அத்தியாயம் 06
தன் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் எல்லா விடயங்களையும் கோதையிடம் கூறியவன் முகத்தை அழுந்த துடைத்தபடி, “எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரில தங்கம் எனக்கு ஒண்ணுமே புரியல”
ஒரு புருவ முடிச்சுடன் அத்தனை விடயத்தையும் கேட்டு முடித்த கோதையோ, “அச்சு நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” என்று பலமாய் பீடிகை போட,
அவனும், ‘சொல்லு’ என்பது போல் பார்த்து வைக்க அவளோ,
“அச்சு எனக்கு தெரிஞ்ச மட்டும் உங்க அண்ணி எப்படியும் உங்க அண்ணன் கூட சேர மாட்டாங்க அதே மாதிரி இந்த பிரச்சனையெல்லாம் தெரிஞ்சா உங்க யார் கூடவும்
தொடர்பு வச்சிக்க கூட விரும்ப மாட்டாங்க நீங்க பேசாம உங்க அண்ணன் கிட்ட பேசி அவரோட மனச அதுக்கேத்த மாதிரி தயார்ப்படுத்துங்க அவ்வளவு தான் சொல்லுவேன்”
என்று வெளிப்படையாக கூறியவளை பார்த்து பெருமூச்செறிந்தவன், “இதுக்கு வேற எந்த வழியுமில்லையா கோதை?” என்றதும் அவளோ,
“எனக்கு தெரிஞ்சு சத்தியமா எதுவுமில்லை, அவங்களுக்கு உங்க அண்ணன் மேல கொஞ்சமாவது பீலிங் இருந்தா கண்டிப்பா சண்டை போட்ருப்பாங்க ஏசியிருப்பாங்க ஒருநாளும் என் வாழ்க்கைய வாழ ஆசையா இருக்குன்னு சொல்லிருக்கமாட்டாங்க
ஒரு காதல் சாகுறதோட உச்சநிலை எது தெரியுமா? அவங்க சண்டைபோடுறதோ கோபப்படுறதோ கிடையாது அமைதி நாம்ங்குற வார்த்தை நான்னு மாறுறது தான்”
என்று கூறியவள் பெருமூச்செறிந்துக் கொண்டே அச்சுதனின் தோளின் மீது கை வைத்து தட்டி ஆறுதல்ப்படுத்தியவள், “இதுக்கு நம்மளால தீர்வு காண முடியாது எல்லாம் அந்த இறைவன் கையில”
என்று கூறிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்துக் கொள்ள அவனும் அத் தருணத்தை கண் மூடி இதமாக அனுபவித்தான்.
இங்கு அகச் செழியனோ பல குற்றங்கள் தொடர்பான கோப்புகளை பல முறை படித்தும் ஏதும் புரிந்தபாடில்லை. கிட்டதட்ட முக்கால்வாசி குற்றங்கள் தொடர்பான கோப்புகளை பல முறை வாசித்து விட்டான்.
ஒன்றுமே அரசுவையும் தனது குடும்பத்தினரையும் இணைப்பதற்கான ஒரு துளியேனும் வாய்ப்பிருக்கவில்லை.
லண்டனில் சயந்தனுக்கோ கைகால்கள் உதறியது. செழியனும் தன்னை பற்றி தேடுகிறான். தன்னை பற்றி ஏதாவது உண்மை தெரிய வந்தால் அத்தனையும்
சர்வநாசம் என்று யோசித்துக் கொண்டே அன்றைக்கான சந்திப்புகள் கூட்டங்கள் எல்லாவற்றையும் முடித்தவன் சுயநலவாதி தானே,
தனது பகைக்காக ஆற்றலரசை கொன்றாலும் அதற்கு பிறகு அச்சுதன் வருவான். சரி அவனை கொன்றாலும் செழியன் இவற்றை பற்றி தோண்டுவான். அவன் கண்டுபிடித்த நொடியே எந்த பாரபட்சமும் பார்க்காமல் தன்னை சிறைப்பிடிக்க கண்டிப்பாக பிடியாணை வாங்குவான்.
அவனுக்கு தெரிந்தால் அகமிக்கும் தெரிந்து விடும். அப்படியே செழியனையும் கொன்றாலும் சத்யசீலன், சகுந்தலா, ராதிகா என எத்தனை பேரை தான் கொல்ல முடியும்.
அவனுக்கு கொலை ஒன்றும் புதிதல்ல ஏன் இந்த சாம்ராஜ்யமே பல மரணங்களின் மேல் உருவாக்கியது தானே, புதுவித மருந்துக் கண்டுபிடிப்பு புதுவித மருத்துவ
உபகரணங்கள் என்று பல பேரின் பிணத்திலும் ஓலத்திலும் கட்டியெழுப்பியது தானே இந்த சாம்ராஜ்ஜியத்தை விட்டுவிட்டு சிறைவாசம் அனுபவிக்கும் அளவுக்கு அவன் ஒன்றும் மகானில்லையே,
இப்போதும் யாரையாவது பலியிட்டு தனது சாம்ராஜ்யத்தை காத்துக் கொள்ள வேண்டும். பல தொழில்கள் இருந்த போதும் மருத்துவ துறை போல் இலாபம் ஈட்டக்கூடிய தொழில் எதுவுமில்லையே
“என்ன செய்யலாம்?, என்ன செய்யலாம்?” என்று மறுபடி மறுபடி தனக்குத்தானே கேட்டபடி அங்குமிங்கும் அலைந்தவன் இப்போது கோபம் தாபம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு யோசிக்கும் நிலைக்கு வந்திருந்தான்.
இப்போதும் அவனுக்கு அவனுடைய நலமே பிரதானம் யாராவது அவனுக்கு ப்ரயோஜனமில்லாத ஒருவரை, ஒரு காயை முற்றிலுமாக இந்த சதுரங்க ஆட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்., அப்படி சிந்தித்துக் கொண்டிருந்தவன் முகம் ஒருவித புன்னகை தத்தெடுத்தது.
அவன் மனமும் மூளையும் இது தான் சிறந்த வழி என்று அறுதியிட்டு கூற, அவன் சற்றும் தாமதிக்காமல் அரசுக்கு தான் அழைத்திருந்தான்.
அரசோ இன்றும் ஜவ்வாதும் நாளதமும் போட்டு அகமியை பார்க்க மணக்க மணக்க கிளம்பிக் கொண்டிருந்தவன் மீசையை சீப்பை வைத்து சீவிக் கொண்டிருக்கும் போது அவனது அழைப்பேசி அதிர்ந்து மின்ன தொடங்கியது.
அதிலிருந்த எண்ணை பார்த்தவன் உதட்டை வளைத்து சிரித்தபடி,
“என்ன மாப்பிள்ளை நலம்தானா? இப்போ தான் என் ஞாபகம் வருதோ?” என்று நக்கலாக கேட்க
சயந்தானோ கோபத்தில் பற்களை கடித்தான். இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இங்கே பாரு அரசு நான் நேரடியா விஷயத்துக்கு வாரேன் உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் பண்ணுறேன்”
என்றதும் அரசுவோ, “மாப்பிள்ளை உன்னோட உசுருதான்யா வேணும்” என்று அங்கிருந்த நாற்காலியில் அமர,
சயந்தனோ, “இங்கேபாரு அரசு உனக்கு என்ன வேணுமோ நான் தாரேன் உன்னோட அரசியல் வாழ்க்கைக்கு சப்போர்ட்டும் நான் தாரேன், ஏன் நம்ம மெடிக்கல் கம்பெனியோட இல்லீகல் லீகல் மெடிசின் இந்தியன் டிஸ்ட்ரிபியூட்டரா நீயே இரு வர்ற லாபத்துல பிப்டி உனக்கு பிப்டி எனக்கு நாம பிரிச்சிக்கலாம்”
என்று கூற அரசோ, “உனக்கு எவ்விடன்ஸ் வேணும்னு என்கிட்ட பம்முறீயா? உன் அப்பன் பண்ணுன அத்தனையும் புட்டு புட்டு வச்சிருவேன்னு பயப்படுறீயா?”
என்றதும் மறுப்பாக தலையசைத்த சயந்தானோ, “சத்தியமா இல்ல அந்த ஆள மாட்டி விடு ஐ டோன்ட் கேர் ஆனா அந்த ஆள் கோர்ட்ல வாய் திறக்க கூடாது என்னோட கம்பெனி பெயர் வெளிய வர கூடாது அவ்ளோ தான்”
என்றதும் அரசோ நக்கலாக சிரித்தபடி, “மச்சான் இதனால எனக்கு என்ன லாபம்?”
என்றதும் சயந்தனோ, “அதான் சொன்னேனே அத்தனையும் லாபம் தானே” என்றவன் ஒரு மூச்சை இழுத்து விட்டபடி,
“சரி ராதி பத்தி கேட்குறீயா அவ என் பொண்டாட்டி தானே அவள சந்தோஷமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு நான் ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது
உன்மேல உள்ள கோபத்த அவ மேல காட்ட ஆனா அவளுக்கும் எனக்கும் தீர்க்க வேண்டிய கணக்கு இருக்கு அந்த சண்டைக்குள்ள சும்மா மூக்கை நுழைக்காத”
என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கதைத்தவனிடம் அரசோ, “ஓகே, ஆனா இதெல்லாம் தாண்டி எனக்கு ஒரு விஷயம் வேணுமே அதான் உன்னோட தங்கச்சி என்னோட பொண்டாட்டி எனக்கு வேணுமே”
என்றதும் கண்ணை இறுக மூடி திறந்த சயந்தனோ, “இங்கேபாரு அரசு அது மட்டும் வேணாம் போன முறை பண்ண தப்ப என்னால மறுபடியும் பண்ண முடியாது அவளுக்கு விருப்பமில்லன்னா விட்டுறேன்”
என்றதும் அரசோ, “ஏன் உங்க அப்பன நான் போட்டு தள்ளினதும் நீ என்ன போட்டு தள்ளுறதுக்கா?” என்றான் கேள்வியாக
சயந்தனோ குரலை செருமிக் கொண்டு “அப்டிமட்டும் நினைச்சிருந்தா இந்நேரம் உன்கிட்ட பேசிட்டு இருக்கமாட்டேன் அரசு ஆனா குட்டிம்மா வாழ வேண்டிய பொண்ணு புரிஞ்சிக்கோ”
அதற்கு அரசோ, “அப்போ என் தங்கச்சி மட்டும் சக வேண்டிய பொண்ணா? அவளும் வாழ வேண்டியவ தானே மச்சான் கொஞ்சம் யோசிச்சு பாரு உனக்காக இவ்வளவும் செய்றேன்
என் தங்கச்சியையும் கல்யாணம் பண்ணி கொடுக்குறேன் ஆனா என் உசுருக்கு உத்தரவாதம் என்ன சொல்லு? என்னோட எல்லா பிடியும் உன்கிட்ட ஆனா உன்னோட முக்கியமான பிடிய என்கிட்ட கொடுக்கமாட்டேங்குற பார்த்தியா? இது தான் உன் புத்தி”
என்றதும் சயந்தனோ பற்களை அரைத்தபடி, “உன்ன கொல்ல மாட்டேன்டா அதுக்கு நான் கேரண்டி கொஞ்சம் சொன்னா கேளு” என்றான் சற்று கெஞ்சலாகவே,
அதற்கு இதழ் பிரித்து சிரித்த அரசோ, “மச்சான் சொந்த அப்பன போட்டு தள்ள சொல்லுற உன்னோட ரெஃப்யூடேஷனுக்கு எதுவும் ஆகிற கூடாதுன்னு பார்க்குற நாளைக்கு என்னையும் இதே மாதிரி போட்டு தள்ள பிளான் பண்ண மாட்டன்னு நான் எப்படி நம்புறது?
உன்ன நம்ப முடியாது அதனால நல்லா யோசிச்சுட்டு ரெண்டு வாரத்துல எனக்கு ஒரே மேடையில ரெண்டு பொண்ணுங்க கூட அதான் ஒன்னு உன்னோட தங்கச்சி இன்னொன்னு கட்சி தலைவர் பொண்ணு ரெண்டு பேர் கழுத்துலயும் தாலி கட்டலாம்னு இருக்கேன் அன்னைக்கு வந்து பார்த்து வாழ்த்திட்டு போ என்ன நான் சொல்லுறது”
என்றதும் சயந்தனோ, “டேய்! உனக்கென்ன பைத்தியமா? என் குட்டிம்மாவும் வேணும் இன்னொருத்தியும் வேணுமா சும்மா இந்த மாதிரி நொறுநாட்டியம் பேசுன நான் மனுஷனா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்”
அதற்கு அரசோ, “இப்போ மட்டும் மனுஷனா தான் இருக்குறீயா? நான் முதல்ல சொன்ன கண்டிஷனுக்கு ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம் இல்லன்னு வையேன் என் மேல சின்ன கீறல் விழுந்தா கூட உன்னோட திருகுத்தாளம் அத்தனையும்
உன் தம்பி அந்த ஏ.சி.பிக்கு போகும் நான் சரி டீல் பேசுவேன் அவன் நேர்மை வாய்மைனு கதைக்குறவன் என்ன நடக்கும்னு உனக்கே தெரியும் உன்னோட சாம்ராஜ்யத்தை இழுத்து மூடிட்டு ஜெயில்ல கல்லு தான் உடைக்கணும் எப்படி வசதி?”
என்றதும் சயந்தனுக்கு எப்படியும் தன்னலமே முக்கியம் அதனாலோ என்னவோ,
“ஓகே, டீல் ஆனா என் குட்டிம்மா கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வந்துச்சு நான் சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்க அதே மாதிரி உன் தங்கச்சியும் என்கூட தான் வாழப் போறா அத மனசுல வச்சுக்கிட்டு நடந்துக்கோ”
என்றதும் அரசுவோ, “சூப்பர்!, மச்சான் இத இதை தான் எதிர்ப்பார்த்தேன், ஏதோ உத்தமன் மாதிரி என் மேலவுள்ள கோபத்தை தங்கச்சி மேல காட்ட மாட்டேன்னியே அதெல்லாம் உருட்டா? சரி சரி நீ ஒரு களவாணி, நான் ஒரு போர்டூவெண்ட்டி நமக்குள்ள எவ்ளோ ஏக பொருத்தம் பார்த்தியா?”
என்றதும் சயந்தனோ, “சரி தான் ஆனா உன் வாழ்க்கையில என் குட்டிம்மா மட்டும் தான் இருக்கனும் சொல்லிட்டேன்”
என்றதும் அரசுவோ, “ம்ம் அப்போ இன்னைக்கே அந்த கேஷா பொண்ணுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சிர வேண்டியது தான் ஒரு விஷயத்த சாதிக்க என்ன பாடுபடவேண்டியிருக்கு” என்று நெட்டி முறித்துக் கொண்டவன்
“சரி அப்போ நானும் உன் தங்கச்சியும் தம்பதிகளா போய் கல்யாணத்துக்கு தாலி எடுத்து கொடுத்டுட்டு வாரோம் மச்சான்”
என்று அழைப்பை துண்டிக்க சயந்தனோ, “ஒரு நிமிஷம் என்னபத்தின உண்மைகள் எதுவுமே குட்டிம்மாக்கு தெரிய கூடாது சொல்லிட்டேன்”
என்று அழுத்தமாக கூற, “எத்தன குட்டிம்மா, சரி மச்சான் என் வாயில இருந்து ஒரு வார்த்த நீயும் உன் அப்பனும் அவள எனக்கு”
என்று அரசு இழுக்க சயந்தனோ கொதித்து போய் சட்டென மேசையில் தட்டியபடி, “டேய்! வார்த்தைய அளந்து பேசு”
அரசுவோ, “வை மச்சான் வை டென்ஷன் கட்டி கொடுத்ததன்னு சொல்ல வந்தேன் ஆனா பாரேன் உனக்கே தெரியுது என்ன வேலை பார்த்திருக்கன்னு, சரி சரி விடு இப்போ கூட உன் தலை தப்பிக்கனும்னு இதே வேலைய மறுபடி பார்க்குற பார்த்தியா எனக்கு உன்ன நினைக்கும் போதே மெய் சிலிர்க்குது”
என்று அவன் பதிலையும் எதிர்ப்பார்க்காது அழைப்பை துண்டிக்க சயந்தனோ தனக்கு முன்னாலுள்ள பொருட்களை எல்லாம் அடித்து உடைக்க தொடங்கியிருந்தான்.
இங்கு அச்சுதனோ செழியனை சந்திக்க வந்திருந்தவன் அவனது அறைக்குள் நுழைந்த அடுத்த நொடியே செழியனை ஆரத் தழுவியிருந்தான்.
செழியனோ, “என்னடா பண்ணுற”
என்று நெளிய அச்சுதனோ, “கொஞ்ச நேரம் சும்மா இருடா உன் பாக்கெட்டுல ஒரு பென்ட்ரைவ் போட்ருக்கேன் அத தனியா நீ மட்டும் பாரு இதெல்லாம் அண்ணிக்கு தெரியக்கூடாது
அப்டி தெரிஞ்சாலும் அவங்கள நீ தான் நல்லா பார்த்துக்கனும் இவ்வளவு தான் என்னால சொல்ல முடியும் எக்காரணம் கொண்டும் நான் தான் கொடுத்தேன்னு என் அண்ணனுக்கும் உன் அண்ணனுக்கும் தெரியவேகூடாது”
என்றவன் விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தும் இருந்தான்.
தொடரும்…