மருத்துவமனையில் மருத்துவருக்காக காத்திருப்பது கூட நறுமுகைக்கு ஒரு வித அவஸ்தையாக இருந்தது…
மருத்துவரிடம் ஸ்பெஷல் அப்பாயின்மென்ட் வாங்கி இருந்தார்கள் .மருத்துவர் சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னமே வந்திருந்தனர் …
விக்ரம் கூட எவ்வளவோ சொல்லி பார்த்தான் ஆனால் நறுமுகை கேட்கவே இல்லை.. ஒவ்வொரு நொடியும் அவஸ்தையாக கடக்க.. விக்ரமோ அவளது இந்த தவிப்பை பார்த்துவிட்டு மனம் இளகி விட்டது…
அவளது கரங்களை இறுக்கமாய் பிடித்துக் கொண்டவன்,
“எதுக்கு இப்படி பதட்டமா இருக்க நறு..??? எல்லாமே நல்லதே நடக்கும் டென்ஷன் ஆகாம இரு ..”
அவனை பரிதவிப்புடன் பார்த்த நறுமுகை,
” இல்ல விக்ரம் இரண்டு வருஷமாகுது…ஆனா ஒரு முறை கூட எனக்கு நாள் கூட தள்ளி போகலையே.
ஒருவேளை இந்த படத்துல வர மாதிரி உங்களுக்கு குழந்தையை பெத்துக்க தகுதியில்ல.. உங்களுக்கு கர்ப்பப்பைல கேன்சர் ..கட்டி இருக்குன்னு ஏதாவது சொன்னாங்கன்னா..?” என்றதும் அவளது பேச்சில் கோபம் மூண்டது விக்ரமுக்கு…
கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவன் முயன்று தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவளை நிதானமாக ஏறிட்டு ,
“முட்டாள்தனமா பேசாத…நீயா ஒன்னை நெனச்சு அதுக்கு பயந்துகிட்டு இருக்காத.. தைரியமா இரு ..” என்றதும் ஏனோ கண்கள் மெல்ல கலங்கியது நறுமுகைக்கு..
அவனது தோளில் தலை சாய்த்துக் கொண்டவள்,
” தெரில விக்ரம் ..ரொம்ப பயமா இருக்கு… அம்மாவும் அடிக்கடி கேட்பாங்க நாள் தள்ளிப் போச்சா ஏதாவது விசேஷமானு..
நான் தான் ரொம்ப அலட்சியமா இருந்துட்டேன்…..அத்தை கேட்கும் போது கஷ்டமா இருக்கும்… ஆனா இப்ப யோசிச்சு பார்க்கும் போது அவங்க சொன்ன மாதிரி முன்னாடியே டாக்டரை பார்த்திருக்கலாமேன்னு தோணுது …
ஏதாவது பிரச்சனைனா அப்பவே டாக்டர்ஸ் சரி பண்ணி இருப்பாங்கல..?” என அவள் பங்கிற்கு குண்டினை போட.. தூக்கி வாரி போட்டது விக்ரமிற்க்கு…
ஏனெனில் அவன் இது போல் ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லை …
ஏதேனும் பிரச்சனை என்றால் உடல் அளவில் சின்னதாவாவது காட்டிக் கொடுக்குமே …ஆனால் நறுமுகைக்கு அப்படி ஏதும் வெளிகாட்டிடவே இல்லையே..
அவளது மாதவிடாய் கூட ஒரு மாதமும் தவறாது சரியாகத்தானே வந்திருக்கிறது..
அதனாலேயே அவனும் அசட்டையாக இருந்து விட்டான்… ஆனால் நறுமுகை இப்போது இவ்வாறு கூறியதும் அவனுமே சற்று தடுமாறித்தான் போனான் …
“கவலப்படாத நறு.. நம்பிக்கையோடு இரு.. எல்லாமே பாஸிட்டிவா தான் நடக்கும்..” என அவளுக்கு ஆறுதல் கூறினாலும் உள்ளுக்குள் ஏனோ ஒரு வித பயம் வந்தது..
தனக்கு ஏதேனும் குறை இருக்குமோ ..?…அதனால் தன்னோடு சேர்த்து தன்னவளது வாழ்வும் கேள்விக்குறியாகி விடுமோ என படப்படவென நெஞ்சம் அடித்துக்கொண்டது அவனுக்கு…
இன்னும் மருத்துவரை பார்க்கவே இல்லை… அதற்குள் ஆயிரத்தெட்டு கற்பனைகளை ஓட விட்டிருந்தனர் கணவனும் மனைவியும் சேர்ந்து..
மருத்துவர் அவர்களை அழைப்பதாக கூறிட இருவரும் கரங்களை இறுகக் கோர்த்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்…
அவர்களைப் பார்த்து புன்னகைத்த பெண் மருத்துவர் முதலில் நறுமுகையிடம் தான் கேள்விகளை ஆரம்பித்தார் …
அவர் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அவள் தெளிவாகவே பதில் அளித்தாள்…
பிறகு சில பல பரிசோதனைகளை எடுக்க வேண்டும் என்றதும் விக்ரமை பார்த்தவாரே செவிலியர் உடன் வெளியேறி விட்டிருந்தாள் நறுமுகை…
பிறகு விக்ரமிடமும் சில பல கேள்விகளை கேட்டார்.. அனைத்திற்கும் அவனும் தெளிவாகவே பதில் உரைத்தான்….
அவனுக்கும் சில பல பரிசோதனைகளை மேற்கொண்டிட செவிலியர் ஒருவர் அழைத்துச் சென்றார்..
அனைத்து பரிசோதனைகளும் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்டன..
நறுமுகை தான் பாவம் ஒரு வித பதற்றத்திலேயே இருந்தாள்…அவளை பார்த்து பரிதாபப்பட்ட செவிலியரும்,
” டென்ஷன் ஆகாம ரிலாக்ஸா இருங்கம்மா.. நீங்க டென்ஷனான அதுவே ரிசல்ட் நெகட்டிவா காட்டும் ..ரிலாக்ஸா இருங்க …” என்றதும் முயன்று தன்னை அமைதி படுத்த முயற்சித்தாள்..
இருவரும் அனைத்து பரிசோதனைகளையும் முடித்துவிட்டு வெளிவந்திட.. நறுமுகை மிகவும் சோர்ந்து போய் விட்டிருந்தாள்…
அவளது கரங்களை தாங்கிப் பிடித்த விக்ரமோ ,
“என்னடி..?” என பரிவாய் கேட்டிவும்,
” வலிக்குது விக்ரம்…” என்றதும் அவள் நிலை புரிந்து கொண்டவனவும் அவளை இருக்கையில் அமர வைத்து தண்ணீரை பருக கொடுத்தான்..
ஏனோ அதை குடிக்கும் போதே அவளது விழியிலிருந்து கண்ணீர் வழிந்திறங்கியது..
அதை கண்டதும் அழுத்தமாய் அதை துடைத்து விட்டவன் ,
“ப்ச்…இப்ப எதுக்கு அழுவுற ..?”
“தெரியல விக்ரம்… ஒரு வேலை எனக்கு குழந்தையே பொறக்காதுன்னு சொன்னா நீங்க என்னை விட்டு போயிடுவீங்களா விக்ரம்..” என கேட்கும் போதே அவளது விழிகளில் கண்ணீர் சரசரவென இறங்கியது…
அதை கண்டதும் மிகவும் வேதனை அடைந்த விக்ரம்,
“ப்ச்… இப்படி எல்லாம் பேசாத நறு… சரி இப்ப எனக்கு ஏதாவது பிரச்சனைன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ ..?” என்றதும் அவனை திகைப்புடன் பார்த்த நறுமுகையோ,
“அப்படி எல்லாம் எதுவும் இருக்காது.. நீங்க ஹெல்த்தியா தான் இருக்கீங்க..” என அவனது தோளில் சாய்ந்து கொண்டு விட விக்ரம் அவளது தலையை கோதியவாறு,
” கவலைப்படாத .. முதல்ல நம்ம சாப்பிட்டு வரலாம் ..” என அவர்கள் அங்கேயே இருக்கும் கேன்டினுக்கு சென்று சாப்பிட்டு வந்தனர் …
விக்ரம் கூட வெளியே செல்லலாம் என கூறி பார்த்தான். ..ஆனால் நறுமுகை தான் உடனே மருத்துவர் அழைத்தால் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் என இங்கேயே உண்ணலாம் என கூறிவிட்டு இருந்தமையால் மதிய உணவை அங்கேயே முடித்துவிட்டு பொறுமையாகவே வந்தனர்..
அவர்கள் வந்து இன்னும் அரை மணி நேரம் கழித்து தான் மருத்துவர் அவர்களை வர சொன்னார் …
உள்ளே வந்தவர்கள் இதயம் ஏகத்துக்கும் துடித்தது… தங்களது பதற்றத்தை வெளிக்காட்டி கொள்ளாது முயன்று இயல்பாய் முகத்தை வைத்துக் கொண்டவர்கள் இருக்கையில் அமர்ந்திட…
மருத்துவரும் இருவரையும் பார்த்து மென்மையாய் சிரித்தவர் விக்ரமை பார்த்துவிட்டு அவன் புறம் பார்வையை செலுத்தி,
” மிஸ்டர் விக்ரம் யூ ஆர் டோட்டலி ஆல்ட்ரைட்.. ஒரு பிரச்சனையும் இல்லை..” என்றதும் விக்ரமின் முகம் மலர்ந்தாலும் சட்டென தன்னவளுக்கு ஏதேனும் இருக்குமோ என்கிற பயம் வந்துவிட்டது …
அனிச்சையாய் அவன் தலை தன்னவளை பார்த்திட …அதே தான் நறுமுகைக்கும்..
தன்னவனுக்கு எதுவும் இல்லை என எண்ணி மகிழ்ந்தவளுக்கு ‘அப்போ தனக்குத்தான் குறை’ என பயத்தில் அவனை தலை திருப்பி பார்த்தாள்…
இப்போது நறுமுகையின் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்,
“ நறுமுகை பீரியட்ஸ் எல்லாமே நார்மலா வருதுன்னு சொன்னீங்கல…?”
“ஆ…மா…டாக்டர்…”
“ம்ம்ம்…”என்றவர் பெருமூச்சுடன் ரிப்போர்ட்டை அவளிடம் தராது அதை மெதுவாய் கீழே வைத்தவர்,
“உங்களுக்கு கர்ப்பப்பை பாதி தான் இருக்கு..” என அலுங்காது பேரிடியை அவள் தலையில் இறக்கி வைத்தார்…
கணவன் மனைவி இருவரும் அதிர்வுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்…
விக்ரம் தான் அவசரமாய்,
“பாதி கர்ப்பப்பை…..? புரியலை..”
“கர்ப்பப்பை பாதியா இருக்கிறதுனா இது உருவ அமைப்பில் உள்ள மாற்றம் என்பதால் வெளியே தெரியாது, ஆனால் கரு தங்குவதில் சிக்கல் ஏற்படும்…
இது பிறப்பிலேயே ஏற்படும் ஒரு குறைபாடு. இதில் இரண்டு ஃபலோபியன் குழாய்களுக்கு (Fallopian tubes) பதிலாக ஒன்று மட்டுமே இருக்கும், கர்ப்பப்பையும் வழக்கமான அளவில் பாதிதான் இருக்கும்.
இதனால் கரு உருவாவதில் தாமதம் ஏற்படலாம் அல்லது கரு தங்குவதற்கு இடம் போதாமல் போகலாம். இது ஒரு “High-risk pregnancy” பிரிவில் வரும்.…
ஸ்கேன் செய்து பார்த்தால் மட்டுமே இது தெரியும்…
பாதி கர்ப்பப்பை (Unicornuate Uterus) இருக்கும்போது மாதவிடாய் சரியாக வரும்.
ஏனென்றால், மாதவிடாய் என்பது ஹார்மோன் சுழற்சி மற்றும் கருப்பை உள்சுவர் சிதைந்து வெளியேறுவதைப் பொறுத்தது.
நறுமுகைக்கு ஒரு பக்கம் கருப்பையும், ஒரு சினைப்பயும் (Ovary) ஆரோக்கியமாக இருப்பதால், மாதவிடாய் சுழற்சியில் பொதுவாக எந்த மாற்றமும் தெரியாது.
ஸ்கேன் செய்து பார்த்தால் மட்டுமே இந்தப் பாதி இருக்கும் விஷயம் தெரியவரும்…
கர்ப்பப்பை சிறியதாக இருப்பதால், வளரும் கருவிற்கு போதிய இடவசதி இருக்காது. இதனால் ஆரம்ப மாதங்களிலேயே கருச்சிதைவு (Miscarriage) ஏற்பட வாய்ப்புகள் அதிகம்..
.
** prematurity (முன்கூட்டியே பிறத்தல்):** ஒன்பது மாதங்கள் வரை கருவைத் தாங்கும் சக்தி குறைவாக இருப்பதால், ஏழு அல்லது எட்டாம் மாதத்திலேயே குழந்தை பிறக்க (Preterm labor) வாய்ப்புள்ளது…
இடம் நெருக்கடியாக இருப்பதால் குழந்தையின் எடை குறைவாக இருக்கலாம் அல்லது குழந்தை தலைகீழாகத் திரும்பாமல் (Breech position) குறுக்காகவே இருக்கக்கூடும். இதனால் சிசேரியன் தேவைப்படலாம்.…
ஒரு குழாய் மட்டுமே செயல்படுவதால் கருத்தரிப்பதே தாமதமாகலாம்….”என விலாவரியாக விளக்கம் அளித்திட தொப்பென இருக்கையில் தன் முதுகை சாய்த்து இருந்தாள் நறுமுகை.…
அன்பான பெற்றோர்…மகிழ்ச்சியான பாதுகாப்பான வாழ்க்கை…படிப்பு…நல்ல உடை..இருப்பிடம்..நேர்மையான பாசமுள்ள கணவன்…அக்கறை எடுக்கும் மாமனார் மாமியார்…என கடவுள் அவளுக்கு அனைத்தையும் சிறப்பாக தந்து இருந்தார்…
திருஷ்டி பொட்டு வைப்பது போல் அவள் இத்தனை வருடங்களாய் அனுபவித்து வந்த மகிழ்ச்சிக்கு சேர்த்து மொத்த துன்பத்தையும் அவளது கருப்பையில் வைத்து விட்டார் கடவுள்…
பாவம் நறுமுகை இனி என்ன செய்வாளோ..???
பேரப்பிள்ளை ஆசையில் இருக்கும் இரு வீட்டாரின் பெற்றோரிடம் என்ன சொல்வது..??
அத்துடன் விக்ரம்…????…என்ன முடிவு எடுப்பான்…???அவனும் சாதாரண மனிதன் தானே.!
தன் வம்சம் விருத்தியடைய அனைவனுக்குமே ஆசை இருக்குமே…அவன் மட்டும் விதிவிலக்கா என்ன..???
பார்ப்போம்…