அத்தியாயம் 07
இங்கு வெள்ளை நிற வேட்டி சட்டையில் மைனர் கணக்காக புலிநகம் இன்னும் இதர சங்கிலிகளை கழுத்தில் மாட்டிக் கொண்டு அகச் செழியனின் வீட்டை நோக்கி காரை ஓட்டிக் கொண்டு பயணப்பட்ட சமயம்,
ஆற்றலரசுவுக்கு துரியோதனன் அழைத்திருந்தான் அவனது அழைப்பையேற்றவன்,
“என்னடா குடும்பஸ்த்தா? என்னையெல்லாம் ஞாபகமிருக்கா?” என்று நக்கலாக வினவ,
அவனோ, “அதெல்லாம் இருக்கு டேய் அந்த கண்டெயினர் பத்தி சொன்னேனே என்ன ஆச்சு? ஒவ்வொன்னும் அறுபது கோடி ரூபாடா” என்றதும் ஆற்றலரசோ,
“டேய் தம்பி எனக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்குற? உன்னோட எல்லா கடத்தலுக்கும் சேர்த்து வருஷத்துக்கு எனக்கும் என் அப்பாவுக்கும்”
என்றதும் அவனோ, “கிட்டத்தட்ட தொண்ணூறு கோடிடா”
அதற்கு அரசோ, “இங்கே பாருடா இனி இருபது கோடி மேல போட்டு தா எவனும் உன் கண்டெய்னர் மேல கை வைக்காம நான் பார்த்துக்கிறேன்”
என்றதும் துரியனோ, “ஏற்கனவே அங்க இங்கேன்னு கொடுத்துட்டு இருக்கேன் நீ வேற ஏன்டா சட்டுன்னு அமவுண்ட் ஏத்துற?”
அதற்கு நக்கலாக சிரித்த ஆற்றலரசோ, “நீ இன்றைய கட்சி தலைவர் நாளைய முதல்வர்கிட்ட பேசுறடா எனக்கு மட்டும் இனி காசு தந்தா போதும் அத்தனையும் சரியா நடக்கும்”
துரியனோ புரியாது, “என்னடா சொல்லுற புரியுற மாதிரி சொல்லேன்டா”
என்றதும் அரசுவோ, “அதெல்லாம் நடக்கும் போது புரிஞ்சுக்கலாம் கண்டெய்னர் தானே ரிலீஸ் ஆகிரும் இப்போ கோர்ட்டுல போய் உன் பொண்டாட்டிக்கு கூஜா தூக்கு”
என்று அழைப்பை துண்டித்தவன் அகமியின் வீட்டையும் அடைந்திருந்தான்.
இதே சமயம் போலீஸ் தலைமையகத்தில் செழியனுக்கு முன் தினம் கைப்பற்றிய அகர் மரக்கட்டைகளையும் அதற்காக கைது செய்யப்பட்ட இன்பாவையும் விடுதலை செய்யும்படி, மேலிடத்திலிருந்து அழுத்தம் வர அவனோ சிகரெட்டை புகைத்தபடி
வெளியே வந்தவன், “சத்யசீலன் சார்க்கிட்ட இருந்து பிரஷர் மேல பிரஷர் வருது என்ன பண்ணுறதுன்னு தெரில” என்று சிகரெட்டை நீட்ட
அதை வாங்கிக் கொண்டவனோ, “அதான் பெரிய திமிங்கிலமே மாட்டப் போகுதே பிறகென்ன பீலிங்?” என்று கேட்டபடி அதே சிகரெட்டை புகைத்தவன் வேறு யாருமல்ல அச்சுதன் தான்,
செழியனோ, “நீ மட்டும் எப்பிடிடா உங்க வீட்டுல தப்பி பிறந்த?” என்று நக்கலாக கேட்க,
அச்சுதனோ, “அதை யாரு கேட்குறா பார்த்தியா?” என்றதும் விரக்தியாக சிரித்த செழியனோ,
“எங்க வீட்டுக்குள்ள இவ்ளோ அநியாயம் நடந்திருக்கு எனக்கு பாரேன் ஒண்ணுமே தெரில ஆனா ஒன்னு இவனுக ஒருத்தனையும் விடக் கூடாது அந்த சயந்தன அண்ணன்னு சொல்லவே கூச்சமா இருக்கு எவ்ளோ பெரிய தப்பு நடந்திருக்கு அதை மறைச்சுட்டு வெளிய சுத்திட்டு இருக்கான்”
என்றதும் அச்சுதனோ, “அவன மட்டுமில்ல அரிச்சந்திரன், அப்பறம் சத்யசீலனையும் விடக் கூடாது இவனுக மாறி ஆட்கள் சமூகத்துக்கு கேன்சர்டா”
அதற்கு செழியனோ, “டேய் அவரு உன் அப்பாடா”
என்றதும் அச்சுதனோ, “அப்டி சொல்லாத அந்த ஆள அப்பான்னு சொல்லுறதே அசிங்கம் நானும் ரவுடித்தனம் கட்டபஞ்சாயத்து பண்ணிருக்கேன் தான் ஆனா ஒருநாளும் இவனுக மாதிரி கேவலமான வேலை செஞ்சதில்ல இவனுகள சுட்டு கொல்லனும்டா, இதுல இவனுக்கு ஹெல்த் மினிஸ்டர் பதவி ஒரு கேடு”
என்று கொந்தளித்தவன், “இந்த கேஸ விசாரிக்க தான் அண்ணிய கூட்டிட்டு இங்கே வந்தியா?” என்றதும்
செழியனோ தோளைக் குலுக்கியபடி, “மேபி இருக்கலாம்”
என்று கோணலாய் சிரிக்க அச்சுதனோ, “ஏதோ மர்மம் இருக்குன்னு புரியுது ஆனா என்னன்னு தான் ஒன்னும் புரில எதுக்கோ பொறுமையா இருக்க என்னன்னு சீக்கிரம் சொல்லுடா”
என்றதும் செழியனோ, “இந்த முதலைங்க திமிங்கிலமெல்லாம் மாட்டுற அன்னைக்கு நீயே பார்க்க தானே போற மச்சி, எல்லாம் சொன்னா நல்லா இருக்காதில்ல மச்சான்”
என்று கன்டெய்னர்களையும் கடத்தலுடன் தொடர்புடைய இன்பாவையும் அடுத்த நிமிடமே விடுவித்து இருக்க,
இங்கு கோயம்புத்தூரில் கோயிலுக்கு சென்று வந்துக் கொண்டிருந்த வழியில் சகுந்தலா தேவி, “ஆஆ” என்று கத்த தொடங்கிய சமயம் அவர் வாயை கர்சீப்பை வைத்து அடைத்து யாரோ முகமூடி அணிந்த மர்மநபர்கள் கடத்தியிருந்தனர்.
அவரது கைப்பையும் பூஜை பொருட்களும் ஆங்காங்கே சிதறிக் கிடக்க அழைப்பேசியும் தூக்கி எறியப்பட்டிருந்தது.
இங்கே அகமி வழமை போல இல்லாமல் செழியன் கொடுத்த ஒட்டு கேட்கும் பொறிகளையே வெறித்திருந்தவள், கண்ணை மூடி இதை செய்தே ஆகவேண்டும். என்று உறுதியாக எண்ணிக் கொண்டிருந்த சமயம் அரசு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியிருந்தான்.
சுதாரித்துக் கொண்டவள் தன் கைப்பையில் கேட்டல் சாதனங்களை மறைத்தபடி முகத்தில் எந்த பதட்டமும் இன்றி கதவை திறக்க நிலையில் சாய்ந்து நின்ற அரசோ,
“கதவை திறக்க இவ்வளவு நேரமா? புருஷன்காரன் மேல ஒரு பயபக்தியே இல்ல உன்ன மாதிரி ஆளுங்கள ஒற்றைகாலுல கொக்காட்டம் தவம் கிடக்க விடணும்டி”
என்று கூறிக் கொண்டே தன் இடையால் அவள் இடையில் ஒரு இடி இடித்துவிட்டு,
“சும்மா சொல்லக் கூடாது நான் ஒரு எட்டு மாசம் உன் பெண்ட்ட நிமிர்த்தினது பரவால்ல போலயே, வீட்ட ரொம்ப க்ளீனா வச்சிருக்க ஒரு குடும்ப பெண் இப்படி தான் இருக்கும் ஐ லைக் இட்”
என்றவனை குரூரமாய் பார்த்தவள் பார்வையை இயல்பாக்கிக் கொண்டு, “அரசு இப்போ உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு இப்போ வீட்டுக்குள்ள வந்து பிரச்சனை பண்ணுறீங்க?”
அவனோ, “ஓஹ்!, வாவ்! என் பொண்டாட்டி என்ன பார்த்து என்ன வேணும்னு கேட்குறா? பாருங்களேன், அடிக்குற வெயிலுக்கு நல்ல சுர்ருன்னு போதை ஏத்துற மாதிரி பதனி தண்ணீ இருந்தா நல்லா இருக்கும் இருக்கா?”
என்று நக்கலாக கேட்க அவளோ, “ஹலோ!, என்ன நக்கலா?” அவனோ,
“சத்தியமா இல்ல நான் விஷயமா கேட்குறேன் நீ தான் ஒன்னும் புரியாத மக்கா இருக்க”
என்றதும் அவளோ, “சார்! இப்போ என்னத்துக்கு வீட்டுக்குள்ள வந்து அழிச்சாட்டியம் பண்ணுறீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”
என்றதும் அவனோ, “சரி ஓப்பனா சொல்லுறேன் நீ தான் வேணும்”
என்று கன்னக்குழியில் நாக்கை சுழற்றியபடி கூறி அவளை கூறு போடும் பார்வை பார்க்க அவளோ அவனது பார்வையில் கூசியவளாக,
“ச்சைக், வெட்கமாயில்ல உங்களுக்கு” என்று திட்ட அவனோ,
“நீ நினைக்கிற மாதிரி இல்லம்மா ஒரு கல்யாணம் நடக்க போகுது அதுக்கு தாலி எடுத்துக் கொடுக்க தம்பதியா போவோம்னு கூப்பிட்டேன்”
என்றதும் அவளோ, “அதுக்கு தான் உங்க புது” என்று வாயை திறந்தது தான் தாமதம் அவனது விரல் கொண்டு அவளிதழ்களை அடைத்திருந்தான்.
“பேசி நல்ல மூட ஸ்பாயில் பண்ணிராத சீக்கிரம் சாரி கட்டிட்டு வா போகணும்”
என்றவுடன் அவளுக்கும் காரியம் ஆகவேண்டி இருந்ததால் ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு சேலையொன்றை சுற்றிக் கொண்டு சிறு ஒப்பனை மட்டும் செய்துக் கொண்டு வெளியே வர,
அங்கு சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அரசுவோ, “சூப்பர்! ரொம்ப அழகா இருக்க”
என்றவன் அவள் இடையில் கைப்போட்டு தன்னுடன் இறுக்கிக் கொண்டு அவள் கழுத்தில் “ஊப்”என ஊதி முத்தமிட்டபடி,
“உன் அண்ணனுகளுக்கு மருமக வேணுமா? மருமகன் வேணுமா?”
என்றவன் அவள் விறைத்திருப்பதை பார்த்து தானே, “சயந்தன் மச்சானுக்கு ஒரு மருமக செழியனுக்கு ஒரு மருமகன் என்ன மாதிரியே அப்போ தான் தலைய பிச்சிக்க வைப்பான்”
என்று கூறிக் கொண்டு அவள் கூந்தலில் முகம் புதைக்க அவளோ அவனது செயலில் எரிச்சலுற்றவளாக, அவனது காலை ஓங்கி மிதித்திருந்தாள்.
அவனோ அதில் மோகம் அறுபட்டு கோபத்துடனும் வலியுடனும், “ஏய்! ஆவ்வ்ச்ச்ச், எத்தன நாளைக்கு இப்படி சுத்துறன்னு நானும் பார்க்குறேன் அகம் புடிச்சவளே”
என்று கத்தியபடி காலை இறுக பற்றிக் கொள்ள அவள் முகத்தில் மெல்லிய சிரிப்பின் சாயல் அதை மறைத்துக் கொண்டு
“விருப்பமில்லாத பொண்ணு பொண்டாட்டியா இருந்தாலும் அத்துமீறக் கூடாது சார்”
என்றபடி தனது தோள்பையுடன் முன்னே போக அவனும் அவள் அழுத்தி மிதித்ததில் நொண்டிக் கொண்டே காரில் ஏறியவன், “ராட்சஸி” என்று திட்டிக் கொண்டு
காரை திருமணங்கள் பதிவு செய்யும் இடத்திற்கு செலுத்தியபடியே, பத்திரிகையாளர்கள், கட்சிக்காரர்கள், மூத்த உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் தகவல் தெரிவித்தவன் பதிவாளர் அலுவலகம் வந்து சேர்ந்திருக்க,
அங்கு உயிரை கையில் பிடித்தபடி ப்ரியகேஷாவும் அவளது காதலன் கார்த்தியும் வியர்த்து வழிந்தபடி நண்பர்கள் புடைசூழ நின்றிருக்க, அகமிக்கு திகைப்பூண்டை மிதித்தாற்போல அதிர்ச்சியோ அதிர்ச்சி அவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்க,
அரசோ, “என்னடி அப்படி பார்க்குற சீக்கிரம் வா இல்லாட்டி அவளோட அப்பன் அடிச்சு இழுத்துட்டு போனாலும் இழுத்துட்டு போயிருவான்”
என்று கையைபிடித்து தரதரவென இழுத்து வந்தவன், பதிவாளரிடம், “எல்லா வேலையும் முடிஞ்சதா? சீக்கிரம் சீக்கிரம்”
என்று மணமக்களை திட்டி நான்கு கொட்டு கொட்டி தாலிக்கட்ட வைத்தவன் தானும் சாட்சி கையெழுத்திட்டு அகமியையும் கையெழுத்திட வைத்து இனிதே திருமணத்தை முடித்து வைக்க, கேஷா அகமியை ஆர தழுவியபடி,
“அக்கா உங்க வீட்டுக்காரர் இல்லாட்டி இன்னைக்கு நானும் கார்த்தியும் பிணமாகி இருப்போம் அவர் தான் இந்த கல்யாணம் நடக்கவே காரணம்”
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கேஷாவின் தந்தையின் ஆட்கள் வெட்டு அருவாளோடு உள்ளே நுழைந்திருந்தனர். அதில் ஒரு தடியனோ,
“ஏய்!” என்று கத்தியபடி அரசுவின் கையில் ஆழமாக ஒரு கோடு இழுத்திருந்தான்.
உதிரம் வழிய வேட்டியை ஏத்திக் கட்டிக் கொண்டவன் வெட்டியவனை ஓங்கி அறைந்து விட்டு காதுக்குள்,
“டேய்! உன்ன மேத்தோலை மட்டும் தானே கிழிக்க சொன்னேன் என்ன கூந்தலுக்குடா ஆழமா வெட்டி வச்ச? என்ன கொன்னுட்டு சி. எம் ஆகலாம்னு பிளேனோ? தொலைச்சிருவேன்டா தடியா”
என்று திட்ட அடியாளோ, “அண்ணாத்த உங்க மேல அண்ணிக்கு ஒரு சாஃப்ட் கர்ணர் உருவாக்க தான்”
என்று அவர்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டே ஒருவர் மாறி ஒருவர் அடித்துக் கொண்டு சண்டையிட இல்லையில்லை சண்டை போடுவது போல் பாவ்லா செய்ய,
அவனோ அடிப்பது போல் பாவ்லா செய்தபடியே அடியாட்களிடம்,
“ஆமா உங்க அண்ணிக்கு அப்டியே பாசம் நேசம் எல்லாம் ஓவர் ப்ளோவாகும் பார்த்துட்டே இரு, அவளே நான் எப்போமட்ட மல்லாக்க படுப்பேன். படுத்ததும் என் மேல குச்சுபிடி ஆடலாமா? கரகம் ஆடலாமானு? யோசிச்சுட்டு இருக்கா நீங்க வேறடா எனக்குன்னு வந்து வாய்ச்சது ஒன்னும் சரியில்ல”
என்று திட்டிக் கொண்டிருக்க அகமியோ சண்டையை யாருக்கு வந்த விருந்தோ என பார்த்திருந்தவள் அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி,
மெல்ல யாருமறியாமல் வெளியேறியவள் போலிஸுக்கு அழைப்பையேற்படுத்தி விட்டு காரில் மறைவான இடங்களில் கேட்டல் பொறிகளை பொருத்தியவள்,
அது வேலை செய்கிறதா? என்றும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டு, கலவரத்தில் அவர்கள் கண்ணில் நேக்காக மாட்டாமல் தன் வேலையை முடித்து விட்டு தன்னிடத்தில் நின்றுக் கொள்ள அரசுவும் சரி அங்கிருந்த மக்களும் சரி அதை பெரிதாக கவனிக்கவில்லை.
இதே சமயம் சயந்தனோ யாரிடமோ, “எங்க அப்பாவ அரசு முடிச்ச அடுத்த நிமிஷமே அரசுவையும் முடிச்சிரு ஆனா அவன் சாவ ஜாதி கலவரமா மாத்து அப்போ தான் பெருசா எதையும் நோண்டமாட்டானுக”
என்று அழைப்பை துண்டித்த அடுத்த நொடி தனது உடற்பயிற்சி கூடத்தில் இருந்த ‘பஞ்சிங்’ பேக்கை ஓங்கி ஓங்கி குத்தியவன், “
அரசு ஒரு முறை நான் ஏமாந்தது போதும் இந்த முறை என் தங்கச்சி உனக்கில்லடா கல்யாண மாப்பிள்ளை ஆகணும்னா ஆசைப்படுற உனக்கு காரியம் பண்றேன்டா”
என்று கூறிக் கொண்டு வெறிக்கொண்டவன் போல் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தவனின் அழைப்பேசி மீண்டும் ஒலிக்க அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்தவன் காதில் வைத்தது தான் தாமதம்,
“மகனே! உங்க அத்தைய காணோம்டா” என்று அலற, சயந்தனுக்கோ எரிச்சல் தான் வந்தது.
“யோவ்! தகப்பா உன்ன ஒரு காரியம் தான் பண்ண சொன்னேன்., அதையும் கோட்டை விட்டுருக்கீயே உன்னையெல்லாம் உயிரோட ஆறடி குழி தோண்டி முக்கனும் அறிவுக் கெட்டவனே வைய்யா போன உனக்கும் உன் மச்சான் அந்த சத்தியசோதனைக்கும் ஒரு மண்ணாங்கட்டியும் ஒழுங்கா புடுங்க முடியாது எல்லாத்தையும் என் தலையில போடுங்க”
என்று கத்தி விட்டு அழைப்பை துண்டித்தவனுக்கு இப்போது பூமி தட்டமாலையாக சுழன்றது. எல்லாவற்றுக்கும் காரணம் அரசு தான் என்று கணித்தவன், “அரசுஉஉஉ”
என்று சிங்கத்தை போல் கர்ஜித்து கொண்டே நிலத்தில் முஷ்டிகளை கொண்டு குத்த தொடங்கினான்.
இங்கு அரசோ கையில் வெட்டுக்காயத்துடன் கட்சியின் தலைவரின் மீது இல்லாத பொல்லாத குற்றசாட்டுகளையெல்லாம் சாற்றிக் கொண்டிருந்தவன்,
“நீங்க தலைவர்னு தலையில தூக்கி வச்சுக் கொண்டாடின அந்த செங்கோட்டையன், தன்னோட ஒரே பொண்ணுக்கு கூட வேற்று மதத்துலயோ வேற்று ஜாதிலயோ கல்யாணம் பண்ணிக் கொடுக்க மறுக்கிறார்.
அப்படியிருக்கும் போது உங்க வீட்டு பிள்ளைகள எப்படி காப்பாத்துவார் அவரோட தலைமைக்கு கீழ இருந்தா எப்படி இந்த ஊரோ நாடோ உருப்படும் ஆணவக் கொலை தான் கூடும்”
என்று பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவனை அகமியும் செழியனும் எரிச்சலுடன் பார்த்திருக்க அரசுவோ பொய்களை அடித்து விட்டுக் கொண்டிருந்தான். அகமியோ செழியனிடம்
“பார்த்தியா அண்ணா ஏதோ பெரியார், அம்பேத்கார், காமராஜர் எல்லாரோட ஆவியும் ஒன்னா உள்ள புகுந்த மாதிரி ஜாதி ஒழிப்பு மத மறுப்புன்னு எப்படியெல்லாம் ரீல் சுத்துறான் இவனெல்லாம் ஆட்சிக்கு வந்தா அவ்வளவு தான்”
என்று பல்லைக் கடிக்க செழியனோ, “வரவிடாம பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு தங்கச்சிம்மா”
என்று தோள்ப்பையை கண் காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்துக் கொள்ள, முதலுதவியை முடித்துக் கொண்டு அகமி அருகே வந்த அரசோ,
“என்னடி? கையில விழுந்த அறுப்பு கழுத்துல விழுந்திருக்கலாம்னு யோசிக்கிறியோ!”
என்றதும் அவளோ ‘ஆமாம்’ என்பது போல் தலையசைக்க அவனோ, “எதேய்?!!” என்று சற்று அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் கேட்க
அவளோ அமைதியாக, “நீங்க இருந்தாலும் இல்லாட்டியும் கவலைப்பட நான் யாரு சொல்லுங்க? உங்க கூட மனசொத்து வாழ்ந்த பொண்டாட்டியா என்ன ஆப்ட்ரோல் வேலைக்காரி தானே?”
என்றதும் அவனது முகமோ கோபத்தில் கருக்க கண்களும் சிவந்து, “கையில அறுப்பு விழுந்திருக்குன்னு நினைக்காத கால் ரெண்டும் திவ்யமா இருக்கு எட்டி மிதிச்சேன்னு வை பேசுற வாய் கோணிக்கும்”
என்றதும் அவளோ அதை கணக்கெடுக்காது, “அப்போ என்ன வீட்டுக்கு கொண்டு போய் விடுறீங்களா?”
என்றதும் அவனோ ஒற்றைபுருவமுயர்த்தி, “இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போறோம் ஒழுங்கா ஒத்தடம் கொடுத்து மாமன கையில வச்சு தாங்குற”
என்றதும் அவளோ மனதுக்குள் ‘தாங்கனுமா இருடி உன்ன ஜெயிலுக்குள்ள அனுப்பி தாங்கி தாங்கி நடக்க வைக்கல நான் அகமேந்தி இல்ல’
என்று நினைத்துக் கொண்டே அவனை உணர்ச்சியற்று வெறித்திருந்தாள்.
தொடரும்…