் உன் புருஷன் கூட சேர்ந்து தானே என்ஜாய் பண்ணு சும்மா அழுதுட்டு”
என்று ஒரு வித குதூகல குரலில் கூற அவளுக்கோ அவனை வெட்டிக் கொல்ல வெறியே பிறந்தது அதே எரிச்சலுடன்,
” நான் அன்னைக்கு சொன்னது சரி தான் உன் கலர் மட்டும் காட்டான் கலரில்ல
உன் மனசும் காட்டான் மனசு தான்டா காட்டான்,”
என்றவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு, “அன்னைக்கு உன் கலர வச்சு உன்ன டிஸ்க்ரீமினேஷன் பண்ணதுக்கு நிறைய முறை கவலைப்பட்டுருக்கேன் ஆனா இப்போ தானே விளங்குது அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு”
இப்படியான வசைமொழிகளில் அரசுவின் முகம் ஒரு வித இறுக்கத்தை தத்தெடுத்திருந்தது.
“அகமி தேவையில்லாம பேசாத எனக்கு கோபம் வந்தா என்ன நடக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும்”
என்றவன் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவளுக்கு ஈரக்குலை நடுங்கியது. அப் பக்கம் சத்தமில்லாமல் போக நீண்ட மூச்சை வெளியேற்றியவன்,
“அப்பறம் எப்ப வீட்டுக்கு வார?” என்றதும் அவளோ, “செத்தாலும் சாவேன் உன் வீட்டுக்கு மட்டும் வரமாட்டேன் அதும் உன் பொண்டாட்டியா இந்த ஜென்மத்துக்கு வாழமாட்டேன்டா”
என்று அழைப்பை துண்டித்திருக்க அரசுவின் முகமும் இறுகி தான் போனது.
தொடரும்…