அத்தியாயம் 11
நீல நிற சுடிதார் அணிந்து இருந்தாள் நீலா…
நெற்றியில் கருப்பு பொட்டு, நீளமாக முடியை பின்னி விட்டு இருந்தாள்…
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “ரொம்ப அழகா இருக்க” என்றான்.
“இத சொல்ல தான் அழைச்சு வந்தீங்களா?” என்று எரிந்து விழுந்தாள்.
“இப்போ என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோபப்படுற?” என்று நிதானமாக கேட்டான்.
“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல” என்றாள்.
அவனோ, “முதல் நான் பேசுறத கேக்கிறியா?” என்று கேட்டான்.
அவளும், “என்ன சொல்ல போறீங்க? உங்க பரிதாபம் ஒன்னும் எனக்கு தேவல” என்றாள் முகத்தில் அடித்த போல, “என் அப்பா பேர் தெரியுமா?” என்று கேட்டான்.
அவளோ, “ஏன் அவர் ரொம்ப பெரிய ஆளா என்ன?” என்று கேட்க, “எனக்கும் தெரியாது” என்றான்.
சட்டென நிதானமாகி விட்டாள்.
அவன் அவள் கவனத்தை தான் சொல்லும் விஷயத்தில் செலுத்த வேண்டும் என்று தான் இப்படி ஆரம்பித்ததே…
அதே போலவே அவளுக்கு அவன் சொன்ன விஷயம் பற்றி ஆராய தோன்ற, “ஏன் தெரியாது?” என்று கேட்டாள்.
பெருமூச்சுடன் ஆரம்பித்து எல்லாமே சொன்னான்.
தனது தாயை பற்றி சொன்னான்.
தனது வளர்ப்பை பற்றி சொன்னான்…
அதுவரை அவனை பற்றிய அவள் விம்பம் வேறு…
இப்போது மொத்தமாக மாறி இருக்க, அவளை பார்த்தவன், “இப்போ புரியுதா ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்க நினச்சேன்னு?” என்று கேட்டான்.
அவளிடம் பதில் இல்லை…
“ஆனா எனக்கு இந்த கல்யாணம் வேணாமே” என்றாள்.
“கல்யாணம்னா செக்ஸ் மட்டும் இல்ல நீலா, அது வாழ்க்கை ஓட்டத்துல பார்த்துக்கலாம்… இது காதல்… ஒரு துணை… எங்க அம்மா தனியா கஷ்டப்பட்டாங்க, அது உனக்கு வேணாம்னு யோசிக்கிறேன்” என்றான்.
இதற்கு அவள் என்ன சொல்வாள்?
இப்போது இல்லை என்று சொல்ல தவிப்பாக இருந்தது…
“உங்க வாழ்க்கையை நான் கெடுத்த போல ஆகாதா?” என்று கேட்டாள்.
அவனோ, “நீ என்னை வேணாம்னா கூட, கண்டிப்பா வாழ்க்கைல பாதிக்கப்பட்ட ஒரு பொண்ண தான் தேடி கல்யாணம் பண்ணுவேன்… இதுல கெடுக்கிறதுக்கு என்ன இருக்கு?” என்றான்.
மிகவும் முதிர்ச்சியாக அவளுக்கு தோன்ற, “அப்போ சம்மதம்” என்றாள்.
சட்டென மனதை மாற்றி விட்டான்.
“அப்போ சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான்.
அவளோ, “அண்ணா ஜெயில்ல இருந்து வந்த அப்புறம் பண்ணிக்கலாமே, அவர் எனக்காக தான் ஜெயிலுக்கு போனார்” என்றாள் சற்று தழுதழுத்த குரலில்…
“ம்ம் ஓகே, உன் விருப்பம்” என்று சொன்னவன், அவளுடன் வீட்டினுள் நுழைய, பெண்ணவளோ ராஜதுரையிடம், “கல்யாணத்துக்கு சம்மதம் ஐயா, ஆனா அண்ணா வந்த பிறகு தான்” என்று சொன்னாள்.
“அதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு” என்றாள் மோகினி கடுப்பாக…
“ரெண்டு வருஷம் அவர் காத்திருக்கிறதா சொல்லி இருக்கார்” என்றாள் நீலா…
எப்போதும் மோகினிக்கும் நீலாவுக்கும் ராவணன் விஷயத்தில் தான் பிரச்சனையே வரும்…
மோகினி பெருமூச்சுடன், “க்கும்” என்று சொல்ல, ராஜதுரையோ, “ரொம்ப சந்தோசம்… ராவணா வந்ததும் கல்யாணத்த பெருசா பண்ணிடலாம்” என்றார்.
இதனிடையே மோகினி மடியில் இருந்த மந்தாகினியோ, “அப்பா” என்று அங்கே இருந்த ராவணனின் புகைப்படத்தை காட்டி சொல்ல, சட்டென மோகினியின் விழிகள் நீலாவில் அழுத்தமாக படிய, ‘ஆத்தாடி, இப்படி போட்டு கொடுத்துட்டாளே குட்டி’ என்று நினைத்த நீலா தலையை எங்கோ திருப்பிக் கொண்டாள் தவிர மோகினியை பார்க்கவே இல்லை…
அதனை தொடர்ந்து, காஃபி குடித்து விட்டு, வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.
ராவணனுக்கும் விஷயம் போய் சேர்ந்தது…
அவனுக்கு மெல்லிய புன்னகை இதழ்களில்…
“வெளிய வந்து அந்த பையன பார்க்கணும் டா” என்று சொல்லிக் கொண்டான் ஜெகனிடம்…
நீலாக்கு அலைபேசி ஒன்று வாங்கிக் கொடுத்தான் ரிஷி…
அடிக்கடி இப்போதெல்லாம் பேசிக் கொண்டார்கள்.
காதல் என்பதை தாண்டி, அக்கறையும் முதிர்ச்சியும் அதிகமாகவே இருந்தது…
நீலாவுக்கு அவனை சிறுக சிறுக பிடித்து, தன்னை மீறி அவனை காதலிக்கவே தொடங்கி விட்டாள்.
ஆனால் மனதிற்குள் மறைத்துக் கொண்டாள் பெண்ணவள்…
பெரிதாக பேசி விட்டு, காதலிப்பதாக சொல்லவே தயக்கமாக இருந்தது…
சந்திப்பது குறைவு தான், அவள் கவுன்சிலிங் போகும் போது பார்ப்பான்.
கொஞ்சமாக பேசுவான்.
அவளுக்கு இடைவெளி கொடுத்து ஒதுங்கி நின்றவனுக்கு அக்கணம் புரியவில்லை அவளுக்கு இன்னுமே அவனது அருகாமை தேவைப்படுகின்றது என்று…
அவளும் வெளிப்படையாக சொல்லிக் கொள்ள தயங்கிக் கொண்டே, ‘இன்னும் கொஞ்ச நேரம் பேசுனா தான் என்னவாம்?’, ‘இப்போ நேர்ல பார்த்தா தான் என்னவாம்?’ என்று புலம்பிக் கொள்வாள்…
இப்படியே அடுத்தடுத்த வருடங்கள் எப்படி உருண்டோடி போனது என்றே தெரியவில்லை…
அன்று ராவணன் விடுதலையாகும் நாள்…
காலையில் எழுந்த மோகினிக்கு தெரியும்…
அவன் விடுதலை ஆக போகின்றான் என்று…
இன்னும் அவன் சொன்னது அவள் தலைக்குள் ஓடிக் கொண்டு இருந்தது…
‘வெளியே வர கூடாது என்று வேண்டிக்கோ’ என்று சொல்லி விட்டு அல்லவா சென்றான்…
கொஞ்சம் பதட்டமாக இருந்தது…
அவளை நினைத்து அல்ல, குழந்தையை நினைத்து…
மந்தாகினியில் உரிமை கொண்டாடி கொண்டு வந்து விடுவானோ என்று பயம்…
என்ன தான் வெற்றி கெட்டவனாக இருந்தாலும், ராவணனை அதற்காக நல்லவன் என்று சொல்லும் அளவுக்கு அவளுக்கு மனநிலை இல்லை…
அவனுடன் சேர்ந்து வாழும் எண்ணம் கொஞ்சமும் இல்லை…
மந்தாகினியை தூக்கி கொஞ்ச, “வேலைக்காம்மா?” என்று கேட்டாள் அவள் மழலை குரலில்…
“ஆமா டா, நீலா அத்தை கூட இருங்க” என்று சொல்லி விட்டு அவளை அங்கே வந்த நீலாவிடம் கொடுக்க, அவளுக்கோ இதழ் எல்லாம் புன்னகை…
ராவணன் வெளியே வரும் குதூகலம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது…
“என்னடி ரொம்ப தான் சந்தோஷமா இருக்க போல?” என்று கேட்டாள் மோகினி…
“ஆமா இருக்க கூடாதா என்ன?” என்று அவளும் பதிலுக்கு வாயடிக்க, குழந்தையை நீட்டியவள், “அவன் பார்க்க கேட்டான், இவன் பார்க்க கேட்டான்னு எங்கயாவது தூக்கிட்டு போய் பாரு, தலையை திருப்பிடுவேன்” என்றாள்.
நீலா இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டாள்.
“இப்போ எதுக்கு சிரிக்கிற?” என்று கேட்டாள் மோகினி…
“சிரிக்கவும் உரிமை இல்லையா என்ன?” என்று அவள் கேட்க, “நீ ஒருத்தி தான் என் கிட்ட இப்படி மாறி மாறி பேசிட்டு இருக்கிறது, அப்புறம் உன் ஐயா, அவருக்கும் என்னை வெறுப்பேத்துறது தான் வேலை” என்று திட்டி விட்டு சென்றதுமே, அலைபேசியை எடுத்து, நீலா அழைத்தது என்னவோ ஜெகனுக்கு தான்.
“அண்ணா வந்துட்டாரா?” என்று கேட்டாள்.
ஜெகனோ, “அவனுக்காக தான் காத்துட்டு நானும் ஐயாவும் காத்துட்டு இருக்கோம், இன்னும் வரல” என்று சொல்ல, “ஐயா வீட்டுக்கு தானே போவீங்க, நான் அங்கே மந்தாகினியோட வர்றேன்” என்று சொன்னவள், வீட்டை மூடின விட்டு கிளம்பி விட்டாள்.
மோகினி சொன்னதை எல்லாம் ஒரு பொருட்டாக கூட நீலா மதிக்கவில்லை…
இதே சமயம், ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி இருந்தான் ராவணன்…
அதே கருப்பு நிற ஷேர்ட், கருப்பு நிற பேன்ட், தாடி மீசை ட்ரிம் செய்து இருந்தான்…
விழிகளில் இறுக்கம் அப்படியே இருந்தது…
அவனை தூக்கி மோகினி உள்ளே வைத்தது கூட பெரிய விஷயமாக தெரியவில்லை…
ஆனால் காதல் என்று அல்லவா ஏமாற்றி விட்டாள்.
அதனை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை…
அடி வாங்கிய பாம்பின் மனநிலை தான் அவனுக்கு…
அவனை முதலில் இறுக அணைத்துக் கொண்டது ராஜதுரை தான்…
“எப்படி டா இருக்க?” என்று தான் நா தழுதழுக்க கேட்டார்…
“ரொம்ப நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்க, “நல்லா இருக்கேன் டா” என்றபடி, அவன் முகத்தை பார்தத்தவர், “எங்கடா தாடி மீசை?” என்று கேட்க, மெலிதாக சிரித்தவன், “ட்ரிம் பண்ணி விட்டானுங்க” என்று சொன்னான் சிரித்தபடி… அப்படியே அவன் விழிகள் ஜெகனின் படிய, “எப்படி டா இருக்க?” என்று கேட்டான்.
“ரொம்ப நல்லா இருக்கேன், உனக்கு ஐயா வீட்ல விருந்தே தயார் பண்ணிட்டு இருக்காங்க, வாடா” என்று சொல்லி, அவனை வண்டியில் அழைத்து சென்றார்கள்.
அவன் மோகினியை பற்றியோ குழந்தையை பற்றியோ எதுவும் கேட்கவில்லை…
ஆனால் தனது உயிர் நீரில் ஜனித்த குழந்தையை பார்க்க ஆசை உள்ளுக்குள் இருக்க தான் செய்தது… அடக்கிக் கொண்டான்…