அத்தியாயம் 04 (USAP)

அத்தியாயம் 04 

 

அரசுவும் அகமேந்தியும் ஊர் சுற்றி விட்டு திரும்பும் போது மாலையாகி இருந்தது. அதேவேளையில் சொட்டு சொட்டாய் மழையும் துறலிட தொடங்க அகமியின் எண்ணங்கள் இறந்தகாலத்தை நோக்கி பயணிக்க தொடங்கியது. ஆனால் அந் நினைவுகளுக்கு கடிவாளமிட்டு அடக்கியவளோ சட்டென அவன் பக்கம் திரும்பி,

 

“அரசு” என்று ஆழ் மனதிலிருந்து அழைக்க அவனோ, “என்ன புதுசா பெயர் சொல்லுற வழமையா காட்டான்னு தானே கூப்பிடுவ?”

 

என்று ஒற்றை புருவமுயர்த்த அவளது கண்கள் சற்று கரிக்க, அதை அவனறியாது அழுந்த துடைத்துக் கொண்டவள்,

 

“எனக்கு எதுவுமே வேணாம், உன்ன பழிவாங்கனும்னு நினைச்சது உண்மை ஆனா இப்போ எனக்கு என் வாழ்க்கைய வாழ ஆசையா இருக்கு நீயும் அந்த கேஷாவ கல்யாணம் பண்ணிக்கோ”

 

என்று பெருமூச்செறிந்தவளுடைய மனதில் இப்போது பழிவாங்கும் எண்ணம் சுத்தமாக இல்லை, அதற்கு காரணம் அவளது சுயநலம் தான் அவனை காயப்படுத்தி மகிழ்ச்சியடையும் அளவு அவளுக்கு கல்நெஞ்சமில்லை என்பதை விட

 

அவள் மனதுக்குள் இப்போது தனது உறவுகளே தன்னை பகடைக்காயாய் உபயோகிக்கிறார்களோ என்ற எண்ணம் தான் விருட்சமாய் வேர் விட்டு வளர்ந்திருந்தது.,,

 

அகச் செழியனை தவிர, அவளது தந்தை அரிச்சந்திரன், அவளது அத்தை சகுந்தலா தேவி, மாஜிக் கணவனான ஆற்றலரசு, இன்னும் ஒருவன் வேறு யாருமல்ல அவளது

 

மூத்த அண்ணனான சயந்தன் தான், இப்படி எல்லோரும் ஏதோ ஒரு விடயத்துக்காக தன்னை பந்தாடுகிறார்கள்., அவர்களது பழிக்கு இவள் பலிக்கடா ஆகிறாள்.

 

என்பதை அவளது உள் மனம் உறுதியாக நம்பியது. இது செழியனுக்கு தெரியாது என்பதும் அவளுக்கு தெளிவாக தெரிந்தது. செழியன் விவாகரத்து முடிந்த ஒரு சில மாதங்களிலேயே தங்கைக்கு வேறு திருமணம் செய்து வைக்க மணமகனை தேடும் போது,

 

சயந்தன் தான் அரசுவை பழிவாங்கும் எண்ணத்தை செழியனின் உள்ளத்தில் நீருற்றி வளர்த்தது. அது எதற்காக என்று தேடிய அகமிக்கு எல்லா இடமும் முட்டுச் சந்தாக

 

முடிய ஒரு கட்டத்தில் வெறுத்து போனாள். இப்படியான நிலையில் தன் வாழ்க்கையை பார்ப்போமென்று முடிவெடுத்து விட்டாள்.

 

அவளை கூர்ந்து பார்த்த அரசுவோ,”அப்போ நான் இன்னொரு பொண்டாட்டிக்கு எங்க போறது? நீ வேணும்னா ஒன்னு பண்ணேன் பேசாம இன்னொரு பொண்ண பார்த்து எனக்கு செட் பண்ணி கொடுத்துட்டு போயேன் உன்ன மாதிரியே இருக்கனும் அது மட்டும் தான் கண்டிஷன்”

 

என்று நக்கலாக கூற அவளோ வாய் விட்டு சிரித்தாள். அவளுக்கு அவனிடம் சண்டையிடவோ கோபப்படவோ எந்த காரணமுமில்லை கரிசனமுமில்லை, ஏன்! இப்போது கூட இந்த பொருட்கள் மீது எனக்கு உரிமையில்லை என்று தானே கூறினாள்.

 

அவள் மனதில் அவன் மீது காதல் இருந்திருந்தால் கண்டிப்பாக அவன் தொட்டதும் உருகி இருப்பாள். அருவறுத்து விறைத்திருக்க மாட்டாள்.

 

அவன் வேறு ஒரு பெண்ணை மனைவியாக போகிறாள்., என்று அறிமுகம் செய்யும் போது அவளது முகம் கண்டிப்பாக ஒரு கோபத்தையோ விரக்தியையோ காண்பித்திருக்கும்.

 

அப்பெண்ணுக்கான தாலியை இவளது கழுத்தின் அளவு கொண்டு செய்ய கொடுக்கும் போதாவது வாதிட்டிருப்பாள்., ஆனால் அகமேந்தியிடம் ஒன்றுமில்லை.

ஏதோ அறிமுகமில்லாத நபருடன் தொடரும் ஒரு நாள் பயணம் போன்ற ஒன்று தான் அரசுவுடனான பயணம்,

 

இன்று அவன் மனைவி என்று அறிமுகப்படுத்தும் போது உணர்வில்லை. வெற்று பார்வை மட்டுமே இருந்தது. திருமணமான புதிதில், “நீ வேலைக்காரி”

 

என்று கூறிய போது, “மாமா அப்படி சொல்லாதீங்க நான் என்ன தப்பு பண்ணினேன்”

 

என்று அழுத அகமேந்தியை, அவன் விவாகரத்துக்கு காரணங்கள் அடுக்கிய போதே சவக் குழியில் வைத்து புதைத்திருந்தான். என்பது தான் நிதர்சனமான உண்மை,

 

பெண்ணுக்கு ஒருவர் மீது பாசமும் காதலும் இருக்கும் வரை தான் அவர்களிடம் சண்டை போடுவாள். திட்டுவாள் வாதிடுவாள். என்று அவை மரிக்கிறதோ அன்றே அவளது உறவுகளே அவளுக்கு அந்நியமாகி போவார்கள்.

 

இப்போது தான் ஒவ்வொன்றாக மீட்டிப் பார்த்ததில் அது அரசுவுக்கும் புரிந்தது. முதலில் பழிவாங்கவாவது நெருங்க வேண்டுமென நினைத்தவள் இப்போது உன்னை அதற்காக கூட நெருங்க என்னால் முடியவில்லை.,

 

என்று வெளிப்படையாக கூறியதிலிருந்தே அவள் மனதில் தனக்கிடமில்லை. என்று தெளிவாக புரிந்தாலும் அவளை விட்டு ஒதுங்கி போகும் எண்ணம் அவனுக்கு கொஞ்சம் கூட இல்லை.

 

அதற்கு பிறகு இருவருக்குமிடையில் மௌனமே ஆட்சி செய்ய அவளது வீட்டின் முன் காரை நிறுத்த அவளோ காரிலிருந்து இறங்க முற்பட்ட சமயம் அவளது கையை பிடித்து தடுத்திருந்தான்.

 

அவளோ ‘ஏன்?, என்ன வேண்டும்?’ என்பது போல் புருவத்தை சுருக்கி பார்க்க இவ்வளவு நேரமாக அவளுக்கென பார்த்து பார்த்து வாங்கிய பொருட்களை கையில் திணித்தவன்,

 

“நீ என்ன வேணும்னாலும் பேசு இந்த முறை நான் உன்ன விட்டு போறதா இல்லை”

 

என்று உறுதியாக கூறியவனின் கண்களை நேருக்கு நேராக பார்த்து, “அரசு தாகத்தில தவிக்கும் போது கிடைக்காத தண்ணீயும் சரி எதிர்ப்பார்க்கும் போது கிடைக்காத அன்பும் சரி எல்லாம் தேவையில்லாதது தான்” என்றவள்

 

அவன் கொடுத்த பொருட்களை காரின் பின்னிருக்கையில் வைத்தபடி, “இங்கே பாருங்க சவத்துக்கிட்ட உணர்வுகள தேடுறது வீணான வேலை அரசு அதுக்கு பதிலா உங்கள விரும்புற பொண்ண கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழுங்க நான் அங்க

 

சொன்னது தான் இங்கேயும் சொல்லுறேன் எனக்கு சொந்தமில்லாத பொருட்கள் எனக்கு வேணாம் என்ன நிம்மதியா வாழ விடுங்க”

 

என்றவள் விறு விறுவென தன் கைப்பையுடன் வீட்டிற்கு செல்ல அரசு அவளை தான் வெறித்து பார்த்திருந்தான்.

 

லண்டன் மாநகரத்தில் வானுயர்ந்து நின்றது பல அடுக்கு கட்டிடம் அக்கட்டிடத்தில் தங்க நிற தகட்டில் ஜொலித்தது., ‘சயந்தன் ஹெல்த்கேயர்’ என்ற பெயரும் அதனுடன்

 

இணைந்து நடுவில் ஒரு வாளிருக்க அதனை இரட்டை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பினைந்து சுற்றிய ‘கடூசியஸ்’ என்று மருத்துவ துறையின் அடையாளமாக விளங்கும் ஒரு வித குறியீடும் ஜொலித்துக் கொண்டிருக்க,

 

அக் கட்டிடத்தின் எல்லா இடத்திலும் ஏதோ ஒரு வகையில் அந்த ‘கடூசியஸ்’ என்று அழைக்கப்படும் குறீயீடு பயன்படுத்தப்பட்டிருக்க, அங்கு வேலை செய்யும் அனைத்து ஊழியர்களின் சீருடையிலும் அச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

 

‘சயந்தன் ஹெல்த்கேர்’ உலகளாவிய ரீதியில் பெருமளவு மருத்துவ உபகரணங்களையும் மருந்துகளையும் உற்பத்தி செய்து விநியோகிக்கும் பன்னாட்டு நிறுவனம், அதை ஆள்பவன் தான் இந்த சயந்தன் அரிச்சந்திரன்,

 

வாழ்க்கையை முதலில் ஒரு இரசாயனவியல் துறை சார் பேராசிரியராக ஆரம்பித்தவன், செல்வந்த குடும்பத்தில் பிறந்தவன் தான், அவனுக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த எந்த விருப்பமும் இல்லாத காரணத்தினால்

 

தனது தந்தைக்கு சொந்தமான நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தை தனது விருப்பம் போல் வளைத்து இன்று மருத்துவ உபகாரணங்களையும் மருந்துகளையும் விநியோகிக்கும் முதற்தர நிறுவனமாக மாற்றி அதில் கொடிக் கட்டி பறந்துக் கொண்டிருக்கிறான்.

 

இப்படிப்பட்டவனிடம் கருணையில்லை எதிலும் மூர்க்கம் மிகப் பெரிய சுயநலவாதி சொந்த தேவைக்காக யாரையும் எதையும் பலிக் கொடுக்க தயங்காத சுயநலவாதி அவன், தனது சொந்த தேவைக்காக பல உயிர்களுடன் மரண விளையாட்டை புரிந்துக் கொண்டிருக்கும் மரண தேவன் அவன்,

 

அப்படியானவனுக்கு ஈரமும் பாசமும் உண்டென்றால் அது அவனது தங்கை அகமேந்தியிடம் மட்டும் தான் இருந்தும் அவளிடம் கூட தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்ற கோட்பாட்டில் தெளிவாக இருப்பான்.

 

அதனாலோ என்னவோ அகமேந்தி அகச் செழியனிடம் தான் அதிகம் ஒன்றுவாள். ஆனால் அது கூட அவனுக்கு பிரச்சனை தான் அது எப்படி அவனிடம் ஒன்றலாம் நானும் அவளுடைய அண்ணன் தானே,

 

என்ற கோபம் அவள் கேட்காதே எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தவன் அவளது திருமணத்தில் அண்ணனாக சகோதரனாக பிழைத்து போனான்.

 

தங்கையை அகி என்று கூட அழைக்காது, ‘குட்டிம்மா’ என்று தான் அழைப்பான் அப்படிப்பட்டவனுக்கு இன்று தங்கையின் முகத்தை கூட பார்த்து கதைக்க முடியாத

 

அளவு குற்றவுணர்ச்சி, எங்கே உண்மை தெரிந்தால் தங்கை தன்னை விட்டு விலகி விடுவாளோ என்ற பயம் அவனை ஆட்டுவிக்க,

 

அவற்றை அசைப்போட்டபடியே அவனது பிரத்யேக உடற்பயிற்சி கூடத்தில் வியர்வை வடிய வடிய ‘பஞ்சிங்’ பேக்கை குத்தி தனது ஆத்திரத்தையும் ஆற்றாமையையும் தீர்த்துக் கொண்டிருக்க அவனது உதவியாளன் ரீதேஷோ அவனிடம் அனுமதி கேட்டபடி உள்ளே நுழைந்தவன்,

 

“சார் நீங்க நினைச்சபடி அரசு சார் அகமேந்தி மேடம் கூட க்ளோஸாக ட்ரை பண்ணுறார்”

 

என்று கூற அவனது இதழ்களிலோ வன்ம புன்னகை பூத்தவன், “இப்போ புரியுது”

 

என்றபடி நீரை அருந்தியபடி, “அவனோட டார்கெட் குட்டிம்மா கிடையாது நான் தான் எனக்கு எங்க அடிச்சா வலிக்கும்னு தெரிஞ்சு அடிச்சிருக்கான் ஸ்மார்ட் ஆனா இந்த முறை நான் தான் ஜெயிப்பேன் என் தங்கச்சிக்கு எல்லா உண்மையும் தெரிய முன்னாடி அந்த அரசுவ போட்டு தள்ளனும்”

 

என்றவனின் முகத்தில் சூரிய ஒளி பட்டு தெறிக்க அப்போது தான் அவனது ராட்சத தோற்றம் தெளிவாக தெரிந்தது.

 

அடர்த்தியான கேசம் முரட்டுத்தனமாய் வளர்ந்திருந்த தாடி கபில நிறக் கண்கள் அவனது ஆர்ம் கட் ட்ஷர்ட்டிலும் சரி அதை அகற்றி விட்டு நின்ற போதும் சரி அந்த கடூசியஸ் எனும் சின்னம் டாட்டூவாகவும் அச்சாகவும் பொறிக்கப்பட்டிருந்தது.

கையில் ஐம்பொன் காப்பு அகச் செழியனின் நிறத்திற்கு ஒப்பான சந்தன நிறம்

என்று ஆணழகனாக திகழ்ந்தவன்,

 

அதே சிரிப்புடன் மேல் தளத்தை ஒட்டியிருக்கும் தனது அறைக்குள் நுழைந்து அங்கிருந்த முன் இருபதுகளில் இருக்கும் ஒரு பெண்ணின் ஆளுயர புகைப்படத்தை செல்லம் கொஞ்சியபடி,

 

“நீ நிம்மதியா இருந்ததெல்லாம் போதும் இனி என் கூட வந்திரு உன் நிம்மதிய கெடுக்காம எனக்கு போர் அடிக்குது பொண்டாட்டி”

 

என்று விசிலடித்துக் கொண்டே குளிக்கச் செல்ல இங்கு அப்புகைப்படத்தில் இருந்த பெண்ணோ, ஆழ்ந்த தூக்கத்திலிருந்து துடித்து பிடித்து எழுந்தபடி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அருகே இருந்த மூன்று வயதான மகன் சத்துருக்கனை தடவிக் கொடுத்தபடி அங்குமிங்கும் விழியை உருட்டினாள்.

 

அவள் ராதிகா, சயந்தனின் முன்னாள் மாணவி, ரகசிய காதலியும் கூட மாநிற மேனி, மான் விழிகளுக்கு ஒப்பான பெரிய விழிகள் பயத்தில் மேலும் விரிந்தது. இடையளவு நீள கூந்தலை அள்ளி முடிந்திருந்தாள்.

 

அவளது தலையெல்லாம் விண் விண்னென்று தெறித்தது. கனவின் தாக்கம் உடலை விட்டு அகலவில்லை. அது அவன் தான் அவளுடைய நிம்மதி சந்தோஷம் என

 

அத்தனையும் பறித்த சயந்தன் அவனது பெயரை உச்சரிக்கும் போது உடல் அனலாய் கொதித்தது. அவன் பக்கத்திலிருந்து அவள் வதனத்தை தீண்டியது போல் மாயை தோன்ற,

 

முகத்தை நீரையடித்து தேய்த்து கழுவியவள் அவனது ஸ்பரிசத்தை கனவில் கூட விரும்பவில்லை.

 

இதே சமயம் துறைமுகத்தில் பனியனுடன் நின்றிருந்த அரசுவோ நிலவை வெறித்துக் கொண்டிருக்க அவன் தோளில் கைப்போட்ட அச்சுதனிடம்,

 

“அவளுக்கு நான் வேணாமாம்டா, எனக்கான உணர்வு செத்து போச்சாம்” என்று சோகமாக கூறியவன் அடுத்த நொடியே,

 

“அகம் பிடிச்ச கழுதை, நான் வாங்கிக் கொடுத்த எதுவும் வேணாமாம் பிணத்துக்கிட்ட உணர்வ தேட வேணாமாம் எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு வாய உடைக்கலாம் போல இருக்கு”

 

என்று பற்களை கடிக்க துரியோதனனோ கடுப்பை கிளப்பும் விதமாக, “மச்சி நாளையில இருந்து நான் குடிக்க வரமாட்டேன்”

 

அச்சுதன், “ஏன்டா? திருந்திட்டியா?”

 

என்று குழப்பமாக கேட்க அவனோ வெட்கப்பட்டுக் கொண்டே, “குடும்பஸ்த்தன் ஆகிட்டேன் மச்சான் நிறைய வேலை இருக்குமில்ல பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணனும் சேர்ந்து சமைக்கணும் சமைக்கும் போது”

 

என்று ஆரம்பித்த சமயம் அங்கு கண்ணாடி குவளை கீழே விழுந்து நொறுங்கியிருந்தது. வேறு யார் நம் தலைவர் தான்,

 

“நானே என் பொண்டாட்டி கணக்கெடுக்குறா இல்லன்னு பீலிங்ல சுத்திட்டு இருக்கேன் இந்த நாய் குடும்பஸ்தன் ஆகிட்டேன் குழந்தை பெத்துக்குறேன்னு சொல்லுறான் எனக்கு வயிறு கப கபன்னு காந்துது”

 

என்று கூற துரியனோ, “ஏன்டா ராவா குடிச்சிட்டியா?”என்றதும் அச்சுதனும் சேர்ந்து நகைக்க அரசுவின் முகம் தான் சுருங்கி போனது. நகைச்சுவையை கைவிட்டவர்கள்,

 

“என்னடா இந்த தடவையாவது அந்த சயந்தன் இந்தியா வருவானா?” என்று அரசுவிடம் கேட்க அவனோ, “வருவான் கண்டிப்பா என்ன போட்டு தள்ளுறதுக்காகவும் ராதிகாவ தூக்குறதுக்காகவும் கண்டிப்பா வருவான்”

 

என்று கூறும் போதே லண்டனில் டிப் டாப்பாக மீட்டிங் ஒன்றுக்கு கிளம்பியவன் தனது துப்பாக்கியை பார்த்தபடி, “ஐயம் கமிங் ஆற்றலரசு, எனக்கு பிடிச்ச ரெண்டு பேர் உன்கிட்ட இருக்காங்க ரெண்டு பேரையும் தூக்குறேன் உன்னையும் மொத்தமா முடிக்கிறேன்”

 

என்று வேட்டையாடும் புலியில் பாவனையுடன் புன்னகை பூத்தான் சயந்தன்.

                            தொடரும்…

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top