அத்தியாயம் 29
“ஹேப்பி பேர்த் டே அக்ஷரன்”
ஶ்ரீஜா ஆர்ப்பாட்டமாகக் கத்திக் கொண்டு ஓடி வந்து அக்ஷரனை தாவி அணைக்கப் பார்கக அவசரமாக நான்கு அடிகள் பின்னால் நகர்ந்தவன் அவளை கை நீட்டித் தடுத்திருந்தான்.
நேத்ரா தான் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
“இன்னைக்கு இவரோட பொறந்த நாளா சொல்லவே இல்ல”
மனம் கனத்தது.
இவ்வளவு நேரமும் இருந்த இலகுத்தன்மை இலக்கின்றி ஓடிவிட மனம் பாரமாகியது என்னவோ உண்மை தான்.
“தேங்க்ஸ்”
இறுகிப் போன குரலில் ஶ்ரீஜாவிடம் கூறியவன் திரும்பி நேத்ராவைப் பார்த்தான்.
அவளது முகமே உணர்த்தியது அவளது கலக்கத்தின் அளவை.
“வா போகலாம்”
நேத்ராவைப் பார்த்து தலையசைத்துக் கூறியவன் அவளது கரத்தைப் பற்றிக் கொண்டு ஹோட்டலின் உள்ளே நுழையப் பார்க்க அங்கு அவர்கள் இருவரையும் பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஶ்ரீஜாவைப் பார்க்கும் போது நேத்ராவிற்கும் பாவமாக இருந்தது கணவன் பற்றியிருந்த தனது கரத்தை தனது மறுகரத்தால் எடுக்கப் பார்க்க அவனோ இன்னும் இறுகப் பிடித்து அவளை புருவம் சுருங்கப் பார்த்தான்.
“என்ன”
அவளது காதுக்கு மிக அருகில் குனிந்து அவன் வினவிட நிமிர்ந்து அவனையும் ஶ்ரீஜாவையும் தயக்கமாகப் பார்த்தவள்.
“இல்ல அவங்க பாக்குறாங்க”
மெதுவாக உள் இறங்கிய அவள் கூற இவனது புருவங்கள் இடுங்கியது.
“எவங்க பாக்குறாங்க”
அவன் புருவத்தை உயர்த்தி அழுத்தமான குரலில் கேட்ட விதத்தில் அவளது மறு கரம் தானாக இறங்கியது கீழே.
“உங்களோட காதலி”
திணறிய வார்த்தைகளை அவள் விட அவனது கரத்தினுள் அவள் கரம் சிறைப்பட்டு சிவந்துக் கன்றிப் போனது.
வலியில் அவளது முகம் சுருங்குவதைப் பார்த்தவன் கரத்தை சற்று தளர்வான பிடியிற்கு மாற்றினாலும் அவனது பிடியை மட்டும் தகர்த்தவே இல்லை.
“அவ என்னோட காதலின்னு நீ சொல்லி தான் எனக்கும் தெரியும் பாரேன்..”
அவன் போலியாக வியக்க இவள் தான் கலக்கமாகப் பார்த்தாள் அவனை.
“அப்போ ஒரு வேல பன்னுறேன்.. உன்ன கொண்டு போய் வீட்ல விட்டுட்டு வாரேன்..என்னோட காதலி கூட நா போறேன் என்ன ஓகேயா”
அவன் அவளிடமே தீர்வு காணுவதற்கு விட்டு விட
அவள் தான் பதில் கூற முடியாமல் அவனையேப் பார்த்தாள்.
அவனும் பதில் வேண்டி அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.
உண்மையாக அவனை விட்டுக் கொடுப்பவளாக இருந்தால் அடுத்த நொடி சரி எனக் கூறியிருப்பாளே ஆனால் அவளால் தான் அது முடியாமல் இருந்தது.
“இல்ல நேத்ரா அவர் சொல்லுறது சரி தானே.. ஶ்ரீஜாக்குத் தான் இந்த உரிமை இருக்கு நா அடுத்த வருஷம் இவர விட்டு பிரியனும்”
மனம் அது பாட்டுக்கு வழமை போல் நினைக்க வாய் வேறு ஒன்றை நினைத்து அதை செய்றபடுத்தியும் இருக்கிறது அல்லவா??
“உள்ள போலாம்”
அவள் ஏதோ ஒரு உந்தலில் கூற அவனது கண்களில் சிறு மின்வெட்டு ஒன்று மின்னி மறைந்ததை இம்முறை அவனவள் கண்டு கொண்டாளே..!!!
“குட்”
அவளை மெச்சுதலாகப் பார்த்தவன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் அவளும் அவனுடனே உள்ளே நுழைந்தாள்.
ஶ்ரீஜா தான் போகும் இருவரையும் விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அக்ஷரனைத் தயக்கமாகப் பார்த்தவள்,
“இன்னைக்கு உங்களுக்கு”
எனக் கூறும் போதே
உள்ளே நுழைந்து இருந்தனர் இருவரும்.
அங்கு குழுமியிருந்தவர்களை மிரட்சியாகப் பார்த்தாள் நேத்ரா.
கூற வந்ததும் மறந்து போனது.
அனைவரும் மேல்நாட்டு வர்க்கத்தினர் தான்.
இவர்கள் உள்ளே நுழையவும் ‘ஹேப்பி பேர்த் டே அக்ஷரன்’ எனக் கூறிக் கொண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அக்ஷரனை சூழ்ந்துக் கொண்டனர்.
இவள் அவனிடம் இருந்து சற்று விலகி அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.
அனைவரும் நுனிநாக்கு ஆங்கிலத்தில் அக்ஷரனோடு உரையாட இவள் தான் பிரம்மிப்பாக இருந்தது.
“இவங்க இவ்ளோ வசதியானவங்களா.. ”
என்றும் போல் இன்றும் கலக்கம் தான் மனதினில்.
“எங்க போன”
அவளுக்கு அருகில் அடுத்த நொடி வந்து நின்றான் அவளது கணவன்.
“ம்ஹும் இல்ல இங்க தான் இருந்தேன்”
அவள் கூற அவளுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தான் அக்ஷரன்.
“என்ன அக்ஷரன் உனக்காகத் தான் பார்ட்டி ரெடி பன்னியிருக்கோம் நீ என்னடான்னா ஓரமாகி நின்னிருக்க”
அவனது நண்பன் ஒருவன் வந்து அவனிடம் ஆதங்கப்பட,
“நோ டா நீங்க எல்லாரும் என்ஜாய் பன்னுங்க”
அவன் கூற அவனது நண்பனோ திரும்பி நேத்ராவை புன்னகையுடன் நோக்கி விட்டு அக்ஷரனைப் பார்த்து,
“என்னடா யாரு இவங்க”
அவளது நெற்றி வகுட்டில் வைக்கப்பட்டிருக்கும் குங்குமம் சற்று இடிக்க அக்ஷரனிடம் வினவினான் அவன்.
“இவ என்னோட வைஃப் நேத்ரா”
என்றும் போல் அறிமுகப்படுத்தினான் அவளது கணவன் அவள் கணவனது முகத்தையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனது முகம் என்றும் போல் தான் இருந்தது..!!
இவளை அறிமுகப்படுத்தும் போது அவனது முகத்தில் ஒரு நொடி தோன்றி மறையும் அந்த கர்வப் புன்னகை அவளது கவனத்தில் விழுந்தது.
“இவங்களுக்கும் என்னைய புடிக்குமா”
கேள்வி அபத்தமானது என மனம் இடித்துரைத்தாலும் ஏனோ அவ்வாறு நினைக்கத் தோன்றியது என்னவோ உண்மை தான்..!!
“ஓஹ்.. அப்போ எங்களுக்கு நீ டபள் ட்ரீட் கொடுக்கனும்”
அவனது நண்பன் நேத்ராவைப் பார்த்து புன்னகைத்து விட்டு நண்பனிடம் உரிமையாக வினவ, அக்ஷரன் புன்னகைத்தான் சிறிதாக இதழ் விரித்து.
அவள் கணவனது முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனது முகபாவனைகளை கவனிக்க ஆரம்பித்தாள் மனைவியாக,
அவனது அந்த நண்பன் மற்றையவர்களையும் அழைத்து அக்ஷரனது மனைவியை அறிமுகப்படுத்தி வைக்க அனைவரும் நேத்ராவைப் பார்த்து புன்னகைத்தனர் இவளும் பதில் புன்னகை செய்தாள்.
அக்ஷரன் என்றும் போல் அவளுக்கு மிக அருகில் நெருங்கி நின்றிருந்தான்.
அவனது நெருக்கத்தைப் பார்த்தவள்,
“நமக்கு பக்கத்துல வர விடமாட்டாங்க ஆனா அவங்க பக்கத்துல வந்து நெருங்கி நிக்குறாங்க”
அவள் யோசனையாக இருந்தாள்.
“என்ன யோசிக்குற”
அவளது பக்கம் குனிந்து அவன் கேட்டிட அவள் ஏதோ கூற வரவும், பாருடா ஸேர்க்கு இங்கயும் ரொமேன்ஸ் மூட் தான் போல”
ஒருவன் கத்திக் கூறி சிரிக்க மற்றவர்களும் சிரித்துக் கொண்டே அக்ஷரனைக் கலாய்க்க அவன் பின் தலையைக் கோதி அழகாகப் புன்னகைத்தான்.
ஆண்களது வெட்கமும் அலாதி அழகு தான் போலும்..!!
இதழுடன் சேர்ந்து அவனது விழிகளும் புன்னகைக்க கொள்ளையழகு தான் அவன்..!!
முதல் முறையாக நேத்ராவினது பார்வை சற்று வேறாக படிந்தது அக்ஷரனது மேல்..!
அவனது அழகை ரசித்திருக்கிறாள் தான்..ஆனால் இன்று என்னவோ அவன் மட்டும் தான் கண்களுக்கு அழகாகத் தெரிகிறான்..
“இவங்க அழகு தான்ல”
தன்னாலே அவள் நினைத்துக் கொள்ள,
“அழகா இருக்காங்களே அதான் நீ அவங்களுக்குப் பொருத்தமில்ல”
மனசாட்சி மீண்டும் முருங்கை மரம் ஏற வைக்கப் பார்க்கிறது வேதாலத்தை.
“எப்போ எங்களுக்கு ட்ரீட்”
அங்கிருந்தவர்கள் அக்ஷரனை நச்சரிக்க,.
“நெக்ஸ்ட் சன்டே எங்களோட ரிசப்ஷன் இருக்கு எல்லாரையும் இன்வைட் பன்னுவோம் கண்டிப்பா வந்துடுங்க”
அக்ஷரன் நேத்ராவைப் பார்த்துக் கொண்டுக் கூற நேத்ராவின் விழிகள் ஒரு நொடி மின்னியது.
“ஓஓஓ சூப்பர் சூப்பர் அத நம்ம முகத்த பார்த்து சொன்னா தான் என்னவாம்”
கூட்டத்தில் இருந்து குரல் வர மீண்டும் ஒரு சிரிப்பலை அங்கே.
“ஓகே ஓகே.. இப்போ கேக் கட் பன்னுவோம்”
ஒருவன் கூறி விட்டு அக்ஷரனை கேக் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல அவனோ நேத்ராவினது கரத்தையும் பற்றிக் கொண்டு தான் அங்கு சென்றான்.
அங்கு இருந்த பெரிய கேக்கை அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல அக்ஷரன் வெட்டினான்.
அவனுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த நேத்ரா அவனைப் பார்த்துக் கொண்டிருக்க கேக் துண்டை எடுத்தவன் அவளைப் பார்க்க அவளும் அவனைப் பார்த்துக் கொண்டே வாயைத் திறக்க அவனும் அவளுக்கு அந்த கேக் துண்டை ஊட்டி விட்டான்.
“ஓஓஓஓஓஹ்….”
சுற்றியிருந்தவர்களது ஆர்ப்பாட்டமான குரலில் அவன் லேசாக புன்னகைத்தான் என்றால், நேத்ரா வெட்கப்பட்டு புன்னகைத்து அவனுக்குப் பின்னால் மறைந்துக் கொண்டாள்.
அவ்வளவு அழகான அந்த காட்சியை அங்கிருந்த அக்ஷரனது நண்பன் ஒருவன் புகைப்படக் கருவியால் சேமித்துக் கொண்டான்.
“இப்போ நீங்க ஊட்டி விடுங்க”
அங்கிருந்தவர்கள் நேத்ராவிடம் கூற அவளும் ஒரு துண்டு கேக்கை எடுத்து அக்ஷரனது வாயிற்கு அருகில் கொண்டு போக அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டே அவளது கையில் இருந்த கேக் துண்டை சாப்பிட்டான்.
பின் அக்ஷரனது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அக்ஷரன் நேத்ராவை தனக்கு அருகிலே வைத்துக் கொண்டான்.
அவள் தண்ணீர் அருந்தச் சென்றாலும் அவளுடன் சென்று அவளுக்குத் தேவையானதை எடுத்துக் குடுப்பான்.
அங்கிருந்தவர்கள் கலர் கலரில் இருக்கும் மதுபானங்களை அருந்த அக்ஷரனது கைக்கும் மதுபான கிளாஸ் ஒன்று வழங்கப்பட அவன் அதைக் கையில் வைத்துக் கொண்டு அங்கிருந்தவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தான்.
நேத்ரா அவனது கையில் அந்த குவளையையும் அக்ஷரனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க அவளது பார்வையை உணர்ந்தவன் புருவம் உயர்த்தி என்னவென்று அவளிடம் வினவினான்.
அவளும் கண்களாலையே அந்த குவளையைக் காண்பித்து இடவலமாக தலையசைத்துக் குடிக்க வேண்டாம் எனக் கூற அவன் உதட்டைப் பிதுக்கி விட்டு உதட்டிற்கு அருகில் அந்த குவளையைக் கொண்டு சென்று நேத்ராவைப் பார்க்க கண்களாலையே இறைஞ்சிக் கொண்டிருந்தாள்.
ஒரு நொடி அவளது விழி பாவனையையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் மறுநொடி அந்த குவளையை அங்கிருந்த மேசையின் மேல் வைத்தான்.
அவன் அப்படி வைத்ததும் அவனைப் பார்த்து திருப்தியாகப் புன்னகைத்தவள் நெஞ்சில் கை வைத்து அவனைப் பார்த்தாள் அவனும் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது பார்வை என்றும் போல் அவளது உயிர் வரை ஊடுறுவிச் சென்று எதையையோ அவளுக்கு உணர்த்தப் பார்க்க அவன் உணர்த்த. முற்படும் செய்தி என்னவென்றுத் தெரியாமல் விழித்தாள் பேதை அவள்.
சிறிது நேரம் பார்ட்டியில் இருந்தவர்கள் இரவு உணவை உண்டு விட்டு அங்கிருந்துப் புறப்பட்டனர்.
காரில் வரும் போது இருந்த உணர்வை விட இன்னும் இலகுவாகத் தான் இருந்தது இவ்வுணர்வு.
அவனது முகத்தை தயக்கமாகப் பார்த்தவள்.
ஏதோ சொல்ல முற்படுவதை அவன் அறிந்த போதிலும் அவன் எதுவும் கேட்கவில்லை.
அமைதியாக காரை செலுத்த இவளும் வீட்டிற்குச் சென்று பேசுவோம் என அமைதியாகி விட்டாள்.
சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தனர்.
அவன் காரை பார்க் பன்னி விட்டு வரும் வரை அவள் நின்றிருக்க அவனும் வர இருவரும் சேர்ந்து சென்றனர்.
வீட்டினுள் நுழைந்ததும் அவன் அறைக்குள் நுழையப் போக இவளது குரலில் அறை வாசலில் நின்று அவளைக் கேள்வியாகப் பார்த்தான்
அவளும் அவனுக்கு அருகில் வந்து அவனை ஏறெடுத்துப் பார்த்து.
“மன்னிச்சிடுங்க..”
அவள் கூறவும் இவன் புருவம் சுருங்க அவளைப் பார்த்தான்.
“எதுக்கு”
“இல்ல உங்க பொறந்த நாளுன்னு எனக்குத் தெரியாது”
அவள் தயக்கமாகக் கூறினாள்.
“ஒஹ் அதுக்கா”
அவன் தலைசாய்த்துக் கேட்டிட,
“ஆமா”
“ம்ம் ஓகே அப்போ விஷ் பன்னலாம்.. இல்லன்னா கிஃப்ட் தரலாம்”
அவன் ஒரு மாதிரியான குரலில் கூறிட இவள் விழித்தாள்.
“கிஃப்ட்டா என்கிட்ட எதுவும் இல்லையே”.
அவள் பரிதாபமாகக் கூறிட அவளை குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டே
“ உன்கிட்ட இருக்கு”
“என்கிட்டையா என்ன இருக்கு”
“இருக்கு.. சொன்னா தருவியா என்ன”
அவன் இடப்புருவம் உயர்த்தி வினவ.
“கண்டிப்பா என்கிட்ட இருந்தா கொடுப்பேன்”
அவள் வாக்குக் கொடுத்தாள்.
அவளைப் பார்த்தவன்,
“நீ தான்”
அவன் கேட்டதும் இவள் விழித்தாள்.
“நானா”
அவள் அவனிடம் கேட்டாள்.
அவன் தலையை மேலும் கீழுமாக ஆட்டிட இவள் தான் புரியாமல் விழித்தாள்.
****
தொடரும்..❤
💜அஷு💜