அத்தியாயம் -19

ரீனா கிட்ட மதுரியா மொத்த கதையும் சொன்ன அதே நேரம் ப்ரதீப்பும் இது எல்லாத்தையும் பரத் கிட்ட சொல்லி இருந்தான். “என்னால நம்பவே முடியலே ப்ரதீப்! எப்படி இது?”-னு மதுரீமாவோட படத்தைப் பார்த்துட்டுக் கேட்டான் பரத். “நம்பித்தான் ஆகணும்… ஏன்னா அது தான் உண்மை”-னு சிரிச்சான் ப்ரதீப். “சாரி, ப்ரதீப்… உங்க உறவு முறை தெரியாம… நான் பாட்டுக்கு ஏதோ நினைச்சு… சே… வெரி சாரி”-னு குற்றவுணர்வோட சொன்னான் பரத். “சே… சே… என்ன மாம்ஸ்? விடுங்க… நாங்களும் எங்களுக்குள்ளே என்ன நினைக்கிறோம்-னு சொல்லலே தானே?ஒரு ஹிண்ட் இருக்கட்டும்-னு தான் ஆறு மாசம் பெரியவங்கன்னாலும் தியாவை சரளமா அக்கா-னு கூப்பிட்டேன்… நீங்க ட்யூப் லைட் போல”-னு கிண்டல் பண்ணி சிரிச்சான் ப்ரதீப். “ஹேய்…” னு மனசு லேசாகி பரத்தும் சிரிச்சான். “ரியா லைஃப்லே நல்லது நடக்காதா-னு ஒரு வேகம். அதான்..”னு சொன்னான் பரத்.

“புரியுது..”ன்னு மட்டும் சொன்னான் ப்ரதீப். “எப்படி துறுதுறு-னு  இருப்பா தெரியுமா ப்ரதீப்? கலாட்டா, சிரிப்புன்னு.. இந்த விதுரன் அத்தனையையும் அழிச்சுட்டான். அவளுக்கு கதறி அழத் தெரியும்னே இவன் அவ வாழ்க்கையிலே வந்தப்புறம் தான் தெரியும்”-னு கோபமா சொன்னான் பரத். “சாரி மாம்ஸ்! கேட்காம இருக்க முடியலே.. விதுரனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? எங்கே இருக்கார்?”-னு கேட்டான் ப்ரதீப். “அது சென்னையிலே தான். ஆனா…”-னு விதுரனை பத்தி சொல்லவும் அதிர்ந்துப் போனான் ப்ரதீப். “ஓ… மை காட்… இது ரியாவுக்கு தெரியுமா?எப்படி? ஆனா ஒண்ணு.. இதுக்கு மேலே கடவுள் அவங்களைத் தண்டிக்க முடியாது”-னு வருத்தமா சொன்னான். “முழு விவரம் தெரியாது ப்ரதீப்.. எப்படி என்னாச்சுன்னு முழு விவரம் அங்கிளுக்கு கூட தெரியாது. ஆனா, ரியா கிட்ட சொல்றதா இல்லே. இப்போதான் மறக்க ஆரம்பிச்சிருக்கா”-னு சொல்லவும் சத்தமா சிரிச்சுட்டான் ப்ரதீப். 

“என்ன சிரிக்கறே?”-னு குழப்பமா கேட்டான் பரத். “நீங்க சொன்னதை கேட்டா சிரிப்புத் தான் வருது. ரியா விதுரனை மறக்கப் போறாளா? வாய்ப்பு இல்லை ராஜா… வாய்ப்பு கிடையாது”-னு அழுத்தமா சொன்னான் ப்ரதீப். “காலம் எல்லாத்துக்கும் மருந்து தானே ப்ரதீப்? கண்ணுல பார்க்காதது, கருத்துல நிற்காது தானே?”-னு கேட்டான் பரத். “கண்டிப்பா!! ஆனா அதெல்லாம் மறக்கவே கூடாது.. கோபத்தை விடவே கூடாது-னு நினைக்கறவங்களுக்கு வேலை செய்யாது மாம்ஸ்”-னு சொல்லவும் அதிர்ந்தான் பரத்.

“மாம்ஸ்… நீங்க எல்லாரும் ரியா கூடவே இருக்கறதுனால அவளை கண்டிப்பா நிறைய கவனிச்சிருப்பீங்க… ஆனா என்னோட அப்சர்வேஷன் சிலதும் சொல்றேன்… 21 வயசுலே வெளி உலகம் முழுசா தெரியறதுக்கு முன்னாடி, அவ புருஷனாகப் போறான்-னு நீங்க கையை காட்டின விதுரன் அவ மனசுலே ஆழமா உட்கார்ந்தான். அதுக்கப்புறம் அவங்க பழக்கம், அன்பு, காதல் இன்னும் ஆழத்துக்கு போச்சு. நிறைய கொள்கைகள் வைச்சுட்டு வளர்ந்திருக்கா. அதனால அந்த அன்பை கல்யாணத்துக்கு முன்னாடி காட்ட சங்கடம். ஏன்னா… சொன்னதுக்கு அப்புறம் சரசமாடாம இருக்க முடியாது-னு தெரியும். கல்யாணத்துக்கு முன்னாடி தொடுகையே தப்பு-னு நினைக்கற கொள்கை. ஒரு ஆணா சொல்றேன், இவ்வளோ அன்பை ஒரு பொண்ணு, ஒருத்தன் தலையிலே கொட்டி, அதை அவ வாயால வேற சொன்னா, அவளை விட்டு அப்புறம் தள்ளி இருக்கறது எந்த ஆணுக்கும் கஷ்டம் தான்”-னு சொல்லவும் ரெண்டுப் பேரும் சிரிச்சுட்டாங்க. “வீட்டுலே முடிவு பண்ணதால பிரிவை நிச்சயம் எதிர்பார்க்கலே. மனசு மாத்திக்கறது தனக்கு தானே பண்ணிக்கிற துரோகம்-னு நினைக்கிறா. அதோட விதுரன் மேலே இருக்கற அன்பு மறக்க விடலே. விதுரனும் ஏதோ ஒரு வகையிலே அவளை அழுத்தமா காயப் படுத்தி இருக்கார். அது என்ன-னு ரியா மூச்சு விடக் கூட ரெடியா இல்லே. ஸோ ரியா வெறுப்புக்கும் விருப்புக்கும் நடுவுலே அல்லாடறா. இதான் அவ நிலை. இது உங்க எல்லாருக்கும் எந்த அளவுக்குப் புரியுதுன்னு கூட எனக்குப் புரியலை”-னு தோளை குலுக்கினான் ப்ரதீப்.

பரத்துக்கு மறுக்கவே முடியலே. “அதுக்கு-னு அவனையே நினைச்சுட்டு இரு-னு விட முடியுமா? இல்லே செகண்ட் சேனலா போ-னு அனுப்ப முடியுமா? அபவ் ஆல், ஹீ டஸ்ண்ட் டிசர்வ் ஹர்”-னு கோபமா சொன்னான் பரத். “உங்க முதல் ரெண்டு விஷயத்துக்கு எங்கிட்ட பதில் இல்லே மாம்ஸ். பட்… மூணாவது பாயிண்ட்… அவ காயத்துக்கு காரணமான அவன் மட்டும் தான் அதுக்கு மருந்தாக முடியும். அதுவும் சுலபமில்லே. அன்பு தண்ணி மாதிரி… கோபம் எண்ணெய் மாதிரி. ரெண்டும் சேர்ந்தா எண்ணெய் தான் மேலே நி̀ற்க்கும். என்னை கேட்டா இப்போதைக்கு இதெல்லாம் ஓரமா வைங்க. விதுரனைப் பத்தி எதுவும் அவ கிட்ட பேசவோ சொல்லவோ வேண்டாம். அவ மனசு அமைதியாகட்டும். அவ கோர்ஸ்லே கவனம் செலுத்தட்டும். அவ கனவான கார்டியாலஜிஸ்ட் ஆகட்டும். மத்ததெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்”-னு சொன்னான் ப்ரதீப். பரத்துக்கும் அதே சரி-னு படவும் ஒத்துக்கிட்டான். அவங்க யாருக்கும் தெரியலே அடுத்த நாளே மதுரியா விதுரனை பார்க்கப் போறா, திரும்ப அடங்கி இருந்ததெல்லாம் மேலே எழும்பி அவளை ஆட்டிப் படைக்கப் போகுதுன்னு.

பரத்தை பார்த்து பேசிட்டு, அடுத்த நாள் மதுரியா கூட ஷாப்பிங் போயிட்டு காலேஜ் கிளம்ப ப்ளான் பண்ணான் ப்ரதீப்.

“போதுமா மேடம்? இப்போ புரியுதுங்களா எங்க உறவு?”-னு கேட்டா மதுரியா. “சாரி ரியா… கண்ணியமான உறவு முறையிலே இருக்கற உங்களை போயி ரொம்ப சாரி டீ”-னு வருத்தமா சொன்னா ரீனா. “இதென்ன புதுசா… சாரி பூரி-னு.. விடு… எனக்கு நீ ப்ரதீப்பை விரும்பறியோ-னு ரொம்ப நாளா டவுட்டு. ஆனா கேட்டுக்கலே. காரணம் தீப்போட முன் வாழ்க்கை தான் ரீனா. எனக்கு ரெண்டுப் பேருமே நெருக்கம் தான். ஆனா நியாயம்-னு ஒண்ணு இருக்கில்லே?”-னு சொன்னா மதுரியா. “இப்போ மட்டும் என்ன மாறிடுச்சு-னு நினைக்கறே?”-னு கேட்டு திகைக்க வைச்சா ரீனா. “நீ என்ன சொல்றே ரீன்ஸ்?”-னு கேட்டா மதுரியா. “ஆமா ரியா… முன்னே விட அதிகமா விரும்பறேன்.. ஒருத்தரோட பழைசைப் பத்திக் கேட்டு ஓடணும்னா அதுக்கு பேர் லவ் இல்லையே. யாருக்கு பாஸ்ட் இல்லை. குத்திக் காட்டலே ரியா. உனக்கு விதுரன் பாஸ்ட். அதே மாதிரி ப்ரதீப்புக்கு நந்தினி பாஸ்ட்.. ஸோ… அதுக்கு என் அன்பு மாறுவானே?”-னு சாதாரணமா கேட்டா ரீனா.

விதுரன் தன்னோட பாஸ்ட்னு சொன்னது உள்ளே வலிச்சாலும் பிடிவாதமா அதை ஒதுக்கிட்டு, “ரீனா, இன்னிக்கு ஒரு மிதப்புலே பேச நல்லாத்தான் இருக்கும். ஆனா ப்ரதீப் மனசுலே கடைசி வரைக்கும் நந்தினியைப் பத்தின நினைப்பு இருக்கும்.. தன்னை மீறி வாயால அவர் ஏதோ ஒரு நேரத்துலே அவளைப் பத்தி பேசலாம். வெறும் லவ் அஃபேர் இல்லே ஒரு நாள்லே ஒதுங்கறதுக்கு. அவ தான் தீப்போட ஃபர்ஸ்ட் வைஃப். நல்லா யோசி”-னு அழுத்தமா சொன்னா மதுரியா. “கொள்ளுக்கு வாயை திறக்கற குதிரை கடிவாளத்துக்கும் திறந்து தான் ஆகணும்-னு சொல்றே. கரெக்டா? அது இந்த குதிரைக்கு சம்மதம் ரியா”-னு சிரிச்சுட்டே சொல்லவும், அவளை ஓடிப் போய் அணைச்சுக்கிட்டா மதுரியா.. “நீ ரொம்ப நல்லவ டீ. தீப் ரொம்ப லக்கி”-னு உணர்வு பூர்வமா சொன்னா. “அடி அசடே!! தீப்பும் நல்லவர் தான். நீ எல்லாம் ஒரு நாத்தனாரா டீ?”-னு ரீனா சொல்லவும் ரெண்டுப் பேரும் சிரிச்சுட்டாங்க. “நானே பேசறேன் தீப்கிட்ட”-னு மதுரியா ஆரம்பிக்கவும், “அதெல்லாம் வேண்டாம். நானே கரெக்ட் பண்ணிக்கிறேன் நாத்தனாரே!! நீங்க வெறும்னே வேடிக்கை பாருங்க போதும்”-னு அவ கன்னத்துலே கையை வைச்சு முகத்தை குலுக்கினா. “செம்ம ஃபார்ம்லே இருக்கீங்க மதனியாரே.. நீங்களாச்சு உங்க ஆளாச்சு. எனக்கென்னப்பா”-னு சிரிச்சா மதுரியா.

ரீனாவுக்கு நந்தினி மேலே அவ்வளோ கோபம். கொஞ்சம் பொறாமை கூட. இப்படி ஒருத்திக்குப போயி ப்ரதீப்போட காதலான்னு யோசிச்சா. போராடியாச்சும் அவரோட காதலை வாங்கணும்-னு நினைச்சவளுக்கு தெரியலே ப்ரதீப் மனசுலே அவளால சலனம் ஏற்பட ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு-ணு. அன்னிக்கு ரெண்டு தோழிகளும் நிறைய பேசிட்டு வீட்டுக்கு போனாங்க. அதுக்கப்புறம் மதுரியாவுக்கு வீட்டுலே நேரம் ரெக்கை கட்டி பறந்துச்சு. ஆனந்தியா நிகேஷுக்கு சாப்பாடு ஊட்டும் போது, சித்தியும் பையனும் விளையாடினாங்க. “வாயைத் தான் ஒழுங்கா திறயேண்டா”-னு ஆனந்தியா அதட்டவும், “அக்கா! அவனை ஏன் மிரட்டறே. கொண்டா.. நானே என் நிகுவுக்கு ஊட்டிக்கிறேன்”-னு சித்தி அம்மாவை மிரட்டவும், சித்தி தோளை கட்டிக்கிட்டு “கீக்கீக்கீ”-னு சிரிச்சான் குழந்தை. “அடேய்… ரொம்ப வாலுத் தனம் பண்றே… அதுவும் உங்க அம்மாவுக்கேக் கோபம் வர்ற அளவுக்கு”-னு சிரிச்சான் பரத். “அவளுக்கு வயசாகுது பரத்தப்பா… அதுக்கு நிகு என்ன பண்ணுவான்?”-னு சொல்லவும் எல்லாரும் சிரிச்சாங்க. 

“எவ்வளோ நாளாகுது நீ இப்படி சிரிச்சு? நீ இருந்தா வீடே கலகலனு இருக்கு”-னு சொன்னாங்க கற்பகவல்லி. நிகேஷை வாஷ் பண்ண ஆனந்தியா தூக்கிட்டு போகவும் பாட்டி தோளை அணைச்சு, “டோண்ட் வொர்ரி வல்லி, ரெண்டு மாசம் தானே? அப்புறம் டிரெயினிங் இங்கே தானே?”-னு சொன்னா. சொல்லும் போதே பாட்டியோட இளைச்ச தேகம் வருத்தத்தை கொடுத்துச்சு. “நாளைக்கு என்னடா ப்ளான்?”-னு கேட்டார் நித்தியவாசன். ஒரு நிமிஷம் யோசிச்சவ, “உண்மையிலேயே எதுவும் பண்ண இஷ்டமில்லேப்பா.. ஆனா தீப், ரீனாகிட்ட ஷாப்பிங் வர்றேன்-னு சொல்லிட்டேன்.. வரலேன்னா நொய் நொய்-னு கத்துவாங்க… ஸோ… போயித்தான் ஆகணும்”-னு தோளை குலுக்கினா. “எப்படியும் வீட்டுலே தனியா போர் அடிக்கும்டா அப்பா அம்மா கூட செக்-அப்புக்குப் போறாங்க. சுபி,ராஜாராமன் வீட்டு வளைகாப்புக்குப் போறா. நாங்க மூணு பேர் வேலைக்கு”-னு சொன்னார் நித்தியவாசன். “செக் அப்புக்கு நானும் வர்றேன்”-னு சொன்னா மதுரியா. “ஏன்? எனக்கென்ன சீக்கா எல்லாரையும் கூட்டிட்டு போக?குட்டிம்மா… வீட்டுலே நீ ரியாவா இருந்தா போதும். டாக்டரா இருக்காதே”-னு அழுத்தமா சொன்னாங்க கற்பகவல்லி. “வெவ்வெவ்வே..”-னு பழிப்பு காட்டினா மதுரியா. எல்லாரும் சிரிக்கற அதே வேளையிலே ப்ரதீப்போட பீபியை ஏத்திட்டிருந்தா ரீனா.

“என்ன ரீனா.. திடீர்-னு போன்?”னு கேட்டான் ப்ரதீப். “ஏன் தீபு.. நான் போன் பண்ணக் கூடாதா?”-னு கேட்டா ரீனா. “ஏது தீபுவா? கால் மீ ப்ரதீப்”-னு வெடுக்னு சொன்னான். “அது மத்தவங்களை கூப்பிட சொல்லுங்க… இனிமேல் நீங்க எனக்கு எப்போவும் தீபு தான்”-னு கிண்டலா சொன்னா ரீனா. என்ன ஆச்சு இவளுக்குன்னு யோசிச்சு கிட்டே, “வாட்ஸ் ராங் வித் யூ? என்னென்னமோ பேசறீங்க?”-னு ஒரு மாதிரி கேட்டான். “இப்போ தான் சரியா பேசறேன்.. ஏன்னா நான் உங்களை விரும்பறேன்”-னு பட்-னு போட்டு உடைச்சா. “என்ன உளர்றே? நான் அப்படியெல்லாம் பழகவே இல்லை உன் கூட”-னு கோபமானான். “ஆனா நான் அப்படித்தான் பழகறேன் தீபு”-னு விடாம சொல்லவும், “நாளைக்கு நம்ம மீட் பண்ற இடத்துக்கு ஒன்பது மணிக்கு வாங்க… நேர்லே பேசலாம்”-னு கடுப்பா சொல்லி போனை கட் பண்ணிட்டான். சொல்ல தேவையில்லாம அவனுக்கு அன்னிக்கு ராத்திரி தூக்கம் போச்சு.

அடுத்த நாள் ஒன்பது மணிக்கு ப்ரதீப் சொன்ன எந்த சால்ஜாப்பையும் ரீனா காதுக் குடுத்துக் கூட கேட்கலே. முதல்லே வேறே பொண்ணை விரும்பறதா சொன்னான். அப்புறம் கல்யாணம் ஆயிடுச்சு-னு சொன்னான். உண்மை தெரிஞ்ச ரீனா அது எதையுமே காதுலே வாங்கவே இல்லை. “தீபு… ப்ளீஸ்… நான் உங்களை விரும்பறேன்.. நீங்க என்னை விரும்பணும்-னு கல்யாணம் பண்ணிக்கணும்-னு இப்போதைக்கு எனக்கு எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்லை.. டேக் யுவர் டைம்… நீங்களே அக்செப்ட் பண்ணுவீங்க.. அன்னிக்கு பேசிக்கலாம்”-னு சொன்னா ரீனா. “ஒரு வேளை மாறவே இல்லைன்னா?”-னு கேட்டான் ப்ரதீப். “மாற வேண்டாம் தீபு. என்னால இப்படியே காத்திருக்க முடியும்”-னு சொல்லவும், “நீ பேசறதோட அளவு உனக்கு புரிஞ்சு தான் பேசறியா? லூசு மாதிரி பேசாதே. ஏம் அல்ரெடி மேரீட்”-னு கோபமானான். “தீபு, நீங்க அல்ரெடி மேரீட், என் ஆசை லூசுத் தனம். நான் முட்டாள். ஆனா அதுல உங்களுக்கு என்ன கவலை? அப்படியே விட வேண்டியது தானே? நீங்க ஏன் கவலைப்படணும்? என் லைஃபை நானே பார்த்துக்கறேன்-னு தானே சொல்றேன்?”-னு கேட்டா. “நீ எனக்காக வெயிட் பண்றேன்-னு சொல்றே. என்னால என் ஃப்ரெண்டோட லைஃப் கெட வேண்டாம்-னு நினைக்கிறேன்”-னு கோபமா சொன்னான் ப்ரதீப். “சாரி ப்ரதீப்… நீங்க என்னை விரும்பலேன்னா கூட நான் உங்களை விரும்பறேன்.. விரும்புவேன். நீங்க என் மேலே கோபப்பட்டாலும் எனக்கு வலிக்காது”-னு அழுத்தமா பேசற ரீனாவை பார்த்து மலைச்சு போனான் ப்ரதீப். 

முதல் முறையா இவளை நான் ஏன் நந்தினியை பார்க்கறதுக்கு முன்னாடி பார்க்கலே-னு யோசிச்சான். ஆனா ரெண்டாம் தடவை காதலுக்கு இடம் குடுக்கறதா இல்லை. அவனை பொறுத்த வரை காதல் மேலே அவனுக்கு இப்போ நம்பிக்கையே கிடையாது. அதுலேயும் மதுரியாவோட கதையை கேட்டதுக்கு அப்புறம் அந்த எண்ணம் இன்னும் அதிகமாச்சு. ஆனா ரீனா இப்படி பேசறாளே-னு கவலையானான். அவன் ஏதோ சொல்ல வர்றதுக்குள்ளே, “ஹாய் கய்ஸ், எனக்கு முன்னாடியே வந்துட்டீங்களா?”-னு அவங்க இருந்த ரெஸ்டாரண்டுக்கு வந்தா மதுரியா. “ஏன் இவ்வளோ லேட்டு?”-னு கடுப்பா கேட்டான் ப்ரதீப். அவனுக்கு ரீனா மேலே இருந்த கடுப்பை மதுரியா மேலே காட்டினான். “லேட்டா? என்ன சொல்றே? பத்து மணிக்குத் தானே மீட் பண்றோம்-னு சொன்னோம்?”-னு கேட்டா மதுரியா. “ஆமா, நீ இப்போ ஷாப்பிங் பண்ணியே ஆகணுமா?”-னு சள்னு விழுந்தான். அவன் பிஹேவியர் விசித்திரமா இருக்கவும், ரீனாவை பார்த்தா. அவ கண்ணடிச்சா. ஓஹோ-னு மனசுலே நினைச்சு கண்டுக்காம விட்டா. “என்ன கிண்டலா? நானா வர்றேன்-னு சொன்னேன்? பாட்டிக்கு செக் அப் வேறே.. போங்க நான் கிளம்பறேன்”-னு விர்-னு கிளம்பவும், தலையிலே தட்டிட்டு, “சாரி… சாரி ரியாம்மா. நில்லு! ஏதோ டென்ஷன். ப்ளீஸ்… போகலாம் வா”-னு பின்னாடி போய் கெஞ்சி அவளை மலையிறக்கினான் ப்ரதீப். அதை செஞ்சுட்டு ரீனாவை முறைச்சான். அவ அதுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி எங்கேயோ பார்த்தா.

ஒரு வழியா ஷாப்பிங் போனாங்க… அந்த கூட்டத்துலே கடை கடையா ஏறி இறங்கினாங்க. மதுரியா வேகமா முன்னாடி போயி ரீனாவும் ப்ரதீப்பும் தனியா இருக்கறாப் போல சான்ஸ் கிடைச்சுது.  “ரியா, சேர்ந்து வந்துட்டு, நீ எங்கே தனியா போறே?”-னு கேட்டான் ப்ரதீப். “நீங்க ரெண்டுப் பேரும் ஊர்ந்து வர்றீங்க நத்தை மாதிரி”-னு தலையிலே அடிச்சுட்டு முன்னே போனா. “நேரம் தான்!! அம்மா புண்ணியவதி! நம்ம பஞ்சாயத்தை இப்போ அவளுக்கு தெரியப் படுத்தியே ஆகணுமா? அவ கூட போகக் கூடாதா?”-னு பிரதீப் ரீனாவைப் பார்த்து கோபமாவே கேட்கவும்,அன்னிக்கு கோட்டா போதும்-னு விட்டா ரீனா. ஒரு மாதிரி ஷாப்பிங் முடிச்சு, திரும்பி போக ஆட்டோ பிடிச்சா யார் எங்கே உட்கார்றது-னு திரும்ப ஒர் பஞ்சாயத்து. அது ஆட்டோ டிரைவரே சிரிக்கற அளவுக்கு, கடைசியிலே ப்ரதீப் நடுவிலேயும் ரெண்டு ஓரத்துலேயும் ரெண்டு பொண்ணுங்களும் உட்கார்ந்தாங்க. அப்புறம் கலகல-னு பேசிட்டே வந்தாங்க.

ஒரு கட்டத்துலே ஆட்டோ ஜீவா பார்க் பக்கத்திலே இருக்கற சிக்னல் பக்கம் நிற்கவும், ‘டக்’-னு மதுரியாவோட பேச்சு நின்னு போச்சு. கண்ணு நிலைக் குத்தி ஒரே இடத்துலே பார்த்துச்சு. இறுக்கி ப்ரதீப்போட கையை பிடிச்சுக்கிட்டா மதுரியா. கண்ணுலே தாரை தாரையா தண்ணி வழிஞ்சுது. பேச்சு நின்னு போன உடனேயே ரீனாவும் ப்ரதீப்பும் அவ எங்கே பார்க்கறான்னு பார்த்தாங்க. ப்ரதீப்புக்கு ஒண்ணும் புரியலே. ரீனாவுக்கும் அதிர்ச்சி. “ரியா.. என்னடி இது?”னு கேட்டா. ஆனா மதுரியா எதையும் யாரையும் உணர்ற நிலையிலே இல்லை. கண்ணுக்கு அந்த உருவம் மட்டும் தான் தெரிஞ்சுது. அந்த உருவமும் அவளை ஒரு முறை திரும்பி பார்த்துட்டு போயிடுச்சு. கொஞ்ச நேரத்துலே கிறுகிறு-னு வந்து ப்ரதீப் மேலேயே மயங்கி சாய்ஞ்சா மதுரியா.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top