வெளியேறியவன் ஆகாஷை விட்டுச் செல்ல முடியாது என்பதால் காரில் காத்துக் கொண்டு இருந்தான். “ரொம்ப திமிருடி உனக்கு… இனி நான் உன் பின்னாடி வந்தா என்ன செருப்பால அடி” என்று அவளை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான்.
யாருக்கும் தெரியாமல் விடுதிக்கு வந்தவளுக்கு நண்பர்களை எப்படி சமாளிப்பது என்று நினைக்கவே தலை சுற்றி வந்தது. ‘எல்லாரும் வர முதல் தூங்கணும்’ என்று நினைத்தவள் குளித்து விட்டு தூங்க தொடங்கினாள். ஆனால் படுத்தவளுக்கு தூக்கம் வருவதற்கு பதில் ஆத்ரேயனே கண் முன்னாடி வந்துக் கொண்டிருந்தான்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் ஆத்ரேயனை காணவில்லை என்று தேடிய ஆகாஷ் அவன் காரில் இருக்கும் செய்தி கேட்டு அங்கு விரைந்தவன், கண் மூடி சீட்டில் சாய்ந்து படுத்திருந்த நண்பனை பரிதாபமாக பார்த்தான்.
“என்னடா ஆச்சு??” என்று கேட்க… உடனே சுதாரித்த ஆத்ரேயன்,
“போவோமா மச்சி ?” என்று கேட்டுவிட்டு காரை ஸ்டார்ட் பண்ணினான். அவனிருக்கும் மன நிலையில் அவனால் நிதானமாக கார் ஓட்ட முடியாது என்று அறிந்த ஆகாஷ், “நீ இறங்கு மச்சி நான் ஓட்டுறேன்” என்றவாறு கதவை திறக்க அவனும் அதையே யோசித்தவன் இறங்கி மாறி உட்கார்ந்தான்.
‘இவன் கிட்ட இருந்து ஒரு வார்த்தை கூட புடுங்க முடியாது’ என்று நினைத்த ஆகாஷ் அவனிடம் எதுவும் விசாரிக்காமல் காரை கிளப்பிக் கொண்டுச் சென்றான்.
அனைவரும் நிகழ்ச்சி முடிந்து விடுதிக்கு புறப்பட சந்தியாவின் மனது மட்டும் கொதித்துக் கொண்டிருந்தது. ‘ஒரு வார்த்தை என் கிட்ட சொன்னாளா அவ?’ என்று வைஷ்ணவியை மனதுக்குள் திட்டியவாறு விடுதிக்கு வந்து சேர்ந்தாள். அனைவரும் வைஷ்ணவியையும் ஆத்ரேயனை பற்றியும் பேசியவாறே வந்து சேர்ந்தனர்.
அனைவரும் வரும் அரவம் கேட்க, ‘இந்த நெட்டையனால எப்படியெல்லாம் நடிக்க வேண்டி இருக்கு’ என்று யோசித்த வைஷ்ணவி கண் மூடி வாசலுக்கு முதுகு காட்டி ஒரு பக்கம் சரிந்தவாறு படுத்து இருந்தாள்.
கதவு திறந்த சத்தம் கேட்க இறுக்கி கண்ணை மூடியவள் மேலும் அவளுக்கு எந்த அரவமும் கேட்கவில்லை. ‘என்ன ஒரு சத்தத்தையும் காணோம்??’ என்று யோசித்தவள் மெதுவாக தலையை திருப்பி பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது சந்தியாவை மட்டும் தான்… ஆனால் ஒட்டு மொத்த பெண்களும் கை கட்டியவாறு அவளையே பார்த்து நின்றுக் கொண்டிருந்தனர்.
‘இதுக்கு ஆகாஷ் அண்ணாவே மேல்’ என்று நினைத்தவள், “ஹி ஹி… என்ன எல்லாரும் என்னை அப்படி பார்க்குறீங்க ?” என்று நாடகத்தனமாக சிரித்தவாறு எழும்பி உட்கார்ந்தாள்.
முன்னுக்கு நின்ற சந்தியாவோ அவளை சுட்டெரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘மாரி ஆத்தா போல இவ பார்க்கிறத பார்த்தாலே உதறுதே’ என்று நினைத்தவளின் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.
கண்ணில் பயமிருந்தாலும் அவள் இதழ்கள் சிரித்துக் கொண்டே இருந்தது. “லூசு போல சிரிக்காதேடி” என்று சீறிய சந்தியா, “உண்மைய சொல்லு எப்படி கல்யாணம் ஆச்சு? ஏன் டிவோர்ஸ் ஆக போகுது..? நீ சொல்லாவிட்டால் நாங்க யாரும் உன்னோட பேச போறதில்ல” என்றார்கள்.
‘இதென்னடா வம்பா போச்சு?’ என்று யோசித்தவள், ‘ஆத்ரேயா எல்லாம் உன்னால தான் டா’ என்று அவனுக்கு மனதுக்குள் திட்டி விட்டு, ஆத்ரேயன் மாமன் மகன் என்பதில் தொடங்கி திருமணம் நடந்தது வரை சொல்லி முடித்தாள். இருவருக்கும் இந்த திருமணத்தில் சம்மதமில்லை என்று சொன்னவள் மறந்தும் அவன் தனக்கு செய்த கொடுமைகளை வாய் திறந்து சொல்லவில்லை.
“இருவருக்கும் பிடிக்காத திருமணம் என்பதால் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறோம்… அதனால தான் உங்க கிட்ட நான் சொல்லல… என்ன மன்னிச்சுருங்க” என்றாள்.
அவளின் மன்னிப்பில் சமாதானமானவர்கள், “அப்போ ஒண்ணுமே நடக்கலயா ?” என்று ஏக்கத்துடன் ஒருத்தி கேட்க, அதில் அவளுக்கு மறக்க வேண்டிய தருணங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. கஷ்டப்பட்டு கண்ணீரை கட்டுப் படுத்தியவள் இல்லை என்று தலையாட்டினாள்.
அவள் பக்கத்தில் உட்கார்ந்த சந்தியா, “அத விடு… ஏன் டி பிடிக்கல?? அவரை போல ஒருத்தர் கிடைக்க மாட்டானா னு நாங்க எல்லாம் ஏங்கிக் கொண்டு இருக்கிறோம். உனக்கு என்ன பிரச்சனை ??” என்று கேட்டாள்.
‘அவனை போல ஒருத்தன் கிடைக்கல என்று நிம்மதியா இருங்க’ என்று மனசுக்குள் சொன்னவள், “ஏனோ பிடிக்கல… என்ன தூங்க விடுங்க செல்லங்களா ப்ளீஸ்” என்று கெஞ்சினாள். அவளின் கெஞ்சலுக்கு மரியாதையை கொடுத்து அவளை விட்டு விலகிச் சென்றனர்.
பெருமூச்சு எடுத்தவளுக்கு அதுவும் தூக்கமில்லாத இரவாகவே கடந்தது. வீட்டில் ஆத்ரேயனை விட்டுவிட்டு ஆகாஷ் புறப்பட்டான். அறைக்கு வந்தவனுக்கோ வைஷ்ணவி மேல் அளவு கடந்த ஆத்திரம் வந்தது. “என்ன உனக்கு பிடிக்கலயாடி டாம் இட்…” என்று கோபத்தில் சீறியவன் கையிலிருந்த தொலைபேசியை போட்டு உடைத்தான்.
அப்போதும் கோபம் அடங்காததால் முகம் பார்க்கும் கண்ணாடியில் குத்தியதில் அது உடைந்து கையில் ரத்தம் வழிய கட்டிலில் இருந்தான். சத்தம் கேட்டு ஓடி வந்த மாலதிக்கு இதயம் பதற அவன் கையை புடவை முந்தானையால் அழுந்த பிடித்து ரத்தத்தை கட்டுப்படுத்தியவர் அவன் தலையை அணைத்தவாறு,
“ஏன்டா இப்படி பண்ணின ???” என்று கேட்டு கண்ணீர் விட்டார். மனதுக்குலேயே மறுகும் அவனுக்கும் அந்த அணைப்பு தேவையாக இருந்தது… கடினமான நேரத்தில் தேடி வரும் ஆறுதல் மனதிலுள்ள கவலைகளை எல்லாம் வெளியில் கொட்டிவிடும்.
மாலதியின் இடையை அணைத்துக் கொண்டவன்,
“அவளுக்கு நான் வேணாமாம் அம்மா…” என்று கண்ணீருடன் கூறினான். தனது வயதை மறந்து அவர் கையில் குழந்தையாகி போனான்.
வாழ்க்கையில் இது இரண்டாம் முறை மகனின் கலங்கிய முகத்தை அவர் பார்ப்பது. உண்மை முழுதாக தெரியாதவர், “அவ இல்லாட்டி பொண்ணா இல்லை? உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் டா” என்றார்..
அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன், “அவளை விட நல்ல பொண்ணு உங்களால கண்டு பிடிக்கவே முடியாது” என்றான். மகனின் கூற்றில் அதிர்ந்தவர், அவனை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, “நீ எங்களுக்காக நல்லா வாழணும்டா… உன்னை இப்படி பார்த்து பார்த்தே நாங்க செத்து விடுவோம் போல இருக்குடா…” என்றார் கண்களில் கண்ணீர் வழிய.
அவன் வாழ்க்கையில் விரும்பிய முதல் உயிர் அவன் தாய்… அவர் கண்ணில் கண்ணீரை கண்டவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “நீங்க போங்கம்மா எனக்கு ஒன்னும் ஆகாது…. உங்களுக்காகவாவது நான் மாறுவேன்” என்று அவரை அனுப்பி வைத்தவன் குளியலறைக்குள் புகுந்தான்.
மனதில் இல்லாத சந்தோஷத்தை முகத்தில் சிரமப்பட்டுக் கொண்டு வந்தான் தனது தாய்க்காக…அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவன் இனி வைஷ்ணவியை பற்றி நினைக்கவே கூடாது என்று முடிவெடுத்தான்…
அடுத்த நாள் காலையில் மாலதிக்கு ஆத்ரேயனின் தோற்றம் ஆச்சரியத்தை கொடுத்தது. மீசை தாடி எல்லாம் சவரம் பண்ணியவன் தலை முடியையும் ஸ்டைல் ஆக வெட்டி இருந்தான்.
“ஹாய் அம்மா” என்று சிரித்தபடி வந்தவனை பார்த்த மாலதிக்கு மனம் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவனின் இந்த மாற்றம் கார்த்திகேயனுக்கு திருப்தியாக இருக்க… கோபம் எல்லாம் கலைந்தவர் சாதாரணமாக தொழிலை பற்றி உரையாட தொடங்கினர். யாரும் மறந்தும் வைஷ்ணவியை பற்றி வாய் திறக்கவில்லை.
சிங்கப்பூர் கிளையை பற்றி தந்தையுடன் உரையாடியவன் அடுத்த மாதமே அங்குச் சென்று தனது வேலைகளை தொடர ஆயத்தமானான். வைஷ்ணவியை பற்றி நினைப்பதை முற்றாக தவிர்த்தான். தொழிலில் வேங்கை போல் சீறி பாய்ந்தவன் குறுகிய காலத்தில் வெகுவாக வளர்ந்து நின்றான்.
வைஷ்ணவியும் எல்லாம் மறந்து படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினாள். மீண்டும் அவர்களின் நிம்மதியை குலைக்க வந்து சேர்ந்தது வர்ஷினியின் வளைகாப்பு. வர்ஷினி வளைகாப்புக்காக வீட்டுக்கு வந்திருந்தாள். முதல் குழந்தை என்பதால் எல்லோர் மனதிலும் சந்தோசம் குடிக் கொண்டது.
சிங்கப்பூரில் இருந்து ஆத்ரேயனும் வந்திருக்க… நிகழ்ச்சிக்கு வராமலிருக்க முடியாது என்பதால் வைஷ்ணவியும் வர வேண்டியதாக போய் விட்டது.
வந்தவள் மலர்வேந்தன் வீட்டிலேயே தங்க, அவர்கள் பிரச்சனை அரசல் புரசலாக தெரியும் என்பதால் யாரும் எதுவும் கேட்கவில்லை. அதுவாகவே சரியாகும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
வளைகாப்பு நிகழ்ச்சிக்காக உறவினர்களும் நண்பர்களும் கார்த்திகேயன் வீட்டில் குழும தொடங்கினர். குறித்த நேரத்துக்கு முன்னரே மலர்வேந்தன் வீட்டினர் அனைவரும் கார்த்திகேயன் வீட்டுக்குச் செல்ல வைஷ்ணவியோ, “நேரத்துக்கு வந்து சேருவேன்” என்றபடி வீட்டுக்குள் முடங்கிவிட்டாள்.
சிவப்பு நிற வேலைப்பாடுடைய பட்டு சாரியில் அதற்கேற்ற நகைகளும் அணிந்து மூக்கில் வைர மூக்குத்தி மின்ன… வயிற்றிலுள்ள குழந்தை முகத்தின் பிரகாசத்தை கூட்ட அழகு தேவதையாக ஜொலித்த மனைவியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் காதல் கணவன் ஆதி.
கண்ணாடி முன்னால் இருந்து கண்ணுக்கு மை தீட்டியவள்,
“போதும் பார்த்தது வந்து இந்த பூவை வைத்து விடுங்க” என்றவளை பார்த்து வசீகரமாக புன்னகைத்தவன், அதே நமட்டு சிரிப்புடன் வந்து அவள் முன்னால் இருந்த பூவை எடுத்து தலையில் சூடி விட்டான்.
“நீ அழகிடி…” என்றவன் அவளை தன் பக்கம் திருப்பி, “இது பெரிய பேபிக்கு” என்றபடி அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “இது சின்ன பேபிக்கு” என்றபடி அவனது குழந்தையை சுமந்துக் கொண்டிருந்த வயிற்றில் முத்தமிட்டான். அவன் அன்பில் நெகிழ்ந்தவள் அவன் தோளில் வாகாக சாய்ந்தபடி,
“வைஷ்ணவி பாவம் ஆதி… அவளுக்கும் இது போல ஆசை கனவு இருக்கும் தானே” என்றாள்.
ஒரு பெரு மூச்செடுத்தவன்,
“வர்ஷி … இந்த ஆத்ரேயன் என் கிட்ட முகம் கொடுத்தும் பேச மாட்டிங்குறான்… முக்கியமாக வைஷ்ணவியை பற்றி கேட்க போனால் நைசாக நழுவி விடுகிறான்… அவர்களை சேர்த்து வைக்க கூட என்ன பிரச்சனை என்று தெரியாமல் நான் குழம்ப வேண்டி இருக்கு. உன் தங்கச்சியும் வாயவே திறக்க மாட்டாள்… ரெண்டு பேரும் கல்லூளி மங்கன் கணக்காக என்ன கேட்டாலும் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்று சொல்லுறாங்க … என்னால எதுவும் பண்ண முடியலடி” என்றான் உண்மையான வருத்தத்துடன். அவளுக்கும் அதே வருத்தம் தான் போல.
ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தவர்களை மாலதி வந்து அழைக்க அவருடன் மண்டபத்துக்குச் சென்றவள் அங்கு பூவினால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். ஆதித்தன், ஆத்ரேயன், கார்த்திகேயன் மூவரும் ஒரே மாதிரி வெள்ளை நிற பட்டு வேட்டி சட்டையுடன் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் நின்றனர்.
ஆத்ரேயன் மனதில் வேதனை இருந்தாலும் முகத்தில் புன்னகையை தழுவி இருந்தான். வைஷ்ணவி வர தாமதமானதால் கோபமடைந்த கோகிலா தொலைபேசியில் திட்ட அறக்க பறக்க ஓடி வந்து சேர்ந்தாள்.
வந்தவளை பார்த்த அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருந்தனர். சாதாரண வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்தவள் அவசரத்தில் பொட்டு பூ எதுவும் இல்லாமல் வந்திருந்தாள். ஆத்ரேயன் அதிர்ச்சியுடன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் மனதுக்குள், ‘உன் காதல் தானேடி செத்து போச்சு நானுமா செத்து போய் விட்டேன்’ என்று ஏக்கமாக கேட்டுக் கொண்டான்.
அவளை பார்த்து அதிர்ந்த கோகிலா மண்டபத்தில் நிறைய பேர் இருப்பதால் வந்தவளை தர தர வென பக்கத்தில் இருந்த அறைக்குள் இழுத்துச் சென்றார். பதறியபடி மாலதியும் ஆத்ரேயன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளேச் சென்றார். ஏனையவர்கள் அங்கே இருந்த விருந்தினர்களுக்காக அங்கேயே இருந்தனர்.
அவளை கூர்ந்து நோக்கியவாறு, “எங்கடி தாலி ?” என்று கேட்டார். அவள் கழட்டி வைத்திருக்கிறாள் என்று நினைத்தவர் ஒரு விசேஷத்துக்கு கூட போடாமலா கழட்டி வைத்திருப்பாள் என்று யோசித்தார். அவர் கேட்டதும் தான் அவளுக்கு தாலியின் நினைவு வந்தது. கண் துடைப்புக்காக போடுவதற்கு கூட தாலி அவளிடம் இல்லையே. என்ன சொல்லி சமாளிப்பது என்று பதறியவள் தலை குனிந்து நின்றாள். அவளின் மௌனம் அவரின் சினத்தை அதிகரிக்க, “சொல்லுடி…” என்று அவள் தோளை பிடித்து உலுக்கினார். “மெட்டியுமில்லை மோதிரமும் இல்லை பூவுமில்லை பொட்டுமில்லை தாலியுமில்லை. அதற்குள் வெள்ளை நிற சுடிதாருடன் அபசகுனமாக வந்து நிக்கிறியே” என்று கண்ணீர் மல்க கதறிய போது தான் அவளுக்கு தான் வந்திருக்கும் நிலை விளங்கியது. அவள் வேண்டுமென்று அப்படி வரவில்லை. அதனை சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை என்று அறிந்தவள் வாய் மூடி மௌனமாக நின்றாள்.
சாரி அனைத்தும் ஆத்ரேயன் வீட்டில் இருந்ததால் தான் அவள் கையில் கிடைத்த சுடிதாரை அணிந்தாள். அது என்ன நிறம் என்று கூட அவள் கவனிக்கவில்லை. தொலைபேசியில் எடுத்து கோகிலா திட்டியதால் பொட்டும் பூவும் வைக்காமலே ஓடி வந்து விட்டாள்.
கோகிலா கூறியதும் அவளுக்கு மனதுக்குள் தணலை வாரி இறைத்தது போல வலியை கொடுத்தது. ஆத்ரேயன் நிற்பது தெரிந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவன் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டாது வேட்டி சட்டையில் கம்பீரமாக கையை கட்டியபடி மாலதி பின்னால் நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
கோகிலாவோ மனம் வெதும்பி தன் தலையில் அடித்தபடி,
“உன்னை பெற்றதுக்கு பெறாமலே இருந்திருக்கலாம். ஏன் டி இன்னும் கண் முன்னே இருக்க ? எங்கயாச்சும் போய் செத்து போடி” என்று கதறினார். மகளின் வாழ்க்கை கண் முன்னே வீணாவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வெம்பினார். இவையனைத்துக்கும் அவருக்கு விவாகரத்து விடயம் தெரியவில்லை. அவரின் வார்த்தைகள் வைஷ்ணவியின் வலி கொண்ட இதயத்தில் மேலும் கத்தியால் குத்துவது போல இருந்தது.
அவர் திட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாதவன், “அத்தை, கொஞ்சம் பொறுங்க” என்ற கர்ஜனையுடன் விறு விறுவென தனது அறைக்குள் சென்றவன் வரும் போது ஒரு நகை பெட்டியுடன் வந்தான்.
கோகிலாவை விலக்கி அவள் முன்னால் வந்து அதிலிருந்த தாலியை அவள் கண்களை பார்த்தவாறு அவள் கழுத்தில் அணிவித்தான்.
அவள் கண்களில் கண்ணீரை கண்டவன், ‘நான் தாலி கட்டும் போது ஏன் டி எப்போ பார்த்தாலும் அழுகிறாய் ?’ என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டான். பின் குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்தவன் தாலியிலும் வைத்தான்.
மோதிரத்தை எடுத்து அவள் இடது கையில் அணிவிக்கும் போது அவன் வலது கையிலும் மோதிரம் இருப்பதை வைஷ்ணவி கண்டுக் கொண்டாள். கடைசியாக மெட்டியை எடுத்து அவள் கால்களில் அணிவிக்கும் போது அவன் கண்களிலிருந்து கண்ணீர் துளி மன்னிப்பு யாசித்து அவள் காலில் விழுந்து தெறித்தது. அவளோ பதறியபடி காலை பின்னால் இழுக்க அவனோ கண்களை குனிந்தபடியே துடைத்து விட்டு கம்பீரமாய் எழுந்து நின்றவன்,
“அத்தை கூட்டிட்டு போங்க” என்று சொல்லிவிட்டு வெளியேறி மண்டபத்தில் நின்றுக் கொண்டான்.
அவ்வளவு நேரமும் பிரம்மை பிடித்தபடி கண்களில் கண்ணீர் வழிய நின்றவளை அப்போது தான் கோகிலா தன்னுடன் அணைத்துக் கொண்டார். ஆத்ரேயனின் செயலில் அவர்கள் நல்ல விதமாய் இருப்பதாக கற்பனை செய்துக் கொண்டார்.
மாலதியோ ஆத்ரேயனின் காதலை புரிந்துக் கொண்டும் இவர்களை எவ்வாறு சேர்ப்பது என்று புரியாமல் நின்றார். அவன் கண்ணீரை உணர்ந்த வைஷ்ணவியோ மனதில் பாரத்துடன் அன்னையுடன் சேர்ந்து நடந்தாள்.
அவன் கண்ணீரால் தான் பலவீனப்பட்டதாக உணர்ந்தவள் எப்படி தன்னை நிலைப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தாள். வளைகாப்பு தொடங்கியதும் ஆதி வர்ஷினிக்கு மஞ்சள் பூசி கையில் காப்பு அணிவித்தான். ஒவ்வொருவராக அனைவரும் தங்களது சம்பிரதாயத்தை முடித்தனர். ஆனால் யாருக்கும் மனதில் மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை.
அங்கிருந்த உறவினர் ஒருவர்,
“வைஷு எப்போ உனக்கு?” என்று கேட்க அவள் சற்று நிலை தடுமாறி போனாள். இப்படி ஒரு ஆசை அவள் மனதில் உதித்தது கிடையாது அதனால் தலையை உலுக்கி சமன் செய்தவள், “இப்போ என அவசரம்? படித்து முடிக்கணும்” என்று சமாளித்தாள்.
அனைத்தையும் ஆத்ரேயன் கேட்டாலும் அவள் புறம் திரும்பவில்லை… அவளின் கண்ணசைவே தன்னை நிலை கொள்ள விடாது என்று அறிந்தவன், அவளை முற்றாக தவிர்த்தான். பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்தவன் முகம் மட்டும் சோர்வாக இருந்தது. ‘பக்கத்தில் போனாலே ரேட் பேசுவா’ என்ற நினைப்பில் அவளருகில் கூட அவன் பயத்தில் செல்லவில்லை.
எல்லாம் முடிந்ததும் வர்ஷினியை மலர்வேந்தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள். ஆதியால் தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “அம்மா கட்டாயம் கூட்டி போகணுமா ?” என்று சின்ன குழந்தை போல் அடம்பிடித்தவனை ஆத்ரேயனோ விசித்திரமாக பார்க்க வர்ஷினியோ சங்கடத்தில் நெளிந்தாள். ‘இந்த ஆதிக்கு விவஸ்த்தையே இல்லை எல்லார் முன்னாடியும் என் மானம் போகுது’ என்று தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டாள்.
“எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்காம கொஞ்ச நேரம் சும்மா இருடா” என்று மாலதி அவனை அதட்டினார் மலர்வேந்தன் அதுக்கு, “ரொம்ப தூரம் இல்லை ஆதி… அடுத்த மதில் தான்” என்றார். அதற்கு அவன் தர்மசங்கடத்துடன் சிரித்து வைத்தான்.
வீட்டுக்கு வந்த வைஷ்ணவி யாரிடமும் பேசாமல் அறைக்குள் அடைபட்டு கிடந்தாள். அடுத்த நாளே அவள் கல்லூரிக்கும் ஆத்ரேயன் சிங்கப்பூருக்கும் சென்றனர்.
நாட்கள் மாதங்களாக வர்ஷினிக்கு இடுப்பில் ஒரு வலி ஏற்றப்பட்டு உடல் முழுதும் பரவியது. காலையில் பூ பறித்துக் கொண்டு நின்றவள் அம்மா என்று அலறியபடி கீழே விழுந்தாள். சத்தம் கேட்டு ஆதி வீட்டிலிருந்து ஓடி வர வலி தாங்க முடியாமல் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்த வர்ஷினி கண்ணில் பட்டாள். பதறியவன் அவளை தூக்கிக் கொண்டு காரில் வைத்தியசாலைக்கு பறந்தான்.
தனியார் வைத்தியசாலை என்பதால் பிரசவ அறைக்குள் அவனும் அனுமதிக்கப்பட அவளின் பிரசவ வலியை அருகிலிருந்து பார்த்தான். பெண்களை தனது இச்சைக்காக பயன்படுத்தி தூக்கி போட்டு செல்லும் ஆண்களுக்கு பிரசவ வலியின் வேதனை புரிவதில்லை. ஒரு உயிரை அவள் உருவாக்க அவள் படும் வேதனை தெரிவதில்லை. அவளின் கதறலினால் ஆதியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. ‘எனக்கு ஒரு குழந்தை போதும்’ என மனதில் நினைத்துக் கொண்டான். ஆனால் பெண்ணவளோ எத்தனை வேதனை வந்தாலும் மீண்டும் மீண்டும் குழந்தை பெறுவதற்கு தயங்க போவதில்லை என்று அவன் அக்கணம் அறியவில்லை.சில மணி நேரத்துக்கு பின் வெளிவந்த ஆண் குழந்தையை கையில் ஏந்திய ஆதிக்கு தான் வாழ் நாள் சாதனையை நிலை நாட்டியது போல் பெருமிதம் உண்டானது. குழந்தையின் பிஞ்சு விரல்களின் தீண்டலில் உலகை மறந்தான்.
தனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த களைப்பில் தூங்கிக் கொண்டிருந்த வர்ஷினியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன் குழந்தையுடன் நேரத்தை செலவிட தொடங்கினான். குழந்தையின் மருங்கை விழாவுக்கு ஆத்ரேயனும் வைஷ்ணவியும் வந்து சேர்ந்தனர். வைஷ்ணவி வர இரு வாரங்களுக்கு முன்னரே ஆத்ரேயன் வந்து சேர்ந்தான். வைஷ்ணவிக்கு பரீட்சை இருந்ததால் உடனே வர முடியவில்லை.
கையில் குழந்தையை ஏந்திய ஆத்ரேயனுக்கு மனதில் இனம் புரியாத சிலிர்ப்பு ஏற்பட்டது. அவனுக்கு தன் மன காயங்களுக்கு வடிகாலாக குழந்தை அருகில் தேவைப்பட்டது.
அதனை உணர்ந்த ஆதி பால் கொடுக்கும் நேரம் தவிர மற்றைய நேரங்களில் குழந்தையை அவனிடம் கொடுத்து விடுவான். வர்ஷினியும் எதுவும் சொல்வதில்லை. குழந்தையை அருகில் வைத்துக் கொண்டு அதன் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்து விடுவான் ஆத்ரேயன். குழந்தையால் அவன் முகத்தில் சந்தோசம் குடி கொண்டது.
இரு கிழமைகள் கழித்து வந்த வைஷ்ணவி,குழந்தை ஆதி வீட்டில் இருப்பதாக கேள்விப்பட்டவள், “அம்மணி புருஷன் இல்லாம இருக்கமாட்டாங்கலாமா??” என்று ஆதங்கத்துடன் தாயிடம் கேட்டாள்.
கோகிலாவோ, “உன்ன போல எல்லாரும் இருப்பாங்களா?” என்று குத்தலாக பேச, “இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை” என்று கூறியவள் முறைத்து விட்டு ஆதி வீட்டுக்குச் சென்றாள்.
முன்னறையில் இருந்த மாலதியோ மீண்டும் அவள் தாலி இல்லாமல் வந்திருப்பதை பார்த்து அவளை வரவேற்க விரும்பாமல் முகத்தை திருப்பிக் கொண்டார். மீண்டும் வைஷ்ணவி அனைத்தையும் கழட்டி வைத்து விட்டிருந்தாள் அவனின் நினைவை மறப்பதற்காக.அவனால் அணிவிக்கப் பட்ட ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் அவனின் நினைவை அவளிடம் தோற்றுவித்தது.
இதையறியாத மாலதியோ மனதுக்குள், ‘என் மகன் என்ன செத்தா போய் விட்டான். பொண்ணுக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம் ஆகாது’ என்று நினைத்துக் கொண்டார்.
“பேரன் வந்ததும் சிலருக்கு நாம கண்ணுக்கே தெரியிறது இல்லப்பா” என்று மாலதியை சீண்டுவதற்காக சொன்னவள் விறு விறுவென மாடி ஏறினாள்.
“ஜாடிக்கேற்ற மூடி” என்று மாலதி சலித்துக் கொண்டார்.
அறையை தட்ட முதலில் சங்கடப்பட்டவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தட்டியதும் திறந்த வர்ஷினி, “இப்போ தான் வழி தெரிஞ்சிச்சா ??? வாடி உள்ள” என்றாள்.
“இல்ல அக்கா அத்தான் உள்ளே இருக்கிறார் நான் இங்கேயே நிற்கிறேன். எனக்கு முதல் நம்ம குட்டி பையன காட்டு” என்றவளிடம் ஆத்ரேயன் அறையை காட்டிய வர்ஷினி,
“அங்கே போய் பார்” என்றாள்.
‘அங்கேயா ? பாப்பாவை அங்கே விட்டுட்டு இதுங்க இரண்டுக்கும் ரொமான்ஸ் கேக்குது’ என்று நினைத்தவள் அதற்குள் சென்று கதவை திறந்து பார்த்தாள். வெறும் காற்சட்டையுடன் ஆத்ரேயன் குழந்தையை பார்த்தபடி தூங்க அவனருகில் குழந்தை அழகாக தூங்கிக் கொண்டிருந்தது.
‘இவனுக்கு எப்போவும் டீஷர்ட் போட்டு பழக்கமில்லையா ??’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தவள்,
மெதுவாக நெருங்கி வந்து எட்டி பார்த்தாள். குழந்தையை கண்டதும் அணைக்க வேண்டும் என்ற ஆவலில் அவனை தாண்டி குழந்தையை தூக்க போனவளின் கையை அவன் பிடித்திருந்தான்.
ஆதி கூட அவனிடம் சொல்லி விட்டு தான் குழந்தையை தூக்கிக் கொண்டுச் செல்வான். தன்னிடம் சொல்லாமல் குழந்தையை தொட வந்தவளின் கையை கன்றி போகுமளவுக்கு இறுக்கி பிடித்தபடியே எழுந்து உட்கார்ந்து யார் என கண்ணை கசக்கி பார்த்தான்.
வைஷ்ணவி என்றதும் கையை விட்டவன் அவளுக்கு இடம் கொடுப்பதற்காக எழுந்து முன்னால் இருந்த சோபாவில் இருந்துக் கொண்டான்.
‘ஐயோ இவன் முன்னாடியா நான் குழந்தையை கொஞ்சணும்… கொஞ்சம் எழும்பி வெளியே போக மாட்டியாடா தடியா’ என்று முதலில் திட்டியவள் பின் தன்னை மறந்து குழந்தையின் பிஞ்சு விரல்களில் தன்னை தொலைத்து குழந்தையுடனேயே ஒன்றி போனாள்.
கால் மேல் கால் போட்டு கை கட்டி வெற்று மார்புடன் அனைத்தையும் உணர்ச்சியற்ற முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். தனது சுண்டு விரலை குழந்தையின் கைக்குள் அடக்கிய படி அதனை மோர்ந்துக் கொண்டு அவன் படுத்த இடத்திலேயே குழந்தையை அணைத்துக் கொண்டு இன்னொரு குழந்தை போல நெருங்கி படுத்தாள்.
குழந்தை தூக்கம் கலைந்து அழ தொடங்க பதறி எழுந்தவள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆத்ரேயனை பார்த்தாள். அவள் எழும்பிய போதும் ஆத்ரேயன் அவள் மேலிருந்த பார்வையை அகற்றவில்லை. ‘எப்போ பார்த்தாலும் முழுங்குற போலவே பார்த்துக்கிட்டு… பொறுக்கி… குழந்தை அழுகுது கொஞ்சமாச்சும் அசையிறானா பாரு.’ என்று மனதுக்குள் திட்டியவள் எப்படி குழந்தையை தூக்குவது என்று தெரியாமல் திண்டாடினாள். அவளால் குழந்தையை தூக்க முடியும் என்று நினைத்தவன் அவள் திண்டாட்டத்தை பார்த்ததும்,
“மூணு பிள்ளை பெற வேண்டிய வயசில பிள்ளை தூக்க தெரியாம இருக்கிறத பாரு” என்று அவளுக்கு கேட்குமாறு முணுமுணுத்தவன் அவளை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் வந்தான்.
அருகில் வந்த கண நேரத்தில் அவளை தாண்டி குழந்தையை தூக்கி தழுவி இருந்தான். அவன் அணைப்பில் அழுகையை நிறுத்திய குழந்தை நன்றாக தூங்கியது. ‘இவன் மட்டும் எப்படி அழகாக தூக்குகின்றான்?’ என குழந்தையை பார்த்தபடி ஏங்கியவளின் ஏக்கத்தை புரிந்தவன் எதுவும் பேசாமல் குழந்தையை அவள் புறம் நீட்டினான்.
அவளும் கையை அவன் போல தள்ளி நீட்ட அவளை பார்த்து முறைத்தவன், “முதல் தரம் தூக்கும் போது இப்படி தள்ளி யாரும் தூக்குவார்களா? உன் மார்போடு அணைத்து பிடி?” என்று கடினமாக கூறியவன் அவளை நெருங்கி நின்று குழந்தையை ஒப்படைத்தவன் எவ்வாறு குழந்தையை தாங்க வேண்டுமென அவள் கைகளை சீர்படுத்தி விட்டான்.
“ரெண்டு கிழமைக்கு முன்னே வந்திட்டு பண்ணுற அளப்பறைய பாரு” என்ற அவளின் முணுமுணுப்பு அவனுக்கு தெளிவாக கேட்டது. அவளை முறைத்தபடியே அவளருகில் நெருங்கி நின்றான் குழந்தைக்காக…அவன் அருகாமை அவளுக்கு அவஸ்தையாக இருந்தாலும் குழந்தைக்காக அதனை பொறுத்துக் கொண்டாள். அவளை முறைத்து பார்த்தபடியே குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான்.
இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்தவள், “எப்போ விவாகரத்து கிடைக்கும்?” என்றாள். அவள் முகத்திலிருந்து பார்வையை அகற்றியவன் குழந்தையை பார்த்தபடியே,
“வக்கீலிடம் கொடுத்து நீதிமன்றத்துக்கு போட சொல்லி விட்டேன்… படிக்கும் நீ நீதிமன்றத்துக்கு வந்து அலைய தேவையில்லை. எப்படியாவது கேஸை முடிக்க பார்க்கிறேன் என்று வக்கீல் சொன்னார். அடுத்த வருடம் கிடைத்து விடும்.” என்றான்.
நீதி மன்ற வழக்குகளை பற்றி அறிவில்லாத அவளும் சரி என்று தலையை ஆட்டினாள். ‘அப்போ நான் நினைத்தபடி நீங்க மன்னிப்பு கேட்டது நடிப்பா?’ என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்.
அந்நேரம் பார்த்து ஆதி குழந்தையை கேட்டு வந்தான். வைஷ்ணவி குழந்தையை அணைத்து இருந்ததை பார்த்து எப்படி வாங்குவது என்று சங்கடப்பட, அவளுக்கும் அதே சங்கடம் இருந்தது. ஆத்ரேயனோ அதை கவனிக்காமல், “வா ஆதி குழந்தையை வாங்கிக்கோ” என்ற படி குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தான்.
வைஷ்ணவியோ, ‘இந்த நெட்டையன் வாங்கி கொடுக்க வேண்டியது தானே’ என்று அர்ச்சித்து விட்டு ஆத்ரேயனை கலக்கமாக பார்த்தாள். அவள் தன்னை பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவன், ‘இவ எதுக்கு நம்மள இப்படி பார்க்குறா ?’ என்று யோசித்த படி அவளின் கலக்கமான முகத்தை பார்த்து “என்ன” என்று கேட்க அவளோ கண்களால் குழந்தையையும் ஆதியையும் காட்டினாள்.
அவள் கண்களால் சொல்லியதை புரிந்தவன்,
“இதுக்கு மட்டும் நான் வேணுமாக்கும்” என்று ரகசியமாக கேட்டபடி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு குழந்தையை வாங்கி ஆதியிடம் கொடுத்தான். ‘இனி இங்கு நமக்கென்ன வேலை?’ என்று நினைத்தவள் ஆதி பின்னால் ஓடிச் சென்றாள். குழந்தையின் மருங்கை நிகழ்வு நல்ல விதமாக முடிய வைஷ்ணவி கல்லூரிக்கு சென்று படிப்பை தொடர்ந்தாள். ஆத்ரேயனும் தனது தொழிலை பார்க்கச் சென்று விட்டான்.
சில ஆண்டுகள் கழித்து கல்வியை முடித்து வந்த வைஷ்ணவி தந்தையின் நிறுவனத்துக்குச் செல்ல விருப்பமில்லாமல் சில வேலைகளுக்கு அப்ளை பண்ணி விட்டு வீட்டிலேயே முடங்கி கிடந்தாள். ஆத்ரேயன் இரு வாரம் ஓய்வெடுக்க வீட்டுக்கு வந்திருந்தான். அப்போதும் அவள் மலர்வேந்தன் வீட்டிலேயே இருக்க அனைவரும் சேர்ந்து இருவரிடமும் பேசுவதாக முடிவெடுத்தனர்.
ஆத்ரேயனை அழைத்துக் கொண்டு மாலதி… மலர்வேந்தன் வீட்டுக்கு வந்தார். எதுக்கு அழைக்கிறார் என்று தெரியாமல் அவனும் வந்தான்.
கோகிலா அழைத்ததும் கீழே வந்தவள், ‘சரி நமக்கு ஆப்பு ரெடி’ என்று மனதுக்குள் கவுண்டர் கொடுத்தாள். அவள் வருவதை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அனைவரும் அமர்ந்ததும் கொஞ்ச நேரம் கழித்து மலர்வேந்தன், “வைஷ்ணவி என்ன முடிவு பண்ணி இருக்க?” என்று கேட்க அவளோ, “எதை பற்றி ?” என்று கேட்டாள்.
‘திமிர் புடிச்சவ’ என்று மனதுக்குள் திட்டியவர், “ஏன் நீ ஆத்ரேயனுடன் சேர்ந்து வாழ கூடாது?” என்று நேரடியாக கேட்டார். “விவாகரத்து பெற்ற பிறகு சேர்ந்து வாழ்ந்தா ஊர் தப்பா பேசும் ப்பா” என்று சொல்ல அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
‘விவகாரத்தே ஆகவில்லை இவ வேற ஓவர் பெர்போர்மன்ஸ் கொடுக்கிறாளே’ என்று மனதுக்குள் வைஷ்ணவியை கடிந்தபடி இருந்தான் ஆத்ரேயன். “என்னடி சொல்லுற?” என்று சீறினார் மலர்வேந்தன். “உண்மையை தான் சொல்றேன். எனக்கு இந்த வாழ்க்கை வாழ இஷ்டமில்லை” என்றவளின் கன்னத்தை பதம் பார்த்தது மலர்வேந்தனின் கை. அதை யாரும் எதிர் பார்க்கவில்லை. வைஷ்ணவியை அடித்ததால் வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான் ஆத்ரேயன். மலர்வேந்தன் என்பதால் எதுவும் அவனால் பேச முடியவில்லை.
“அந்த தம்பி உன் பின்னால் அலைகிறார். உனக்கு அவ்வளவு திமிரா? எந்த வாழா வெட்டியும் என் வீட்டில் இருக்க தேவையில்லை முதலில் வெளியே போ” என்று சீறினார்.
தந்தை முதல் முறை அறைந்ததில் நிலை குலைந்தவள், அவர் வார்த்தைகளில் துவண்டு போனாள். அவரையும் கோகிலாவையும் முறைத்து விட்டு உடுப்புகளை எடுக்க மேலேச் சென்றவளின் பின்னால் ஆத்ரேயன் ஓடி அவள் அறைக்குள் வந்தான். அவனுக்கு பயம் முதல் போல் தற்கொலை முயற்சி செய்திருவாளோ என்று.
மலர்வேந்தன் அப்படி கூறியது அவள் ஆத்ரேயனுடன் செல்லட்டும் என்ற எண்ணத்தில். ஆனால் அவளுக்கோ அவரின் கூற்றால் ஆத்ரேயன் மேலான கோபம் பல்கி பெருகியது.
அவள் உடுப்பு அடுக்குவதை பார்த்து அதிர்ந்தவன், “எங்கே போக போற?” என்று பதட்டமாக கேட்டான். அவன் கையை உதறியவள், “எல்லாம் உன்னால தான், என் அப்பா என்னை முதல் முறை அறைஞ்சிருக்கிறார். அத்தை கூட என்னோட பேசுவதில்லை. எல்லாரும் என்னை ஏதோ குற்றவாளியை பார்க்கிற போல பார்க்கிறாங்க. ஆனா உன் மனசுக்கு நல்லாவே தெரியும் யார் குற்றவாளி என்று… எங்கப்பா என்னை துரத்தின பிறகு இந்த வீட்டில எனக்கென்ன வேலை…” என்று விம்மியவள், “என்னை பார்த்து வாழா வெட்டினு சொல்றாங்க. ஆனா என்னை வாழாம ஆக்கியதே நீ தானே… அது யாருக்கும் தெரியலையே… எல்லோர் முன்னிலையிலும் நல்லவன் வேஷம் போடுற.” என்ற உயிர் கொல்லும் வார்த்தைகளில் அவன் கை அவளை விட்டு தானாக விலகியது.
அவன் எதுக்கும் அஞ்சாதவன். நல்லவனாக நடிக்குமளவுக்கு அவனுக்கு நல்ல பெயர் இருந்ததில்லை. அந்தரங்க விஷயங்களை பகிர முடியாததால் தன் தவறை கூற முடியாமல் இருந்தான். அதனை வைஷ்ணவி இவ்வாறு நினைப்பாள் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.
அவன் யோசிக்கும் நேரத்தில் உடைகளை அடுக்கி முடித்தவள் வெளியே செல்ல போக அவள் கையை பிடித்தவன், “வா நானே நடந்தது அனைத்தையும் எல்லாரிடமும் சொல்றேன். நான் எப்போவும் அதெல்லாம் மறைக்க நினைச்சது கிடையாது. அது நம்ம தனிப்பட்ட விஷயம் அதனால தான் சொல்லல… இதுக்கு மேல மறைக்கணும் என்று எனக்கு அவசியமில்லை” என்றான் கடினமான முகத்துடன்.
இப்போது இடி அவள் தலையில் விழும் நேரம். என்ன தான் கோபம் இருந்தாலும் தன் கணவன் மற்றவர் முன்னிலையில் தலை குனிந்து நிற்க அவள் விரும்பவில்லை. சொல்லி விடுவானோ என்று பயந்தவள், “இப்போ மட்டும் அது அந்தரங்கம் இல்லையா ?” என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் சலித்தவன், “உனக்கு என்ன தான் டி வேணும்?” என்று கேட்டான் ஏக்கத்துடன். “நிம்மதி” என்றாள். ‘ஒண்ணு விவாகரத்து அது இல்லாட்டி நிம்மதி… இதுக்கெல்லாம் நான் எங்கே போவேன் ?’ என்று யோசித்தவன், “அதுக்கு நான் இப்போ என்ன பண்ணனும்?” என்று கேட்டான்.
“என்னை வீட்டை விட்டு போக விடணும்” என்றாள். “சரி நீ போ… நான் எல்லார்ட்டையும் உண்மையை சொல்லுவேன்” என்றான். அவனை முறைத்தவள், “இப்போ நான் என்ன பண்ணனும்?” என்று கேட்டாள். ‘அப்படி வா வழிக்கு’ என்று மனதில் நினைத்தவன், “நீ எங்க வீட்ல வந்து இரு… நான் இன்றே போய்விடுவேன் ” என்றான். “முடியாது” என்றவளிடம் தோளை உலுக்கி, “உன் இஷ்டம் ஆனால் நான் உண்மையை சொல்வேன்” என்றான்.
“உண்மைய சொன்னால் நான் செத்து போவேன்” என்றபடி கீழே வந்தவள், “வைஷு…” என்று ஆரம்பிக்க போன கோகிலாவை கை நீட்டி தடுத்தபடி, “இனி எனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… என்ன புரிஞ்சுக்காத நீங்க யாரும் எனக்கு வேணாம்… என்ன இனி யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது … அப்படி கட்டாய படுத்தினால் என்னை உயிருடன் பார்க்க முடியாது.” என்றவள் யாரையும் பார்க்காமல் விறு விறு வெளியேறினாள். அவள் ஏற்கனவே தற்கொலை முயற்சி செய்ததால் கையாலாகா தனத்துடன் எல்லாரும் அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தனர் ஆத்ரேயன் உட்பட.
வெளியேறிச் சென்றவள் மகளிர் விடுதி ஒன்றில் தங்கிக் கொண்டாள். அனைவரும் இருந்து அனாதையாக வாழ காரணம் ஆத்ரேயன் என்ற எண்ணம் மட்டும் அவள் மனதில் ஓங்கி இருந்தது. அவன் மேல் உள்ள காதல் மொத்தத்தையும் அவளே வெறுப்பாக மாற்றிக்கொண்டாள். பல வித வேலை இன்டெர்வியூ என்று அலைந்து திரிந்தாள். அவள் வங்கி கணக்கில் எடுக்க எடுக்க காசு பெருகியது. மலர்வேந்தன் பாசத்தில் போடுகிறார் என்று நினைத்தவளுக்கு ஆத்ரேயன் காதலில் போடுகிறான் என்று உண்மையை நினைக்க தோன்றவில்லை.
ஒரு நாள் அவள் அப்ளை பண்ணாத சிங்கப்பூர் அர்ஜுன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் இலிருந்து அப்பாய்ன்ட்மெண்ட் லெட்டர் வந்தது. அப்ளை பண்ணாமல் இன்டெர்வியூ வைக்காமல் இதெப்படி சாத்தியம் என்று யோசித்தவள் ஆத்ரேயனின் வேலையாக இருக்குமோ என்று சந்தேக பட்டாள். ஆனால் விசாரித்ததில் அது ஆத்ரேயனுக்கு எதிரான கம்பெனி என்று அறிந்தவள் அங்கு வேலைக்கு வந்து சேர்ந்தாள். அவளுக்கு தெரியவில்லை தொழில் போட்டியாளர்களான அர்ஜுனும் ஆத்ரேயனும் நிஜ வாழ்வில் நண்பர்கள் என்று.