விஷயம் கேள்விப்பட்டு அனைவருக்கும் மகிழ்ச்சியே.!
வளவன் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு விக்ரமிடம்,
” என் பொண்ணோட சந்தோஷத்தையும் நிம்மதியையும் தவிர வேறு எதுவும் எனக்கு கிடையாது…
அவளை சந்தோஷமா வெச்சிக்கனும் அது மட்டும் தான் எனக்கு தெரியும்…!” என்றதும் இத்தனை மாதங்களாய் மகள் இங்கு இருந்து விட்டு இப்போது புகுந்த வீட்டிற்கு சென்று விடுவாளோ என்கிற ஏக்கம் அவரது கண்களில் அப்பட்டமாக தெரிந்தது…
அதே தான் நறுமுகைக்கும்… இங்கே இருந்தால் தாயிடம் எதுவாக இருந்தாலும் வம்பிழுத்து கூட கேட்டு விடலாம் இத்தனை மாதங்கள் கழித்து புகுந்து விட்டிற்கு செல்வது தயக்கமாக இருந்தாலும் சுகன்யா விடம் வெளிப்படையாக ஏதேனும் கேட்க முடியுமா என்பது பெரும் சந்தேகமே..!
இன்னும் விஷயம் தேசிங்கனுக்கும் சுகன்யாவிற்கும் தெரிவிக்கவில்லை …
“குழந்தை பிறக்கிற வரைக்கும் நறு இங்கேயே இருக்கட்டும் மாமா..!” என பளிச்சென்று கூறியதும் அப்போது தான் வளவன் முகத்தில் நிம்மதியே வந்தது …
நீண்ட நாட்களுக்கு பின்னர் அந்த வீட்டில் மகிழ்ச்சியின் சத்தம் கேட்டது…
அனைவரும் ஒன்றாகத்தான் அமர்ந்து உண்டனர்…நீண்ட நாட்களுக்கு பின்னர் வயிறார உணவு உண்டான் விக்ரம்…
பெரியவர்களுக்கும் மனதின் பாரம் இறங்கிய உணர்வு…
சிறிது நேரம் அனைவரும் பேசி இருந்து விட்டு அவரவர் அறூக்குச் சென்று விட்டனர்…
விக்ரம் நறுமுகையின் அறையில் தான் இருந்தான்.. அன்னைக்கு அழைத்து வீட்டிற்கு வரமாட்டேன் என்று மட்டும் கூறிவிட்டான்.. இன்னும் தன்னவள் கற்பவதியாக இருப்பதைப் பற்றி தெரிவிக்கவில்லை…
காலையில் நேரில் சென்று தெரிவித்துக் கொள்ளலாம் என வளவனிடம் கூறிவிட்டு இருந்தான்…
நறுமுகைக்கான மாத்திரைகளை அவளது கையில் தந்திட ..அதை வாயில் போட்டு நீர் அருந்தியவள் சாய்வாக அமர்ந்து கொண்டாள்…
அவளுக்கு அருகே நெருக்கமாய் அமர்ந்து கொண்டவன் அவளது தோளில் கை போட்டு தன் மனையாளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன்,
” இந்த நிமிஷத்துக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியுமா..?? இப்ப இதெல்லாம் நிஜமா நடக்கவும் நம்பவே முடியல நறு..” என உணர்ந்து கூறியவன் பாந்தமாய் அவளது வயிற்றில் தன் கரம் பதித்த அடுத்த கணம் நறுமுகையின் ஒட்டுமொத்த மேனியும் சிலிர்த்த அடங்கியது…
ஆசையாக அவளது வயிற்றை வருடியவன் பெண்ணவளது முகத்தை நிமிர்ந்து பார்த்திட.. நறுமுகையும் முகம் கொள்ளா புன்னகையுடன் தன்னவனை பார்த்தவள் மெல்ல தன் ஆடையை விலக்கினாள்…
அவளே அவனது கரம் பற்றி தன் வயிற்றின் மீது வைத்ததும் அழகாய் தாங்கிக் கொண்டவன் மெல்ல குனிந்து அவர்களது ஜீவன் இருக்கும் வயிற்றின் மேட்டில் அழுத்தமாய் முத்தமிட்டு ,
“உன்னால தான் அப்பாவும் அம்மாவும் இனி பிரியவே கூடாதுனு விதி இருக்கு போல.. எந்த குழந்தையால நாங்க பிரிஞ்சோமோ இப்ப அந்த குழந்தையால நாங்க திரும்ப ஒன்னு சேர்ந்து இருக்கோம்…
பத்திரமா எங்க கைக்கு வந்துரு….உனக்காக நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்…”என கரகரத்த குரலில் பேசியவனை கண் கலங்க பார்த்த நறு..அவன் கன்னத்தை தாங்கி,
“என்மேல கோபம் இல்லையா…?” என பயத்துடன் கேட்கவும் அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,
“எந்த காரணத்துக்காகவும் உன்னை விட்டு என்னால விலகி இருக்க முடியாது நறு…கோபப்பட தெம்பு இல்லடீ…போதும் எல்லாம்…ஐ லவ் யூ….மிஸ் யூ சோ மச்…” என மெல்லிய குரலில் தன்னை அவளுக்கு உணர்த்தியவன் அவளது கன்னம் பிடித்து இதழையும் ஆழமாக சேர்த்துக் கொண்டான்…
தன்னவனது மார்பில் நிம்மதியாய் துயில் கொள்ள இரு உயிர்களுக்கும் அந்த இரவு அழகாய் இருந்தது …
மறுநாள் வளவனும் விக்ரமும் தேசிங்கன் மற்றும் சுகன்யாவிடம் விஷயத்தை கூறிட சென்றனர்…
இருவரையும் ஆச்சரியம் பொங்க பார்த்த சுகன்யா தன் சம்பந்தியை வரவேற்று அமர வைத்தார்.. தேசிங்கனுக்கு வளவனே வீடு தேடி வந்திருக்கிறார் என்றால் ஏதோ விஷயம் இருக்கிறது என்று சட்டென பிடித்துக் கொண்டார் ..
விக்ரம் தன் கையோடு வாங்கி வந்திருந்த இனிப்பை முதலில் தாய்க்கும் அடுத்து தந்தைக்கும் தந்தவன்,
” நீங்க தாத்தா பாட்டி ஆகிட்டீங்க..!” என்றதும் சட்டென புறை ஏறிவிட்டது பெரியவர்கள் இருவருக்கும்…
“என்ன சொல்ற..??” என அதிர்ந்து போய் கேட்ட சுகன்யாவிடம் வளவன் ,
“முகை மாசமா இருக்கா..?” என்றதும் அதிர்ச்சி பொங்க,
” மாசமா இருக்காளா…??” என கேட்டவரிடம் சுருக்கமாக விஷயத்தை கூறினான் விக்ரம்…
கேட்ட அவர்களுக்கு இவ்வளவு விஷயத்தை தங்களிடம் மறைத்து விட்டார்களே என்கிற கோபம் இருந்தாலும் மகனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு விட்டு இனி அவனது வாழ்வு சிறப்பாக இருக்கட்டும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டனர் இருவரும்…
ஒற்றை மகன் அவன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனுக்கு பிடித்தது எல்லாம் பார்த்து பார்த்து செய்தனர்.. இந்த ஐந்து மாதங்களாய் அவன் சந்தோஷத்தை தொலைத்து… நிம்மதியை துடைத்து ..உறக்கத்தை விடுத்து நடைபிணமாய் திரிந்ததை கண்கூடாக பார்த்தாயிற்று..
இனி ஒரு முறை தங்களது மகனை அது போல் ஒரு நிலைமையில் பார்க்க அவர்களுக்கு சக்தியும் இல்லை தெம்பும் இல்லை …
மகனது கன்னங்களை தாங்கிக் கொண்ட சுகன்யா,
” முகை கூட இருக்கும் போது தான் நீ சந்தோஷமா இருப்பேனா நீ அவ கூடவே இரு விக்ரம்… இந்த அஞ்சு மாசம் எப்படி இருந்த நீ..?? நானும் உங்க அப்பாவும் ரொம்பவே கஷ்டப்பட்டோம் உன்னை பார்த்து…
இனியாவது உன் பொண்டாட்டி புள்ளை கூட சந்தோஷமா வாழனும்..!” என்றதும் அன்னையின் கரங்களைப் பிடித்துக் கொண்டவன் முகம் கொள்ளா புன்னகையுடன் ,
“கண்டிப்பா நாங்க சந்தோஷமா இருப்போம்மா…” என்றதும் பெரியவர்கள் உடனே நறுமுகையை காண வீட்டிற்கு வந்து விட்டனர்…
முகத்தில் சற்று பயத்துடனே இருந்தாள் நறுமுகை… விடயத்தை மறைத்ததற்கு நிச்சயம் மாமனாரும் மாமியாரும் தன்னிடம் கோபப்படுவார்கள் என எண்ணி இருந்தவளை வாரி அனைத்து கொண்ட சுகன்யாவின் செயலில் சற்று அதிர்ச்சியாகி தான் போனாள் நறுமுகை …
“இனி இது மாதிரி ஒரு கஷ்டத்தை விக்ரமுக்கு தந்துடாத முகே… நீ இல்லாம அவன் ரொம்பவே பட்டுட்டான்.. போதும் இனி இது மாதிரி ஒரு கஷ்டத்தை நீங்க ரெண்டு பேருமே படக்கூடாது…
குழந்தைங்கறது உங்களோட விருப்பம்.. உங்களோட உரிமை.. அதுல பெரியவங்க நாங்க தலையிட்டது ரொம்பவே தப்பு..
அது மட்டும் இல்லாம விக்ரம் கிட்ட கேட்காம விவாகரத்து நோட்டீஸ் அனுப்புனது எல்லாமே நான் தான்.. அவனுக்கு இந்த விஷயம் கூட தெரியாது …
என் பையனுக்கு குழந்தை வரணும்னு ரொம்பவே தப்பா நடந்துகிட்டேன் என்னை மன்னிச்சிடு முகை…
வெறும் குழந்தை மட்டும் விக்ரமோட சந்தோஷம் கிடையாது… இந்த நறுமுகையும் தான் விக்ரமோட சந்தோஷமே..!” என வெளிப்படையாக பேசியதும் தன் மாமியாரை கட்டி அணைத்து அழுது தீர்த்து விட்டாள் நறுமுகை…
அதன்பின் நாட்கள் அழகாய் சென்றது விக்ரமிற்க்கும் நறுமுகைக்கும்… தினமும் அவளை பார்த்துவிட்டு தான் கல்லூரிக்கு செல்வான்…
மாலை வந்ததும் அவளைப் பார்த்து விட்டு தான் மீண்டும் வீட்டிற்கு வருவான் …சுகன்யாவும் மதிய நேரம் மருமகளை வந்து பார்த்து விட்டு தான் செல்வார்…
தேசிங்கனும் வேலையில்லை என்றால் சுகன்யாவோடு கிளம்பி வந்து விடுவார் தங்களது மருமகளை காண்பதற்கு …
மாத பரிசோதனைக்கு விக்ரம் தான் தன்னவளை பத்திரமாய் அழைத்துச் சென்று வருவான்… ஏற்கனவே அவள் மீது அவனுக்கு கொள்ளை காதல் இருக்கும் ..இப்போது பிரிந்து இருந்த துயரத்தின் வழியாய் இன்னும் அவள் மீது காதல் கூடியதே தவிர குறையவில்லை …
ஏழாம் மாதத்திலேயே நறுமுகைக்கு வளைகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. அவளை அதிக நேரம் அமர வைக்கக்கூடாது என்பதால் வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிதாக வளைகாப்பு நடத்தி முடித்தனர்…
மென் புன்னகையுடன் பார்த்தவாறு அவளுக்கு பின்னே வந்து அமர்ந்தவன் அவள் கரங்களைப் பிடித்துக் கொண்டு வளையல்களை வருடியவாறு இருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தவள்,
“இன்னிக்கு அழகா இருந்தேனா..??”என மெல்லிய குரலில் கேட்டதும்,
” நீ எப்பவும் அழகுதான் நறு” என்றவன் அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்…
அதன் பின் சரியாக ஒன்பதாவது மாதத்தில் மருத்துவர் குறிப்பிட்ட நாளில் நறுமுகைக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது…
குழந்தையை முதலில் கையில் ஏந்தியது விக்ரம் தான்… அப்படியே விக்ரமின் அச்சு தான் குழந்தை…
தன் மகனை மெல்ல வருடியவனுக்கு இந்த உலகத்தையே வென்ற உணர்வு…
அதன் பின் பெரியவர்கள் மாறி மாறி தங்களது பேரனை தூக்கிக் கொஞ்சி தீர்த்தனர்…
மருத்துவமனையின் அமைதி அந்த அறைக்குள் ஒரு புனிதத்தை ஏற்றியிருந்தது…. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் நறுமுகை மெல்ல கண்களைத் திறந்தாள்….
அவளுக்கு அருகே அவளது கணவன் கண்களில் நீர் ததும்ப ஒரு சிறிய பொதியை கைகளில் ஏந்தி அவளையே ஆவலுடன் பார்த்தவாறு அமர்ந்து இருந்தான்…
நறுமுகையின் உடல் இன்னும் வலியின் சுவடுகளைக் கொண்டிருந்தாலும், அவளது பார்வையில் ஒரு புதிய ஒளி இருந்தது.…
விக்ரம் மெல்ல அந்தப் பொதியை தூக்கி அவளது மார்போடு அணைத்து வைத்தான்…
மென்மையான, இதமான அந்தச் சுவாசத்தை அவள் உணரும்போது, இத்தனை நாள் அவளது மனதில் இருந்த அத்தனை பயங்களும், குறைகளும் கரைந்து போனது…
அவள் மெல்லிய குரலில்,
“இது கனவா? நிஜமா” என கேட்க…சிவப்பேறிய விழிகளுடன் அவளது நெற்றியில் முத்தமிட்ட விக்ரம்,
“இல்லை நறு…, இது நாம இழந்ததா நினைச்ச நம்பிக்கையோட மறுபிறப்பு… நீ முழுமையானவ இல்லைனு நினைச்ச இடத்துல தான் நம்ம காதல் முழுமையான ஒரு உயிரைப் படைச்சிருக்கு” என உணர்ச்சி பெருக்குடன் சொன்னதும் கண்களை இறுக மூடி திறந்த நறு தன்
குழந்தையின் விரலை தொட்டதும் தன் பிஞ்சுக்கைகளால் பற்றிக் கொண்டான்… அந்தத் தொடுதலில் அவள் ஒன்றை உணர்கிறாள்
தாய்மை என்பது வெறும் உடலால் உருவாவது மட்டுமல்ல, அது ஆன்மாவால் உணரப்படுவது. …
மருத்துவ உலகம் ‘இயலாதது’ என்று சொன்ன அந்த இடத்தில், காதல் மற்றும் பொறுமையின் மூலம் ஒரு அதிசயம் மலர்ந்திருக்கிறது.…
வெளியே ஜன்னல் வழியாகப் பார்க்கும் போது, சூரிய உதயத்தின் முதல் கதிர்கள் அந்த அறையை நிரப்பி நின்றன… இருள் நீங்கி, ஒளி பரவுவது போல, அவளது வாழ்வின் புதிய அத்தியாயம் அந்தப் பிஞ்சு முகத்தோடு தொடங்குகிறது.
அந்த அறையெங்கும் இருவரின் அமைதியான புன்னகையும், கண்ணீரும், சொல்லொணா மகிழ்ச்சியும் கலந்திருக்கிறது.…