அத்தியாயம் 03

 

 

அத்தியாயம் 03

அவளது முகம் குப்பென்று வியர்க்க இதயம் வேறு தாறுமாறாத் துடித்தது.

“ஐயோ கடவுளே இவங்களுக்கு எப்பிடி”

என நினைத்தவள் எந்த மாதிரியாக உணர்கிறாள் என அவளுக்கேத் தெரியவில்லை.

பிறகு குளித்துக் கொண்டு அவன் கொண்டு வந்திருந்த ஆடையை அணிந்தவள் தன்னை கண்ணாடியில் பார்த்தாள்.

அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கவில்லை அவள் கண்களுக்கு.

பெருமூச்சொன்றை வெளியிட்டவள்.

குளியலறையில் இருந்து வெளியே வந்தாள்.

அறையில் அவன் இருக்கவில்லை.

அறையினை பார்த்தாள்.

அதுவும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தான் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

“இவங்களுக்கு கறுப்பு கலரும்  வெள்ள கலரும் தான் புடிக்கும் போல”

என நினைத்தாள்.

என்ன செய்வதென்று தெரியவில்லை.

வெளியே செல்வோமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்க கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

பின் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் அவளது கணவன்.

அவளை தலை முதல் கால் வரை நிதானமாக அளந்தான்.

அவள் அவனது பார்வையின் ஆழத்தில்  அவளது தலையை குனித்துக் கொண்டாள்.

“பசிக்குது எதாச்சும் சமைக்குறியா”

அவன் கேட்ட கேள்வியில் பட்டென தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

அவளது பார்வை புரியாமல் புருவம் உயர்த்தினான்

“இல்ல எனக்கு அவ்வளவா சமைக்க வராது”

கூறிவிட்டு தலையை குனித்துக் கொண்டாள்.

“ஓஹ்”

என மட்டும் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றான்.

ஏதாவது திட்டுவான் என எதிர்ப்பார்த்திருந்தவளுக்கு அவனது அந்த பதில் சற்று ஆறுதலை தந்தது.

அவனது தாய் தானே இவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்.

ஒரு வேலையும் செய்ய விடுவதில்லையே.

மகளுக்கு காட்டும் பாசத்தை விட ஒரு படி மேல் அல்லவா அவர் இவளுக்கு காட்டும் பாசம்.

தேவகியை நினைக்கும் போது மீண்டும் கண்கள் கலங்கியது.

அக்ஷரன் முன்னே பின்னே அறியாதவன் அல்ல ஆனாலும் அவனுடன் அவ்வளவாக பழகினது இல்லையே அவனும் அவளைக் கண்டால் எரிந்து விழுவானே அதை நினைக்கும் போது தான் கிலி பிடித்தது.

ஆனால் இப்பொழுது வரை அவளுக்குத் தெரியாது எதற்காக அவன் தன்னை திருமணம் செய்து கொண்டான் என்று.

நிச்சயம் அவனது அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ற பெண் தான் இல்லை அப்படியிருக்கும் போது எதற்காக திருமணம் செய்து கொண்டான்.

யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு பொறி தட்டியது.

அதை நினைத்தவள்.

“அப்போ அவங்களும் அதுக்காகத் தான் என்ன கல்யாணம் பன்னிக்கிட்டாங்களா”

“பின்ன அவன் என்ன உன்னோட அழகுல மயங்கியா உன்ன கட்டிக்கிட்டான் மயக்குற அளவு உன்கிட்ட அழகு கொட்டிக் கெடக்குதோ”

அவளது மனசாட்சியே எள்ளி நகையாட உண்மை தானே என்று எண்ணியவளது முகம் சோர்ந்தது.

 

கொஞ்ச நேரம் அறையிலே நின்றுக் கொண்டு கையை பிசைந்துக் கொண்டிருந்தவள் அடி மேல் அடி எடுத்து வைத்து அறையை விட்டு வெளியேறினாள்.

வெளியே வந்ததும் சமையல் வாசம் நாசியை தீண்டிச் செல்ல அங்கிருந்து சமயலறையை நோக்கினாள்.

அவளது கணவன் தான் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்ததும் ஏதோ போல் ஆகிவிட்டது.

எதுவும் யோசிக்காமல் அவனை நெருங்கியவள் தயங்கி நின்றாள்.

அவள் வந்து நிற்பதை உணர்ந்தவன் தனது வேலையிலே கண்களை பதித்துக் கொண்டு.

“என்ன வேணும்”

கைகள் வெங்காயத்தை வெட்டிக் கொண்டு இருந்தாலும் கேள்வி வந்தது அவனிடமிருந்து.

“இல்ல நா சமைக்குறேன்”

தயங்கிக் கொண்டுக் கூற நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

ஆனால் அவளோ எப்பொழுதும் போல் தலையைக் குனித்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு நைட் ஹாஸ்பிட்டல் போக முடியாது நாளைக்கு முக்கியமான வேல இருக்கு”

அவன் கூறி விட்டு வேலையை செய்ய இவள் தான் விழித்தாள்.

எதற்காக அப்படிக் கூறினான் என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள்.

அவன் அதற்கு பின்னர் எதுவும் பேசவில்லை.

தனது வேலையை செய்துக் கொண்டிருந்தான்.

இவள் தான் கையைப் பிசைந்துக் கொண்டு தயக்தமாக நின்று கொண்டிருந்தாள்.

அவன் எதைப் பற்றியும் பேசவில்லை.

அவளைத் திருமணம் செய்தது அவன் தானா என்ற சந்தேகம் வருமளவிற்கு சாதரணமாக இருந்தான்.

அவளால் தான் நிலை கொள்ள முடியவில்லை.

இவன் சமைத்து முடித்து விட்டு அங்கிருந்த டைனிங் டேபளில் கொண்டு போய் வைத்து விட்டு அமர்ந்தான்.

அவள் அசையாமல் அங்கே தான் நின்று கொண்டிருந்தாள்.

“வந்து சாப்டு”

அவன் கூறி விட்டு சாப்பிட ஆரம்பிக்க.

“இ..ல்ல எனக்கு பசிக்கல்ல”

தயக்கமாக இழுத்துக் கூற.

“எனக்கு சாப்பாட்ட வேஸ்ட் பன்னினா சுத்தமா புடிக்காது உனக்கும் சேர்த்து தான் சமைச்சிருக்கேன் வந்து சாப்டு”

அவன் கூற அதற்கு மேல் மறுக்க முடியாமல் டைனிங் டேபளை நெருங்கி நிற்க.

அவள் நிற்பதை உணர்ந்தவன்.

“உட்கார்ந்து தான் சாப்டனும் உட்காரு”

எனக் கூற அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அங்கிருந்த சாப்பாட்டை பார்த்துக் கொண்டிருக்க.

“உனக்கு எல்லாம் சொல்லிக்கிட்டே இருக்கனுமா தட்டுல போட்டு சாப்டு”

கடுப்புடன் அவன் கூறிய விதத்தில் அவசரமாக சாப்பாட்டை தட்டில் போட்டு சாப்பிட்டாள்.

நூடில்ஸ் தான் செய்திருந்தான் ஆனால் சுவையாக இருந்தது.

பசி இல்லை என்று சொன்னவள் சாப்பிட்டுக் கொண்டு செல்லும் போது தான் பசியினை உணர்ந்தாள்.

அவன் எதுவும் பேசவில்லை.

இவள் சாப்பிட்டு முடித்து விட்டு அவனைப் பார்க்க அவன் நிதானமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவன் அப்படி தானே எதிலும் நிதானம்.

அனைத்திலும் நிதானம்.

பேச்சிலாக இருக்கட்டும் மௌனத்திலாக இருக்கட்டும் நிதானம் தான் அவன் ஆயுதம்.

சில செயல்கள் அவனது நிதானத்தை தொலைக்கின்றன.

அதில் ஒன்று தான் இன்று காலை நடைப்பெற்ற அவனது திருமணமும் கூட..!!

இவள் சாப்பிட்டு முடித்ததால் தட்டுடன் சமயலறைக்கு எழுந்து சென்று தட்டை கழுவி விட்டு கையையும் கழுவிக் கொண்டு வெளியே வந்தாள்.

அவன் இன்னும் சாப்பிட்டுக் கொண்டு தான் இருந்தான்.

அவள் வந்து மீண்டும் கையைப் பிசைந்துக் கொண்டு நிற்க.

“சொல்லு”

அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை கண்கள் தட்டில் உள்ள சாப்பாட்டில் இருந்தன.

“அது..”

தொண்டைக்குழிக்குள் எச்சிலை விழுங்கிக் கொண்டு அவனைப் பார்க்க அவன் அமைதியாக இருந்தான்.

“நீங்க என்ன கல்யாணம் பன்னிக்கிட்டது மாமா என் பேர்ல எழுதி வெச்ச சொத்துக்காக தானே நா அத உங்களுக்கு கொடுத்துட்றேன் ஆனா என.. எனக்கு வி.வா..கரத்..து வேணும்”

மூச்சைப் இழுத்துப் பிடித்துக் கொண்டு அவள் கூறி முடிக்க.

இவன் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவளுக்குத் தான் நெஞ்சில் நீர் வற்றிப் போனது.

அவனது நிதானம் தான் அவளுக்கு பயத்தை வரவழைத்தது.

“ஓகே சொத்த என்பேருக்கு மாத்திக்கொடு உனக்கு டிவோர்ஸ் கொடுக்குறேன்”

ஒவ்வொரு வார்த்தையாக அழுத்திக் கூறியவன் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு சமயலறைக்குள் சென்றான்.

இவள் தான் அவன் கூறிச் சென்ற வார்த்தையில் ஸ்தம்பித்து நின்றாள்.

அவள் தான் விவாகரத்து வேண்டும் என்று கேட்டது ஆனால் அவன் ஏதாவது கோபப்படுவான் என எதிர்ப்பார்த்து இருக்க அவன் அவளது எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டிருந்தான்.

“உன்ன அவன் உருகி உருகி காதலிச்சான் பாரு விவாகரத்து வேணும்ன்னு சொன்னதும் பொங்கியெழ அவனே அந்த சொத்துக்காகத் தான் உன்ன கட்டிக்கிட்டான் அது கிடைக்கும் போது உன்ன எதுக்கு அவன் கூட வெச்சிக்க போறான்”

மனசாட்சி நேரம் பார்த்து உரைக்க இவளுக்கும் அது உண்மை எனப் பட்டது.

ஞானவேலுக்கு ஊரில் ஏகப்பட்ட சொத்து.

கிராமத்திலையே அதிக வயல் நிலங்கள் தோப்பு என கோடிக் கணக்கு பெறுமதியான சொத்துக்கள் ஏராளம்.

அவை அனைத்தையும் அவரது மகன் அக்ஷரன் மற்றும் நேத்ராக்கு சமமாக எழுதி வைத்தார்.

ஆனால் கொஞ்ச காலத்தில் அக்ஷரன் பெயரில் இருந்த சொத்துக்களையும் நேத்ராவிற்கே எழுதி வைத்து விட்டார்.

“எதுக்கு மாமா என்பேர்ல எழுதினிங்க”

அன்று நேத்ரா கேட்டதற்கு.

“எனக்கு என்ன செய்யனும்ன்னு தெரியும் நீ உன்னோட வேலையப் பாரு”

கோபப்பட்டார்.

அவர் கண்டிப்பானவர் தான் அதை விட ஆயிரம் மடங்கு பாசம் மிக்கவர்.

அதை நேத்ரா என்றும் உணர்வாள்.

இப்பொழுது அக்ஷரன் அதுக்காகத் தான் தன்னை திருமணம் செய்து கொண்டுள்ளான் என எண்ணி அவனிடம் கூற அவனும் அதை ஒத்துக்கொண்டானே.

அவன் வந்து அவள் முன் நிற்க.

அவள் தலையைக் குனித்துக் கொண்டாள்.

“உன்னோட ரூம் அது”

கூறிவிட்டு செல்ல அவனது அழைப்பேசி அலறியது.

நின்று அழைப்பேசியை எடுத்துப்பார்க்க அவனது தாய் தான் அழைத்திருந்தார்.

அழைப்பேசியை அட்டன் செய்து காதில் வைக்க மறுபக்கத்தில் கலங்கிய குரலில் பேசினார் தேவகி.

“ஐயா ராசா எப்பிடிய்யா இருக்க என்னோட மருமக எப்பிடி இருக்கா”

நீண்ட நாள் பிரிந்து இருந்தது போல் அவர் வினவ.

“இருக்கோம்ம்மா”

“எதுக்குய்யா அப்பிடி பன்ன உனக்கு தான் அவள புடிக்காதே அப்புறம் அவள எதுக்குய்யா கட்டின”

அவனது தாய் புலம்ப இவனது முகம் இங்கு இறுகியது.

அவன் எதுவும் பேசவில்லை.

“சரிய்யா அவள பத்திரமா பார்த்துக்கப்பா கொழந்த மாதிரி எதுவுமே தெரியாது தப்பு பன்னா எடுத்து சொல்லுய்யா திட்டிடாதேய்யா உன்னோட கோவத்த அவகிட்ட காட்டிடாதய்யா தாங்கமாட்டா அவ ரொம்ப நல்ல பொண்ணு”

அவளது தாயாக மாறி இவனுக்கு அறிவுரை வழங்கினாள் இவனது தாய்.

“ம்ம்”

ஒற்றை பதில் அவனிடமிருந்து.

“அவக்கிட்ட கொஞ்சம் ஃபோனக் குடுய்யா”

தனது பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தவளிடம் அழைப்பேசியை நீட்ட இவள் விழித்தாள்.

“அம்மா”

எனக் கூற ஃபோனை அவசரமாக வாங்கி காதில் வைத்தாள்.

“அத்த”

அழைத்தவள் அழுதே விட்டாள்.

தேம்பி தேம்பி அழ இவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“எப்பிடி ராசாத்தி இருக்க அவன் எதுனாச்சும் திட்டிட்டானா அவனுக்காக நா மன்னிப்பு கேட்டுக்குறேன்டா”

அவர் கூற அவரின் பதிலில் இவள் இன்னும் அழுதாள்.

“இ..ல்லத்த”

அழுகையினிடையே கூறினான்.

“அவன் ரொம்ப நல்லவன்மா அவன் ஏதாச்சும் திட்டிட்டான்னா அவன வெறுத்துடாத ராசாத்தி அவன் கோவக்காரன் தான் அத விட ரொம்ப பாசக்காரன் அப்பிடியே அவங்க அப்பாவ போல”

அவரும் கலங்கிய குரலில் கூறினார்.

“ம்ம் மாமா எங்க”

“அவர் வெளில போய் இருக்காரு சரிமா நா வைக்குறேன் பத்திரமா இருடா”

கூறினவர் அழைப்பேசியை வைத்து விட்டார்.

இவள் தான் அழுகை நிற்காமல் அழுதுக் கொண்டே இருந்தாள்.

அவனிடம் அழைப்பேசியை நீட்டினாள்.

அதைப் பெற்றுக் கொண்டவன் அவளை அழுத்தமாகப் பார்த்தான்.

“நா என்ன உன்னைய கொடும பன்றேனா”

அவன் கேட்க அவளது அழுகை நின்றது ஆனால் விசும்பல் நிற்கவில்லை.

“உன்னோட ரூம்க்கு போய் படு”

கூறியவன் மற்றைய அறையை நோக்கிச் செல்ல கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவள் அவன் கூறிய அறையை நோக்கிச் சென்றாள்.

உள்ளே சென்றவள் அந்த அறையில் பரந்து விரிந்து இருந்த கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள்.

தூக்கம் வரவில்லை.

ஆனால் தூங்க வேண்டுமே.

விளக்கை அணைத்தவள் கட்டிலில் படுத்தாள் கண்களை மூடிப் படுத்தவள்.

தூங்க முற்பட்டாள் மூடிய விழிகளுக்குள் அவளது கருமணி அங்கும் இங்கும் அசைந்தது.

ஒரு இரண்டு நிமிடம் கண்களை மூடி இருந்தவள்.

பட்டென எழுந்தமர்ந்தாள்.

முகம் வியர்த்து வடிந்தது.

உடல் வேறு நடுங்க ஆரம்பித்தது.

கால்களை மடக்கி அமர்ந்தவளது முகமே வெளிறிப் போனது.

அதற்கு மேல் தாங்காதவள் எழுந்தமர்ந்து அறையிலிருந்து வெளியே வந்தாள்.

அவனது அறையைப் பார்க்க அது மூடியிருந்தது.

என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவனது அறையை நோக்கிச் சென்றவள்.

ஒரு நொடி தயங்கி நின்றவள் அறைக் கதவைத் தட்டினாள்.

“வா”

குரல் வர அவன் இன்னும் தூங்கவில்லை என அறிந்தவள் தயங்கிக் கொண்டே உள்ளே சென்றான்.

அவன் கட்டிலில் கால்களை நீட்டிக் கொண்டு மடிக்கணிணியை வைத்துக் கொண்டு ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தான்.

உள்ளே வந்தவள் அவனைத் தயக்கமாகப் பார்த்தாள்.

இவன் அப்பொழுது தான் விழி உயர்த்தி அவளை கேள்வியாகப் பார்த்தான்.

“எ..னக்கு தனி..யா படு..க்க பயமா இரு..க்கு”

தயக்கமாகக் கூறினாள்.

“ஓஹ் வந்து படு”

கூற இவள் அசையவில்லை.

“இல்ல நா கீழ படுக்குறேன்”

அவளை அழுத்தமாக பார்த்தவன் பின் தோளைக் குளுக்கிக் கொண்டான்.

பின் அங்கிருந்த போர்வையையும் தலையணையையும்  எடுத்து அவளிடம் நீட்ட அதைப் பெற்றுக் கொண்டவள் கீழே விரித்து படுத்தாள்.

அவன் விளக்கை அணைத்து விட்டு வேலையில் மூழ்கி விட கீழே தரையில் படுத்திருந்தவளுக்கு தூக்கம் வரவில்லை.

எது எதுவோ யோசித்தவள் அன்று நடந்த அதிர்ச்சி நிகழ்வில் மனமது அழுத்தத்தில் இருக்க மெதுவாக கண்களை மூட நித்ரா தேவி அவளை அரவணைத்துக் கொண்டாள்.

இவனும் ஒரு பத்து நிமிடத்தில் மடிக்கணினியை வைத்தவன் சோம்பல் முறித்துக் கொண்டே தரையில் படுத்திருந்தவளைப் பார்த்தான்.

கால்களை குறுக்கிக் கொண்டு கைகள் இரண்டையும் தலைக்கு கீழ் வைத்துக் கொண்டு தூங்கியிருந்தாள்.

இரவு விளக்கில் அவள் முகம் மின்னியது.

ஓரிரு நொடிகள் பார்த்தவன் பின் கழுத்தை நீவி விட்டுக் கொண்டான்.

பின் கட்டிலில் படுத்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போனான்.

******

மறுநாள் காலை குருவிகளது கீச் கீச் என்ற சத்தத்தில் விழிகளை மெதுவாக திறந்தாள்.

முதலில் எங்கு இருக்கிறோம் எனப் புரியாமல் விழித்தவள் பின் எங்கிருக்கிறோம் என்று உணரவே அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.

அறைக்குள் இன்னும் வெளிச்சம் வந்திருக்கவில்லை.

ஏனெனில் திரைச்சேலையினால் அறை மூடப்பட்டிருந்தது.

கட்டிலைப் பார்க்க அங்கு அவன் இல்லை.

“எங்க போனாங்க”

என நினைத்துக் கொண்டவள்.

முகத்தைக் கழுவிக் கொண்டு வெளியே வந்து வீட்டினை சுற்றி பார்வையை சுழல விட்டாள்.

அவன் எங்கும் இல்லை.

இரண்டு நிமிடத்தில் கதவு திறக்கப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள்.

உள்ளே வந்தது அவளது கணவனே தான்.

வாக்கிங் சென்றான் போல் வியர்வை முகத்தில் பூத்திருக்க அதை புறங்கையால் துடைத்துக் கொண்டு உள்ளே வந்தவன் எதுவும் பேசாமல் அறைக்குள் நுழைந்தான்.

இவள் தான் என்ன செய்வது எனத் தெரியாமல் கைகளைப் பிசைந்துக் கொண்டு இருந்தாள்.

பத்து நிமிடத்தில் சாம்பல் நிற டீஷேர்ட் அணிந்து கறுப்பு நிற டெனிம் அணிந்து வெளியே வந்தவன் நேராக சென்றது சமயலறைக்குச் சென்றான்.

ஐந்து நிமிடத்தில் அவள் முன் காபி கப் ஒன்று நீட்டியிருக்க தயக்கமாக அவனைப் பார்த்தாள்.

“என்கிட்ட சொல்லிருந்தா நா போட்டுக் கொடுத்திருப்பேன் காபி போட எனக்குத் தெரியும்”

மெதுவான குரலில் கூற.

“நாளைல இருந்து நீ போடு இப்போ குடி”

அவளிடம் நீட்ட பெற்றுக் கொண்டவள் அதைக் குடித்தாள்.

ரசித்துக் குடித்தாள் என்று தான் சொல்ல வேண்டும் வித்தியாசமாக இருந்தது அதன் சுவை.

பின் இருவரதும் குடித்து முடித்த காலி கப்பை அவள் எடுத்துச் சென்று கழுவி வைத்தாள்.

“காலைக்கு ப்ரட் என் ஜேம் இருக்கு பகலுக்கு ப்ரைட் ரைஸ் செஞ்சிருக்கேன் எனக்கு முக்கியமான வேல இருக்கு நா வெளில போகனும் ஏதாச்சும் தேவைன்னா இந்த லேன்ட் லைன்ல இருந்து கூப்டு நாளைக்கு உனக்கு ஃபோன் ஒன்னு வாங்கி கொடுக்குறேன்”

கூறிக் கொண்டே அங்கிருந்த கார் சாவியை எடுக்க இவள் தலையாட்டு பொம்மையாக அனைத்திற்கும் தலையாட்டினாள்.

“வந்து கதவ பூட்டிக்க யாரு வந்தாலும் கதவ திறக்காதே வெளில போகாதே”

எனக் கூறி கதவைத் திறக்க இவளும் பின்னால் சென்றாள்.

கதவைத் திறந்தவன் அப்படியே நின்று விட்டான்.

இவள் தான் 

“எதுக்கு நின்னுக்கிட்டிருக்காரு”

யோசிக்க அங்கு அவனது வீட்டிற்கு முன்னால் இருக்கும் வீட்டின் கதவைத் திறந்துக் கொண்டு இவனை நேருக்கு நேராக முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன் இவன் அவனுக்கு மேல் முறைத்துக் கொண்டிருந்தான்.

 

இவள் சற்று அக்ஷரனுக்கு சற்றுப் பக்கத்தில் வந்து முன்னால் பார்த்தாள் அங்கிருந்தவன் தனது கணவனை முறைக்க இவள் எதுவும் புரியாமல் பார்த்தாள்.

முன்னால் இருந்தவனோ அக்ஷரனை முறைத்துப் பார்த்து விட்டு பக்கத்தில் இருந்திருப்பவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“ஹாய்”

புன்னகைத்துக் கொண்டு கை அசைத்து இவளைப் பார்க்க இவள் தான் விழித்தாள்.

ஏனென்றால் தன் கணவன் தான் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டுள்ளானே.

பிறகு இவள் எப்பிடி அந்த அந்நிய ஆடவனிடம் பேசுவது என நினைத்துக் கொண்டு அப்பாவியாக நின்றிருந்தாள்.

 

******

தொடரும்..♥

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top