யுகம்-20

சிங்கப்பூர் வந்தவளது ஒவ்வொரு அசைவையும் அவளுக்கே தெரியாமல் கண்காணித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் அவனது பிரிவு அவளுக்கு எந்த தாக்கத்தையும் உருவாக்கவில்லை என்று புரிந்ததும் அவனுக்கு அவள் மேல் கோபம் பெருகியது. எப்படியாவது அவளை தன்னிடம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் அவன் அந்த கம்பெனியையே  வாங்கினான்.

அப்படி இருந்தும் முதல் நாள் கூட அவனை பார்த்தவள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்க அவனுக்கு அவள் மேல் கோபம் மேலும் அதிகரித்தது. அதற்காகவே அவளை சீண்டினான். ஏன் தன்னால் அவளை போல் இருக்க முடியவில்லை என்று தன் மீதும் கோபம் கொண்டான். கோபத்தால் அவளை மீண்டும் காயப்படுத்தி விடுவோமோ என்று பயந்து முடிந்த வரைக்கும் அவளை தவிர்த்தான். சில நேரம் அவனையும் மீறி அது வெளிப்பட்டது. அவன் கோபம் அவளின் காதலுக்காக மட்டுமே.

அப்போது தான் அவள்  கார்த்திக்கை காதலிப்பதாக கூறினாள். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் தன்னை மீறி முத்தமிட்டான். அவள் ரேட் பேசியதிலிருந்து அவளை அணைக்கவோ முத்தமிடவோ கூடாது என்று இருந்த அவன் விரதம் அவளின் உதாசீனத்தால் தோல்வியில் முடிந்தது.

அடுத்த நாள் காலையில் எழுந்தவனுக்கு தலை வலிப்பது போல இருந்தது. எழும்பி இருந்து நடந்ததை யோசித்தவன், “அவளுக்கு எவ்வளவு கொழுப்பு  இருந்தா  என்கிட்டயே அந்த தடிப்பையன் கார்த்திக்கை காதலிப்பதாக சொல்லி இருப்பாள். அப்போ என் மேல் உனக்கு உண்மையாவே காதல் இல்லையா? உன்னை போல என்னால இருக்க முடியலடி… என்னை விட அந்த கார்த்திக் கிட்ட என்னடி இருக்கு ? ஆனா இனி பாரு என் ஆட்டத்தை… என்னை காதலிக்காத நீ எனக்கு வேணாம்…இனி உன்னை நிம்மதியாக இருக்க விட போறதில்லை… உன் திமிரை அடக்கமா விடமாட்டேன் டி…”  என்று அவளுக்கு சரமாரியாக திட்டியவன் குளித்து ஆயத்தமாகி அலுவலகத்துக்குச் சென்றான்.

காலையில் விரைவாக எழுந்த கீர்த்தனா, நன்றாக தூங்கிக் கொண்டிருந்த வைஷ்ணவியை  பார்த்து பெரு மூச்சு விட்டவள் குளித்து ஆயத்தமாகி இருந்தாள். அப்போதும் வைஷ்ணவி எழும்பவில்லை. வைஷ்ணவி மீது கோபமாக இருந்ததால் அவளும் எழுப்பாமல் இருந்தாள். தனது நட்பை கேவலப்படுத்திவிட்டாள் என்ற உணர்வு அவளுக்கு மேலோங்கி இருந்தது. ‘எத்தனை பெரிய விஷயத்தை என்கிட்டே இருந்து மறைச்சுட்டா? என் மேல உன் நம்பிக்கை அவ்வளவு தானா?’ என்று மனசுக்குள் திட்டியபடி ஹாலுக்குள் உக்காந்திருந்தாள். நேரம் சென்றாலும் அவள் எழும்பாமல் இருக்க விறு விறுவென சென்றவள் கொஞ்சம் கூட பாவம் பார்க்காமல்  பிரிட்ஜ்ஜிலிருந்த குளிர் நீரை எடுத்து அவள் மீது ஊற்றிவிட்டு  திரும்பி பார்க்காமல் ஹாலுக்குள் சென்று உட்கார்ந்தாள்.

“லூசாடி நீ?” என்று திட்டியபடி பதறி எழுந்தவளுக்கு அப்போது தான் நேற்று நடந்தது எல்லாம் நினைவு வந்தது. “இனி இவளை எப்படி சமாளிக்கிறது?” என்று நெற்றியை நீவி விட்டவள் குளித்து கிளம்பி வந்திருந்தாள். கீர்த்தனா வைஷ்ணவியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அந்நேரம் பார்த்து கார்த்திக்கும் வந்து சேர்ந்து கதவை தட்டினான்.

கதவை திறந்த வைஷ்ணவியை கட்டி அணைத்தவன், “மிஸ் யு வைஷு பேபி” என்றான் கீர்த்தனாவை பார்த்தபடி. அவன் அணைப்பில் தடுமாறிய வைஷ்ணவி, ‘இவன் வேற நேரம் காலம் தெரியாம ஓவர் ஆக்ட்டிங் பண்ணுறான்’ என்று நினைத்தவள் அவனை இரு கைகளாலும் தள்ளி நிப்பாட்டியவள், “போவமா ?” என்று கேட்டுவிட்டு முன்னேச் சென்றாள் .

கார்த்திக்கின் நடிப்பை பார்த்த கீர்த்தனாவோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனை பார்க்காமல் லிஃப்ட் அருகில் சென்றாள். அந்நேரம் பார்த்து ஆத்ரேயனும் அவ்விடத்துக்கு வர வைஷ்ணவிக்கு இதயமே நின்று விடும் போல பயம் உருவானது. ‘என்ன நடக்க போகுதோ?’ என்று தலையை குனிந்தவள் நிமிராமலே லிஃப்டுக்காக காத்திருந்தாள்.  அவனோ நேற்று நடந்ததுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாத போல கார்த்திக்கையும் கீர்த்தனாவையும் பார்த்து சினேகமாக புன்னகைத்தான். கீர்த்தனா தர்மசங்கடமாக சிரித்து வைத்தாள். “குட் மோர்னிங் சார்” என்றான் கார்த்திக்.

‘உனக்கு குட் மோர்னிங் இல்லடா பேட் மோர்னிங்’ என்று கீர்த்தனா நினைத்து மனதுக்குள் சிரித்தாள். ஆத்ரேயனும் எதுவும் நடக்காத போல பதிலுக்கு விஷ் பண்ணினான். கார்த்திக்குடன் சகஜமாக ஆத்ரேயன் பழகுவது   கீர்த்தனாக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்று நடந்தது கனவோ என்றும் ஒரு கணம் யோசித்தாள். கீர்த்தனா யோசனையுடன் ஆத்ரேயனை பார்ப்பதை கண்ட கார்த்திக்கோ ‘எப்போ பாரு அவனை சைட் அடிச்சுக்கிட்டு’ என்று மனதில் கருவியவன்,  தனது நாடகத்தை ஆரம்பிப்பதற்காக வைஷ்ணவியிடம் திரும்பி, “வைஷு டார்லிங் ஏன் கண் எல்லாம் வீங்கி இருக்கு ? நைட் என்ன நினைச்சு தூங்கலயா?” என்று ஏக்கமாக கேட்டான்.

‘அட பாவி பயலே கார்த்திக்… நேரம் காலம் தெரியாம ரொமான்ஸ் பண்ணுறியேடா, ஏன்டா இப்படி கொஞ்சி கொஞ்சி பேசி ஓவர் பெர்போர்மன்ஸ் கொடுக்கிற? இந்த நெட்டையன் வேற நிக்கிறான்… ஐயோ இப்போ என்ன செய்வேன்?’ என்று மனதுக்குள் பயத்தில் உளறியவள் வெளியில் சிரித்தபடி, “ஒண்ணுமில்ல கார்த்திக் தலைவலி” என்றாள்.

அந்த ஏக்கமான குரலை சகிக்க முடியாமல் முகத்தை சுளித்த கீர்த்தனா ஆத்ரேயனை பார்த்தாள். அவன் உணர்ச்சி துடைத்த முகத்துடன்  கீர்த்தனாவை பார்த்தான். வைஷ்ணவியின் பக்கம் அவன் மறந்தும் திரும்பவில்லை. எப்படி கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்வது என்று தெரியாமல் கீர்த்தனா யோசித்தபடி இருந்தாள்.

லிஃப்ட் வந்ததும் உள்ளே ஏறியவர்கள் யாரும் யார் முகத்தையும் பார்க்கவில்லை. கார்த்திக் மட்டும் நடிக்கிறேன் பேர்வழி என வைஷ்ணவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.  அதை பார்த்து உள்ளே கொதித்துக்கொண்டிருந்த ஆத்ரேயனின் மனம், ‘நானும் பாவம் போனா போகுது என்று பார்க்கிறேன். என் கிட்ட அடி வாங்காம அடங்கமாட்டான் போல இருக்கே…’ என்று யோசித்தவன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டான். கீர்த்தனாவும் மனதுக்குள் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

காரில் தொண தொண என்று பேசிய கார்த்திக்கை, “கொஞ்சம் வாய மூடிட்டு வரியா ?” என்று கேட்டு அடக்கிய வைஷ்ணவி யோசனையுடனேயே அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள். ஆத்ரேயனை சந்தித்து பேச வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு காலையிலிருந்து எந்த வேலையும் ஓடவில்லை. ஆத்ரேயன் கொஞ்சம் பிரீ ஆனதும், “மே ஐ கம் இன்?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தாள்.

“எஸ் கம் இன்” என்றவன் லேப்டாபிலிருந்து கண்ணை எடுக்காமல் கையால் பேச சொல்லி சைகை காட்டினான். ‘திமிர பாரு’  என்று யோசித்தவள் “எனக்கு டிவோர்ஸ் வேணும் ” என்றாள். நிமிர்ந்தவன் வலது கையை நாடியில் குத்தியபடி அவளை புருவங்களை சுருக்கி சந்தேகமாக பார்த்தான்.

‘இவன் எதுக்கு நம்மள இப்படி பார்க்கிறான்?’ என்று யோசித்தவள் அவன் பார்வையை தாங்கி நின்றாள்.

பெருமூச்செடுத்து, “வெல் வைஷ்ணவி” என்றபடி மேசையில் கையை குற்றி  எழுந்தவன், கோட்டை கழட்டி  கதிரையில் தூக்கி போட்டான் .  டையை கீழே ஒற்றை கையால் இழுத்து லூசாக்கிய படி  அவளருகில் வந்தான்.

அவளருகில் அவன் வரும்போது அவள் இதயம் நின்று துடித்தது.   அவளருகில் வந்ததும் அவள் முன்னால் இருந்த மேசையில்   கால்களை குறுக்கே வைத்தபடி சாய்ந்து நின்று முழு நீள ஷர்ட் கைகளை முழங்கை வரை மடித்துக் கொண்டே அவளை கூர்ந்து நோக்கி,  “என்ன கேட்டீங்க ? டிவோர்ஸ் ஆ?” என்றான்.

அவனின் செய்கையில் முதலில் தட்டு தடுமாறியவள், “டிவோர்ஸ் தான்” என்றாள் அவன் கண்ணை தைரியமாக நோக்கியபடி. கையை கட்டியபடி அவளை பார்த்தவன், “இந்த அலுவலகத்தில் நீங்க என்  எம்ப்லாயி நான் உங்க சி. இ. ஓ? நான் எப்படி உங்களுக்கு டிவோர்ஸ்  தர முடியும்?” என்று புருவத்தை உயர்த்தி  கேட்டான். அவன் பேசுவது புரியாமல் அவள் நோக்க மேசையில் எட்டி தனது கார் கீயை எடுத்தவன், “இது ஆபீஸ்… உங்க ஆஃபீசியல் விஷயம் மட்டுமே என்னிடம் பேசலாம். ஆனால் அது கூட உங்களால் என்னிடம் பேச முடியாது. உங்க எல்லா விஷயமும் அனாமிகா தான் ஹாண்டில் பண்ணுறாங்க. எது என்றாலும் அவங்க கிட்ட தான் நீங்க பேச முடியும்.  உங்க தனிப்பட்ட விஷயம் பேச இது இடம் இல்லை. உங்க கூட எல்லாம் வெட்டி கதை பேச எனக்கு நேரமில்லை.ஹோப் யூ   அண்டர்ஸ்டாண்ட்” என்றவன் விறு விறு வென வெளியேறினான்.

அவளுக்கோ இப்படி அவன் முகத்திலடித்தபடி பேசியது அவமானமாக இருந்தது. “பெரிய நினைப்பு தான்” என்று உதட்டை சுளித்தபடி கோபமாக வெளியேறி தனது கேபினுக்குள் சென்று அமர்ந்தாள். வந்திருந்தவளுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. என்ன செய்வது என்றே யோசனையாக இருந்தது. கீர்த்தனாவும் பேசாமல் இருப்பது கவலையளிக்க அவளுடன் பேச அவளறைக்குச் சென்றாள்.

அவள் வந்ததை அறிந்த  கீர்த்தனா, “வாங்க மிஸ் வைஷ்ணவி சாரி mrs.வைஷ்ணவி வேலை சம்பந்தமாக ஏதும் பேசணுமா ?” என்று கேட்டாள். ‘ரெண்டு பேரும் சொல்லி வச்சு பேசுறாங்களோ?’ என்று நினைத்தவள், “ஒண்ணுமில்ல  மிஸ்.கீர்த்தனா” என்று வெளியேறிவிட்டாள் .

சாப்பிடச் சென்றவள் கார்த்திக்குடன் அமர கீர்த்தனா தனியாக அமர்ந்துக் கொண்டாள். கோபம் கொப்பளிக்க அவளருகில் சென்றவள், “என்னடி உனக்கு இப்போ பிரச்சனை?” என்று கேட்டாள். “ஒண்ணுமில்லயே” என்று சாப்பிட தொடங்கியவளை பார்க்க வைஷ்ணவிக்கு கோபம்  எகிறியது. “என்ன பார்த்தா உனக்கு நக்கலா இருக்கா ?” என்று கேட்டவளிடம், “இந்த கம்பெனி சி. இ. ஓ ஆத்ரேயன்  சாரோட மனைவியை பார்த்து நான் ஏன் நக்கலா யோசிக்க போறேன் ?” என்று சாப்பிட்டபடி கேட்டாள். “நீயும் என் மனசை வதைக்காதேடி” என்று கண்களில் நீர் நிரம்ப கூறியவளை பார்க்க கீர்த்தனாக்கும் பாவமாக இருந்தது. அந்நேரம் பார்த்து அங்கு கார்த்திக் வந்து சேர்ந்தான்.

கண்ணீர் நிரம்பிய வைஷ்ணவியின் கண்களை பார்த்தவன், “உன்னை யாரு என்ன சொன்னா என்று சொல்லு பேபி, நான் அவங்கள உண்டு இல்ல என்று பண்ணிவிடுறேன்” என்று கீர்த்தனாவை பார்த்தபடி கூறினான். ‘இவன் ஒருத்தன் எப்போ பார்த்தாலும் குட்டைய குழப்பிக் கொண்டே இருக்கிறான்’ என்று வைஷ்ணவி யோசிக்க, கீர்த்தனா வைஷ்ணவியை பார்த்து, “இவன் ஒருத்தன் போதும்… உன் லைப் டோட்டல் கிளோஸ்” என்றபடி சாப்பிட தொடங்கினாள்.

அதை கேட்டு கடுப்பாகிய கார்த்திக், “ஏன் என்ன கல்யாணம் பண்ணினா அவ சந்தோஷமா இருக்க மாட்டாளா?” என்று கோபத்துடன் கீர்த்தனாவை பார்த்து கேட்டான்.  அவனை முறைத்து பார்த்த கீர்த்தனா பெருமூச்சை விட்டபடி எழுந்துச் சென்றாள்.  அதை பார்த்த கார்த்திக், “அவளுக்கு   பொறாமை வைஷு” என்றான். வைஷ்ணவிக்கு அவனை திட்டவும் மனசு வரவில்லை. அவனை நடிக்க சொன்னதே அவள் தானே, அதனால் அவனை உணர்ச்சியற்ற பார்வை பார்த்துவிட்டு வாங்கிய சாப்பாட்டை சாப்பிடாமல் வெளியேறினாள்.

பின்னேரம் வீட்டுக்குச் சென்றதும் ஆத்ரேயனுடன் பேச வேண்டுமென நினைத்த வைஷ்ணவி தனியாக அவன் வீடு தேடிச் சென்றாள். அவன் கதவை தட்டியதும் அப்போது தான் களைத்து விழுந்து வந்தவன் கதவை திறந்தான். அவளை பார்த்ததும் “பச்” என்று சலித்தபடி, “உள்ளே வா” என்று  சொல்லிவிட்டு சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். ‘ரொம்பத்தான் சலிச்சுக்கிறான்’ என்று யோசித்தவள் உடனே, “எனக்கு விவாகரத்து வேணும்” என்றாள்.

‘இவளுக்கு விவாகரத்து என்றதை தவிர எதுவும் வாயில வராதா?’ என்று சலித்தவன், “நீ அப்ளை பண்ணு நான் தர்றேன்.” என்றான் சர்வ சாதாரணமாக.. “அப்போ இன்னும் அப்ளை பண்ணலயா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டவளிடம், “இல்லை” என்று தலையை மட்டும் ஆட்டியவன், “காபி போட போகிறேன், உனக்கு வேணுமா?” என்று கேட்டான்.

‘இவனுக்கு எதிலும் அக்கறையே இல்லையா? இந்த நேரம் காபி பற்றி பேசுகிறான்’ என்று மறுகியவள், “நான் உங்க கிட்ட  பேசணும்” என்றாள். “இப்போவும் பேசிட்டு தானே இருக்க” என்றபடி கிச்சனுக்குள் சென்றவனை பின் தொடர்ந்தவள், “அப்போ என் கிட்ட பொய் சொன்னீங்களா?” என்று கேட்டாள். “எஸ் அஃப் கோர்ஸ்” என்றவன் காபி போட ஆயத்தமானான். அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. இதற்கு மேல் அங்கு நிற்க தயங்கியவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

கீர்த்தனாவும் அவளுடன் பேசாமல் தனது வேலையை பார்க்க மனசுடைந்தவள் விம்மி விம்மி அழ தொடங்கினாள். அவள் அழுவதை பார்த்த கீர்த்தனா மனசு பொறுக்காமல், “இப்போ எதுக்கு அழுற?” என்று கேட்டபடி அணைத்துக் கொண்டாள்.

“உன் கிட்ட என்னை பற்றி சொல்லாதது தப்பு தான். ஆனால் நானே மறக்க  நினைக்கிற விஷயத்தை எதுக்கு உன்கிட்ட சொல்லணும் என்று தான் நான் சொல்லல” என்று மன்னிப்பு யாசித்தவளிடம். “சரி விடு, என் கிட்ட சொல்லாதது எனக்கு கோபம் தான், ஆனா ஏதோ காரணத்துக்காக தான் சொல்லாம விட்டிருப்ப. இட்ஸ் ஓகே… இப்போவும் என்கிட்டே சொல்ல தேவையில்லை…. உனக்கு சொல்ல தோணுற நேரம் சொன்ன போதும்” என்று தலையை வருடினாள். நண்பியின் அன்பு ஆறுதலை தர பழைய நிலைக்கு வந்த வைஷ்ணவி கீர்த்தனாவுடன் சந்தோஷமாக பேசியபடி நேரம் கடத்தினாள்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top