அவள் கண்களினூடு கலந்த அவன் காதல் அவள் இதயம் வரை ஊடுருவிச் சென்றது. ஆத்ரேயனின் மூச்சு காற்றின் உஷ்ணத்தில் அவள் தன்னிலை மறந்தாள். அவள் அருகாமையில் அவன் உலகத்தையே மறந்தான். அவள் காயப்பட்ட மனதுக்கு அவன் காதல் மருந்தாக இருந்தது.
அவன் தன்னை விட்டுச் சென்று விடுவானோ என்ற பதட்டம் அதிகரித்ததால் தன்னை அறியாமலே கலங்கிய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவள் கண்ணீரை தன் இரு கை பெருவிரல்களால் துடைத்தவன், அதே மோன நிலையுடன் தனது இதழை அவள் நெற்றியில் பதித்தான். அவன் ஸ்பரிசத்தில் நெகிழ்ந்தவளின் கைகள் தானாக அவன் கழுத்தை வளைத்துக் கொண்டன. இருவர் கண்களும் கலந்திருந்த சமயம், கீழிறங்கிய அவன் அதரங்கள் அவள் நாசியையும் அவள் பட்டு போன்ற கன்னங்கள் இரண்டையும் தீண்டின.
அவள் இதழருகில் வந்தவன் அவளின் வார்த்தைகள் நினைவு வர சற்று தயங்கி நின்றான். அவன் தயக்கத்தை கண்டுக் கொண்டவள் அவன் கழுத்துக்கு பின்னால் இருந்த கைகளால் அவனை முழுதாக தனது பக்கம் இழுத்து அவனுயரத்துக்கு எம்பி அவன் இதழில் தன் இதழ்களை பதித்தாள்.
அவளால் வழங்கப்படும் முதல் முத்தம் அது. முதலில் அதிர்ந்தவன் பின் அதில் மூழ்கி போனான். இருவரும் கண்களை மூடி நீண்ட நேரம் இதழ்கள் தீண்டியபடி நின்ற சமயம் வைஷ்ணவிக்கு ஆத்ரேயன் கன்னத்தில் முத்தமிட்ட அனாமிகா நினைவுக்கு வந்தாள். உடனே சுயநினைவுக்கு வந்தவள், தான் நின்ற நிலை கண்டு அதிர்ச்சியடைந்தபடி தனது இதழ்களை அவன் இதழ்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்தெடுத்து அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள். அவள் தள்ளிய வேகத்தில் விழாமல் இருக்க கால் குற்றி தன்னை சமநிலைப்படுத்தியவனுக்கு அவளது விலகல் எரிச்சலை ஏற்படுத்த அவளை மீண்டும் இழுத்து முத்தமிட தோன்றிய உணர்வுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு தலையை கோதியபடி தன்னை சமன் செய்ய மறுபக்கம் திரும்பி நின்றான்.
அவன் முகத்தை பார்க்க சங்கடப்பட்டவளுக்கு அவன் திரும்பி நின்றது நிம்மதியளிக்க, “ஐ அம் சாரி ஏதோ தெரியாம” என்றவளுக்கு அடுத்த வார்த்தைகள் வரவில்லை. இதுக்கு மேல் அங்கு நிற்பது உசிதமாக படாததால் விறு விறுவென தனது கேபினுக்குள் சென்று உட்கார்ந்தாள்.
கதிரையில் இருந்தவளுக்கு தான் செய்த செயலின் வீரியம் அப்போது தான் புரிய தொடங்கியது. “லூசா நீ … என்ன காரியம் பண்ணி வச்சிருக்க? இனி எப்படி அவன் முகத்தில முழிக்கிறது ? சும்மாவே நான் அவன் பின்னாடி அலையிற போல சீன் போடுவான். இப்போ என்ன எல்லாம் பேச போறானோ?” என்று புலம்பியபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறியவன் தனது பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்து புகைக்க தொடங்கினான். தன்னை சமநிலைப்படுத்திய பின் கீழிறங்கியவன் தனதறைக்குள் செல்லும் வரை வைஷ்ணவியை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். அவன் வருவதையும் தன்னை துளைத்தெடுப்பது போன்று பார்ப்பதையும் உணர்ந்தவள் கணினியிலிருந்து கண்ணை எடுக்காமல் அப்படியே இருந்தாள்.
அவன் சென்றதும் நிம்மதி பெரு மூச்சு விட்டவளுக்கு அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் தவித்து போனாள். இவையனைத்தையும் சிசிடிவி வழியே பார்த்துக் கொண்டிருந்த அனாமிகாவுக்கு கோபம் தலைக்கு மேல் எகிறியது. “நான் பக்கத்துல வந்தாலே அறைகிறான் ஆனா அவ கூட ரொமான்ஸ் கேக்குதா? என் கிட்ட இல்லாதது அப்படி அவகிட்ட என்ன தான் இருக்கு. பணம், அந்தஸ்து, அழகு எல்லாத்திலும் என்னை விட அவள் மட்டம் தானே” என்று முணுமுணுத்தவள் வைஷ்ணவியின் குணம் தன்னை விட மிக உயர்ந்தது என்பதனை மறந்து போனாள். அவள் தனது அடுத்த இலக்கை வைஷ்ணவிக்கு வைத்தாள்.
இருவருக்குமிடையில் ஏதோ சம்பந்தம் இருக்கு என்று சந்தேகப்பட்டவள், வைஷ்ணவியின் பூர்வீகம் அறிய அவளின் பர்சனல் பைலை ஐ வாங்கி பார்த்தாள். அப்போது தான் அவளிடமிருந்து அப்ளிகேஷன் வராமலே அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் ஐ அர்ஜுன் சைன் பண்ணி அனுப்பி இருந்தான். எங்கேயோ இடிக்க அர்ஜுனுக்கு கால் பண்ணியவள், “அண்ணா… அப்ளிகேஷன் போடாமலே அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் அனுப்புற பழக்கம் நம்ம ஆபீஸ்ல இருக்கா??” என்று கேட்டாள்.
அதற்கு அர்ஜுனோ, “அப்படி எல்லாம் இல்லையே” என்றவனிடம், “அப்போ எப்படி அண்ணா வைஷ்ணவிக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்தீங்க?” என்று கேட்க முதலில் யோசித்தவனுக்கு பிறகு ஆத்ரேயனின் நினைவு வந்தது.
“ஓ அதுவாம்மா ஆத்ரேயன் தான் அவருக்கு தெரிஞ்ச பொண்ணு என்று ரெகமெண்ட் பண்ணினார். அவர் கம்பெனில வேகண்ட் இல்லையாம்… சோ அவருக்காக அனுப்பி இருந்தோம்” என்றவனிடம் மேலும் எதுவும் கேட்காமல் தொலைபேசியை வைத்தாள். கதிரையில் சாய்ந்து இருந்தவள் பேப்பர் வெயிட்டை உருட்டியபடி, ‘சோ வைஷ்ணவிக்கு வேலை வாங்கி கொடுத்தது ஆத்ரேயன் தான்… ஆனா எல்லாருக்கும் முன்பு தெரியாத போல நடிக்கிறாங்க… சம்திங் ராங்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அந்நேரம் எதுவும் பிடிபடவில்லை.
இதனை ஆத்ரேயனிடம் கேட்க முடியாது, கேட்டாலும் பதில் வராது என்று அறிந்தவள் வைஷ்ணவியை விசாரிக்கலாம் என்று அவளை கூப்பிட்டனுப்பினாள்.
மனதில் ஒரு வித கலக்கத்துடன் வந்தவளை நோக்கி, “இங்கே நீ வேலைக்கு அப்ளை பண்ணுனியா??” என்று கேட்க, அவளின் ஒருமை விளிப்பில் சற்று தடுமாறியவள் சுதாரித்துக்கொண்டு, “இல்லை” என்றாள். “அப்போ எப்படி உனக்கு இங்கே வேலை கிடைத்தது?” என்று வினவினாள்.
“அர்ஜுன் சார் தான் அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் அனுப்பி இருந்தார்” என்றாள். அவள் பதிலில் எரிச்சலடைந்தவள், “யார் எங்கே கூப்பிட்டாலும் போய் விடுவாயா?” என்று ரெட்டை அர்த்தத்தில் கேட்டாள்.
அவள் கேட்டதன் அர்த்தம் புரிந்தாலும் அதனால் ஏற்பட்ட கவலையை மறைத்துக் கொண்டு. “இல்ல” என்று தலையை ஆட்டினாள். “உனக்கும் ஆத்ரேயனுக்கும் என்ன சம்பந்தம்? அவர் எதுக்கு உனக்கு இங்கே வேலை வாங்கி தரணும் ??” என்ற அடுத்த கேள்வியில் அதிர்ச்சியடைந்தாள்.
“என்ன?? ஆத்ரேயன் வேலை வாங்கி தந்தாரா?” என்று அவளிடமே கேட்டாள். “சும்மா நடிக்காதடி …இப்போ தான் பால்கனில நீங்க பண்ணின சில்மிஷத்தை பார்த்து கடுப்புல இருக்கிறேன். என்னை கல்யாணம் பண்ணிக்க போறதா பொய் சொல்லி என் வயித்துல குழந்தையையும் கொடுத்துட்டு இப்போ உன் பின்னாடி சுத்துறான். எனக்கு திணற திணற மீட்டிங் ரூம்ல கிஸ் பண்ணிட்டு வெளிய வந்து உனக்கும் தந்தானா?” என்று பொய்களை கோர்த்து அவள் தலையில் ஒரு குண்டை தூக்கி போட்டாள்.
அவள் கூறியதை கேட்டதும் அவள் உடல் அருவருக்க தொடங்கியது. ‘என்ன மனுஷன் அவன்..! பெண்கள் என்றால் அவனுக்கு கேவலமா போய் விட்டோமா? சீ இப்படி பண்ணுவான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை…. அவன் குழந்தை இவ வயிற்றில் வளர்கிறதா? இப்படி எத்தனை பேர் வாழ்க்கையை சீரழிச்சிருப்பான்? கடவுள் இவனையெல்லாம் தண்டிக்கவே மாட்டாரா? பெண்கள் விஷயத்தில் உன்னை உத்தமன் என்று நினைத்தேனே இப்படி என்னை ஏமாற்றி விட்டாயே. என் வாழ்க்கையை சீரழித்து விட்டாயே’ என்று மனதுக்குள் புலம்பியவள், அவனின் கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தையும் மறந்தாள். குழந்தை விஷயத்தில் பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என நம்பினாள். அவளுக்கு தெரியவில்லை அனாமிகா பெண் உருவத்திலிருக்கும் ராட்சசி என்று.
மனதில் சுமை கனக்க அவள் கண்களில் அவளையும் அறியாமல் நீர் கோர்த்தது. யாரோ தனது இதயத்தில் உயிருடன் வைத்து ஆணி அடிப்பது போன்ற உணர்வில் செயலிழந்து நின்றாள்.
“சொல்லுடி நீ அவனுக்கு யாரு?” என்று சினம் தெறிக்க அவள் தோளை பிடித்து உலுக்கினாள். அதில் மருண்டவள், “அவர் என் மாமன் மகன்” என்று பாதி உண்மையை மட்டும் கண்களில் நீர் வழிய கூறினாள். “ஓ முறை பொண்ணு மேல் காதலா??” என்று நக்கலாக கேட்டவள், இதை எவ்வாறு சமாளிப்பது என்று கண நேரத்தில் திட்டம் போட்டாள்.
கண நேரத்தில் தனது பாவனையை மாற்றியவள் சற்று பண்பாக பேசுவது போல நடித்தாள். அவளுக்கு தெரியும் இவள் மேல் கை வைத்தால் ஆத்ரேயன் சும்மா இருக்க மாட்டான் என்று. அதனால் வார்த்தைகளால் அவள் மனதை கரைக்க முடிவெடுத்தாள்.
அவ்வளவு நேரமும் நின்றுக் கொண்டு இருந்தவளை தன் முன்னால் இருந்த கதிரையை காட்டி இருக்கும் படி சைகை செய்தவள், “இங்கே பாருங்க வைஷ்ணவி… நீங்களும் பொண்ணு தான். நான் இப்போ 2 மாசம் ப்ரெக்னன்ட்… அதுக்கு காரணம் ஆத்ரேயன் தான்… ஏதோ உணர்ச்சி வசப்பட்டு தப்பு பண்ணிட்டோம். இப்ப கல்யாணம் பண்ண முடியாது என்று நிற்கிறார்… என்ன காரணம் என்று எனக்கும் தெரியல என் நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசித்து பாருங்க ப்ளீஸ். நீங்க தான் எப்படியாச்சும் அவரை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்… நான் உங்க கிட்ட பர்சனல் விஷயத்தை சொன்னது அவருக்கு தெரிஞ்சா என்ன உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார். என்னை கல்யாணம் பண்ணிக்கவும் மாட்டார். அதனால நான் சொன்னதை யார் கிட்டயும் சொல்லாம அவரை எப்படியாச்சும் இதுக்கு சம்மதிக்க வைக்க வேணும். சொந்த கார பொண்ணு உங்களால முடியும் என்று நினைக்கிறேன்” என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு கெஞ்சினாள். இது நடக்குமா நடக்காதா என்று நிச்சயமில்லா விட்டாலும் தன் முதல் காயை வைஷ்ணவியை வைத்து நகர்த்த தொடங்கினாள்.
மென்மையான மனம் கொண்ட வைஷ்ணவியை கரைப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. அவள் கஷ்டங்களை கேட்டு அவளிடத்திலிருந்து யோசித்து உருகியவள், “நானா?” என்று முதலில் அதிர்ந்தாலும் தன் கவலைகளை மறைத்துக் கொண்டு, “நீங்க கவலைப் படாதீங்க நான் பேசி பார்க்கிறேன்” என்று ஆறுதல் கூறினாள்.
‘நான் ஏன் டி கவலை பட? நீ எனக்கு ஆறுதல் கூறும் நிலையில் இருக்கிறது தான் எனக்கு கவலையாக இருக்கு’ என்று மனதில் நினைத்தவள் வெளியில் நடிப்புக்காக விரக்தியாக சிரித்தாள்.
அனாமிகா அறையிலிருந்து வெளியேறிய வைஷ்ணவிக்கு நிலை கொள்ள சற்று நேரம் தேவைப்பட்டது. இருக்கையில் வந்து இருந்தவளுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியவில்லை. விடாமல் கண்ணீர் மட்டும் வழிந்துக் கொண்டிருந்தது. அலுவலகம் என்பதால் அதை கட்டுப்படுத்தியவள் அடுத்து என்ன செய்வது என்று திட்டமிட தொடங்கினாள்.
எல்லாவற்றுக்கும் முதல் விவாகரத்து பெற வேண்டி இருந்தது. இந்தியா செல்ல முடியாததால் தொலைபேசி மூலம் ஆத்ரேயனின் வக்கீலை தொடர்பு கொண்டாள். வக்கீல் சரவணன் என்று அவர் பெயர் தான் ஆத்ரேயன் சொன்னதாக அவளுக்கு ஞாபகம். வேறு வக்கீலை தெரியாததால் அவர் நம்பரை தேடி எடுத்து அவரையே தொடர்பு கொள்ள வேண்டி இருந்தது. “ஹெலோ சரவணன் சார், நான் வைஷ்ணவி பேசுறேன்” என்று தொடங்க அவர் மறு புறத்தில் இருந்து, “எந்த வைஷ்ணவி” என்று தடுமாற தொடங்கினார்.
ஆத்ரேயன் பெயரை தான் அடையாளமாக பயன்படுத்துவது எரிச்சலாய் இருந்தாலும் வேற வழி இல்லாமல், “Mrs . வைஷ்ணவி ஆத்ரேயன்” என்றாள். “ஓ நீங்களா ? சொல்லுங்கம்மா?” என்று கேட்டவரிடம், “நான் சிங்கப்பூரில் இருக்கிறேன், எனக்கு விவாகரத்து வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்க சற்று அதிர்ச்சியடைந்தவர், “அங்கே இருந்து கொண்டு அப்ளை பண்ண முடியாது. உங்க சைன் வேணும். இந்தியா வரும் சந்தர்ப்பத்தில் வேணுமென்றால் செய்ய முடியும்.” என்றார். ‘இதென்ன சோதனை?’ என்று மனதில் நினைத்தவள், “சரி சார் நான் இந்தியா வந்ததும் தொடர்பு கொள்கிறேன்” என்று தொலைபேசியை வைத்து விட்டாள்.
சரவணனும் கண நேரம் தாமதிக்காமல் ஆத்ரேயனுக்கு எடுத்து விஷயத்தை சொல்ல அதிர்ச்சியடைந்தவன், “ஓகே, நான் பார்த்துகிறேன்” என்றவனுக்கு கோபம் தாறு மாறாக எகிறியது. ‘இப்போது தான் முத்தமிட்டாள். முத்தமிட்டு ஒரு நாள் கூட தாண்டவில்லை, அதற்குள் விவாகரத்தா? இவளுக்கு என்னாச்சு? என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை’ என்று தலையை பிடித்தபடி யோசித்தவன், ‘அவளாக வரட்டும்… இந்தியா போக வேண்டுமென்றால் லீவுக்கு என்னிடம் தானே வர வேண்டும் அப்போ இருக்கு அவளுக்கு கச்சேரி’ என்று முடிவெடுத்தபடி வேலையை தொடர்ந்தான்.
வைஷ்ணவிக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘குழந்தைக்கு இப்போவே ரெண்டு மாசம்… வெளியில் தெரிய முதல் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் … அதுக்கு முதல் இந்தியா போக வேண்டும் இவன் கிட்ட எப்படி போய் பெர்மிசன் எடுப்பது? அவன் முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கல… கல்யாணத்தை முடித்து வைத்து விட்டு இந்த நாட்டை விட்டு கிளம்பி விட வேண்டும்.’ என்று பல திட்டங்களை ஒரே நேரத்தில் போட்டாள். அவள் மனசை நிலைப்படுத்த நேரம் தேவைப்பட்டதால் இன்று பேச தேவையில்லை நாளை பேசலாம் என்று முடிவெடுத்தவளுக்கு மனசு வலி தாங்க முடியாமல் கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தது.
யாரும் பார்த்துவிடுவார்கள் என்று பயந்தவள் வாஷ் ரூம் க்கு சென்று மனசு விட்டு சிறிது நேரம் அழுதாள். அதன் பிறகு முகத்தை நன்கு குளிர்ந்த நீரால் கழுவி விட்டு வந்தாள். ஆனாலும் சிவந்திருந்த கண்கள் அவள் அழுததிற்கு சான்றாக இருந்தது.
அவள் காதல் தோல்வியடைந்த வருத்தம், ஆத்ரேயனின் நடவடிக்கையால் அவன் மீது வந்த வெறுப்பு என பல விதமான கவலைகள் அவளை வேலை செய்ய விடாமல் தடுத்தன. ஆத்ரேயனின் எத்தனையோ கொடுமைகளை சகித்துக் கொண்டவளுக்கு அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு என்பதை மட்டும் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்தாள். சற்றுமுன் அவனின் தீண்டல்கள் தணலை வாரி இறைத்தது போல் இருந்தது. அவனிடம் அதனை கேட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் மனதுக்குள்ளேயே மருகினாள்.
அலுவலகம் முடிந்து செல்லும் போதும் யாருடனும் பேசாமலே இருந்தவள் கீர்த்தனாவிடம் தலைவலி என்று சமாளித்திருந்தாள்.
கீர்த்தனாவும் கார்த்திக்கும் சில வார்த்தைகள் பேச தொடங்கி இருந்தனர். காரில் ஏறியதும், கார்த்திக், “ஏன் என்னை கிள்ளின?” என்று கேட்க கீர்த்தனாவோ, “ரொம்ப வழிஞ்சுது அதான்” என்றாள்.
“அவங்களும் நம்ம கிட்ட பேச மாட்டாங்களாம், மற்ற பொண்ணுங்களையும் நாம பார்க்க கூடாதாம். கார்த்திக் நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான் டா” என்று அவன் வாய்விட்டு புலம்ப வந்த சிரிப்பை கீர்த்தனா கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“புலம்புனது போதும் காரை எடுத்தா நல்லா இருக்கும்” என்றவளை பார்த்து கண்ணடித்தவன் சிரித்தபடி வண்டியை எடுத்தான். கீர்த்தனாவுக்கு அவன் கண்ணை அடித்தது அவளுக்கு புதுவித சிலிர்ப்பை உண்டாக்க அதை மறைப்பதற்காக வெளியில் பார்த்தபடி வந்தாள். வைஷ்ணவியும் கடமைக்கு சிரித்து விட்டு வெளியில் நோட்டமிட தொடங்கினாள்.
வீட்டுக்கு வந்தவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. அந்நேரம் பார்த்து கீர்த்தனா, “வாடி பாட்மிண்டன் விளையாடுவோம்” என்று அழைக்க, மனதை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு “சரி” என்றவள் கார்த்திக்கையும் அழைத்துக் கொண்டு கீழே உள்ள பாட்மிண்டன் கோர்ட்க்குச் சென்றனர்.
அவளின் கஷ்டகாலத்துக்கு அங்கு ஆத்ரேயன் கோர்ட்டை சுற்றி ஜோக்கிங் போய் கொண்டிருந்தான். யாரை மறக்க அவள் அங்கு வந்தாளோ அவனே கண் முன் ஓடிக் கொண்டிருக்க விளையாட மனமில்லாமல், “நீயும் கார்த்திக்கும் முதலில் விளையாடுங்க… நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்” என்றபடி அங்கிருந்த படியில் அமர்ந்தாள்.
‘வைஷ்ணவி நீ செய்ற உதவிக்கு நான் உனக்கு கோவில் கட்டி கும்பிடுவேன்’ என்று மனதில் நினைத்த கார்த்திக், “விளையாடலாமா?” என்று கீர்த்தனாவை கேட்டான். அவன் துளைத்தெடுக்கும் பார்வை அவளை ஏதோ செய்ய அதை கட்டுப்படுத்தியவள் விளையாடச் சென்றாள். ஓடிக் கொண்டிருந்த ஆத்ரேயனின் கண்கள் முழுதும் வைஷ்ணவி மேலேயே நிலைத்து இருந்தது. அவன் தன்னை கண் வெட்டாமல் பார்ப்பதை உணர்ந்தவள், ‘பொம்பள பொறுக்கி’ என்று மனதுக்குள் திட்டியபடி விளையாட்டை கவனிக்கலானாள்.
கீர்த்தனாவால் கார்த்திக்குடன் ஒழுங்காக விளையாட முடியவில்லை.ஒரு தடவை கூட திருப்பி அடிக்க முடியாமல் அவஸ்தை பட்டாள். குனிந்து குனிந்து பாட்மிண்டன் பூவை எடுத்தே காலம் தள்ளினாள். இதை பார்த்த ஆத்ரேயனுக்கே எரிச்சலாய் இருந்தது. கீர்த்தனாவை நோக்கி வந்தவன், “ஷேல் வீ பிளே ஜென்ட்டில்மேன்?” என்று கார்த்திக்கை கேட்க அவனும், “ஷ்யூர் சார்” என்றபடி கீர்த்தனாவை பார்த்தான். கீர்த்தனாவும் இது தான் சந்தர்ப்பம் என்று ராக்கெட்டை அவனிடம் கொடுத்து விட்டு வைஷ்ணவி அருகில் அமர்ந்துக் கொண்டாள்.
“செம கேம்…நான் ஆத்ரேயன் சார்க்கு தான் சப்போர்ட்.” என்றபடி குதூகலமான கீர்த்தனாவை முறைத்தவள் தலையை திருப்பி விளையாட்டை பார்த்தாள். கல்லூரியிலேயே சாம்பியன் ஆன ஆத்ரேயனை ஜெயிக்க முடியுமா? கார்த்திக் தான் ஓடி ஓடி அடிக்க அவன் நின்ற இடத்திலேயே சாதாரணமாக அடித்துக் கொண்டிருந்தான். ஐந்து தடவை பாட்மிண்டன் பூவை மிஸ் பண்ணுகிறவர்கள் தோல்வியடைந்தவர்கள் என நிர்ணயிக்க பட்டது. ஆரம்பத்தில் நன்றாக விளையாடிய ஆத்ரேயன், கார்த்திக் தனது காதலி முன்னால் அவமான பட கூடாது என்று அவனுக்கு சார்பாக புன்னகைத்தபடி விளையாடினான். இது கார்த்திக்குக்கு நன்கு விளங்கியது. ஆனால் வைஷ்ணவிக்கோ கீர்த்தனாவுக்கோ தெரியவில்லை. 4-4 என்ற நிலையில் இருக்கும் போது கார்த்திக்கே ஜெயிக்கட்டும் என்று நினைத்தவன் அடுத்து தன்னை நோக்கி வந்த பூவை அடிக்காமல் விட யோசித்தான். அந்த சந்தர்ப்பத்தில் வைஷ்ணவி பொறுமை இழந்து, “கம் ஆன் கார்த்திக் பீட் ஹிம்” என்று கத்த தன்னை நோக்கி வந்த பூவை பார்க்காமல் வைஷ்ணவியை பார்த்து முறைத்தபடியே அடித்தான். அதை மீண்டும் கார்த்திக்கினால் அடிக்க முடியாமல் போய் விட்டது.
தான் அடித்ததை கார்த்திக் திரும்ப அடிக்க மாட்டான் என்று அறிந்தவன் அவளை பார்த்து உதட்டை பிதுக்கியவன் சொடக்கிட்டு கார்த்திக்கை பார்க்குமாறு அவளுக்கு சைகை காட்டினான். கார்த்திக் தோல்வியடைந்ததில் கீர்த்தனாவை விட கூடுதலாக கவலைப்பட்ட வைஷ்ணவி ஆத்ரேயனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
கார்த்திக் களைப்பினால் வந்து தள்ளி இருக்க அவனை நோக்கி தண்ணீர் பாட்டிலுடன் கீர்த்தனா சென்றாள். தனியே இருந்த வைஷ்ணவி அருகில் வந்தவன், “டூ யூ வாண்ட் டு பிளே வித் மீ?” என்று கேட்க அவளோ, “ஜெயிச்சா என்ன பெட்?” என்று திரும்ப கேட்டாள். “நீயே சொல்” என்றவனிடம், “நான் கேட்டதை தரணும்” என்றாள்.
அவனோ மனதுக்குள், ‘நீ விவாகரத்து தான் கேட்க போற’ என்று யோசித்தவன், “எனிதிங் அதர் தென் டிவோர்ஸ்” என்றான் கண் அடித்தபடி . மனதுக்குள், ‘நீங்க தரா விட்டாலும் எனக்கு டிவோர்ஸ் எடுக்க தெரியும்… அனாமிகாவை கல்யாணம் பண்ண வைக்கிறதுக்கு இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது’ என்று யோசித்தவள், “சரி” என்றாள். “அப்போ நான் ஜெயிச்சா நான் கேக்கிறத தருவியா?” என்றவனின் கண்கள் அவள் இதழில் நிலைத்து நின்றது.
அவனின் பார்வை அவளுக்கு கோபத்தை தூண்ட, “பொம்பள பொறுக்கி” என்று முணுமுணுத்தாள். அவள் வாயசைவை வைத்து அவள் சொன்னதை கண்டு பிடித்தவனுக்கு முதல் போல் கோபம் வரவில்லை, சிரிப்பு தான் வந்தது. “உன் விஷயத்தில் நான் பொம்பள பொறுக்கி தான்” என்று சிரித்தபடி கூறியவன், விளையாட தொடங்கினான்.
ஓரளவு விளையாட கூடிய கார்த்திக்கே அவனுக்கு துரும்பாய் தெரிந்தவன், வைஷ்ணவியோ கத்துக்குட்டியாக இருந்தாள். அவளின் விளையாட்டை பார்த்து எரிச்சலடைந்தவன், ‘ஒர்ஸ்ட் பிளேயர்’ என்று மனதுக்குள் சொல்லி கொண்டான். சமாளித்தபடி அவள் வேகத்துக்கு இணையாக வேகத்தை குறைத்து விளையாடியவன், விரைவாக 4-0 என்ற நிலையை அடைந்ததும் அவள் முகம் கோணியதை பார்த்து பரிதாபப்பட்டான். ‘சரி வின் பண்ணி தொலை’ என்று மனதுக்குள் நினைத்தவனுக்கு தெரியவில்லை, அவள் கேட்க போவது தனது வாழ்க்கையையே புரட்டி போட கூடிய விஷயம் என்று.
அவன் விளையாட்டை பார்த்த கார்த்திக் கீர்த்தனாவிடம், “ஆத்ரேயன் சார் போல இதுக்கு மேல யாராலயும் விட்டு கொடுத்து விளையாட முடியாது” என்று கூறி சிரித்தான். வைஷ்ணவியை வின் பண்ண வைத்தவன், அவளின் குதூகலத்தினால் தானும் சிரித்துக் கொண்டான். ஏதோ கஷ்டப்பட்டு வின் பண்ணியது போல் அவனை பெருமிதமாக அவள் பார்த்தது அவனுக்கு இன்னும் சிரிப்பை கூட்டியது. சிரித்தபடியே வீட்டுக்கு வந்தவன் களைப்பில் தூங்கி போனான்.