அத்தியாயம் 8

நாட்கள் நகர்ந்தன… நறுமுகை தன் வேலைகளை அதீத கவனத்து செய்து கொண்டிருந்தாள்…

 

கல்லூரியும் விடுமுறை முடிந்து திறந்து விட்டிருந்தது… மாணவர்கள் அவரவர் கைடின் கீழ் தங்களது ப்ராஜெக்ட்டை செய்ய ஆரம்பித்து இருந்தனர்..

 

இந்நிலையில் தான்  பல்கலைகழகத்தில் பொங்கல் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது…

 

அனைவரும் அவரவர் லேபுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்திட, இங்கு கவிதாவும் நறுமுகையும் நன்றாக மாட்டிக் கொண்டனர்…

நாகராஜன் சாரே அவர்களிடம் வந்து லேபை சுத்தப்படுத்தி பொங்கல் விழாவிற்கான ஏற்பாடினை செய்யுமாறு கூறி விடவும் இருவரும் மாங்கு மாங்கு என்று வேலைகளை பார்க்க துவங்கினர் …

 

அவர்களை தவிர அனைவரும் பிஎச்டி செய்பவர்கள் என்பதால் அவரவர் அவர்களது வேலையை பார்த்துவிட்டு சென்றுவிட , வேறு வழி இல்லாத இருவரும் அவ்வளவு பெரிய லேபினை சுத்தம் செய்யலாயினர்…

 

யாரிடம் என்ன கேட்பது என்கிற தயக்கமும் வேறு அவர்களுக்கு, அதனால் ஒவ்வொன்றாய் அவர்களுக்கு தெரிந்த வகையில்  செய்திட, சாமுவேல்  தான் அவர்களிடம் ஒவ்வொரு வேலையாக கூறிக் கொண்டே இருந்தான்… 

 

விக்ரம் கூட அன்று நறுமுகைக்கு வேறு எந்த வேலையும் தந்திடவில்லை.. சுத்தம் செய்வதில் அவள் வேலையாக இருப்பதால் அவன் அவன் வேலையை பார்க்க சென்று விட்டான் …

சாமுவேலை கண்டதும் நறுமுகைக்கு தான் கோபம் கோபமாக வந்தது…இருந்தும் எதும் செய்ய முடியாத நிலை…

 

அனைத்தையும் சுத்தப்படுத்தி துடைத்து எடுப்பதற்குள் பெண்டு நிமிர்ந்து விட்டது பெண்கள் இருவருக்கும்… ஆறு மணி போல அலங்காரங்களை எல்லாம் முடித்துவிட்டு சோர்வுடன் கிளம்பி சென்றனர்…

 

கவிதாவும் நறுமுகையும் இறுதி வருடம் என்பதால் அனைவரும் நாளை புடவை தான் கட்டி வரவேண்டும் என வகுப்பு பெண்கள் அனைவரும் ஏற்கனவே முடிவு செய்தாயிற்று..

அதன்படி இரவே தனக்கு தேவையான அனைத்தையும்

எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள் நறுமுகை…

உடன் இருந்த சுரதை,

 

” இந்த வருஷம் தான் தனியா பொங்கல் கொண்டாடுவ,  அடுத்த வருஷம் தலை பொங்கலா இருக்கும் உனக்கு..”  என கண்ணில் கனவுடன் கூறியதும் புடவை எடுத்துக் கொண்டிருந்த நறுமுகை தன் அன்னையை முறைத்து பார்த்து,

 

” வேலையே இல்லை உனக்கு.. போம்மா அப்படி ..” என விரட்டி அடித்தாள்…

அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு மறுநாள் நன்றாக ஜாலியாக பொங்கலை கொண்டாட போகிறோம் என்கிற மகிழ்வுடன் உறக்கத்திற்கு சென்றாள்…

 

மறுநாள் சீக்கிரமே எழுந்து தலைக்கு குளித்து முடியை காயவிட்டவள் புடவையை பார்த்து பார்த்து கட்டி மிதமான அலங்காரம் செய்து புடவைக்கு ஏற்றவாறு சின்னதாய் மற்றவர் கண்ணை உருத்தாத வகையில் நெக்லஸ் ஒன்றையும் குட்டி ஜிமிக்கையும் அணிந்தவள் கை நிறைய வளையல்களை அணிந்து கொண்டாள்..

காலையில் செல்லும் போது வழியில் பூக்கடைக்காரர் இடமிருந்து பூவையும் வாங்கி வைத்துக் கொண்டவளுக்கு அப்போது தான் நிறைவாகவே இருந்தது …

வழக்கமாக செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தவளை அனைவரும் திரும்பி பார்த்திட நறுமுகைக்குத்தான் சற்று கூச்சமாகிவிட்டது… 

 

அவள் பெற்ற அன்னையே வீட்டில் இருந்து செல்வதற்கு முன்னர் ,

 

“இந்த புடவையில் ரொம்ப அழகா இருக்கடி ..ஒரே ஒரு போட்டோ எடுத்து கொடு பையன் வீட்டுக்காரங்களுக்கு இந்த போட்டோவை கொடுத்துடலாம் ..” என்ற அன்னையை ஏகத்துக்கும் முறைத்து வைத்துவிட்டு கிளம்பி வந்திருந்தாள்…

இப்போது அனைவரும் அவளை  அடிக்கடி தலை திருப்பி பார்க்கும் போது யாரையும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை நறுமுகை…

 

கல்லூரிக்கு வந்திட, ஜூனியர் மாணவர்களும் கூட பலர் புடவை கட்டி வந்திருந்தனர்.. அவளது வகுப்பு பெண்களும் புடவை கட்டிட நறுமுகையே புன்னகை முகமாக அவர்களை நோக்கி சென்றாள் ..

ஆண்கள் அனைவரும் வேட்டியில் தான் வந்திருந்தனர் …

 

அடர் நீல நிற மெல்லிய சரிகை வைத்த பட்டுப் புடவையில் அத்தனை அம்சமாக இருந்தாள் நறுமுகை…

கவிதா இளஞ்சிவப்பு நிறப்பட்டு புடவை கட்டி இருந்தாள்… அழகாய் இருந்தாள்.. அவளை சில கணம் பார்த்த நறுமுகை பின் கோலம் போட்டி ஆரம்பிக்கவும் அவர்கள் வகுப்பு சார்பாக அனைத்து பெண்களும் சேர்ந்து கோலத்தை போட துவங்கினர்..

ஆண்கள் கூட பலர் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.. அதில் விக்ரம் கூட அடக்கம் ..

 

விக்ரமும் நீல நிற முழுக்கையில் சட்டை அணிந்து இருந்தவன் அதை முட்டிவரை மடித்து விட்டு அதே நீல நிற கரை வைத்த வேட்டியை அணிந்திருந்தான் …

ஏற்கனவே கம்பீரமாக இருப்பவன், வேட்டி சட்டையில் இன்னும் கம்பீரமாய் தெரிந்தான்.. மீசையை வேறு சற்று அடர்த்தியாக விட்டு நுனியை கொஞ்சம் முறுக்கி விட்டு, முடியை சீராக வெட்டி பார்க்கவே லட்சணமாக இருப்பவனை பெண்களும் திரும்பி பார்த்து விட்டே சென்றனர்…

ஆனால் அவற்றையெல்லாம் அவன் கண்டு கொள்வதில்லையே..!

அவனுடைய லேபின் சார்பாக பிஎச்டி மாணவர்கள் சேர்ந்து கோலம் போட்டிட, அவனும் கலந்து கொண்டவன் அவனுக்கு தெரிந்த வகையில் கலரினை தரலானான்…

நறுமுகை வகுப்பு பெண்களும் கோலத்தை அவ்வளவு அழகாய் போட்டிருந்தனர்.. நறுமுகை தான் வரைந்து கொடுத்து இருந்தாள்…

அதுக்கு மேலே கோலப் பொடியை வைத்து பார்டர் போட்டுவிட்டு பின் பெண்கள் கொண்டு வந்திருந்த கல் உப்பில் கலர் பொடியினை கலந்து போட்டிட பார்க்கவே அவ்வளவு அழகாய் காட்சி அளித்தது …

அதற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாய் மாணவிகள் சிலர் பூக்களை வேறு பறித்து கொண்டு வந்திடவும் அவற்றையெல்லாம் சேர்த்து அலங்கரித்திட இன்னும் அழகாய் காட்சியளித்தது அவர்கள் போட்டிருந்த கோலம்..

அனைவருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை..

“ செமையா போட்டு இருக்கோம் டீ…”

 

” சூப்பரா இருக்கு..!”  என ஆளாளுக்கு தாங்கள் போட்ட கோலத்தை தாங்களே பெருமையாய் கூறிக் கொண்டனர்…

பின்னர் அனைவரும் மற்றவர் போட்ட கோலங்களை பார்க்க சென்றனர்… ஒவ்வொரு கோலமாய் பார்த்துக் கொண்டே வர, அப்போது கவிதா தான்,

 

“ஏய் முகை அங்க பாரு நம்ம  லேப் பிஎச்டி ஸ்டூடென்ஸ் போட்ட கோலம்… விக்ரம் சார் சாமுவேல் அண்ணா எல்லாம் போட்டு இருக்காங்க பாரு..”  என்றதும் நறுமுகையும் வேகமாக அவ்விடத்திற்கு வந்து பார்த்தாள்..

ஓரளவு நன்றாகத் தான் இருந்தது ..

விக்ரம் கோலத்தை பார்த்தவாறு இருந்திட அவனைப் பார்த்ததும் நறுமுகையே அவனருகே சென்று,

 

” ஹாப்பி பொங்கல் சார்..”  என கை நீட்டியதும் விக்ரமோ தன் கரத்தை பார்த்துவிட்டு அவளை பார்த்தவன் பின் தன் கரத்தை உயர்த்தி விரித்து காட்டி,

 

”  கையெல்லாம் கலர் கோலமாவு பரவால்லையா..?”  என்றதும் அவளும் அப்போது தான் அவனது கரத்தை பார்த்தாள்…

 

அவனது கோதுமை நிறத்திற்கு உள்ளங்கை நன்றாக பளீரென்று தெரிந்திட..அதில் சிவப்பு நிறக் கோல பொடி அவனது கரத்தில் நன்றாக அப்பியிருந்தது பளீச் என்று தெரிந்தது … 

 

அதில் திணறிய நறுமுகை மறுத்தால் நன்றாக இருக்காது என்பதால்,

 

” பரவால்ல சார்..”  என்றதும் அவனும் அவளது கரத்தை அழுத்தமாக பிடித்து,

 

” ஹாப்பி பொங்கல் நறுமுகை..!”  என்றதும் மென்மையாய் சிரித்து கரத்தினை விடுவித்துக் கொண்டாள் …

அச்சமயம் கோலங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்து இருந்தனர்…

 

விக்ரம் குழு போட்ட கோலத்தை புகைப்படம் எடுக்க வரும் போது அதற்கு வழி விட்ட நறுமுகை விக்ரமின் அருகே நிற்க வேண்டியதாயிற்று …

 

புகைப்படம் எடுக்கும் குழுவுடன் வந்த விக்ரமின் நண்பர்களும் அங்கு விக்ரமும் நறுமுகையும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து இருப்பதை பார்த்ததும் அவனுக்கே தெரியாமல் புகைப்படத்தை எடுத்துக் கொண்டுவிட்டார்கள்…

எதேர்ச்சையாக தலை உயர்த்திப் பார்த்த விக்ரம் நண்பனை கண்டதும் இரு புருவங்களை உயர்த்தி என்னவென கேட்டிட, அதற்கு அவனது நண்பர்களோ அவனுக்கு அருகில் நின்று இருந்த நறுமுகையை காட்டி இருவரது ஆடையும் கண்களால் ஜாடை காட்டி விழிகளால் ஊமை மொழி பேசி புருவங்களை உயர்த்தி ஆச்சரியப்படுவது போல் பாவனை காட்டியதும் விக்ரம் பார்வையாலே எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான் …

 

அது எதுவும் தெரியாத நறுமுகையோ தன் குழுக்களுடன் சேர்ந்து நின்று கொண்டாள் …

 

அதன்பின் ஒவ்வொரு போட்டியாய் ஆரம்பமாகியது.. முதலில் கயிறு இழுக்கும் போட்டி தான்…ஜூனியர்களும் சீனியர்களும் சேர்ந்து ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் நின்று இழுத்திட, அதில் பெண்கள் அணி வெற்றி பெற்றனர்..

அதன் பின்னர் பிஎச்டி மாணவர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி நடந்தது அதிலும் ஆண்களும்.. பெண்களுமாய் கலந்து கொண்டிட ,அதில் ஆண்கள் அணி தான் வெற்றி பெற்றனர்..

பிறகு அவர்களது டிபார்ட்மெண்டில் வேலை செய்யும் பேராசிரியர்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என அவர்கள் அனைவரும் சேர்ந்து கயிறு இழுத்திட,  அதிலும் ஆண்கள் குழு தான் வெற்றி பெற்றது ..

 

உறியடித்தல் போட்டியும் நடைபெற்றது ..பலர் அதில் கலந்து கொண்டனர்.. விக்ரம் கூட கலந்து கொண்டான் ..அதில் அவன் வெற்றியும் பெற்றுவிட, அவ்வளவு தான் நறுமுகைக்கு பெருமை  தாளவில்லை ..

 

“ஏய்ய்ய்…என்னோட கைட் தான் வின் பண்ணாரு…” என அனைவரிடம் சொல்லி சொல்லி கைதட்டி பெருமைப்பட்டுக் கொண்டாள் …

 

இறுதியாய் அவர்கள் டிபார்ட்மெண்ட் சார்பாக பெரிய பானையில் பொங்கல் வைக்கப்பட்டது…

அனைவரும் சூரிய பகவானை வணங்கி பொங்கலையும் வயிறார உண்டனர்…இப்படி அனைவரும் எவ்வித பாகுபாடின்றி சேர்ந்து சிரித்து  பேசி விளையாடியது மாணவர்களுக்கிடையே ஒருவித பிணைப்பை உண்டாக்கியது…

 

அதன் பின் மாணவர்கள் அனைவரும் மிகப்பெரிய ஹாலில் ஒன்று  சேர்ந்திட, அங்கு ஆசிரியர்களும் கூட முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்…அனைத்து பேராசிரியர்களும் வேட்டி சட்டை தான் அணிந்து இருந்தனர் …

இறுதியாய் நறுமுகையும் கவிதாவும் அந்த ஹாலேக்குள் நுழைந்திட,  அச்சமயம் மேடையில் இருந்த தலைமை ஆசிரியரும்,

 

” தமிழ் தாய் வாழ்த்து யாராவது பாட வாங்களேன்..?”  என அழைத்ததும் யாரும் எழுந்து வரவும் இல்லை …

பெண்கள் இருவரையும் கண்ட அங்கிருந்து பேராசிரியர் சிலர்,

 

“நீங்க போய் பாடுங்க.. சீக்கிரம் போங்க..”  என்றதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் பின் வேறு வழி இல்லாது மேடை ஏறினர்..

நறுமுகையோ கவிதாவிடம்,

 

” என்னடி யாருமே வரல..?” என கேட்டதும் கவிதாவும்,

 

” விடு  நம்மளை பாடிக்கலாம்..”  என்றதும் இருவரும் குரலை செறுமிக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தினை பாடலாயினர்..

அவ்வளவு மோசம் என்று இல்லை என்றாலும் ஓரளவு நன்றாகவே பாடினர்..

பாடி முடித்ததும் இருவரும் கீழ இறங்கி அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்…

 

அதன் பின்

தலைமை ஆசிரியர் பொங்கல் விழாவினை பற்றி

பேசியவர் பின்பு போட்டிகளில் ஜெயித்த அனைவருக்கும் பரிசுகளை தரலாயினர் ..

 

பொங்கல் விழா அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்திட, பலர் புகைப்படங்கள் நிறை எடுத்துக் கொண்டனர்… 

 

நறுமுகையும் கவிதாவும் அவசர அவசரமாய் தங்களது லேபிற்கு சென்றனர் ..அங்கு நாகராஜன் சாரை நடு நாயகமாக நிற்க வைத்து அங்கு பயிலும் அனைவரும் அவருடன் சேர்ந்து ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்..

 

அதன் பின் நாகராஜன் சாருடன் கவிதாவும் நறுமுகையும் கூட தனியாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்..

ஆங்காங்கே லேபுக்குள்ளேயே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, நாகராஜன் பெண்கள் இருவரையும் பார்த்து,

 

“நல்லா அலங்காரம் பண்ணி இருக்கீங்கம்மா…அழகா இருக்கு” என பாராட்டு பத்திரம் வாசிக்கவும் அவ்வளவு தான் பெண்கள் இருவருக்கும் மனசே நிறைந்து போனது.…

 

நேற்று வேலை பார்த்ததற்கு இன்று பேராசிரியரே நன்றாக இருக்கிறது என கூறியதும் மககழ்ச்சியாகி விட்டனர்…

பிறகு கவிதா தான்,

 

” வாடி சாமுவேல் விக்ரம் அண்ணா கூட நின்னு போட்டோ எடுத்துக்கலாம்..” என்றதும் நறுமுகையும் சரி என கூறிட, விக்ரமும் சாமுவேலும் அங்கு தான் நின்று இருந்தனர்…

 

கவிதா தான்,

 

” நீங்க ரெண்டு பேரும் வாங்களேன் நாங்க போட்டோ எடுத்துக்குறோம்..”  என்றதும் சாமுவேலும் விக்ரமும் ஒன்றாக நின்றுக்கொள்ள.. விக்ரம் அருகே நறுமுகையும், சாமுவேலுக்கு மறுபுறத்தில் கவிதாவும் நின்றவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்..

அதன் பின் அனைவரிடமும் விடை பெற்று வீட்டிற்கு செல்லவே நேரம் ஒன்பது மணி ஆகிவிட்டது… 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top