அத்தியாயம் 05 (USAP)

அத்தியாயம் 05

 

அகமியோ அரசுவிடம் பேசியதோடு சரி அதற்கு பிறகு அவனை பற்றி கடுகளவு கூட எண்ணவில்லை. அவளுக்கு தன்னை சுற்றி ஏதோ நடப்பது தெளிவாக புரிந்தது.

 

அரசுவுக்கும் தனது தந்தைக்கும் ஏதும் பகையா? என்ற கோணத்தில் சிந்தித்தவளுக்கு கிடைத்த பதில் இல்லை என்பது தான் இருந்தும் தந்தை அரசுவுக்கு பயப்படுகிறார்.

 

அடுத்து அரசு ஒன்றும் மூன்றாம் நபரில்லையே சொந்த தங்கை மகன் தானே அவனுக்கு ஏன் பயந்து நடுங்க வேண்டும். அடுத்து இந்த திருமண பேச்சு ஆரம்பித்த

 

நாள் தொடக்கமே அரிச்சந்திரனும் சரி சயந்தனும் சரி அகமேந்தியுடன் பேசுவதை முடிந்தளவு குறைத்திருந்தார்கள்.

 

அதிலும் சயந்தன் அவளிடம் பேசவேயில்லை ஏன் ஒற்றை தங்கையின் திருமணத்திற்கு கூட வரவில்லை. இதனால் தான் அவர்கள் மீது ஏதோ தப்பு இருக்கிறது.

 

என்று புரிந்துக் கொண்டவள் இரவு உணவை தயார் செய்துக் கொண்டிருந்த சமயம் அவளது அழைப்பேசி விடாமல் ஒலிக்க தொடங்கியது. அதில் மின்னி மறைந்த பெயரை பார்த்தவளுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை.

 

அவ்வெண் ‘சயு நண்ணா’ என்று பதியப்பட்டிருந்தது. வேறு யார் சயந்தன் தான் என்றுமில்லாத திருநாளாக அன்று அவளுக்கு அழைத்திருந்தான்.

 

அவளுக்கு இப்போது அவன் மீது சந்தேகம் வலுத்த காரணத்தினால் அவன் பேசும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனிக்க வேண்டுமென முடிவெடுத்தவளாக அழைப்பை ஒலிப்பதிவு செய்தபடியே அழைப்பையேற்று,

 

“ஹலோ!” என்றது தான் தாமதம்,

 

அப்பக்கம், “குட்டிம்மா எப்படிடா இருக்க?” என்று உயிரை உருக்கும் குரலில் கேட்க இங்கு அகமேந்திக்கோ உள்ளுக்குள் ஏதோவொன்று உடையும் உணர்வு முனுக்கென கண்ணீர் வேறு வந்தது.

 

ஆயிரம் பிரச்சினைகளையும் மனக் கசப்புகளையும் சுமந்து நிற்கும் போது யாரவது ஒருவர் நானிருக்கிறேன் என்று அன்பாய் இரண்டு வார்த்தை பேசினால் உள்ளுக்குள் ஒரு உணர்வு உடையுமே அந்த நிலை தான் அகமிக்கு கூட கொண்டானை ஒதுக்கி வைக்க தெரிந்தது.

 

பாராட்டி சீராட்டி வளர்த்த அன்னையையும் தந்தையையும் அத்தையையும் விட்டு ஒரு படி விலகி நிற்க தெரிந்தவளால்,

 

தன் சகோதரர்களிடமிருந்து விலக தெரியவில்லை., அன்னையும் தந்தையும் வேலை நிமித்தமாக வெளியே சென்ற போது தன் மேனியில் தூசு படாது பார்த்துக் தமையன்களிடமிருந்து விலக தெரியவில்லை.

 

அதிலும் மூத்த அண்ணனாக அவளை மாரிலும் தோளிலும் சுமந்தவன் ஆயிற்றே அன்னையிடம் தாய்ப்பால் அருந்திய தருணங்களை விட தமையனின் மடியில் அமர்ந்து புட்டிபால் அருந்திய தருணங்கள் தான் அவளது நெஞ்சில் அதிகம் தங்கியது.

 

அம்மா அப்பா என்று அழைத்ததை விட ‘நண்ணா அண்ணா’ என்று சயந்தனையும் செழியனையும் சுற்றி வந்த நாட்கள் தான் அதிகம், ஒரு குறிப்பிட்ட வயதில் செழியனும் இவளும் ஒட்டிக் கொண்டாலும் சயந்தன் அவளது விருப்பங்களையும்

 

தேவைகளையும் அவள் கூறாமலே பார்த்து பார்த்து நிறைவேற்றுவான். அப்படிப்பட்டவனை சந்தேகப்பட அவளால் முடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று இடிப்பதாக மூளை அறுதியிட்டு கூற,

 

மனமோ, ‘சயந்தன் உன் அண்ணன் யாருக்காகவும் எதற்காகவும் உன்னை விட்டு கொடுப்பானா?’ என்று வாதிட்டது அவ்வளவு அன்பு அவன் மீதும் செழியன் மீதும்

 

அப்படி ஒரு சிலர் மீது நாம் வைக்கும் கண் மூடித்தனமான அன்பு தான் நமது அழிவுக்கு வித்திடும் என்று அறியாமல் போனது தான் அவள் செய்த குற்றமோ! என்னவோ?

 

அவனை சந்தேகப்படும் ஒவ்வொரு நொடியும் யாரோ இதயத்தை கசக்கி தூக்கியெறியும் உணர்வு பல நாட்கள் கழித்து அவன் குரல் கேட்டவளுக்கு கண்ணீர் தாரை தாரையாக வடிய,

 

“நண்ணா” என்று அவனை உடைந்த குரலில் அழைக்க இங்கு சயந்தனுக்கும் உள்ளுக்குள் ஏதோவொரு உணர்வு ஒருவித குற்றவுணர்ச்சி அத்தனையும் ஆட்கொள்ள,

 

“குட்டிம்மா என்னடா ஆச்சு? அழாதடா நண்ணாவுக்கு ஏதோ செய்யுது” என்றவனுக்கு மென்மையாக கதைக்க வருமா என்பதே ஆச்சரியம் தான் அவ்வளவு மென்மை

 

அவளிடம் மட்டும் அவனும் நல்ல அண்ணன் தான் பாசக்காரன் தான் ஆனால் சூழ்நிலையால் சுயநலவாதி ஆகி போனானே,

 

தங்கை ஒரு வருடம் நரகத்தை அனுபவிக்க காரணமாகி போனானே, அது மட்டும் தங்கைக்கு தெரிந்தால் தன்னை விட்டு விலகி விடுவாளோ என்ற பயத்தில் உள்ளுக்குள் நடுங்கினான். எல்லோரையும் எட்ட நிறுத்த முடிந்தவனால் அவளை எட்ட நிறுத்த முடியாதே

 

எல்லோரிடமும் நான் இப்படி தான் பிடித்தால் கூட இரு இல்லையா விலகி போ என்றவனால் அவளிடமிருந்து விலகி நிற்க முடியுமா? அவள் வெறுத்தால் அவன் வீழ்ந்தே போவான்.

 

உயிருடன் மரித்தே போவான். அதனால் தான் இப்போதும் அரசுவை கொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறான்.

 

ஏனென்றால் உண்மை தெரிந்தவர்கள் சிலர் மட்டுமே ஒன்று அவனுடைய தந்தை அரிச்சந்திரன், அத்தை சகுந்தலா, மற்றும் அரசு இதில் நான்காவது நபரும் உண்டு.

 

அவள் அவனது ரகசிய காதலி ராதிகா அவளது வாயை அடைக்கும் வித்தையையும் அவனறிவான் ஆனால் அரசு எப்படியும் உண்மையை அவளிடம் சொல்லி விடுவான்.

 

என்ற பயம் அவனை ஆட்டுவித்தது. இருந்தும் அவ்வெண்ணங்களை ஒதுக்கி வைத்தவன்,

 

“குட்டிம்மா அழ கூடாது நீ வேணும்னா இங்கே வந்துர்றீயா நண்ணா உன்ன பார்த்துக்கிறேன்” என்றதும் மறுப்பாக தலையசைத்த அகமியோ,

 

“நீ இங்கே வா நண்ணா எனக்கு அகி அண்ணாவ விட்டுட்டு வர முடியாது அவனுக்கு ஒழுங்கா சூடு தண்ணீ கூட வைக்க முடியாது பாவம் தானே”

 

என்ற தங்கை இன்னொரு தாயாக தெரிந்தால் ஆனால் அப்படிப்பட்டவளுடைய வாழ்க்கையை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டேனே என்ற குற்றவுணர்வு கொலையாய் கொல்ல இன்னொரு மனமோ வீணாவான் ஏன்?

 

நல்ல மாப்பிள்ளையாய் பார்த்து இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன் அதும் அந்த ஆற்றலரசு முன்னாலேயே ஜாம் ஜாம் என நடத்துவேன். அவனை உடைத்து கொலை செய்வேன் என,

 

மானசீகமாக சூளுரைத்துக் கொண்டே தங்கையிடம், “இப்போ என்ன ஆச்சு என் குட்டிம்மாவுக்கு ஏன் அழுறீங்க?” என்று கேட்க அவளும் கண்ணீர் வழிய வழிய

 

அரசு பொது இடத்தில் வைத்து முத்தமிட்டது தொடக்கம் அவனது இரண்டாம் திருமணத்திற்கு புடவை எடுக்க தன்னை கல்லூரிக்கு விடாமல் இழுத்து சென்றது வரை அத்தனையும் ஒப்புவிக்க

 

இங்கு சயந்தனுக்கு இங்கு ரத்தம் கொதித்து காது மடலும் சிவந்தது. வேண்டாமென்று தானே தங்கையை விவாகரத்து செய்தான் இப்போது மறுபடியும் அவளிடம் இப்படி பழகினால் எந்த அண்ணனுக்கு தான் கோபம் வராது. அதே கோபத்துடன்,

 

“அகி கிட்ட சொன்னீயா?” என்றதும் அவளோ, “இல்ல நண்ணா ஆனா ஒன்னு என்னோட மனச அவனோட எந்த செய்கையுமே பாதிக்கல” என்றவள் பெருமூச்செறிந்தபடி கசந்த புன்னகையுடன் காரியத்தில் கண்ணாய் இருந்து தனக்கு தேவையான விடயங்களை வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் மெல்ல கறக்க நினைத்து எடுத்த எடுப்பிலேயே,

 

“நண்ணா நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும் ஆனா கேட்டதும் நீ வேலை இருக்குன்னு போனை வச்சிரக் கூடாது சரியா?” என்று பலமான பீடிகை போட

அவனும் சிந்தனையுடனேயே,

 

“சரி கேளுடா உனக்கு இல்லாததா?” என்றதும் அவளோ, “ஏன் நீ என் கல்யாணத்துக்கு வரல நீ தானே மூத்த அண்ணன் ஏன் வரல” என்றதும் சயந்தன் அவளது நேரடியான தாக்குதலை எதிர்ப்பார்க்கவில்லை போலும் தயங்கியபடியே,

 

“அன்னைக்கு கம்பெனில முக்கியமான மீட்டிங் அதான்” என்று தடுமாறினான்.

 

அவளோ, “ஓஹோ! அப்போ என்னை விட உனக்கு வேலை பெருசா போச்சுல்ல நண்ணா அப்போ நானும் இதை செஞ்சா நீ ஏத்துப்பியா? சொல்லு நண்ணா”

 

என்றதும் அவனோ உதட்டை அழுந்தக் கடித்து பேசாதிருந்தான். எதை சொல்ல முடியும் எதை விளக்க முடியும் அவனால் பேசாது விக்கித்து போனான்.

 

அவளோ, “நீ எப்படி நண்ணா இவ்ளோ சுயநலமா மாறின? இந்த கல்யாணத்த முடிவு பண்ணதுல இருந்து நீயும் அப்பாவும் என் முகத்தை கூட ஒழுங்கா பார்த்து பேசல ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?”

 

என்று ஒரு மரத்த குரலில் கேட்க அவனோ எச்சில் கூட்டி விழுங்கியபடி, “அது நீ வீட்ட விட்டு போயிருவல்லம்மா அதான்” என்று ஏதோ தடுமாறியபடி சொல்ல

 

அவளோ, “அப்டி பாசமுள்ளவர் தான் கல்யாணத்த முன்ன நின்னு நடத்துனீங்க? அதே மாதிரி நான் அவ்ளோ கஷ்டப்படும் போதும் பார்த்துட்டு சும்மா இருந்தீங்க ரொம்ப சந்தோஷம் நண்ணா,

 

நீ ஒரு சுயநலவாதின்னு அடிக்கடி அண்ணா சொல்லுவார் அது சரி தான் நான் எக்கேடு கெட்டு ஒழிஞ்சா உனக்கென்ன? உனக்கு உன் கம்பெனி பிஸ்னஸ் இதையே கட்டிட்டு அழு”

 

என்று அவனது பதிலையும் எதிர்பாராது துண்டித்து விட இங்கு சயந்தன் தான் துடிதுடித்து போனான்.

 

அவன் தங்கையின் கோபத்தை எதிர்ப்பார்க்கவில்லை. இன்று கோபப்படுபவள் நாளைக்கு உண்மை தெரிந்து தன்னையும் அரசுவை போல் ஒதுக்கி வைத்தால் அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

 

இப்படியான நிலையில் செழியனும் வீட்டுக்குள், “வெண்ணிலா
வெளியே வருவாயா விழியிலே வெளிச்சம் தருவாயா இரவிலே தவிக்க

விடுவாயா”

 

என்று தன் காதலி பிறைமதியை நினைத்தபடி பாடிக் கொண்டே வீட்டினுள் நுழைய அகமியோ பால் பொங்குவது கூட தெரியாது அப்படியே எங்கோ வெறித்து பார்த்திருந்தாள்.

 

அவளருகே சட்டென வந்தவன் அடுப்பை அணைத்து விட்டு, “என்ன அகி? என்ன யோசனையில அப்டியே நின்னுட்டு இருக்க?” என்று ஒரு உலுக்கு உலுக்க,

 

அவளோ, “ஹான்” என்று விழித்தபடி தலையை உலுக்க அவனோ,

 

“என்னடி ஆச்சு? ஏன் இப்டி இருக்க?” என்றதும் அவளோ, “இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா?”

 

என்று அத்தனையும் ஒப்புவித்தவளை விழி வெட்டாது பார்த்திருந்தவன், “அகி அவன் சொல்லுறத வச்சு பார்க்கும் போது ஏனோ அவன் மறுபடியும் உன்ன கூட்டிக்கிட்டு சுத்துறது சயந்தன வரவழைக்க தானோனு தோணுது”

 

என்றதும் அகமியும், “எனக்கும் அது தான் தோணுது இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன தொடர்புன்னு தான் தெரில புரிஞ்சிக்கவும் முடியல ஆனா ஒன்னு செய்யலாம்”

 

என்று அகமி கண்ணில் மின்னல் வெட்ட, “அரசு போக்குல போய் தான் அவனை வளைக்கனும் இன்னும் ரெண்டு மாசம் பொறுத்தா போதும் அடைச்சு வச்சிருக்க பூதம் கண்டிப்பா வெளிய வரும்”

 

அதற்கு செழியனோ எரிச்சலுடன், “அப்போ ரெண்டு மாசம் அவன் கூட சுத்த போறீயா?”

 

என்று கேட்க அவளோ, “எனக்கு தெரியல அவன் மேல எனக்கு எந்த விருப்பு வெறுப்புமில்ல ஆனா எதுனால என் வாழ்க்கை இப்படி ஆச்சுன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்”

 

என்று செழியனை சமையல் கட்டில் சாய்ந்தபடி தீவிரமாக பார்த்திருக்க செழியனோ இடுப்பில் கை வைத்தபடி கழுத்தை ஒற்றை கரம் கொண்டு வருடியவாரே,

 

“பழைய கேஸ் பைல்ஸ் கூட இதுக்கு நமக்கு ஹெல்ப் பண்ணலாம்”

 

என்றதும் அவளோ, “நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் அண்ணா, ஆனா ஒன்னு அரசுவுக்கும் சரி நண்ணாவுக்கும் சரி ரெண்டு பேருக்கும் இருக்க ஒரே பலவீனம் நான் தான்”

 

என்றதும் செழியனோ புரியாது, “எப்படி கண்டுப்பிடிச்ச? எப்படி அவ்ளோ உறுதியா சொல்லுற? “

 

என்று ஒற்றை புருவமுயர்த்த அகமியோ நக்கலாக சிரித்தபடி, 

“இன்னைக்கு நண்ணா கதைக்கும் போது அவர் குரல்ல ஒரு நடுக்கம் தெரிஞ்சிச்சு திரும்ப எந்த தப்பும் நடந்துருமோங்குற பயம் இருந்துச்சு அதே தான் அரசுகிட்டையும் அவனோட கண்ணுல ஒரு பயம் என்ன விட்டு போயிராதங்குற தவிப்பு அப்பட்டமா

 

தெரிஞ்சிச்சு அதனால தான் சொல்லுறேன் இவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ ஒரு விஷயம் நடக்கணும் அதுக்கு என்ன பகடையா இந்த அரசு யூஸ் பண்ணி இருக்கான் இன்னமும் யூஸ் பண்றான்”

 

என்று கூறிக் கொண்டிருக்கும் போது இங்கே சயந்தனோ தனது அலுவலகத்திலிருக்கும் அவனது பிரத்யேக அறையில் அங்குமிங்கும் வெறி கொண்ட மிருகம் போல் பிடரி மயிரை கோதிக் கொண்டே, தந்தையிடம் காட்டுக் கத்தலாக கத்திக் கொண்டிருந்தான்.

 

“அன்னைக்கே சொன்னேன் உன்கிட்ட அரசுவ பழிவாங்க செழியன அனுப்பு குட்டிம்மாவ அனுப்பாதன்னு கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்காய்யா?”

 

அவனது குரலிலும் முகத்திலும் அவ்வளவு ரௌத்திரம் அவரோ பம்மியபடியே ஏனென்றால் இதற்கு மூலகாரணம் அவர் தானே,

 

“எனக்கு எப்பிடிடா தெரியும் அரசு மறுபடியும் அகி வாழ்க்கைக்குள்ள வருவான்னு”

 

அதற்கு சயந்தனோ முகம் சிவக்க மீசையை முறுக்கியபடி,

 

“முட்டாள் முட்டாள் ஒன்னு சுயபுத்தி வேணும் இல்லன்னா சொல் புத்தியாவது வேணும் அன்னைக்கே சொன்னேன் இந்த கல்யாணம் நடக்க கூடாதுன்னு கேட்டியா? நம்ம பையன் தானே கல்யாணம் கட்டினா எவ்விடன்ச கொடுத்துருவான்னு”

 

அரிச்சந்திரன் பம்மி பம்மி கதைத்தபாவனையில் சொல்லிக் காட்டியவன் தொடர்ந்து,

 

“அப்படி சொன்னீயே இப்போ என்ன ஆச்சு? அவனுக்கு என் தங்கச்சியும் வேணுமாம் ரெண்டாந்தாரமா இன்னொரு பொண்ணும் வேணுமாம் நான் கல்யாணத்த நிப்பாட்டியிருப்பேன்னு என்ன

 

துரத்தி வேற விட்ட இப்போ குட்டிம்மா என்ன கிழி கிழின்னு கிழிக்கிறா அவ மட்டும் என் கூட பேசாம போகட்டும் முதல் தர்ப்பணம் உமருக்கு தான்”

 

என்று திட்ட அவரும் சற்று பயந்து தான் போனார் போன முறை போல அரசுவை அசால்ட்டாக எண்ண முடியவில்லை அதனால் பதறியபடியே,

 

“டேய் அகிக்கு ஏதும் தெரிஞ்சிருச்சாடா? ஐயோ! என் பொண்ணுடா”

 

என்றதும் சயந்தனோ கோபத்துடன் தகப்பன் என்றும் பாராமல்,

 

“மண்ணாங்கட்டி இப்போ தான் உமரோட பொண்ணுன்னு ஞானோதயம் வருதா? அப்போவே சொன்னேன் அவன்கிட்ட உள்ள எவிடன்ச எப்படியாவது வாங்கி தாரேன் அமைதியா இரும்னு கேட்டீரா?”

 

என்று தனது மேசையை ஓங்கி ஒரு தட்டு தட்டியவன், கையில் அழைப்பேசியுடன் கூண்டுக்குள் அடைப்பட்ட புலியாக அங்குமிங்கும் நடந்தபடியே,

 

“ஏதோ கல்யாணம் நடந்ததும் அந்த அரசு அத்தனையும் கொடுத்து கிழிச்சிருவான் அவனுக்கு அகமி மேல அப்படி பாசம் இப்படி பாசம்னு பெருமை பேசுன இப்ப என்ன ஆச்சுன்னு பார்த்தியா?”

 

என்றவன் கோபத்தை அடக்க வழி தெரியாது தலையை அழுந்த கோத அரிச்சந்திரனோ, “நான் என்னத்தடா கண்டேன்? அவன் அகமிய கல்யாணம் பண்ணிக்கனும் அதுக்காக எதுவும் செய்வேன்னு சொன்னான்”

 

என்று தலையை தடவிக் கொண்டிருக்கும் போதே ரீதீஷோ சயந்தனின் அறைக்குள் நுழைந்தபடி, “சார்” என்று ஒரு கோப்பை நீட்ட,

 

அதை திறந்தவனுடைய கண்கள் அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டது. தலைக்குள் ஆயிரமாயிரம் மின்னல் வெட்டிய உணர்வு அதே அதிர்ச்சியுடன்,

 

“யோவ்! உன்னோட தங்கச்சிய வெளிய விட்டுறாத அதே மாதிரி உன் முகத்துல எந்த மாற்றத்தையும் காண்பிக்காத நான் இன்னும் ரெண்டு வாரத்துல இந்தியா வாரேன் அது மட்டும் அந்த கிழவி மேல ஒரு கண்ணிருக்கட்டும்”

 

என்றவனுக்கு இப்போது ஒரு விடயம் திட்ட வட்டமாக புரிந்தது. அரசு அகமியை திருமணம் செய்துக் கொண்டதே அவன் அனுபவிக்கும் வலியை தனக்கும் தர தானே தவிர வேறொன்றுமில்லை.

 

பல்லை கடித்துக் கொண்டு, “ராதிகா” என்று ஒரு கத்து கத்த ஒரு நிமிடம் அந்த அறையே அதிர்ந்து அடங்கியது. மறுபடியும் அந்த புகைப்படத்தை பார்த்தவன் இதழ்களில் வன்ம புன்னகை அதே புன்னகையுடன்,

 

“உன் அண்ணன் பண்ண தப்புக்கு உன்ன பழிவாங்குற அளவுக்கு நான் மோசமானவன் இல்ல பாப்பு எனக்கு நீயும் குட்டிம்மாவும் ரெண்டு கண்ணு மாதிரி ஆனா அந்த அரசு என் கண்ணுல விழுந்த திரை மாதிரி ஸோ இந்த அரசு அவன் நமக்கு வேண்டாம் சரியா வேணாம்”

 

என்று அவளது புகைப்படத்தை ஒற்றை விரல் நீட்டி மிரட்டி கொண்டிருந்தான் அவன்,

அத்தனை ரௌத்திரம் அவன் குரலில்,

 

“என்ன தைரியம் இருந்தா உன் அண்ணன் என் கண்ணு முன்னாடியே என் தங்கச்சி வாழ்க்கையில விளையாடி இருப்பான் விட மாட்டேன் ஒருத்தனையும் விடவே மாட்டேன்”

 

என்று கத்திக் கொண்டிருக்க அரசுவோ காலையில் சோம்பல் முறித்தபடி அச்சுதனிடம்

 

“கல்யாணத்த இன்னும் ரெண்டு வாரத்துல வைக்கலாம்னு இருக்கேன் எவ்ளோ நாள் தான் பிரம்மச்சாரியாவே சுத்தி வர்றது” என்று கூறி கண்ணடிக்க,

 

“என்ன சயந்தன் இன்னும் ரெண்டு வாரத்துல ஊருக்கு வந்திருவான் போல என்ன பட்சி சொன்னுச்சா?” என்றதும் அரசுவோ,

 

“என் மாப்பிள்ளை அந்த செழியன் பய வேற என்ன ஜட்டியோட தூக்கி உள்ள போடுறேன்னு சொன்னானில்ல அதுக்கு முதல்ல அவன் அப்பனையும் அண்ணனையும் ஜட்டியோட போலீஸ் ஜீப்ல ஏத்தட்டும்” என்று வன்மம் பொங்க கூற

 

அச்சுதனோ, “டேய்! இதெல்லாம் ராதிகாக்காக மட்டும் தான் பண்ணுறீயா?” என்றதும் அவனோ நக்கலாக சிரித்தபடி,

 

“ச்சீ ச்சீ அவளுக்காக மட்டும் பண்ணல அரசியலுக்காகவும் தான் இப்போ என்ன பத்தி கேட்டா ரௌடின்னு சொல்லுறவனுக எல்லாம் நாளைக்கு இந்த விஷயம் வெளிய வந்தா மகான் தலைவன்னு கும்பிடுவானுக இந்த மாதிரி ஒன்னு ரெண்டு நல்லத பண்ணி சட்டசபைக்கு போயிரணும் அவ்ளோ தான்”

 

என்றதும் அச்சுதனோ, “ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன்டா இதெல்லாம் தெரிஞ்சிச்சு அண்ணி உன்ன ஒன்னும் ஏத்துக்காது அதே மாதிரி அவனுக கூடவும்

 

பேசாது நீ செய்ற காரியத்தால அண்ணி அநாதையாகிருமோனு பயமா இருக்குடா கொஞ்சம் யோசி ஏன்னா அவுங்கள பொறுத்த வரை நீயும் துரோகி தான்”

 

என்றதும் வெடித்து சிரித்த அரசுவோ, “நாலு வார்த்தை என்ன பிடிக்காதுன்னு சொல்லிட்டா அவ என்ன வெறுத்துட்டாளா? அதெல்லாம் மாட்டா எப்படியும் நாலு நாள்ல எப்படியும் என் அகமி வெளிய வந்துருவாடா”

 

என்றதும் அச்சுதனோ, “உன் நம்பிக்கைய வச்சு நிலாவுல கோட்டை கட்ட தான் முடியும்”

 

என்று குளித்தவன் டிப் டப்பாக கிளம்பி மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே தனது ஜீப்பில் வேலைக்கு கிளம்ப அங்கு பஸ் தரிப்பிடமருகே பஞ்சு மிட்டாயை தன் வாயில் அதக்கி கொண்டே தனது பையிலிருந்த சிறு உருவத்திற்கும் ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். அவள், அது அவனது அன்புக் காதலி கோதை,

 

ஆம் அவள் அச்சுதனின் கோதை தான் பள்ளிக் காலத்திலிருந்து துரத்தி துரத்தி காதல் தொல்லை கொடுக்கிறான். மாநிறம் பச்சைநிற கண்கள் உதட்டில் எப்போதும்

 

குறும் சிரிப்பு கல்லூரியில் இறுதியாண்டு படிப்பை படித்துக் கொண்டிருக்கிறாள். அச்சுதனுக்கு பயந்தே எவனும் அவள் திசை பக்கம் கூட திரும்ப மாட்டார்கள்.

 

அவளுக்கும் அச்சுதன் என்றால் கொள்ளைப் பிரியம் தான், அவன் முதலில் பிடித்துக் கொடுத்தது தான் அவள் கையிலிருக்கும் சிறு அணில்பிள்ளை அவளருகே ஜீப்பை நிறுத்தியவன்,

 

“ஹாய்! தங்கம் லேட் ஆகிருச்சா? வா வா உன்ன காலேஜ்ல விட்டுட்டு கிளம்புறேன்”

 

என்று ஏற்றிக் கொண்டவன் அந்த அணிலை கையில் வாங்கி,

“ஹாய்! கண்ணு செல்லம் அப்பாவ பாரு” என்றதும் அதுவோ கண்ணை சுருக்கி விரித்து சிறிய சத்தம் எழுப்ப அவனோ,

 

“செல்லக் குட்டி ஜூஜூலிப்பா” என்று தலையை தடவ கோதையோ,

 

“ம்க்கும், போலீஸ்கார் நம்மளையும் கவனிக்கிறது” என்று உறுத்து விழிக்க அவனும்,

 

“என்னடி ஜெலசா? பிள்ளை கூட போய் போட்டி போடுற” என்று சிரித்தவன் மனதில் குடும்ப பாரம் அழுத்தியதோ என்னவோ,

 

“கோதை, இன்னைக்கு மட்டும் லீவ் போடுறீயா மனசே சரியில்ல உன் கூட பேசணும் போல இருக்கு ஏதோ உள்ளுக்குள்ள அழுத்துற மாதிரி இருக்கு”

 

என்று கம்மியா குரலில் கூற கோதைக்கும் அவனது மாற்றம் ஏதோ செய்ய,

 

“அது என்னடா ஒரு நாள் தானே பண்ணிரலாம் வா போகலாம் நம்ம சீக்ரெட் ஸ்பாட்டுக்கு”

 

என்றதும் அச்சுதனும் அவர்கள் வழமையாக கதை பேசும் இடத்திற்கே வண்டியை செலுத்த தொடங்கினான்.

 

                             தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
4 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top