புன்னகையின் முகவரி

அத்தியாயம் 2:

சுபத்திரா , இராமநாதன் லஷ்மி அவர்களின் இரண்டாவது பெண் குழந்தை..

முதலில் ஒரு பெண் அவள் பவித்ரா..

திருமணமாகி  இரண்டு குழந்தைகளுடன் திருச்சியில் இருக்கிறாள்..

சுபா என்றாள் கொள்ளைப் பிரியம் அவளுக்கு..

அஷ்வின் அவன் வீட்டிற்கு மூத்த மகன்..

சுந்தரம், பார்வதியின் செல்ல மகன்..

அவனுக்குப் பிறகு, அவனுக்கு ஒரு தங்கை..

அவள் மிருதுளா, அவளுக்கும் திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகி இருக்கு, இப்பொழுது ஒரு வயதில் மகன் இருக்கிறான்…

சுபத்ராவுக்குக் குழந்தைகள் என்றால் உயிர். 

திருமணத்திற்கு முன் தெருவில் போகும் எந்தக் குழந்தையாக இருந்தாலும், தூக்கிக் கொஞ்சாமல் அவளால் கடக்க முடியாது. 

அவர்களுக்கு திருமணம் முடிவான பிறகு அவர்கள் அதிகம் பேசிக் கொண்டது, 

“நமக்குக் கல்யாணம் ஆனா, ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் மாதிரி நிறையக் குழந்தைகள் பெத்துக்கணும் அஷ்வின்” என்று 

அவள் அடிக்கடி இதைப் பற்றி தான் சொல்லிக் கொண்டிருப்பாள்.

அவளது அந்த ஆசையே, திருமணத்திற்குப் பின் அவளுக்கு ஒரு தீராத சாபமாக மாறும் என்று அவர்கள் இருவருமே நினைத்துப் பார்த்திருக்கவில்லை. 

திருமணமான முதல் இரண்டு வருடங்கள் அழகாக ஓடின. 

மூன்றாவது வருடத்திலிருந்துதான் சுற்றத்தாரின் கேள்விகள் தொடங்கின. “என்ன விசேஷம்?”, 

“விசேஷம் எதுவும் இல்லையா?” என்ற ஒற்றை வரி கேள்விகள் வர வர, மனதிற்குள் நொறுங்கிப் போனாள்…

காத்து இருக்கலாம் என்று அவர்களின் பேச்சு எடுபடவில்லை..

ஒவ்வொருவராக , ஏதேனும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்…

சரி என்று மருத்துவ பரிசோதனைகளும் எடுத்தனர்..

சுபத்ராவுக்குOligo-ovulation இருப்தால்  கருத்தரிக்க தாமதம் ஆகும் என்று கூறி விட்டார்கள்…

ஒலிகோ-ஓவுலேஷன் என்பது ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை சீரற்ற முறையில் அல்லது அரிதாக வெளிவரும் ஒரு நிலையாகும்.

அதனால் சுபத்திரா தம்பதியினர் அதற்க்காக ட்ரீட்மெண்ட் எடுக்கத் தொடங்கினர்..

மெல்ல மெல்ல கிளினிக், டெஸ்ட்டுகள், இன்ஜெக்ஷன்கள் என அவர்களின் வாழ்க்கையை ஒரு மெடிக்கல் ஃபைலுக்குள் சுருக்கிவிட்டன…

டென்ஷன் காரணமாக வேலையையும் விட்டு விட்டாள்…

கலகலவெனப் பேசிக் கொண்டிருந்த சுபத்ரா, இப்போது சுருங்கிப்போய்த் தன் கூட்டுக்குள் ஒண்டிக் கொண்டாள்…

இரவு சோஃபாவில் தூங்கியதால் அஸ்வினுக்கு கழுத்து வலித்து…

ஆபிஸ் செல்ல வேண்டுமே என்று தயாராக பெட்ரூமின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்..

சுபத்ரா ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 

அங்கிருக்கும் பார்க்கில் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்..

ஒரு சிறு குழந்தை தத்தித் தத்தி நடந்து விளையாடிக் கொண்டிருந்தது.அந்தக் குழந்தையை சுற்றி பெரிய குழந்தைகள் கை தட்டிக் கொண்டும், குதித்துக் கொண்டும் இருந்தனர்…அழகான காட்சி ஆனால் மனம் இரசிக்கவில்லை..

எப்போதும் போல் அவளுக்குள் ஒரு துள்ளல் எழவில்லை; மாறாக, நெஞ்சைக் குத்தும் ஒரு பாரம்தான் ஏறியது. சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டு, மெத்தையில் முகம் புதைத்து அமர்ந்தாள்.

அஷ்வின் மெதுவாக அவளருகே வந்து அமர்ந்தான். 

அவளது தோள்களைத் தொட்டபோது, அவை லேசாக நடுங்குவதை உணர்ந்தான்.

 மெடிக்கல் ரிப்போர்ட்டுகளும், அடுத்த வாரம் போக வேண்டிய ஹாஸ்பிட்டல் அப்பாயிண்ட்மென்ட்களும் டைனிங் டேபிளில் கிடக்க, அதை நினைத்து போது இருவருக்குள்ளும் ஒரு கனத்த மௌனம் நிலவியது.

“சுபி…” அஷ்வின் மெல்ல அழைத்தான்.

சுபத்ரா முகத்தை நிமிர்த்தியபோது அவளது கண்கள் கலங்கியிருந்தன. “ஏன் அஷ்வின்? எனக்கு மட்டும்‌இப்படி ? தெருவுல போற குழந்தைங்களை எல்லாம் தூக்கிக் கொஞ்சினவ… 

இப்போ எந்தக் குழந்தையாவது என் முன்னாடி வந்தா, எனக்குப் பாசம் வரல அஷ்வின்… பயம் வருது. மத்தவங்க என்னை ஒரு மாதிரி பார்க்குறாங்களோன்னு பயமா இருக்கு. எனக்கு ஒரு குழந்தை… நம்ம குழந்தை…” அதற்கு மேல் அவளால் பேச முடியாமல் அஷ்வினின் நெஞ்சில் சாய்ந்து தேம்பி அழுதாள்.

அஷ்வின் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவனது கண்கள் கலங்கினாலும், தன் குரலில் நடுக்கம் தெரியாமல் இருக்கப் போராடினான்.

“சுபி, என்னைப்பார்…” அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, கண்களை நேராகப் பார்த்தான். “எனக்கு உன்கிட்டே பிடிச்சதே , உன்னோட அந்தக் குறும்பு, கலகலப்பு, உன்னோட அந்த அன்புதான் என்னை உன்கிட்ட இழுத்துச்சு. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டது ஒரு குழந்தையை பெத்துக்கிறதுக்காக மட்டும் இல்ல சுபி… நாம ஒன்னா வாழணும், ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கணும்னுதான். இப்போ இந்த மெடிக்கல் டெஸ்ட்டும், மத்தவங்களோட கேள்விகளும் உன்னோட அந்த அழகான குணத்தையே மாத்திட்டு   இருக்கு. அதை என்னால பார்க்க முடியல.”

“ஆனா எல்லாரும் கேட்குறப்போ…”

“கேட்குறவங்க கேட்டுட்டேதான் இருப்பாங்க சுபி. 

அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை,” அஷ்வின் அவளது கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

 “டாக்டர்ஸ் என்ன வேணா சொல்லட்டும். நமக்குக் குழந்தை பொறந்தா சந்தோஷம்… 

ஒருவேளை இல்லைன்னாலும், எனக்கு நீ இருக்க, உனக்கு நான் இருக்கேன். அது போதாதா? நாம ரெண்டு பேரும் சேர்ந்திருக்கிறதுதான் நமக்கு வரம். மத்தபடி இந்த ரிப்போர்ட்டுகளோ, விசேஷம் இல்லாத வாழ்க்கையோ சாபம் கிடையாது.”

சுபத்ரா அவனது நெஞ்சின் சூட்டிலும், வார்த்தைகளின் உண்மையிலும் லேசாகத் தேறினாள். அவளது கண்ணீரைத் துடைத்துவிட்ட அஷ்வின், “உனக்குக் குழந்தைகள்னா உயிர் தானே? இந்த உலகத்துல அம்மா அப்பா இல்லாத எத்தனையோ குழந்தைகள் இருக்கு… நமக்கான குழந்தை எங்க இருந்தாலும் நம்மகிட்ட வந்து சேரும். அதுவரைக்கும், என் பழைய சுபத்ராவை எனக்குத் திருப்பிக் கொடு. நீ அழுதா என்னால தாங்க முடியல,” என்றான்.

அஷ்வினின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்ட சுபத்ராவுக்கு, இன்னும் வலி முழுமையாகப் போகவில்லை என்றாலும், அஷ்வினின் அன்பு அவளுக்குள் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்தது. இருவரும் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிக்கொண்டனர் ..

அஷ்வினின் வார்த்தைகள் சுபத்ராவின் நெஞ்சில் இருந்த பாரத்தை ஓரளவு இறக்கியிருந்தாலும், அவன் முகத்தில் படர்ந்திருந்த சோர்வும் கவலையும் அவளுக்குள் ஒரு புதிய உணர்வைத் தூண்டியது. இத்தனை நாட்களாகத் தன் துக்கத்திலேயே மூழ்கிக் கிடந்து, தனக்காகத் தன் கணவன் சுமக்கும் வலியை அவள் கவனிக்கத் தவறிவிட்டதை உணர்ந்தாள்.

அவளது கண்ணீரைத் துடைத்த அஷ்வின், அவளைத் தேற்றிவிட்டு மெல்ல எழுந்து ஜன்னல் பக்கம் போய் நின்றான். அவன் தோள்கள் லேசாகத் தொங்கியிருந்தன. எப்போதும் நம்பிக்கையோடு பேசும் அஷ்வினுக்குள் இருக்கும் ஏமாற்றமும், அவளைக் காக்க அவன் படும் பாடும் அவளுக்குப் புரிந்தது.

சுபத்ரா மெதுவாக எழுந்து அவனருகே சென்றாள். அவனது கையைப் பிடித்துத் திருப்பினாள். அவனது கண்கள் லேசாக சிவந்திருந்ததைக் கண்டவள், இந்த முறை அவனது முகத்தைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டாள்.

“அஷ்வின்… என்னை மன்னிச்சிடு,” சுபத்ராவின் குரல் இப்போது மென்மையாக, ஆனால் உறுதியாக இருந்தது.

அஷ்வின் ஆச்சரியமாகப் பார்த்தான். “ஏன் சுபி? நீ எதுக்கு மன்னிப்பு கேட்குற?”

“இத்தனை நாளா நான் எனக்காகவே அழுதுட்டு, உன்னை விட்டுட்டேன் அஷ்வின். வெளியில இருந்து வர்ற கேள்விகளை எல்லாம் நீதான் முன்னாடி நின்னு தாங்குற. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறது, நெகட்டிவ் ரிப்போர்ட் வர்றப்போ எல்லாம் உனக்குள்ளயும் ஒரு ஏமாற்றம் இருக்கும்ல? ஆனா, என் முன்னாடி நீ உடையக்கூடாதுன்னு உன்னோட வலியை நீயே தாங்கிட்டு  இருக்க. அதை நான் பார்க்காம போயிட்டேன்.”

அஷ்வின் அவளது கைகளைப் பற்றி, தன் தலையை அவளது கைகளில் சாய்த்துக் கொண்டான். அவனது கட்டுப்பாடும் மெல்ல உடைந்தது. “எனக்குக் குழந்தை இல்லைங்கிறதை விட, என் சுபி என்கூட சிரிச்சுப் பேசி எவ்ளோ நாள் ஆச்சுங்கிற வலிதான் பெருசா இருக்கு சுபி. என்னால உனக்கு இந்தச் சந்தோஷத்தைக் கொடுக்க முடியலையேன்னு…”

“இனி அப்படிச் சொல்லாத அஷ்வின்,” அவனது உதடுகளில் விரல் வைத்துத் தடுத்தாள். “நீ எனக்குக் கிடைச்சதுதான் என் வாழ்க்கையோட ஆகப் பெரிய விசேஷம். நீ சொன்னது சரிதான்… நமக்குன்னு ஒரு குழந்தை வந்தா சந்தோஷம். அப்படி வரலையா, நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் குழந்தையா வாழ்ந்துட்டுப் போவோம். இனிமே இந்த டெஸ்ட்டும், இன்ஜெக்ஷனும் வேண்டாம் 

அவள் லேசாகப் புன்னகைக்க முயன்றாள். அந்தப் புன்னகையில் பழைய சுபத்ராவின் சாயல் தெரிந்தது. “இனிமே நான் அழ மாட்டேன். மத்தவங்க கேள்வி கேட்டா, அவங்க முகத்துக்கு நேரா பதில் சொல்ல எனக்கும் தைரியம் இருக்கு. ஏன்னா, எனக்குப் பின்னாடி நீ இருக்க…

உனக்காக நான் கலகலப்பா, தைரியமா இருப்பேன்.”

அஷ்வின் அவளைத் தன் மார்போடு இறுக்க அணைத்துக் கொண்டான். இத்தனை நாட்களாக அவனுக்குள் இருந்த பாரம் எல்லாம் அவளது இந்த ஒரு சமாதானத்தில் கரைந்து போவது போல் இருந்தது..

ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்கும் அந்தப் பிணைப்பில், அவர்களின் காதல் இன்னும் ஆழமாக, இன்னும் அழுத்தமாக வேரூன்றியது…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top