அத்தியாயம் 1
இரவு பத்து மணி இருக்கும்…
அந்த இடத்தில் ஆளுயரத்துக்கு தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது…
அதில் அந்த தீ ஜுவாலையை இமைக்காமல் பார்த்திருந்தது வேறு யாருமல்ல, ராவணன் தான்…
ராவணன் என்றால் அந்த ஊரில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்…
நல்லது நடந்தாலோ, கெட்டது நடந்தாலோ அவன் கண் பார்வையை தாண்டி எதுவும் நடக்காது…
கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு இருந்தவன் விழிகளும் கோபத்தில் சிவந்து தான் இருந்தன…
அவன் கை நரம்புகள், கழுத்து நரம்புகள் என்று எல்லாமே புடைத்து கிளம்பி இருந்தன…
நெருப்பையே கொஞ்ச நேரம் பார்த்து இருந்தவன், தனது கையை இப்போது பார்த்தான்.
குருதி தோய்ந்த கைகள்…
ஆம் எரிந்து கொண்டு இருந்தது, வயலோ வரப்போ இல்லை…
குற்றுயிரில் இருந்த ஒருவனின் உடல்.
அதுவும் அந்த ஊரில் இன்ஸ்பெக்டராக இருந்த வெற்றி…
ராவணன் அருகே நின்ற அவன் நண்பன் ஜெகனோ, “போலீசையே போட்டிருக்கோம் ராவணா, பிரச்சனை இல்லையா?” என்று கேட்க, அவனோ பெருமூச்சுடன், “ஐயா பார்த்துப்பார்” என்று மட்டும் சொன்னவன், அங்கே நின்றவனிடம், “பிணம் எரிஞ்சு முடியுற வரைக்கும் இங்கேயே நில்லு” என்று சொல்லி விட்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தான்…
ஆறடி உயரம் இருப்பான்.
தாடி மீசை என்று வளர்த்து தான் இருப்பான்…
ஒற்றைக் காதில் கடுக்கன் இருக்கும்…
கையில் ஐம்பொன் காப்பு இருந்தது…
காப்பை இழுத்து இறக்கியவன், அங்கே இருந்த பம்ப் செட் அருகே வந்து, கையை கழுவி கையில் இருந்த குருதியை மொத்தமாக சுத்தம் செய்து விட்டு, ஜெகனை பார்த்தான்…
ஜெகனுக்கு இன்னும் பயம் அடங்கிய பாடு இல்லை…
இதழ் குவித்து ஊதிக் கொண்டே, அவனை நெருங்கி நின்ற ராவணனோ, “பயப்படுறியா என்ன?” என்று கேட்க, அவளோ, “ம்ம், காந்தா வேற மாசமா இருக்கா, ஜெயிலுக்கு போக வேண்டி வந்திடுமோ?” என்று கேட்டான்.
“உன்னை அப்படியே விட்ருவேன்னு நினைக்கிறியா?” என்று கேட்டான் ராவணன்.
ஜெகனோ, “இல்லடா அது” என்று இழுக்க, “நான் தானே கொன்னேன், ஜெயிலுக்கு போறதுன்னா நானே போவேன்” என்று அழுத்தமாக சொல்லி விட்டு நடந்தான்…
ராவணன் மீது அளவு கடந்த நம்பிக்கை ஜெகனுக்கு இருந்தாலும், தன்னை மீறி ஒரு பயம் தோன்றுவதை தடுக்க முடியவே இல்லை…
நேரே தனது ஜீப்பை நோக்கி நடந்த ராவணனோ, “பசிக்குதுடா, காந்தா சமைச்சு இருப்பாளா என்ன?” என்று கேட்க, ஜெகனோ நேரத்தைப் பார்த்தவன், “பன்னிரண்டு மணி டா… நான் வீட்டுக்கு போற வரைக்கும் முழிச்சு தான் இருப்பா, ஆனா இந்த நேரத்துக்கு சாப்பாடு கேட்டா செருப்பால அடிப்பா” என்றான்.
“அடிச்சா வாங்கிக்கோ” என்று கண் சிமிட்டி சொல்லி விட்டு, ஜீப்பில் ஏற, “டேய் எங்கடா போறோம்?” என்று பதட்டமாக கேட்டபடி ஏறிக் கொண்டான் ஜெகன்.
“உன் வீட்டுக்கு தான்” என்று சொல்லி விட்டு அவன் வண்டியை செலுத்த, ஜெகனோ நெஞ்சை பிடித்துக் கொண்டு தான் உட்கார்ந்து இருந்தான்.
காந்தா அவன் மனைவி…
எந்தளவு காதல் இருக்கின்றதோ, அதற்கு குறையாமல் பயமும் இருக்கிறது…
ராவணனுடன் அவன் சுற்றி திரிவதில் காந்தாவுக்கு எப்போதுமே இஷ்டம் இல்லை…
அடிதடி என்று இருப்பதால் என்னவோ, இதனை எல்லாம் விட்டு, வேலைக்கு செல்லும்படி நச்சரித்துக் கொண்டே இருப்பாள்.
ஜெகன் கேட்டால் தானே…
உயிர் நண்பனை விட்டு கொடுக்க மாட்டான்…
ராவணன் என்றாலே வீட்டில் சட்டி பானை பறக்கும், இன்று அவனே சாப்பிட வருகின்றேன் என்கின்றான்…
இதயம் கீழே விழுந்து விடுமோ என்கின்ற ரீதியில் தான் அவன் அமர்ந்து இருக்க, “என்னடா ஹார்ட் அட்டாக் வந்திடும் போல” என்று கிண்டலாக கேட்டபடி ஒற்றைக் கையால் ராவணன் ஸ்டிரிங் வீலை திருப்ப, “அந்த போலீஸ்க்காரனை நீ கொல்லும் போது கூட எனக்கு இப்படி நெஞ்சு வலிக்கல டா, இப்போ வலிக்குது” என்றான் ஜெகன்…
ராவணன் சத்தமாக சிரித்தபடி, வண்டியை ஜெகன் வீட்டின் முன்னே நிறுத்தியவன், பாய்ந்து இறங்கிக் கொள்ள, ஜெகனும் பதட்டமாக கூட இறங்கிக் கொண்டான்.
சாதாரண வீடு தான்…
முன்னறையில் லைட் எரிந்து கொண்டு இருந்தது…
ஜெகன் கதவை தட்ட, உள்ளே இருந்து, “யாரு?” என்று காந்தாவின் குரல்.
“நான் தான் டி” என்றான் ஜெகன்…
ராவணனோ, ஜெகனின் தோளில் கையை போட, “டேய் கையை எடு டா” என்றபடி ஜெகன் தள்ளி நிற்க, “அட” என்று சொல்லிக் கொண்டே, அவன் தோளில் கையை போட்டு நெருக்கி இருந்தான் ராவணன்.
இதே சமயம், கதவை திறந்த காந்தாவுக்கு ராவணனை பார்த்ததும் சுர்ரென்று ஏறியது…
அதுவும் ஜெகன் தோளில் கையை போட்டபடி நின்று இருந்தான்…
அப்படியே இருவரையும் பெண்ணவள் வெறித்து பார்க்க, “அண்ணனை உள்ளே கூப்பிட மாட்டியாம்மா?” என்று கேட்டான் ராவணன்.
அவளோ நேரத்தைப் பார்க்க, “உன் கையால சாப்பிட்டுட்டு அண்ணன் கிளம்பிடுவேன்” என்றான் கிண்டலாக…
அவனுக்கு தெரியும் காந்தாவுக்கு தன்னை கண்டாலே பிடிக்காது என்று…
ஆனாலும், உன் புருஷன் என் கைக்குள் தான், என்று அவளுக்கு காட்ட வேண்டும், சீண்ட வேண்டும் என்றே கிளம்பி வந்திருப்பான் போலும்…
அவள் விழிகள் இப்போது ஜெகனின் படிய, அவனோ கெஞ்சுதலாக அவளை பார்த்தான்.
அவளும் பெருமூச்சுடன் விலகி நின்றவள், “உள்ளே வாங்க” என்றாள்.
ராவணனும், “ஜெகா, நீ தங்கச்சியை அரக்கி ரேஞ்சுல வர்ணிச்ச, எவ்ளோ அன்பா பண்பா கூப்பிடுறா பாரேன்” என்று சொல்ல, ‘அரக்கியா?’ என்று இதழ்களுக்குள் முணுமுணுத்து காந்தாவோ ஜெகனை அழுத்தமாக பார்க்க, “ஐயையோ அப்படி எல்லாம் சொல்லலம்மா” என்று சொன்னவனோ, ராவணனிடம், “சும்மா இரு டா” என்று வாய்க்குள் சொல்ல, “சரி சரி விடு” என்று சிரித்தபடி சொன்ன ராவணனோ, “எப்போம்மா மருமகனை பெத்து கைல கொடுக்க போற?” என்று காந்தவிடம் கேட்டான்.
“இன்னும் நாலு மாசம் இருக்கு” என்று சொன்ன பெண்ணவளிடம், “சரி பசிக்குது சாப்பாட்டை போடு” என்று சொன்னபடி உரிமையுடன் ஹாலில் அமர்ந்து கொள்ள, அவளோ ராவணனையும், ஜெகனையும் ஒரு கணம் பார்த்து விட்டு, சமையலறைக்குள் சென்றாள்.
ஜெகனுக்கு புரிந்து விட்டது அவள் நர்த்தனம் ஆட போகின்றாள் என்று…
“கொஞ்சம் இரு டா வந்திடுறேன்” என்று அவனும் சமையல் கட்டுக்குள் செல்ல, அவளோ பாத்திரங்களை கடுப்புடன் உருட்டிக் கொண்டு இருந்தாள்…
“சாப்பிட என்ன இருக்கு காந்தா” என்றான் அவள் அருகே வந்து நின்று மென்மையாக…
“ஆஹ் அரைகிலோ விஷம் இருக்கு தரட்டுமா?” என்று எரிந்து விழுந்தாள்…
‘விஷமா?’ என்று வாய்க்குள் முணுமுணுத்தவன், “நான் என்ன பண்ணட்டும்? பசிக்குதுன்னு சொன்னான்” என்று சொன்னவனை நோக்கி திரும்பி முறைத்து பார்த்தவள், “நேரம் என்ன?” என்று கேட்டாள்…
“பன்னிரண்டு மணி, வேலை இருந்திச்சு” என்றான் மென்மையாக…
“என்ன அப்படி வேலை இந்த நேரத்தில… எவளையாவது வச்சு இருக்கீங்களா?” என்று கேட்க, “ஐயோ காந்தா, உன் மேல சத்தியமா, எந்த பொண்ணும் இல்ல” என்றான்.
அவனை முறைத்தவள், “இந்த அடிதடி எல்லாம் விட சொல்லி, எத்தனை தடவை ஜெகா சொல்றது?” என்றாள் ஆதங்கமாக.
“மெதுவா பேசு, சீக்கிரம் வேலைக்கு போறேன்” என்றான் அவன் வழக்கம் போல…
“ஆமா போய் கிழிச்சிட்டாலும்” என்று சொன்னவளுக்கு ஆத்திரம் அடங்கவில்லை…
“ஆமா எப்போ பார்த்தாலும், அவர் கூடவே இருக்கீங்களே, இந்த ஆம்பிளையும் ஆம்பிளையும் போல உங்களுக்குள்ள ஏதும் இருக்கா என்ன?” என்று வெளிப்படையாகவே கேட்டு விட, “ச்சீ என்ன பேசிட்டு இருக்க, பொம்பிளை கூட சந்தேகப்பட்டது முடிஞ்சு, ஆம்பிள கூடவும் சந்தேப்படுறியா என்ன?” என்று கேட்க, “ஆஹ் பண்ணுறது எல்லாம் அப்படி தானே இருக்கு, அப்படியே இறுக்கி கட்டி பிடிச்சுட்டு வந்தா என்ன நினைப்பாங்க?” என்று திட்டியவள், அன்று சமைத்து வைத்து இருந்த கோழிக்கறியையும், சாதத்தையும் தட்டி போட்டு, ஜெகனிடம் நீட்டியவள், “கொண்டு போய் கொடுத்து, நீங்களும் சாப்பிடுங்க” என்று சொன்னாள்.
அவனும், “ம்ம்” என்றபடி, தட்டை ஹாலுக்குள் கொண்டு சென்று, ராவணனிடம் நீட்டியவன், தனது தட்டுடன் நிலத்தில் அமர்ந்து சாப்பிட தொடங்கி விட்டான்.
“டேய், என்னடா நிலத்துல இருக்கிற, இங்க வந்து பக்கத்துல உட்காரு” என்று ராவணன் சொல்ல, அவனோ, பெருமூச்சுடன், அங்கே வந்து நீர் வைத்து விட்டு சென்ற காந்தாவை ஏறிட்டு பார்த்து விட்டு, “இல்ல இங்கேயே இருக்கிறேன்” என்றான்…
ராவணனோ, “நீ ஏதும் சொன்னியாம்மா?” என்று கேட்க, காந்தாவோ, “இல்லையே” என்று சொல்ல, “நடிக்காதே, நீ சொல்லி இருப்ப” என்று ராவணனிடம் முகத்தில் அடித்த போல தான் பதில் வந்தது…
காந்தாவிடம் பெரு மூச்சு மட்டும் தான்…
அங்கே நின்று அவளுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை, “நான் போய் தூங்குறேன்” என்றபடி அவள் அறைக்குள் செல்ல, ஜெகனோ, ராவணனிடம், “அவ முன்னாடி மேல கையை வைக்காதே டா” என்றான்.
ராவணன் சாப்பிட்டுக் கொண்டே, “என்னடா ஒரு மாதிரி பேசுற?” என்று கேட்க, “நம்மள சந்தேகப்படுறா டா” என்றான்.
சாப்பிட்டுக் கொண்டு இருந்த ராவணனுக்கு புரையேற தலையில் தட்டிக் கொண்டே இருமியவன், “சைக்” என்று சொல்லி விட்டு நீரை அருந்த, “சைக் தான், உன் கூட சுத்துறதுக்கு இன்னும் என்ன எல்லாம் அனுபவிக்க போறேனோ” என்று புலம்பிக் கொண்டே சாப்பிட, “இவ்ளோ பேசுற நீ நாளைக்கு வீட்டு பக்கம் வந்துடாதே” என்றான் ராவணன்…
“இல்ல வருவேன்” என்று சொன்னபடி ஜெகன் சாப்பிட, ராவணனும் சிரித்தபடி சாப்பிட்டான்.
ஜெகனும் சரி, ராவணனும் சரி, வெளியே கரடு முரடாக இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் எப்போதுமே விட்டு கொடுத்தது இல்லை…
சின்ன வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள் ஆயிற்றே…
ராவணனும் சாப்பிட்டு விட்டு, “சாப்பாடு நல்லா இருந்திச்சுன்னு என் சக்களத்தி கிட்ட சொல்லு” என்று கிண்டலாக சொல்லி விட்டு செல்ல, “சைக்” என்று ஜெகனிடம் இருந்து பதில்… ஒரு போலீஸ்காரனை கொடூரமாக சற்று முன்னால் தான் கொலை செய்து இருக்கின்றார்கள் என்று சொன்னாலும் நம்ப முடியாதளவு இருந்தது அவர்களது நடவடிக்கை…
சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறிய இராவணனும் தனது வீட்டுக்கும் வந்து விட்டான்.
அவன் வீட்டில் யாரும் இல்லை, அவன் மட்டும் தான்…
வீட்டை திறந்து கொண்டே உள்ளே வந்தவன், அப்படியே கட்டிலில் விழுந்து படுத்து இருந்தான்…
அந்த வீட்டுக்குள் வந்தால் மட்டும் அவனுக்கு தனிமை சூழ்ந்து கொள்ளும், தூங்க மட்டும் தான் அங்கே வருவான்.
திருமணத்தில் பெரிதாக இதுவரை ஈடுபாடு இல்லை…
பெண்கள் என்றாலே வேப்பங்காய் போல பார்த்து பழகி விட்டான்.
காந்தா ஜெகனை படுத்தும் பாட்டை பார்த்ததில் இருந்தே, திருமணம் என்றால் தலை தெறிக்க ஓடும் மனநிலை தான் ராவணனுக்கு…
முக்கியமாக அவனுக்கு சுதந்திரம் வேண்டும்…
அந்த சுதந்திரத்தை யாரிடமும் விட்டு கொடுக்க அவன் தயாராக இல்லை…
இந்த நச்சரிப்புகளை விட, தனிமை மேல் என்று நினைத்து விட்டானோ என்னவோ…