குளித்து விட்டு வந்தவளுக்கு உடலெல்லாம் வலி எடுத்தது. சுற்றி அனைவரும் இருந்தும் கணவனின் ஆதரவு இல்லாததால் அநாதை போன்ற உணர்வே மேலோங்கி இருந்தது. நடந்ததை எல்லாரிடமும் சொல்லி அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க மனம் நினைத்தாலும் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள அந்த பெண் மனம் இடமளிக்கவில்லை.
உடை கூட அணிய அவள் உடலில் உள்ள காயங்கள் இடம் கொடுக்கவில்லை. கஷ்டப்பட்டு உடையை அணிந்தவளுக்கு உடல்வலியை விட அவன் காசை தூக்கி எறிந்து சொன்ன வார்த்தைகள் மன வலியை கூட்டியது.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவளுக்கு அவனுடைய அறையில் இருப்பது அருவருப்பாக இருக்க, காற்று வாங்க பால்கனிக்கு வந்து நின்றாள். கீழேச் சென்றால் அவள் முகத்தை பார்த்து மாலதி கேள்வி கேட்பார் என்ற பயத்தால் அவள் கீழ் செல்ல யோசிக்கவில்லை.
மாலதி ஆத்ரேயனிடம் வைஷ்ணவியை பற்றி விசாரிக்க, “அவளுக்கு பசிக்கவில்லையாம். தூங்கி விட்டாள்” என்று வாய் கூசாமல் பொய் சொன்னவன் சாப்பிட்டு விட்டு நெஞ்சத்தில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியோ ஈரமோ இல்லாதவனாக அறைக்குள் புகுந்துக் கொண்டான்.
அவனை பொறுத்தவரைக்கும் அவள் பேசியதுக்கான தண்டனை இது என்று வன்மமாக நினைத்துக் கொண்டான்.
நீண்ட நேரம் யோசித்தவளுக்கு அவனை விட்டு பிரிவதை தவிர எந்த முடிவும் எடுக்க தெரியவில்லை. நேரே சென்றாள் ஆத்ரேயனின் அறைக்கு.
அவனோ கவலை இல்லாமல் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். அவனை பொறுத்தவரை அவள் பேசியதற்கு தண்டனை கொடுத்து விட்டான். அதற்கு மேல் அவன் யோசிக்கவும் இல்லை யோசிக்க விரும்பவும் இல்லை. அறைக்குள் வந்தவள் நீண்ட நேரம் தன்னை வெறித்து நோக்குவதை உணர்ந்தவன் நிமிர்ந்து புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டான்.
அவனின் பார்வைக்காக காத்திருந்தவள் எந்த தாலியை கழட்டுவதத்திற்கு அவள் தயங்கினாளோ அதே தாலியை ஒரு கணத்தில் கழட்டி மேசையில் வைத்தவள், “நீங்க சொன்ன போல டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணுங்க… உங்களுக்கு பிடிச்ச போல அழகான பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணலாம்… எனக்கு உங்களோட வாழ இஷ்டமில்லை…” என்றாள் உணர்ச்சிகளை துடைத்த குரலில்.
அவள் தாலியை கழட்டியதில் சற்று அதிர்ந்தவன் உடனே சுதாரித்துக் கொண்டு, “என்ன பேபி பண்றது… நீ சொன்னதுக்கு எதிரா தான் எனக்கு எல்லாம் செய்யணும் போல இருக்கு. இப்போ எனக்கு உன் கூடவே வாழணும் போல இருக்கே… என்ன பண்ணலாம்?” என்று கண் சிமிட்டி கேட்டான். அவன் குரலில் காதல் இல்லை கேலி மட்டுமே நிறைந்திருந்தது.
அவளை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் நடந்தவனை பார்த்தவளுக்கு இதயம் நின்று துடித்தது.
‘மறுபடியுமா?’ என்று வலியோடு நினைத்தவள், பின்னால் நகர்ந்துச் சென்றதில் சுவற்றில் மோதி நின்றாள். அவள் முகத்தை உற்று பார்த்தவனுக்கு அவளின் மருண்ட விழியும் அழுதழுது வீங்கிய கண்களும் அறைந்ததால் தடித்த கன்னமும் அவனுக்கு அவன் மனதின் இரும்பு திரையை உடைத்து இனம் புரியாத வலியை கொடுக்க அவளை மென்மையாக கையாள நினைத்தான்.
அவள் பேசிய வார்த்தைக்கு பதிலாக அவளை மானபங்கப்படுத்தி கேவலமாக பேசி அவனின் கோபத்தை தணித்துக் கொண்டவனுக்கு் அவளிடம் இனி வன்மையாக நடப்பதை பற்றி யோசிக்க கூட முடியவில்லை.
அருகில் வந்தவன் மென்மையாக அவள் கன்னத்தை தடவினான். சிறிது வலி ஏற்பட்ட போதும் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள். “உன்ன யாரு தேவையில்லாம பேச சொன்னது?? இங்கே பாரு உனக்கு தான் சேதாரம்” என கவலை தோய்ந்த குரலில் கூறினான்.
அவளின் கன்னத்தில் அறைந்த தடத்தை பார்த்தவனிடம் கோபம் முழுமையாக நீங்கி காயப்பட்டவளின் மேல் பரிதாபம் மட்டுமே எஞ்சி இருந்தது. தான் இவ்வளவு கொடூரமாக நடந்தும், அவள் தன்னுடன் மென்மையாக நடப்பதை நினைத்து அவன் வியந்தான். அவளுக்கு தன் மீதான காதலை அப்போது தான் அறிந்துக் கொண்டான்.
அவளின் வலியை குறைக்க வேண்டுமென்ற அவா எழ முத்தத்தால் அவள் காயத்தை ஆற்றுவதற்காக அவளை நெருங்கி அவளை நோக்கி குனிந்தவனின் உதடுகளில் கை வைத்து தடுத்தவள், “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள். அவளை விட்டு சற்று விலகி நின்று கைகளை கட்டியபடி நின்றவன், “பேசு” என்று சைகை செய்தான். அவனுக்கு தன் மேல் காதல் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத பாவையவளுக்கு அதையாவது கடைசியாக அறிந்து விட வேண்டும் என்று உள்ளம் துடித்தது.
சற்று நேரம் யோசித்தவள், “நீங்க என்னை காதலிக்கிறீங்களா?” என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் கேட்டாள். அவன் நேரடியான இந்த கேள்வியை எதிர் பார்க்கவில்லை தான். மீண்டும் மீண்டும் யோசித்தவனுக்கு அவள் மீது காதல் உள்ளதா இல்லையா என்று அறிந்துக் கொள்ள முடியவில்லை.
அவள் மீது சில நேரம் ஏற்படும் ஈர்ப்புக்கு என்ன பெயர் என்று அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை சிறிது நேரம் யோசித்தவன், “இல்லை” என்று தலையை மட்டும் ஆட்டியபடி அவளை கூர்ந்து நோக்கினான். அவனே உணராத காதலை அவன் எவ்வாறு அவளுக்கு உணர்த்துவான்? அவளுக்காக இல்லாத காதலை ஏற்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அவனது பார்வையில் கோபமோ பழி உணர்ச்சியோ இல்லை. அவள் மீதான பரிதாபம் மட்டுமே இருந்தது.
அவனின் இல்லை என்ற வார்த்தை அவளை உயிருடன் புதைத்தது. அவன் கோபத்தில் தான் தன்னை விபச்சாரி என்றழைத்தான் எனவும் அவனுக்கு தன்
மீது கொஞ்சமாவது காதல் இருக்கும் எனவும் நிதானத்தில் அவன் அதை ஏற்றுக் கொள்வான் என்றும் நப்பாசையில் இருந்தவளுக்கு, அவன் தன்னை உண்மையாகவே விபச்சாரியாக நினைத்து இருக்கிறான் என்ற செய்தியால் மனமுடைந்து போனாள்.
அவளின் மன அழுத்தத்தால் மூளை தாறுமாறாக சிந்திக்க தொடங்கியது. ‘செத்துவிட்டால் என்ன?’ என்று யோசித்தாள். ஒரு மனிதனுக்கு தற்கொலை எண்ணம் நீடிப்பது ஒரு சில நிமிடங்களுக்கு மாத்திரமே… அந்த நிமிடத்தை கூட இருப்பவர்கள் ஆறுதலை அளித்து கடத்தி விட்டால் அவ்வெண்ணெம் மீண்டும் உருவெடுக்காது. வைஷ்ணவிக்கு அந்நிமிடத்தை ஆறுதலாக மாற்ற கூட யாரும் இருக்கவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க கோபத்துடன் அவனை முறைத்தவள்,
“அப்போ உங்களுக்கு தேவை என் உடல் மட்டும் தான்…நீங்கள் சொன்னது போல் நான் விபச்சாரி தான்” என்று ஆகங்காரமாக கத்தியவளின் நடவடிக்கை அவனுக்கு சரியாக படவில்லை…
ஏதோ தப்பாக தோன்ற கண நேரத்தில் அவனை தள்ளிவிட்டு விறு விறுவெனச் சென்றவள் மேசையிலிருந்த தண்ணீர் போத்தலை சுவற்றில் அடித்து உடைத்து உடைந்த கண்ணாடி துண்டால் தன் மணிக்கட்டை கிழித்த படி, “இப்போ என் உயிர் போயிரும்… என் உடலை வைத்து என்ன வேணுமென்றாலும் செய்துக் கொள்ளுங்க” என்று சீறினாள்.
ரத்தத்தை கண்டு பதறியவன்,
“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு” என்றபடி அருகில் ஓடியவன், ஏற்கனவே ஏற்பட்ட தாக்கத்தாலும் சாப்பிடாததாலும் ரத்தம் பீறிட்டு வழிய கண்கள் சொருகி மயக்கமுற்றவளை கைகளில் தாங்கினான்.
அவன் மனதில் இனம் புரியாத வலி சூழ்ந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் சிந்தித்தவன், பின்பு சுதாரித்துக் கொண்டு அவளை குழந்தை போல் தூக்கியபடி கீழே இறங்கினான்.
ரத்தம் சொட்ட சொட்ட மருமகளை தூக்கி வந்த மகனை பார்த்த மாலதி பதறி போனார். இதே நிலையில் அவர் இருவரையும் இரண்டாம் தடவை பார்க்கிறார். ஆனால் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை முதல் முறை உயிரை காப்பாற்றிய மகன் தான் இரண்டாம் முறை அவள் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறான் என்று.
“என்னாச்சுடா?” என்று பின்னால் வந்த தாயை சட்டை செய்யாமல் அவளை தூக்கிக் கொண்டு காரின் பக்கத்து சீட்டில் படுக்க வைத்து அவளுக்கு சீட் பெல்ட் ஐ மாற்றியவன் காரை எடுத்துக் கொண்டு வைத்தியசாலையை நோக்கி விரைந்தான்.
ஒரு கையால் காரை ஓட்டியவனின் மறு கை அவனையும் அறியாமலே அவளது தலையை வருடியபடி இருந்தது.
எமர்ஜென்சி யூனிட் இல் அவளை ஒப்படைத்து விட்டு வெளியே காத்திருந்தவனுக்கு அவன் மேலேயே கோபம் வந்தது. “ஷிட் ஷிட் ஷிட்” என்று கூறியபடி சுவரில் தனது முஷ்டியை வேகமாக குத்தினான்.
அவன் கையில் சுவரிலிருந்த ஆணி குத்தி ரத்தம் வழிந்த போதும் அவனால் உடல் வலியை உணர முடியாத அளவு மனவலி மிகுந்திருந்தது. கார்த்திகேயன் வர தாமதமானதால் கோகிலாவும் மலர்வேந்தனும் மாலதியும் அங்கே வந்து சேர்ந்தனர். கையில் ரத்தம் சொட்ட வெளியிலிருந்த கதிரையில் தொய்ந்து அமர்ந்தான்.
“என் பொண்ணுக்கு என்னாச்சு?” என்று பதறியபடி மலர்வேந்தன் ஆத்ரேயனின் சட்டையை பிடித்திருந்தார். ஒரு தந்தையின் கதறல் அது.
முதன் முறை அவன் தனக்குள் நொறுங்கி போனான். தன் மேல் இதுவரை காலமும் நம்பிக்கை வைத்து தன் மகளையே கல்யாணம் பண்ணி தந்த ஜீவன் அவர். அவருக்கு கூட தன்னால் உண்மையாக இருக்க முடியவில்லை என்ற குற்றவுணர்ச்சி அவனை தளர செய்தது. தலை குனிந்து நின்றவன் கலங்கிய கண்களுடனும் குற்ற உணர்வுமாக மலர்வேந்தனை பார்த்த பார்வையில் என்ன உணர்ந்தாரோ தெரியவில்லை அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவர், “என்னாச்சு ?” என்று நிதானமாக கேட்டார்.
எந்த பதிலும் சொல்லாமல் அவள் உயிர் பிழைப்பாளா இல்லையா என்று பதறிக் கொண்டிருந்தவனிடம் உள்ளே இருந்து வந்த டாக்டர்,
“வைஷ்ணவியோட கணவர் மட்டும் உள்ளே வாங்க” என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.
சர்வநாடியும் ஒடுங்கியபடி தளர்ந்த நடையுடன் உள்ளேச் சென்றவனுக்கு கண் மூடி படுத்திருந்த அவள் முகம் சற்று நிம்மதியை கொடுத்தது. “நல்ல நேரம் கீறல் ஆழமாக போகவில்லை… அப்படி இருந்திருந்தால் இவங்களை காப்பாற்றி இருக்கவே முடியாது…” என்று அவனை முதலில் ஆசுவாசப்படுத்திய டாக்டர் குரலில் சற்று கோபத்தை தேக்கி, “ஏன் Mr உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா ??? ஒரு பொண்ண இப்படி தான் ட்ரீட் பண்ணுவீங்களா ??” என்று கேட்டார்.
அவர் எதை பற்றி பேசுகிறார் என்று முதலில் புரியாதவன் அவரை சந்தேகமாக பார்க்க,
“இங்கே வாங்க” என்று அழைத்துச் சென்றவர், அவளின் ஆடையை விலக்கி காட்டினார்.
அவளின் கழுத்து மார்பு வயிறு என அனைத்து இடங்களும் கன்றியும் சிவந்தும் பற்கள் தடத்துடன் காயமாகி இருந்ததை பார்த்து அதிர்ந்தவன் முதன்முறை, ‘நான் ஏன் இப்படி மிருகமாகி போனேன்?’ என்று மனதுக்குள் வருந்தினான்.
அவன் கண்களில் உருண்டோடிய கண்ணீர் அவள் காயங்களில் பட அவள் முகமோ வலியில் சுருங்கியது. உடனே கண்களை துடைத்தவனிடம்,
“இதற்கும் சேர்த்து தான் டிரீட்மென்ட் கொடுத்திருக்கிறோம்… பெண் என்றால் பூ மாதிரி சார் அவள் மனமும் மென்மை உடலும் மென்மை… உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியல ஆனா ஒரு பெண்ணை இப்படி வருத்துபவன் உண்மையான கணவனே இல்லை… உங்க மனசுல கொஞ்சம் கூட மென்மையே இல்லையா?” என்று கேட்டார். அவரும் பெண்ணல்லவா?
மேலும் அவர், “இது ரேப் அண்ட் சூசைடு கேஸ். மனைவியா இருந்தா கூட அவங்க விருப்பமில்லாம அவங்கள தொடுறதும் அவங்கள காயப்படுத்துறதும் சட்டப்படி தப்பு. முறைப்படி போலீசுக்கு போயிருக்கணும். ஆனா உங்க மனைவி கெஞ்சி கேட்டதால தான் நான் ஆக்ஷன் எடுக்காம விட்டேன்” என்றார். அவரின் இந்த மிரட்டல் அவனுக்கு கோபத்தை கிளற, “ஆக்ஷன் எடுத்தாலும் ஐ அம் ரெடி டு பேஸ்” என்றான் திமிராக. இவனெல்லாம் மனுஷனா என்ற பார்வை பார்த்துவிட்டு அவர் வெளியேறினார். அவனை மிரட்ட யாராலும் முடியுமா? அன்புக்கு அடிபணிந்தாலும் அதிகாரத்துக்கு அவன் அடிபணிய போவதில்லை என்று அந்த டாக்டருக்கு தெரியவில்லை.
அவளருகே வந்தவன் அவளின் காயங்களை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்து கண்விழித்த வைஷ்ணவி தனது உடை முழுதாக விலகி இருக்க அவன் தன்னை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து பதறியவள் பக்கத்தில் கிடந்த பெட் ஷீட் ஐ எடுத்து தன் மீது போட்டுக் கொண்டாள். போட்டதில் வலி ஏற்பட, “ஸ்… ஆ…” என்று முகத்தை சுருக்கி சிணுங்கினாள்.
‘இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை’ என்று மனதில் நினைத்து பெருமூச்சு விட்டவாறு உணர்ச்சியை துடைத்த முகத்துடன் வெளியில் வந்தவனிடம் ஆளாளுக்கு விசாரிக்க, “ஷி இஸ் பைன்” என்ற ஒற்றை வார்த்தையில் எல்லாரையும் அடக்கியவன் மேல் எதுவும் பேசாமல் வெளியேறி விட்டான். அவனை தூண்டி துருவ யாருக்கும் தைரியம் இல்லாததால் அனைவரும் வாய் மூடி இருந்தனர்.
உள்ளே வந்த அனைவரும் தூண்டி துருவி விசாரித்த போதும் கூட அவளிடம் மௌனமே பதிலாக வந்தது.
“ரொம்ப அழுத்தக்காரி” என்று மாலதி திட்டிய போதும் அவள் வாய் திறந்தாளில்லை. ஆத்ரேயனை பற்றி அவள் மூச்சு கூட விடவில்லை.
சில மணி நேரம் கழித்து கார்த்திகேயனும் அவ்விடத்தில் வந்து சேர்ந்தார். “எங்க அந்த ராஸ்கல்?” இன்று கர்ஜித்தவரை அடக்க எல்லாருக்கும் பெரும் பாடாய் போய் விட்டது.
அந்நேரம் பார்த்து உள்ளே வந்த டாக்டர், “கொஞ்சம் அவரை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்” என்று கூறி அனைவரையும் சற்று நேரம் வெளியே இருக்க சொன்னார்.
மனோ தத்துவத்திலும் தேர்ச்சி பெற்ற அவர் அவள் உடல் நிலையை பற்றி வினவிய பின், “நீங்க போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க விரும்பலையா ???” என்று மறுபடி கேட்க, “இல்ல டாக்டர்… தேங்க் யூ போர் யுவர் கன்செர்ன். ஆனால் இதெல்லாம் வேணாம் ப்ளீஸ்” என்றவள், மேலும் இந்த விஷயத்தை தன் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டாம் எனவும் கெஞ்சியவளை பார்த்தவர்,
“தாலி செண்டிமெண்ட் ஆ… நம்ம ஊரு பொண்ணுங்களுக்கே அது தான் வீக் பாயிண்ட் … புருஷன் என்று பார்த்து பார்த்து அவங்க படுத்துற எல்லா கொடுமைகளையும் மறைச்சு வாழுறாங்க. ஆனா அந்த மிருகங்களுக்கு பொண்ணுங்களோட அருமை விளங்காது, சரி அதை விடும்மா, அது உன் விருப்பம்… ஆனால் எதுக்காக நீ சாகணும்?அவனுக்காக நீ வாழ தேவையில்லை… உன் மீது உண்மையான பாசம் வச்சிருக்கும் உன் அம்மா அப்பாவுக்காக நீ வாழ்ந்து காட்டணும்…உன்னை கேவலப் படுத்தும் எவனுக்காகவும் நீ வாழ தேவையில்லை உனக்காக மட்டுமே வாழ்.” என்று அவள் இன்னொரு முறை தற்கொலைக்கு முயலாமல் இருக்க கூடியவாறு அறிவுரைகளை சூசகமாக வழங்கினார்.
அவரின் அறிவுரைகள் அவளுக்கு புது தெம்பளிக்க அவரை பார்த்து, “கண்டிப்பா இனி சூசைடுக்கு ட்ரை பண்ண மாட்டேன் டாக்டர்” என்று சிரித்தபடி கூறினாள்.
அவள் கூறியது நிம்மதியளிக்க வெளியில் வந்தவர் அவள் முழுதாக குணமாகும் வரையும் வைத்தியசாலையிலேயே இருக்க வேண்டும் என கூற கோகிலாவும் மலர்வேந்தனும் அவளுடன் தங்கி விட கார்த்திகேயனும் மாலதியும் வீட்டுக்கு வந்தனர்.
விஷயம் கேள்விப்பட்டு ஆத்ரேயனை தொடர்பு கொள்ள முனைந்த ஆதியால் கூட அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
வைத்தியசாலையில் இருந்து நேரேச் சென்றது அவனுடைய கெஸ்ட் ஹவுஸ்க்கு. உடைகளை களைந்தவன் நடு ராத்திரி என்றும் பாராமல் அங்கே இருக்கும் நீச்சல் தடாகத்தில் பாய்ந்து தன் மனம் அமைதியடையும் வரை குளிர்ந்த நீரில் நீந்தினான்.
தனது மன பாரங்களை உடல் களைப்பால் மறக்கும் வரை நீந்தியவன் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தான். அந்த குளிர்ந்த நீரில் இருந்தும் கூட அவனது மனதில் உள்ள வெம்மை தீரவில்லை. தன்னால் ஏன் அவளை முழுமையாக காதலிக்க முடியவில்லை . அதே நேரம் ஏன் அவளை விட்டு முழுமையாக விலகவும் முடியவில்லை என்று யோசித்தவனுக்கு தன் மீது மட்டுமே கோபம் இருந்தது. காதலுக்கும் ஈகோவுக்கும் இடையில் இருந்து அவன் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. வீட்டுக்கு போக மனமில்லாமல் தொலைபேசியை அணைத்து வைத்தவன் அங்கேயே தூங்கி போனான்.
மாலதி வீட்டில் அவனை நினைத்து பதற, “உன் பையன் ஒன்றும் செத்து போக மாட்டான். சுத்தி இருக்கிற நம் எல்லாரையும் கொன்று புதைச்சிட்டு தான் அவன் செத்து போவான்.” என்று மாலதிக்கும் சேர்த்து திட்டிக் கொண்டிருந்தார்.
மாலதியோ மனசுக்குள், ‘இந்த மனுசன் வேற நேரம் காலம் தெரியாம அபசகுனமா பேசிக்கிட்டு’ என்று வெளியே கூற முடியாததை மனதுக்குள் போட்டு மறுகியவர் வாசலுக்கும் வீட்டுக்கும் நான்கு தடவை நடந்து விட்டார்.
தூங்கி எழுந்தவனின் மனம் கொஞ்சம் நிம்மதியடைய காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டான். வீட்டுக்கு வந்தவனிடம் கார்த்திகேயன்,
“அந்த பொண்ணு வாய் திறக்காததால் நீ தப்பிட்ட… இல்லாவிட்டால் நடந்திருப்பதே வேற” என்று சிம்ம குரலில் கர்ஜித்தார்.
அவரின் மிரட்டலில் அவனின் ஈகோ வெகுண்டெழ அவரை ஏளனமாக பார்த்தவன், “சொல்லி இருந்தா போல என்ன செஞ்சிருப்பீங்க? அவள் என்ன சொல்றது நானே சொல்றேன் அவ சூசைடுக்கு ட்ரை பண்ண நான் தான் காரணம்” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லிவிட்டு விறு விறுவென மாடியேறி போனான். அது கார்த்திகேயனுக்கு கோபத்தை எகிற விட, “பார்த்தியா டி உன் மகனுக்கு இளக்காரத்தை… அவனை” என்று கர்ஜித்தவர் மனைவியின் விழிகளில் தெரிந்த கண்ணீரிலும் கெஞ்சலிலும் அடங்கி போனார்.
அதற்கு பிறகு ஆத்ரேயன் வைஷ்ணவியை பார்க்க செல்லவில்லை. அவளும் கொஞ்சம் மனம் தேறி இருந்தாள். கல்யாணம் கணவன் மட்டும் வாழ்க்கை
இல்லை. வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புதிதாக பிறந்தாள். அதற்கு அந்த டாக்டரின் அறிவுரைகளும் காரணம்.
அவள் டிஸ்சார்ஜ் ஆகும் நாளில் அவளை பார்க்க வைத்தியசாலைக்கு வந்திருந்தான். அவனை கண்டதும் கோகிலாவும் மலர்வேந்தனும் வெளியேறி விட பக்கத்தில் இருந்த கதிரையை இழுத்து போட்டு அவளை நெருங்கி உட்கார்ந்தவன் அவளை ஊடுருவ பார்த்தான்.
‘எதுக்காக இப்படி பார்க்கிறான் பாவி… என்ன சாகவும் விட மாட்டான் வாழவும் விட மாட்டான்’ என்று மனதால் அவனை அர்ச்சித்து கொட்டியபடி அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் குனிந்து இருந்தாள்.
அவள் முன் சொடக்கிட்டவன்,
“உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டான்.
நிமிர்ந்தவள், “விவாகரத்து” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள். அவளின் பதில் மனதை ஈட்டியால் குத்தினாலும் அதனை காட்டாமல் கடினமாகவே முகத்தை வைத்திருந்தான்.
“நீ கேட்டு தான் நான் தரணும் என்ற அவசியமில்லை… நான் ஏற்கனவே வக்கீலிடம் கொடுத்திட்டேன். ஹீ வில் ப்ரோஸீட் குயிக்லி” என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னவனை பார்க்க அவளுக்கு சினம் வீறுக் கொண்டு எழுந்தது.
‘இந்த பாவி பயலுக்கு இந்த திமிர் மட்டும் குறையல… பாவம் போனா போகுது என்று விட்டு வச்சா ரொம்ப தான் துள்ளுறான். இவன் உண்மையாவே மனுஷனா? இல்ல மிருகமா? மகனே உன்ன போலீஸ்ல புடிச்சு கொடுத்திருக்கணும்டி… இப்போ இங்க இருந்து தெனாவெட்டா பேசிட்டு இருந்திருக்க மாட்ட … இப்போ போலீஸ்ல கம்பி எண்ணிக் கொண்டு இருந்திருப்ப. செய்ற எல்லாத்தையும் செஞ்சிட்டு பேசுற பேச்ச பாரு.’ என்று மனதுக்குள் வெதும்பியவள் அவனை வெற்று பார்வை பார்த்து, “உங்க உதவிக்கு ரொம்ப நன்றி” என்று கை கூப்பி சொன்னாள்.
அவளின் கேலி அவனுக்கு வித்தியாசமாக மட்டுமல்ல அவள் தன்னை விட்டு மனசளவில் விலகிச் சென்ற போலவும் இருக்க, “இனி என்ன உத்தேசம்?” என்று கேட்டான்.
“அது உங்களுக்கு தேவை இல்லாதது?” என்று முகத்திலடித்தபடி சொல்லிவிட்டு அவனை கூர்ந்து பார்த்தபோது அவன் கண்கள் கோபத்தில் தீ பிழம்பாய் ஜொலித்ததை கண்டு அதிர்ந்தவள், ‘அடியே வைஷு வாய வச்சுக்கிட்டு நீ சும்மாவே இருக்க மாட்டியா? உன் வாயில தான்டி உனக்கு சனி… என் கைய கிழிச்சதுக்கு பதிலா அவன் கைய கிழிச்சிருந்தா கூட இந்த படு பாவி கிட்ட மாட்டிட்டு முழிக்கிறதுக்கு பதிலா ஜெயிலில களி தின்னுட்டு சந்தோஷமா இருந்திருக்கலாம்.’ என்று நினைத்தபடி பயத்தில் தலையை குனிந்துக் கொண்டிருந்தாள்.
அவளின் உதாசீனத்தால் வந்த கோபத்தை கட்டுப்படுத்த சிறிது நேரம் எடுத்தவன். சிறிது நேரம் கழித்து , “அதுவும் சரி தான்…” என்றபடி எழுந்தவன், “காயம் ஆறிடுச்சா?” என்று கேட்டான். கையிலிருந்த காயத்தை பார்த்தவளிடம், “நான் அத கேட்கல” என்றவனின் கண்கள் அவள் கழுத்தில் பரிதாபமாக நிலை கொண்டு கீழிறங்கியது . ‘அப்போ எதை கேட்கிறான்?’ என்று யோசிக்கும் போதே அவனின் பரிதாப பார்வை அதனை காட்டிக் கொடுக்க, அவனை உறுத்து விழித்தவள்,
“உன்ன போல மிருகத்துக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை… உன் நடிப்பை எல்லாம் வேற யார் கிட்டயும் வச்சுக்கோ லீவ் மீ அலோன் அண்ட் கெட் லாஸ்ட்” என்று கண்ணீருடன் சீறினாள். அவளின் திடீர் கோபம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தாலும் அதை வெளி காட்ட விரும்பாதவன் விறு விறுவென வெளியேறினான்.
அவனின் கோபத்தையும் திமிரையும் பொறுத்துக் கொண்டவளால் அவனின் அக்கறையை ஏற்றுக்கொள்ள முடியாது துடித்தாள்.
அவனின் அன்பு போலியாக தெரிந்தது. மீண்டும் அவனின் போலி நடிப்பில் வீழ்ந்து மனம் காயப்பட அவள் விரும்பவில்லை. எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தை உருவாக்கும். அவள் எதிர்பார்ப்பில்லாமல் வாழ தொடங்கி இருந்தாள்.
அவனுடன் ஏட்டிக்கு போட்டி நின்றாலும் அவளுக்கு அவன் மேல் உள்ள ஈர்ப்பு போல அவனின் நடவடிக்கையில் இருந்து அவனுக்கும் தன் மேல் ஈர்ப்பு இருக்கும் என எதிர்பார்த்தவளின் நம்பிக்கை போலியாகி போனதுடன் அவன் மிருகமாகி போனதையும் ஏற்றுக் கொள்ள முடியாது தவித்தவள், இனி அவனின் நடிப்பை நம்புவதில்லை என்று முடிவெடுத்தாள்.