அத்தியாயம் 4:
விஸ்வா ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான கான்ஃப்ரன்ஸ் அறை பரபரப்பாக இருந்தது.
இந்த துறையின் இன்வெஸ்டர்களும் கூடி இருந்தனர்…
விஸ்வநாதன் இறப்பிற்குப் பின்னர், ஒரு சிலர் பங்குகளை பிரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டு இருந்தனர்…
அதற்குக் தான் இந்த திடீர் மீட்டிங்..
அனைவரும் அருகில் அமர்ந்து இருந்தவர்களிடம் முக்கியமான விஷயம் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்…
நிலா பரபரப்பாக இருந்தாள்..
மீட்டிங்கிற்கு எல்லாமே அவளைத் தான் சூப்பர் வைஸ் செய்யச் சொல்லி இருந்தான் ராகவன்..
எல்லாரும் வந்தவுடன் , அவனுக்கு அழைத்தாள்…
“ சார், எல்லாரும் வந்துட்டாங்க! என்றாள் ….
ம்ம், யெஸ் ஐயம் ரெடி.. இன்னும் 10 மின்ட்ஸ் ல மீட்டிங்க ஸ்டார்ட் பண்ணிடலாம் என்றான்…
ஓகே சார் என்று மீட்டிங் ஹாலின் வெளியே நின்று யாருடனோ ஃபோன் பேசிக் கொண்டு இருந்தாள்…
தான் அணிந்து இருந்த கோட்டை சரி செய்து கொண்டே வேகமாக மீட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்தான் ராகவன்…
அப்பொழுது தான் நிலா யாருடனோ ஃபோனில் சன்னமான குரிலில் பேசிக் கொண்டு இருந்தாள்…
அவளை தொலைத்து எடுக்கும் பார்வை பார்த்தவன்..
நிலா , என்று சத்தமாக அவளிடம் கத்தி அவளை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றான்..
ஓகே ஐ வில் கால் யூ லேட்டர் என்று ஃபோனை கட் செய்து விட்டு , வேகவேகமாக அவனின் பின்னாடியே சென்றாள்..
குட் மார்னிங் ஆல்..என்றான் கம்பீரமான குரலில்..
பிறகு , விஸ்வநாதன் இறப்புக்குப் வருத்தம் தெரிவித்து சிலர் பேசினார்கள்..
ராகவன் அந்த கம்பெனியின் புதிய CEO-வாகப் பொறுப்பேற்றதற்க்காக அங்கே இருந்த முதலீட்டாளர்களும், டைரக்டர்களும் அவனுக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் ராகவன் யாரையும் நம்பவில்லை; அவர்களின் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் போலித்தனத்தையும் துரோகத்தையும் கண்டுபிடிக்க அவர்களின் முகங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே பேசிக் கொண்டு இருந்தான்…
ஓகே , லெட் மீ கம் டூ த பாயிண்ட்,..
இப்போ எனக்கு ஒரு விஷயம் தெளிவா ஆகணும். ஏன் உங்களில் சிலர் திடீர்னு இந்த நிறுவனத்துல இருந்து உங்களோட ஷேர்ஸையெல்லாம் பிரிச்சுக்கிட்டு வெளியே போகப் பார்க்கறீங்க?”
அவன் கேட்ட கேள்வி, அரங்கத்திற்குள் ஒரு சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு அமர்ந்திருந்த போர்டு உறுப்பினர்களும், முதலீட்டாளர்களும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சில விநாடிகள் யாருமே பேசத் துணியாமல், தங்களுக்குள்ளேயே முணுமுணுப்பாகப் பேசத் தொடங்கினர். அந்த முணுமுணுப்பில் பயமும், தங்களின் திட்டம் அம்பலமாகிவிட்டதே என்ற தடுற்றமும் தெளிவாகத் தெரிந்தது.
சற்றே நீடித்த அந்தத் தயக்கத்தை உடைத்துக்கொண்டு, கூட்டத்திலிருந்து ஒருவர் மெதுவாக எழுந்து நின்றார்…
அவர் தன் தொண்டையைச் சரிசெய்துகொண்டு, நிதானமாகப் பேசத் தொடங்கினார், “ராகவன்… உங்க அப்பா விஸ்வநாதன் சார் திடீர்னு இறந்தது எங்களுக்கு உண்மையிலேயே பெரிய வருத்தம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை…”
அவர் ஒரு கண இடைவெளி விட்டு, ராகவனின் முகத்தைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்:
“ஆனா, கார்ப்பரேட் உலகத்துல உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை. அவர் மறைஞ்ச இந்த கொஞ்ச நாள்லயே கம்பெனியோட ரெண்டு பெரிய பிராஜெக்ட்ஸ் கேன்சல் ஆகியிருக்கு. சந்தையில நம்ம கம்பெனி மேல இருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியிருக்கு. இதை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டா, கூடிய சீக்கிரமே நாம எல்லாரும் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்!”
அவர் குரலில் இருந்த தயக்கம் மறைந்து, இப்போது ஒரு தெளிவான வியாபாரக் கணக்கு வெளிப்பட்டது.
“கம்பெனி மொத்தமா மூழ்கறதுக்கு முன்னாடி, எங்களோட முதலீட்டைக் காப்பாத்திக்க நாங்க நினைக்கறதுல என்ன தப்பு இருக்கு? அதுதான்… இப்பவே நாங்க கம்பெனியை விட்டு விலகலாம்ன்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்!”
அவர் சொல்லி முடித்ததும், அரங்கத்தில் இருந்த சிலர் அதை ஆமோதிப்பது போலத் தலையசைத்தனர்.
ராகவன் தன் புருவங்களை உயர்த்தி, அவர்களை அமைதியாகப் பார்த்தான். அவன் முகத்தில் எந்த அதிர்ச்சியும் தெரியவில்லை;
அவனது உதடுகளில் ஒரு ஆபத்தான புன்னகை அரும்பியது!..
அந்த மூத்த முதலீட்டாளர் பேசி முடித்ததும், அரங்கத்தில் நிலவிய பதற்றத்தை ராகவனின் ஒரு மெல்லிய சிரிப்பு சுக்குநூறாக உடைத்தது.
“நிலா… அந்த ரிப்போர்ட்டைக் கொண்டு வா!” ராகவனின் கம்பீரமான குரல் அங்கு எதிரொலித்தது.
மூலையில் நின்றுகொண்டிருந்த நிலா, சற்றும் தாமதிக்காமல் கையில் ஒரு கோப்புடன் விரைந்து வந்தாள். அதை ராகவனிடம் நீட்டிவிட்டு, மேடையின் அருகிலிருந்த புரொஜெக்டரை ஆன் செய்தாள்.
அரங்கின் பெரிய திரையில் அந்த கோப்பின் விவரங்கள் பளிச்சிட்டன. அதைப் பார்த்ததும், சற்றுமுன் கம்பெனியை விட்டு விலகத் துடித்த பலரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன!
கைவிட்டுப்போன அந்த இரண்டு பிராஜெக்ட்களை விட, பல மடங்கு அதிக லாபத்தையும், சர்வதேச அளவில் மிகப்பெரிய புகழையும் தரக்கூடிய மூன்று புதிய பிரம்மாண்டமான பிராஜெக்ட்களை ராகவன் ஏற்கெனவே கம்பெனிக்குக் கைப்பற்றியிருந்தான்!
திரையில் தெரிந்த திட்டங்களின் விவரங்களைச் சுட்டிக்காட்டி, ராகவன் பேசத் தொடங்கினான். அந்தப் புதிய பிராஜெக்ட்களின் அடி முதல் நுனி வரை , அதன் முதலீடு, எதிர்பார்க்கப்படும் லாபம், சந்தை வாய்ப்புகள் என ஒவ்வொன்றையும் மிகத் தெளிவாக அனைவரிடமும் கலந்தாலோசித்தான். அவனது அசாத்தியமான கூர்மையும், திறமையான கார்ப்பரேட் வியூகமும் அங்கிருந்த அத்தனை பேரையும் வாயடைக்கச் செய்தது.
ஆனால், அந்த கூட்டத்தில் இருந்த ஒருசிலரின் முகங்கள் மட்டும் சுருங்கின. ராகவன் கம்பெனியை வீழ்த்தி விடுவான், தங்களின் சதி பலிக்கும் என்று நம்பியிருந்த சில கருப்பு ஆடுகளுக்கு, அவனது இந்த அதிரடி வளர்ச்சி பேரிடியாக அமைந்தது. தங்களின் திட்டம் தோல்வியடைந்ததை எண்ணி அவர்களின் முகத்தில் எரிச்சலும், கலக்கமும் படர்ந்தன.
அனைவரின் முக பாவங்களையும் தனக்குள் குறித்துக்கொண்ட ராகவன், தனது இரண்டு கரங்களையும் மேஜை மீது ஊன்றி, முன்னோக்கி நகர்ந்தான். அவனது முகத்தில் வீரியமும், ஆபத்தான தீவிரமும் கொப்பளித்தது.
“இப்போ சொல்லுங்க…” அவனது குரலில் எள்ளலும் சவாலும் கலந்திருந்தது.
“யாரெல்லாம் இந்த கம்பெனியை விட்டுப் பிரிஞ்சு போகணும்னு நினைக்கிறீங்களோ… தாராளமா போகலாம்! The decision is in your hands!”
அரங்கமே அப்படியே உறைந்துபோய் நின்றது. ராகவன் வீசிய அந்த ஒற்றைச் சவாலில், அவனைக் கவிழ்க்க நினைத்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்!..
உடனே பரதன் படபடப்புடன் தன் இடத்திலிருந்து எழுந்து நின்றார்.
அவர் விஸ்வநாதனின் உயிர் நண்பர் மட்டுமல்ல; இந்த நிறுவனத்தின் மிக முக்கியப் பங்குதாரர்களில் ஒருவர் என்பதால், அரங்கத்திலிருந்த அனைவரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது.
“என்ன பேச்சு இது?” பரதனின் குரலில் கண்டிப்பும், அதே சமயம் ராகவன் மீதான பாசமும் கலந்திருந்தது. அங்கிருந்த முதலீட்டாளர்களை நோக்கித் திரும்பி, அவர் உரக்கப் பேசத் தொடங்கினார்:
“நம்ம பையன நாமே இப்படிச் சந்தேகப்பட்டா எப்படி நியாயமாகும்? விஸ்வநாதன் மறைஞ்ச அதிர்ச்சியில இருந்து அவன் இன்னும் மீண்டு கூட வரல. அதுக்குள்ள பொறுப்பை கையில் எடுத்துக்கிட்டு, இவ்வளவு பெரிய ஆபர்களைக் கம்பெனிக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கான்! திரையில பாருங்க… கைவிட்டுப்போன பிராஜெக்ட்களை விட இது எவ்வளவு பெரிய வாய்ப்புன்னு உங்களுக்கே புரியலையா?”
பரதனின் இந்த அதிரடியான பேச்சு, கம்பெனியை விட்டு விலக நினைத்தவர்களின் மனதை சலனப்படுத்தியது.
“இள ரத்தம்… ஆரம்பத்துல சில தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனா, அவன்கிட்ட விஸ்வநாதனோட ரத்தமும், திறமையும் அப்படியே இருக்குறதை இந்த பிராஜெக்ட்ஸ் நிரூபிச்சிருச்சு. நாம எல்லாரும் இந்த நேரத்துல ராகவனுக்கு உறுதுணையா நிற்காம, ஆளுக்கு ஒரு பக்கமா பிரிஞ்சு போறது ரொம்ப சுயநலம்!”
பரதன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அங்கிருந்த பலரின் மனசாட்சியைத் தட்டியது. பிரிந்து போக நினைத்தவர்கள் தங்களுக்குள் அமைதியாகத் தலையசைத்து, ராகவனுக்கு ஆதரவாக மாறத் தொடங்கினர். பரதனின் திறமையான பேச்சு, அந்தச் சூழலையே ராகவனுக்குச் சாதகமாக மாற்றி அமைத்தது.
ஆனால், இதையெல்லாம் மேடையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ராகவனின் மனதில் எந்த நெகிழ்ச்சியும் ஏற்படவில்லை...
ஏனெனில் அவன் யாரையும் நம்ப தயாராக இல்லை என்பதுவே உண்மை..
சற்றுமுன் கம்பெனியை விட்டு விலகத் துடித்தவர்கள், திரையில் தெரிந்த லாபகரமான அந்த மூன்று புதிய பிராஜெக்ட்களையும், ராகவனின் அசாத்தியமான கூர்மையையும் கண்டு வியந்து போயிருந்தனர். இனி இந்த கம்பெனியை விட்டு வெளியேறினால் தங்களுக்குத் தான் பேரடிலாபம் கைநழுவிப் போகும் என்பதை அவர்கள் சட்டென்று உணர்ந்து கொண்டனர்.
கூட்டத்திலிருந்த முக்கியப் பங்குதாரர் ஒருவர் மெதுவாக எழுந்து நின்று, “மன்னிச்சுடுங்க ராகவன்… நாங்க அவசரப்பட்டு ஒரு முடிவு எடுத்துட்டோம். உங்க அப்பாவுக்கு அப்புறம் இந்த கம்பெனியோட எதிர்காலம் என்னவாகுமோன்னு பயந்தது உண்மைதான். ஆனா, இந்த நியூ பிராஜெக்ட்ஸையும் உங்க விஷனையும் பார்த்த அப்புறம் எங்களுக்கு முழு நம்பிக்கை வந்துருச்சு!” என்றார்.
அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் தங்களின் கைகளை உயர்த்தி ஆமோதித்தனர்.
“ஆமா ராகவன்… நாங்க யாருமே இந்த கம்பெனியை விட்டுப் போகல. உங்க தலைமைக்குக் கீழ நாம எல்லாரும் சேர்ந்தே இந்த கம்பெனியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போவோம்!” என்று அனைவரும் ஏகமனதாக உறுதியளித்தனர்..
மீட்டிங் ஒருவழியாக சுமுகமாக முடிவடைந்ததும், வந்திருந்த விருந்தினர்களுக்காக அரங்கை ஒட்டியிருந்த உணவுக்கூடத்தில் பிரம்மாண்டமான விருந்து உபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
நிலா அதை கவனிக்கச் சென்று விட்டாள்…
அதற்குள் , சஞ்சீவன், பரதனும் , ராகவனுடன் பேச வந்தனர்..
விஸ்வநாதன் மறைந்ததை எங்களால் நம்பவே முடியவில்லை” என்று சஞ்சீவன் வருத்தப்பட்டார். பரதன் ராகவனின் தோளைத் தொட்டு,
“வீட்டில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்? விபத்துக்குப் பிறகு நாங்கள் யாரையும் பார்க்கவே இல்லையே, அவர்கள் எங்கே?” என்று விசாரித்தார்.
அதற்கு ராகவன், “குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது” என்று அமைதியாகப் பதிலளித்தான்..
பாரதனும் சஞ்சீவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ராகவனின் இந்த அதீத எச்சரிக்கை உணர்வில் உள்ள நியாயம் அவர்களுக்குப் புரிந்தது. கனத்த இதயத்தோடு அமைதியாகத் தலையசைத்தனர்.
வாங்க அங்கிள் சாப்பிடுங்க என்று அழைத்துச் சென்றான்..
அனைவரும் சுடச்சுட உணவுகளைத் தட்டில் எடுத்துக்கொண்டு, சிறு சிறு குழுக்களாக நின்று உரையாடியபடி சாப்பிடத் தொடங்கினர்.
வெளியே சிரிப்புச் சத்தங்களும், கட்லரிகளின் ஓசையும் மெலிதாகக் கேட்டுக் கொண்டிருந்தன.
ஆனால், ராகவனின் கவனம் உணவின் மீது இருக்கவில்லை. அவனது கண்கள் தந்திரமாக அந்த உணவுக்கூடத்தின் மூலைமுடுக்குகளை ஆராய்ந்தன.
அப்போதுதான் அவன் அந்தக்காட்சியைக் கண்டான்.
அரங்கத்தின் ஒரு பக்கத்தில், மற்றவர்களின் பார்வை படாதவாறு
நிலாவும், பரதனின் பி.ஏ- சதீஸ் ம் நின்று கொண்டிருந்தனர்.
இருவரின் கைகளிலும் உணவுத் தட்டுகள் இருந்தன. ஆனால், அவர்கள் சாப்பிடுவதை விடப் பேசுவதிலேயே தீவிரமாக இருந்தனர்.
திடீரென, சதீஸ் தன் பேகிலிருந்து இருந்து சிறிய, அழகாகப் பேக் செய்யப்பட்ட ஒரு பரிசுப் பெட்டியை வெளியே எடுத்தான்.
அதை யாருக்கும் தெரியாமல், மிக ரகசியமாக நிலாவிடம் நீட்டினான்.
நிலா அதைச் சற்றும் தயங்காமல் பெற்றுக்கொண்டாள்.
அதுமட்டுமன்றி, அவளது முகத்தில் ஒரு அழகான, திருப்திகரமான புன்னகை அரும்பியது.
அந்தப் பரிசைத் தன் கைப்பைக்குள் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டாள்.
தூரத்திலிருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ராகவனின் நரம்புகள் புடைத்தன. அவனது கண்கள் ஆபத்தான சிவப்பாக மாறின.