குடும்பத்தினர் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.. யாருக்கும் தெரிவிக்காமல் இருக்க முடியாது அல்லவா!..
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக சுகன்யா தான் கேட்டிருந்தார்.. நறுமுகையால் யாருக்கும் எதுவும் பதில் அளிக்க முடியவில்லை.. போதாத குறைக்கு அவளது அன்னையும் அந்நேரத்திற்கு அழைத்து கேட்டிட எதையும் மறைக்க முடியாது அனைத்தையும் கொட்டி விட்டு இருந்தாள்.. விளைவு அனைவரும் நறுமுகையை எண்ணி வேதனைப்பட்டனர்..
கணவன் மனைவி இருவருமே மிகவும் உடைந்து போயிருந்தனர் அந்த நேரத்தில்..
மருத்துவமனைக்கு செல்லும்போது இருந்த பதற்றம் எதுவும் தற்போது அவர்களிடத்தில் இல்லை.. முக்கியமாக நறுமுகை ஒருவித பரபரப்புடன் இருந்தாள் அல்லவா..அவை அனைத்தும் தற்போது துடைத்து எறிய பட்டு விட்டது..
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்த பின்னர் அவளது இதயம் தூள் தூளாக சிதறிப் போய் விட்டிருந்தது.. வாழ்வில் மிகப்பெரிய இடியை கடவுள் அவருக்கு தந்துவிட்டாரே!.. அதை தாங்கும் சக்தி அவளுக்கு இல்லாததால் உணர்வற்று தளர்ந்து போய் கிடந்தாள்..
தேசிங்கனுக்கு இந்த விடயம் பேரதிர்ச்சியாக இருந்தது.. எவ்வளவு நல்ல பெண் தன் மருமகள் என தன் மனைவியிடம் கூட மார்தட்டிக் கொண்டிருந்தாரே!..
தற்போது அவளுக்கா இப்படி ஒரு நிலை என எண்ணும் போதே மனம் வேதனையில் உழன்றது அவருக்கு..
அனைவரும் அவளுக்கு ஆறுதல் கூறினாலும் சமாதானம் செய்து கொள்ளும் விடயமா இது?..
வாழ்க்கையை கண்ணாடி பாத்திரம் போல உடைந்து முற்றிலும் சிதறி விட்டது போல எண்ணி அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள்..
அவள் நிலை இப்படி என்றால் விக்ரம் நிலை சொல்லில் அடங்காது ..
காதல் மனைவியை அவ்வாறு காண அவனது மனம் வலியில் துடிப்பது ஒரு புறம் இருந்தாலும்.. மறுபுறமோ தங்களுக்கு என குழந்தைக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என்ற பெரும்பயம் அவனுக்கு எழுந்தது..
எவ்வளவு ஆசையாக திருமணம் செய்து தங்களுக்கு என குழந்தைகள் என்று மகிழ்ச்சியான வாழ்வு தங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது என என்னவெல்லாம் கற்பனை குதிரைகளை ஓட விட்டிருப்பான்..
இப்போது தங்களது வாழ்வில் குழந்தைகள் என்பது கேள்விக்குறியாகும் போது அவனால் உண்மையை ஏற்றுக் கொள்ள சற்று கடினமாகவே இருந்தது..
நாட்கள் சென்றன.. அவரவர் அவரவர் வலியில் உழன்று கொண்டிருக்க.. தேசிங்கனுக்கு தான் மகனையும் மருமகளையும் இவ்வாறு பார்க்க மனமே வரவில்லை.. உடனே மகனுக்கு அழைத்து நேரடியாகவே பேசி விட்டிருந்தார்..
“இப்ப எதுக்குடா ரெண்டு பேரும் உலகமே கடலுக்குள்ள மூழ்கி போன மாதிரி இப்படி இருக்கிறீங்க ?” என்ன நேரடியாக கேட்ட தந்தையை நிமிர்ந்து பார்த்த தைரியம் இன்றி தலை குனிந்து இருந்தான் விக்ரம்..
மகனது ஓய்ந்து போன தோற்றம் அவருக்கு மனதில் வலியை தைத்தது.. மெல்ல அவனை நெருங்கி தோளில் கை வைத்தவர்,
“ ஆண்டவன் நமக்கு சந்தோஷத்தை மட்டுமே தந்திட மாட்டாங்க விக்ரம் .. அப்பப்ப இது மாதிரி கஷ்டத்தை காட்டுவாரு அப்பதான் நாம அவரை நினைப்போம்னு..” என்று விட்டு பெருமூச்சை விட்டவர் மேலும் தொடர்ந்தார் ,
“ இது மாதிரி இருக்குன்னு தெரிஞ்சு போச்சு.. இனி என்ன பண்ணலாம்னு யோசிங்க .. அதை விட்டுட்டு இப்படி ஆயிடுச்சுன்னு நீ ஒரு பக்கம் அவ ஒரு பக்கம் மூஞ்சை தொங்க போட்டுட்டு இருக்கறது நல்லாவா இருக்கு?” என சற்று காட்டமாக கேட்டதும் விலுக்கென்று தந்தையை நிமிர்ந்து பார்த்தான் விக்ரம்..
மென்மையாய் சிரித்த தேசிங்கன்,
“ எல்லாருக்கும் குழந்தை ஆசை இருக்க தான்டா செய்யும்.. சில பேருக்கு அது உடனே கிடைக்கும் பல பேருக்கு தள்ளி போகும்.. உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் ஆனா அதுக்கு கொஞ்சம் நீங்க கஷ்டப்படணும் அவ்வளவு தான்..
இப்ப என்ன அவளுக்கு ஹை ரிஸ்க் பிரக்னன்சி அதுக்காக குழந்தையே தங்காதுனு டாக்டர் சொல்லலையே.. ட்ரை பண்ணுங்க சப்போஸ் இயற்கையாக கரு தங்கலைன்னா வேற என்ன பண்ணலாம்னு டாக்டர் கிட்டயே கேளுங்க!” என்றதும் தந்தையின் வார்த்தைகள் அவனது ரணப்பட்ட மனதிற்கு ஒரு வித தைரியத்தையும் ஆறுதலையும் தந்தது..
விளைவு மீண்டும் மனையாளை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்றிருந்தான் விக்ரம்..
மருத்துவரும் இம்முறை தெளிவாக கூறிவிட்டிருந்தார் ,
“இயற்கை தங்கனும்னா இன்னும் நாள் ஆகலாம் ஏன் அடுத்த மாசம் கூட நிக்கலாம்.. எப்போனு சொல்லவே முடியாது..”
“ ஓகே டாக்டர் சப்போஸ் இயற்கையா தங்க லேட் ஆனா.. வேற ஏதாவது இருக்கா?” என தயக்கமாகவே கேட்டு பார்த்தான்..
“யா.. வேணும்னா நம்ம IVF ட்ரை பண்ணலாம்” என்றதும் சட்டென தன்னவனது கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்ட நறுமுகைக்கு உள்ளுக்குள் பயம் படர்ந்தது..
அவளது வெளிறிய முகத்தை கண்ட அப்பெண் மருத்துவர் மென்மையாய் அவளை பார்த்து புன்னகைத்து,
“ பயப்படாதீங்க நறுமுகை.. எடுத்ததும் உங்களுக்கு IVF பண்ணிட மாட்டோம் .. முதல்ல நாம இயற்கையாவே ட்ரை பண்ணலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல..
ரெண்டு வருஷம் தானே ஆகுது கல்யாணம் ஆகி.. நம்ம வெயிட் பண்ணுவோம்” என்றதும் சரியென வந்து விட்டனர் இருவரும்..
முன்பெல்லாம் இருவரும் இணையும் போது காதலும் மோகமும் ததும்பி வழியும்.. ஆனால் இப்போது கர்ப்பம் நிச்சயம் தங்கிட வேண்டும் என்கிற எண்ணத்துடனே கூட முயன்றனர்.. விளைவு கூடலில் இருவருக்கும் ஒரு வித செயற்கை தன்மை.. மனதில் வலிகளை வைத்துக்கொண்டு மனதார இருவராலும் கூடிட முடியவில்லை..
இருவருக்கும் மனதளவிலும் உடலளவிலும் ரண வேதனையாகி போனது தான் மிச்சம்.. நறுமுகை கண்ணீருடன் ஒருகளித்து படுத்ததும் அதை கண்ட விக்ரமிற்கு சுடுதண்ணீரை முகத்தில் கொட்டியது போல வேதனையில் துடித்துடித்தான்..
அவளை பின்னிருந்து அணைத்து,
“அழாத நறு.. பிளீஸ்..”
பக்கவாட்டாய் தலையை திருப்பி,
“ முடியில விக்ரம்.. என்னால உங்க கூட முதல் மாதிரி இணைய முடியல.. ஒரு மாதிரி பயமா பதட்டமா இருக்கு.. நான் என்ன பண்ணட்டும்..?” என அவனது மார்பில் முகம் புதைத்து கதறியவளது கண்ணீர் விக்ரமை அசைத்தது..
விளைவு குழந்தை வரும்போது வரட்டும் அதுவரை தன்னவளை காயப்படுத்திடக் கூடாது என மனதிற்குள் உறுதி எடுத்தான்..
இன்னும் இரு வருடங்கள் கடந்து சென்றன…. முன்பிருந்த துள்ளலும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அந்த வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது..
என்னதான் மனையாளை கஷ்டப்படுத்திடக் கூடாது என விக்ரம் பார்த்து பார்த்து அவளிடம் நடந்து கொண்டாலும் உள்ளுக்குள் குழைந்தைக்கான ஒரு வித ஏக்கம் அவனுக்கு இருக்கத்தான் செய்தது..
அவனுக்கு மட்டுமா? நறுமுகைக்குமே இயற்கையாக தனக்கு கரு தங்கிடாதா என்கிற பெரும் எதிர்பார்ப்பு அவளுள்..
ஆனால் அதன் ஏமாற்றத்தை தான் மாதம் தோறும் கடந்து வந்து கொண்டிருக்கிறாள்..
இம்முறை சுகன்யா விடவே இல்லை,
“ இன்னும் எத்தனை வருஷம் ஆகும் விக்ரம் ?” என்ற அன்னையின் கேள்வியில் சுருக் என்று தைத்தது விக்ரமிற்க்கு..
“ம்மா.. இப்படி கேட்டா என்ன அர்த்தம்?”
“நீ என்னை எப்படி வேணாலும் நினைச்சுக்கோ.. எங்களுக்கு நீ தான் ஒரே பையன்.. அதுக்காக நான் நறுமுகையே குறை சொல்லல..
அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குறதா சொன்ன டாக்டர் தான் ஐவிஎஃப் கூட ட்ரை பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க.. அதை ஏன் நீங்க ட்ரை பண்ண கூடாது..?” என்றதும் அன்னையின் பேச்சில் சற்று யோசிக்கலானான் விக்ரம்..
பாரி மற்றும் வளவனுக்கு கூட தங்கள் பிள்ளையின் வாழ்க்கையை எண்ணி மிகவும் வருத்தம் அடைந்து தான் போயினர்.. ராகினி ரோகிணி இருவரும் பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகின்றனர்..
அவர்களுக்குமே நறுமுகையை எண்ணி வருத்தம் அடைந்தனர்..
வித்யா தான் சுரதையிடம் கூட கூறியிருந்தார் ,
“ இப்போது எல்லாம் ஐவிஎஃப் பண்றது ரொம்ப ஈஸியா ஆயிடுது..பேசாம முகையிடம் பேசு”
என்றதும் யோசனையுடன் வித்யாவை பார்த்து சுரதை மகளை வீட்டிற்கு அழைத்திருந்தார்..
அவளுக்கும் மனமாற்றம் தேவை என்பதால் இரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்லலாம் என தாய் வீட்டிற்கு வந்திருந்தாள்..
அந்நேரம் கவிதாவும் வந்திருந்தாள் நறுமுகையை பார்ப்பதற்கு.. கவிதாவிற்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.. நறுமுகையின் விஷயத்தை கேள்விப்பட்டு அவளும் மிகவும் மனமடைந்து போய்விட்டாள்..
நீண்ட நாட்கள் கழித்து தோழிகள் இருவரும் சந்தித்துக் கொண்டதும் சில பல கதைகளை பேசிவிட்டு இறுதியில் நறுமுகையின் பேச்சுக்கு வந்தனர்..
“ டாக்டர் என்னதான் சொல்றாங்க முகை? “ என கேட்ட கவிதாவை பெரும் மூச்சுடன் பார்த்த நறுமுகை,
“ இயற்கையா தங்குவது கஷ்டம்னு சொல்லி இருக்காங்க கவிதா .. ஐவிஎஃப் பண்ணலாம்னு சொன்னாங்க பார்ப்போம்..”
“ பேசாம அதுக்கு ட்ரை பண்ணுடி.. நீ எதுக்கு பயந்துகிட்டு இருக்க?” என மென்மையாகவே கேட்டதும்,
“ தெரியலடி..ஐவிஎஃப்னா ஒரு மாதிரி பயமா இருக்கு கவிதா நினைச்சு பார்த்தாலே”
“லூசு மாதிரி பண்ணாத.. இப்பல்லாம் அதெல்லாம் ஈசியா ஆயிடுச்சு .. நீ முதல்ல ட்ரை பண்ணு .. ட்ரை பண்ணாம பயமா இருக்கு நினைச்சுகிட்டு இப்படியே இருக்காத..
இப்பவே நாலு வருஷம் ஆயிடுச்சு.. விக்ரம் அண்ணா ஏதாவது சொன்னாரா?” என தயக்கமாகவே கேட்டு வைத்தாள் கவிதா ..
மறுப்பாக தலையசைத்த நறுமுகை,
‘ அவர் என்னை கஷ்டமே படுத்தல கவிதா.. அது தான் எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு..
அவரை பார்க்க பார்க்க ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியா இருக்கு.. நான் மட்டும் அவர் லைஃப்ல வராம இருந்திருந்தா இந்நேரம் அவருக்கும் குழந்தைகள் வந்து இருப்பாங்க.. அவர் வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும்னு நினைக்க தோணுதுடி.. என்னால முடியல..” என பேசும் போதே கண்ணீர் வழிந்தது..
அதை அழுத்தமாய் துடைத்து விட்ட கவிதா ,
“இப்படி நீயே நினைச்சுக்காத.. அவர் உனக்கு சப்போர்ட்டிவா இருக்காருன்னா நீயும் அவருக்கு சப்போர்ட்டா இருக்கணும்.. அதை அதை விட்டுட்டு நான் இல்லனா அவர் சந்தோஷமா இருப்பார்னு நீயா ஒன்னை நினைச்சு அதை அவர்கிட்ட பேசிடாத.. நீ இப்படி பேசினா அது கண்டிப்பா தேவை இல்லாம பிரச்சனையாகும் .. அதனால இது மாதிரி எண்ணத்தை முதல்ல மூட்டை கட்டி குப்பைல தூக்கி போடு.. ரெண்டு பேரும் டாக்டர் கிட்ட போய் பேசுங்க ஐ வி எஃப் ட்ரை பண்ணுங்க புரிஞ்சுதா..?” என சிறுபிள்ளைக்கு சொல்வது போல சொல்லிக் கொண்டு இருந்தாள் கவிதா..
அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டவாறு உள்ளே வந்தனர் சுரதையும் வித்யாவும்,
“ நல்லா சொல்லும்மா நாங்களும் இதை பத்தி தான் இவகிட்ட பேசலாம்னு இருந்தோம்..
நல்லவேளை நீயே பேசிட்டே!..” என்றதும் கவிதா புன்னகையுடன் அவர்களை பார்த்தவள்,
“ கவலை படாதீங்க ஆன்ட்டி .. முகை கண்டிப்பா ஒத்துப்பா” என்றதும் முகைக்கு சிறு தைரியம் வந்தது..
தன் மாமியாரிடம் இம்முறை அவளே சென்று பேசினாள் ,
“அத்தை ஐவிஎஃப் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்” என்றதும் முகம் மலர மருமகளை கண்ட சுகன்யா ,
“ரொம்ப சந்தோஷம் முகை .. டாக்டர் கிட்ட போய் பேசுங்க கண்டிப்பா இந்த முறை உங்களுக்கு குழந்தை தங்கிடும்!” என மகிழ்ச்சியாக கூறியதும் அந்த மகிழ்ச்சி நறுமுகையின் முகத்திலும் படர்ந்தது..
நேரே சென்று விடயத்தை தன்னவனிடமும் உரைத்திட.. கேட்ட விக்ரம் ,
“நறு.. அது.. இந்த பிராசஸ் கொஞ்சம் வலியா இருக்கும்.. ஈசி கிடையாது நறு.. உனக்கு கஷ்டமா இருக்கும்டீ..” என தன்னவளுக்கு எடுத்து கூறினான்..
கேட்ட முகை அசரவில்லை ,
“பாத்துக்கலாம் விக்ரம்.. எதுமே பண்ணாம இருக்கறதுக்கு ஏதாச்சும் பண்ணி தான் பாக்கலாமே !” என்றதும் விக்ரம் அவளது பேச்சில் இருந்த உறுதியில் முழு மானதாக சம்மதம் தெரிவித்தான்…