நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் மனசு முழுவதும், ‘ஏன் நான் இப்படி நடந்துக் கொள்கிறேன்? அவனின் குணமறிந்து எனக்கு அவன் மீது காதல் வந்திருக்குமா? ஏன் என் மனம் அவன் அருகாமையை நாடுகிறது? உன்ன அவன் எவ்வளவு கேவலப்படுத்துகிறான்… உனக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லையா?’ என்றெல்லாம் தன்னை தானே திட்டியபடி தாறு மாறாக பல கோணங்களில் சிந்தித்தது. கடைசியாக தன் வாழ்க்கையில் அவன் நிரந்தரமானவனல்ல என்றும் விவாகரத்து பத்திரத்தில் கல்யாணம் முடிந்த அன்றே கையொப்பமிட்டதும் நினைவுவர அவளால் மனதை ஒருநிலை படுத்த முடிந்தது.
அவனுக்கோ அவள் தனது அருகாமையை விரும்பியதெல்லாம் பெரிய விடயமாக படவில்லை. ‘பத்தோடு பதினொன்று’ என்று நினைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் இனம்புரியாத சந்தோசம் தோன்றியது. பல பெண்கள் தன் பின்னால் சுற்றிய போது கூட வராத திருப்தி வைஷ்ணவி தன்னுடன் ஒன்றியதும் அவனுக்குள் உண்டானது. ஆனால் வலுக்கட்டாயமாக அனைத்தையும் ஒதுக்கி வைத்தவன் தனது வேலையில் மும்முரமாக ஈடுபட்டான்.
அடுத்த நாள் நேரத்துக்கு ஒத்திகையை ஆரம்பிக்கும் போது ஆத்ரேயன் வைஷ்ணவியிடம், “என்ன இன்றாவது ஆடலாமா? இல்ல நேற்றைய போல தானா ???” என்று நக்கலாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் வினவினான்.
“நான் ரெடி” என்றவள் மேடையில் போய் நின்றுவிட்டாள். “வெட்டி வீராப்பு” என்று அவன் சொன்னது அவளுக்கு தெளிவாக கேட்டது. உள்ளுக்குள் கூனி குறுகி போனாலும் வெளியில் அதனை காட்டாமல் நெஞ்சை நிமிர்த்தி நின்றாள்.
அவளருகில் வந்தவன் நேற்று போல இடையில் கை கொடுத்து இழுத்த போதும், கைகளிரண்டையும் கோர்த்த போதும், இரு உடல்களையும் முழுமையாக இணைத்த போதும், அவளிடத்தில் எந்த சலனமும் உருவாகவில்லை. இது அவனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியத்தையும் மறு பக்கம் மனதில் இனம் புரியாத வலியையும் கொடுத்தது. அப்போது தான் அவள் மனதின் உறுதி நிலையை பார்த்து ஒரு கணம் திகைத்து நின்றான். ‘எத்தனை நாளைக்கு என்று நானும் பார்க்கிறேன்’ என்று மனதுக்குள் யோசித்தவன் அழகான நடன அசைவுகளை கற்று கொடுத்தான்.
அவள் மனது தொடர்ந்து, ‘இவன் நிரந்தரமானவன் அல்ல’ என்று மட்டும் உச்சரித்துக் கொண்டிருந்தது.
இருவரும் சேர்ந்து நடனமாடியதை அவதானித்த ஆகாஷ் ஒரு வேளை இருவரும் காதலர்களாக இருப்பார்களோ என்று யோசித்தவன், ‘ச்சே ச்சே… நம்ம ஆள் ரசனை இவ்வளவு மட்டமா இருக்க சான்ஸ் இல்லை’ என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டான்.
யாரும் எதிர் பாராத விதமாக வைஷ்ணவி குனிந்து வளையும் போது அவள் தாலி வெளியே வந்து விழுந்தது. பாட்டோடும் நடனத்தோடும் ஒன்றியவள் அதனை கவனிக்கவில்லை. ஆத்ரேயனும் அதனை கவனிக்கவில்லை. நடனத்தை பார்த்துக் கொண்டிருந்த ஆத்ரேயனின் நண்பர்கள் கண்ணுக்கே அது முதலில் பட்டது.
ஒருவன் ஓடிச் சென்று பாடலை நிறுத்தியதும் மண்டபம் முழுதும் நிசப்தமாகியது. ஆடுவதை நிறுத்திய ஆத்ரேயன், “என்னடா ஆச்சு?” என்று கேட்டான்.
அவனின் நண்பனோ அதற்கு பதிலளிக்காமல் நேரே வைஷ்ணவி முன் சென்றவன் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான். ‘இவன் ஏன் நம்மள இப்படி பார்க்கிறான்?’ என்று நினைத்தவள் மண்டபத்தை நோக்கி பார்வையை செலுத்த அனைவரும் அவளை அதே போல பார்த்துக் கொண்டிருந்தனர். ‘என்னடா இது வம்பா போச்சு? ரொம்ப அழகா ஆடிட்டமோ ? இப்படி எல்லாரும் பார்க்கிறாங்களே.’ என்று யோசித்த படி ஆத்ரேயன் பக்கம் திரும்பியவள் அவனோ எல்லாருக்கும் மேலாக அதிர்ச்சியும் கலக்கமும் கலந்த முகத்துடன் நின்றான். ‘இவனுக்கு என்னாச்சு நல்லா தானே இருந்தான்… ஒரு வேளை நம்ம டிரஸ் எங்கயும் கிழிஞ்சிருக்கோ ?இப்படி பார்க்கிறாங்களே’ என்றபடி குனிந்தவளுக்கு மயக்கம் வராத குறை தான்.
உடனே சுதாரித்த ஆத்ரேயன் அருகில் வந்து அவளின் தாலியை தொட்டு தூக்கியவன், “உனக்கு கல்யாணம் ஆகிருச்சா? ஏன் எங்க கிட்ட சொல்லல?” என்று கேட்டான். அவன் முகம் அதிர்ச்சியை தவிர எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்க வில்லை. அவன் கேள்வியில் அதிர்ந்தவளுக்கு ‘இது உலக மகா நடிப்புடா சாமி’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
என்ன கூறுவது என்று முதலில் திகைத்தவள் பின் சுதாரித்து சந்தியாவிடம் கூறிய அனைத்து பொய்களையும் மீண்டும் ஒப்புவித்தாள். “அப்போ எங்களுக்கு ட்ரீட் இல்லையா ?” என்று அனைவரும் வினவினர்.
“ட்ரீட் ஆ?? இவ்வளவு பேருக்குமா ?” என்று வாயை பிளந்தவளிடம், “ஆமா இன்னைக்கு உன் செலவில் எல்லாருக்கும் ட்ரீட்” என்றான் ஆத்ரேயன் குறும்பு சிரிப்புடன். “என்கிட்டயேவாடா” என்ற அர்த்தத்தில் அவனை முறைத்தவள், “கண்டிப்பா வைக்கிறேன் அதுவும் என் புருஷன் செலவில்” என்றாள் அவனுக்கு போட்டியாக.
“எப்படியோ நீ வச்சா சரி” என்றவாறு எல்லாரும் கலைந்துச் சென்றார்கள். அவள் பதிலில் ஆடி போனது ஆத்ரேயன் தான்… அவளிடம் இருந்து தப்புவதற்காக மண்டபத்துக்கு பின்னால் உள்ள வெளியில் நின்று புகைத்துக் கொண்டிருந்தவன், ‘நம்மள இன்னைக்கு ஆண்டி ஆக்கிருவாளோ??’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவனை எல்லா இடமும் தேடியவள் கடைசியாக அங்கு வந்து சேர்ந்தாள். “எப்போ பாரு எங்கயாச்சும் நின்று சிகெரெட் பிடிக்க வேண்டியது.” என்று முணு முணுத்தபடி அவன் முன்னால் வந்து நின்றவளை பார்த்து, ‘காசை ஆட்டைய போட பிளான் பண்றாடா ஆத்ரேயா கொஞ்சம் உஷாரா இருடா’ என்று தனக்கு தானே அலர்ட் கொடுத்தவன், “என்ன வேணும்??” என்று சாதாரண குரலில் கேட்டான்.
“காசு வேணும்” என்று கையை நீட்டியவளிடம், “காசு இல்லை” என்றான். “அப்போ கிரெடிட் கார்டு கொடுங்க” என்று கேட்டாள். “கொண்டு வரலடி” என்றவன் புகைக்க தொடங்கினான். அவளுக்கோ கோபம் தலைக்கேறியது.
அவன் சிகரெட்டை பறித்து தூக்கி எறிந்தவள், “இப்போ காசு கொடுக்க முடியுமா முடியாதா??” என்று கேட்டாள். “இப்போ எதுக்குடி அத தூக்கி எறிஞ்ச ?” என்று கேட்டவனை அவள் முறைக்க, “உண்மையா இல்லடி…நம்புடி” என்றான்.
அவனுக்கு தெரியும் தெனாவெட்டாக முடியாது என்றால் மிரட்ட தொடங்குவாள் என்று. அதனால் தான் இல்லை என்றவாறே சமாளித்தான். “எங்கே பார்ப்போம் ” என்றபடி அவன் அருகே வந்தவள் முன்னாலிருந்து அவனை அணைத்தவாறே பின் பாக்கெட்டில் கை வைத்து பர்ஸை எடுக்க முயற்சி செய்தாள். “விடுடி… யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று அவளை தள்ளி விட்டவன்,
“நானே தரேன்” என்றபடி பர்சிலிருந்து கிரெடிட் கார்டை எடுத்து, “சரியான இம்சை டி நீ” என்றபடி அவள் கையில் வைத்தான். “அந்த பயம் இருக்கட்டும்” என்றபடி திரும்பியவளுக்கு தலையில் யாரோ குண்டை தூக்கி போட்டது போல இருந்தது. அவளின் திகைப்பை அறிந்து திரும்பிய ஆத்ரேயனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. அங்கு ஆகாஷ் கை கட்டியபடி இருவரையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
ஏற்கனவே ஆத்ரேயன் தெரியாத போல வைஷ்ணவியிடம் எல்லார் முன்னிலையிலும் கல்யாணத்தை பற்றி விசாரித்தது சந்தேகமாக இருக்க, ‘அதெப்படி மாமன் மகள் கல்யாணம் பண்ணினது தெரியாமலா இருக்கும்?? எதுக்கு இவன் ஓவர் பெர்போர்மன்ஸ் கொடுக்கணும்??? கல்யாணம் ஆன பொண்ணோட ஏன் அவ்வளவு கிளோஸ் ஆக நடனம் ஆடணும் ??’ என்று பல கேள்விகள் மூளையை துளைக்க அந்நேரம் பார்த்து வைஷ்ணவி தனியாக யாரையோ தேடியபடி மண்டபத்துக்கு பின்னால் செல்வதை கண்டு கொண்டான்.
பின்னால் வந்தவனுக்கு அவர்களின் உரையாடலில் இருந்து எல்லாம் புரிந்து விட்டது. ஆர்யனும் ஆத்ரேயனும் ஒருவனே என்று. அவனின் உறுத்த விழிப்பை சட்டை செய்யாமல், “மச்சான் நீ எங்கடா இங்க??” என்று கேட்டான் ஆத்ரேயன்.
“ஏன் நான் வந்தது புருஷன் பொண்டாட்டி கொஞ்சி விளையாட இடைஞ்சலாக இருக்குதா???” என்று கேட்க, ‘இனி இவனிடம் மறைக்க முடியாது’ என்று யோசித்தவன்,
“இங்க வா மச்சான்” என்று கூப்பிட்டுவிட்டு, “நீ போ” என்று வைஷ்ணவியிடம் சொல்ல ஆகாஷோ, “நீ இங்கேயே நில்லும்மா” என்றவன், “அவ இருக்கட்டும் நீ சொல்லு” என்றான்.
“என்னத்தடா சொல்லணும் ?? சொல்றதுக்கு பெரிசா ஒண்ணுமில்ல…அவ கழுத்துல இருக்கிற தாலி நான் தான் கட்டினேன். ஆனா எனக்கோ அவளுக்கோ இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை… அதனால மியூச்சுவல் டிவோர்ஸ் க்கு அப்ளை பண்றதுக்கு டிவோர்ஸ் பேப்பர்ஸ்லயும் சைன் பண்ணிட்டோம் அதனால தான் இத சொல்ல விரும்பல…. மேடமுக்கு தாலி சென்டிமென்ட் கொஞ்சம் ஜாஸ்தி… தாலியை கழட்டமாட்டேன்னு சொல்லிட்டா” என்று சர்வசாதாரணமாக சொல்லி முடித்தான்.
“டேய் ஒரு நளைக்கு ஒரு இடி போதும்டா… நீ என்ன இவ்வளவு ஷாக்கிங் நியூஸ் சொல்லுற ?? கல்யாணம் முடிஞ்ச அதிர்ச்சியிலிருந்தே நான் வெளி வரல அதுக்குள்ள டிவோர்ஸ் ஆ?” என்று கேட்டவனிடம்
ஒரு புன்னகையுடன், “இந்த பஜாரியோட மனுஷன் வாழ்வானா ???” என்று கண்ணடித்து கேட்டான்.
அவனின் பேச்சில் கோபமடைந்தவள், “அதுக்கு நீ முதல் மனுஷனா இருக்கணுமே ??” என்று பதிலால் அடித்தாள். “என்னடி வாய் நீளுது??” என்று முறுக்கிக் கொண்டு அவளருகில் போனவன், “ஆகாஷ் அண்ணனுக்கு தெரிந்தது இப்போ எல்லாருக்கும் தெரியவரும்” என்றபடி வெளியில் கிடந்த தாலியை தூக்கி காட்டினாள். மிரட்டலில் வாயை கப் என்று மூடிக் கொண்ட ஆத்ரேயனை ஆச்சரியமாக பார்த்த ஆகாஷ், ‘ஓ இது தான் நம்ம ஆள் பம்முறத்துக்கு காரணமா?’ என்று சரியாக யூகித்தவன், “அதுதான் நேற்று மேடம் உன்னோட ஆடும் போது அப்படி குழைஞ்சாங்களா??” என்று கண்சிமிட்டி கேட்டான். வைஷ்ணவியோ மனதுக்குள், ‘ஐயோ என் மானம் போகுதே’ என்று நினைத்தபடி வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆத்ரேயன் அவள் கண் முன் சொடக்கிட்டு, “எதோ கேக்கிறாங்க நீயே பதில் சொல்” என்று சொல்லி விட்டு முன்னே போய் விட்டான். என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தவள், “போகலாமா அண்ணா?” என்றபடி ஆகாஷை பார்க்காமல் விறு விறு வென நடந்தாள். “விடை சொல்லாட்டியும் பரவாயில்ல ட்ரீட் ஆச்சும் தாங்கப்பா” என்று சலித்தபடி ஆகாஷும் பின்னால் சென்றான்.
ஆன்லைனில் அனைவருக்கும் சாப்பாடு ஆர்டர் பண்ணி விட்டு அவர்கள் வரும் வரை காத்திருந்தாள். அப்போது ஆத்ரேயனுக்கு வந்த மெசேஜ் இல் அவனது கிரெடிட் கார்டில் இருந்து பெறப்பட்ட பணம் அலர்ட் இல் வந்திருந்தது. “நம்மள முழுங்கவே வந்து சேர்ந்திருக்கா” என்று சலித்துக் கொண்டான். பக்கத்திலிருந்த ஆகாஷோ, “உன் பாடு இனி திண்டாட்டம் போல” என்று கேட்டுவிட்டு வாயை பொத்திக் கொண்டான். அவனை பார்த்து முறைத்தவன், “என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கு என்னடா” என்றபடி அமர்ந்திருந்தான். “ஆனா எனக்கு ஒரு சந்தேகம் டா” என்ற ஆகாஷுக்கு என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்டான் ஆத்ரேயன்.
“கேக்கிறேன் என்று கோவிக்காத 1st நைட்
முடிஞ்சுதா டா ?” என்று கேட்டவனை முறைக்க முயன்று தோற்ற ஆத்ரேயன் சிரித்தபடி,
“பிரியப்போற எங்களுக்கு எதுக்குடா சும்மா கமிட்மெண்ட்ஸ் ?” என்று கேட்டவன் தொலைபேசியை நோண்ட தொடங்கினான். “அவ்வளவு நல்லவனாடா நீ?” என்று கேட்ட ஆகாஷுக்கு நிமிர்ந்து பார்த்து ஒரு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தான்.
சாப்பிட்டு முடித்ததும், “தேங்க் யூ வைஷ்ணவி போர் யுவர் ட்ரீட்” என்று எல்லாரும் கூவ, ஆத்ரேயனோ ஒரு படி மேலே போய், “தேங்க் யூ ஆர்யன்” என்று கூவினான். அவன் குரல் கேட்டு ஆகாஷும் வைஷ்ணவியும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.
ஆகாஷ் ஆத்ரேயன் காதில், “டேய் நீ நடிப்பில் சிவாஜி கணேஷன் சாரையே மிஞ்சிருவ டா” என்றான். அவனோ சிரித்தபடி, “பின்ன என்னடா காசு என்னோடது நன்றி மட்டும் அவளுக்கா ?” என்று ஆதங்கமாக கேட்டான்.
கடந்துச் சென்ற நாட்கள் அவர்கள் ஒத்திகை பார்த்த நிகழ்ச்சியையும் திருப்தியாக முடித்துவிட்டு முதல் வருட இறுதி பரீட்சையில் வந்து நின்றது. ஆத்ரேயனோ படிக்காமலே சிறப்பாக பரீட்சையை எழுத வைஷ்ணவியோ விழுந்து விழுந்து படித்து சுமாராக பரீட்சை எழுதி முடித்தாள். பின்பு ஒரு மாத லீவுக்காக வீட்டுக்கு சந்தோஷமாகச் சென்றவளுக்கு தெரியவில்லை அது தான் அவள் வாழ்க்கையில் ஏற்பட போகும் கடைசி சந்தோஷமான நாட்கள் என்று. கடைசி வருட மாணவர்களுக்கான பேர்வெல் பார்ட்டி லீவு முடிந்து ஒரு மாதத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.
அனைவரையும் கட்டி தழுவி விடைபெற்ற ஆத்ரேயனை பார்த்த வைஷ்ணவி, ‘இவனுக்குள் பீலிங்ஸ் எல்லாம் இருக்கா?’ என்று யோசித்தாள். பெண்களோ, “எப்போ சீனியர் கல்யாணம்? அப்படி பண்ணுற ஐடியா இருந்தா எங்களில் யாரையாச்சும் பண்ணுங்க… பேர்வெல் பார்ட்டில முடிவை சொல்லணும்” என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். அவனும், “ஓகே பேபீஸ்” என்று அவர்களிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தான்.
இதெல்லாம் பார்த்த ஆகாஷோ,
“நம்மள ஒருத்தி கண்டுக்கிறாளா பாரு… கல்யாணம் பண்ணியவனையே சுத்தி சுத்தி வருதுங்க” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் வந்த வைஷ்ணவி “ஏதோ கருகுற வாசம் வருதே” என்று சொல்ல, “அது உன்னிடம் இருந்து தான் வருது” என்று பதிலடி கொடுத்து அவள் காலை வாரி விட்டான். அவளும் சிரித்தபடி சமாளித்து வைத்தாள்.
எல்லாம் ஒரு வழியாக முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். வைஷ்ணவி எதையும் பற்றி கவலை படாமல் தனது வீட்டிலேயே இருந்தாள். அவளை ஆத்ரேயனும் கண்டுக்கவில்லை, அவன் தன் தந்தையின் தொழிலை அவரிடமிருந்து கற்றுக்கொள்வதிலும் சிங்கப்பூரில் கிளையை உருவாக்குவதிலும் மும்முரமாக இருந்தான். ஆதியோ மனைவியுடன் பெங்களூரில் உள்ள கிளையை நிர்வாகம் செய்ய சென்று இருந்தான்.
மலர்வேந்தன் எவ்வளவோ சொல்லியும் ஆத்ரேயன் இருப்பான் என்பதால் வைஷ்ணவி மறந்தும் அலுவலகத்துக்கு செல்லவில்லை. நாவல், படம் என நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் மூன்று நாட்கள் பொறுத்து பார்த்த மாலதி, வைஷ்ணவி வீட்டுக்கே வந்து விட்டார்.
கோகிலாவிடம், “உங்க மகள் என்ன நினைச்சிட்டு இருக்கா? இங்கேயே தங்கிடுறதா முடிவெடுத்து இருக்காளா?” என்று கடுமையுடன் வினவினார். அவரின் “உங்க மகள்” என்ற விளிப்பில் அவரின் கோபத்தையும் தன் மேலுள்ள பாசத்தையும் அறிந்த வைஷ்ணவி ஒன்றும் பேசாமல் விறு விறுவென மாடி ஏறிச் சென்றாள். “ரொம்ப திமிர் புடிச்சவ…. அப்படியே ஆத்ரேயன் போல” என்று கோகிலாவிடம் புலம்பி தள்ளிக் கொண்டிருந்தார். மகளின் குணமறிந்ததால் கோகிலாவும் சிரித்தபடி அவரை பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் உடுப்பு பையுடன் வந்தவள், “அத்தை போகலாமா?” என்று கேட்டாள். அவளை ஆச்சரியமாக பார்த்த மாலதி, “என் செல்லம்” என்றவாறு கை பிடித்து அழைத்துச் சென்றார்.
பகல் முழுதும் மாலதியுடன் செலவிட்டவள், இரவானதும் ஆத்ரேயன் அறைக்கு மாலதியின் கட்டாயத்தின் பெயரில் சென்று அடைந்துக் கொண்டாள். ‘ரொம்ப சுத்தமோ?’ என்று யோசித்தபடி அறையை ஆராய்ந்துக் கொண்டிருந்தவள் செருமல் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே ஆத்ரேயன் கையை கட்டியபடி கதவடியில் சாய்ந்து நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சிவப்பேறிய கண்கள் குடித்திருந்ததை பறை சாற்றியது. அவளை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் நெருங்கி வந்தவனை பார்த்ததும் அவளிதயம் தாறு மாறாக துடித்தது. அவளும் பயத்தில் பின்னால் செல்ல கட்டிலில் மோதி மேலே செல்ல இடமில்லாமல் மருண்டபடி நின்றிருந்தாள். அவளை மூச்சு காற்று படுமளவுக்கு நெருங்கியவன் வலது கையை அவள் தோள் மீது வைத்து அவளை தள்ளி விட்டு கட்டிலுக்குச் செல்ல வழி எடுத்தவன், அப்படியே கட்டிலில் விழுந்து உறங்கிவிட்டான்.
அவன் தள்ளி விட்டதில் விழுந்து விடாமல் தன்னை சமன் செய்தவள், ‘இதுக்கு தானா அவ்வளவு பில்ட் அப்?’ என்று தலையில் அடித்துக் கொண்டாள். கட்டிலில் சிறிய இடத்தில் தன்னை குறுக்கி படுத்தவளுக்கு மாலதி மேல்
கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “அத்தை எல்லாம் உங்களால் தான்” என்று மாலதிக்கு திட்டியபடியே உறங்கி போனாள்.
தங்களை மறந்து ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தவாறு உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பும் முகமாக ஆத்ரேயனின் தொலை பேசி அலறியது. அந்த சத்தத்தில் இருவரும் கண் விழித்த போது வைஷ்ணவி ஆத்ரேயனை அணைத்தவாறு அவன் மார்பில் தலை வைத்து படுத்திருந்தாள். ஆத்ரேயனின் கையும் அவளை அணைத்திருந்தது. ஒரே நேரத்தில் கண் விழித்து பார்த்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்க சுதாரித்துக் கொண்டு விலகி அமர்ந்தார்கள்.
தலையை உலுக்கி சமன் செய்தவனுக்கு மது உட்சென்றதால் சற்று தலை வலியாக இருக்க நடந்ததை யோசிக்க முடியாமல் தலையை பிடித்துக் கொண்டவன், “நீ எப்போ வந்த?” என்று கேட்டான். “நல்ல கேள்வி… நேற்று உங்க முன்னாடி தானே இருந்தேன் நினைவில்லயா?” என்று கேலியாக கேட்டாள். “இல்லை” என்று ஒற்றை வரியில் பதிலளித்தவன் குளிக்கச் சென்று கதவை சாத்திக் கொண்டான்.
எழும்ப மனமில்லாமல் அப்படியே படுத்துக் கொண்டிருந்தவள் வெளியில் டவல் உடன் வந்தவனை பார்த்து, ‘சரி இனி இவன் கவர்ச்சி நடிகை போல போஸ் கொடுக்க தொடங்கிருவான். நாம எஸ்கேப் ஆகிறது தான் நல்லது’ என்று நினைத்தபடி கட்டிலில் இருந்து பாய்ந்து எழுந்தவள் கதவை சாத்தி விட்டு வெளியேச் சென்றாள். அவள் செல்வதை கேலியாக பார்த்தவன் உடை மாற்றி அலுவலகத்துக்குச் செல்ல ஆயத்தமானான். கீழே வந்தவளை பார்த்த கார்த்திகேயன், “வாம்மா, இப்போ தான் எங்க வீட்டுக்கு வர வழி தெரிஞ்சிச்சா ?” என்று கேட்டார். “ஆ…அவ வந்துட்டாலும்… நான் போய் நேற்று கூட்டி வந்தேன்” என்று மாலதி தன் புகழ் பாடினார்.
இருவரையும் பார்த்து புன்னகைத்தவள் சமையலறைக்குச் சென்று ஒரு கப்பில் மாத்திரம் காபி போட்டு எடுத்துக் கொண்டு மாடியேறினாள். அனைவரும் நினைத்தார்கள் இது ஆத்ரேயனுக்காக போடப்பட்டது என்று. ஆனால் அது அவளுக்காக மட்டுமே போடப்பட்டது. அறைக்குள் செல்ல மனமில்லாமல் அவ்விடத்தில் இருந்த
சோபாவில் இரு கால்களையும் சப்பணம் போட்டு உட்கார்ந்தபடி காபியை அருந்திக் கொண்டிருந்தாள்.
உடை மாற்றி வெளியில் வந்தவன் சோபாவில் இருந்தவளிடம், “எனக்கில்லயா?” என்று கேட்டான். “நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா? தேவை என்றால் நீங்க போட்டு குடிங்க.” என்றபடி காபி கப் இல் வாய் வைக்க போனவளிடம் கையில் கப்பை காணவில்லை. நின்றபடி கப்பை லாவகமாக பறித்து எடுத்தவன் அதனை குடித்துக் கொண்டிருந்தான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் குடித்து முடித்தவன், “நாட் பேட்” என்றபடி அவளிடம் கப்பை கொடுத்து கன்னத்தை தட்டி விட்டுச் சென்றான். “டோன்ட் டச் மீ இடியட்” என்று திட்டியதை கேட்டவன், கீழிறங்காமல் அவளை நோக்கி விறுவிறுவென வந்து அவள் முகம் நோக்கி குனிந்து அவளிதழ்களில் அழுந்த முத்தமிட்டவன், “நீ எதை செய்ய வேணாம் என்று சொல்றியோ அதை மட்டும் தான் நான் செய்வேன்” என்று கூறி கண்ணை அடித்துவிட்டு கீழிறங்கினான். கண நேரத்தில் நடந்து முடிந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்தவள் உதட்டை நன்றாக தேய்த்தபடி தனது அன்றாட வேலைகளில் ஈடுபட தொடங்கினாள்.