அத்தியாயம் 2

அத்தியாயம் 2

அடுத்த நாள் பொழுது விடிந்தது…

காலையில் எழுந்ததுமே, ராவணனின் வண்டி புறப்பட்டது என்னவோ ராஜதுரை வீட்டை நோக்கி தான்…

வழக்கம் போல நாள் அவனுக்கு அங்கே தான் விடியும்…

ராஜதுரை வேறு யாருமல்ல, அந்த ஊரில் இருக்கும் பெரிய தலைக்கட்டு… 

சின்ன வயதில் அனாதையாக நின்ற ராவணனையும் சரி, ஜெகனையும் சரி, வளர்த்தது அவர் தான்.

படிக்கவும் வைத்தார்…

அவருக்கு என்று வாரிசு இல்லை…

இந்த ஊரே அவர் குழந்தைகள் தான்.

நல்லவர் என்று சொல்ல முடியாது…

கெட்டவர் என்றும் வகைப்படுத்த முடியாது…

அடிதடி கட்டப்பஞ்சாயத்து தொடக்கம், ஊரில் நல்ல விஷயங்கள் வரை நல்லது கெட்டதில் அவர் பங்கு நிறையவே இருக்கும்…

காலையில் வரும் போதே ராவணனுக்கு தெரியும் அவனை ஒரு வழி பண்ணி விடுவார் என்று…

நினைத்த போலவே வீட்டில் கால் வைத்த அடுத்த கணம், “அங்கேயே நில்லு, இன்னும் ஒரு அடி எடுத்து உள்ளே வச்சா கால் இருக்காது” என்று சீறிக் கொண்டே வேஷ்டியை மடித்து கட்டியபடி வந்தார் ராஜதுரை…

வயதானாலும் அந்த ஆளுமை இன்னும் அவரிடம் குறையவில்லை…

யாரை பார்த்தாலும் அடங்காமல் சிலிர்த்துக் கொண்டு இருப்பவன், ராஜதுரை என்றால் மட்டும் அடங்கி விடுவான்…

சட்டென கண்களை மூடி திறந்தவன், அவரை விழிகளுக்கு நேரே பார்த்தான்.

அவன் முன்னே வந்து நின்றவன், “நான் உன் கிட்ட என்ன சொன்னேன் என்ன பண்ணிட்டு வந்திருக்க?” என்று கேட்க, அவனோ, “அடிச்சிட்டு வர சொன்னீங்க, போட்டுட்டு வந்திருக்கேன்” என்றான் குரலில் சின்ன பதட்டமும் இன்றி… 

“கிறுக்கு பிடிச்சு இருக்கா உனக்கு? அவன் போலீஸ் இப்போ நீ உள்ள போனா யார் உன்னை வெளிய எடுக்கிறது?” என்று சீற, “அது தான் நீங்க இருக்கீங்களே” என்று சொன்னவன், அங்கே நின்ற மீனாட்சியிடம், “பசிக்குதும்மா, இவரை கொஞ்சம் தள்ள சொல்றீங்களா?” என்றான்.

“டேய் நான் பேசிட்டு இருக்கேன் டா” என்று அவர் ஒரு பக்கம் சீற, “அதான் புள்ள பசிக்குதுன்னு சொல்றான் ல, தள்ளுங்க” என்று அவரை அடக்கும் அவரது ஒரே மனைவி அவரை தோள்களால் தள்ளி விட்டு, “நீ வாப்பா, தோசை சுட்டு வச்சு இருக்கேன், வயிறார சாப்பிடு” என்று சொல்லி அவனை அழைத்து செல்ல, ராஜதுரையை ஒரு கிண்டல் சிரிப்புடன் பார்த்தபடி கடந்து சென்றான் ராவணன்…

“நீ தான் டி அவனை கெடுக்கிறது, இப்படியே கொட்டி கொட்டி வளர்த்துட்டே இரு… ஊரையே அடிச்சு உலைல போடுவான் அவன்..” என்று ராஜதுரை சீறிக் கொண்டு இருக்க, அவரிடம் காஃபியை கொண்டு நீட்டிய, அவர் வீட்டில் இருக்கும் பெண் நீலாவோ, “அண்ணனுக்கு திட்டிட்டே இருக்காதீங்க ஐயா, அண்ணன் எது பண்ணுனாலும் சரியா தான் இருக்கும்” என்று சொல்ல, அவளை ஆழ்ந்து பார்த்த ராஜதுரையின் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன…

எச்சிலை விழுங்கிக் கொண்டே, அவளை பார்த்தவர், “நீ சொன்னா சரி தான் மா” என்று மென்மையாக சொல்ல, அவளும் மென் சிரிப்புடன், அவரிடம் காஃபியை கொடுத்து விட்டு நகர, “எப்போவும் இப்படி சிரிச்சிட்டே இருக்கணும்” என்றார்.

அவரை திரும்பி பார்த்தவள், “கண்டிப்பா ஐயா” என்றாள்…

ராஜதுரைக்கு அவன் கொலை செய்து விட்டு வந்தது பெரிய தலைவலி தான்…

அவர் தான் எல்லாமே சமாளித்து ஆக வேண்டும்…

கொஞ்சம் கெடுபிடி அதிகமாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல், அவனுக்காக இறங்கி வேலை பார்க்க முடிவெடுத்து விட்டார்.

அவர் நினைத்த போலவே, சற்று நேரத்தில் போலீஸ் ஜீப் அவர் வீட்டு வாசல் முன்னாடி தான் வந்து நின்றது…

ஜீப்பில் இருந்து இறங்கிய போலீஸ்காரன் முன்னே வந்து நின்ற ராஜதுரையோ, “சொல்லுங்க சார், என்ன விஷயம்?” என்று எதுவும் தெரியாத போல கேட்க, அவரை சந்தேகமாக பார்த்து விட்டு, “சார், இன்ஸ்பெக்டர் வெற்றி நேத்து இறந்துட்டார்” என்றார்.

“என்னது இறந்துட்டானா? என்னாச்சு?” என்று அவர் தனது பங்குக்கு நடிப்பை அள்ளி விட்டார்…

போலீஸ்காரனுக்கு உண்மை என்னவாக இருக்கும் என்று தெரிந்தாலும் சாட்சி இல்லாமல் என்ன செய்து விட முடியும்?

“எனக்கென்னவோ ராவணா மேல சந்தேகமா இருக்கு” என்று முடிக்கவில்லை, “என்ன பொலிஸ்கார் என் பேர் லாம் அடிபடுது” என்றபடி அங்கே வந்தான் ராவணன்…

போலீஸ்காரனுக்கு ஒரு கணம் மூச்சடைத்து போக, “இன்ஸ்பெக்டர் வெற்றி நேத்து இறந்துட்டார்” என்றான்.

ராவணனும் உச்சு கொட்டிக் கொண்டே, “பாவம் சின்ன வயசு ல, கல்யாணம் வேற ஆகல” என்றான்… 

போலீஸ்காரனுக்கு எதனை பேசுவது எதனை பேசாமல் விடுவது என்றும் தெரியவில்லை… 

வெற்றியையே போட்டு தள்ளியவர்களுக்கு தன்னை போட்டு தள்ள எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கும் போதே ஒரு வகையான பதட்டம் உண்டாவதை தடுக்க முடியவில்லை… 

“பிணம் எரிஞ்ச இடத்தில விசாரிச்சேன், தெரியாதுன்னு தான் சொல்றாங்க” என்று சொன்னான் அவன்…

“அதுக்கு நாங்க என்னப்பா பண்ணுறது? இங்க எதுக்கு வந்த?” என்று ராஜதுரை கேட்க, “ராவணன் மேல சந்தேகமா இருக்கு” என்று போலீஸ்காரன் ஆரம்பிக்க, ராவணன் புருவத்தை மேலேற்றி கீழிறக்கினான்.

ராஜதுரையோ, “எந்த அடிப்படைல சந்தேகப்படுறன்னு சொல்லு, நானே அவனை கூட அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“ஏற்கனவே பிரச்சனை இருந்திச்சு” என்று சொல்ல, “எனக்கு ஆயிரம் பேர் கூட பிரச்சனை இருக்கு, எல்லாரையும் கொன்னுட்டா இருக்கேன்” என்று கேட்டான் ராவணன்… 

எந்த சாட்சியும் இல்லாமல் எதனை சொல்வது, இறுதியாக, போலீஸ்க்காரன் தான் இறங்கி போக வேண்டிய நிலை… 

“சாரி சார்” என்று சொன்னவன், கிளம்பி விட்டான்.

பயம் ஒரு பக்கம், சாட்சி இல்லை என்கின்றது இன்னொரு பக்கம்…

போலீஸ் ஜீப் கிளம்பியது, அருகே நின்ற ராவணனை பார்த்த ராஜதுரையோ, “இந்த கேஸை எப்படியாவது முடிச்சு விட பாக்கிறேன், கொஞ்ச நாளைக்கு எந்த அடிதடிக்கும் போகாம அடக்கிட்டு இரு” என்று சொல்லி விட்டு செல்ல, “ம்ம்” என்று ராவணனும், அங்கே வந்த ஜெகனுடன், ராஜதுரையின் ஃபேக்டரியை மேற்பார்வை செய்ய கிளம்பி விட்டான்…

சில வாரங்கள், பெரிதான தொல்லைகள் இல்லாமல் தான் அவர்கள் நாட்கள் நகர்ந்தன.. 

இதனிடையே அன்று மீனாட்சி கையால் தான் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் ராவணன்.

அங்கே வந்து அவனுக்கு முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்த ராஜதுரையோ, “என்னடா கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இருக்கா இல்லையா?” என்று ஆரம்பிக்க, அவனோ, “பொண்டாட்டின்னாலே நச்சரிப்பு ஐயா” என்றான் அவன்…

“என்னடா சொன்ன?” என்றார் மீனாட்சி…

“ஐயோ உங்கள இல்லம்மா, பொதுவா சொன்னேன்” என்றவனிடம், ராஜதுரை, “அதெல்லாம் இருக்கட்டும், நான் சொல்ற பொண்ண கட்டிப்பியா?” என்று கேட்டார்.

அவரை ஒரு மார்க்கமாக பார்த்த ராவணனோ, “பொண்ணு வச்சு இருக்கீங்களா என்ன?” என்று கேட்க, அவரும், “ம்ம் நம்ம வீட்ல புதுசா வேலைக்கு சேர்ந்த விசாலாட்சியோட பொண்ணு” என்றார்.

அவன் புருவம் இடுங்க, “எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் வேணாம் ஐயா” என்றான் சலிப்பாக…

மீனாட்சியோ, “ரொம்ப அழகான நல்ல பொண்ணுப்பா, ஆனா அந்த பொண்ணுக்கு கால் நடக்க முடியாது… வரனும் அமைய மாட்டேங்குது…” என்று வருத்தத்துடன் சொன்னார்…

கஷ்டப்படுபவர்களை பார்த்தாலே, மனம் இரங்குவதில் மீனாட்சியை அடித்துக் கொள்ள ஆட்கள் இலையை… 

தாயுள்ளம் என்று சொன்னாலே அவர் தான்…

அவர் தான், ஜெகன், ராவணன் என்று எல்லாரையும் ராஜதுரை வளர்க்க ஒரே காரணம்…

தங்களுக்கு குழந்தை இல்லை என்றாலும், அன்பை அள்ளி கொடுப்பார்…

கால் நடக்க முடியாத பெண் என்றதும் மறுப்பு சொல்ல ராவணனுக்கு தயக்கமாக இருந்தது…

அவனுக்கு இயல்பாகவே திருமணத்தில் இஷ்டம் இல்லை.

இப்போது அடித்து வேண்டாம் என்று சொல்ல முடியாத நிலமை…

ஊனம் என்பதால் வேண்டாம் என்கின்றானோ என்று நினைத்து விடுவார்கள் என்று யோசனை…

“கால் நடக்க முடியாதுன்னு யோசிக்கிறியா? உனக்கு இஷ்டம் இல்லன்னா பரவாயில்லப்பா” என்றார் மீனாட்சி…

“ஐயோ அப்படி இல்லம்மா, கல்யாணமே வேணாம்னு தான் இருக்கேன், கால் நடக்க முடியும், முடியாதுன்னு லாம் இங்க பிரச்சனை இல்லை” என்றான்…

“கல்யாணம் பண்ணாம எத்தனை நாளைக்கு இருக்க போற? அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ, ரொம்ப அமைதியான நல்ல பொண்ணு, உன்னை நச்சரிக்க எல்லாம் மாட்டா…” என்றார் ராஜதுரை… 

அவன் இதுவரை பெண்ணை பார்த்தது கூட இல்லை…

இப்போது மறுப்பும் சொல்ல முடியாத நிலையில், ஒரு பெருமூச்சுடன், “உங்க இஷ்டம்” என்று சொல்லிக் கொண்டே சாப்பிட,  மீனாட்சியும், ராஜதுரையும் ஒருவரை ஒருவர் மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டார்கள்…

மீனாட்சியோ, “அவன் மனசு மாற முதல், சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க மாமா” என்று சொல்ல, “அடுத்த வாரமே பண்ணிடலாம்” என்றார் ராஜதுரை… 

“அடுத்த வாரமா?” என்று ராவணன் அதிர, “இல்லன்னா மனசு மாறிடுவியே, அது சரி, பொண்ண பார்க்க வேணாமா?” என்று ராஜதுரை கேட்க, “தாலி கட்டும் போது பார்த்துக்கிறேன்” என்று சொன்னான் ராவணன்…

அன்று இரவு, ராவணனது வீட்டின் மொட்டை மாடியில் தான், ஜெகனும், அவனும் இருந்து சரக்கு அடித்துக் கொண்டு இருந்தார்கள்… 

ஜெகனோ, “டேய் கடைசியா நீயும் கல்யாணம் என்னும் புதை குழியில் குதிக்க தான் போகின்றாயா?” என்று கிண்டல் செய்ய, “சும்மா இரு டா, நானே என்ன பண்ணுறதுன்னு தெரியாம இருக்கேன், நடக்க முடியாத பொண்ணுன்னு வேற சொல்லிட்டாங்க, இல்லன்னு சொல்ல சங்கடமா இருக்கு” என்றான்.

அவன் தோளில் கையை போட்ட ஜெகனோ, “பார்க்க பலாப்பழம் போல வெளிய கரடு முரடா இருந்தாலும், நீ நல்லவன் டா” என்றான்.

“ஆமா ஆமா, அதான் உசுரோட ஒருத்தன கொளுத்துனேன்” என்றான் ராவணன்.

“அது இருக்கட்டும் பொண்ண பார்த்தியா என்ன?” என்று கேட்க, “யாருன்னே தெரியல, புதுசா ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்து இருக்காங்களாம் அந்த பொண்ணோட அம்மா, கல்யாணம் அன்னைக்கு பார்த்துக்கிறேன்” என்றான்…

“பேராச்சும் கேட்டியா?” என்று கேட்க, “அப்புறம் கேட்டுக்கலாம்” என்றான் சலிப்பாக…

அதனை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்த சமயம், ஜெகன் ஒரு கட்டத்தில், போதை அதிகமாகி, சுய நினைவை இழந்து விட்டான்.

“டேய் எந்திரி டா, இன்னைக்கும் உன்னை தூக்கிட்டு போக முடியாது” என்று சொல்ல, அவன் எழுந்தால் தானே, இறுதியாக வேறு வழி இல்லாமல், அவன் வீட்டுக்கு வழக்கம் போல தூக்கி சென்ற ராவணன் கதவை தட்ட, கதவை திறந்த காந்தாவின் முகத்தில் மது வாசனை குப்பென்று அடித்தது…

அவள் விழிகள் அங்கே ராவணனின் தோளில் சுயநினைவின்றி சாய்ந்து நின்ற ஜெகனின் படிய ராவணனோ, “ரொம்ப திட்டதே, பாவம்” என்று சொல்லிக் கொண்டே, அவனை இழுத்து வந்து அவன் அறைக்குள் படுக்க வைத்தவன், “கதவை லாக் பண்ணிக்கோம்மா” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

காந்தாவுக்கு ஜெகனை வெட்டவா குத்தவா என்கின்ற அளவுக்கு ஆத்திரம்…

எப்போதும் குடிக்க மாட்டான்.

எப்போவாவது குடிப்பான்.

குடித்தால் இப்படி தான் மட்டையாகி விடுவான்…

அடுத்த நாள் வீட்டில் பெரிய கலவரமே நடக்கும்…

இன்று கடுப்புடன் தான் தூங்கி இருந்தாள் காந்தா…

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top