அத்தியாயம் -1

மகாதேவன் காலையிலே வேலைக்கு தயாராகிட்டிருந்தார். 

மகாதேவன்… ஒரு தனியார் வங்கியில சீனியர் மேனேஜரா இருக்கார். ரொம்ப பொறுமைசாலி, யதார்த்தமான மனுஷன். அவர் மனைவி, மக்கள் தான் அவருக்கு எல்லாம்… அவருக்கு ஒரு அண்ணா.. அப்புறம் ஒரு தங்கை… அதே தமிழ்நாட்டுலே பக்கத்திலே பக்கத்திலே இருக்காங்க. 

ஒரு சராசரி பாசமான குடும்பம். அவர் மனைவி உமா. உமா மகாதேவன்.. அவங்க ஒரு பல் மருத்துவர். எம்.டி.எஸ் படிச்சிருக்காங்க. டெண்டல காலேஜ்லே லெக்சரர். 

மனசுலே எதையும் வைச்சுக்காம பேசற குணம் அவங்களுக்கு. கோபம் வரும், ஆனா வந்த வேகத்துலேயே போயிடும். அவங்க எப்பவும் நினைக்கறது, அவங்க படபடப்பை சமாளிக்க கூடிய ஒரே ஆள் மகாதேவன் தான். 

இவங்களோட 33 வருச மண வாழ்க்கைக்கு கடவுள் கொடுத்த ரெண்டுப் பரிசுகள். 

முதல்லே பொண்ணு… பேர் மஞ்சரி… கல்யாணமாகி யூஎஸ்லே இருக்கிறாள். வருஷத்துலே ஒரு வாட்டி வருவாள். வயசு 32 ஆகுது. அவளுக்கு ரெண்டுப் பிள்ளைகள்.

மஞ்சரிக்கு ரெண்டு வருஷம் கழிச்சு பிறந்தவன் தான் முரளி. வயசு 30. அந்த வீட்டோட கடைக்குட்டி. மகாதேவனோட அண்ணா, தங்கை என மொத்தக் குடும்பதுக்கும் சேர்த்து அவன் தான் கடைக்குட்டி. 

அதனால கொஞ்சம் செல்லம். ஆனா, அப்பாவும் அம்மாவும் இப்போ அதை நினைச்சு வருத்தமும் பட்றாங்க. இப்போ நம்ம ஹிரோவை பற்றிப் பார்க்கலாம்.

முரளி.. வயசு 30… வசீகர இளைஞன். எல்லாரும் அன்னாந்து பார்க்கற மாதிரி ஆறடி உயரம். தீர்க்கமான பார்வை பார்க்கற சின்ன கூர்மையான கண்ணு.. கூர் நாசி… திருத்தப்பட்ட வடிவான மீசை. அதுக்கு கீழே மின்னலடிக்கும் பல் வரிசை.. அதை அடக்கின உதடு.. அவன் சிரிப்பும் ஒரு தனித்துவமானது! கண்ணும் சேர்ந்து சிரிக்கும். மாயக்கண்ணன் மாதிரி. அவ்வளோ வசீகரமான சிரிப்பு. இன்னிக்கு இருக்கற நவநாகரிகமான இளைஞ்சன்.. ஜிம் உபயத்துலே கட்டுமஸ்தான உடம்பு.

அழகனா இருந்தா போதுமா? புத்திசாலியும் கூட. சி.ஏ படிச்சிருக்கான். யூஎஸ்-லே எம்பிஏ படித்தான். அப்போதான் டிகிரியை மட்டும் இல்லாம அந்த நாட்டுலே இருந்து வாழ்வுமுறையும் பிடித்து வந்தான். 

ஏறக்குறைய நாலு வருஷம் அங்கே அப்படித்தான் வாழ்ந்தான். அப்புறம் மும்பையில் ஒரு பெரிய கம்பெனியிலே வேலை கிடைக்கவும் லேசுபாசா அங்கேயும் தொடர்ந்தது. 

ஒரே கல்யாண லீலை தான். ஏகப்பட்ட பெண் நண்பிகள். அதில் சிலது லிவ்-இன் ரிலேஷன்ஷிப் சொல்லப்படற உறவுமுறையும் இருந்தது. ஆனா கட்டில் வரை விட முடிந்தவனுக்கு மனசுக்கு நெருக்கமா ஏத்துக்க முடியலை. அவனோட பர்சனல் ஸ்பேஸ்க்கு உள்ளே போக முடிஞ்சவ ஒருத்தியே ஒருத்தி தான். அவளே அவனின் சாரா!!

முரளி பெண்பித்தன் கிடையாது. விரும்பி வர்றவங்களை தான் அந்த அளவு கொண்டுப் போவான். பெண்கள் ஒரு அளவுக்கு மேலே நெருங்கவும், உணர்வுப்பூர்வமாக ஈடுபாடுக் காட்டத் தொடங்கினாங்க. 

அது அவனோட மனநிலைக்கு ஒத்து வரலே. “மிஸ் பண்றேன், உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கேன்”னு சொன்னா அந்த நிமிஷமே ப்ரேக்-அப் பண்ணிடுவான். 

அந்த முறையிலே வளராததனாலேயோ, இல்லை ஆழ்மனசு ஒப்பாததனாலேயோ, இந்த வாழ்க்கை முறையும் சலிக்க ஆரம்பித்தது. கட்டிலுக்கு போற பொண்ணுங்க குறைஞ்சு ஏறக்குறைய நின்னே போச்சு. 

அப்போதான் அவன் உணர்வுகளையும் ஒருத்தி தட்டி எழுப்பினா. ஆனா அப்படி எழுந்த உணர்வு காதல்-னு அவனுக்கு புரியாம போச்சு. அவனுக்கு அது இப்போ புரிஞ்சு தன்னை அவளுக்கு புரியவைக்க தவிப்போடுத் திரிகிறான்.

“உமா, டிபன் ரெடியாமா? டைம் ஆகுது”னு குரல் குடுத்துக்கிட்டே வந்தார் மகாதேவன். 

“டேபிள்லே எல்லாம் இருக்கு மஞ்சுப்பா. நான் மஞ்சரிகிட்டே பேசிட்டே எல்லாம் செஞ்சுட்டு இருக்கேன்”னு குரல் குடுத்தாங்க உமா. 

“சாப்பிட்டுக்கிட்டே பேசேன் உமா, அப்புறம் காலேஜுக்கு டைம் ஆயிடும்”னு சொன்னார் மகாதேவன். 

“சரி சரி”னு வந்து புருஷன் கூட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டே பொண்ணுகிட்டே பேசினாங்க உமா. 

“ஸ்னோ ரொம்ப ஜாஸ்தியா மஞ்சு நேத்திக்கு?”ன்னு கேட்கும்போது டிபன் சாப்பிட வந்தான் முரளி. 

“குட் மார்னிங் பா… குட் மார்னிங் மா”-னு உட்கார்ந்தான். 

ரெண்டு மாசம் முன்னாடி துள்ளல், குறும்பு, சந்தோஷம்னு இருந்தவன், இப்போ எல்லாம் வெறும் புன்னகை தான். சாதாரணமா இருக்கான். அவனோட அசட்டுத்தனம் போயிடுச்சுன்னு சந்தோஷப்படறதா இல்லே சந்தோஷமே இல்லாம எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கானேன்னு வருத்தப்படறதானு தெரியலே பெத்தவங்களுக்கு.

“மஞ்சும்மா… முரளி வந்திருக்கான்… பேசறியா?”ன்னு கேட்டாங்க உமா. 

அந்த பக்கம் மஞ்சரி என்ன சொன்னாளோ தெரியலே. “சரிடி, என்ன இருந்தாலும் நம்ம முரளி டீ”-னு ஆர்க்யூ பண்ணாங்க. அப்புறம் வைச்சுட்டாங்க. 

“ஏண்டா நீதான் அவளுக்கு போன் பண்ணி சமாதான படுத்தகூடாதா?”-னு அலுப்பா கேட்டாங்க உமா. 

அவன் பதில் எதுவும் சொல்லாம ஸ்மைல் பண்ணான். “சிரிச்சா என்னடா அர்த்தம்”-னு கோபமா கேட்டாங்க. 

“அம்மா…. ப்ளீஸ்… எனக்கு சுத்தமா டைம் இல்லே.. வேலையிலே சேர்ந்து ஒண்ணரை மாசம் தான் ஆகுது.. அது போக சாரா கூட இருக்கணும்… வேறே எதுவும் என்னால முடியாது”-ன்னு பதில் வந்துச்சு – முகத்துலே இருக்கற ஸ்மைலுக்கு சம்பந்தம் இல்லாம! 

“எப்போ பாரு சாரா சாரானு அவ புராணம் தான். அவசரப்பட்டு அவளை கட்டிக்க போகத்தான் மஞ்சுக்கு கோபம்.. அப்படி பொறுக்க முடியாம என்ன அவசரமோ.. அவளாவது……”ன்னு மேலே என்ன கோபமா சொல்லிருப்பாங்களோ, 

“அம்மா.. போதும்!!”னு குரலை உசத்தினான் முரளி.

“இனஃப்… ஆமா… நீங்க… மஞ்சு… யாரு என்ன சொன்னாலும் எனக்கு என் சாராதான் முக்கியம். உங்க எல்லாருக்கும் அவ என் வைஃப்.. எனக்கு அவ தான் என் ப்ரெசண்ட், ஃப்யூச்சர் எல்லாம்”னு உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான். 

“முரளி, ரிலேக்ஸ்.. பேசாம இரு”ன்னு சொன்னார் மகாதேவன். 

“வேறே என்னப்பா… சாராவை போய் என் முன்னாடி குறை சொல்றாங்க. எனக்காக உயிரை விட துணிஞ்சவப்பா அவ” அப்படீன்னு மனசு ஆறாம சொன்னான். 

“உமா, என்னம்மா இதெல்லாம்?”னு வைஃபை பார்த்தார் மகாதேவன்.

“மஞ்சுப்பா, எனக்கு சாரா மேலே என்ன கோபம்? எனக்கும் அவளை ரொம்ப பிடிக்கும்? அதுக்காக இவங்க தனித்தனியா வாழாம இருக்கறதை எத்தனை நாள் பார்த்துட்டு இருக்க சொல்றீங்க? அம்மா நான்” அவங்க பங்குக்கு அவங்க ஆதங்கத்தை கொட்டினாங்க. 

“போதும்”-னு அழுத்தமா சொன்னார் மகாதேவன். 

“முரளி, நீ கிளம்பு. உனக்கு டைம் ஆயிடுச்சு பாரு”ன்னு பிள்ளையை அனுப்பினார். அவனும் தப்பித்தோம் பிழைத்தோம்னு ஓடிட்டான்.

பையன் போனதும், “உமா, நீயும் ஒரு சராசரி மாமியாரா நடக்கறது நான் எதிர்பார்க்காத ஒண்ணு. உனக்கு அந்த பொண்ணுமேலே வருத்தம் இருந்தாலும், ஒண்ணு மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ. உன் பையன் நம்ம நினைக்கற மாதிரி மாறினதுக்கு அவ மட்டும் தான் காரணம். கண்ட கழுதைகளைவிட நெஞ்சுலே சுமக்கற உறவு முக்கியம்னு புரிய வைச்சவ அவ தான். அதுக்கு நாம என்ன செஞ்சாலும் தகும்”னு சொன்னார் மகாதேவன். 

“நல்லா இருக்கு தேவா நீங்க சொல்றது. அந்த நல்ல குணத்துக்கு என் உயிரை கேட்டாலும் குடுப்பேன், ஆனா பையன் வாழ்க்கையை எப்படி விட்டு குடுக்க முடியும்?”னு வாதம் பண்ணாங்க உமா. 

“இந்த வாழ்க்கைதான் அவனுக்கு பிடிக்கும்னு தெரிந்த பிறகு அதுலே தலையிடறது அநாகரீகம். அவன் முன்னே மாதிரி இல்லாததனாலே தான் உன்னோட. மஞ்சுவோட சேட்டைக்கெல்லாம் பொறுமையா இருக்கான். வீணா அவனை கஷ்டப்படுத்தி திரும்ப பழைய நிலைமைக்கு போக வைச்சுடாதீங்க”னு கோபமாவே சொன்னார்.

உமா அவரை அடிப்பட்ட பார்வை பார்த்து, “நான் அவனோட அம்மா தேவா. என்ன பேசறீங்க?”னு வருத்தமா கேட்டாங்க உமா. 

“ஆனா, நீ அப்படியா உமா நடந்துக்கறே? அம்மாவா இருந்தா பாசிடிவா பேசி, அவனுக்கு ஊக்கம் குடுக்கணும். அவன் சந்தோஷமா இருக்க என்ன சப்போர்ட் பண்ணனுமோ அதை செய்யணும். ஆனா நீ? உன் பொண்ணு பேச்சை கேட்டுட்டு, அவன் பொண்டாட்டியை அவன்கிட்டே இருந்து வெட்டி விட அலையறே. அவளுக்கு ஒரு அபத்த ஈகோ. அவ இல்லாம, யாரையும் கூப்பிடாம, அவ இந்தியா வராம அவன் கல்யாணம் முடிஞ்சுடுச்சுன்னு. அதனால உன்னை ஏத்தி விடறா.. நீயும் ஆடறே”-ன்னு சொன்னார் மகாதேவன். 

15 நாளா அம்மாவும் பொண்ணும் ஆடற ஆட்டத்தை பார்த்தவர், இன்னிக்கு படபடன்னு சொல்லிட்டார்.

“மஞ்சுப்பா… அவளுக்கு தான் மட்டும் விட்டு போயிட்டோம்னு வருத்தம்”னு ஏதோ சமாளிப்பா உமா சொல்லவும்,

“போதும் உமா… கல்யாணத்துக்கு மஞ்சரி இல்லே… ஆனா.. நாம இருந்தோம். எப்படி, எந்த சூழ்நிலையிலே நடந்துச்சுன்னு உனக்கு தெரியும் தானே? எடுத்து சொல்லு உன் பொண்ணுக்கு. அப்படியும் புரியாம இந்த யோசனையிலேயே அலையறீங்கனு சொன்னா, நீங்க எல்லாம் மனுஷங்களே கிடையாது. ஒண்ணு மட்டும் சொல்றேன். முரளியை இந்த பொண்ணுகிட்டே இருந்து பிரிச்சு அவனை நரகத்துலே தள்ளிடாதீங்க. இப்போ நிலைமைக்கு அவனோட மூச்சே அவ தான். எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு நாள் முரளி கண்டிப்பா அவளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வருவான். ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்வாங்க”-னு நம்பிக்கையோட சொன்னார்.

புருஷனோட பேச்சு கண்ணுலே தண்ணியை வர வைச்சுது. “நானும் நம்பறேன் தேவா.. நானும் முரளிக்குத்தான் சப்போர்ட் தான். அவன் சந்தோஷமா இருந்தா எனக்கு போதும்.. நான் மஞ்சுவை கன்வின்ஸ் பண்ணி அவளை கொஞ்சம் விட்டுப்பிடிச்சதை, நீங்க இப்படி புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கலே.. போனது போகட்டும்.. இப்போ சொல்றேன்.. எனக்கும் என் பிள்ளை சந்தோஷம் தான் முக்கியம்.. ரெண்டு பேரும் சேர்ந்து இந்த வீட்டுக்கு வர்ற நாளுக்கு காத்துட்டு இருக்கேன். நான் கிளம்பறேன்”னு கண்ணை துடைச்சுக்கிட்டு கிளம்பினாங்க.

மகாதேவனுக்கு மனைவி பேச்சுனால வந்த வருத்தத்தை விட, ஏதோ தன்னால ஆனது இனிமேல் பொண்டாட்டி பிள்ளையை நச்சரிக்க மாட்டாள் என நினைச்சார். 

********************************************************************************

முரளி அவனோட பைக்கை உசுப்பி, நேரா ஆழ்வார்ப்பேட்டைப் போனான். ஓட்டிட்டே மணி பார்த்தப்போ, அது எட்டுன்னு காட்டுச்சு. 

“சே, இந்த அம்மாவால லேட்டு. இன்னிக்கு முக்கால் மணிநேரம் தான் சாரா கூட இருக்க முடியும்”-னு புலம்பிட்டே வேகமா போனான். 

தி.நகர்லே அவன் வீட்டுலே இருந்து ஆழ்வார்ப்பேட்டைக்கு 30 நிமிஷமாகும்னா, இன்னிக்கு விரட்டி 20 நிமிஷத்துலே வந்திருக்கான். வண்டியை விட்டுட்டு உள்ளே போகும்போதே, வாசல்லே, 

“குட் மார்னிங்பா, குட்மார்னிங்மா, கிளம்பியாச்சா?னு கேட்டான். 

“ஆச்சு முரளி, இவளை பேங்க்லே டிராப் பண்ணிட்டு, நானும் ஃபேக்டரிக்கு போகணும்”னு சொன்னார் அந்த நடுத்தர வயதுக்காரர். 

“சரிப்பா, அப்போ நான் வேணா இன்னிக்கு லீவ் சொல்லட்டுமா?”-னு கேட்டான் முரளி. 

“என்ன தம்பி, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. இப்போ தான் வேலைக்கு ஜாயின் பண்ணியிருக்கீங்க. இப்போ போய் லீவ் எல்லாம் கேட்டுக்கிட்டு. சரணிக்கு தெரிஞ்சா சும்மா விடமாட்டா”-னு சொன்னாங்க கூட இருந்த அவரோட வைஃப். 

“அதனால என்னம்மா? சாரா எப்படி தனியா இருப்பா?”னு கேட்டான் முரளி. 

“தனியா எல்லாம் இல்லே முரளி, நீங்க கிளம்பும்போது சுந்தர் வந்துடுவான். மதியம் ப்ரணிதா வர்றவரைக்கும் இருப்பான்”னு சொல்லிட்டு கிளம்பினார் அந்த மனுஷன்.

முரளி கண்ணுலே படாம இல்லே அவங்க மனவாட்டம்… அவனுக்கும் புரியாம இல்லே. இவ்வளோ நல்ல மருமகனை தாங்க முடியலியேங்கறதுக்கும், இந்த நல்ல பிள்ளையை பொண்ணு உணர மாட்டேங்குதேங்கறதுக்கும் நடுவுலே அல்லாடறாங்க. அதுவும் அவங்க கல்யாணம் முடிஞ்சதுலே இருந்து ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு. 

ஆனா அதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுக்கற நிலைமையிலே அவன் இல்லே. அவனுக்கு இப்போ என்ன நடந்தாலும் சாராவை பார்க்கணும்.. அவ கூட நிறைய பேசணும்.. அவ பதிலே பேசலேன்னா கூட அவனுக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லே. அவங்க போறதை பார்த்துட்டு சாரா ரூமுக்கு சிட்டா பறந்துட்டான். இவ்வளோ நேரம் பொறுமையா இருந்ததே பெரிசு அவனுக்கு!!

வேகமா அவ ரூம் கதவை தள்ளிட்டு உள்ளே போனான். போனவன், “குட் மார்னிங் மை டியர் சாரா பேபி”-ன்னு அவ பக்கத்துலே போனான். 

“எப்படி டீ பொண்டாட்டி இருக்கே? நைட் நல்லா தூங்கினியா?”னு அவளுக்கு பதில் பேசவே சந்தர்ப்பம் குடுக்காம அவன் பாட்டுக்கு தன் போக்கிலே பேசிட்டே போனான். 

“அட இன்னிக்கு மேடம் குளிச்சு ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க? என்னடா விஷயம்? எல்லாம் சரி. ஏன் பொட்டு வைச்சுக்கலே?”-னு பேசிட்டே ரூம்லே ஒதுக்க வேண்டியதை எல்லாம் ஒதுக்கினான். 

“இவ்வளோ பேசறேனே, பதில் சொல்றாளா பாரு?”ன்னு சொல்லிட்டே அவ பக்கத்துலே போய் கையை பிடிச்சுட்டு உட்கார்ந்தான். 

“சாரா, இன்னிக்கு நான் ஏன் லேட் தெரியுமா? மார்னிங் மஞ்சு போன் பண்ணி ஒரே ப்ராப்ளம்.. நீ சொல்லு… அப்போ தான் கேட்பா”னு அவன் பேசும்போதே கதவை தட்டிட்டு நர்ஸ் உள்ளே வந்தாங்க.

“குட் மார்னிங் சார். நேத்திக்கு நைட்லே இருந்து மேடம் கிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு.. சென்சஸ்க்கு ரெஸ்பாண்ட் பண்றாங்க. கை கால் அசையுது”னு சொன்னாங்க நர்ஸ். 

ஒரு நிறைவான புன்னகையோட அவன் பார்க்கும் போதே, அந்த நர்ஸ் சலைன் கழட்டி அதோட இடத்துல மாட்டினாங்க. ஆக்சிஜன் மாஸ்கோட நினைவே இல்லாம படுத்திருக்கற அவனோட சாராவை பார்த்தான் முரளி. அவனோட சாராக்கு இந்த உலகம் இயங்கிறது நின்னு 2 மாசம் ஆச்சு!!

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top