புன்னகையின் முகவரி

அத்தியாயம் 1:

சென்னை நகரின் புகழ்பெற்ற அந்த ஃபெர்டிலிட்டி கிளினிக்கின் சுவர்கள் முழுக்க குழந்தைகளின் படங்கள் அழகாக மாட்டப்பட்டு இருந்தன. 

அது, அங்கே அமர்ந்திருப்பவர்களுக்கு அமைதியைத் தருவதறாக மாட்டி வைக்கப்பட்டு இருந்தது..  

ஆனால், சுபத்ராவுக்கு அது  மன அமைதியை தருவதற்கு மாற்றாக மன அழுத்தம் தருவது போல தவிப்பாக இருந்தது..

அவள் கைகள் தன் புடவைத் தலைப்பை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தன. 

கண்களை மூடி அமர்ந்து இருந்தாள்.. கடந்த மூன்று வருடங்களாக அவளது உடல் எதிர்கொண்ட ஊசிகள், ஹார்மோன் மாத்திரைகள், ஸ்கான்கள் என எல்லாமே மனக்கண்ணில் நிழலாடின.

சுபத்ராவுக்கு இப்போது முப்பது வயது. ஆனால்,  திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் ஆகி இருந்தது..

ஆனாலும் இந்த மூன்று வருடப் போராட்டம் அவளது முகத்தில் ஒரு முதிர்ச்சியையும், சொல்ல முடியாத சோர்வையும் ஏற்றியிருந்தது.

“சுபத்ரா… ரிலாக்ஸா இரு,” என்றான் அஷ்வின். 

அவளது கையின் மேல் தன் கையை வைத்தான். அவனது குரல் எப்போதும் போல நிதானமாக, கட்டுப்பாட்டுடன் இருந்தது. 

அவன் ஒரு ஐடி கம்பெனியின் ப்ராஜெக்ட் மேனேஜர். 

எதையும் திட்டமிட்டுச் செய்யப் பழகியவன். 

ஆனால், இந்த மருத்துவமனை அறையின் முடிவுகளை அவனால் ஒருபோதும் திட்டமிட முடியவில்லை.

சுபத்ரா அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்க முயன்றாள். ஆனால் அது கண்ணீராக உதிர்ந்தது.

கதவு திறந்தது. 

நர்ஸ் வெளியே வந்து கூப்பிட்டார். “சுபத்ரா… அஷ்வின்… டாக்டர் கூப்பிடுறாங்க.”

இருவரும் உள்ளே சென்றனர். டாக்டர் கவிதா தன் மேஜை மேல் இருந்த ரிப்போர்ட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

அவர்கள் உள்ளே நுழைந்ததும் ரிப்போர்ட்டை மூடி வைத்தார். அவரது முகத்தில் இருந்த அந்தப் பழகிப்போன அனுதாபப் புன்னகையே சுபத்ராவுக்கு பதிலைச் சொல்லிவிட்டது.

“ஸாரி அஷ்வின்… ஸாரி சுபத்ரா… இந்த முறையும் ‘நெகட்டிவ்’ தான். எம்பிரியோ இம்ப்ளான்ட்  ஆகல.”

அந்த அறையின் ஏசி சத்தம் திடீரெனப் பலமடங்காகக் கேட்டது போலிருந்தது சுபத்ராவுக்கு. 

அவள் காதுகள் அடைத்துக் கொண்டன. நெஞ்சுக்கூடு அடைப்பது போல ஒரு உணர்வு.

“டாக்டர்… நாங்க எல்லாமே கரெக்டா தானே ஃபாலோ பண்ணோம்? மெடிசின்ஸ், பெட் ரெஸ்ட் எல்லாமே…” அஷ்வினின் குரலில் லேசான நடுக்கம்.

“தெரியும் அஷ்வின். சுபத்ராவோட எஃபோர்ட் எனக்கு நல்லாத் தெரியும். 

ஆனா, மெடிக்கல் சயின்ஸ்ல சில விஷயங்கள் நம் கைமீறி இருக்கு. இது மூணாவது ஃபெயிலியர் என்கிறதுனால, சுபத்ராவோட உடம்புக்கும் மனசுக்கும் கொஞ்சம் கேப் தேவை. 

நீங்க ரெண்டு பேரும் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கோங்க,” என்றார் டாக்டர் கனிவோடு.

மறுவார்த்தை பேசாமல் சுபத்ரா எழுந்து வெளியே நடந்தாள்.

 கிளினிக்கில் இருந்து அடையாறில் இருக்கும் அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பு வரை நாற்பது நிமிடப் பயணம்.

சென்னை நகரின் மாலை நேரத்து டிராஃபிக் அலைமோதியது. காருக்குள் ஏசி ஓடிக் கொண்டிருந்தாலும், அவள் மனமும் , உடலும் ஒரு வித பதட்டத்தில் வியர்த்து இருந்தது..சுபத்ரா காரின் ஜன்னல் கண்ணாடியை ஒட்டி, வெளியையே பார்த்துக் கொண்டு வந்தாள். 

அஷ்வின் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு காரைச் செலுத்தினான்.

யாருமே பேசவில்லை. காருக்குள் இருந்த மௌனம் ஒரு பாறையைப் போல இருவர் நெஞ்சிலும் அழுத்திக் கொண்டிருந்தது.

டிராஃபிக் சிக்னலில் கார் நின்றது. ஜன்னலுக்கு வெளியே, ஒரு டூவீலரில் ஒரு தம்பதி போய்க் கொண்டிருந்தனர்.

 நடுவில் ஒரு சிறிய பெண் குழந்தை, தன் தந்தையின் தோள்களைப் பற்றிக் கொண்டு, ஏதோ பேசிக் குதூகலமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தத் தாய், குழந்தையின் தலையைக் கோதிவிட்டுக் கொண்டே கணவனிடம் ஏதோ பேசினாள்.

அதைப்பார்த்த சுபத்ராவின் நெஞ்சு சுளுக்கென்றது. 

தன் வயிற்றின் மேல் அறியாமல் கை வைத்தாள். “ஏன் எனக்கு மட்டும்?” என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது. 

தொண்டை வரை முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்க, அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

அஷ்வின் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. ‘பரவாயில்லை சுபத்ரா, அடுத்த முறை பார்த்துக்கலாம்’ என்று சொன்னால், அது அவளது வலியைக் குறைத்து மதிப்பிடுவது போலாகிவிடும். ‘நமக்குக் குழந்தை வேண்டாம்’ என்று சொன்னால், அது அவளது நம்பிக்கையை உடைப்பது போலாகிவிடும்.

அவன் தன் உணர்வுகளை எப்போதும் போல தனக்குள்ளேயே பூட்டி வைத்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும், சுபத்ரா நேராகத் தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். அழுகைக்கான அணை உடைந்தது. தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, சத்தமில்லாமல் கதறி அழுதாள்..

அவன் உள்ளே செல்லவில்லை…

அஷ்வின் ஹாலில் சோஃபாவில் அமர்ந்தான். வீட்டின் ஒவ்வொரு மூலையும் அவனுக்கு வெறுமையைக் காட்டியது. டைனிங் டேபிளில் இருந்த அவளது மருந்துப் பாட்டில்கள், நாட்காட்டியில் மார்க் செய்யப்பட்டிருந்த மருத்துவமனை தேதிகள்… எல்லாமே அவனுக்குப் பாரமாகத் தெரிந்தன.

அவன் தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டான். 

அவனது போன் அடித்தது. ஸ்கிரீனில் ‘அம்மா’ என்று காட்டியது.

அஷ்வின் போனை எடுத்தான். “ஹலோ, அம்மா…” என்று பேசுவதற்க்குள், 

“அஷ்வின்… ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தீங்களா? 

டாக்டர் என்ன சொன்னாங்க? இந்த வாட்டியாவது நல்ல செய்தி உண்டாப்பா?” அம்மாவின் குரலில் இருந்த ஆவலும் எதிர்பார்ப்பும் அஷ்வினின் நெஞ்சைக் குத்தியது.

அஷ்வின் ஒரு பெருமூச்சை விட்டு, சுபத்ராவின் அறைக் கதவைப் பார்த்தபடியே சொன்னான்… 

“இல்லம்மா… இந்த வாட்டியும் இல்லை.”

மறுமுனையில் அம்மா ஏதோ பேசத் தொடங்க, அஷ்வின் மெதுவாகச் சொன்னான்..

“அம்மா, சுபத்ரா ரொம்ப டயர்டா இருக்கா. நான் அப்புறம் கூப்பிடுறேன்,” என்று போனை வைத்தான்.

அவன் எழுந்து சுபத்ராவின் அறைக் கதவருகே வந்தான். உள்ளே இருந்து அவளது தேம்பல் சத்தம் மெலிதாகக் கேட்டது. கதவைத் தட்ட கையை ஓங்கியவன், அப்படியே நிறுத்தினான். அவளுக்கு இப்போது ஆறுதலை விட, தன் துக்கத்தைக் கொட்டித் தீர்க்கும் தனிமைதான் தேவை என்பதை அவன் உணர்ந்தான்.

அஷ்வின் சோஃபாவில் வந்து அமர்ந்து,  தன் வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். 

அவனுக்கும் அழ வேண்டும் போல இருந்தது, ஆனால் அவன் சுபத்ராவின் துணையாக நிற்க வேண்டியவன். 

அதனால் தன் கண்ணீரைத் தொண்டைக்குள்ளேயே விழுங்கிக் கொண்டான்.

அவர்களின் வாழ்க்கையின் மிக இருண்ட இரவு அப்போதுதான் தொடங்கியிருந்தது…

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை அவன் மனதில் வெறுமை..என்ன வாழ்க்கை இது என்று சலிப்பு…

சுபத்திராவிற்கு இவன் ஆறுதல் கூற!

அவனுக்கும் ஆறுதல் தேவை என்பதை யார் உணர்வார்கள்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top